STORY காணிக்கை!
காணிக்கை! • சுஜாதா - • ஓவியம் : லலிதா என் பேர் சீமாச்சு. ஸ்ரீரங்கம் கோயில்லே தெற்குக் கோபுர வாசல்லே மூக்கிலே ஈயை விரட்டிண்டு உக்காந்திண்டிருக்கேனே, நான்தான். நாயுடு கடையிலே தந்தி பேப்பர் பார்த்துட்டு யாராவது வராளான்னு காத்துண்டு இருந்தேன். யாரும் வரல்லை. பஸ் நிறைய மொட்டை அடிச்சுண்டு சந்தனம் தடவிண்டு ஒரு டூரிஸ்ட் கும்பல்தான் வந்து இறங்கித்து. சில்லறை புரளாது. எல்லோரும் கோவிந்தா கோவிந்தான்னு கோஷ்டியாகக் கத்திட்டு மொத்தமா பத்துப் பைசா கொடுக்கும். பத்துப் பைசா எனக்குப் போறாது. கோயிலுக்கு வரப்பட்ட மனுஷாளை அழைச்சுண்டு போய்ச் சுத்திக் காமிச்சுட்டுப் பெருமாள் சேவை பண்ணி வெச்சுட்டு அவா குடுக்கிறதை வாங்கிண்டு அன்னன்னிக்குக் காலட்சேபம் நடக்கிறது எனக்கு. சீரங்கம் கோயில் இப்பல்லாம் முன்னைப்போல் இல்லை. முன்னே உத்ஸவம் எல்லாம் நிறுத்தி நிதானமா நடக்கும். ஜாஸ்தி கூட்டமும் கிடையாது. பிரபுக்கள்ளாம் வருவா. எம்மாதிரி ஆசரதம் பண்றவாளுக்குத் தினப்படி குறைவில்லாம கிடைக்கும். பிரசாதம் கிடைக்கும். இப்ப? பெருமாளே கடிகாரம் கட்டிண்டு ஓடறார் மணிப்பிரகாரம். நேரப் பிரகாரம். டாண் டாண்ணு புறப்பாடுகளும் உத்ஸவங்களும்...