Showing posts with label Basheer. Show all posts
Showing posts with label Basheer. Show all posts

Saturday, 18 April 2020

வைக்கம் முகமது பஷீரின் பாத்தும்மாவுடைய ஆடும், இளம் பருவத்துத்தோழியும்





வைக்கம் முகமது பஷீரின் 
பாத்தும்மாவுடைய ஆடும், இளம் பருவத்துத்தோழியும்

வைக்கம் முகமது பஷீரின் ஒரு கதாபாத்திரம் குழந்தையாக இருக்கும்போது பள்ளியில் ஆசிரியர் கேட்கிறார் “ஒன்றும் ஒன்றும் சேர்ந்தால் என்ன வரும்டா?” குழந்தை தன் ஊரில் குன்றுமேலேறி நின்று இரு ஆறுகள் இணைவதைப் பார்த்த ஞாபகத்தில், “இன்னொரு பெரிய ஒன்று’ என்று பதில் கூறுகிறது. அடிவிழுகிறது. எவ்வளவு சொல்லியும் குழந்தைக்குப் புரியவில்லை. இரண்டும் இணையாமலிருக்கும் போதுதான் இரண்டு. இணைந்துவிட்டால் எப்போதும் மிஞ்சுவது ஒன்றுதானே?

முதிர்ந்து பழுத்தபிறகு பஷீர் எழுதிய கதையில் ஒரு கதாபாத்திரம் அறிகிறது `நான் நீ என்ற இரட்டை நிலையிலிருந்து நீ மட்டும் எஞ்சுவதே மரணம்’. அவரது படைப்பிலக்கியத்தின் தொடக்கமும் முடிவும் இவ்விரு அறிதல்களில் உள்ளது. இவ்விரு அறிதல்களும் வேறுவேறு அல்ல. பஷீரின் உலகம் குழந்தைக் கண்களால் அறியபடும் வாழ்க்கைத் தரிசனங்களினால் ஆனது. பஷீர் தன் கடைசிநாள் வரை அந்த குழந்தைவிழிகளை தக்கவைத்துக் கொண்டார். ஆகவே வேடிக்கையும் வியப்பும் மட்டும் கொண்டதாக முற்றிலும் இனியதாக இருந்தது அவருடைய உலகம்.

பஷீரின் இலக்கிய உலகம் முற்றிலும் அவரை மையமாக்கி இயங்குவது. பஷீர் தான் நேரடியாகவும் வேறு பெயரிலும் அவருடைய படைப்புலகு முழுக்க நிரம்பியிருக்கிறார். மலையாள மொழியைக் கற்கத் தொடங்கும் வாசகன் முதலில் வாசிக்கக்கூடிய எழுத்து பஷீருடையது. மிகமிக எளிமையான நடை. அவருடைய மிக நீளமான நாவல்கூட அதிகபட்சம் 80 பக்கம் நீளம் உடையதுதான். மலையாளப் புத்திலக்கியத்தின் முழுமையை அறிந்த பிறகு ஒரு வாசகன் இறுதியில் பஷீரிடம் திரும்பிவந்து அவரே அதன் உச்சகட்ட சாதனை என்பதை அறிய நேரும். பஷீரில் தொடங்கி பஷீரில் முடியும் இந்தப் பயணம் போன்ற ஒன்றை பிறமொழி இலக்கியங்களில் அடையமுடியாது. இதுவே பஷீரின் சிறப்பம்சமாகும்.

கோட்டயம் அருகே தலையோலப் பறம்பு என்ற ஊரில் பிறந்த வைக்கம் முகமது பஷீர் வசதியான மரவியாபாரியின் மகன். வாப்பாவின் வியாபாரம் நொடித்து பரம ஏழையாக ஆகிறது குடும்பம். கோழிக்கோட்டுக்கு வரும் காந்தியை பார்க்கச் செல்கிறார் பள்ளி மாணவனாகிய பஷீர். நகரும் ரயிலுடன் ஓடி காந்தியின் கரத்தை பாய்ந்து தொட்டுவிடுகிறார். அந்த தொடுகை அவரை மாற்றுகிறது.அந்தக்கையை தூக்கியபடி வந்து அம்மாவிடம் ”உம்மா நான் காந்தியை தொட்டேன்!”என்று கூவுகிறார். உம்மாவுக்கு பயம். ‘தலை தெறித்த’ பையன் புதிதாக என்ன வம்பை தொட்டுவிட்டு வந்திருக்கிறானோ என்று.

பஷீர் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு தீவிரவாத அமைப்புகளை உருவாக்கினார். சிறை சென்றார். சூ·பி துறவியாக பிரிவுபடாத இந்தியாவில் அலைந்து திரிந்தார். பின்பு எழுத ஆரம்பித்தார். இறுதிவரை ஆழமான இஸ்லாமிய சூ·பி நம்பிக்கையும் காந்தியப் பற்றும் அவரிடம் இருந்தது. அவர் தேசப்பிரிவினை கடைசிக்காலம் வரை ஏற்கவேயில்லை

பஷீரின் எழுத்தை வெறும் சுவாரஸியத்திற்காக, நகைச்சுவைக்காக படிக்கலாம். [ஆரம்ப காலங்களில் பஷீர் தன் நூல்களை தானே சுமந்து சந்தைகளில் விற்பதுண்டு. தன் நூல்களை சிறியதாக எழுதுவதன் காரணத்தையும் அவரே சொல்லியிருக்கிறார். பேருந்து காக்குமிடத்தில் நூலை விற்றுவிட்டு அதை வாங்கியவன் வாசித்து முடிக்கும்வரை அருகேயே நின்று அவனிடம் பேசி அதை மீண்டும் அன்பளிப்பாக பெற்றுக்கொள்ளுதல். ஒரு நூலை குறைந்தது நான்குதடவை விற்றால்தான் வாழமுடியும்! ] ஆனால் கூர்ந்த இலக்கிய வாசகனின் பார்வையில் உள்வாசல்கள் திறக்க விரிவடைந்தபடியே செல்லும் உலகம் அது. திறனாய்வுகளின் மூலம் புதிய புதிய இலக்கிய முறைகளில் பஷீர் மலையாளத்தில் இன்று மீண்டும் மீண்டும் கண்டுபிடிக்கப்படுகிறார். எ.இ. ஆஷர் அவர்களின் மொழிபெயர்ப்பில் (My grandpa had an elephant and other stories.) ஆங்கிலத்தில் வெளிவந்து பரவலான கவனத்தையும் ஈர்த்துள்ளது பஷீரின் படைப்புலகம்.

பஷீரின் இரண்டு சிறு நாவல்களின் மொழிபெயர்ப்பு ஒரு நூலாக தமிழில் குமாரி சி.எஸ். விஜயம் மொழிபெயர்ப்பில் தேசிய புத்தக நிறுவனத்தாரால் வெளியிடப்பட்டுள்ளது. பஷீரை மொழிபெயர்ப்பது பெரிய சவால். கெ. விஜயம் மொழிபெயர்ப்பில் குறிப்பிடும்படியான வெற்றி பெறவில்லை என்றே கூறவேண்டும். பஷீர் கதை எழுதுபவரல்ல; அவர் கதை சொல்லி, அவ்வகையில் அவர் இ. ராஜ நாராயணனைப் போன்றவர். அவருடைய மொழியில் கோழிக்கோட்டுப் பகுதி முஸ்லீம் உரையாடல் மொழியின் அழகுகள் மிகுதி. குழந்தைகளின் மழலைப் பேச்சையும் பல்வேறுவிதமான கொச்சைகளையும் உபயோகிப்பதில் அவரது ரசனை வியப்பிற்குரியது.

வாசலில் வந்து நிற்கும் ஊதல் இசைக்கும் பக்கிரியைப்பார்த்துவிட்டு ஒருவயது ஷாஹினா வீட்டுக்குள் ஓடிவந்து கூவுகிறது ”பீப்ளி பீச்சண மிஸ்கீன்!” [பீப்பி ஊதும் சாமியார்] இதில் உள்ள சொற்கள் குழந்தையே உருவாக்கிக் கொண்டவை. இதில் குழந்தையின் கீச்சுக்குரலும் உள்ளது. இதை எப்படி தமிழாக்கம் செய்வது? ‘நான் பைசாவ எடுக்கலை இக்கா” என்று ஹனீபா சொல்ல கூடவே அப்பாவுக்கு நிரந்தர ‘கண்ணால் கண்ட சாட்சி ‘யான அபிபுல்லாவும் சொல்கிறான் ‘த்தா பறேணது பி ண்டு ‘ [அப்பா சொல்வதை அபி கண்டேன்] குழந்தைகளின் உலகில் பஷீர் குழந்தையாக சகஜமாக இறங்கிச்செல்கிறார். என் வாசிப்பில் உலக இலக்கியத்தில் மிகச்சிறந்த குழந்தையுலகை பஷீர் படைப்புகளில்தான் கண்டிருக்கிறேன். சகஜமான, நளினமான அவருடைய கதை கூறலை மொழிபெயர்க்கும்போது எப்போதுமே சற்று செயற்கைத்தன்மை வந்து விடுகிறது. இம்மொழிபெயர்ப்பிலும் அது உள்ளது.

இருப்பினும் இவ்விரு நாவல்களின் வழியாக பஷீரின் உலகு குறித்து ஒரு நுட்பமான புரிதல் வாசகனில் ஏற்பட முடியும். `இளம் பருவத்துத் தோழி’ ஒரு எளிய காதல் கதை. கதாநாயகன், பஷீர் போன்ற, மஜித். கதாநாயகி சுஹாரா. அவர்களுடைய காதல் பிள்ளைப்பிராயத்தின் தூய்மையில் பிறந்து மலர்ந்தது. வாழ்வின் கொடுந்துயரங்களினால் நசுக்கி அழிக்கப்பட்டது. இவ்வெளிய கதை ஒருவேளை இன்றைய வாசகனுக்கு உவப்பின்றிப் போகலாம். ஆனால் கதை நகர்வினூடாக பற்பல நுண்ணியத் தருணங்கள் நிகழ்கின்றன.

ஓர் உதாரணம். நொடித்துப் போன தந்தை மகன் வெற்றிகரமான வியாபாரியாக வேண்டும் என்று விரும்பும்போது மஜீத் வாழ்வில் தோல்வியுற்று அலைந்து திரும்பி வந்து ரோஜாத் தோட்டம் அமைக்கிறான். அது அவனுடைய ஆத்மாவின், நுண்ணுனர்வுகளின் மலரல். அதை தனக்கெதிரான ஒரு கேலியாகவே அவர் தந்தையால் பார்க்க முடிகிறது. ‘ நீ என்ன சம்பாதித்தாய்?’ என்கிறார் அவர். மஜீத் சம்பாதித்தது வானம் போல விரியும் பூக்களை மட்டுமே. அபத்தமாக உலகில் மலர்ந்து நிற்கும் அழகுகளை.

மஜீத் வெகுகாலம் கழித்து வந்து பார்க்கும்போது நோயுற்று மறையும் சுஹாரா சொல்ல வந்து சொல்லாமல் உதட்டில் உறையவிட்டுப் போன ஒன்று – அது என்ன எனும் வினாவுடன் முடிகிறது இந்நாவல். மலையாள விமரிசகர் ஒருவர் எழுதினார்; `குமாரன் ஆசானின் அமரகாவியம் `உதிர்ந்த மலரி’ல் உதிர்ந்து விழுந்த மலர் கண்டு கவிஞன் மனம் விரிகிறது. உயிரின் நிலைமையில் தொடங்கி பிரபஞ்சத்தின் நித்தியத்துவம்வரை அது தொட்டுச் செல்கிறது. ஒவ்வொரு உதிர்ந்த மலரிலும் பிரபஞ்ச இயக்கத்தின் மாபெரும் ரகசியம் பொதிந்துள்ளது. சுஹரா ஓர் உதிர்ந்த மலர்.’

`பாத்துமாவின் ஆடு’ உற்சாகமான ஒரு குடும்பசித்திரம். மனநிலை பிறழ்ந்து, சிகிச்சைக்குப்பிறகு, ஓய்வெடுக்கும் பொருட்டு தன் குடும்ப வீட்டுக்கு வந்து தங்குகிறார் பஷீர். அங்கு அவருடைய உம்மா, தம்பி ஹனீபா, அவர் மனைவி, தங்கை, அவள் கணவன் இவர்களுடைய குழந்தைகள் மற்றும் உம்மாவின் வளர்ப்புக் கோழிகள் உள்ளனர். பக்கத்தில் தங்கை பாத்துமாவும் அவள் குழந்தைகளும் கணவனும் அவளுடைய செல்ல ஆடும் வசிக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குணாதிசயம். ஒவ்வொருவரும் ஒருவரையருவர் சார்ந்திருக்கிறார்கள். ஏமாற்றுகிறார்கள். ஏமாறுகிறார்கள். அன்பு செலுத்துகிறார்கள். இந்த குடும்ப நாடகத்தை அற்புதமான நகைச்சுவையுடன் கூறுகிறார் பஷீர். இந்நாடகத்தில் மையக்கதாபாத்திரம் பாத்துமாவின் ஆடுதான்.

பஷீரின் படைப்பியக்கத்தின் சிறப்பான இடங்கள் குழந்தைகளையும் மிருகங்களையும் அவர் காட்டுமிடங்கள்தான். இந்நாவல் அதற்கு சிறந்த உதாரணம். விமரிசகர் கல்பற்றா நாராயணன் எழுதுகிறார் “அபாரமான பசியுள்ளது பாத்துமாவின் ஆடு. பசியில் அதற்கு ருசி வளர்கிறது. எல்லா இலையும் தித்திக்கும் பெருங்காடு அதன்முன் விரிந்து நிற்கிறது. பலா இலை, சாம்ப மரச்சருகுகள், பஷீரின் புத்தகங்கள், அபியின் சட்டை எல்லாமே அதற்கு இனிய உணவுதான்” [ ஏதிலையும் மதுரிக்குந்ந காடுகளில்] அந்த அற்புதமான ஆடு வேறு ஏதுமல்ல, பஷீரின் கனிந்த ஆன்மாதான். மானுடம் மீதான அளவிறந்த அன்பே பஷீரின் தரிசனம். மனிதனின் குரூரத்தை, சுயநலத்தை, அற்பத்தனத்தை அது முடிவின்றி மன்னிக்கிறது. உளம் திறந்து நேசிக்கிறது. அந்தப் பிரியத்தின் ஒளியில் குரூரமான வாழ்வுநாடகம் இனிய நகைச்சுவை அரங்காக மாறிவிடுகிறது. பஷீரின் மொத்த படைப்புலகிலும் தீமையின் துளிகூட இல்லை. கசப்போ கோபமோ எங்கும் இல்லை. தேவர்களின் பார்வையில் மானுட வாழ்வு இப்படித்தான் இருக்கும் போலும்.

ஆனால் இந்த அன்பும் கனிவும் மனித வாழ்க்கையின் குரூரங்களைக் காணாத மழுங்கிய தன்மையின் விளைவா? சுய ஏமாற்றா? இல்லை. பஷீர் அளவுக்கு மானுடக்குரூரத்தைக் கண்டவர் குறைவே. அவருடைய ‘சப்தங்கள்’ போன்ற ஆக்கங்கள் குரூரத்தையே சித்தரிக்கின்றன. அதிலிருந்து தாண்டிவந்து அனைத்தையும் எல்லையில்லாது மன்னிக்கும் மார்போடணைத்து நேசிக்கும் மனவிரிவை அவர் அடைந்தார். பாத்தும்மாவின் ஆடு நாவலில் கூட பஷீரின் குடும்பம் எப்படி இருக்கிறது? அவர் நோயுற்று [எனக்கு நல்ல சுகமில்லை. கொஞ்சம் பைத்தியம். வேறொன்றுமில்லை] வந்து தங்கியிருக்க அவரது மொத்த குடும்பமே அவரைத்தேடிவந்து காசு கேட்டுக் கொண்டிருக்கிறது. ‘இத்தா பெரிய எழுத்தாளர். புத்தகமெல்லாம் அச்சிட்டு விற்கிறார். அப்படியானால் பூத்த பணம் கைவசமிருக்கும். பிள்ளையா குட்டியா, கொடுத்தால் என்ன?’ என்பது அவர்களின் நினைப்பு.

எந்தக் கதாபாத்திரமும் பஷீரைக் காணும்போது பேச்சின் முடிவில் ‘ இத்தா எனக்கு ஒரு அம்பது ரூபா தா’ என்றுதான் சொல்கிறார்கள். அம்மா சொல்கிறாள் ” நீ எனக்கு ஒரு அம்பது ரூபா கொடு. பாத்தும்மா அறிய வேண்டாம். அபுபக்கர் அறியவேண்டாம். ஹனீபா அறியவேண்டாம்…” கொடுத்த பணம் சுடச்சுட பாத்துமாவால் கண்டுபிடிக்கப்பட்டு கொள்முதல் பண்ணப்பட்டுவிடும். இந்த அம்மாதான் தலைமறைவாக திரியும் மகன் பசித்து வருவான் என சோறு வைத்துக் கொண்டு ஒருநாள் தவறாமல் வருடக்கணக்காக இரவெல்லாம் காத்திருந்தவள்!

மைத்துனன் ஹனீபா மைத்துனர்களுக்கே உரிய மனோபாவத்தின்படி பஷீருக்கு உரிய எல்லா பொருளும் தனக்கு உரியதே என எண்ணுகிறான். கேட்டால் மொத்தமாக ஒரே பதிலைச் சொல்கிறான் ”என்னை உங்களுக்கு வேண்டாமென்றால் நான் பட்டாளத்துக்கு போறேன். இந்திய அரசாங்கத்துக்கு என்னோட தேவை இருக்கு” அவன் மனைவி சொல்கிறாள் ”நானும் பட்டாளத்துக்குபோய் கஞ்சி காய்ச்சிக் கொடுக்கிறேன்.” அபியும் ஆமோதித்துச் சொல்கிறான் ”அபியும் பட்டாளத்துக்கு போரேன்!”

பாத்துமா மொத்தமாகவே பிறந்த வீட்டை சுரண்டிக் கொண்டிருக்கிறாள். ஆடு காலையிலேயே இங்கே வந்துவிடும். கஞ்சித்தண்ணி, உதிரும் இலைகள் ,சப்தங்கள் புத்தகத்தின் பிரதிகள் முதலியவற்றை தின்னும். பால் கறக்க பாத்துமா கூட்டிப்போய்விடுவாள். அதைறைங்கேயே ரகசியமாகக் மடக்கி கறந்து குழந்தைகளுக்கு பால்காப்பி போடப்படுகிறது. பாத்தும்மா கண்ணிருடன் சொல்கிறாள். ”இந்த அநியாயம் உண்டா? இப்படி சொந்த ஆட்டிலேயே திருடுவார்களா?” அதன் பின் குழந்தைகல் நேரடியாகவே ஆட்டுபபல் அருந்துகின்றன. பாத்தும்மா அண்ணாவை கூட்டிக் கொண்டுபோய் சாப்பாடு போடுவது கூட காசுக்காகவே. இந்த மொத்த சுயநலப்போராட்ட்டத்தையும் நன் பிரியம் மூலம் ஒரு வேடிக்கை நாடகமாக மாற்றிக் கொள்கிறார் பஷீர்.

மார்போடு அணைக்கத் துடிக்கும் கரங்களுடன் பார்க்கும் பார்வையில் சித்தரிக்கப்பட்டவை பஷீரின் குழந்தைகள். அவர்களுடைய மன இயக்கங்களை பஷீர் சித்திரிக்கும் விதமே அலாதி. வீட்டின் குழந்தைகளை பட்டாளமாகக் கூட்டிக்கொண்டு பஷீர் குளிக்கச்செல்கிறார். எல்லாருமே முழு நிர்வாணம். ஆற்றில் குளித்து முடித்து கரையில் நிற்கும் போது அபிக்கு வெட்கம். ” பெரிய வாப்பா எனக்கு வேட்டி வேணும்” ஏன்? காரணம் அபியின் சமவயது குழந்தை இடுப்பில் துணி அணிந்து சற்று தள்ளி நிற்கிறது. பஷீர் ஒரு துண்டை அவனுக்கு உடுக்க வைக்கிறார். உடனே மற்ற குழந்தைகளுக்கும் வெட்கம் பிடுங்கித் தின்கிறது. ஒவ்வொன்றுக்காக துண்டு பனியன் என உடுக்க வைத்தால் கடைசியில் எஞ்சுவது பஷீருக்கு இடுப்பிலிருப்பது மட்டுமே

ஆனால் தூய்மை நிரம்பிய குட்டி தேவதைகளாக குழந்தைகளை பஷீர் காட்டவில்லை என்பது மிக முக்கியமான விஷயம். குழந்தைகள் மனிதகுலத்தின் தீமைகளும் பாவங்களும், பாவனைகளும் விதை நிலையில் உறங்கும் நிலங்களாகவே அவர் படைப்புலகில் வருகிறார்கள். நுணுக்கமாக பெரியவர்களின் இருட்டுக்களை அவர்கள் பிரதியெடுக்கிறார்கள். அபி ஹனீ·பாவின் நடமாடும் சாட்சியாக ஆக்கப்பட்டிருக்கிறான். இயற்கையான மிருக இயல்புகளை செய்முறைகளாக மாற்றிக் கொள்ள பயிற்சி எடுக்கிறார்கள் குழந்தைகள்.

உண்மையில் பஷீரின் குழந்தைகளைக் கூர்ந்து பார்க்கும்போது அவர் மனித குலம் மீது கொண்டிருந்த கணிப்பு என்ன என்ற வினா எழுந்து நம்மை துணுக்குற வைக்கக்கூடும். மனிதனின் அடிப்படையான இருண்மை குறித்து இந்த அளவுக்குப் புரிதல் கொண்ட ஒரு படைப்பாளியை ஐம்பதுகளின் நவீனத்துவர்களிலேயே தேட முடியும். ஆனால் இந்த தரிசனத்திலிருந்து இருண்மை நிரம்பிய பார்வைக்கு பதிலாக பிரகாசம் கொப்பளிக்கும் இனிய நோக்கு ஒன்று பிறந்து வருவதன் ரசவாதமே படைப்பிலக்கியச் செயல்பாட்டின் நீங்காத மர்மம்.

‘பாத்தும்மாவின் ஆடி’ல் கதை என ஏதுமில்லை. பஷீரின் குடும்ப அனுபவங்கள் தன்னிலையாகச் சொல்லப்படுகின்றன. உறவுகள் வழியாக பஷீர் அவரை அலைக்கழித்த தரிசனங்களின் பைத்தியவெளியில் இருந்து மீண்டு வருகிறார். உறவுகளை பஷீர் ஒரு மனிதனை அணைத்துப் புகலிடம் கொடுக்கும் மரநிழலாக காண்கிறார் என இந்நாவல் காட்டுகிறது. மனிதன் தனியாக இருக்க முடியாதவன் என, பிரியததை கொண்டும் கொடுத்தும்தான் அவனால் வழ்ழ முடியும் என. இதுதான் பஷீரின் வாழ்க்கை நோக்கா?

பஷீரின் படைப்புலகு குறித்து அப்படி எளிதான முடிவுகளுக்கு வந்து விடமுடியாது. அவர் வாழ்வை நேசித்தாரா என்றுகூட திட்டவட்டமாக கூறிவிட முடியாது. ஒருவேளை ஒரு மேற்கத்தியமனம் பஷீரை நெருங்கவே முடியாது போகக்கூடும். ஏனெனில் பஷீர் சூ·பிமரபில் வந்தவர். சூனியப் பெருவெளியின் தரிசனத்தை சில தருணங்களிலேனும் அறிந்தவர். பாலைவனவெளியில் தகதகத்துச் சுழலும் மாபெரும் நிலவைக் கண்டு, “அல்லா! உனது மகத்துவம் என்னை கூச வைக்கிறது. அதை தாங்கும் சக்தி எனக்கில்லை” என்று கூவியபடி கதையன்றில் நகரின் சந்துகளுக்குள் ஓடுகிறார் பஷீர்.

ஆம், வெறுமையில் மகத்துவத்தையும் மகத்துவத்தில் வெறுமையையும் கண்டு தெளிந்த சூபிதரிசனத்தின் பின்னணியில்தான் பஷீரை புரிந்து கொள்ளமுடியும். எந்த நவீனப் படைப்பாளியையும் விட பஷீருடன் ஒப்பிடத்தக்கவர்கள் குணங்குடி மஸ்தான் சாகிப் முதலிய சூ·பி துறவியர்தாம். ஆன்மிகம் உயரிய அங்கதத்தைச் சந்திக்கும் இடம் இதில் முக்கியமானதாகும். பஷீரின் சிரிப்பு ஆயிரம் வருடங்களாக கீழை ஞனமரபில் இருந்து வரும் சிரிப்பு. ஜென் கதைகளிலும் சித்தர் பாடல்களிலும் மீண்டும் மீண்டும் தென்படுவது அது. அற்பத்தனத்திலும் குரூரத்திலும் அகங்காரத்திலும் மூழ்கிய மானுடத்தைக் கண்டு பிரியத்துடன் புன்னகைத்துச் சென்ற சூபி பஷீர்.

[பாத்தும்மாவுடைய ஆடும் இளம் பருவத்துத்தோழியும் : வைக்கம் முகமது பஷீர். தமிழாக்கம் குமாரி கெ.விஜயம். நேஷனல் புக் டிரஸ்ட்

Wednesday, 4 July 2018

LOVE STORY VAIKKOM MOHAMED BASHEER





LOVE STORY
VAIKKOM MOHAMED BASHEER




வைக்கம் முகமது பஷீர்
எழுதிய சிறுகதை -தன் காதல் கதை

காதல்வயப்பட்டிருந்த கால கட்டத்தில், முன்பு யுகங்களுக்கு முன்னால் என்பதைப் போல நடைபெற்ற… பழைய ஒரு சிறிய காதல் கதையைக் கூறப் போகிறேன். காதலுக்குள் எப்போதும் காமமும் இருக்குமல்லவா? அப்போது மிகவும் இளம் வயது. கோபம், தைரியம்… இளமையின் உஷ்ணத் தில் நான் இருந்தேன். கேள்வி கேட்பதற்கு யாருமில்லை. தாவிக் குதிப்பது… இதயம் காட்டும் வழியில் பயணிப்பது… தெளிவற்ற வசீகரமான காலகட்டமே, உனக்கு வணக்கம்!

பசித்துப் பசித்து அப்படியே வாழ்வது… எல்லா வகைப்பட்ட பசியும்… எல்லா வகைப்பட்ட தாகமும்… அவை இல்லாமல் போவதற்கு ஒரு வழியும் இல்லை. யார் மீதோ எதன் மீதோ கோபம் இருந்தது. பயங்கரமான கோபம். எனினும், ஆசையின் அழகான பாதையில் வாழ்க்கை ஓடிக் கொண்டிருந்தது. எல்லாம் சரியாகும்… சரி செய்வேன். சூடான குருதியில் கழுவி பிரபஞ்சங்களை முழுமையாகப் புதுமையாக்கு வேன். புரட்சிவாதி… கொல்வதற்குத் தயங்காத பயங்கரவாத இயக்கத் தின் தலைவன்… கத்தியையும் ரிவால்வரையும் கையில் வைத்துக் கொண்டு நடந்து திரிந்த பயங்கர பயங்கரமான காலகட்டமே, உனக்கு வணக்கம்!

பேனாவின் முனையிலிருந்து அன்று நெருப்பு மழை பெய்து கொண்டிருந்தது. சூறாவளி வீசிக் கொண்டிருந்தது. வாழ்க்கையின் இலக்கு சம்ஹாரம் செய்வதாக இருந்தது. இந்த லட்சியத்துடன் ஒன்று சேர்ந்த முந்நூறுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் இருந்தனர். அன்று எங்களுக்கு ஒரு பத்திரிகை யும்… நான்தான் பத்திரிகையின் ஆசிரியர்.
நெருப்புப் பெட்டியைப் போன்று இருந்த சிறிய ஒரு அறைதான் பத்திரிகை அலுவலகம்.
தங்கியிருந்ததும் அங்கேதான். இரவும் பகலும் சிந்தனைதான். எழுத்துதான். இரவும் பகலும் கலந்துரையாடல்கள்… இரவும் பகலும் செயல்பாடுகள்…

என்னுடைய வார்த்தைதான் வேத வார்த்தை… நான் மிகவும் நல்ல மனிதன். மறுக்க முடியாத தலைவன். எனினும், இதயத்திற்குப் பெரிய எரிச்சல். ஒரு அழுகை. சிறிய அளவில் கவலையும் இருந்தது.
பயங்கரவாத செயல்களுக்கு இவை எதுவும் பொருத்தமானவை அல்ல. எனினும், கவலைகள் நிறைந்த பாடல்களைப் பாட வேண்டும் என்று தோன்றும்.

இரண்டு வகைப்பட்ட உணர்ச் சிகள் மனதில். இரண்டும் போராடிக் கொண்டிருக்கின்றன. மொத்தத் தில்- ஒரு மூச்சு அடைப்பதைப் போல.
இப்படித் தோன்றும்போது முற்றத்திற்கு வருவேன். சுவரின் அருகில் சென்று பரந்து கிடக்கும் உலகத்தையே பார்ப்பேன். அப்ப டிப் பார்த்துக் கொண்டு நிற்கும் போது ஒருநாள் அழகான தோற்றத் தைக் கொண்ட ஒரு இளம் பெண் ணைப் பார்த்தேன். அழகான இளம் பெண்… பெண்ணரசி!
முதல் பார்வை…

பிறகு காதல் வலையில் சிக்கு வதற்கு அதிக நிமிடங்கள் தேவைப் படவில்லை. அழகு தேவதையே, தேவீ, உன்னை நான் வழிபடுகி றேன்- மகாமாயே!
இப்படிப் பாடலைப் பாடிய வாறு நான் அவளையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தேன். வழிபாடுதான்… வழிபாடு!

இந்த விஷயங்கள் எதுவும் அவளுக்குத் தெரியாது. அவள் என்னைப் பார்க்கவே இல்லை.
நான் அவளைப் பார்த்ததே ஒரு எதிர்பாராத சம்பவம்தான். ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட பகுதியைப் பார்த் தேன். அவளைப் பார்த்துவிட்டேன்!
உடனடியாக அந்த இடம் புண்ணிய இடமாக மாறிவிட்டது. நான் நின்று கொண்டிருந்த இடமா? ஹோ! அவளை நின்று கொண்டே பார்த்த இடம் அல்லவா? புண்ணிய பூமியின் பகுதி!

முழங்கைகள் இரண்டையும் கற்சுவரில் வைத்து, கை விரல்களை தலையின் இரண்டு பக்கங்களிலும் வைத்துக் கொண்டு கிழக்குத் திசையை நோக்கிப் பார்த்துக் கொண்டு நான் நின்றிருந்தேன். சுவரின் அந்தப் பக்கத்தில் வாழை கள் நிறைந்த ஒரு தோட்டம். தோட்டத்தின் எல்லையில் காம்பவுண்ட் சுவர். அதைத் தாண்டி தெற்கு வடக்காக பொதுச்சாலை… சாலையின் அருகில் இரண்டடுக்கு வீடுகள்.
என்னுடைய இடப் பக்கத்தில் கிழக்கு மேற்காக நகரத்தை இரண்டாகப் பிரித்துக் கொண்டு ஓடும் அசுத்தமான ஒரு பெரிய வாய்க்கால். வாய்க்காலின் இரு பக்கங்களிலும் உயர்ந்த கற்சுவர்கள். அந்தக் கரையில் உள்ள கற்சுவரைக் கட்டும் காலத்தில் சுவர் இருந்த வழியில் ஒரு தென்னை மரம் நின்றிருந்தது. தென்னை மரத்து டன் சேர்த்து இருக்கிற மாதிரி சுவரைக் கட்டி விட்டார்கள். காலம் சிறிது கடந்து சென்றதும், அந்த தென்னை மரத்தை வெட்டி னார்கள். அதைத் தொடர்ந்து அந்த வெள்ளை நிறச் சுவரில் ஒரு வெற்றிடம் எஞ்சியது.

அந்த வெற்றிடம் என்று கூறப் படும் இடைவெளி வழியாகத்தான் நான் அவளைப் பார்ப்பேன். சதைப் பிடிப்புடன் பருமனாக இருக்கும் வெளுத்த அழகி… ப்ரேஸியருக்குள் அழுத்தப்பட்டு இருக்கும் கனமான மார்பகங்கள் திரண்டு திரண்டு உந்திக் கொண்டு நின்று கொண்டிருக்கின்றன- உடலை ஒட்டிக் கொண்டிருக்கும் வெள்ளை ரவிக்கைக்குள். மெல்லிய ரவிக்கை யின் வழியாக அனைத்தும் நன்றா கத் தெரியும். கூந்தலை அவிழ்த்துத் தோளில் விரித்துப் போட்டுக் கொண்டு அவள் கனவு காண்கிறாள்!
தெய்வமே!


அவளுடைய இனிய கனவு என்னவாக இருக்கும்? என்னைப் பார்க்கவில்லையா? சொர்க்கத்தின் அழகியே, ஏன் இங்கு பார்க்காமல் இருக்கிறாய்?
நான் நின்று இருமினேன். ஒன்றல்ல, பத்தல்ல- இருமல்; இருமல்களின் சிறிய சிறிய மேக கர்ஜனைகள்!
அனைத்தும் வீணாகிவிட்டது. அந்த கனவுப் பேரழகி கேட்க வில்லை. ஏன் கேட்கவில்லை?
அதற்குப் பிறகு அங்கு இருமல் தான் வாழ்க்கை. இருமல்களின் பரவலான போராட்டம்! அந்த புண்ணிய இடத்திற்குச் சென்று நிற்பது, கருத்த இடைவெளி வழியாகப் பார்ப்பது… அவள் அங்கு எங்காவது இருப்பாளா? திடீரென்று பார்த்தால், உடனடியாக இரும வேண்டும்! முறையாக இருமுவதற் காக ஏராளமான இருமல்களை ஸ்டாக் பண்ணி வைத்துக் கொண்டு காத்து நின்றிருந்தேன். சில நேரங் களில் மின்னலைப் போல பார்ப் பேன். அரை டஜன் இருமல்களை ஒவ்வொன்றாக குறுகிய கால அளவில் வெளியே விடுவேன்! ஒரு பயனும் இல்லை. இருமலைக் கேட்கவும் இல்லை. பார்க்கவும் இல்லை. மரணத்தைத் தழுவி விட்டால் என்ன?

இப்படியே கவலை நிறைந்த ஒன்று, ஒன்றரை மாதம் கடந்து சென்றது. அதற்குள் அந்த வீட்டின், அதன் மேற்குப் பக்கத்தில் இருந்த வீட்டின் வரலாறுகளை நான் தெரிந்து கொண்டேன். குறிப்பிட் டுக் கூறும்படி எதுவும் இல்லை. மானத்துடன் இருக்கும் மானிடர் களின் வீடுகள்.

நான் வழிபடும் தெய்வம் ஒரு வேலைக்காரி. சர்வன்ட்!
அதனாலென்ன? காதலுக்கு ஓலைக் குடிசை என்றும் அரண் மனை என்றும் உள்ள பெரிய வித்தியாசங்கள் ஏதாவது இருக்கிறதா என்ன? காதல் நிரந்தரமானது. புனிதமானது.

ஆனால், அவள் என்னைப் பார்க்கவில்லை. அவளுடைய மன உலகத்தில் நான் தோன்றவே யில்லை.

ஏராளமான இருமல்களின் ஸ்டாக்குடன் நான் நின்று கொண்டிருந்தேன். இறுதியில் நான் முழுமையான ஏமாற்றத் திற்குள்ளானேன். என்னுடைய இருமல்கள் அனைத்தும் இறந்து விட்டன. என்னுடைய உலகம் இருண்டது. இறந்துவிட்டால் என்ன?
ஆச்சரியம்! அவள் என்னைப் பார்த்துவிட்டாள்…! அமிர்த கிரணங்களைப் பரப்பியவாறு உயர்ந்து கொண்டிருக்கும் குளிர் நிலவு என்னைப் பார்த்தது. நான் பார்த்தேன். அவள் பார்த்தாள். நான் பார்த்தேன். அவள் புன்னகைத்தாள். என்னால் புன்னகைக்க முடியவில்லை. புன்னகை என்பது ஒரு பலவீனம் அல்லவா? எனினும், எனக்குள் புதிய ஒரு உற்சாகம் பிறந்தது. இதோ எனக்கு ஒரு புதையல் கிடைத்திருக்கிறது! இறுதியில் என்னுடைய மோகினி மறைந்து போய் விட்டாள். நான் சூனியமாக ஆனேன்.
கவலை நீங்கியது. செயல்களில் அதிகமான உற்சாகம் புரண்டு கொண்டிருந்தது. வாழ்க்கை அழகானதாகத் தோன்றியது.

தினமும் நாங்கள் பார்ப்போம். அவள் புன்னகைப்பாள். நானும் சற்று புன்னகைக்கக் கற்றுக் கொண்டேன்.
காதல் வயப்பட்ட நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன. கவித் துவமான நாட்கள்.

அப்படி நாட்கள் போய்க் கொண்டிருந்தபோது ஒரு மாலை நேரம் வந்தது. வானத்திலிருந்து பன்னீர் தெளிப்பதைப் போல கொஞ்சம் மழை பெய்தது. சான்டோ பனியனும் அரை கால் சட்டையும் அணிந்து நான் அந்த கறுத்த இடைவெளிக்கு நேராக வாய்க்காலின் இந்தக் கரையில் நின்று கொண்டிருந்தேன். இடுப் பில் உறை இல்லாத கத்தி இருந்தது. ஒரு தீவிர செயல்கள் செய்பவனிடம் எப்போதும் பயங்கரமான ஆயுதம் இருக்க வேண்டும் அல்லவா?
நான் காதல் தேவதையை எதிர் பார்த்து எதிர்பார்த்து நின்று கொண்டிருந்தேன். லாட்ஜுக்கு வருபவர்களும் லாட்ஜில் இருந்து செல்பவர்களும் என்னைப் பார்த் தார்கள். யாராவது வரும்போது “ஒன்றுக்கு’ போவதைப் போல நான் கீழே உட்காருவேன். அப்படி உட்கார்ந்தும் நின்றும் நேரம் சிறிது கழிந்தது. திடீரென்று கறுத்த இடைவெளி வெள்ளை யால், அழகாக நிறைந்தது.
நான் முற்றிலும் சூடாகி விட்டேன். இதயம் தாங்க முடியாத அளவிற்கு… ஓ! வாயில் நீர் வற்றி விட்டது. அப்போது வசீகரமான, இனிய ஒரு குரல்!
“”ஏன் மழையில நனைஞ்சுகிட்டு இருக்கே?”
“”சும்மா…”

உணர்ச்சிமயமான நிமிடங்கள் நகர்கின்றன. எதைப் பற்றியும் அறியாமல் மனிதர்கள் மின்சார வெளிச்சத்தில் மூழ்கி சாலையின் வழியாகப் போய்க் கொண்டிருக் கிறார்கள். நாற்றமெடுக்கும் வாய்க் காலில் எங்கோ ஒரு தவளையை தண்ணீர் பாம்போ சாரைப் பாம்போ வேறு ஏதோ பாம்போ பிடித்திருக்கிறது. தவளை தாங்க முடியாமல் மரண வேதனையுடன் கத்துகிறது. இருட்டிற்கு அடர்த்தி அதிகமாகிக் கொண்டு வருகிறது. காட்சிகள் மறைந்து கொண்டிருக் கின்றன. அவள் கேட்டாள்:
“”போயாச்சா?”
“”இல்லை. நான் அங்கே வரட்டுமா?”
“”எதற்கு?”
“”சும்மா!”
“”வேண்டாம்!”
“”வேணும். நான் வருவேன்!”
“”நாய் இருக்கு!”
“”பரவாயில்லை!”
“”அவர்கள் இந்தப் பக்கம் சாப்பிடுவதற்கு இப்போ வருவார் கள்!”
“”பரவாயில்லை. நான் வருவேன்!”
“”அய்யோ… வேண்டாம்!”
நிறைந்து நின்றிருந்த வெள்ளை நிறம் போய்விட்டது. இடைவெளி முழுமையாகக் கறுத்தது.
நான் சுவரில் ஏறி உட்கார்ந்தேன். வெளிச்சம் வாய்க்காலில் விழுந்து கொண்டிருந்தது- சுவரின் மேற் பகுதியிலும். நான் வாய்க்காலில் மெதுவாக இறங்கலாம் என்று பார்த்தேன். கால்கள் எட்டவில்லை. கால்களை நீட்டி, கைப்பிடியை விட்டேன். ப்ளும்… முழங்கால் வரை சேறு. இடுப்பு வரை நீர். காட்டுச் செடிகளின் முட்களும் புட்டித் துண்டுகளும் இருக்கின்றன என்று தோன்றுகிறது. பாதங்களில் கற்களை வைத்து கட்டிவிட்டிருப்ப தைப் போல கனமாக இருக்க, நான் முன்னோக்கி நகர்ந்தேன். வாய்க்காலின் நடுப்பகுதியை அடைந்தேன். வெளிச்சத்தில் நான் நன்கு தெரிய நின்றிருந்தேன். புரட்சிவாதி…! ஒரு அடிகூட முன்னால் வைக்க முடியவில்லை. சேற்றில் சிக்கி நின்றிருக்கிறேன். ஆட்கள் பார்ப்பார்கள்! முன் னோக்கி நகர வேண்டுமே! நான் முன்னோக்கி நகர்ந்தேன். நகர்ந்து நகர்ந்து வாய்க்காலின் அந்தக் கரையை அடைந்தேன். நான் மேலே பார்த்தேன். அதிர்ச்சி யடைந்து விட்டேன்!
நீர்ப்பரப்பிலிருந்து வானம் வரைக்கும் என்பதைப் போல சுவர் உயரமாக இருந்தது. என்ன செய்வது? எப்படி ஏறுவது? திரும்பிப் போவது என்றால்…? ச்சே… ஏறிவிட வேண்டும்! கை எட்டாத உயரத்தில் சுவரில் ஒரு சிறிய ஆலஞ்செடி வளர்ந்து நின்றிருந்தது.
அந்த ஆலஞ்செடியை நான் பாய்ந்து பிடித்தேன். பிறகு நான் தெரிந்து கொண்டது- நான் சுவரின் மேற்பகுதியில் இருக்கிறேன் என்ற விஷயம்தான்.
“ஹவ்’ என்று அவள் உண்டாக் கிய ஆச்சரியக் குரல் கேட்டது.
ஆனால், அதற்குப் பிறகும் தூரம் இருந்தது. கீழே குதிக்க முடியாது. தூரத்தில் மேற்குப் பக்கத்தில் இருந்த வீட்டின் அரைச் சுவர் இருந்தது. அது சிறியதாக இருந்தது. பூனையைப் போல சுவரின் வழியாக நான் நடந்தேன். மேற்கு வீட்டின் காலி இடத்தில் இறங்கினேன். அங்கு ஒரு தொழுவம் இருந்தது. அது வளைந்து போகும் போது “கிருகிரா’ என்று இலைகள் சத்தம் உண்டாக்கின. இருட்டில் கால்களை எச்சரிக்கையாக வைத்து… வைத்து… மிகவும் மெதுவாக வைத்து… அரைச்சுவரின் அருகில் சென்றேன்.
அவள் மெதுவாக அந்தப் பக்கம் வந்தாள்.
நான் இரண்டு கைகளையும் நீட்டி அவளின் தோளைப் பற்றி இழுத்தேன். மேலே ஏற்றியபோது கல்லின் ஏதோ முனை பட்டு அவளு டைய ரவிக்கை “பர்ர்ர்’ என்று கிழிந் தது. வெள்ளை நிற மார்பகங்கள்.
தொடர்ந்து என்னுடைய காதலின் கன்னத்தில் இரண்டு பலமான, மிகவும் பலமான அடிகள் கிடைத்தன!
எப்படி என்றால்… “”அய்யோ!… அவர்கள் எல்லாரும் இப்போ சாப்பிடுவதற்காக இந்தப் பக்கம் வருவார்கள். போ!” என்று கூறிய போது, மோசமான கெட்ட நாற்றம் கொண்ட ஒரு காற்று அவளுடைய வாயிலிருந்து என்னுடைய முகத் தில் வந்து பட்டது. என்னுடைய தலை மரத்துப் போனதைப் போல ஆனது.
நான் சற்று விலகி நின்றேன். கொஞ்சம் சிறு சிறு குச்சிகள் ஒடிந்தன. ஒரு நாய் குரைத்தது.
“”போ…” என்று கூறி அவள் அங்கிருந்து சென்றாள்.
பிறகு நாய்கள் குரைக்கும் சத்தம்தான். இந்த அளவிற்கு அதிகமான நாய்களா?
நான் மிகவும் மெதுவாக நடந்து சிறிய சுவரில் ஏறினேன். அங்கிருந்து பெரிய சுவரில். அப்ப டியே சற்று முன்னோக்கி நகர்ந் தேன். அப்போது அந்த சுவரும் கீழே இருந்த முற்றமும் வெளிச்சத் தில் மூழ்கியது.
வாழையின் ஒரு இலை நுனி மட்டுமே எனக்கு இருந்த ஒரே மறைப்பு. காற்று வீசும்போது இலை அகலும். நான் வெளிச்சத்தில் நன்றாகத் தெரிவேன்!
அந்தச் சமயத்தில் என்னுடைய சில நண்பர்கள் என்னுடைய அறைக்கு அருகில் போவதைப் பார்த்தேன். அவர்களுக்கு என்னைப் பார்ப்பதற்கு எந்தவொரு சிரமமும் இருக்காது. ஆனால், அவர்கள் பார்க்கவில்லை. என்னை எப்படி சந்தேகப்படுவார்கள்?
என்னவோ பேசிக் கொண்டு இரண்டு மூன்று பெண்களும் இரண்டு ஆண்களும்! அவர்களில் வயது குறைவான ஆள்- இளைஞன்- முற்றத்திற்கு வந்து நான் அமர்ந் திருந்த பக்கமாக வந்தான். என்னைப் பிடிப்பதற்காக வருகிறான். பார்த்துவிடுவான். அவமானம்!
“நீ அங்கு இருட்டில் என்னடா செய்றே?’ என்று கேட்டவாறு என்னைப் பிடிப்பான்.
ஆட்கள் கூடுவார்கள். “ஓ… இது நம்முடைய அந்த நெருப்புப் பொறி பத்திரிகையின் ஆசிரியராச்சே! தலைவர்!’ ஆட்கள் கூடுவார்கள்.
தெய்வமே! என்னை இதில் இருந்து ஒரு தடவை காப்பாற்றி விடு! இனிமேல் நான் எந்தவொரு தவறையும் செய்ய மாட்டேன். சத்தியமா… அவன் என்னை பார்த்துவிடக்கூடாது!
நான் கத்தியைக் கையில் எடுத் தேன். அவன் கண்டுபிடித்து விட்டால்… கத்தியைப் பயன்படுத்தி என்னுடைய கழுத்தை அறுக்க வேண்டும்! தெய்வமே! அவனு டைய கண்களின் பார்க்கும் சக்தியை சிறிது நேரத்திற்கு இல்லாமல் செய்!’
கடவுளே!… என்னுடைய நண்பர்கள் என் பெயரைக் கூறி சத்தம் போட்டு அழைக்கிறார்கள். தலைவரைத் தேடுகிறார்கள்! தெய்வமே! என்னை அவமானப் படுத்தி விடாதே.
அவன் எந்தப் பக்கமும் பார்க்காமல் எனக்கு மிகவும் அருகில் வாழை மரத்திற்குக் கீழே வந்து சிறுநீர் கழித்துவிட்டு எழுந்து போனான்.
எனக்கு மிகவும் களைப்பாக இருந்தது. எனக்குள் என்னவோ இல்லாமல் போயிருக்கிறது.
அதற்குப் பிறகு நடந்தது எதுவும் சரியாக ஞாபகத்தில் இல்லை. யாரும் எதையும் தெரிந்து கொள்ள வில்லை. வாய்க்காலுக்குள் குதித்த தையும், உடலெங்கும் கிழித்து ரத்தம் வந்ததையும், சேற்றில் புதைந்ததையும், சுவரில் ஏறி அறை யின் அருகில் சென்று என்னுடைய நண்பர்களுக்கு முன்னால் நின்றதையும் தெளிவில்லாமல் நினைத் துப் பார்க்கிறேன்.
அவர்கள் பதைபதைப்பு அடைந்து என்னைப் பார்த்தார்கள். காதல் சம்பந்தப்பட்ட ஒரு சாகசப் பயணம் முடிந்து வந்திருக்கிறேன் என்பதை அவர்கள் நினைக்க வில்லை. தலைவர் ஏதோ மிகவும் உயர்ந்த செயலைச் செய்துவிட்டு வந்திருக்கிறார் என்பது அவர் களின் நினைப்பு. கடவுளே!
நான் சோப்பு போட்டு நன்றா கக் குளித்துவிட்டு அறைக்கு வந்து ஆடைகளை மாற்றி, தலையை வாரி முடித்து நாற்காலியில் போய் உட்கார்ந்தேன். நடந்த சம்பவங்கள் முழுவதையும் சிஷ்யர்களிடம் சொன்னேன்.
இறுதியில் அவர்கள் கூறினார் கள்:
“”இப்போதே நாம் இந்த இடத்தை மாற்ற வேண்டும்!”
மாறினோம். கனமான இதயத் துடன் இரவின் அமைதியான சூழ்நிலையில் காதல் நகரத்தில் இருந்து நாங்கள் கவலையுடன் விடை பெற்றோம். அந்த வகை யில்… அந்த வகையில்… அவமானத் தின் காயத்தை உண்டாக்காமல் கடந்து சென்ற- காதல் நிறைந்த- தாகம் கொண்ட- மிக உயர்ந்த- கவலை நிறைந்த கால கட்டமே, உனக்கு வணக்கம்!
மங்களம்.

- வைக்கம் முகமது பஷீர்

VAIKKOM MOHAMED BASHEER , MALAYALAM BEST WRITER BORN 1908 JANUARY 19- 1994 JULY 5








VAIKKOM MOHAMED BASHEER ,
MALAYALAM BEST WRITER 
BORN 1908 JANUARY 19- 1994 JULY 5




வைக்கம் முகமது பஷீர் (பிறப்பு. 19 ஜனவரி 1908 - இறப்பு. 5 ஜூலை 1994) மலையாள மொழியின் முதன்மையான இலக்கிய படைப்பாளிகளில் ஒருவர். கேரளத்தில் வைக்கம் அருகே தலையோலப்பறம்பு என்ற ஊரில் பிறந்தார். இளம்வயதிலேயே சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்டு சிறைசென்றார். பின்னர் நாடோடியாக வாழ்க்கையை ஆரம்பித்தார். பின்னர் சிறுகதைகளும் நாவல்களும் எழுத ஆரம்பித்தார்.

வாழ்க்கையில் பலவிதமான அனுபவங்கள் வழியாகச் சென்றவர் பஷீர். கப்பல் ஊழியர், சமையற்காரர், சூபி துறவி, சூதாட்டவிடுதி ஊழியர், திருடர் ஆகியபல தொழில்களைச் செய்திருக்கிறார். கடுமையான வறுமையைச் சந்தித்திருக்கிறார். ஆரம்பத்தில் இடதுசாரிகளுடன் ஒத்துழைத்தார். பின்னர் இஸ்லாமிய சூபி மரபை ஏற்றுக்கொண்டவர் ஆனார். ஒருங்கிணைந்த இந்தியாவை தன் தேசமாக ஏற்றுக்கொண்ட பஷீர் கடைசிவரை பாகிஸ்தான் பிரிவினையை ஏற்கவில்லை. காந்தியவாதியாக கடைசிவரை வாழ்ந்தார்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

சிறுகதை - பூவன் பழம்
வைக்கம் முஹம்மது பஷீர்
தமிழில் : சுரா

"பூவன் பழம்' என்ற இந்தக் கதையை நான் மனப்பூர்வமாக முன்வந்து எழுதவில்லை. அப்துல்காதர் சாஹிப்பின் தொடர்ச்சி யான தொந்தரவினால்தான் இந்தக் கதையையே நான் எழுதுகிறேன். "இதில் ஒரு பாடம் இருக்கிறது' என்று கூறுகிறான் அவன். அவன் மனைவி ஜமீலா பீபியைப் பற்றிய கதையே இது.

ஜமீலா பீபி பி.ஏ. படித்தவள். அப்துல்காதர் சாஹிப் பள்ளி இறுதி வகுப்புதான் படித்திருக்கிறான். நாட்டு நடப்புப்படி பி.ஏ. படித்த ஒரு பெண்ணை பள்ளி இறுதி வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கும் ஒருவன் திருமணம் செய்ய முடியுமா? ஆனால் போராட்டம் பண்ணித்தான் அவளைத் திருமணம் செய்ததாக அப்துல்காதர் சாஹிப் பல நேரங்களில் கூறுவதுண்டு. அந்தக் காலத்தில் பெண்களை ஆண்கள் கடத்திக் கொண்டு போய் விடுவார்கள். நீளமான கயிற்றில் சுருக்குப் போட்டு, அதைத் தூக்கி எறிந்து பெண்களை அதில் சிக்க வைத்துப் பிடிக்கவும் செய்தார்கள். சில வேளைகளில் பலாத்காரச் செயல்களிலும்
பெண்களிடம் ஆண்கள் ஈடுபடுவது உண்டு. அப்துல்காதர் சாஹிப் நாகரீகமான மனிதன் என்பதால், அந்த மாதிரியான கீழ்த்தரமான காரியங்களில் எல்லாம் அவன் ஈடுபடவில்லை. அவன் நகரத்தில் பெயர் பெற்ற ஒரு கேடி. பீடித் தொழிலாளிகள் சங்கத்தின் செயலாளராகவும், நல்ல ஒரு கால்பந்து வீரனாகவும்கூட அவன் இருந்தான். நான்காவது ஃபாரத்தில் இருந்து பள்ளி இறுதி வகுப்பு வரை ஜமீலா பீபியும் அவனும் ஒன்றாகவே படித்தார்கள். நான்காவது ஃபாரத்தில் இருந்தே ஜமீலா பீபிமீது அவனுக்கு ஒரு பிடிப்பு. இதை அவனே பல முறை சொல்லி இருக்கிறான். ஆனால், ஜமீலா பீபியோ அதை முழுப் பொய் என்கிறாள்.

எது எப்படியோ, ஜமீலா பீபி பி.ஏ.வில் தேர்ச்சி பெற்றாள். அவளுடைய தந்தையின் பீடி ஃபாக்டரியில் இருந்து விருப்பம் போல பணத்தை எடுத்துக் கொண்டு பந்தாவாக அவள் நடந்து கொண்டிருந்த காலமது. ஊரில் இருந்த இளைஞர்கள் எல்லாருக் குமே ஜமீலா பீபி என்றாலே ஒருவகை ஈர்ப்புதான். ஜமீலா பீபியைப் பற்றி இளைஞர்கள் தங்கள் மனதில் கற்பனை பண்ணிக் கொண்டு வாழ்ந்தார்கள். அவளைப் பற்றி ஒருவரி சுலோகங்கள், காதல் காவியங்கள் என்று பலவற்றை யும் இயற்றிக் கொண்டு இளைஞர்கள் பித்துப் பிடித்து அலைந்தனர்.

ஜமீலா பீபியின் இதயத்தை எப்படியாவது கவர்ந்துவிட வேண்டும் என்று அந்த ஊரின் மிகப்பெரிய பணக்கார வீட்டுப் பையன்கள் அனைவரும், சொல்லப்போனால் "க்யூ'வில் நின்று கொண்டிருந்தனர். அப்துல்காதர் சாஹிப் நிச்சயமாக அந்த வரிசையில் ஒரு மனிதனாக நின்று கொண்டிருக்கவில்லை. ஜமீலா பீபியைப் புகழ்ந்து கவிதை எழுத வேண்டும் என்றோ, அவளுக்குக் காதல் கடிதம் எழுத வேண்டும் என்றோ அவன் கொஞ்சம்கூட முயற்சி பண்ணிக்கூடப் பார்த்ததில்லை. அதெல்லாம் தனக்குத் தெரியவே தெரியாத விஷய ங்கள் என்று அடித்துச் சொல்கிறான் அப்துல்காதர் சாஹிப். அவன் தன்னைப் பற்றிப் புகழ்ந்து ஒரு பாடல் எழுதியதாக ஜமீலா பீபி பலரிடமும் கூறுவதுண்டு.

அவள் சொல்வது சுத்தப்பொய் என்று அப்துல்காதர் சாஹிப் அதை மறுக்கிறான். அவன் உண்மையில் செய்தது இதுதான். ஒருநாள் ஜமீலா பீபியை பாதையில் வைத்து மறித்த அப்துல்காதர் சாஹிப் அவளிடம் கேட்டான்:


""உன் பேரு ஜமீலா பீபிதானே?''

அவன் அப்படிக் கேட்டதே அவளுக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை. தன்னையும் தன் பெயரையும் தெரியாத ஒருவன் இந்த ஊரில் இருக்கிறானா என்ன என்று அதிசயித்த ஜமீலா பீபி பந்தாவாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்டாள்:

""ஆமா... அதுக்கென்ன?''

அதைக் கேட்டு அப்துல்காதர் சாஹிப் சிரித்தான். அந்தச் சிரிப்பில் ஒரு அழகு இருந்தது. அந்தச் சிரிப்பை ஜமீலா பீபியும் கவனித்தாள். அவளுக்கும் அது பிடித்திருந்தது. ஆனால், அவன் கேள்வி கேட்ட முறை- தன்னையே தெரியாது என்பது மாதிரி காட்டிக் கொண்ட விதம்- அந்தப் போக்குதான் அவளுக்குப் பிடிக்கவில்லை.

""உங்களுக்கு என்ன வேணும்?''

""விசேஷமா ஒண்ணும் வேண்டாம்.'' அப்துல்காதர் சாஹிப் சொன்னான்: ""ஜமீலா பீபி, உன்னோட வாப்பாவோட பீடித் தொழிற்சாலை இருக்குல்ல? அங்கே மொத்தம் நூற்றி இருபது தொழிலாளர்கள் வேலை செய்றாங்க. நான் அவங்களோட செயலாளரா இருக்கேன். என்னோட பேர் அப்துல்காதர்!''

""ரொம்ப சந்தோஷம்'' ஜமீலா பீபி சொன்னாள்: ""நீங்க நகரத்துலயே ஒரு பெரிய கேடின்னும் கேள்விப்ப ட்டிருக்கேன்.''

""நீ கேள்விப்பட்டது ஒரு விதத்தில் உண்மைதான். பீடித் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்யத் திட்டமிட்டி ருக்காங்க. நாங்க உங்களோட தொழிற்சாலையை மூடப்போறோம்!''

ஜமீலா பீபி கேட்டாள்:

""இதை எதற்கு என்கிட்ட சொல்லணும்? என்னோட வாப்பா கிட்ட போய்ச் சொல்ல வேண்டியதுதானே!''

""உன்கிட்ட ஏன் சொல்றேன்னா அதுக்குக் காரணம் இருக்கு...''

""என்ன காரணம்?''

அப்துல்காதர் சாஹிப் சொன்னான்:

""நான் உன்னை ஆழமா காதலிக்கிறேன்.''

இதைக் கேட்டதும் ஜமீலா பீபியின் இதயம் குளிர்ந்த தென் னவோ உண்மை. இருந்தாலும், அவனை அவமானப்படுத்த வேண்டும்! ஜமீலா பீபி வேண்டு மென்றே சிரித்தாள். அந்தச் சிரிப்பில் ஏளனம் கலந்திருந்தது.

""ரொம்ப சந்தோஷம்...'' ஜமீலா பீபி சொன்னாள்: ""பிறகு... வேற என்ன நாட்டுல நடக்குற விசேஷங்கள்?''

அவள் அப்படிக் கேட்டதற்கு, "க்யூ'வில் சாதாரணமாக நின்று கொண்டிருக்கும் ஒரு இளைஞனாக இருந்தால் நிச்சயம் அவன் வெலவெலத்துப் போயிருப்பான். ஆனால், அப்துல்காதர் சாஹிப் சவால் விடுவது மாதிரி சொன்னான்:

""ஜமீலா, நீ மட்டும் என்னைக் கல்யாணம் பண்ணல...?''

அந்தச் சவாலைச் சந்திக்கிற தைரியத்துடன் ஜமீலா பீபி கேட்டாள்:

""கல்யாணம் பண்ணச் சம்மதிக்கலைன்னா, என்ன பண்ணுவீங்க?''

""நான் தூக்கு மாட்டி செத்துடுவேன்'' என்றெல்லாம் அப்துல்காதர் சாஹிப் சொல்லவில்லை. அவன் சொன்னான்:

""ஜமீலா, நான் உன்னோட எலும்பை உடைச்சிடுவேன்.''

ஜமீலா பீபி பதிலொன்றும் சொல்லவில்லை.

அப்துல்காதர் சாஹிப் சொன்னான்:

""ஜமீலா... என்னோட வாழ்க்கையை நீ பாழ் பண்ணிடாதே. நான் உன்னை ரொம்ப ரொம்ப ஆழமா காதலிக்கிறேன். உன்னோட ஆடை களைக் காதலிக்கிறேன். உன்னை அங்குலம் அங்குலமா நான் காதலிக்கி றேன். நீ நடந்துபோற சாலையைக்கூட நான் காதலிக்கிறேன்!''

அவனுக்கு என்ன பதில் கூறுவது? ஜமீலா பீபிக்கும் அவன் அப்படிப் பேசியது மிகவும் பிடித்திருந்தது. அதற்காக உடனே அதை வெளிக்காட்டிக் கொண்டால் நன்றாகவா இருக்கும்? ஜமீலா பீபி கேட்டாள்:

""ரோட்ல பார்க்குற எல்லாப் பெண்களையும் இதே மாதிரி தடுத்து நிறுத்தி காதல் வசனங்கள் பேசுறது உங்களோட பழக்கம்னு நினைக்கிறேன்!''

""நிச்சயமா இல்ல... என் ஜமீலா, உன்னைத்தவிர நான் இதுவரை இன்னொரு பெண்ணிடம் பேசினது கிடையாது. ஏன்- பார்த்தது கூடக் கிடையாது. பேசினதும் இல்ல... பார்த்ததும் இல்ல... நீ மட்டுமே என் கண்ணுல தெரியிற...''

ஜமீலா பீபி பந்தாவாக அவனைப் பார்த்தவாறு கேட்டாள்:

""பிறகு...?''

அவன் சொன்னான்:

""உனக்கு நானும் எனக்கு நீயும்.''

""ஓ... ரொம்ப சந்தோஷம்'' என்று கூறியவாறு ஜமீலா பீபி அந்த இடத்தைவிட்டு அகன்றாள். இப்படித்தான் போர் ஆரம்பித்தது. வார்த்தைச் சண்டைகள்... பல நாட்கள் நடந்தன. ஜமீலா வீட்டில் பயங்கர எதிர்ப்பு! அதை எதிர்த்து ஊர் மக்கள்! வேலை நிறுத்த அறிவிப்பு! கடைசியில்... ஜமீலா பீபியை அப்துல்காதர் சாஹிப் திருமணம் செய்தான். அவர்கள் வாழ்க்கை மகிழ்ச்சி யாகப் போய்க் கொண்டிருந்தபோது- வருகிறது "பூவன் பழம்' பிரச்சினை!

2

நேரம் சரியாக ஐந்தரை மணி.

மழைக்காலம். வெயிலும் இருந்தது; மழையும் இருந்தது. சில நேரங்களில் இப்படித்தான் அதிசயமாக ஏதாவது நடக்கும். ஆற்றில் நீர் "கும்'மென்று பொங்கி வெள்ளமாகப் பெருக்கெடுத்து வந்தது. வெறுமனே அதைப் பார்ப்பதோடு நிற்காமல் கொஞ்சம் குளிக்கவும் செய்யலாம் என்று நினைத்த அப்துல்காதர் சாஹிப் சட்டை போடாமல் வெறும் துண்டை மட்டும் கட்டிக் கொண்டு முற்றத்தில் இறங்கியபோது, ஜமீலா பீபி மெல்ல வாசல் கதவுக்குப் பக்கத்தில் வந்து நின்று அவனைக் கூப்பிட்டாள்:

""என்ன... ஏய்...''

அப்துல்காதர் சாஹிப் நினைத்தான். ஒருவேளை தன்னை சட்டை போட்டுக் கொண்டு போகச் சொல்கிறாளோ என்று. ஏனென்றால், அவர்கள் இருவருக்கும் திருமணம் முடிந்து அவர்கள் ஒன்றாக வாழ ஆரம்பித்தவுடன், ஜமீலா பீபி அவனுக்கு ஏகப்பட்ட கண்டிஷன்கள் போட்டாள்.

அப்துல்காதர் சாஹிப் நாகரீக மனிதனாக உடனே மாற வேண்டும். நல்ல ஆடைகள் அணிந்தே அவன் வீட்டை விட்டு வெளியே வரவேண்டும். யாருடன் பேசினாலும், அதில் ஒரு மிடுக்கு இருக்க வேண்டும். நடந்துபோகும் பாதையில் பழைய நண்பர்களையும் பிரச்சினை பண்ணக்கூடிய ஆட்களையும் பார்க்க நேர்ந்தால், அவர்களுடன் எந்தக் காரணத்தைக் கொண்டும் பேசக் கூடாது. பீடி சுற்றுபவர்கள், கவிஞர்கள், சுமைத் தொழிலா ளர்கள், அரசியல் காரியங்களில் ஈடுபடுபவ ர்கள், டிரைவர்கள், ரிக்ஷா வண்டி ஓட்டுபவர்கள்- இவர்களுடன் சரி நிகராக அமர்ந்து கொண்டு பேசக்கூ டாது. வீட்டில் கட்டாயம் ஒரு வேலைக்காரியை வைக்க வேண்டும். அப்துல்காதர் சாஹிப் சாதம் ஆக்குவதோ, கூட்டு சமைப்பதோ செய்யக்கூடாது. தனக்கென்று ஒரு மரியாதையை ஏற்படுத்திக் கொண்டு அதன்படி அவன் நடக்க வேண்டும். சுருக்கமாகச் சொல்லப்போனால்- அவன் தன்னை முழுக்க முழுக்க மாற்றிக் கொள்ள வேண்டும். நாகரீக மனிதனாகத் தன்னை ஆக்கிக் கொள்ள வேண்டும்.

எந்தப் பெண் எந்த ஆணைக் கல்யாணம் பண்ணுவதாக இருந்தாலும் அவளின் முதல் வேலை தன் கணவனை முழுமையாக வேறொரு மனிதனாக மாற்றுவதா கத்தான் இருக்கும். பெண் தான் நினைக்கிறபடி தன் கணவனை நூறு சதவிகிதம் மாற்றிவிட வேண்டும் என்று நினைக்கிறாள்- உடல் ரீதியாகவும் மன ரீதி யாகவும். அவன் இதுவரை கைக்கொண்ட எல்லா விஷயங்களிலும் உள்ளே நுழைந்து, அவனை இதுவரை இல்லாத நேர்மாறான ஒரு மனிதனாக மாற்றுவது என்பது சாதாரண விஷயமா என்ன! கட்டாயம் இது ஒவ்வொரு பெண்ணின் தலையாய கடமையாக இருக்க வேண்டும் என்று அடித்துக் கூறுகிறாள் ஜமீலா பீபி. அவள் மட்டுமல்ல, உலகத்திலுள்ள எல்லாப் பெண்களுமே இந்தக் கருத்தைத்தான் கொண்டிரு க்கிறார்கள். அழகான தன் மனைவி கூறிய எந்தக் காரியத்திற்கும் எதிர்வாதம் கூறவில்லை அப்துல்காதர் சாஹிப். அவன் என்ன சொல்லுவான்? திருமணம் முடிந்து அப்படி யொன்றும் அதிக நாட்கள் ஆகவில்லை யே! திருமணக் களை இன்னும் அவனை விட்டு நீங்காமலே இருந்தது. அவன் ஜமீலா பீபியைப் பார்த்துச் சொன்னான்:

""என் ஜமீலா... நான் குளிக்கப்போறேன். சட்டை போட்டுக்கிட்டு போகச் சொல்றியா?''

""ஓ...'' ஒரு மாதிரி முகத்தை வைத்துக் கொண்டு ஜமீலா சொன்னாள்: ""நான் சொன்னா நீங்க கேட்கவா போறீங்க!''

""ஜமீலா... அப்படிச் சொல்லாதே... நீ சொல்லி எந்த விஷயத்தை இதுவரை நான் கேட்காம இருந்திரு க்கேன்?'' என்று சொன்ன அவன் உள்ளே ஓடி சட்டையை அணிந்தவாறு வெளியே வந்தான். ஆனால், அவன் போட்டிருந்த சட்டையில் ஒரு பட்டன்கூட இல்லை.

""ஒரு ஆண் இதில் கூடவா கவனம் இல்லாம இருப்பது?'' ஜமீலா பீபி மூன்று பட்டன்களை சட்டையில் வைத்துத் தைத்தாள்.

அப்துல்காதர் சாஹிப் வேகமாக நடந்தான்.

ஜமீலா பீபி மீண்டும் அவனை அழைத்தாள்:

""இங்க பாருங்க... ஏய்...!''

அப்துல்காதர் சாஹிப் திரும்பிப் பார்த்தான். அவன் நினைத்தான்- சமையல்காரியைப் பற்றித்தான் அவள் பேசப்போகிறாள் என்று! என்ன செய்வது? சமையல்காரி இல்லாமலே நாம் வாழ்க்கையை நடத்த முடியாதா என்ன? நம்முடைய விஷயத்தை நாம்தான் கவனித்துக் கொள்ள வேண்டும். ஒரு பெண் பி.ஏ. படித்திருக்கிறாள் என்பதற்காக, அவள் சமையல் பண்ணக்கூடாது என்று எந்தச் சட்டத்தில் கூறப்பட்டிருக்கிறது? பி.ஏ. என்றி ல்லை - எம்.ஏ., பி.எச்.டி. படித்த பெண்ணாக இருந்தால்கூட இனிமேல் சாதம் ஆக்கு வதையும் கூட்டு வைப்பதையும் குழம்பு வைப்பதையும் கட்டாயம் தெரிந்தே இருக்க வேண்டும். அப்படி அவளுக்குத் தெரியாமல் இருந்தால், அப்துல்காதர் சாஹிப் அவற்றை எப்படிச் செய்ய வேண்டும் என்பதைச் சொல்லித் தருவான். அவன் நிச்சயம் அதைச் செய்யத்தான் போகிறான். பிரியாணி தயாரிப்ப திலிருந்து தேநீர் உண் டாக்குவது வரை அவனுக்கு எல்லாமே தெரிந்த விஷயங்கள்தாம்.

""என்ன ஜமீலா?'' அப்துல்காதர் சாஹிப் கேட்டான்: ""சமையல்காரி விஷயமா?''

""இல்ல...'' முகத்தைக் கோண வைத்துக் கொண்டு அவள் சொன்னாள். ""நான் பி.ஏ. பாஸ் ஆனது சமையல்காரி ஆகுறதுக்கா?''

""முத்தே...'' அப்துல்காதர் சாஹிப் சொன்னான்: ""என் அருமை மனைவி சமையலறைக்குள் நுழைவதா? எல்லாம் நான் பாத்துக்கிறேன். போதுமா?''

""ஒரு... போதும். இதைத்தான் ஒவ்வொரு நாளும் சொல்றீங்க.''

""இன்னைக்கு மட்டும் மகாராணி.... நீ சமையலறை வேலைகளைக் கவனி. நாளை முதல் உன்னோட இந்த தாசன்...''

""சும்மா ஏதாவது பேசிக்கிட்டே இருக்காதீங்க...''

""சரி... இப்போது எதற்கு என்னைக் கூப்பிட்டே?'' அவன் நினைத்தான்- ஒருவேளை ஒழுங்காகத் தலைமுடியை வாரி, முகத்தில் பவுடர் போட்டுக் கொண்டு போக வேண்டும் என்பதைக் கூறுவதற்காக இருக்குமோ? ஆனால் கொஞ்ச நேரம் எதுவுமே பேசாமல் மவுனமாக அமர்ந்திருந்த ஜமீலா பீபி வெட்கத்துடன் தலையைக் குனிந்தவாறு காதல் மேலோங்கச் சொன்னாள்:

""பூவன் பழம்...""

""பூவன் பழமா? என்ன பூவன் பழம்?'' அவனுக்கு உண்மையிலேயே ஒன்றும் புரியவில்லை. அவன் கேட்டான்:

""நீ என்ன சொல்ற?''

""ரெண்டு பூவன் பழம் வாங்கிட்டு வர்றீங்களா?''

ப்பூ... இதுதானா விஷயம்? பூவன் பழம் வாங்கிக் கொண்டு வருவது பெரிய விஷயமா என்ன? போன கையோடு வாங்கிவிட்டால் போகிறது. ஆற்றங்க ரையில் உள்ள கடையில் பூவன் பழம் இருக்கிறது. ஒருவேளை அங்கே இல்லாவிட்டால், படகில் ஏறி அக்கரைக்குப்போய் இரண்டு ஃபர்லாங் தூரம் நடந்தால் அங்கே ஒரு சிறிய கடை வீதி இருக்கிறது. அங்கே வாங்கலாம். அப்துல்காதர் சாஹிப் சொன்னான்:

""ஒரு குலை பூவன் பழம் கொண்டு வர்றேன், சரியா?''

""எனக்கு ரெண்டே ரெண்டு பழம் போதும்.'' ஜமீலா பீபி சொன்னாள்: ""தேவையில்லாம கண்ட இடத்துக்கெ ல்லாம் அலைஞ்சுக்கிட்டு இருக்கக்கூடாது. சீக்கிரம் இங்கே திரும்பி வரணும். சாயங்காலம் ஆகுறதுக்கு முன்னாடி வந்திடணும். தனியா இருக்க எனக்கு பயமா இருக்கு. நான் சொன்னது எதையும் மறந்திடக் கூடாது. தெரியுதா?''

""இல்ல...'' என்று சொன்ன அப்தல்காதர் சாஹிப் நடந்தான். பெண்கள் என்ன சொல்கிறார்கள். எங்கேயும் தேவையில்லாமல் நடந்து திரியக்கூடாதாம். இதை நினைத்து நினைத்துச் சிரித்தான் அவன். அதே நேரத்தில் அவள்மீது அவன் கொண்டிருக்கும் அளவற்ற காதலும் மனதில் வலம் வராமல் இல்லை. என்ன இருந்தாலும், ஜமீலா ஆசையுடன் கேட்ட முதல் விஷயமே பூவன் பழம்தான்!

வேறொரு பெண்ணாக இருந்தால்... என்னவெல்லாம் கேட்டிருப்பாள்! அப்துல் காதர் சாஹிப் நினைத்துப் பார்த்தான். சில பெண்கள் தங்கள் கணவர்களிடம் என்னவெல்லாம் வாங்கித்தரச் சொல்லி நச்சரிப்பார்கள். தங்க நகைகள், பட்டுச் சேலைகள், தங்க வளையல்கள், கார், டகோட்டா விமானம்- இதெல்லாம் கூடப் பரவாயில்லை. பணம் இருந்தால் வாங்கிவிடலாம். வேறு சில பெண்கள் இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் கணவன்மார்களிடம் கேட்பது சாதாரணமாக வாங்க முடியாததாக இருக்கும். காட்டில் பிரசவமாகிக் கிடக்கும் பெண் சிங்கத்தின் இரண்டு மீசை! அதைக் காட்டில் போய் அலைந்து தேடிப் பிடித்துக் கொண்டு வந்து அவள் கையில் தரவில்லை என்றால் அவ்வளவுதான்! கேட்டால், "நான் என்ன பெரிசா சொல்லிட் டேன்! பூனை மாதிரி இருக்குற சிங்கத்தோட முகத்துல இருந்து ரெண்டு முடி வேணும்னு கேட்டேன். இதைக்கூட உங்களால கொண்டு வந்து தர முடியல. நீங்க என்ன ஆம்பள!' என்று ஒரு மூலையில் உட்கார்ந்து அழ ஆரம்பித்துவிடுவாள்.

அப்போதைய சூழ்நிலையில் அந்தக் கணவன் என்ன செய்வான்? இன்னும் சில பெண்கள் இருக்கிறார்கள். அவர்கள் என்ன வேண்டும் என்று கேட்பார்கள் தெரியுமா? எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியில் ஏறி ஒரு சிறு பனிக்கட்டித் துண்டை எடுத்து வரச் சொல்வார்கள். அவர்கள் கேட்டபடி அவர்களின் கணவர்கள் கொண்டு வந்து கொடுக்கவில்லை என்றால், அடுத்த நிமிடம் அவர்களின் புலம்பலையும் கண்ணீரையும் பார்க்க வேண்டுமே! "நான் பெரிசா என்னத்தைக் கேட்டேன். ஒரு சின்ன பனிக்கட்டியை ஆசையா கொண்டு வரச்சொன்னேன். இதைக்கூட ஒரு பொண்டாட்டிக்கு உங்களால கொண்டு வர முடியல. நீங்க ஒரு கணவனா?' என்று பேச்சாலேயே கொன்று விடுவார்கள்.

மனைவி இப்படி அழும்போது ஒரு கணவன் என்னதான் செய்ய முடியும்? ஜமீலா பீபி இப்படியெல்லாம் கொண்டு வர கஷ்டமான விஷயங்கள் எதுவும் சொல்லிவிடவில்லையே! சாதாரணமாகக் கிடைக்கக் கூடிய இரண்டே இரண்டு பூவன் பழங்கள்! அவ்வளவுதானே. அப்துல்காதர் சாஹிப் மனதிற்குள் நினைத்தான். குளித்துவிட்டுப் போய் ஒரு குலை பூவன் பழம் உடனடியாக வாங்க வேண்டும். இதை நினைத்தவாறே அவன் ஆற்றைத் தேடிப் போனான்.

நதி காவி நிறத்தில் ஓடிக் கொண்டிருந்தது. மழை பெய்திருந்த தால் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. இரு கரைகளிலும் தண்ணீரைத் தொட்டவாறு நின்றிருந்த மரங்களில் ஒன்றைக்கூடக் காணவில்லை. எல்லாவற்றையும் வெள்ளம் கொண்டு போயிருந்தது. வெள்ளத்தின் பெரும் போக்கிற்கு எந்தப் பொருள்தான் தப்ப முடியும்? மொத்தத்தில்- நதியின் போக்கைப் பார்த்து அப்துல்காதர் சாஹிப் ஒரு விதத்தில் பயப்படவே செய்தான்.

அவன் நதியில் இறங்கிக் குளித்தான். அதன் அர்த்தம் என்னவென்றால்- தலையை லேசாகத் தண்ணீருக்குள் நுழைத்தான். அவ்வளவுதான்- நதிநீர் பனியைப்போல படு குளிர்ச்சியாக இருந்தது. ஒருசில நிமிடங்கள் மட்டுமே நீருக்குள் நின்றிருந்த அப்துல்காதர் சாஹிப் சீக்கிரமே கரைக்கு வந்தான். தலையைத் துவட்டிவிட்டு படகுத் துறையில் இருக்கும் கடையைத் தேடிப் போனான். அந்தக் கடையில் கண்ணன் பழம் இருந்தது. வேறு சில வாழைப்பழங்களும் இருந்தன. ஆனால் பூவன் மட்டும் இல்லை. இப்போது என்ன செய்வது? வேறு வழியில்லை. அவன் படகில் ஏறினான். படகு புறப்பட்டது.

நடு ஆற்றில் படகு போய்க் கொண்டிருந்தபோது சுகமான காற்று வீசியது. சிறிது நேரத்தில் அவனைச் சுற்றிலும் இருள் கவியத் தொடங்கியது. எப்படியோ கஷ்டப்பட்டு படகை ஓட்டியவன் படகை மறுகரையில் சேர்த்தான். அடுத்த நிமிடம் அப்துல்காதர் சாஹிப் படகை விட்டு இறங்கி ஓடினான். அவன் பாதி தூரம்தான் போயிருப்பான். மழை மிகவும் பலமாகப் பெய்யத் தொடங்கியது.

அவன் வேகமாக ஓடி கடை வீதிக்குள் நுழைந்து ஒரு கடையின் முன் போய் நின்றான். உண்மையிலேயே மிகப் பெரிய மழைதான்! கடைகளில் விளக்கு எரியத் தொடங்கியது. மழை நின்றுவிடும் என்ற எதிர்பார்ப்போடு அவன் அங்கு நின்றிருந்தான். காற்றும் பலமாக வீசியது. நேரம் போனதே அவனுக்குத் தெரியவில்லை. தன்னுடைய பழைய நண்பர்கள் சிலருடன் அரட்டை அடித்தவாறு அவன் தன் நேரத்தைச் செலவிட்டான். எல்லாம் முடிந்து பார்த்தபோது மணி எட்டாகி இருந்தது. அவ்வளவுதான்- வெலவெலத்துப் போனான் அப்துல்காதர் சாஹிப். தன் அருமை மனைவி ஜமீலா பீபி இரவு நேரத்தில் தனியே வீட்டில் இருந்து பயந்து நடுங்கிக் கொண்டிருப்பாள். இதை நினைத்ததும் அவன் இருந்த இடத்தை விட்டுப் புறப்பட்டான். வழியில் இருந்த ஒவ்வொரு கடையிலும் ஏறி இறங்கினான். ஆனால் எந்தக் கடையிலும் பூவன் பழம் மட்டும் இல்லை. இப்போது அவன் என்ன செய்வான்? அவனுக்கே சொல்லப்போனால் ஒருவித வெறுப்பு உண்டாகிவிட்டது. என்ன நினைத்தானோ, ஒரு டஜன் ஆரஞ்சுப் பழங்கள் வாங்கினான். "என்ன இருந்தாலும், பூவன் பழத்தைவிட ஆரஞ்சுப் பழம் நல்லதுதானே' என்று அவன் மனம் நினைத்தது. ஆரஞ்சுப் பழத்தின் விலையும் அதிகம். அதில் இருக்கும் விட்டமின்னும் அதிகம். வாங்கிய ஆரஞ்சுப் பழங்களை ஒரு பொட்டலமாகக் கட்டி கையில் வைத்தவாறு அவன் நடந்தான். மழை இன்னும் விட்ட பாடில்லை. நல்ல இருட்டு வேறு. எந்த இடத்திலும் மருந்துக்குக்கூட வெளிச்சத்தைப் பார்க்க முடியவில்லை. பூவன் பழமும் மழையும் சேர்ந்து ஒரு இக்கட்டான சூழ்நிலையைத் தனக்கு உண்டாக்கி இருப்பதாக உணர்ந்தான் அப்துல்காதர் சாஹிப். அவன் மீண்டும் படகுத் துறைக்கு வந்தான். அங்கே யாருமே இல்லை. சூழ்ந்திருந்த இருட்டைப் பார்த்தவாறு படகுக்காரனை அழைத்தான். அப்போதும் மழை விடுவேனா என்று பெய்துகொண்டிருந்தது. கிட்டத்தட்ட இருபது தடவை படகுக்காரனை அவன் அழைத்திருப்பான். யாரும் வந்தால்தானே! அவனுக்கு அழைத்து அழைத்து தொண்டைத் தண்ணீர் வற்றிப்போனதுதான் மிச்சம்- படகோட்டியையே காணவில்லை. எங்கு போனானோ? விளைவு- என்ன செய்வதென்று தெரியாமல் நின்றிருந்த அப்துல்காதர் சாஹிப் நதியில் நீந்திச் செல்வது என்று முடிவெடுத்தான். அடுத்த நிமிடம் சட்டையைக் கழற்றினான். துண்டில் ஆரஞ்சுப் பழத்தைக் கட்டி தலையில் வைத்தான். துண்டின் இரு முனைகளையும் தாடையில் முடிச்சுப்போட்டுக் கட்டினான். சட்டையை ஆரஞ்சுப் பழங்களுக்கு மேலே சுற்றினான். இப்போது அவன் ஜமீலா பீபியைப் பற்றி நினைத்துப் பார்த்தான். அவள் இப்போது என்ன செய்து கொண்டிருப்பாள்? அவன் தனக்குத்தானே சொல்லிக் கொண்டான்: "இங்க பாரு ஜமீலா.. உன்னை மட்டும் கல்யாணம் பண்ணாம இருந்திருந்தா.... நான் இப்படியெல்லாம் கஷ்டப்பட வேண்டியதிருக்குமா? இந்த மழை நேரத்துல நான் நினைச்ச இடத்துல படுத்துக்கலாம். ஆனா உன்னைத் திருமணம் பண்ணினதுனால பார்த்தியா... ஒரு ஆண் நினைச்ச மாதிரி இருக்க முடியுதா?' ஜமீலாவைப் பற்றி தனக்குள் நினைத்துப் பார்த்த அவன் அடுத்த நிமிடம் கடவுளை மனதிற்குள் தொழுதவாறு நதியின் போக்கிலேயே கிட்டத்தட்ட ஒரு ஃபர்லாங் தூரம் நடந்தான்.

அதற்குப் பிறகு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு நதியில் இறங்கினான். அப்படியே தண்ணீரில் மூழ்கி தான் இறக்க நேர்ந்தால்..? என்ன இருந்தாலும் எல்லா கஷ்டங்களும் ஜமீலா பீபிக்காகத்தானே! நதிநீர் இடுப்பு வரை இருந்தது. கால்களைக் கீழே வைக்க முடியவில்லை. அவன் நீந்த ஆரம்பித்தான். தலை மட்டுமே தண்ணீருக்கு மேலே இருந்தது. கைகளால் நீரைக் கிழித்தவாறு அவன் வேகமாக நீந்தினான். இருட்டில் அவனுக்கு எதுவுமே தெரியவில்லை. எந்தத் திசையில் போகிறோம் என்பதைக் கூட அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒருவித யூகத்துட னேயே அவன் நீந்தினான். இன்னும் எவ்வளவு நேரம் நீந்த வேண்டியிருக்கும், எப்போது கரையை அடைவோம் என்று எதுவுமே தெரியாமல் அவன் நீந்திக் கொண்டிருந்தான். நீண்ட நேரம் நீந்தியதால் கை, கால்கள் வலித்தன. சொல்லப்போனால் பலமிழந்து அவை துவண்டன. கடைசியில்- எதையோ அவன் கைகள் பற்றின. அதே நேரத்தில் அவனை நீர் கீழ்நோக்கி இழுத்தது. ஆனால் அவன் தன் பிடியை விடாமல் இறுகப் பற்றிக் கொண்டான். வாய்க்குள் தண்ணீர் போனது. தைரியத்தை வரவழைத்துக் கொண்டு இலேசாக எம்பிய அப்துல்காதர் சாஹிப் தான் பற்றிக் கொண்டிருந்தது என்னவென்று பார்த்தான். அது ஒரு முள்செடி. அந்த முள்செடியைப் பிடித்தவாறு மேலே ஏறினான். முள் ஆங்காங்கே குத்தியது. அதைப் பொருட்படுத்தாமல் மேலே ஏறி கரையில் கால் வைத்தான் அவன். கொஞ்ச நேரம் அப்படியே உட்கார்ந்தான். உடல் வெடவெடத்தது. அந்த இரவு நேரத்தில் மனதில் கொஞ்சம் பயம்கூட உண்டானது. வெறுமனே இப்படி உட்கார்ந்து கொண்டிருந்தால் எப்படி? காடு, முள் என்று பார்க்காமல் அப்துல்காதர் சாஹிப் நடக்க ஆரம்பித்தான் உடம்பில் துணியே இல்லாமல்- வேஷ்டி. சட்டை இரண்டும் நதி நீரோடு போய் விட்டிருந்தன. தாடையோடு சேர்த்துக் கட்டியிருந்ததால் துண்டும், ஆரஞ்சுப் பழங்களும் தப்பின. அருகில் இருந்த ஒரு மரத்தின் கொம்பொன்றை ஒடித்து கையில் வைத்தவாறு அவன் நடந்தான். அப்போது வானத்தில் மின்னல்! அந்த வெளிச்சத்தில் எதிரே இருந்த வாழைத்தோட்டம் அவன் கண்களில் பட்டது. பக்கத்திலேயே ஒரு வீடு இருந்தது. இன்னும் அவனுடைய வீடு இருக்கும் இடத்திற்குப் போக வேண்டுமானால் அரை மைல் தூரம் நடக்க வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டான்.

அந்த வீட்டைத் தாண்டி ஒரு சிறு தென்னைமரப் பாலத்தைக் கடந்து அவன் வேகமாக நடந்தான். அப்போது ஒரு நாய் குரைத்தது. அடுத்து இன்னொரு நாய். சிறிது நேரத்தில் அங்கிருந்த பல நாய்கள் குரைத்தன. ஒரு நாய் குரைத்தவுடன் தொடர்ந்து எல்லா நாய்களும் குரைப்பது என்பது அவற்றின் வழக்கமாக இருக்கும் போலிருக்கிறது! இருந்தாலும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு ஒற்றையடிப் பாதைகளைத் தாண்டி, பாலங்கள், பாதைகள் எல்லாம் கடந்து தன்னுடைய வீட்டை அடைந்தான் அப்துல்காதர் சாஹிப். வீட்டிற்குள் விளக்கு வெளிச்சம் தெரிந்தது. ஜமீலா இன்னும் உறங்காமல்தான் இருக்கிறாள். "ஜமீலா... கதவைத்திற...' என்று அவன் வாயைத் திறந்து சொல்லவில்லை. "முதலில் உடம்பில் ஏதாவது ஒரு சிறு துணியையாவது சுற்றிக் கொள்வோம்' என்று எண்ணியவாறு வராந்தாவில் கால் வைத்தான். அப்போது அவன் தன்னையும் மீறி ஜன்னல் வழியே பார்த்தான். குளிரால் நடுங்கிக் கொண்டிருந்தாலும் தன்னையே மறந்து அவன் சிரித்துவிட்டான். அடடா என்ன காட்சி அது!

மேஜையில் ஒரு விளக்கு எரிந்து கொண்டிருக்கிறது. அதற்குப் பக்கத்தில் இரண்டு தட்டுகள். அவை வேறு இரண்டு தட்டுகளால் மூடப்பட்டிருக்கின்றன. அதற்குப் பக்கத்தில் நான்கைந்து சிறு தட்டுகள். அவையும் மூடப்பட்டிருக்கின்றன. அவற்றில் சாதமும் குழம்பும் கூட்டும் இருக்கின்றன. கணவனை எதிர்பார்த்து மனைவி இன்னும் சாப்பிடாமல் இருக்கிறாள். அவள் கையில் பயங்கரமான ஒரு வெட்டரிவாள். அந்த அரிவாளைக் கையில் வைத்தவாறு ஜமீலா பீபி நாற்காலியில் அமர்ந்தவாறு தலையை மேஜைமேல் வைத்து தன்னை மறந்து உறங்கிக் கொண்டிருக்கிறாள்.

அதோடு நிற்கவில்லை. இன்னும் சில காரியங்களையும் அவள் செய்திருந்தாள். முன்பக்கக் கதவை உள்பக்கமாகப் பூட்டியிருந்தாள். ஆனால் வெளியில் இருந்து யாராவது திருடர்கள் கதவை முரட்டுத்தனமாகத் தள்ளிவிட்டு உள்ளே பூட்டியிருந்த தாழ்ப்பாளை உடைத்து விடலாம் அல்லவா? அப்போது என்ன செய்வது? ஒரு மேஜையை எடுத்து உள்ளே கதவோடு சேர்த்துப் போட்டிருந்தாள். மேஜைக்கு இருக்கும் கனம் போதாது என்று நினைத்தாளோ என்னவோ அதன்மேல் ஒரு தலையணையை வேறு வைத்திருந்தாள். அவளின் இந்தச் செயலை என்னவென்பது?

பெண்களின் மூளையே இப்படித்தான் வேலை செய்யும் போலிருக்கிறது என்று மனதிற்குள் நினைத்த அப்துல்காதர் சாஹிப், மேஜை மேல் தலையை வைத்துத் தூங்கிக் கொண்டிருந்த ஜமீலா பீபியை எழுப்பலாம் என்று அருகில் போனான். அப்போதுதான் அவன் இன்னொரு விஷயத்தைக் கவனித்தான். சமையலறை வாசல் கதவிலிருந்து வெளிச்சம் முற்றத்தில் விழுந்து கொண்டிருக்கிறது. அதெப்படி? அப்துல்காதர் சாஹிப் அங்கே போய் பார்த்தான். அவனுக்குச் சிரிப்புத்தான் வந்தது. ஜமீலா பீபி இருந்த பரபரப்பில் சமையலறைக் கதவையே அடைக்க மறந்துவிட்டாள். உலகத்தி லுள்ள எல்லாத் திருடர்களும் அந்தக் கதவின் மூலம் தாராளமாக வீட்டிற்குள் வரலாம். எல்லாவற்றையும் பார்த்த அப்துல்காதர் சாஹிப் உள்ளே வந்தான். எந்த ஓசையும் எழுப்பாமல் மெதுவாக- மிகமிக மெதுவாக வாசல் கதவை அடைத்தான். உள்ளே தாழ்ப்பாள் இட்டான். கையிலிருந்த கம்பை சமையலறையில் வைத்துவிட்டு, மெதுவாக உள்ளே இருந்த அறைக்குள் நுழைந்தான். உடம்பில் பல இடங்களிலும் காயம்... முள் குத்தி ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. "ஜமீலா... கண்ணே... உனக்காக நான் எவ்வளவு ரத்தம் சிந்தியிருக்கேன். பார்த்தியா?' என்று மனதிற்குள் கூறிக் கொண்டான் அவன். அப்துல்காதர் சாஹிப், ஜமீலா பீபி முகத்தில் எப்போதும் பூசும் பவுடரைத் தன் உடல் முழுக்க பூசினான். சட்டையும் வேஷ்டியும் எடுத்து அணிந்தான். தலைமுடியை ஒழுங்காக வாரினான். வாங்கி வந்திருந்த ஆரஞ்சுப் பழங்களை அங்கே வைத்தான். ஜமீலா பீபியை இனி எழுப்பலாம் என்று போனபோது- தான் இன்னும் ஆண்டவனைத் தொழவில்லை என்று விஷயம் அவன் ஞாபகத்தில் வந்தது. அதை முதலில் செய்யலாம் என்று தீர்மானித்த அவன் சமையலறைக்குள் நுழைந்து நீரை எடுத்து வைத்துக் கொண்டு ஆண்டவனைத் தொழுதான். ஜமீலா பீபிக்காக, தன் உயிரைக் காப்பாற்றியதற்காக ரப்புல் ஆலமீனாய தம்புரானுக்கு நன்றி சொன்னான். பிரார்த்தனை முடிந்ததும் ஆரஞ்சுப் பழங்களை இரண்டு பாத்திரங்களுக்குள் போட்டு மேஜை மேல் கொண்டு போய் வைத்தான்.

""மகாராணி...'' மெதுவான குரலில் அவன் அழைத்தான்.

அவ்வளவுதான்-

ஜமீலா பீபி திடுக்கிட்டு, பயந்துபோய் வெட்டரிவாளைக் கையில் வைத்தவாறு கண்களைத் திறந்தாள்.

""என்னை அவசரப்பட்டு வெட்டிராதே.'' அப்துல்காதர் சாஹிப் சொன்னான்: ""நான் திருடன் அல்ல. உன் முன்னாடி நிக்கிறது அப்பாவியும் முட்டாளுமான அப்துல்காதர். தெரியுதா?''

""கண்ட கண்ட இடங்கள்ல எல்லாம் அலைஞ்சிட்டா வர்றீங்க?'' என்று கேட்ட அவள் கண்கள் வாசல் கதவைப் பார்த்தன. ""ஆமா... நீங்க எப்படி உள்ளே வந்தீங்க?''

அப்துல்காதர் சாஹிப் சொன்னான்:

""நான் வந்தவுடன் எல்லாக் கதவுகளும் தானே வழிவிட்டுத் திறந்திடுச்சு. இதே மாதிரி நான் வர்றேன்னா எல்லா இதயங்களும் திறந்திடும்...''

""முட்டாள்தனமா எதையாவது பேசாதீங்க... எப்படி உள்ளே வந்தீங்க? சொல்லுங்க...''

அவன் சொன்னான்:

""சமையலறை வழியா...''

அவள் கேட்டாள்:

""கம்பு எதையாவது வச்சு உள்ளே நுழைச்சு தாழ்ப்பாளை நீக்கித்தானே உள்ளே வந்தீங்க? நீங்க செஞ்ச காரியத்தை யாராவது திருடன் பார்த்தா என்ன ஆவது? இதைப் பார்த்து அவங்களும் இதேகாரியத்தைச் செய்வாங்க. நான் எப்படி இந்த வீட்ல மன அமைதியோட இருக்க முடியும்?''

அப்துல் காதல் சாஹிப் சொன்னான்:

""ப்ளடி ஃபூலே! நீ சமையலறைக் கதவை அடைக்கவே இல்ல...''

ஜமீலா பீபி சொன்னாள்:

""என்ன பேசுறீங்க? கதவை நானில்ல அடைச்சவ!''

""யாரப்புல் ஆலமின்!'' அப்துல்காதர் சாஹிப் சொன்னான்: ""பொம்பளைங்க அவங்க செஞ்ச தப்பை எந்தக் காலத்துல ஒத்துக்கிட்டிருக்காங்க நீ ஒத்துக்கிறதுக்கு... நீ தொழுகை பண்ணிட்டியா?''

""பண்ணியாச்சு...'' என்று சொல்லியவாறு எழுந்த ஜமீலா பீபியின் கண்கள் மேஜையில் இருந்த ஆரஞ்சுப் பழங்களைப் பார்த்தன. அவ்வளவுதான்- முகம் சுருங்கிப் போனது. அடுத்த நிமிடம் அவள் முகம் கோபத்தால் சிவந்தது. "ஆரஞ்சுப் பழம்! யார் இதைத் தின்பது?' மனதிற்குள் அவன் நினைத்தாள்.

அந்த ஆரஞ்சுப் பழங்களையே சில நிமிடங்கள் வைத்த கண் எடுக்காது பார்த்தாள். பார்வையிலேயே அந்தப் பழங்களை அழித்து விடுவாள் போலிருந்தது. இருந்தாலும் வாய் திறந்து ஒரு வார்த்தை பேசவில்லை.

அப்துல்காதர் சாஹிப் சொன்னான்:

""பூவன் பழம் ஒரு இடத்துலகூட கிடைக்கல...''

ஜமீலா பீபி அதற்கு ஒன்றுமே பேசவில்லை. அவள் என்ன பேசுவாள்? அவன் ஆரஞ்சுப் பழங்களைக் கொண்டு வந்து வைத்திருக்கிறான்.

கை கழுவ அவள் தண்ணீர் கொண்டு வந்தாள். இரண்டு பேரும் கை கழுவி, சாப்பிட்டார்கள்.

""கூட்டு நல்லா இருக்கு!''அப்துல்காதர் சாஹிப் சொன்னான். உண்மையாகச் சொல்லப்போனால் அவள் சமைத்திருந்த கூட்டு சுவையாகவே இல்லை. உப்பு இல்லை. காரம் அதிகமாகச் சேர்த்திருந்தாள். அதற்காக மனைவியைக் குறை சொல்ல முடியுமா என்ன?

ஜமீலா பீபி சொன்னாள்:

""நான் தூங்கப் போறேன்!''

அவன் சொன்னான்:

""ஆரஞ்சுப் பழத்தைச் சாப்பிட்டுத் தூங்கு. பூவன் பழம் எங்கயும் கிடைக்கல. நான் ஆத்துல நீந்தி இந்தப் பழங்களை இங்கே கொண்டு வந்தேன்.''

அவள் சொன்னாள்:

""சும்மா வாய்க்கு வந்தபடி பொய் சொல்லாதீங்க. எனக்கு ஆரஞ்சுப் பழம் பிடிக்கவே பிடிக்காது. நீங்கதானே கொண்டு வந்தீங்க. நீங்களே சாப்பிடுங்க!''

ஜமீலா பீபி முகத்தை ஒரு மாதிரி வைத்துக்கொண்டு -பந்தாவாக நடந்து சென்று படுக்கையில் விழுந்தாள்.

அப்துல்காதர் சாஹிப் ஆரஞ்சுப் பழத்தை உரித்து சுளை சுளையாகப் பிரித்து ஒரு பாத்திரத்தில் போட்டான். சிறிது நேரம் கழித்து அவளை அழைத்தான்.

""ஜமீலா...''

""எனக்கு வேண்டாம்...''

""என்ன வேண்டாம்?'' அப்துல்காதர் சாஹிப் மனதிற்குள் நினைத்தான். "நிக்காஹ் முடிஞ்ச உடனே இவளை அடிச்சு, பயமுறுத்தி வச்சிருக்கணும்!'

""ஜமீலா... சீக்கிரம் எந்திரி...''

""எனக்கு தூக்கம் வருது...''

""அப்படியா?'' அப்துல்காதர் சாஹிப் மென்மையான குரலில் சொன்னான்: ""ஜமீலா... நான் ரொம்பவும் கஷ்டப்பட்டு இந்தப் பழங்களைக் கொண்டு வந்திருக்கேன். இங்க பாரு... நான் ஆத்துல நீந்தி வர்றப்போ அதுல முங்கி செத்துப் போயிருந்தா என்ன ஆயிருக்கும்?''

ஜமீலா பீபி படுக்கையில் குப்புறப்படுத்து தலையணையில் முகத்தைப் புதைத்தாள்.

""ஜமீலா...''

அவள் லேசாக முகத்தைத் திருப்பினாள்.

""நான்... உங்ககிட்ட வாங்கிட்டு வரச்சொன்னது பூவன் பழம்தான்..''

""ஏய்... பூவன் பழம் ஒரு இடத்துலயும் கிடைக்கலன்னு நான்தான் சொல்றேனே! நான் நாளைக்கு எங்கேயாவது பார்த்து வாழைக்கன்றுகளைக் கொண்டு வர்றேன்.''

""நீங்க வாழைக்கன்றுகளைக் கொணடு வந்து நட்டு, அது வளர்ந்து, குலை தள்ளி, காய் காச்சு, பழுத்து, நான் சாப்பிடணுமா?''

""சரி... இப்போ இந்த ஆரஞ்சுப் பழத்தைத் தின்னு. இதுல நிறைய வைட்டமின் இருக்கு.''

""எனக்கு வேண்டாம்...''

""நீ இதைச் சாப்பிட்டே ஆகணும்...''

ஜமீலா பீபி எழுந்து உட்கார்ந்தாள். பந்தாவாக முகத்தை உயர்த்திக் கொண்டு, ஒருவித மிடுக்குடன் அவனைப் பார்த்துக் கேட்டாள்:

இதைத் தின்ன மாட்டேன்னு சொன்னா, பேசாம விட வேண்டியதுதானே! அடிச்சுத் தின்ன வைப்பீங்க போலிருக்கே!''

அப்துல்காதர் சாஹிப் மனதிற்குள் நினைத்தான்: "இதுகூட நல்ல ஐடியாவாத்தானே இருக்கு!'

அடுத்த நிமிடம் அவன் சமையலறைக்குள் நுழைந்து இரண்டு சிறு குச்சிகளை எடுத்துக் கொண்டு வந்தான்.

ஜமீலா பீபி அவன் கையிலிருந்த குச்சிகளைப் பார்த்தாள். பிறகு என்ன நினைத்தாளோ, ஒரு ஓரத்தில் ஒடுங்கியவாறு போய் அமர்ந்தாள்.

அவன் சொன்னான்:

""எழுந்திரு...''

""எனக்குப் பிடிக்கல...''

""பிடிக்கலியா?'' அவன் எழுந்துபோய் ஒரு வெட்டரிவாளுடன் திரும்பி வந்தான்.

"புஸ்க்...' என்று சொல்வது மாதிரி ஜமீலா பீபி அமர்ந்திருந்தாள்.

""வா...'' அவன் அழைத்தான்.

அவள் சொன்னாள்:

""எனக்குப் பிடிக்கல...''

""அப்படியா?'' அவன் ஜமீலா பீபியின் தொடையில் குச்சியால் இரண்டு அடிகள் கொடுத்தான். தொடர்ந்து வெட்டரிவாளை உயர்த்திக் காட்டினான்.

""அடுத்தது இதுதான்!''

அவள் பயந்துபோய் கலங்கிய கண்களுடன் எழுந்து நின்றாள்.

அவள் கண்களில் இருந்து வழிந்த நீரைப் பார்த்ததும்... என்ன சொல்வது? அப்துல்காதர் சாஹிப்பின் இதயமே நொறுங்கிப் போனதுபோல் ஆகிவிட்டது. என்ன இருந்தாலும் அவன் ஆண் அல்லவா? பெண்ணின் கண்ணீரைப் பார்த்தால் அவனால் தாங்க முடியுமா என்ன? இருந்தாலும் சிறிது நேரத்திற்கு வேண்டுமென்றே தன் மனதைக் கல்லாக்கிக் கொண்டான் அப்துல்காதர் சாஹிப். சில நிமிட இடைவெளிக்குப்பிறகு அவன் சொன்னான்:

""ஜமீலா... இங்க பார்... சும்மா கண்ணீர் விடாதே... வேணும்னா ஒண்ணு செய். உன் கண்ணீர் முழுவதையும் ஒரு அண்டால பிடிச்சு வை. நான் பிறகு அதுல குளிச்சிக்கிறேன். தெரியுதா?''

ஜமீலா பீபி முகத்தை ஒரு மாதிரி வைத்துக் கொண்டு கேட்டாள்:

""என்னைக் கொல்லப் போறீங்களா?''

""ஆமா...'' அவன் சொன்னான்: ""உன்னை அறுத்து சின்னச் சின்ன துண்டா நறுக்கிப் போட்டு பிரியாணி தயாரிக்கப் போறேன்.''

அடுத்த நிமிடம் அவன் அவளின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு போய் பக்கத்து அறையில் அவளை நிறுத்தினான். அவளுக்கு முன் ஆரஞ்சுப் பழங்கள் இருந்தன.

""ஒழுங்கா எடுத்துத் தின்னு.'' அப்துல்காதர் சாஹிப் கட்டளையிட்டான்.

ஜமீலா பீபி அசைவே இல்லாமல் அப்படியே நின்றிருந்தாள். "புஸ்க்' என்று அவனைப் பார்த்துச் சொல்வது மாதிரி இருந்தது அவள் நின்றிருந்த கோலம்.

கணவன் சொல்லும் கட்டளைப்படி ஒரு மனைவி நடக்க வேண்டுமா இல்லையா? எதுவுமே பண்ணாமல் வெறுமனே நின்றிருந்தால் அவனுக்குக் கோபம் வருவது இயல்புதானே! கையில் இருந்த குச்சியால் அவளின் பின்பாகத்தில் லேசாக அடித்தான்.

அவ்வளவுதான்.

மெதுவாக முன்னால் வந்த ஜமீலா பீபி ஒரு ஆரஞ்சு சுளையை எடுத்து வாயில் வைத்தாள்.

""இது போதாது. இனியும் எடுத்துத் தின்னணும்...'' கட்டளைக் குரலில் சொன்னான் அப்துல்காதர் சாஹிப். தொடர்ந்து கையில் இருந்த வெட்டரிவாளையும் காட்டினான்.

""கையில என்ன இருக்கு பார்த்தியா? இத வச்சு ஒரு போடு போட்டா எப்படி இருக்கும் தெரியுமா?''

இதை அவன் சொன்னதுதான் தாமதம்- பயந்துபோன ஜமீலா பீபி வேகமாக ஆரஞ்சுச் சுளைகளை எடுத்து வாயில் போட்டுத் தின்றாள்.

அவன் சொன்னான்:

""தோலை உரிச்சு மெதுவா தின்னு...''

கண்களில் நீர் வழிந்தவாறு, ஜமீலா பீபி தோலை உரித்து ஆரஞ்சுச் சுளையைச் சாப்பிட்டாள்.

அப்துல்காதர் சாஹிப் அவளைப் பார்த்துக் கேட்டான்:

""நான் உனக்கு யாரு சொல்லு...''

அவள் சொன்னாள்:

""யார்னே எனக்குத் தெரியாது...''

""இந்த வெட்டரிவாள் தெரியுதா? உனக்கு நான் யாரு?''

""கணவன்...''

அவன் கேட்டான்:

""கையில இருக்குற வெட்டரிவாள் தெரியுதா? நீ என்னைத் திருத்தணும்னு நினைப்பியா? இனி மாட்டேன்னு சொல்லு. கையில இருக்குற அரிவாள் தெரியுதுல்ல?''

""நிச்சயமா இனி உங்களைத் திருத்தணும்னு நினைக்க மாட்டேன்.''

அவன் கேட்டான்:

""இப்ப நீ என்னத்தைச் சாப்பிடுறே?''

""ஆரஞ்சுப் பழம்.''

அப்துல் காதர் சாஹிப் அவளின் பின்பாகத்தில் ஒரு அடி கொடுத்தான்:

""வெட்டரிவாள் தெரியுதா? சொல்லு... நீ இப்போ சாப்பிடுறது பூவன் பழம்...''

""பூவன் பழம்!''

""சமையல்காரி வேணுமா? வேண்டாம்னு சொல்லு. வெட்டரிவாள் தெரியுதா?''

""வேண்டாம்...''

""நீ நினைச்சுக்கிட்டு இருக்குற மாதிரி நீ என்ன பெரிய இவளா? வெட்டரிவாள் தெரியுதா? நீ என்னோட பொண்டாட்டிதானே?''

""ஆமா...''

""டிரைவர்கள், ரிக்ஷாக்காரர்கள், கவிஞர்கள், சுமை தூக்குபவர்கள், அரசியல் தொண்டர்கள், பீடி சுற்றுபவர்கள்- எல்லார்கூடயும் நான் சரிசமமா பழகலாம்லயா? வெட்டரிவாள் கையில இருக்கு. தெரியுதா? பழகலாம்னு சொல்லு...''

""பழகலாம்... பழகலாம்...''

""இப்போ தின்றது என்ன?''

""பூவன் பழம்...''

கையில இருந்த வெட்டரிவாளையும் குச்சியையும் கீழே போட்டுவிட்டு, "எண் கண்ணே...' என்று ஆசையுடன் கூறியவாறு அப்துல்காதர் சாஹிப் ஜமீலா பீபியை இறுகக் கட்டிப்பிடித்து அவள் கன்னத்தில் முத்தம் கொடுத்தான். அவளின் பின்பாகத்திலும் தொடையிலும் அடி வாங்கிய தடங்கள்! அதைத் தன் கைகளால் தொட்டபோது அவன் இதயம் வேதனையால் அழுதது.

""என் கண்ணு... உனக்கு வலிக்குதாடா?'' அவன் கேட்டான்.

அவள் நீண்ட பெருமூச்சு விட்டவாறு சொன்னாள்:

""இல்ல..''

3

இருந்தாலும் அப்துல்காதர் சாஹிப்பின் இதயம் மிகவும் அதிகமாக வருந்தியது. ஆயிரம்தான் இருக்கட்டும்... அவன் ஆணாயிற்றே!

அன்றைய இரவு முடிந்தது. பகல் வந்தது. நாட்கள் வருடங்களாக மாறின. நதியில் எத்தனையோ முறை கள் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஜமீலா பீபி ஒன்பது தடவை பிரசவமானாள். உலகத்தில் எவ்வளவோ மாறுதல்கள் உண்டாயின. சாம்ராஜ்ஜியங்கள் தகர்ந்தன. கிரீடங்களும் செங்கோல்களும் சிம்மாசனங்களும் பறந்தன. புதிய ஆட்சிகள் வந்தன. புதிய கொள்கைகள் வந்தன. புதுப்புது சித்தாந்தங்கள் அரங்கேறின. மனித சமுதாயம் பல வகைகளிலும் வளர்ச்சியை நோக்கி நடைபோட்டது. அப்துல்காதர் சாஹிப்பிற்கும் ஜமீலா பீபிக்கும் வயது ஏறின. அவர்களின் பற்கள் அனைத்தும் விழுந்துவிட்டன. இரண்டு பேருக்கும் கூன் விழுந்து விட்டது. தலை முழுவதும் இருவருக்குமே நரை முடி. படுகிழவனும் கிழவியுமாய் இருவரும் ஆனார்கள். அவர்களின் குழந்தைகளுக்கும் குழந்தைகள் பிறந்தன. என்னதான் வருடங்கள் பல கடந்தாலும், கடந்து வந்த வாழ்க்கைப் பாதையில் சில விஷயங்களை மறக்க முடியுமா? அப்துல்காதர் சாஹிப் சிரித்தவாறே ஜமீலா பீபியைப் பார்த்துக் கேட்பான்:

""மகாராணி... பல வருஷங்களுக்கு முன்னாடி நீ பூவன் பழம் வேணும்னு கேட்டப்போ, ஆத்துல நீந்தி வந்து உனக்கு நான் என்ன கொண்டு வந்தேன்?''

ஜமீலா பீபி சிரித்தவாறே சொல்லுவாள்:

""பூவன் பழம்!''

அவன் கேட்பான்:

""அது எப்படி இருந்துச்சு?''

அவள் கூறுவாள்:

""ஆரஞ்சுப் பழம்போல உருண்டையாய்...''

""ஹா...ஹா...ஹ...'' என்று சிரித்தவாறு அவன் கேட்பான்:

""என்ன கொண்டு வந்தேன்?''

அவள் சொல்லுவாள்:

""பூவன் பழம்! பூவன் பழம்!''