சென்னை பூவிருந்தவல்லியை அடுத்த காரம்பாக்கம் என்னும் சிற்றூரில் 1912-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4-ஆம் தேதி கா.கிருஷ்ணையர் வேங்கசுப்பம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார் வேங்கடராமையா. இவரது தாய்மொழி தெலுங்கு ஆகும்.

சென்னை லயோலா கல்லூரியில் இளங்கலை பொருளாதாரம் படித்தார். செங்கல்பட்டிலுள்ள தூய கொலம்பா உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்தார். பின்னர், தமிழ் மீது ஆர்வம் கொண்டு பி.ஓ.எல் படித்து தேர்ச்சி பெற்றார். ஆங்கிலத்தில் முதுகலைத் தேர்விலும் வென்றார்.

திருப்பனந்தாள் காசிமடச் செந்தமிழ்க் கல்லூரியில் முதல்வராக 1947 முதல் 1972வரை இருபத்தைந்து ஆண்டுகள் பணியாற்றினார்.

மேனாள் தமிழக ஆளுநர் கே.கே.ஷா தொடங்கிய தமிழ், சமஸ்கிருதம் மற்றும் இந்திய மொழிகள் ஆய்வு நிறுவனத்தில் மூன்று ஆண்டுகள் ஆராய்ச்சியாளராக இருந்தார். அங்கிருந்த காலத்தில், பன்மொழி இலக்கண ஒப்பீட்டு ஆய்வுளைச் செய்து வந்தார். அதன் பின்னர் அண்ணாமலைப் பல்கலைக்கழத்தில் திருக்குறள் இருக்கையில் மூன்று ஆண்டுகள் ஆராய்ச்சியாளராகப் பணியாற்றினார்.


தஞ்சை தமிழ்ப் பல்லைக்கழகம் 1981-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அப்பல்கலைக்கழகம் தொடங்கியபோது அரிய கையெழுத்துச் சுவடித்துறையின் முதல் தலைவராகப் பொறுப்பேற்று, ஏறத்தாழ ஐந்து ஆண்டுகள் பணியாற்றினார். நிறைவாகத் திருவனந்தபுரத்தில் உள்ள பன்னாட்டுத் திராவிட மொழியியல் கழகத்தில் பணிபுரிந்தார்.

வேங்கடராமையா தமிழுக்கும், சமயத்திற்கும் ஆற்றிய பணிகள் ஏராளம், ‘ஆய்வுப்பேழை’, ‘கல்வெட்டில் தேவார மூவர்’, ‘இலக்கியக் கேணி’, ‘கல்லெழுத்துக்களில் சோழர் கால அரசியல் தலைவர்கள்’, ‘திருக்குறள் உரைக்கொத்து’, ‘திருமுருகாற்றுப்படை உரைக்கொத்து’ ‘திருக்குறள் குறிப்புரை’, ‘பன்னிரு திருமுறைப்பதிப்பு’, ‘கந்தபுராணம் பதிப்பு’, ‘திருவிளையாடற்புராணப் பதிப்பு’, ‘தஞ்சை மராட்டியர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்’, ‘தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு’, சிவனருள் திரட்டு’ ‘தஞ்சை மராட்டிய மன்னர் கால மோடி ஆவணமும், தமிழாக்கமும்’, ‘திருக்குறள் பரிப்பெருமாள் உரையும், ஆய்வுரையும்’, ‘திருக்குறளும் - நாலாயிர திவ்வியப் பிரபந்தமும்’, ‘மும்மொழி வெண்பாக்களில் நாயன்மார் வரலாறு’, ‘பெரிய புராணமும் - திருக்குறளும்’, ‘திருக்குறள் சமணர் உரை’ முதலிய பல நூல்களை எழுதியும், பதிப்பித்தும் தமிழுலகுக்கு அளித்துள்ளார்.


‘திருமுறைகளுக்கு உரை எழுதினால் இறந்துவிடுவார்கள் என்று மக்கள் நம்பிக்கை கொண்டிருந்த காலத்தில், 1949-ஆம் ஆண்டு காரைக்கால் அம்மையார் எழுதிய ‘அற்புதத் திருவந்தாதிக்குக் குறிப்புரை எழுதிப் பதிப்பித்தார். இந்நூல் தான் அவர் பதிப்பித்த முதல் நூல். காசித் திருமடத்தின் வெளியீடாக வந்தது. இவர் பதிப்பித்த நூல்களில் நூலாசிரியரின் வரலாறு, நூல் பற்றிய செய்திகள், கல்வெட்டில் ஏதேனும் குறிப்புகள் முதலியவற்றை குறிப்பிட்டிருப்பது சிறப்பு.

தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தின் மூலமாகத் திருக்குறளுக்குச் சமணர் எழுதிய உரையைப் பதிப்பித்தார். இவர் எழுதிய நூல்களிலும், கட்டுரைகளிலும் முன்பு எவரும் எழுதாத செய்திகளையே அளித்துள்ளார் .