Wednesday, 18 October 2017

RANJANGUDI FORT - FORGETTED FORT OF TAMILNADU



RANJANGUDI FORT - 
FORGOTTEN FORT OF TAMILNADU 





பெரம்பலூர் மாவட்டத்தில், சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது 300 ஆண்டுகள் பழமையான ரஞ்சன் குடி கோட்டை அழிவின் விளிம்பில் உள்ளதால்,வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தக் கோட்டையை பாதுகாத்திட அரசுத் தரப்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


ரஞ்சன் குடி கோட்டை பல போர்கள் நடந்த சுவடுகளைத் தாங்கி நிற்கும் வரலாற்றுச் சின்னம். இந்தக் கோட்டையின் பெயரைக் கொண்டே ஊரும் அமைந்திருப்பது இதன் தனிச் சிறப்பு. ரஞ்சன்குடி கோட்டை என்பதை  "நஞ்சன்குடி"என்றும் மக்கள் அழைக்கிறார்கள்.

பெரம்பலூரிலிருந்து 17 கி.மீ. வடக்காகவும், இராமநத்தத்திலிருந்து (தொழுதூர்) 8 கி.மீ. தெற்காகவும் உள்ளது. 17 ம்  நூற்றாண்டில் கர்நாடக நவாப்பிடம் ஜாகிர்தாராக இருந்த ஜஹீம் தார்   என்பவரால்  கட்டப்பட்ட கோட்டை ..இது.மிக அழகாக செதுக்கப்பட்ட கற்களைக் கொண்டு இதன் சுவர்கள் வலிமையாகக் கட்டப்பட்டு உள்ளன..

இக்கோட்டையின் மதில் சுவர்கள் மூன்று அடுக்குகள் கொண்டவையாக வெவ்வேறு உயரத்தில் உள்ளன. மேலிருந்து பார்க்கும்போது இக்கோட்டை அரைக்கோள வடிவத்தில் இருக்கும். கோட்டை வெளிப்புறத்தில் மதில் சுவர்களை ஒட்டி அகழி இருக்கிறது. அகழிக்குத் தேவையான தண்ணீர் அருகில் உள்ள நீரோடையிலிருந்து கொண்டுவரப்படுகிறது.அகழி நிறைந்த பின்னர் நீர் வெளியேறி ஒரு சிறிய நீர்பிடிப்பு பகுதி ஒன்றில் சேகரமாகிறது.

இவ்வகழியில் பாதுகாப்பு கருதி,கோட்டை பயன்பாட்டில் இருந்த காலத்தில் முதலைகள் விடப்பட்டிருக்க வேண்டும். இக்கோட்டையின் உள்ளே 
2  மசூதிகள் இருக்கின்றன. மேலே ஒன்றும், கீழே ஒன்றுமாக உள்ளன. இதில் கீழே உள்ள மசூதியில் இப்போதும் வழிபாடு நடந்து வருகிறது. ரஞ்சன்குடி கோட்டை கட்டடக் கலையில் ஒரு சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது. படிகளின் வழியாக மேலே ஏறிச் சென்றால் "பேட்டை' என்று குறிப்பிடப்படும் இடம் முன்பு போர்புரிந்த இடமாக இருக்க வேண்டும்.

1751-ல் நடைபெற்ற வாலிகண்டபுரம் போரில், இந்தக் கோட்டை ஒரு முதன்மையானப் பங்கு பெற்றுள்ளது என்று வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. ஆங்கிலேயர்களுக்கும், பிரான்ஸ் நாட்டவர்களுக்கும் தொடர்ந்து நடைபெற்ற போரில் இக்கோட்டையைக் கைப்பற்றுவதுதான் வெற்றியைத் தீர்மானிக்கின்ற ஒன்றாக இருந்துள்ளது. ஆரம்பப்போரில் பிரான்ஸ் வெற்றி பெற்றாலும், பின்னர் ஆங்கிலேயர்களே வென்றனர் என்பதை வரலாறு கூறுகிறது.

உச்சிமேல் இருக்கும் பகுதி "கோட்டை மேடு' என்று அழைக்கப்படுகிறது. தூரத்தில் இருந்து வரும் எதிரியைக் கவனிக்கவும், பீரங்கி போன்ற ஆயுதம் கொண்டு குறி பார்க்கவும் சுவர்களில் துளைகள் இடப்பட்டுள்ளன. வெளிப்புறத்தில் இருந்து பார்த்தால், சுவரின் துளைகள் வழியாக  குறிவைப்பது எதிரிக்குத் தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது.

இதைவிட எல்லாவற்றிலும் சிறப்பு, உச்சியில் சிறிய குளம் உள்ளதுதான். இந்தக் குளத்து நீர், நவாபுகளுக்குக் குடிக்கவோ, குளிக்கவோ பயன்பட்டிருக்க வேண்டும். இக்கோட்டைக்குள் குடியிருப்பு மண்டபங்கள், போர்க்கருவிகள் சேமிக்கும் இடங்கள், குதிரை கொட்டடிகள் இருந்ததற்கான அடையாளங்கள் உள்ளன.இங்கு ஆண்களையும், பெண்களையும் இறக்கும் வரை சிறைவைக்கும் சிறைகள் இருந்திருக்கலாம் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். பல்வேறு சுரங்கப்பாதைகள் இருந்ததற்கான அடையாளங்கள் இருக்கின்றன. திருச்சிராப்பள்ளி அருகில் இருப்பதால், அதற்கு தேவையான படைக்கலன்கள் இங்கிருந்துதான் சென்றிருக்க வேண்டும் என்றும், இக்கோட்டை வரலாற்றின் போக்கைத் தீர்மானிக்கும் ஓர் இடமாக இருந்திருக்க வாய்ப்புள்ளதாகவும் வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இப்போது கோட்டைக்கு அருகே மக்கள் குடியிருக்கும் கிராமம் அமைந்துள்ளது. இக்கோட்டையைச் சுற்றி பசுமை போர்த்திய வயல்வெளிகள் காணப்படுகின்றன. இக்கோட்டை இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்தியாவில் இருக்கும் நினைவுச் சின்னங்களில் இந்த நிறுவனத்தால் மிக மோசமாகப் பராமரிக்கப்படும் பகுதிகளில் ஒன்றாக இதுதான் இருக்கும் என்று கூறும் அளவுக்குக் கோட்டையின் நிலைமை இருக்கிறது. இந்த இடத்தைப் பற்றி சிறு குறிப்புகூட இங்கே இல்லை என்பதும்  தொல்பொருள் ஆய்வு நிறுவனத்தின் பலகைகூட சேதமடைந்து உள்ளதும் கோட்டையின் சீரழிவுக்கு உதாரணமாக இருக்கிறது.  



தேசிய நெடுஞ்சாலையில் இருந்து மிக அருகில் உள்ளதால் தலைச்சிறந்த சுற்றுலாத்தலமாக விளங்க வாய்ப்புள்ளது. இது ஒரு வேலூர், திருமயம் கோட்டைகள் போன்று விளக்கம் பெற வேண்டிய ஒன்று. பெரம்பலூர் போன்ற பின்தங்கிய மாவட்டத்தில் உள்ள இதுபோன்ற வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் சிதிலம் அடைந்து வருவது வருந்தத்தக்க ஒன்று. இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனம், சுற்றுலாக் கழகம், மாவட்ட நிர்வாகம் உடனடியாக சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும் என்பது இப்பகுதி வாழ் மக்களின் எதிர்பார்ப்பு.  


“நாங்களும் நவாப் மன்னர்கள் பரம்பரையைச் சேர்ந்தவர்கள்தான். ரஞ்சன்குடி கோட்டையை கடைசியாக ஆற்காடு முகமதலி ஆட்சி செய்திருக்கிறார். எனது மூன்றாவது பாட்டனார் பாக் பாபாஜி, நவாப்கள் ஆட்சியில் போர்ப் படைத் தளபதியாக இருந்திருக்கிறார். அவருக்குப் பின்னால் வந்தவர்களும் இந்தக் கோட்டையில் முக்கியமான பொறுப்புகளில் இருந்துள்ளனர்.

சுதந்திரத்துக்கு பிறகு எனது தந்தையாருக்கு இந்தக் கோட்டையை காவல் காக்கும் காவலர் பணி கொடுத்தார்கள். அவருக்குப் பிறகு 1972-ல் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக எனக்கு காவலர் பணி கொடுத்தார்கள். முன்னோர்கள் ஆட்சி செய்த அரண்மனை என்பதால் இந்தக் கோட்டையை எனது வீடு மாதிரிதான் நான் பார்த்தேன்; இன்னமும் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு ஆர்வத்துடன் கோட்டையைச் சுற்றிக் காட்டுவேன். அப்படி சுட்டிக்காட்டியபோதுதான் மேலே இருந்து தவறி விழுந்து எனது இடது கால் முடமாகிவிட்டது.

மழைக்காலங்களில் இந்தக் கோட்டைப் பகுதியில் காலாற நடக்கும்போது அந்தக் காலத்துச் செப்புக் காசுகளை ஏராளமாக கண்டு எடுத்திருக்கிறேன்.   பாண்டியர்கள், சோழர்கள், விஜய நகரப் பேரரசர்கள்,முகலாயர்கள், பயன்படுத்திய காசுகள் எல்லாம் என் கைக்குக் கிடைத்து அவைகளை பள்ளிக்கூடத்துப் பிள்ளை கணக்காய் சேர்த்து வைத்திருந்தேன். எம்.ஜி.ஆர். காலத்தில் மாநில தொல்லியல் துறை இயக்குநராக இருந்த நாகசாமி, நான் சேமித்து வைத்திருந்த காசுகளை தரும்படி கேட்டார். அப்போது எனக்கு இதன் அருமை தெரியவில்லை. நான் சேமித்து வைத்திருந்த முக்கால் படி செப்புக் காசுகளை அவரிடம் எடுத்துக் கொடுத்தேன்.

அவருக்குப் பிறகு நடனகாசிநாதன் இயக்குநராக இருந்தபோதும் என்னிடம் இருந்த காசுகளை கேட்டு வாங்கினார். இவர்கள் இருவருக்கும் கொடுத்த பிறகு சேமித்த காசுகளைத்தான் இப்போது நான் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன். இப்போதும் வாரம் ஒருமுறை ரஞ்சன்குடி கோட்டைக்குச் சென்று அதன் அழகை ரசித்துவிட்டு வருவேன். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தக் கோட்டையில் பல பகுதிகள் மண்ணுக்குள் புதைந்து கிடக்கின்றன.

இதைவிட எல்லாவற்றிலும் சிறப்பு, உச்சியில் சிறிய குளம் உள்ளது.இந்த குளத்து நீர் நவாபுகள் குளிக்கவோ,குடிக்கவோ பயன் பெற்றிருக்க வேண்டும்.இக்கோட்டைக்குள் குடியிருப்பு மண்டபங்கள் ,போர் கருவிகள் சேமிக்கும் இடங்கள்,குதிரை கொட்டடிகள் இருந்ததற்கான அடையாளங்கள் உள்ளன.ஆண்களையும்,பெண்களையும் இறக்கும் வரை சிறை வைக்கும் சிறைகள் இருந்திருக்கலாம் என்று வரலற்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள் .பல்வேறு சுரங்கப்பாதைகள் இருந்ததற்கான அடையாலங்கள்

இருக்கின்றன. திருச்சிராப்பள்ளி அருகில் இருப்பதால்,அதற்க்கு தேவையான படைக்கலங்கள் இங்கிருந்து தான் சென்றிருக்க வேண்டும்.இவ்வாறு வரலாற்றில்,வரலாற்றின் போக்கை தீர் மானிக்கின்ற ஒரு இடமாக இருந்திருக்கின்றது ரஞ்சன்குடி கோட்டை.


எனக்கு தெரிந்தே கோட்டைக்குள் 11 கிணறுகள் இருந்தன. அவை அத்தனையும் இப்போது மண் மூடிவிட்டது. அந்தக் கிணறுகளுக்குள் பாதுகாப்புக் காரணங்களுக்காக நவாப் தளபதிகள் போர் கருவிகளைப் பதுக்கி வைத்திருக்க வாய்ப்பிருக்கிறது. அந்தக் கிணறுகள் இருந்த இடமும் கோட்டைக்குள் புதைந்துபோன இன்னும் சில முக்கியமான பகுதிகளும் எனக்கு மட்டும்தான் தெரியும்.


அவற்றை எல்லாம் தோண்டி எடுத்து அதனுள்ளே உள்ள வரலாற்றுத் தடயங்களை வெளிக் கொண்டு வரவேண்டும். அதற்காக, நான் உயிருடன் இருக்கும் காலத்திலேயே என்னைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என தொல்லியல் துறைக்கு பலமுறை கடிதம் எழுதினேன். எந்த நடவடிக்கையும் இல்லை. தொன்மையான இந்தக் கோட்டைக்குள் புதைந்திருக்கும் வரலாற்றுத் தடயங்களை வெளியில் கொண்டுவர முழுமையான அகழ்வாராய்ச்சி செய்யப்பட வேண்டும். இந்தக் கோட்டையை சுற்றுலா தலமாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று உருக்கமாக பேசுகிறார் ஹாசீம் பாய்..  


 இந்திய தொல்பொருள் ஆய்வு 

நிறுவனம்,தமிழ்நாடு சுற்றுலா கழகம்,மாவட்ட நிருவாகம் உடனடியாக சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் இல்லையேல் அந்த கிராம மக்களிடமே ஒப்படைக்க வேண்டும் என்பதே மக்களின் கோபமாகவும்,குரலாகவும் உள்ளது.வேலுருக்கு ஒரு கோட்டை போன்றும்,திருச்சிராப்பள்ளிக்கு ஒரு மலைகோட்டை போன்றும்,பெரம்பலூருக்கு இந்த ரஞ்சன் குடி கோட்டை சிறப்பு சேர்க்க கூடிய ஒன்று.சிறப்பு சேர்க்குமா இந்த அதிகார வர்க்கம் ? 





பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்திற்கு வரலாற்று ரீதியாகப் பெருமை சேர்க்கும் சுற்றுலா தலம் ரஞ்சன்குடி கோட்டை. பெரம்பலூரிலிருந்து சென்னை செல்லும்  வழியில் 18 கிலோமீட்டர் தொலைவில், மங்களமேடு கிராமத்தை ஒட்டியுள்ள ரஞ்சன்குடியில் இக்கோட்டை உள்ளது.

 சந்தாசாஹிப்-பிரெஞ்சு கூட்டுப்படைக்கும்,  முகமதுஅலி-ஆங்கிலேய கூட்டுப்படைக்கும் இடையே 1751ம் ஆண்டு நடந்த வால்கொண்டாபோர், ரஞ்சன்குடி கோட்டையை மையமாக வைத்து நடந்ததாக வரலாற்று  ஆதாரங்கள் உள்ளன. 

கோட்டையைச்சுற்றி அகழிகள், விதான மண்டபம், பீரங்கி மேடை, கொடிமேடை, தண்டனை கிணறு, வெடிமருந்துக்கிடங்கு, புறவழி  சுரங்கப்பாதை, பிற்கால பாண்டியர் காலத்தில் கட்டப்பட்ட மண்டபம், முகமதியர்கள் ஆட்சியில் கட்டப்பட்ட மசூதிகள், இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படாதபடி  துளைகள் இடப்பட்ட சுற்றுச்சுவர், குதிரை லாயம் மற்றும் கடல் மட்டத்திலிருந்து 152அடி உயரமுள்ள கோட்டையின் உச்சியில் அமைக்கப்பட்ட குளம் போன்றவை  இன்றளவும் அழியாமல் உள்ளன.

இந்தியத் தொல்லியல் துறை கட்டுப்பாட்டிலுள்ள இக்கோட்டையில் காவலாளியாக அவ்வூரைச் சேர்ந்த காசிம்(71) என்பவர் 37 ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு  பெற்றுள்ளார். கோட்டையில் ஆங்கிலேயர்கள், பிரான்ஸ்காரர்கள் மற்றும் முகமதியர்கள் ஆதிக்கத்தின்போதும் தமிழகத்தில் பயன் படுத்தப்பட்ட 400 ஆண்டுகள்  பழமையான 50க்கும் மேற்பட்ட தாமிரக்காசுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவற்றைச் சேகரித்த காசிம், அவ்வப்போது பெரம்பலூர் கலெக்டர்களாகப் பதவியில்  இருக்கும் பலரிடம் கொடுத்து மத்திய அரசின் தொல்லியல்துறை கட்டுப்பாட்டிலுள்ள அருங்காட்சியகத்தில் சேர்த்துப் பாதுகாக்க வேண்டுமெனப் பரிந்துரைத்ததுண்டு.

ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பு பெறப்பட்ட பீரங்கிக் குண்டுகள் வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் கோயிலில் பாதுகாக்கப்பட்டு வரும் நிலையில் சில தினங்களுக்கு  முன்பு பெரிதும் சிறிதுமான 2 பீரங்கிக் குண்டுகளை காசிம் கண்டெடுத்தார். 

அதோடு, அரியவகைக் காசுகளையும் கண்டெடுத்துள்ளார். 1750ல் பிரெஞ்சு ஆதிக்கத்தின் போது ஒரே நாணயத்தில் ஒரு பக்கம் ஆங்கிலேய மன்னர்களின்  இலச்சினையும், மறுபக்கம் முகமதியர்களின் உருது எழுத்தினான இலச்சினையும் அச்சிடப்பட்ட காசுகள், 1808ம் ஆண்டு கிழக்கிந்தியக் கம்பெனியரால் அச்சிடப்பட்ட  காசுகள், விஓசி எனப்படும் வாண்டிமேன் ஓவன்கோவன் பெயரிலான காசுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சில ஆண்டுகளாக இவர் சேகரித்து வரும் 50க்கும் மேற்பட்ட  தாமிரக்காசுகள் கையிருப்பில் உள்ளன.


காசிம் கூறுகையில், ரஞ்சன்குடியில் அரசு தொடக்கப்பள்ளி வகுப்பறைகளில் 4 கட்டிடங்கள் பயன்படுத்தப்படாமலேயே உள்ளன. இவற்றில் 2 கட்டிடங்களை ஒதுக்கி,  அதில் அருங்காட்சியகம் ஒன்றையும், நூலகம் ஒன்றையும் அமைத்துத் தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இங்கு பெறப்பட்ட அரிய பொருட்கள்  வேறெங்கோ முடங்கிக்கிடக்காமல், நமது சந்ததியினர் கண்டுகளிக்க பெரம்பலூரிலேயே வைத்துப் பாதுகாக்க உதவவேண்டும் என்றார்.





No comments:

Post a Comment