Saturday 10 April 2021

SEEVALAPPERI, PANDI, HISTORY

 

SEEVALAPPERI PANDI HISTORY



சமீப காலமாக கதை பஞ்சத்தில் தமிழ் சினிமா இருப்பதாக தோன்றுகிறது. எல்லா இயக்குனரும் விவசாயத்தை காப்பாத்த வாட்சப்பை படிச்சுட்டு ஒடுறாங்க...

கடைசில அவங்களையே காப்பாத்தற நிலைமை வந்துடுது...

சீவலப்பேரி பாண்டின்னு ஒருத்தன் நெல்லைச்சீமையில் போலீசை மிரளவைத்தவன்...

அந்தப்பாண்டி கொலை செய்துவிட்டு அவனும் அவன் மனைவியும் வேறு ஒரு மலை கிராமத்தில் கொத்தனார் வேலை செய்து தங்கி இருக்கும் போது கை தவறி தன் மனைவியோடு சண்டையின் போது மனைவியையே கொன்றுவிடுகிறான். 

தன் குடிசை வீட்டின் தரைப்பகுதியில் புதைத்து விட்டு பல மாதங்கள் அதே வீட்டில் தான் வாழ்ந்தான்.

விருகம்பாக்கம் பகுதியில் தன் குடும்பத்தில் பதினொரு பேரை கொன்ற ஜெயப்பிரகாஷ் என்பவன் தான்கொலை செய்ய 'நூறாவது நாள்' என்கிற சினிமா தான் காரணம் என்று சொல்ல...படம் சூப்பர் ஹிட்டானது. அந்தப்படத்தை பார்த்து விட்டு கொலை செய்யக்கூடிய மோடிவ் எப்படி வந்தது எனத் தெரியவில்லை. ஆனால் அதில் சீவலப்பேரி பாண்டியின் அந்த டெக்னிக் தான் சொல்லப்பட்டது. 

நூறாவது நாள் படத்தில் நாயகன் கொலை செய்து விட்டு உடலை தன் பழைய பங்களா சுவரில் புதைத்து சிமெண்ட் வைத்து பூசி விடுவார். இதைப்பார்த்து செய்தேன் என ஜெயப்பிரகாஷ் பிணங்களை புதைத்தாலாவது நியாயம் இருக்கிறது. இதை ஒருத்தன் நூறாவது நாள் படம் பார்த்து செய்தான்...

அவன் ஆட்டோ சங்கர். தனக்கு பிடிக்காத கூட்டாளியை கொன்று தன் வீட்டு சுவர்களில் வைத்து பூசி விட்டான். அவனை சந்தேகித்த போலீஸ் அவன் வீட்டை இடித்த போது எலும்பு கூடுகளை கண்டு போலீசே ஸ்தம்பித்தது.

சமீபத்தில் வந்த த்ரிஷ்யம் படத்தில் கொலையை மறைக்க லால் உடலை போலீஸ் ஸ்டேஷனிலேயே புதைப்பார். ஆனால் இதெல்லாம் 70 காலத்தில் சின்ன சீவலப்பேரி பாண்டியே செய்தது தான். 

ஆனா அதை வச்சு த்ரிஷ்யம் படத்து கதை பண்ணி கோடிகள் எடுக்கும் திறமை தான் தேவை.....அது ஜித்துவிடம் ஒருந்தது...

வாசிப்பு....அதில் தான் நிறைய கதைக்கான ஐடியாக்கள் கிடைக்கும்...

வாசிப்பது ஒரு சுகம்....

நல்ல வாசிப்பாளன் நல்ல மேக்கராகிறான்....

நீங்கள் வாசிக்கிறீர்கள் தானே....?


#செல்வன் அன்பு




சீவலப்பேரி பாண்டி

 9/20/2019 08:11:00 AM

கோவை வந்த பிறகு பயணங்கள் அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது. யாராவது அழைக்கும் போது சுற்றிக் கொண்டிருக்கும் ஊரைச் சொல்வேன். பெரும்பாலும் ‘எப்படி முடிகிறது?’என்கிறார்கள். உடல் ஒத்துழைக்கிறது. அது வரைக்கும் பயணிக்க வாய்ப்பிருக்கும் இடங்களுக்கெல்லாம் சென்றுவிட வேண்டும். வெளி மாநிலங்கள், அந்நிய தேசம் என்றெல்லாம் கனவுகள் இல்லை. தமிழகத்தின் கிராமங்களைப் பார்த்துவிட வேண்டும். அதில் நிறைய சுவாரசியங்கள் இருக்கின்றன. 


முடிந்தவரை இரவுப்பயணங்களைத் தவிர்த்துவிடுகிறேன். தூக்கம் கெட்டால்தான் உடல் கெடும். அதிகாலை கிளம்பினால் அந்தி சாய்வதற்குள் சென்றுவிடுவேன். பகல் நேரப் பயணம் வாசிக்க வாய்ப்பை உருவாக்குகிறது. பெரும்பாலும் ஏதாவது ஓர் இலக்கு இருக்கும். வரலாறு, பண்பாடு, இலக்கியம் - இப்படித்தான் என்றில்லை. ஏதாவது.


திருநெல்வேலி பயணத்தில் சீவலப்பேரிக்குச் சென்றிருந்தேன். எண்பதுகளில் பிறந்தவர்களுக்கு தொண்ணூறுகளில் வெளியான சீவலப்பேரி பாண்டி என்ற படத்தின் வழியாக அறிமுகமான பெயர். பாண்டியுடன் இருந்த யாராவது ஒரு முதியவரைச் சந்தித்து பேச வேண்டும் என்பதுதான் திருநெல்வேலிப் பயணத்தின் இலக்கு. நிச்சயமாக இருப்பார்கள் என்கிற நம்பிக்கையும் இருந்தது.


இதை யாரிடமாவது சொன்னால் ‘அந்தாளு ரவுடி’ ‘அந்தாளு ஹீரோ’ ‘மிகைப்படுத்தப்பட்ட கதை’ என்றெல்லாம் ஏதாவதொரு, தமக்குத் தெரிந்த ஒன்றைச் சொல்வார்கள். அதனால் கமுக்கமாக எந்த முன்முடிவுமில்லாமல் அந்த ஊரைப் பார்த்துவிட வேண்டும். இன்னொரு முக்கியமான விஷயம்- இரு சக்கர வாகனத்தை யாரிடமாவது இரவல் பெற்றுக் கொள்வேன். ஒரு ஊரை நினைத்துக் கொண்டு கிளம்பும் போது இடையில் வேறொரு அற்புதமான ஊர்களைப் பார்க்கக் கிடைக்கும். தாராசுரம் கோவிலுக்கு எனச் சென்று எதிரில் ஒட்டக்கூத்தரின் சமாதியைப் பார்த்த பிறகிலிருந்து இப்படித்தான். இருசக்கர வாகனப் பயணம்தான் புதிய திறப்புகளைக் காட்டும்.


மதுரையைச் சுற்றிய ஊர்கள் என்றால் பைக் வாடகைக்கு கிடைக்கும். ராஜன் என்றொருவர் இருக்கிறார். இரண்டு மணி நேரம் முன்பு அழைத்தால் போதும். மதுரையில் எந்த இடமென்றாலும் கொண்டு வந்து கொடுத்துவிடுவார். சலிக்கச் சுற்றிவிட்டு மீண்டும் அழைத்தால் எந்த இடம் என்றாலும் வந்து வாங்கிக் கொள்வார். இப்படி ஒவ்வொரு ஊரைச் சுற்றுவதற்கும் வழிகளைக் கண்டறிந்து வைத்திருக்கிறேன். நண்பர்கள் இருக்கிறார்கள். அப்படித்தான் சுற்றித் திரிகிறேன்.




பாண்டித்தேவர்- உள்ளூரில் யாரும் ‘பாண்டி’ என்பதில்லை. பாண்டித்தேவர்தான். அவரின் வரலாறு எனக்கு இன்னமும் முழுமையாகத் தெரியாது. எப்பொழுதோ சீவலப்பேரி பாண்டி படத்தைப் பார்த்திருக்கிறேன். க்ளைமாக்ஸ் காட்சியைத் தவிர எதுவும் நினைவில் இல்லை. பார்க்கவும் போவதில்லை. மறைந்த எழுத்தாளர் செளபா எழுதிய பாண்டியின் வரலாறு விகடன் பிரசுரத்தில் கிடைக்கும். படிக்கப் போவதில்லை. நாமாக ஒரு கதையைக் கண்டறிவோம் என்றுதான் பயணத்தை மேற்கொண்டேன். தெரியாத்தனமாக களக்காட்டுக்கு அருகில் இருக்கும் சீவலப்பேரி என்ற கிராமத்துக்குச் சென்றுவிட்டேன். அங்கு விசாரித்த போதுதான் அது பாளையங்கோட்டைக்கு அருகில் இருக்கும் வேறொரு சீவலப்பேரி என்றார்கள். தவறொன்றுமில்லை- களக்காடும் அதன் சுற்றுப்புறமும் அதியற்புதமான இடம். 


பாண்டியின் சீவலப்பேரிக்கு வழிகாட்டினார்கள். தாமிரபரணி ஆற்றைக் கடந்து செல்ல இப்பொழுது பாலம் இருக்கிறது. ஆற்றுக்கு அந்தப் பக்கம் சீவலப்பேரி. ‘பாண்டித்தேவன் கோட்டை’ என்று பேருந்து நிறுத்தத்தில் எழுதி வைத்திருக்கிறார்கள். பேருந்து நிறுத்தத்திற்கு நேர் சந்தில் மூன்றாவது வீடு சீவலப்பேரி பாண்டியின் வீடு. அவருக்கு நேரடி வாரிசுகள் இல்லை. அவருடைய அண்ணன் வாரிசுகள் இப்பொழுது அங்கே குடியிருப்பதாகச் சொன்னார்கள்.  ‘பாண்டியைப் பற்றித் தெரிஞ்சவங்க யாராவது இருக்காங்களா?’ என்று கேட்டால் எல்லோருமே சொல்லி வைத்தாற்போல ‘என்ன தெரிஞ்சுக்கணும்?’ என்கிறார்கள். உள்ளூரில் அவரது கதையை எல்லோருமே தெரிந்து வைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு பாண்டித்தேவன் ஒரு சரித்திர நாயகன்.


பாண்டியுடன் சிறையிலிருந்த முண்டத் தேவர் டீக்கடையில் இருப்பார்கள் என்றார்கள். அவ்வூரில் இரண்டு மூன்று டீக்கடைகள்தான் இருக்கும். ஒரு கடையில் விசாரித்த போது ஒருவர் ‘வாங்க நான் கூட்டிட்டு போறேன்’ என்று அழைத்துச் சென்றவர் முண்டத் தேவர், முருகத் தேவர், பாண்டித் தேவர் மூன்று பேரின் கதைகளைச் சொல்லிக் கொண்டே வந்தார். அவர்கள் மூன்று பேரும்தான் சுப்பிரமணிய பிள்ளையைக் கொன்ற வழக்கில் முக்கியக் குற்றவாளிகள். அந்த மனிதர் உள்ளூரில் பெரிய மனிதர். ஆற்றைக் கடக்கும் போது வெட்டிச் சாய்த்துவிட்டார்கள். அந்த வழக்கின் தண்டனையிலிருந்து தப்பி வந்த பாண்டித்தேவன் உள்ளூரில் ‘ராபின் ஹூட்’ ஆன போது சுற்றுவட்டாரத்தில் மிகப் பிரசித்தி பெற்ற கதையாகிவிட்டது. 


முண்டத் தேவர், பாண்டியின் சித்தப்பா மகன். அவரது பூர்விக வீட்டிலிருந்து சற்று தள்ளியிருக்கும் மகன் வீட்டில் அவர் இருப்பதாகச் சொன்னார்கள். பத்து நாட்கள் முன்புவரை பழைய மிடுக்குடன் இருந்ததாகவும் தற்போது உடல்நிலை சரியில்லை என்றும் சொன்னார்கள். வெற்றுடம்போடு, மீசையைத் தடவிக் கொண்டு ‘எந்த ஊரு?’ என்றார். சொன்னேன். அவரால் அதிகம் பேச முடியவில்லை. மூச்சு வாங்கியது. அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆட்டோ வந்திருந்தது. ஒரு பக்கம் கையைப் பிடித்துக் கொண்டேன். ஆட்டோவில் ஏறினார்.  ‘உடம்பு சரியாகட்டும்; வருகிறேன்’ என்று சொல்லிவிட்டுக் கிளம்பி வந்துவிட்டேன். தோன்றும் போது கிளம்பிச் செல்வேன். 


பேருந்து நிறுத்தத்தில் பாண்டியின் படத்தோடு நடிகர் முத்துராமன் படத்தை வைத்திருந்தார்கள். ‘என்ன விஷயமா தேவரை பார்க்க வந்தீக? சினிமா கதைக்கா?’ என்று யாரோ ஒருவர் கேட்டார். இல்லையென்று தலையாட்டினேன்.  ‘பொறவு?’ என்றார். ‘சும்மா தெரிஞ்சுக்கலாம்ன்னு வந்தேன்’ என்று சொன்னதை அவர் நம்புவதாகத் தெரியவில்லை. பெரும்பாலானவர்கள் நம்ப மாட்டார்கள். ஆனால் இப்படி தனிமனிதக் கதைகளில்தான் அதீத சுவாரசியம் இருப்பதாக உணர்கிறேன். அந்தக் கதைகளுக்குத்தான் ஏகப்பட்ட பரிணாமங்கள் உண்டு. ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியாகச் சொல்வார்கள். ‘அந்த மனுஷனை பாண்டியும் கூட்டாளிவளும் இருவத்திரெண்டு துண்டா வெட்டி போட்டாங்க..தெரியுமா?’ என்றார் ஒருவர். அது உண்மையா என்று தெரியாது.


‘தனாபினாசோனா ராம்சேட்டு மகன் அரிராம்சேட்டும் பாண்டியும் தோஸ்து. சேட்டு ரூவாநோட்டை எரிச்சு பாண்டிக்கு ரொட்டி சுட்டுக் கொடுத்தாராம்’ என்று ஒரு கதையைச் சொன்னார்கள். அரிராம்சேட் முக்கூடல் என்னும் ஊரைச் சார்ந்தவர். த.பி.சொக்கலால் ராம்சேட் பீடி கம்பெனியின் அதிபர் ராம்சேட்டின் மகன். அப்பா காலத்திலேயே அளவு கடந்த சொத்து. எவ்வளவுதான் சொத்து இருந்தாலும் அடுப்பை எரிக்க ரூபாய் நோட்டை பயன்படுத்துவார்களா என்று கேள்வி கேட்கத் தோன்றும். ஆனால் அவர் செய்யக் கூடிய ஆள்தான். ஹபீப்ராஜா என்ற யானைக்கு பாதங்களில் முள் ஏறிவிடும் என்று பூட்ஸ் தைத்துக் கொடுத்த வரலாறெல்லாம் சேட்டுக்கு உண்டு என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். பாண்டியுடனான நட்பும் கூட உண்மையா என்று தெரியாது. ஆனால் பாண்டித்தேவரை தேடிச் சென்றால் அரிராம் சேட்டின் கதை கிடைக்கிறது. ஒரு நாள் முக்கூடல் செல்ல வேண்டியதுதான். 



பாண்டித் தேவர் இன்றைய சீவலப்பேரிக்கான அடையாளம். அவரை அந்தப்பகுதி இளைஞர்கள் தமக்கான சின்னமாக மாற்றியிருக்கிறார்கள். சாதிப்பற்று ஊறிக் கிடக்கிறது. சீவலப்பேரிக்குச் செல்லும் வழியில் பர்கிட்மாநகரம் என்றொரு ஊர் பள்ளி மாணவன் கை நீட்டினான். வண்டியில் ஏற்றிக் கொண்டேன். அவன் சீவலப்பேரிக்காரன்.  ‘பாண்டி உங்க ஊர்க்காரரா?’ என்று கேட்டால் அவனுக்கு வெகு பெருமை. ‘உங்களுக்கு ஆகாத சாதி என்ன?’ என்று கேட்டால் அடுத்த கணமே பதில் சொல்கிறான். ஏழாவது படிக்கிறானாம். முத்துராமனும், பாண்டியும், பசும்பொன் முத்துராமலிங்கமும், கருணாஸூம் எவ்வாறு ஒன்றாகிறார்கள்? எல்லோருக்குமே தெரிந்த பதில்தான். இங்கே எதையும் மாற்றிவிட முடியாது. கேள்வி கேட்பதும் சாத்தியமில்லை. ஆனால் இதையெல்லாம் புரிந்து கொள்வதுதானே தமிழகத்தைப் புரிந்து கொள்வது என்பது? அதற்காகவே வெகு உற்சாகமாகச் சுற்றிக் கொண்டேயிருக்கிறேன். 




இவர் தான் உண்மையான சீவலப்பேரி பாண்டி.

1984ல் ஏப்ரல் மாதம் இவர் சுட்டு கொல்லப்பட்ட சில மணி நேரத்திற்கு முன் எடுக்கப்பட்ட புகைப்படம்.

No comments:

Post a Comment