Showing posts with label PHILOSOPHY. Show all posts
Showing posts with label PHILOSOPHY. Show all posts

Wednesday, 10 March 2021

SOCRATES PHILOSOPHY

 

SOCRATES PHILOSOPHY



கிரேக்க தத்துவ ஞானி சாக்ரடீஸ்,இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு முன் வாழ்ந்தவர் (469 BC–399 BC) அவர் வாழ்ந்த காலத்தில், ஒரு நாள், ஒரு இளைஞன்வந்து அவரை சந்தித்தான். வெற்றியின் ரகசியத்தைத் தனக்கு சுருக்கமாகச் சொல்லித்தருமாறு வேண்டிக்கொண்டான்.

அடுத்த நாள் காலை, ஊருக்கு அருகில் உள்ள ஆற்றங்கரைக்கு வந்து தன்னை சந்திக்கச் சொல்லி, அப்போதைக்கு அவனை அனுப்பிவைத்தார் அவர். அவனும் மறு பேச்சின்றி சென்று விட்டான். அடுத்த நாள் காலை. ஆற்றங்கரைக்கு வந்து அவரைச் சந்தித்தான் அவன். தன்னுடன் சேர்ந்து நடக்குமாறு அவனைப் பணித்துவிட்டு, அவர் ஆற்றுத் தண்ணீரில் இறங்கி நடக்க ஆரம்பித்தார். அவனும் நடந்தான்.

மார்பளவு நீருள்ள பகுதிக்கு இருவரும் வந்து சேர்ந்தார்கள்.


அப்போதுதான் அது நடந்தது. சற்றும் எதிர்பார்க்காத வகையில், அந்த இளைஞனைத் தன் இருகரங்களாலும் பிடித்த சாக்ரடீஸ், தன் பலம் கொண்ட மட்டும் அவனைத் தண்ணீருக்குள் அமுக்கிப் பிடித்துக் கொண்டார். ஒன்றும் புரியாத இளைஞன், அவர் பிடியில் இருந்தும், நீருக்குள் இருந்தும் விடுபட முயன்றான். முடியவில்லை.

ஒரு நிமிட மரணப் போராட்டத்திற்குப்பிறகு, தன்னை விடுவித்துக் கொண்டு மேலே வந்தான். முகம் சிவந்துவிட்டது.மூச்சுத் திணறியதால், வேக வேகமாகக் காற்றை உள்ளிழுத்து சுவாசிக்கத் தொடங்கினான். ஐந்து நிமிடங்களுக்குப் பிறகுதான் தன்நிலைக்கு வந்தான்.

சாக்ரடீசின்மேல் மிகுந்த மரியாதை வைத்திருந்ததால், அமைதியாகக் கேட்டான்: “ஐயா, ஏன் இப்படிச் செய்தீர்கள்?” “செய்ததைவிடு! தண்ணீருக்குள் மூழ்கி இருக்கும்போது உனக்கு மிக அத்யாவசியமாகத் தேவைப்பட்டது எது? - அதைச் சொல்முதலில்!” என்று பதிலுக்கு அவனைக் கேட்டார் சாக்ரடீஸ்.

“காற்று. சுவாசிப்பதற்கான காற்று!” “வெற்றியின் ரகசியமும் அதுதான். மோசமான நிலையில் ஒன்று தேவைப்படும் நிலையில், போராடி, அதைப் பெற்றாய் இல்லையா நீ? வெற்றியும் அதுபோலத்தான் கிடைக்கும். வெற்றிக்கு வேறு ரகசியம் ஒன்றும் இல்லை...

Thursday, 5 October 2017

RAMALIGA ADIKAL ALIAS VALLALAR PHILOSOPHY




RAMALIGA ADIKAL ALIAS VALLALAR  PHILOSOPHY



ஆன்ம நேய ஒருமைப்பாடு எங்கும் தழைக்க, இவ்வுலகமெல்லாம் உண்மை நெறி பெற்றிட, எவருக்கும் ஆண்டவர் ஒருவரே, எவ்விடத்தும் எவ்வுயிர்க்கும் இலங்கு சிவம் ஒன்றே, அவரே அருட்பெருஞ்ஜோதி என்று கூறி மற்றும், அகத்தே கறுத்துப் புறத்துவெளுத் திருந்த உலகர் அனைவரையும் சகத்தே திருத்திச் சன்மார்க்க சங்கத்திடை செலுத்த இவ்வுலகில் இறைவனால் வருவுவிக்க வுற்ற அருளாளர் தான் திருஅருட்பிரகாச வள்ளலார் என்று போற்றப்படும் சிதம்பரம் இராமலிங்க அடிகள். அவர்கள் 1823 ஆம் ஆண்டு October மாதம் 5 ஆம் நாள் மாலை 5:30 மணி அளவில் இராமையா பிள்ளை சின்னம்மையார் என்ற தம்பதியாருக்கு ஐந்தாவது மகவாக இறைவனால் வருவிக்க உற்றார். சிறுவயதில் இருந்தே இறைவனால் ஆட்கொள்ளப்பெற்று பல நூற்றுக் கணக்கான அருட்பாடல்களை அருளினார்கள். அவ்வாறு நமக்காக அருளிய பாடல்களே திருவருட்பா என்று போற்றப் படுகிறது

திருவருட்பா அனைத்தும் அடங்கிய ஒர் அருள் ஞானக்களஞ்சியம். திருவருட்பா என்பது உண்மை உரைக்க வந்த இறை நூலாகும். இதில் பற்பல சாதன ரகசியங்களும், சிவ ரகசியங்களையும், சித்துகளையும் உள்ளடக்கி பாடப்பெற்றுள்ளது. எந்த ஒரு சித்த புருஷரும் வெளிப்டையாக பகிரங்கமாக எடுத்துரைக்காத விசயங்களை எல்லாம் தெள்ளம் தெளிவாக எடுத்துரைக்கப் பெற்ற ஒரே ஒரு நூல் என்று சொன்னால் அதுவே திருவருட்பாவாகும்.
நாம் யார்? நம் நிலை எப்படிப் பட்டது? கடவுள் நிலை என்ன? நாம் கடவுளை விரைந்து எவ்வாறு அடைவது? எங்கனம் அழியாத தேகத்தை பெற்று நித்திய வாழ்வு பெறலாம் என்று ஆராய்ந்து அதனை அடையும் வழியினை கண்டறிந்தார்கள் வள்ளலார். தான் கண்டு அடைந்த அந்த வழியை நாம் எல்லாரும் பெறவே வள்ளல் பெருமானால் எற்படுதப்பட்டதே சமரச சுத்த சன்மார்க்கமாகும். 


பல கோடி யுகங்கள் கழிந்தாலும், வேதங்கள் பல கற்றலும் மற்றும் எவ்வகையாலும் கண்டுகொள்ள முடியாத ஆண்டவரை மிகவும் சுலபமாக அனைவரும் அடைதற்பொருட்டு வள்ளல் பெருமானால் எற்படுதப்பட்டதே சமரச சுத்த சன்மார்க்கமாகும். இவ்வாறு சன்மார்க்க வழி புகுந்தால் நாம் பெறவேண்டிய அனைத்து ஆன்ம லாபமும் பெறலாம், அது மட்டுமல்ல ஏன் இந்த ஊன் உடம்பும் ஒளி உடம்பாகி ஒளிரும் என்கின்றார் ஒரு பாடலில்,


பொத்திய மலப்பிணிப் புழுக்கு ரம்பைதான் 
சித்தியல் சுத்தசன் மார்க்கச் சேர்ப்பினால் 

நித்திய மாகியே நிகழும் என்பது 
சத்தியம் சத்தியம் சகத்து ளீர்களே

என்று மலப்பிணியால் பொத்திய இந்த உடம்பை என்று என்றும் உள்ளவாறு அழியாத உடம்பைப் பெற்று நித்தயமாகலாம் என்று வள்ளலார் கூறுகிறார். 

அன்று தொட்டு இன்று வரை மனிதன் பல வழிகளிலே தெய்வங்களை தேடினான். பல தெய்வங்களை வணங்கிணான், வணங்கிக் கொண்டும் உள்ளான். இப்படி மனிதன் பல பல தெய்வங்களை கூறியும் சேர்கதி பல வற்றில் புகுந்தும் முடிவில் தெய்வத்தின் நிலையறியாது மாண்டுபோனன். இப்படி இருட்டுலகில் மடிந்து கொண்டுருக்கும் மனிதனை ஒளி நெறி பெற்றிட வள்ளல் பெருமானால் எற்படுத்தியதே சுத்த சன்மார்க்கம் ஆகும். அவர் ஒரு பாடலில் பாடுகிறார்,


தெய்வங்கள் பலபல சிந்தைசெய் வாரும் 
சேர்கதி பலபல செப்புகின் றாரும் 
பொய்வந்த கலைபல புகன்றிடு வாரும் 
பொய்ச்சம யாதியை மெச்சுகின் றாரும் 

மெய்வந்த திருவருள் விளக்கம்ஒன் றில்லார் 
மேல்விளை வறிகிலர் வீண்கழிக் கின்றார் 
எய்வந்த துன்பொழித் தவர்க்கறி வருள்வீர்

ஆக மனிதனை துன்பத்தில் இருந்து மீட்டு ஜீவகாருண்ய வழி நடத்தி மனிதனுக்கு தெய்வநிலையை அடையச் செய்விப்பதே சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய நோக்குமாகும். சாதியிலே மதங்களிலே பேதமுற்று அலைந்து வீணே அழியும் இந்த உலகத்தவர்களுக்கு ஆன்ம நேய ஒருமைப்பாட்டுரிமை என்னும் சாதனத்தை கொண்டு வந்தார்கள், ஒரு படலில் பாடுகிறார்கள்,

சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலே
சாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச்சண் டையிலே
ஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர்
அலைந்தலைந்து வீணேநீர் அழிதல்அழ கலவே
நீதியிலே சன்மார்க்க நிலைதனிலே நிறுத்த
நிருத்தமிடும் தனித்தலைவர் ஒருத்தர்அவர் தாமே
வீதியிலே அருட்சோதி விளையாடல் புரிய
மேவுகின்ற தருணம்இது கூவுகின்றேன் உமையே

ஆக பேதமற்று, கலவரங்கள் இல்லாத அமைதியான இயற்கை ஒட்டிய வாழ்வு பெறவும், என்றென்றும் தடைபடாது அழியாத மெய்வாழ்வு பெறவும் நமக்கு வள்ளல் பெருமான் வழிவகுத்துக் கொடுத்துள்ளார்கள். 


ஆதாவது, நமது ஆன்மாவின் கண் பல திரைகளால் முடப்பட்டுருப்பதாகவும் அவற்றை நீக்கி கொண்டு, ஏமசித்தி, சாகக்கல்வி, தத்துவநிக்கிரஹம் செய்தல், கடவுள் நிலையறிந்து அம்மயமாதல் ஆகிய நான்கு புருஷார்த்தங்களை நாம் பெறுமாறு நமக்கு எடுத்து அருளியுள்ளார்கள். இவ்வாறு முடிந்த முடவாகிய சிவானந்த அனுபவமே தவிர மற்றுவேரில்லை என்றும் அவ்வனுபத்தை எல்லோரும் தன்னைப் போல் பெற ஒரு மார்க்கத்தை கண்டார்கள், அது தான் சமரச சுத்த சன்மார்க்கம் என்னும் ஓளி நெறி மார்க்கமாகும்.

ஆக,சுத்த சன்மார்கத்தின் முக்கிய சாதனம் 
என்னவென்றால்: எல்லா ஜீவர்களிடத்தும் தயவும் 
ஆண்டவரிடத்து அன்பும் முக்கியமானவை. ஆதலால் 
காலந் தாழ்க்காது எல்லா உயிரையும் தன்னுயிரைப் போல்
 பார்க்கும் உணர்வை வருவித்துக் கொள்ளுதல் வேண்டும். 

இதுவே சாதனம். இந்தக் குணம் வந்தவன் எவனோ அவன்தான் 
இறந்தவரை எழுப்புகிறவன்: 

அவனே ஆணடவனு மாவான்.


வாடிய பயிரைக் கண்ட போதல்லாம் வாடினேன் என்ற வள்ளல் பெருமான், நாம் உண்மையையும் புனிதமும் பெறும் பொருட்டு அருளியதே திருவருட்பாவாகும். திருவருட்பா பாடல்கள் முழுவதும் உள்ளத்தை உருக்குவன. ஆழ்ந்த கருத்துகளை கொண்டன. ஊன் உருக்கி உள்ளெளி பெருக்கும். இத்திருவருட்பாவில் அமைந்துள்ள 6000 மேற்பட்ட பாடல்களை இசைத்தட்டு mp3 வடிவமாக கடந்த 2004 ஆண்டு முதல் திருவருட்பா இசையமுதம் திட்டதின் மூலமாக Vallalar.Org செயல்படுத்தி கொண்டு வருகின்றது.

நான்உரைக்கும் வார்த்தைஎலாம் 
நாயகன்றன் வார்த்தை நம்புமினோ 
நமரங்காள் நற்றருணம் இதுவே 

வான்உரைத்த மணிமன்றில் நடம்புரி
எம் பெருமான் வரவெதிர்கொண் டவன்அருளால்
 வரங்களெலாம் பெறவே தேன்உரைக்கும் 
உளம்இனிக்க எழுகின்றேன் நீவீர் தெரிந்தடைந்தென் 
உடன்எழுமின் 

சித்திபெறல் ஆகும் ஏனுரைத்தேன் இரக்கத்தால் 
எடுத்துரைத்தேன் கண்டீர் யானடையும் சுகத்தினைநீர் 
தான்அடைதல் குறித்தே

ஆக இந்த பாடலில் தான் பெற்ற இந்த சுகத்தினை , இந்த ஆன்ம லாபத்தை, அருட்பெருஞ்ஜோதியை உலகில் உள்ள எல்லா உயிர்களும் பெற வேண்டும் என்பதே வள்ளல் பெருமானுடைய ஆசையும் வேண்டுதலுமாகும். ஆதலால் நாமும் நன்முயற்சியுடன் இருந்து பெற வேண்டிய புருஷார்த்தங்களை காலம் தாழ்த்தாது விரைந்து பெறுவோமாக!







வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் ஓர் ஆன்மீகவாதி ஆவார். மக்களின் மிகுந்த துயரங்களுள் ஒன்றான பசியைப் போக்கிட வள்ளலார் வழி வகுத்தார்.

வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் ஓர் ஆன்மீகவாதி ஆவார். மக்களின் மிகுந்த துயரங்களுள் ஒன்றான பசியைப் போக்கிட வள்ளலார் வழி வகுத்தார். இன்றளவும் வள்ளலார் பெயரால் லட்சக்கணக்கான மக்களுக்கு பசியாற்றப்படுகிறது. வடலூரில் தலைமை இடம் இருந்தாலும், உலகமெங்கும் அவரது கொள்கையைப் பின்பற்றுகின்றவர்கள் பசியாற்றுகிறார்கள்.

இவர் 1823-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 5-ந்தேதி கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து 10 மைல் தொலைவில் உள்ள மருதூரில் பிறந்தார். பெற்றோர் ராமையாபிள்ளை- சின்னம்மையார். இவரோடு சபாபதி, பரசுராமன், உண்ணாமுலை, சுந்தராம்பாள் ஆகிய நால்வரும் பிறந்தனர். இராமலிங்கர் பிறந்த எட்டாம் மாதத்திலேயே தந்தையை இழந்தார். தாயார் குழந்தைகளோடு பொன்னேரி சென்று வாழ்ந்தார்.

பின்னர் சென்னையில் ஏழுகிணறு பகுதி வீராசாமி பிள்ளை தெருவில் குடியேறினார். அண்ணன் சபாபதி சமயச் சொற்பொழிவு செய்து வந்தார். தன் வாழ்வின் பெரும்பகுதியை சென்னையில் கழித்த இவர், நவீன சமுதாயங்களின் பிரச்சினைகளை உணர்ந்திருந்தார். அனைத்து சமய நல்லிணக்கத்திற்காகவும் சன்மார்க்கத்திற்காகவும் தன் வாழ்நாளை அர்ப்பணித்துப் பணியாற்றினார்.

இந்நோக்கத்தை அடையும் பொருட்டு சிதம்பரம் அருகே உள்ள வடலூரில் சத்திய ஞானசபையும் சத்திய தருமசாலையும் அமைத்தார். அவர் வாழ்ந்த காலத்தில் அவருடைய சிந்தனைகள் மிகவும் முற்போக்குடையதாக கருதப்பட்டாலும், தற்பொழுது உலகெங்கும் அவருடைய சிந்தனைக்கு ஒத்த கொள்கைகள் புரிந்து கொள்ளப்பட்டு பின்பற்றப்படுகிறது.

இராமலிங்க அடிகள் கொள்கைகள்.

கடவுள் ஒருவரே. அவர் அருட்பெருஞ்சோதி ஆண்டவர். புலால் உணவு உண்ணக் கூடாது.எந்த உயிரையும் கொல்லக்கூடாது. 

சாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடு கூடாது.  இறந்தவர்களை எரிக்கக் கூடாது. சமாதி வைத்தல் வேண்டும்.எதிலும் பொதுநோக்கம் வேண்டும்.  பசித்தவர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடு கருதாது உணவளித்தல் வேண்டும்.சிறு தெய்வ வழிபாடு கூடாது. அவற்றின் பெயரால் பலி இடுதலும் கூடாது.  எல்லா உயிர்களும் நமக்கு உறவுகளே. அவற்றைத் துன்புறுத்தக் கூடாது.

வளரும் பிள்ளைகளுக்கு வள்ளலார் வழங்கிய அறிவுரைகள்.

நல்லோர் மனதை நடுங்கச் செய்யாதே.  தானம் கொடுப்போரைத் தடுத்து நிறுத்தாதே.  மனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்யாதே.  ஏழைகள் வயிறு எரியச் செய்யாதே.பொருளை இச்சித்து பொய் சொல்லாதே. பசித்தோர் முகத்தைப் பாராதிராதே. இரப்போர்க்கு பிச்சை இல்லை என்னாதே. குருவை வணங்கக் கூசி நிற்காதே.வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சம் அழிக்காதே. தந்தை தாய் மொழியைத் தள்ளி நடக்காதே.

இவர் பாடிய ஆறாயிரம் பாடல்களின் திரட்டு, திருவருட்பா என்று அழைக்கப்படுகிறது. இது ஆறு திருமுறைகளாக பகுக்கப்பட்டு உள்ளது. திருவருட்பா, முதலில் இராமலிங்க அடிகளின் தலைமைச் சீடர் தொழுவூர் வேலாயுதனாரால் நான்கு திருமுறைகளாக வெளியிடப்பட்டது. பின்னர் ஐந்தாம், ஆறாம் திருமுறைகள் வெளியிடபட்டன. முன்னாள் தமிழக அறநிலையத்துறை ஆணையாளர் பாலகிருஷ்ணன், இராமலிங்கரின் உரைநடை, கடிதங்கள் முதலியவற்றைத் தனி நூலாகத் தொகுத்து வெளியிட்டார். பின்னர் ஊரன் அடிகளும் காலமுறை பதிப்பு வெளியிட்டுள்ளார்.