Tuesday 20 April 2021

STORY காணிக்கை!

 




காணிக்கை!

• சுஜாதா - • ஓவியம் : லலிதா





என் பேர் சீமாச்சு. ஸ்ரீரங்கம் கோயில்லே தெற்குக் கோபுர வாசல்லே


மூக்கிலே ஈயை விரட்டிண்டு உக்காந்திண்டிருக்கேனே, நான்தான்.


நாயுடு கடையிலே தந்தி பேப்பர் பார்த்துட்டு யாராவது வராளான்னு காத்துண்டு இருந்தேன்.


யாரும் வரல்லை. பஸ் நிறைய மொட்டை அடிச்சுண்டு சந்தனம் தடவிண்டு ஒரு டூரிஸ்ட் கும்பல்தான் வந்து இறங்கித்து.



சில்லறை புரளாது. எல்லோரும் கோவிந்தா கோவிந்தான்னு கோஷ்டியாகக் கத்திட்டு மொத்தமா பத்துப் பைசா கொடுக்கும்.


பத்துப் பைசா எனக்குப் போறாது.


கோயிலுக்கு வரப்பட்ட மனுஷாளை அழைச்சுண்டு போய்ச் சுத்திக் காமிச்சுட்டுப் பெருமாள் சேவை பண்ணி வெச்சுட்டு


அவா குடுக்கிறதை வாங்கிண்டு அன்னன்னிக்குக் காலட்சேபம் நடக்கிறது எனக்கு.


சீரங்கம் கோயில் இப்பல்லாம் முன்னைப்போல் இல்லை. முன்னே உத்ஸவம் எல்லாம் நிறுத்தி நிதானமா நடக்கும்.


ஜாஸ்தி கூட்டமும் கிடையாது. பிரபுக்கள்ளாம் வருவா. எம்மாதிரி ஆசரதம் பண்றவாளுக்குத் தினப்படி குறைவில்லாம கிடைக்கும்.


பிரசாதம் கிடைக்கும். இப்ப? பெருமாளே கடிகாரம் கட்டிண்டு ஓடறார் மணிப்பிரகாரம்.


நேரப் பிரகாரம். டாண் டாண்ணு புறப்பாடுகளும் உத்ஸவங்களும் நடந்து ஆகணும்.


எதுக்கெடுத்தாலும் டிக்கெட்டு, எங்கே பார்த்தாலும் சங்கிலி, மூங்கில். ‘இங்கே போகாதே. அங்கே போ...’


எல்லாத்துக்கும் கணக்கு. கோயில் தோசைக்கு, பிரசாதத்துக்கு, அதிரசத்துக்கு, பட்டை சாதத்துக்கு,


யானைக்கு, நாமக்கட்டிக்கு எல்லாத்தையும் ஆபீஸிலே ஒக்காண்டு பேரேடு புஸ்தகத்திலே எழுதிண்டிருக்கா.


தமிழிலே அர்ச்சனை பண்றா, ரங்கமண்டபத்திலே கிளிக்கூண்டு எல்லாம் காலியா இருக்கு.


வெள்ளைக்காரா நிறையப் பேர் வரா. ரொம்ப மாறிப் போயிடுத்து.


நான் சின்ன வயசிலே சீமான் தாங்கியா இருந்தேன். மாசா மாசம் சம்பளம் வந்துண்டிருந்தது.


ஒரு தடவை வையாளி உத்சவத்தின்போது முழங்கால் மளுக்குன்னு புடிச்சுண்டுடுத்து.


புத்தூர் வைத்தியன் கிட்டே காட்டினதிலே பாதி இருந்த சப்பையை முழுக்கவே திருப்பிட்டான்.


இங்கிலீஷ் வைத்தியத்துக்குப் போனா ‘இப்ப வந்தியா’ன்னு திட்டினான். என்ன ஆச்சு?


கால்லே நிரந்தரமா வலி. பெருமாளை ஏளப் பண்ண முடியலை. வேலை போச்சு.


தெற்கு வாசலிலே யாராவது வரமாட்டாளான்னு உக்காந்துட்டேன்.


என் தகப்பனார் பன்னெண்டு வயசிலே என் படிப்பை நிறுத்திட்டார். அவர் சீமான் தாங்கியா இருந்தார்.


என்னையும் இழுத்து விட்டுட்டார். சின்ன வயசிலேருந்து இந்தக் கோயிலைச் சுத்தித்தான் நான் வளர்ந்திருக்கேன்.


எட்டு வயசிலே பங்குனி ரதத்துக்கு டமாரம் அடிக்க ஆரம்பிச்சேன். பாடசாலையிலே சேந்து நாலாயிர திவ்யப் பிரபந்தம்


முழுக்க அடிவரவோட பாடமாச்சு. இந்தப் புகையிலைப் பழக்கம் வந்ததும் நாக்குப் புரள மாட்டேங்கிறது.


கோஷ்டி சொல்லிண்டு இருந்தேன். எல்லாம் நின்னு போச்சு...


பதினெட்டு வயசில எனக்குக் கல்யாணம் பண்ணி வெச்சார் அப்பா.


கல்யாணம்னா என்னன்னு பிரமிப்பு தீர்றதுக்குள்ளே இரண்டு குழந்தைகள் ஆயிடுத்து.


ரெண்டும் பொண்ணு. அப்புறம் விரதம் இருந்து காப்புக் கட்டி ஒரு புள்ளை. என் ஆஸ்திக்கு?


போறுண்டான்னு சொல்றதுக்குள்ளேயே இன்னொரு பொண்ணு.


ஆனா இப்ப கூட என் ஆம்படையாளைப் பார்த்தா நாலு புள்ளை பெத்தவன்னு சொல்ல முடியாது.


சேப்பா ஒடிசலாத் தான் இருப்பா. பொண்ணு ரெண்டும் வெட வெடன்னு வளர்ந்துடுத்து.


மாத்தி மாத்தி உக்காந்துருவா. கல்யாணம் பண்ணணும். எதிர் ஜாமீனை நெனைச்சா பகீர்ங்கிறது.


ரவிக்கைக் கிழிசலை எத்தனை தடவை தெச்சாச்சு. அதுகளுக்கு ஒரு சீட்டித்துணி வாங்கிக் கொடுக்கிறதுக்குக் காசில்லை.


நான் ஓர் ஏழைப் பிராமணன் சுவாமி.


புள்ளையாவது ஒழுங்கா இருந்தால் சமாளிக்கலாம். ஈஸிச்சேருக்குப் போடற மாதிரி துணியிலே ஒரு சட்டை வெச்சுண்டிருக்கான்.


போட்டோ ஸ்டூடியோவிலே போய்ப் பின்பக்கமா ஒளிஞ்சுண்டு சீட்டாடறான்.


இங்கே வாடான்னு கூப்பிட்டா எதிர்ப்பக்கம் போய்ப் புகையிலையைத் துப்பிட்டுத் தான் வருவான்.


ஆத்திலே காசு திருடறான். அதட்டிக் கேட்டால் ஓடிப் போய்டுவேன்னு பயங்காட்டறான்.


எங்கே போவான்? இன்னிக்குப் போனா நாளன்னிக்குத் திரும்பி வந்துடுவான்... சிரம ஜீவனம்!


இதையெல்லாம் மனசுக்குள்ளையே நினைச்சுண்டு வருத்தப்பட்டுண்டே உக்காந்திருந்தேன்.


ரெண்டு நாளா ஒத்தைக் காசு பேறலை. கடன் கேக்கறவாளையெல்லாம் கேட்டாச்சு.


‘பெரிய பெருமாளே, ரங்கநாதா, நீர்தான் எனக்கு இன்னிக்கக் காசு தரணும்’னு நினைச்சுண்டு


‘இருளிரியச் சுடர்மணி’களைச் சொல்லிப் பார்த்துண்டேன். என்னைப் பகவான் கேட்டுட்டார் போல அந்தக் கார் வந்து சேர்ந்தது.


பெரிய கார். வையாளிக் குதிரை மாதிரி ஜிலுஜிலுன்னு சத்தமே இல்லாமல் வந்து நின்னுது.


உள்ளே ரெண்டு பேர் உட்கார்ந்திருக்கா. நான் ஓடிப்போய்க் காதுலேருந்து காதுவரை இளிச்சுண்டு, வாங்கோ, வாங்கோ.


செருப்பை இங்கேயே வெச்சடலாம். அர்ச்சனைக்குத் தேங்காய் பழம் வாங்கிண்டுடலாம்"னு எட்டு வருஷமா சொல்லிண்டு


இருக்கிற பல்லவியை ஆரம்பிச்சேன்.


இரண்டு பேரும் கதவைச் சாத்திட்டு வெளியே இறங்கி வேஷ்டியைச் சரியாக் கட்டிண்டா.


ரெண்டு பேருக்கும் கிட்டத்தட்ட ஒரே வயசுதான் இருக்கும். தரையிலே புரளப் புரள வேஷ்டி.


கையகலகத்துக்கு ஜரிகை. கழுத்திலே சங்கிலி, மோதிரம், குல்கந்து வாசனை. பிஸினஸ்காராளா இருக்கலாம்.


சினிமாக் காராளாவும் இருக்கலாம்.


காரைவிட்டு வெளியே வந்தவா நான் ஒருத்தன் பக்கத்திலே நின்னுண்டிருக்கிறதையே கவனிக்காம


சுத்திவர மிரள மிரளப் பார்க்கறா.


செருப்பைக் கழற்றி வெச்சுடுங்கோ. சிகரெட்டை அணைச்சுடுங்கோ. இப்படி வாங்கோன்னேன்."


இப்பத்தான் என்னை ஒருத்தன் பார்த்தான். ஆற அமரப் பார்த்தான். என்ன ஐயரே, வரவேற்பு பலமா இருக்கே"ன்னான்.


நான் சிரிச்சு, தேங்காய் பழம் வாங்கிண்டு வரலாமே அர்ச்சனைக்கு"ன்னேன்.


தேங்காயும் வேண்டாம். மாங்காயும் வேண்டாம். நாங்க சும்மா சாமி பார்க்க வந்திருக்கோம்.


நாங்களே பாத்துக்கறோம்"னு கிளம்பிட்டாங்க. நான் விடலை.


எல்லா இடத்தையும் சுத்திக் காட்டறேன். இப்ப தர்ம சேவை நடக்கிறது. க்யூ பெரிசா இருக்கும்.


நான் அழைச்சுண்டு போய் சௌகரியமா சீக்கிரமா சேவை பண்ணிவைக்கறேன்.


நீங்க இஷ்டப்பட்டதைக் குடுங்கோ."


வேண்டாம் அய்யரே. நாங்களே பார்த்துக்கறோம்."


எனக்கு பீதி அதிகமாயிடுத்து. வேண்டாங்கறாளே?


மியூசியம் காமிக்கறேன். தங்க விமானம் காண்பிக்கறேன். சில்பங்கள், சிலைகள் எல்லாம் காண்பிக்கிறேன்..."


அவா கூடவே ஓடினேன்.


நின்னுட்டா, சிலைகளா?"


ஆமாம்."


எல்லாச் சிலைகளும் எங்கே இருக்குன்னு தெரியுமா உனக்கு?"


பேஷா."


சரி, வா."


கொஞ்சம் இருங்கோ, தேங்கா பழம்..."


வேண்டாம். சும்மா வாய்யா."


சரி. கற்பூரார்த்தி எடுத்துட்டாப் போச்சு"ன்னு அவாளை அழைச்சிண்டு விடுவிடுன்னு நடக்க ஆரம்பிச்சேன்.


முதல்லே பெருமாளைச் சேவிச்சுடலாம். அப்புறம் திரை போட்டுடுவா."


அது யாரு பெருமாளு?"


அதான் ஸ்ரீரங்கநாதர்."


சாமி பேரா? அய்யரே, உம்ம பேர் என்ன?"


சீனிவாச அய்யங்கார்."


ஓ. நீ அய்யங்காரா? அய்யருக்கும் அய்யங்காருக்கும் என்னய்யா வித்தியாசம்?"


அவா அத்வைதிகள்; நாங்க விசிஷ்டாத்வைதிகள்."


தமாஷா இருக்குய்யா. என்ன பாலு புரிஞ்சுதா?"


அவன் உதட்டைப் பிதுக்கினான். இவம்மாதிரி தானே குடுமி.


ஒருத்தன் நம்ம குமாரசுவாமி கல்யாணத்துக்கு சமைக்க வந்தான். ரொம்ப நல்லா செஞ்சான். நீதானோ?"’


இல்லை; நான் தளிகைக்குப் போறதில்லை"ன்னேன்.


ரங்க விலாசம். கருட மண்டபம், துவஜஸ்தம்பம் எல்லாம் காட்டிட்டு உள்ளே அழைச்சுண்டு போய்


ஒரு கற்பூரார்த்தி டிக்கெட் வாங்கிண்டு க்யூவிலே நிக்காம சொகுசா இந்தப் பக்கமா தள்ளிண்டு போய் -


கோவிந்தன் கத்தறான் - சன்னிதிக்குக் கூட்டிண்டு போய்ட்டேன்.


சேவிங்கே, நன்னாச் சேவிங்கோ. கற்பூரார்த்தி ஆகிறது. உற்சவர் ஸ்ரீரங்கநாதர் ஸ்ரீதேவி.


மூலவர் கிடந்த கோலமாக இருக்கார். திருமுகம்தான் சேவை ஆகும். எண்ணெய்க் காப்புக்காகத் திருமேனியைத்


திரைபோட்டு மறைச்சிருக்கா."


அவாளுக்குப் பெருமாள் சேவிக்கிறதிலே கவனமே இல்லை. வந்த பொம்மனாட்டிகளையே கவனிச்சுண்டு இருந்தா.


‘வைரத்தைப் பார்றா ஜொலிக்கிறது’ங்கறான். ஒருத்தனுக்கொருத்தன் தாழ்வாப் பேசிண்டு சிரிச்சுண்டான்.


இப்படியே பிரதட்சிணமா வந்துடுங்கோ. தங்க விமானத்தைப் பார்த்துட்டுத் தாயார் சன்னிதிக்குப் போய்விட்டு


வந்துடலாம்"னேன். வெளியே வந்ததும்,


அதெல்லாம் வேண்டாம்.


சிலையெல்லாம் இருக்குன்னியே காட்டு."


பேஷாக் காட்டறேனே, சேஷராயர் மண்டபத்திலே நிறைய இருக்கு."


என்ன சிலை?"


குதிரை மேலே சண்டைக்குப் போறவாளைப் புலி வந்து ஆக்ரோஷமாத் தாக்கறாப்பலேயும்


அவா புலிகளை ஈட்டியாலே குத்தறாப்பலேயும் அருமையான சிலைகள்.


இப்ப நன்னா சுத்தம் பண்ணி வைச்சிருக்கா. வெள்ளைக்காரா வந்து எப்படிச் சுத்தம் பண்றதுன்னு


சொல்லிக் கொடுத்தா?"


குதிரை சிலையா?"


ஆமாம்."


வேண்டாம்... வேறே மாதிரி சிலை இருக்கா?"


வேற மாதிரின்னா... ஓஹோ அப்படியா? கிருஷ்ணன் கோயிலேயே இருக்கு. வாங்கோ அழைச்சுண்டு போறேன்."


உனக்குப் புத்தி கூர்மை ஐயா" என்றான் கறுப்புக் கண்ணாடிக்காரன்.


கிருஷ்ணன் கோயிலைச் சுத்திக் கோபிஸ்திரீகளோட சிலை முழுதும் காமிச்சேன்.


ஒவ்வொருத்திக்கும் ஒத்தக் கையாலே புடிச்சுடற மாதிரி இடுப்பு. குடம் மாதிரி ஸ்தன்யங்கள்.


நெத்திக்கு இட்டுக்கறாப்பலேயும், கண்ணாடி பார்த்துக்கறாப்பலேயும், சித்த தூரத்திலேயிருந்து பார்த்தால்


உயிரோட இருக்கறாப்பலே இருக்கும்.


டேய், இங்கே பார்றா"ன்னான்.


மூலையிலே அந்தச் சிலை - ஒரு சின்னப் பொண்ணு - கிருஷ்ணர் வஸ்திராபஹரணம் பண்ணிட்டார்.


உடம்பலே ஒண்ணுமே இல்லை. வெட்கப் பட்டுண்டு கன்னத்திலே கைவிரலை வைச்சுண்டு


மத்த கையாலே மறைக்கப் பார்த்துண்டு ‘கிருஷ்ணா, என் புடைவையைக் கொடுடா’ன்னு சொல்றாப்பலே...


வெள்ளைக்காரா நிறைய வருவா. இங்கே, நிறையப் போட்டோ எடுத்தா,


படுத்துண்டும் நின்னுண்டும் உக்கார்ந்துண்டும் சுளீர் சுளீர்னு விளக்குப் போட்டு எடுத்தா...


ஹொய்சாலி காலத்துக்குச் சிற்பங்கள்."


என்னது ஒய்ஃபா?"


ஒய்ஃபில்ல. ஹொய்ஸாலி காலம். அந்தச் சிற்பங்கள் இந்தக் கோயிலேயே ரொம்பப் பிராசீனமானது."


பரவாயில்லே. ரொம்பத் தெரிஞ்சு வைச்சிருக்கீங்க."


ஸ்வாமி, எனக்கு ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மராட்டி எல்லாம் கொஞ்சம் தெரியும்.


என் பொழைப்புக்கு எல்லாம் தெரிஞ்சுக்க வேண்டியிருக்கு. சேஷராயர் மண்டபத்துக்குப் போவோமா...?"


குதிரைச் சிலையா?"


ஆமாம்."


குதிரை வேண்டாம். நாங்க நிறையக் குதிரை பார்த்திருக்கோம். இதை மாதிரி சிலை வேற எங்கேயாவது இருக்குமா?"


இந்த மாதிரி... தேரிலே கொஞ்சம் மரத்தாலே செஞ்சது இருக்கு. அதெல்லாம் இப்ப மூடி இருக்கும்...


தாயார் சன்னிதிக்குப் போகலாமா?"


அய்யரே, நீ இவ்வளவு தெரிஞ்சு வெச்சுண்டிருக்கே ஒண்ணு கேக்கணும் உன்னை."


கேளுங்கோ."


இந்த ஊரிலே தேவதாசிகள்ளாம் இருக்காங்களாமே?


இருந்தா, இப்ப இல்லே."


அட இருக்காங்களாம்யா?"


இல்லை. முன்னாலே இருந்தார்கள். காங்கிரஸ்காரா வந்ததும் அது எல்லாத்தையும் நிறுத்திப்பிட்டா."


அவங்கள்ளாம் நடனம் ஆடுவாங்களா?"


ஆமாம். மார்கழி மாச உற்சவத்திலே சதிர்க் கச்சேரி, ‘ஏன் பள்ளிகொண்டீர் அய்யா’ன்னு அபிநயம் பிடிப்பா."


பேஷ். மேலே சொல்லு. ரொம்பச் சுவாரசியமா இருக்கு."


அப்புறம் பங்குனி உத்சவத்திலே ரதத்து மேலே நின்னுண்டு வடம் புடிக்கிறவாளுக்கு உற்சாகம் பண்ணுவா.


அப்புறம் சேத்திம்போது தாயார் சன்னிதியிலே ஜிலுஜிலுன்னு வைர நகையெல்லாம் போட்டுண்டு வரிசையா நிப்பா...


இருபத்தி அஞ்சு வருஷங்களுக்கு முன்னாலே."


இப்ப அவங்கள்ளாம் என்ன ஆனாங்க?"


எல்லோரும் கிழவியாப் போயிட்டா."


ரெண்டு பேரும் சிரிச்சா, அதைச் சொல்லலை. அவங்க சந்ததி... அவங்க பேரப் புள்ளைங்க அவங்கள்ளாம்?"


அவங்கள்ளாம் படிச்சுட்டுக் கல்லூரிக்குப் போயிட்டு கல்யாணம் பண்ணிண்டு...


அந்தச் சம்பிரதாயமெல்லாம் மறைஞ்சு போச்சு. எல்லாரும் செயலா இருக்கா. தவில் வாசிச்சவன் புள்ளே கலெக்டரா இருக்கான்.


எல்லாம் மறைஞ்சு போச்சு."


இல்லை.... இன்னும் இருக்குன்னு கேள்விப்பட்டேன். உங்களுக்குத் தெரியாமல் இருக்குமா?"


உங்களுக்கு யாரோ தப்பாச் சொல்லியிருக்கா."


இல்லை... ஐயா" என்று இழுத்தான்.


பெருமாள் சேவிக்க வந்தவன் புத்தி போறதைப் பாரு - நான் யோசிச்சேன்.


தேவி டாக்கீஸுக்குப் போறப்போ ஒரு தடவை சந்திலே சுவத்திலே ‘இந்த இடத்துக்கு விபசார எண்ணத்துடன் வருபவர்களைக்


கண்டிப்பாய்ப் போலிசார் வசம் பிடித்துக் கொடுக்கப்படும்’ எழுதி இருந்தது ஞாபகம் வந்தது.


ஏதோ இருக்கு போலிருக்கு... கேட்டுண்டுதான் வந்திருக்கா."


சுவாமி எனக்கு அதெல்லாம் பத்தி ஒண்ணும் தெரியாது."


அவா ரெண்டு பேரும் இங்கிலீஷிலே பேசிண்டா. பொட்டை இங்கிலீஷ். எனக்குப் புரியாதா என்ன?


அவனுக்குத் தெரியும்; சொல்லமாட்டேங்கறான்"னு பேசிண்டா.


நான் பேசாமல் வந்தேன். கோயில் வாசலுக்கு வந்துட்டோம். அவன் விட மாட்டேங்கறான்.


துருவித் துருவிக் கேக்கறான். உங்க கோயிலைவிட, அந்த ஒய்சாள சிற்பங்களைவிடப் புராதனமானதய்யா


அந்தத் தொழில். அவ்வளவு சீக்கிரம் அழிஞ்சு போயிடுமா?"ங்கறான்.


இருக்கலாம். எனக்குத் தெரியாது"ன்னேன்.


உங்க பக்கத்திலேகூட இதெல்லாம் இந்த மாதிரி விஷயங்களாவே கேள்விப் பட்டிருக்கீங்களே"ன்னேன்.


நீங்க கேள்விப்பட்டதெல்லாம் இந்த மாதிரி விஷயங்களாவே கேள்விப்பட்டிருகீங்களே"ன்னேன்.


சிரிச்சுட்டு, தமாஷாப் பேசறே அய்யரே. சோடா சாப்பிடறயா?"ன் னான்.


வேண்டாம். சோடா எனக்கு ஒத்துக்காது."


கலர்"ன்னான். நான் கவனிக்கலை. என் மூத்தவ அலமேலு நின்னுண்டிருந்தா. என்னடி"ன்னேன்.


இல்லேப்பா... அம்மா அனுப்பிச்சா."


எதுக்கு?"


கோவாபரேட்டிவ் ஸ்டோரிலே நல்ல கோதுமையும் பச்சரிசியும் வந்திருக்காம்...


கார்டு கொடுத்தனுப்பிச்சு இருக்கா... உங்கிட்ட காசு வாங்கிண்டு போகச் சொன்னா..."


காசுமில்லே ஒண்ணுமில்லே. போ. ஆத்துக்குப் போ. நான் வரேன். வந்து பார்த்துக்கறேன்."


ரெண்டு ரூபா இருந்தாக்கூடப் போறும். அரிசியை மட்டும் எப்படியாவது வாங்கிண்டு வந்துடுன்னு..."


நீ போடி ஆத்துக்கு. நான் வரேன்... சொன்னாக் கேப்பியா? நின்னுண்டு தர்க்கம் பண்ணிண்டிருக்கா..."


எதுக்கோ அலமேலு மேலே கோவிச்சுண்டேன். வேறே யார் மேலே கோவிச்சுக்க முடியும்?


உன் டாட்டராய்யா அது?"


ஆமாம்."


எத்தனாவது படிக்கிறது?"


படிக்கலை"ன்னேன்.


சேச்சே. என்னய்யா பொண்ணுக்குக் கிழிசல் சட்டையைப் போட்டிருக்கியே?"


அவா ரெண்டு பேரும் காரிலே ஏறிண்டா. உனக்குத் தெரியும். சொல்ல மாட்டே?"


நான் வெறுமனே நின்னுண்டிருந்தேன்... அவன் பர்ஸைத் திறந்தான் மெதுவாக. கத்தை கத்தையா நோட்டு,


புதுநோட்டு. ஒண்ணை அதிலேயிருந்து அலட்சியமா உருவி, ‘இந்தா வெச்சுக்கோ. இது போதுமா?


மேலே ஏதாவது வேணுமா?"ன்னான்.


வேண்டாம் ஸ்வாமி. இதுவே அதிகம்."


சொல்லமாட்டே. நாங்களே கண்டுபிடிச்சுக்கறோம்."


கார் கிளம்பி ஆடி அசைஞ்சுண்டு போய்டுத்து...


என் கையிலே பத்து ரூபா நோட்டு. அதையே பார்த்துண்டு உட்கார்ந்துட்டேன்.


‘என்னடா சீமாச்சு. இன்னிக்கு நரி முகத்திலே விழிச்சியோ, முழுசாப் பத்து ரூபா நோட்டு.’


என் தகப்பனாரை நினைச்சுண்டேன். பாழும் பிராமணா, என்னை எல்லாரையும் போல படிக்க


வைச்சிருக்கக் கூடாதோ. ஒரு எஸ்.எஸ்.எல்.ஸி.யோ, பி.ஏ.வோ படிச்சிருப்பேனே.


படிச்சுப் பொன்மலையிலே கிளார்க்கு உத்தியோகம் கிடைச்சுருக்குமே.


தினம் மதிப்பா பையைத் தூக்கிண்டு குடுமியை உலர்த்திண்டு ஒன்பது மணி வண்டியிலே பாஸ் எடுத்துண்டு


ஆபீசுக்குப் போயிட்டுத் திரும்பி வந்திண்டிருக்கலாமே. என்ன ஓய் எனக்குச் செஞ்சீர் நீர்?


பாடசாலையிலே சேர்த்தீர். நாலாயிரம் குரு பரம்பரை, மார்க்கட் நியாயம் இதெல்லாம் வெச்சுண்டு


கோவாபரேட்டிவ் ஸ்டோரிலே கடன் சொல்ல முடியுமா?


‘பொண்ணுக்கு ரவிக்கை கிழிஞ்சிருக்கேடா’ங் கறான்.


விசிறி மடிப்பு மாதிரி நோட்டை வேணுன்னுட்டே எங்கிட்ட காட்டறான். ‘இது போதுமா? இன்னும் வேணுமா’ங்கறான்...


தாசி வீட்டுக்கு விலாசம் கேட்கறான். என்னைப் படிக்க வைச்சிருந்தா இந்த மாதிரி கேள்விகளுக்கெல்லாம்


பதில் சொல்லிண்டு சிரிச்சுண்டு அவா பின்னாலே நாய் மாதிரி அலைஞ்சுண்டு இருக்க வேண்டாமே?


எனக்கு ஸ்ரீரங்கநாதரை ஞாபகம் வந்தது. ஸ்வாமி, எனக்குப் பத்து ரூபாய் சம்பாதிச்சுக் கொடுத்துட்டீர்.


உம்மை வேண்டிண்டேன்... எனக்குக் காசு கிடைச்சுடுத்து...


ஓய், உம்ம காசு எனக்கு வேண்டாம். நீரே வெச்சுக்கும்." அந்தப் பத்து ரூபாயை உண்டியலிலேயே


சேர்த்துட்டுப் பேசாம ஆத்தைப் பாக்கப் பாடிண்டே கிளம்பிட்டேன்.


‘ஊரிலேன் காணியில்லை


உறவு மற்றொருவ ரில்லை


பாரில் நின் பாத மூலம்


பற்றிலேன் பரமமூர்த்தி


காரொளி வண்ணனே ஓ


கண்ணனே கதறுகின்றேன்


ஆருளர் களைகண் அம்மா


அரங்கமா நகருளானே!


<< Prev Page

No comments:

Post a Comment