Thursday 15 April 2021

V.O.CHIDAMBARAM PILLAI - NAMAKKAL KAVIGNAR

 




வ.உ.சி.150 நினைவலைகள் 

( பதிவு எண் 5/150)

குலவுப் பிள்ளைச் சிதம்பரம்

நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை



1944 ல் வெளியாகிய நாமக்கல் இராமலிங்கம் பிள்ளையின் “என் கதை” சுயசரிதை தமிழின் ஆகச் சிறந்த மூன்று சுய சரிதைகளுள் அடங்கும். சுமார் 76  வருடங்களுக்கு முன்பாக வந்த ” என்கதை” யில் வரும் காலம், பாத்திரங்கள் பழையதாகி விடவில்லை. அவர் வாழ்ந்த காலத்து நிகழ்வுகளை, நண்பர்களை, தேசிய தலைவர்களை இதில் உயிர்ப்புடன் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 


அதில் பெரியவர் வ.உ.சி. குறித்து கிலாபாத் சிறப்பு இரயில் வண்டியில் காந்தியடிகளை ஆதரிக்க பல உறுப்பினர்ளும், திலகர் அணியின் முக்கிய பிரதிநிதியாக வ.உ.சி, சிவா முதலானவர்களும் இந்த ரயிலில் பயணிக்கும் அனுபவ பதிவும் வரலாற்று முக்கியத்துவமானது.




பெரியவர் வ.உ.சி. யும்,சிவாவும் காந்தியை ஆதரிக்கக்  கூடாது என நம் நாட்டு ஒவ்வொரு பிரதிநிதியிடமும்  இரயில் பெட்டியில் பிரச்சாரம் செய்து வந்தனராம்.  காந்தியின் சாத்வீக வழியை ஏற்றுக் கொண்டால்  நாடு முழுவதும் வீரியமற்று கோழையாக ஆகிவிடுவீர்கள் என்று அறிவுறுத்திய போது வரதராஜ முதலியார்  பெரியவர் வ.உ.சியின் மீது கோபப்பட்டு தரக்குறைவாக அவமதித்து பேசினாராம்.


ஆனால் அந்த வரதராஜ முதலியாருக்கு வ.உ.சி. ஆங்கிலேயர்களை எதிர்த்து  கப்பல் விட்டார் என்ற  சேதி கூடத் தெரியாத தமிழக காந்திய பக்தர் போலும்.  அடிதடியில் இறங்கும் அளவிற்கு வ.உ.சி.யிடம் சண்டையிட்டுக் கொண்டதை கண்ட மற்ற தேச பக்தர்களுக்கு வரதராஜ முதலியாரின் செயல் உடன்பாடானதாக இல்லை. 


பின்பு  நாகராஜன்  ஐயங்கார், நாமக்கல் இராமலிங்கமும்  சேர்ந்து  வரதராஜ முதலியாரிடம்  தமிழகத்தின் தவப்புதல்வர் ஒருவரான பெரியவர் வ.உ.சி.யிடம் அப்படி அவமதிப்பது போல் நடந்து கொண்டது  மகாபாதகம்,  அது வரை அறியாத வ.உ.சி.யின் அருமை பெருமைகளை எல்லாம் எடுத்துக்  கூற வரதராஜ  முதலியார் வெட்கித் தலை குனிந்தாராம். பின்பு நேரிடையாக பெரியவர் வ.உ.சி.யைக் கண்டு கை கூப்பி என்னை மன்னித்து விடுங்கள் என்று கண்ணீர் மல்க வருத்தம் தெரிவிக்க, அப்படியே பெரியவர் வ.உ.சி.  முதலியாரை கட்டித் தழுவி கண்ணீர் கலங்க தேற்றி விட்டாராம்.


இதிலிருந்து இரு செய்தி என்னவெனில் 1912 சிறையில் இருந்து வந்த   பிறகு ஒரு சிலகாந்திய பக்தர்களுக்கு வ.உ.சி.யை யார் எனத் தெரியாமலே இருந்திருக்கிறது என்று இவரது என் கதை சரித்திரம் மூலம் தெரிய வருகிறது.


அதே போன்று நாமக்கல் இராமலிங்கம் பிள்ளையின் “தேச பக்தர் மூவர்” நூலில் பெரியவர் வ.உ.சி. காரக்பூர் ரயில் நிலையத்தில் தான் பயணித்த இரயில் வண்டியை நீண்ட நேரம் காத்திருக்க வைத்து, அதன் பின்னால் வரும் இரயில் வண்டியை விடுவிக்க இரயில்வே நிர்வாகம் எண்ணிய போது வடநாடாக இருப்பினும் உடனடியாக இரயில் தண்டவாளத்தில் போய் படுத்து தடுப்பேன் என சிங்கமாய் கர்சித்து அத்தனை நபர்களையும் தன் வசமாக்கி வீரத் தமிழ்த் தலைவனாக  கர்ச்சிப்பதையும் ஆவணப்படுத்தியிருப்பார்.


நாமக்கல்லாரின் மாணிக்க வரிகள் மூலமாக எழுதப்பட்ட இக் கவிதையில் பெரியவருடைய தேசபக்தி யாவருடனும் ஒப்பிட முடியாதது.  தொழிற் சங்கத்துக்கு வித்திட்ட மூத்த தேசபக்தர். கள்ளம் கபடம் இல்லாத கறுப்புத்  தங்கம் ,  சொல்லொண்ண முடியாத சிறைக் கம்பியில் பட்ட  துயர வாழ்க்கையை மனம் இறுகச் செய்யும் துயரவரிகள் நம்மை மனம் கரைந்து விடச் செய்கிறது.


பேசிவிட்டே சுயராஜ்யம் பெறலாம் என்று

 பெரிய பல தீர்மானக் கோவை செய்து

காசு பணப் பெருமையினால் தலைவ  ராகிக்

 காங்கிரசை நடத்தியது கண்டு நொந்து

‘தேச நலம் தியாகமின்றி  வருமோ?’ என்று

 திலகர் பிரான் செய்த பெருங் கிளர்ச்சி சேர்ந்தே

ஓசைபடா துழைத்த சில பெரியோர் தம்முன்

 உண்மை மிக்க சிதம்பரனும் ஒருவ னாகும்.


உழுது பல தொழில் செய்தே உழைப்போ ரெல்லாம்

 உணவும் உடை வீடின்றி உருகி வாடப்

பழுது மிக அன்னியர்க்குத் தரக ராகிப் 

 பசப்புகின்ற வீணருக்கோ சுகங்கள்! என்றே

அழுதுருகித் தொழிலாளர் இயக்கம்  கண்டே

 அந் நாளில் சிதம்பரன் முன் நட்ட  வித்தாம்

விழுதுபல விட்ட பெரு மரமாய் இன்று

 வெவ்வேறு கிளைகளுடன் விளங்கக் காண்போம்.


கள்ளமற்றுக் கலகலத்த பேச்சுக் கேட்கும்

 கறுப்பெனினும் சிரிப்பு முகம் கருணை காட்டும்

குள்ளமென்னும் ஓர் உருவம் இருகை கூப்பிக்

 குண்டெடுத்து கடைந்ததெனக் குலுங்க  நிற்கும்

வெள்ளையன்றி வேறு நிறம் அறியா ஆடை

 வேதாந்த சித்தாந்த ஒளியே வீசும்;

கொள்ளை கொள்ளை சிறையிருந்த குறிகள் தோன்றும்

 குலவு பிள்ளைச் சிதம்பரத்தை நினைவு கூர்ந்தால்.


எல்லாரும் தேசபக்தர் இந்த நாளில்

 எத்தனையோ சிறைவாசம் இனிதாய்க் காண்போர்

சொல்லாலும் எழுத்தாலும் விளக்க  வொண்ணாத்

 துன்பமெல்லாம் சிறைவாசம் அந்த நாளில்

வல்லாளன் சிதம்பரனார் சிறையிற் பட்ட

 வருத்தமெல்லாம் விரித்துரைத்தால் வாய் விட் டேங்கிக்

கல்லான மனத்தவர்க்கும்  கண்ணீர் கொட்டக்

 கனல் பட்ட வெண்ணெயெனக்  கரைவார் இன்றும்”

No comments:

Post a Comment