Wednesday 14 April 2021

CHIDAMBARAM PILLAI AND BHARATHIDASAN + VETRILAI

 


CHIDAMBARAM PILLAI AND BHARATHIDASAN

+ VETRILAI

வ.உ.சி. 150. நினைவலைகள் ( பதிவு எண். 3/150)


பாவேந்தரின் புரட்சி வரிகளில் பெரியவர் மானவீரன் சிதம்பரன்



மகாகவி பாரதிக்கும் பெரியவர் வ.உ.சி.க்கும் இருந்த நெருங்கிய தொடர்பு புரட்சி கவிஞர் பாரதிதாசனுக்கும் பெரியவருக்கும் ஏற்படவில்லை. ஆனால் பெரியவருடைய மிகச் சிறந்த சீடராக விளங்கிய மானமிகு வீரர் மாடசாமி பிள்ளைக்கும் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனுக்கும் மிக நெருங்கிய உறவு  இருந்துள்ளது. கலெக்டர் ஆஷ் கொலையுண்ட பிறகு மாடசாமி தப்பித்து புதுச்சேரி வந்து தஞ்சமடைந்த வேளையில் பாரதியின் ஆணைக்கிணங்க மாடசாமிபிள்ளைக்கு இசுலாமியர் தோற்றத்தில் மாடசாமி பிள்ளையை மாறு வேடமணிந்து கடலூரிலிருந்து கட்டுமரத்தில் பாரதிதாசன் மாடசாமி பிள்ளையை நடு இரவில் அழைத்துச் சென்று பத்திரமாக சைகோன் செல்லும் கப்பலில் ஏற்றிவிட்டவர் பாரதிதாசன். பின்பு மறுநாள் இரவே பாரதிதாசன் கரை வந்து சேருகிறார். இதனை பாரதிதாசன் கீழ்க் கண்டவாறு கவிதையில் குறிப்பிடுவார்.


“திலகர் செய்த உரிமைக் கிளர்ச்சியால்

கொலை முதற் பற்பல குற்றம் சுமந்த 

மாசிலா மனத்து மாடசாமியும்

அன்புறு பாரதி, அரவிந்தர் முதல்

வன்முறை யுடையராய் வருந்துவார்க்கு உதவியாய்ப்

பன்முறை புதுவையில் செத்துப் பிழைத்தேன்”


என்று குறிப்பிடுகிறார். 



இந்த பாரதிதாசன் பெரியவர் வ.உ.சி.யின் வீர வரலாற்றை தனது ஆக்ரோசமிக்க வரிகளால் புகழாரம் சூட்டியுள்ளார். இதோ கீழ்க் கண்ட கவிதை.


நாட்டுக்குத் தொண்டு நமக்கு மகிழ்ச்சி

நடக்கட்டும் போர் என்றான் வாழ்க சிதம்பரன் பேர்

கேட்டுக்கும் வெள்ளையர் நீட்டுக்கும் துப்பாக்கி 

வேட்டுக்கும் நெஞ்சிறைக்கும் வீட்டுக்கும் அஞ்சாமல் 


வீட்டுக்கு வீடு விளக்கேற்றினான் எங்கும்

விடுதலை உணர்ச்சியை உண்டாக்கினான்

கூட்டுத் தொழில்களும் ஆக்க வேலைகளும்

குற்ற மென்று சொன்ன கொடியர்க்கும் அஞ்சாமல் 


கண்டா விளைச்சல்கள் தங்கச் சுரங்கங்கள்

அண்டும் பெருநாடே எங்கள் உடமையென்று

தண்டோரா போட்ட தமிழன் அவனையே

தாக்க முயன்ற தக்கைகட்கு அஞ்சாமல் (நாட்டுக்கு)


ஒப்போம் அயல்நாட்டு உடைமைகள் என்றான்

உரிமை எவற்றிலும் எமக்கென்று சொன்னான்

கப்பல் கட்டி ஓட்டினான் வெள்ளையர் செக்கிழுக்க வைத்தான்

அந்த கேட்டிலும் 


இதே போன்று புகழ்மலர்கள் என்ற தலைப்பிலும் மானவீரன் சிதம்பரன் என்ற கவிதையும் படைத்துள்ளார் புரட்சிக் கவிஞர்.


“வெள்ளையன் கப்பலாலே,

விரிந்த இந்நாட்டின் செல்வம்

கொள்ளை கொண்டு ஓடல் கண்டு

கொதிப்புற்ற சிதம்பரன் பேர்,

பிள்ளை தன் பேரூக்கத்தால்,

பிழைக்க வந்து அடிமை கொண்ட

நொள்ளையர் மாயச் செய்தான்!

நோன்மை சேர் கப்பல் விட்டான்!


கடல் பிறகோட்டிச் சென்ற

கால்வழி வந்த எங்கள்

அடல்மிகு விடுதலைப் போர்

அரிமாக்கள் ஆயிரத்தை

தடந்தோளில் நெஞ்சில் சேர்த்த

தமிழனை நினைக்கும் வெள்ளைக்

குடலெல்லாம் கலங்கும் தூத்துக்

குடியதன் குடிமை காத்தான்


இந்திய தலைவர் எல்லாம்

இந்திய வீரர் எல்லாம்

செந்தமிழ் சிதம்பரத்தின்

செந்தலை சிந்தனைக்கே

முந்தித்தம் செவி கொடுப்பார்

முடிவினை எடுப்பார் வெல்வார்

அந்தமிழ்ப் பாரதிக்கும்

அவனன்றோ அரிய அம்மான்


பகைவனைப் பரங்கிப் பேயைப்

பாரத நாட்டிருந்து,

தகைப்பதும், உரிமை நாட்டில்

தலை நிமிர்ந்து உயர்ந்து வாழ்தல்,

வகையென வேங்கை ஆகி,

வடக்கொடு தெற்கு அனைத்தும்

தொகை தொகை மறவர் கூட்டம்

தொகுத்தனன் வெடிமருந்தாய்!

விடுதலை மறவனுக்கு

வெள்ளையர் சுரண்டல் கூட்டம்

கெடுதலை கோடி தந்தார்!

உலகினை கெடுக்க வந்தார்!

படுகொலை வழக்கு நூறு,

கொடுதலை என்றார்! வீரச்

சிறுத்தை கோழை ஆகும்?!”


இவ்வாறு எழுதிய புரட்சிக் கவிஞர் “விடியா விடுதலை விடிவதெந்நாள்” என்ற கவிதையில் பின்வருமாறு படைத்துள்ளார்.


புரட்சிக் கவிஞர் விடுதலைப் போரில் தங்களை இழந்தவர்கள் பட்டியலில் கூட தலையாய நபராக பெரியவர் வ.உ.சி.யை முதலில் குறிப்பிட்டு பின்னர் பலரும் தன் உயிரை எண்ணாது கடமையை ஆற்றியவர்கள் என்று குறிப்பிடுகிறார்.


 ஆயிரமாயிரம்  பேரை இழந்து பெற்ற விடுதலை மதிப்பை தெரியாது விடுதலைக்குப் பின்பு என்னவெல்லாம் நிகழும் என்பதயும் தீர்க்க தரிசனமாக கணித்துள்ள புரட்சிக் கவிஞரின் வரிகள் இன்று நம்மிடையே நிதர்சனமாகியிருக்கிறதல்லவா!




வ.உ.சி. 150.நினைவலைகள் (பதிவு எண். 8/150)


வெற்றிலை தாம்பூலம் தரிக்கும் மெய்யறிவு பாட்டு


1934 ம் ஆண்டு பெரியவர் வ.உ.சி. தனது அத்யந்த நண்பர் தில்லையாடி வேதியப்பன் பிள்ளை அவர்களுக்கு கடிதம் எழுதுகையில் ”எனது வக்கீல் வரும்படி வெற்றிலை பாக்கு செலவுக்கு போதும்” என்று குறிப்பிட்டு  எழுதியுள்ளார். வெற்றிலை பாக்கு செலவுக்கு மட்டுமே வருமானம் வக்கீல் தொழில் மூலம் வருகிறது என்பதை தெரிவித்து விட்டு எந்த வகையான வியாபாரம் செய்வதற்கும் இது நல்ல காலம் அன்று என்றும் தெரிவிக்கிறார்.


பெரியவர் வ.உ.சி. வெற்றிலை பாக்கு தாம்பூலம் தரிப்பவர் என்று இதன் மூலம் அறிய முடிகிறது.  கண்ணனூர் சிறையில் வசித்த காலத்தில்  தன்னுடன் இருந்த பல்வேறு குற்றவாளிகளை ஆற்றுப்படுத்த வேண்டி அறம் ,பொருள், வீடு  மூன்றையும் வலியுறுத்தி சில பாடல்களால்  இம்மையிலும் மறுமையிலும் விளையும் கேடுகளை வலியுறுத்தும் பாடல்களாக குற்றவாளிகளை திருத்த பாடிய தொகுப்பு நூலே  மெய்யறிவு .


இந்த மெய்யறிவு நூலில் “ உடம்பை வளர்த்தல்” பகுதியில் வெற்றிலை எப்படி தரிக்க வேண்டும் என்று பாடிய பாடல் இதோ;


மதியம் வருமுன்னர் வாழ் நீர் குளித்துப்

புதியகறி நெய் தயிர் நெற்பொங்கல் – பசியளவிற்

குண்டிருந்து வெற்றிலைபாக் கூறு நீர் மூன்றருந்திக்

கண்டிருப்பாய் வேலை களை.


பகல் பதினைந்து நாழிகைக்கு முன்பாக சுத்தமான நீரில் குளித்துவிட்டு, புதிதாக சமைக்கப்பட்ட பச்சரிசி சாதத்தை புதிதாகச் செய்யப்பட்ட  கறிகளோடும், புதிதாக உருக்கப்பட்ட நெய்யினையும், முதல் நாள் பாலில் உறைய வைக்கப்பட்ட தயிரோடும் சேர்ந்து உண்ண வேண்டும்.


பின்பு ஆற அமர்ந்து திண்ணையில்  பக்குவமாக உட்கார்ந்து வெற்றிலை  பாக்கு முதலியவற்றை சுவைக்க வேண்டும்.  வெற்றிலையைச் சுவைக்கும் போது அவற்றில் ஊறுகின்ற  நீரை முதல் இரண்டு முறை உமிழ்ந்து விட வேண்டும். மூன்றாம் முறை  ஊறுகின்ற நீரை உட்கொண்டு, மற்றைவற்றை உமிழ்ந்து விடவேண்டும் என்கிறார்.


இப்படி முறைப்படி சாப்பிட்டு சுகபோகமாக வாழ்ந்த மனிதர் சிறை உணவை  உண்ணமுடியாமல் தான் படும் பாட்டை  தனது  உயிர்த்துணை மீனாட்சி அம்மாளுக்கு எழுதிய கடிதங்கள் நம்மை கண்ணீரை வரவழைக்கும்.


மூலம்: ஆ.இரா. வேங்கடாசலபதி. 1984.வ.உ.சி. கடிதங்கள் (1902 -1936).  சேகர் பதிப்பகம். சென்னை.


வ.உ.சிதம்பரம்பிள்ளை. 1956. மெய்யறிவு. பாரி நிலையம்.

No comments:

Post a Comment