Saturday 21 October 2017

PORTUGHESE INTRODUCED VEGETABLES,FRUITS TO INDIANS






PORTUGHESE INTRODUCED 
VEGETABLES,FRUITS TO INDIANS  


‘தலையில் மிளகாய் அரைப்பது’ என்ற வார்த்தைகளுடன் ஒரு கட்டுரையை ஆரம்பிக்கக் கூடாதுதான். ஆரம்பித்துவிட்டேன்; மன்னிக்கவும். அதன் அர்த்தம் என்னவென்று நிச்சயம் தெரிந்திருக்கும். ஆனால், ஏமாற்றுவதை மிளகாய் அரைப்பதோடு ஒப்பிடும் வழக்கம் எப்படி வந்திருக்கும்? 

கட்டுரையின் இறுதி வரிகளில் காரணத்தைப் பார்ப்போம். தற்போது எழுத்து எனும் கால எந்திரம் ஏறி, நம் முன்னோர் காலத்துக்குச் செல்வதற்குத் தயாராவோம். தக்காளி, வெங்காயம், மிளகாய் இருந்தால் போதும்; ஏதாவது சமைத்துவிடலாம் என்பது இன்றைய ஃபாஸ்ட் புட் யுகச் சமையல் ஸ்டைல். வெங்காயம் சில ஆயிரம் ஆண்டுகள் நம்மிடையே புழக்கத்தில் இருந்தாலும், அதன் பூர்வீகம் நம் மண் கிடையாது. 

மிளகாய் எல்லாம் நம் மண்ணுக்கு வந்தேறி.
 தக்காளி என்பது சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு போர்ச்சுகீசியர்கள் நம்மீது திணித்ததே.

எனில், பண்டைத் தமிழர்கள் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் என்ன காய் சமைத்திருப்பார்கள்?
 நம் தமிழ் மன்னர்களின் உணவாக என்ன இருந்திருக்கும்? 
அருந்தமிழ்த் தொண்டாற்றிய ஔவைக்கும், பரிசில் பெறச் சென்ற பாணர்களுக்கும் என்ன பரிமாறப்பட்டிருக்கும்?
தாகத்துக்கு என்ன பருகியிருப்பார்கள்? 
இன்னும் பல கேள்விகள் எழலாம். சில நூறு பக்கங்களுக்குப் பேச வேண்டிய விஷயம் இது. சில நூறு வார்த்தைகளில் சமைக்க முயல்கிறேன்.






நம் மண்ணுக்கே சொந்தமான, பல்லாயிரம் வருடப் பழைமைகொண்ட கத்திரிக்காயிலிருந்து ஆரம்பிக்கலாமா? வெப்ப மண்டலப் பகுதியில், எல்லா பருவநிலையிலும் வளரும் கத்திரிக்காயின் பூர்வீகம் இந்தியாதான். தென்னிந்தியாவும் இலங்கையும் என்று குறிப்பிட்டுச் சொல்லலாம். இதன் பழந்தமிழ்ப் பெயர் - வழுதுணங்காய். சூடாமணி நிகண்டில், ‘வங்கமே வழுதலைப் பேர் வழுதுணை என்றுமாமே’ என்று சொல்லப்பட்டுள்ளது. வழுதலை என்றால் ‘வழுக்கையான தலை’ என்று பொருள். வழுக்கைத்தலைபோன்ற காய்க்கு `வழுதுணை’ என்று பெயர் வந்ததென்பது சில ஆய்வாளர்களது கருத்து. 

‘வரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும்
முரமுரவெனப் புளித்த மோரும்…' 

இது ஔவையார் பாடிய வரி. புல்வேளூர் பூதன் என்ற மன்னன், பசியுடன் தன்னை நாடிவந்த ஔவைப் பாட்டிக்கு உண்ணக் கொடுத்த உணவு இது. ஒளவையார் வாழ்ந்த காலமாக நம்பப்படுவது கடைச்சங்க காலம். அதாவது கி.மு. மூன்றாம் நூற்றாண்டுக்கும், கி.பி. மூன்றாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலம். அப்போதே அவர் கத்திரிக்காயை நெருப்பில் வாட்டிச் சமைத்ததை, வரகரிசிச் சோற்றுடன் உண்டதாக வெண்பா பாடியிருக்கிறார்.

‘வட்டும் வழுதுணையும் போல்வாரும் வாழ்வாரே…'
- இது நாலடியார்.
‘வழுதலை வித்திடப் பாகன் முளைத்தது'

- இது திருமந்திரம். 

கத்திரிக்காயை விதைக்க பாகன் (பாகற்காய்) முளைத்தது என்று கி.மு ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருமூலர் வேடிக்கையாகப் பாடியிருக்கிறார். பாண்டியர்களின் தலைநகரான மதுரையில் ஏழைகளுக்கென உணவுச்சாலைகள் அமைக்கப்பட்டன. அங்கிருந்த ஏழை எளியவர்களுக்கு, பலாப்பழம், மாம்பழம், வாழைப்பழம், முந்திரிப்பழம், பாகற்காய், வாழைக்காய், வழுதுணங்காய், இனிப்புச் சுவையுடைய பலகாரங்கள், சமைக்கப்பட்ட கிழங்கு வகைகள், பால்சோறு ஆகியன வழங்கப்பட்டன என்று மதுரைக்காஞ்சியில் ஒரு பாடல் குறிப்புச் சொல்கிறது. ஆக, சங்ககாலத்துக்கு முன்னரே, ஔவையார், திருமூலரின் காலத்துக்கு முன்னரே தென்னிந்தியாவில் கத்திரிக்காய் விளைந்திருக்கிறது. தோராயமாகச் சொல்லப் போனால், சுமார் நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கத்திரி, தமிழர்களின் உணவுப் பட்டியலில் தவறாமல் இடம்பெற்றிருக்கிறது.

கத்திரிக்காயுடன் இணையாக நினைவுக்கு வருவது முருங்கைக்காய்தானே. இயக்குநர் பாக்யராஜை அனிச்சையாக நினைப்பதை நிறுத்தவும். இது ‘அது’ குறித்தல்ல. சரித்திரச் சங்கதி.











பண்டைத் தமிழர்கள் உணவாகப் பயன்படுத்திய காய்கறிகளில் முருங்கை முதன்மையானது. `முருங்கை’ என்ற வார்த்தையே அதற்கு ஆதாரம். ‘முரி’ என்றால் `ஒடிதல்’ என்று அர்த்தம். `முருங்கு’ என்றால் ஒடிப்பது. முருங்கும் கிளைகளை, அதாவது, எளிதில் ஒடியக்கூடிய கிளைகளைக் கொண்டதே முருங்கை மரம். ஆக, ‘முருங்கை’ என்ற தமிழ்ச்சொல்லே எல்லாவற்றுக்கும் அடிப்படை. இதிலிருந்தே,  

`Moringa’ என்ற முருங்கைக்கான தாவரவியல் சொல் உருவாக்கப் பட்டுள்ளது என்கிறார்கள் தமிழறிஞர்கள்.

முருங்கை என்பது சங்ககாலத் தாவரமாகக் கருதப்படுகிறது. அகநானூற்றை நோக்கினால்,

‘சுரம்புல் லென்ற வாற்ற வலங்குசினை
நாரின் முருங்கை நவிரல் வான்பூச்
சூரலங் கடுவளி யெடுப்ப…'

என்று விரிகிறது. பாலைத் திணையில் வரும் இந்த வரிகளுக்கான பொருள், ‘பொலிவற்ற பாதைகளை உடைய வறண்ட நிலத்தில், முருங்கை மரத்தில் ஆடும் கிளைகளிலுள்ள வெண்மையான பூக்களைச் சுழற்றி அடிக்கும் கடுமையான காற்று மேலெழும்புகிறது’ என்பதே. எந்த வறட்சியான சூழ்நிலையிலும் காய்ந்துபோகாமல் பசுமையாக இருக்கக்கூடியது முருங்கை என்று தாவரவியலாளர்கள் சொல்கிறார்கள். அதைத்தான், நம் சங்கப் புலவர்கள் அன்றே பாடிவைத்துள்ளனர்.

பக்தி இலக்கியத்திலும் முருங்கை உண்டு. கி.பி பத்தாம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்ட, பன்னிரண்டு ஆழ்வார்களின் பாடல்கள் அடங்கிய நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தில் முருங்கை குறித்த மேற்கோள் காணப்படுகிறது.

‘நின்ற பிரானே நீள்கடல் வண்ணா. நீயிவள் தன்னை நின் கோயில்,
முன்றி லெழுந்த முருங்கையில் தேனா முன்கை வளைகவர்ந் தாயே.'

இதன் பொருள், `திருமலையில நின்றருளும் பிரானே! பெரிய கடல்போன்ற வடிவையுடை யவனே! தன் கோயில் முற்றத்தில் வளர்ந்திருக்கும் முருங்கை மரத்தின் தேனை எளிதாகக் கவருவதைப்போல, நீ - இப்பெண் மகளினுடைய முன்கையிலுள்ள வளையல்களை எளிதாகக் கைக்கொண்டாயே’ - என்பதுதான்.


தமிழகத்தை ஆண்ட மன்னர்கள், தங்களது படை வீரர்களுக்குக் கொடுத்த உணவில் முருங்கைக்கீரையும் இடம்பெற்றிருக்கிறது. வீரர்களுக்கு உடல் வலிமைக்காகவும், நோய் எதிர்ப்புச் சக்திக்காகவும் முருங்கைக்கீரையை மெனுவில் இணைத்துள்ளனர். ‘யார் வீட்டுல முருங்கை மரம் இருக்குதோ, அவங்க குடும்பத்துல நோய் இருக்காது’ என்று அந்தக் காலத்தில் சொல்வார்கள். காரணம், முருங்கை என்பது வெறும் மரமல்ல. வீட்டுடன் இருக்கும் வைத்தியர் போன்றது. முருங்கைப்பூ முதல் முருங்கை மரப்பட்டை வரை அனைத்துமே மருந்தாகவும் பயன்படுத்தப்படுகின்றன. 


அன்றைக்கு வீடுதோறும் முருங்கை மரம் இருந்தது. இன்றைக்கு `வீட்டுக்கு ஒரு மூங்கில் மரம் இருந்தால் நல்லது’ என்று சூழலியலாளர்கள் வலியுறுத்துகிறார்கள். காரணம், ஒரு மூங்கில் மரமானது தனது வாழ்நாளில் 450 டன் கரியமில வாயுவை உறிஞ்சிக்கொண்டு, அதை ஆக்ஸிஜனாகத் திருப்பிக் கொடுக்கிறது. ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்குத் தேவையான ஆக்ஸிஜன், 800 கிராம். ஒரு மூங்கில் மரம் ஒரு நாளைக்கு வெளியிடும் ஆக்ஸிஜனின் அளவு 850 கிராம். ஆக, `வீட்டுக்கு வீடு மூங்கில் மரம் இருந்தால் உலகமே தூய்மையானதாகிவிடும்’ என்கிறது உலக சுகாதார நிறுவனம்.

இந்த மூங்கில், பண்டைத் தமிழர்கள் உணவிலும் முக்கியப் பங்கு வகித்தது. மூங்கில் என்றால், அது விளைவிக்கும் மூங்கில் அரிசி. அதெப்படி விளையும் என்று தெரியாதவர்களுக்காகச் சிறு விளக்கம். மூங்கில் மரம், சுமார் 40 ஆண்டுகள் வாழக்கூடியது. தன் வாழ்நாளின் முடிவில் மூங்கில் மரம் இந்த உலகத்துக்காக மிக அற்புதமான ஓர் உணவுப் பொருளான மூங்கில் அரிசியை விளைவித்துவிட்டு, தன் உயிரை மாய்த்துக்கொள்கிறது. 

பண்டைக்காலம் தொடங்கி இன்றுவரை தமிழர்களின் உணவு முறையில் முக்கியமானது சோற்றுணவு. மருத நில மக்களின் பிரதான உணவு நெல்சோறு. குறிஞ்சி நில மக்களுக் குரியதாக மூங்கில் அரிசிச் சோறு இருந்தது. குறிஞ்சி நிலம் மலையும் மழையும் நிறைந்தது. அங்கே உயரமான மூங்கில் காடுகள் அதிகம். ஆக, மூங்கில் அரிசி என்பது அங்கே சுலபமாகக் கிடைக்கும் பொருளாக இருந்தது. இதை, மலைப்படுகடாம் ஒரு பாடலில் விளக்குகிறது.

‘இன்புளிக் கலந்து மாமோராகக்
கழைவளர் நெல்லின் அரியுலை ஊழ்த்து
வழையமை சாரல் கமழ்த்துழைக
நறுமலர் அணிந்த நாறிரு முச்சிக்
குறமகள் ஆக்கிய வாலவிழ் வல்சி...'

இதன் பொருள், மூங்கில் நெல்லின் அரிசியோடு மோரை நீராகப் பெய்து, புளி கலந்து சமைத்த சோற்றினைப் பலவிதமான இறைச்சி உணவோடு, நறுமலர் சூடிய குறமகள் விருந்தினர்களுக்குப் பரிமாறினாள்.

‘நெல்கொள் நெடுவெதிர்க்கு அணைந்த யானை 
முத்துஆர் மருப்பின் இறங்குகை கடுப்ப...'

இவை குறிஞ்சிப் பாட்டில் வரும் வரிகள். மலையில் ஓங்கி வளர்ந்துள்ளது மூங்கில். அந்த மூங்கில் ஈன்ற அரிசியைத் தின்பதற்கு ஆண் யானை விருப்பத்துடன் வருகிறது. மேல்நோக்கித் துதிக்கையை உயர்த்தி முயற்சி செய்கிறது. தன் தும்பிக்கைக்கு அரிசி எட்டாததால், யானை வருத்தப்படுகிறது எனத் தோழி சொல்வதாக அமைந்திருக்கும் பாடல் இது.

இதேபோல் அகநானுற்றின் பாடல் ஒன்றில் பாலைத் திணையின் காட்சி ஒன்று விவரிக்கப்பட்டுள்ளது. காவிரிப்பூம்பட்டினத்து காரிக்கண்ணனார் எழுதிய அந்தப் பாடல்,

‘இரும்புலி துறந்த ஏற்றுமான் உணங்கல்
நெறிசெல் வம்பலர் உவந்தனர் ஆங்கண்
ஒலிகழை நெல்லின் அரிசியோ டோராங்
கானிலைப் பள்ள அளைபெய் தட்ட
வானிணம் உருக்கிய வாஅல் வெண்சோறு
புகரைத் தேக்கின் அகலிலை மாந்து...'

இதன் விளக்கம் - ஆண் மானினைப் பெரும்புலியொன்று கொன்று தின்றது. அதன் எஞ்சிய இறைச்சி, பாறையில் காய்ந்து கிடந்தது. பாலை நிலத்தின் வழியே சென்ற மக்கள் அந்த இறைச்சியைக் கண்டு மகிழ்ந்து, அதோடு மூங்கில் அரிசியையும் தயிரையும் சேர்த்து வெண்சோறாக்கி, அதைத் தேக்கின் இலையில் வைத்து உண்டார்கள். குறிஞ்சி நிலத்து மூங்கிலரிசி உணவினைப் பாலை நிலத்தின் மக்கள் உண்டு களிக்கும் காட்சி இது.

பாரிவள்ளல் ஆண்ட பிறான்மலைப் பகுதியில் மூங்கில்கள் அதிகம் இருந்தன. மூவேந்தர்கள் பாரியின் மீது படை எடுத்து முற்றுகை இட்டபோது பல காலமாக வெற்றி பெற முடியவில்லை. அப்போது, அங்கே வந்த கபிலர் மூவேந்தர்களிடம் ‘நீங்கள் பாரியின் ராஜ்ஜியத்தை எத்தனை காலம் முற்றுகையிட்டாலும் தோற்கடிக்கவே முடியாது. ஏனென்றால், அவனது மக்களுக்கு உணவுக்குப் பஞ்சமே வராது. காரணம் மூங்கில், அதில் விளையும் அரிசி, தேன், பல வகையான கனிகள் ஆகியவை மலையெங்கும் நிறைந்துள்ளன. எனவே புரவலர்போலச் சென்று, அவனிடம் யாசகமாக ராஜ்ஜியத்தைக் கேளுங்கள். அவன் தருவான்’ என்று சொல்வதாகச் சங்க இலக்கியப் பாடல் ஒன்று விரிகிறது.

இப்படிக் காலம் காலமாக தமிழர்களின் விருப்பத்துக்குரிய உணவாக மூங்கில் அரிசி இருந்து வந்துள்ளது. அவ்வளவு ஏன், அன்றைக்குக் காடுகளில் தவமிருந்த முனிவர்களும் சித்தர்களும் விரும்பி உண்டது மூங்கில் அரிசியைத்தான். அது உடலுக்குக் கொடுத்த வலிமையினால் பல காலத்துக்கு உணவின்றி நீண்ட தவம்புரிய அவர்களால் முடிந்தது. மூங்கிலரிசியைச் சமைத்து உண்டால், யானையின் தோள்களையொத்த அபார வலிமை உண்டாகும். உடம்பு வஜ்ஜிரம்போல் இறுகும். கொடிய நோய்களெல்லாம் நெடுந்தூரம் ஓடிவிடும் என்பதால்தான் சித்தர்கள் மூங்கிலரிசியை விரும்பி உண்டார்கள்.

இன்றைக்கும் மூங்கில் அரிசி கிடைக்கிறது. மூங்கில் அரிசி பொங்கல் முதல் மூங்கில் அரிசி பணியாரம் வரை சமையல் கமகமக்கிறது. அட, பணியாரம். அது எத்தனை பழைமையான உணவு தெரியுமா? அதைப்பற்றிப் பேசாமல் கடப்பது அழகல்ல.

சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மாவை அச்சில் ஊற்றி சுட்டுத் தயாரிக்கப்படும் உணவுகள் புழக்கத்தில் இருக்கின்றன. இந்தப் பணியாரம் சுடுவதற்கேற்ற குழிகள் நிறைந்த அந்தச் சட்டியை முதன்முதலில் கண்டறிந்தது யார், அது எந்தக் காலத்திலிருந்து புழக்கத்தில் இருக்கிறது என்பன குறித்த தகவல்கள் எல்லாம் இல்லை. ஆனால், முதலில் கல்லைக் குடைந்து அதை அடுப்பில் இட்டு, மாவு ஊற்றி பணியாரம் சுடும் வழக்கம் இருந்திருக்க வேண்டும். பின் மண் பணியாரச் சட்டிகள் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். பிறகே இரும்பால் மற்றும் பிற உலோகங்களால் ஆன குழிப்பணியாரச் சட்டிகள் உருவாக்கப்பட்டிருக்கலாம். ஏழு குழிகள்கொண்ட குழிப்பணியாரச் சட்டி என்பது பொதுவான ஒன்றாக, காலம் காலமாக இருந்துவருகிறது.

சங்க இலக்கியங்களிலும் பணியார மணம் கமகமக்கிறது. 

‘வுழுந்தினுந் துவ்வாக் குறுவட்டா நின்னி
னிழிந்ததோகூனின் பிறப்பு'

இது கலித்தொகையில், மருதத்திணையில் வரும் பாடல் பகுதி. உளுந்தில் செய்யப்பட்ட பணியாரம் குறித்தச் செய்தி சொல்கிறது. சோழர் காலக் கல்வெட்டுகளில் சர்க்கரைப் பொங்கல், பணியாரம் போன்ற உணவு வகைகள் குறித்த செய்திகள் பேசப்படுகின்றன. 



விஜய நகர ஆட்சிக்காலக் கல்வெட்டுக்களில்தாம் இட்டளி (இட்லி), தோசை, அதிரசம் போன்ற உணவு வகைக் குறிப்புகள் கிடைக்கின்றன. இதன் மூலம் இட்லி, தோசைக்கு முன்பே பணியாரம் என்பது தமிழர்களின் முக்கிய உணவாக இருந்திருக்கிறது என்பது உறுதியாகிறது.

பக்தி இலக்கியப் பாடல்களிலும் பிற்காலத்தில் பாடப்பட்ட பல்வேறு பாடல்களிலும் பணியாரம் பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.

‘பரிவுட நழகிய பழமொடு கடலைகள்
பயறொடு சிலவகை பணியாரம்
பருகிடு பெருவயி றுடையவர் பழமொழி
எழுதிய கணபதி யிளையோனே'

பயிறும் கடலையும் பணியாரங்களும் உண்ணும் பெரிய வயிறுடைய கணபதியின் இளையோனே - என்று முருகனைப் பாடும் திருப்புகழ் வரிகள் இவை.

கோயில்களில் இறைவனுக்குப் படைக்கப்படும் பணியாரங்கள் இனிப்புச் சேர்த்தே செய்யப்பட்டிருக்கின்றன. கருப்பட்டி, பனைவெல்லம் சேர்க்கப்பட்டுப் பணியாரம் செய்யும் வழக்கம் காலம் காலமாக இருந்து வந்திருக்கிறது. கி.பி 1070-க்கும் 1110-க்கும் இடைப்பட்ட திருபுவனச் சக்கரவர்த்தி குலோத்துங்கச் சோழனின் கல்வெட்டு ஒன்றில், ‘திருப்பணியாரத்துக்குத் தேங்காய், கருப்புக்கட்டி’ எனக் குறிப்பு உள்ளது. தேங்காய், கதலிப்பழம், சீரகம், மிளகு, சுக்கு ஆகியவை கலந்து செய்யப்பட்ட ஒரு பணியாரம் பற்றி, பிற்காலப் பாண்டியனான பராக்கிரமனின் கல்வெட்டுச் செய்தி சொல்கிறது. 

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் கி.பி 1568-ம் ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்றில் புளியாதரை (புளியோதரை), பணியாரம், பருப்புப் பொங்கல், அப்பம், தோசை ஆகிய பலகாரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அந்தப் பலகாரங்கள் செய்யத் தேவையான பொருள்களையும் அக்கல்வெட்டுக் கூறுகிறது. திருவரங்கம் கோயில் வரலாற்றைச் சொல்லும் கோயிலொழுகில் ‘நித்யம் ஏழுருப்படி பணியாரம்’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. 

‘பணியாரத்தைத் தின்னச் சொன்னால் குழியை எண்ணுகிறானே?’ என்றொரு பழமொழி உண்டு. அந்தப் பழமொழிக்குப் பின்னால் கணக்கு ஒன்று ஒளிந்திருக்கிறது. பணியாரம் சுட்டு விற்பது என்பது காலம் காலமாகப் பெண்கள் செய்யும் சிறுதொழிலாக இருந்து வந்திருக்கிறது. பசியுடன் சிற்றுண்டி உண்ணுவோர், இலையில் விழும் பணியாரத்தை எண்ணிக்கொண்டிருக்க மாட்டார்கள். வயிறு நிரம்பும்வரைச் சாப்பிட்டுவிட்டு, போதும் என்று எழுந்துவிடுவார்கள். ஆனால், பணியாரம் விற்கும் பெண்ணுக்கு உண்ணப்பட்ட கணக்கு அவசியம். 

ஓர் ஆள் பத்துப் பணியாரம் சாப்பிடுகிறார் என்றால், பத்துப் பேர் சாப்பிட சுமாராக 100 பணியாரம் தேவைப்படும். ஒரு சட்டியில் குடையப்பட்டிருக்கும் குழிகள் 7. எனில் 15 அடசல் எடுக்க வேண்டும். 15 முறை பணியாரம் சுட்டெடுக்க வேண்டும். 7x15 = 105 எனில், 5 பணியாரங்கள் மீதமாகும். அதைப் பசியோடு வரும் காசில்லாதவருக்கு தானம் செய்துவிடலாம். ஓர் உழக்கு அரிசியில் 15 பணியாரங்கள் செய்யலாம். ஆக ஏழு உழக்கு அரிசி ஊறவைத்தால், அடுத்த நாள் பணியாரத்துக்கான மாவு சரியாக இருக்கும். இப்படித்தான் பணியாரம் சுடும் பெண்கள் கணக்குவைத்துக் கொண்டனர். கோயில் கட்டும் வேலைகள், பிற கடினமான வேலைகள் நடக்கும் இடங்களில், தொழிலாளர்களுக்கான உணவாகப் பணியாரம் சுடும் கடை போட்டுப் பெண்கள் பிழைப்பு நடத்தியிருக்கிறார்கள். சில சமயங்களில் வேலைக்கான கூலியாகவும் பணியாரம் வழங்கப்பட்டதாகப் பழங்குறிப்புகள் தெரிவிக்கின்றன.

அன்றைக்கு உண்பதற்குப் பணியாரம் எங்கும் கிடைத்ததுபோல பருகுவதற்குக் கரும்புச்சாறும் வளமாகக் கிடைத்திருக்கிறது. 

‘மழை விளையாடும் கழை வளரடுக்கத்து
அணங்குடை யாழி தாக்கலிற் பலவுடன்
கணஞ்சால் வேழம் கதழ்வுற்றா அங்கு
எந்திரஞ்சிலைக்கும் துஞ்சாக் கம்பலை
கரும்பின் தீஞ்சாறு விரும்பினர் மிசைமின்.'

இது பெரும்பாணாற்றுப்படையில் வரும் ஒரு பாடல். தொண்டைமான் இளந்திரையன் என்ற மன்னனிடம் பரிசில் பெற்றுவரும் பாணன் ஒருவன், வழியில் எதிர்ப்படும் இன்னொரு பாணனிடம் தித்திப்புடன் செய்தி பகிர்கிறான். `யாழி தாக்கியதால் பயத்தில் நடுங்கிப் பிளிறும் யானைகளின் பிளிறல்போல, அங்கே கரும்பு அரைக்கும் எந்திரங்கள் இரைச்சலிடுகின்றன. நீவிர் அங்கே சென்றால், எந்திரங்களால் பிழியப்பட்ட கரும்புச் சாற்றை வளமாகக் குடிக்கலாம். அங்கே ஆலைகளில் சாறைக் காய்ச்சிக் கட்டியாகச் செய்த கருப்புக்கட்டியை அளவில்லாமல் உண்ணலாம்’ என்று ஆசை காட்டுகிறார் அந்தப் பாணன்.


கரும்புச் சாற்றை விற்கும் கடைகள் அப்போதே வீதிக்கு வீதி இருந்திருக்கின்றன. புளிக்கவைக்கப்பட்ட கருப்பஞ்சாறு சாராயம், நல்ல மதிப்புடைய பண்ட மாற்றுப் பொருளாகவும் இருந்திருக்கிறது. கரும்புச் சாறு தவிர, பழந்தமிழர் பருகும் உணவாக வகைப்படுத்தியதில் பானகம், பாயசம், கூழ் மற்றும் கஞ்சி ஆகியவை முக்கியமானவை. 

‘கருகு முடலார் கஞ்சி யுண்டு கடுவேதின்
றுருகு சிந்தை யில்லார்க்கயலா னுறைகோயில்...'

இவை திருஞானசம்பந்தர் பாடிய தேவாரத் திருப்பதிகத்தில் வரும் வரிகள். கரிய உடலினராக, கஞ்சி உண்டு, கடுக்காய் தின்று இரக்கமற்ற மனமுடையவர்களாகத் திரிபவர்கள் என சமண மதத்தினரைக் குறிப்பிட்டிருக்கிறார். இதன் மூலம் அன்றைக்குச் சமணர்களின் முக்கியமான உணவாகக் கஞ்சி இருந்திருக்கிறது என்பதை அறிய முடிகிறது.

‘...புகழ் நிலைஇய மொழி வளர
அறம் நிலைஇய அகன் அட்டில்
சோறு வாக்கிய கொழுங் கஞ்சி
யாறு போலப் பரந்து ஒழுகி
ஏறு பொரச் சேறு ஆகி...'

இவை பட்டினப்பாலை வரிகள். உணவுச் சாலைகளில் சோற்றினைச் சமைத்து வடித்த கஞ்சியானது, ஆறுபோலப் பரந்து காவிரிப்பூம்பட்டினத்துத் தெருக்களில் ஓடியது. அங்கே காளைகள் ஒன்றோடொன்று சண்டையிட, சோற்றுக் கஞ்சியினால் உண்டான சேற்றின் மீது தேர்கள் ஓடின என்பதாகக் காட்சி ஒன்றை விவரிக்கின்றன இந்த வரிகள். அகநானூற்றில் கொள்ளும் பாலும் கலந்து தயாரிக்கப்பட்ட கொள்ளுக்கஞ்சி பற்றிய குறிப்பு வருகிறது. அவரை விதையை அரிசியுடன் கலந்து தயாரித்த கஞ்சி பற்றி மலைபடுகடாம் விவரிக்கிறது. 

வறுமைக்கோட்டுக்குக் கீழுள்ள மக்கள் பழைய சோற்றைக் கஞ்சி என்ற சொல்லால் குறிப்பது வழக்கம். ‘கஞ்சிக்கு அலைந்து அடிமை ஆனோம்’ என்பது காலனியாதிக்கக் காலத்தில் வழங்கப்பட்டக் கூற்று. ஆக, கஞ்சியும் காலம் காலமாக நம் பசியைப் போக்கிய உணவே.

`சைவமாகச் சென்றுகொண்டிருந்தால் எப்படி? சற்றே அசைவம் பரிமாறலாமே...’ என்று உங்கள் மனக்குரல் என் காதில் ஒலிப்பதால் ஊன், கறி, புலவு என்ற சங்க இலக்கியப் பாடல்களில் மணமணக்கும் அசைவ உணவுக் குறிப்புகளை ருசிக்கலாம். 

ஆடு, மாடு, எருது, மான், உடும்பு, பன்றி, முயல் மற்றும் பல்வேறுவிதமான பறவைகளைப் பழந்தமிழர்கள் சமைத்து, சப்புக்கொட்டி உண்டிருக்கிறார்கள்.

‘மை ஊன் மொசித்த ஒக்கலொடு, துறை நீர்க்
கைமான் கொள்ளுமோ?'

என்பது புறநானூற்று வரி. மை என்றால் ஆடு. ஊன் என்றால் இறைச்சி. ஆட்டிறைச்சியைத்தான் இந்த வரிகள் சொல்கின்றன.

‘வலிய வாகுநின் றாடோய் தடக்கை 
புலவுநாற்றத்த பைந்தடி 
பூநாற் றத்த புகைகொளீஇ யூன்றுவை 
கறிசோ றுண்டு வருந்துதொழி லல்லது 
பிறிதுதொழி லறியா வாகலி னன்றும்…'

கபிலர், சேர மன்னன் செல்வக் கடுங்கோவை வாழ்த்திப் பாடும் புறநானூற்றுப் பாடல் இது. `அரசே, வில் அம்பு செலுத்துவதால், குதிரையின் கடிவாளத்தைப் பிடிப்பதால், போர் செய்வதால், எம்போன்ற புரவலர்க்கு தானம் செய்வதால் உம் கைகள் காய்த்து உள்ளன. உன்னைப் பாடுவதைத் தவிர வேறு வேலை இல்லாமல், உன்னிடம் பரிசு வாங்கிக்கொண்டு, நீ வழங்கும் புலால் மணத்தை உடைய, தாளிதத்துடன் கூடிய அசைவ உணவை மட்டும் உண்டபடி இருப்பதால் எனது கைகள் மென்மையாக உள்ளன’ என்று கபிலர் அங்கலாய்க்கிறார்.

‘விடை வீழ்த்துச் சூடு கிழிப்ப…'

இதுவும் புறநானூற்று வரிதான். விடை என்றால் ஆட்டுக்கிடா என்று பொருள். 

 ‘நெய் குய்ய ஊன் நவின்ற பல்சோற்றான்…'

வறுத்த இறைச்சியும் நெய்ச்சோறும் என்பது இந்தப் புறநானூற்று வரியின் பொருள். இப்படிப் பழந்தமிழருக்கு இறைச்சி மேலிருந்த பிரியம், அகநானூறு, பரிபாடல், நற்றிணை என எங்கும் மணத்துக் கிடக்கிறது.

கத்திரிக்காய், முருங்கைக்கீரை, மூங்கில் அரிசிச் சோறு, பணியாரம், கஞ்சி, வறுத்த இறைச்சியுடன் நெய்ச்சோறும் உண்டு கரும்புச் சாறும் பருகிவிட்டோம். மிளகாய் அரைக்கும் விஷயத்துக்கு வருவோம்.
ஐரோப்பியர்கள் வாசனைப் பொருள்களைத் தேடித்தான் இந்தியாவுக்குக் கடல் வழியே வந்தனர். அப்படி முதன்முதலில் இங்கிருந்து மிளகை அள்ளிச்சென்ற ஐரோப்பியர், போர்ச்சுகீசியரான வாஸ்கோடகாமா. அதன் பிறகே ஐரோப்பியர்கள் காலனி ஆதிக்கக் கனவுகளுடன் இந்தியாவை மொய்க்க ஆரம்பித்தனர். நம்மிடம் இருந்த மிளகு வளமே நாம் அடிமைப்பட முக்கியக் காரணம் என்பது மறுக்க முடியாத உண்மை

காலம் காலமாக நாம் சமையலில் காரத்துக்குப் பயன்படுத்தியது மிளகைத்தான். நமக்கு இங்கே மிளகாய் என்பது பதினாறாம் நூற்றாண்டில் போர்ச்சுகீசியர்கள் அறிமுகப்படுத்தியதே. காரத்துக்காகச் சமையலில் பயன்படுத்தப்படும் காய், மிளகைப்போன்ற காரமான காய் என்ற அர்த்தத்தில்தான் மிளகாய் என்ற பெயரே தமிழில் வந்தது.

மூட்டை மூட்டையாக மிளகை இங்கிருந்து அள்ளிச் சென்று வணிகத்தில் கொழித்த ஐரோப்பியர்கள், அதற்குப் பதிலாக மிளகாயை நம் தலையில் கட்டினர். தலையில் மிளகாய் அரைப்பதற்குப் பின்னிருக்கும் அர்த்தமும், அரசியலும், சரித்திரமும் இதுதான். அன்றைக்கு மிளகே உலகு. மிளகுதான் உலக வரலாற்றில் பல திருப்பங்களை நிகழ்த்தியிருக்கிறது. பல தேசங்களின் தலைவிதியையே மாற்றி எழுதியிருக்கிறது.

இதன் மூலம் சொல்லப்படும் நீதி, இனி நீங்கள் பொங்கல் உண்ணும்போது மிளகு தென்பட்டால் அதை ஒதுக்கிவைக்காதீர்கள். அதன் மதிப்பை உணர்ந்து மென்று விழுங்குங்கள்.

No comments:

Post a Comment