VIRUTHUNAGAR TEPPAM HISTORY
நீர் நிறைந்து நிற்கும் இத்தெப்பக்குளத்தைப் பார்த்தாலே, எனக்கு சிறுவயதில் டின்னைக் கட்டிக் கொண்டு, என் தந்தையுடன் மைய மண்டபம் வரை நீச்சலடித்துக் கொண்டு சென்று குளித்தது நினைவுக்கு வரும்.
ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் மழை பெய்து நீர் நிறைந்திருக்கும் தெப்பத்தில் கந்தசஷ்டி, திருக்கார்த்திகை தினங்களில் அனைவரும்
குளிக்கலாம்.
மேலும் என் தந்தை திருவி.வி.எஸ.கேசவன் அவர்கள் நாட்குறிப்பு எழுதும்போது விருதுநகரில் மழை பெய்யும் நாட்களையும்,
தெப்பத்திற்குத் தண்ணீர் வந்த நாட்களையும் குறித்து வைப்பார்.
தெப்பம் நிறைந்து விட்டால் சொல்பவர்களுக்குப் பரிசும் உண்டு. மழை பெய்யாமல் இருந்தால்," மழை பெய்து தெப்பத்திற்குத் தண்ணீர் வரவேண்டும் என்று இறைவனிடம் வேண்டுங்கள்" என்று பார்க்கும் அனைவரிடமும் சொல்வதோடு, துண்டுப் பிரசுர ங்கள் அச்சிட்டும் ஊர் மக்கள் அனைவரையும் வேண்டச் சொல்வார்.சிறு வயதில் எதற்காக இப்படிச் சொல்கிறார் என்பது புரியவில்லை.
இப்பொழுது நன்றாகப் புரிகிறது, தெப்பம் நிறைந்தா ல் சுற்று வட்டாரத்தில் உள்ள எத்துணை அடிகுழாய்க ள்,ஆழ்துளைக் கிணறுகளுக்கு குறைந்த ஆழத்திலே யே நிறைந்த தண்ணீர் மக்களின் தேவைகளுக்குக் கிடைத்து விடுகிறது. வைகை நதி பாயும் மதுரையில் ஊருக்குள் நிலத்தடி நீர் 400_500அடிககீழ் இறங்கிவிட்டது.மழை குறைவான விருதுநகரில் நிலத்தடி நீர்மட்டம் 50_100க்குள் காக்கப் படுகிறது.
இத்தெப்பக்குளமும் மழையில்லாமல் வறண்டு, அதற்குள் இருக்கும் மூன்று கிணறுகளுக்குச் சென்று மக்கள் தண்ணீர் எடுத்து வந்ததையும் பார்த்தி ருக்கிறேன். ஆனால் தற்பொழுது தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, பல வழிகளில் தண்ணீர் கொண்டு வரப்படுவதால் தற்பொழுது தெப்பம் நீர் நிறைந்தே இருக்கிறது. தெப்பம் அமைக்கப் பட்டபொழுது, ஊரின்
வடகிழக்கில் பெய்யும் மழைநீர் இரயிலவே பீடர் சாலைக்கும், மதுரைச் சாலைக்கும் இடையே உள்ள வேலாயுத மடைப் பகுதிக்குக் கொண்டு
வரப்பட்டு, அங்கிருந்து பாதாள வாய்க்கால் மூலம் நீர் வந்து சேருமாறு அமைக்கப் பட்டிருந்தது.
தற்பொழுது,பழைய மடை வழியாக மட்டுமன்றி, கெளசிக காநதியிலிருந்தும, சில ஆழ்துளைக் கிணறுகளிலிருந்தும, குளத்தைச் சுற்றியிருக்கும் கட்டிடங்களில் சுமார் 60000சதுர அடி பரப்பளவிற்கு மழை நீரைச் சேமித்தும்
குழாய்கள மூலம் தெப்பத்திற்குத் தண்ணீர் கொண்டு வரப்படுகிறது.
இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற் போல்,ஊருக்கு வடமேற்கில் சின்னமூப்பன்பட்டி கிராமத்தில் 4.5ஏக்கர் நிலம், இக்குளத்தைப் பராமரிக்கும் விருதுநகர் பலசரக்குக் கடை மகமைத் தரப்பினரால் வாங்கப் பட்டு, பெரிய குளம் அமைத்து, மழைநீர் தேக்கப் பட்டு தண்ணீர் கொண்டு வரப்படுகிறது.
மேலும் தெப்பம் நிறைந்தால் வழியும் உபரி நீரும், நகரின் தென் பகுதியில் உள்ள கிணறுகளுக்குச் சென்று, அப்பகுதியின் நீர் மட்டத்தையும் காக்கும்
வண்ணம் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.தெப்பத்திற்குள்ளும் ஆழ்துளைக் குழாய்கள் மூலம் நிலத்தின் அடியில் நீர் செல்லும் படி செய்யப்
பட்டுள்ளது.
இத் தெப்பக்குளம் விருதுநகர் இந்துநாடார்கள் தேவஸ்தானத்திற்கு உரிமையானது. அரசு,தனியார் உதவியுடன் பல திட்டங்கள் நிறைவேற்றப் பட்டு, இச்சமூகத்தைச் சேர்ந்த பலசரக்குக் கடை மகமைத் தரப்பினரால்
மிகச்சிறப்பாகப் பராமரிக்கப் பட்டு வருகிறது.
தெப்பம் உருவான வரலாறு
திரு மு. சரவணமுத்துப் பிள்ளை அவர்களையே சாரும். அரசிடம் தேவையான அனுமதிகளைப் பெற்றுத்தந்து, நீர் வரும் பாதையையும் வடிவமைத்துக்கொடுத்துள்ளார்
மற்றும் விருதுபட்டியைச் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து தூர்ந்து போன ஊருணி, குளங்களில் உள்ள கற்களையும், சாலையோரங்களில் இருந்த சுமைதாங்கிக் கற்களையும் கொணர்ந்து சேர்க்குமாறு உத்தரவிட்டார்.
1866ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மூன்றாம் நாள் (அட்சய வருடம் ,ஆடிமாதம்,18ம் நாள்) கிருஷ்ண பட்சம், பஞ்சமி திதி,உத்திரட்டாதி.நட்சத்திரம், புதன் கிழமை, சித்த யோகம், கடக லக்னம் கூடிய சுபவேளையில் குளம் வெட்டும் பணி துவக்கப்பட்டது.
உள்ளூர் மற்றும் வெளியூர் இந்துநாடார் சமூகத்தினர் தேவையான நிதியினை
வழங்கியுள்ளனர்.நிதிப் பற்றாக்குறையின் போது தேவஸ்தானத்திற்குச் சொந்தமான நாச்சி தெருவில் இருந்த சொத்துக்கள் விற்கப் பட்டு
பணி நிறைவு செய்யப் பட்டது.
உள்ளூர் நாடார்களில் வீட்டிற்கு ஒருவர் குளம் வெட்டும் பணியில் ஈடுபட, நாடார் குலப்பெண்மணிகள் கஞ்சி தயார் செய்து உணவளிக்க, சிறுவர், சிறுமியர் உதவி செய்ய ஊர் கூடித் தெப்பக்குளம் அமைக்கப் பட்டது.
குளத்தின் நீளம், கிழக்குப் பகுதியில், தென் வடலாக 330அடியாகும். மேற்குப் பகுதியில் 328அடி.வடபுறமும்,தென்புறமும் கீழ்,மேல் 298அடியாகும்.ஆழம் 21அடி.3.5ஏக்கர் பரப்பளவுள்ள இக்குளத்தின் கொள்ளளவு 5கோடியே 5லட்சம்
லிட்டர். குளத்தினுள் வறண்ட காலத்தில் தண்ணீர் பெற, படிகளுடன் கூடிய மூன்று கிணறுகள் அமைக்கப் பட்டுள்ளன.நடுவில் அழகிய கோபுரத்துடன் மைய மண்டபமும் உண்டு. குளத்தைச் சுற்றிலும் தண்ணீர்த் தருமம் என்ற
பெயரில் அடிகுழாய்களும், மின்மோட்டருடன் குழாய்களுடன் பலராலும் அமைக்கப் பட்டிருக்கின்றன.
பரந்த உள்ளம் படைத்த ஓர் அரசு அதிகாரியின் எண்ணத்தில் வடிவமைக்கப் பட்டு, உருவாக்கப் பட்டு, சிறப்பாகப் பராமரிக்கப் பட்டு வரும் இத்
தெப்பக் குளத்தால் பயன் பெறுவது சாதி, இனம்,மதம் கடந்து அனைவருமே!
இத் தெப்பக்குளத்தைப் பார்க்கும் பொழுதெல்லாம் எனக்கு மதுரையின் பரந்து, விரிந்த மாரியம்மன் தெப்பக்குளம் நினைவுக்கு வரும். அதற்கு நீர கொண்ட வர தற்பொழுது இருக்கும் தொழில் நுட்பங்களைப் பயன் படுத்தி ஆக்கபூர்வமாக ஏதாவது செய்யக் கூடாதா?
PLAN OF VIRUDHUNAGAR TEPPAM |
சிறிய ஊரான விருதுநகரிலேயே இவ்வளவு செய்யும் பொழுது மதுரையில் எவ்வளவு செய்யலாம்?அரசின் நலத் திட்டங்கள், எம்.எல்.ஏக்கள்,
எம்.பி தொகுதி மேம் பாட்டு நிதிகள், நன்கொடைகள் பெற்று,அரசியல் வாதிகள் தலையீடின்றி,நல்ல மனமுள்ள தொண்டு நிறுவனங்கள், தனியார் அமைப்புகள் மூலம், ஊழலின்றி, வெளிப்படையாகச் செயல் பட்டு,என்.சி.சி, என்.எஸ்.எஸ் போன்ற மாணவர் அமைப்புகள் மூலம் மாணவர்கள் மற்றும் மக்களின் உழைப்பையும் பயன்படுத்தி மாரியம்மன் தெப்பக் குளத்தை ஆழப்படுத்தி, நீர் நிறைத்தால் மதுரை மக்களுக்கு எவ்வளவு பயன்படும்? நிலத்தடி நீர் மட்டமும் உயருமே!
மதுரையில் மட்டுமல்ல,எல்லா இடங்களில் இருக்கும் குளங்கள், கண்மாய்க ளையும் தூர்வாரி, நீரைச் சேமிக்க ஏதாவது செய்யக் கூடாதா!
No comments:
Post a Comment