Tuesday 20 April 2021

DIFFICULTIES IN CHENNAI SRINIVASA IYENGAR VS CHIDAMBARANAAR சென்னை தந்த துயர வாழ்வு

 




வ.உ.சி.150 நினைவலைகள் (பதிவு எண். 10/150)


DIFFICULTIES IN CHENNAI  SRINIVASA IYENGAR 

VS 

CHIDAMBARANAARசென்னை தந்த துயர வாழ்வு



பெரியவர் வ.உ.சி.க்கு தெரிந்த நல்ல தொழில் வக்கீல் தொழிலே. வெள்ளையர் அரசாங்கம் நீதிமன்றங்களுக்குச் சென்று வழக்காட முடியாதபடிக்கு  வக்கீல் சன்னத்தை (உரிமம்) பறித்து விட்டது. சென்னையில் வீட்டுக் கடனை அடைக்க பல தொழில்கள் செய்ய முயன்றார். அனைத்தும் தோல்வியில் முடிவடைந்தது.


தெரியாத தொழில்கள் எல்லாம் செய்து பார்த்தார். சிந்தாதரிப் பேட்டையில் நெய்கடை வியாபாரம் செய்துள்ளார்.  பின்பு மளிகைக் கடை வைத்துப் பார்த்தார். அதுவும் கை கூட வில்லை. மண்ணெண்ணெய் கடை வைத்துப் பார்த்தார். அதுவும் போணியாக வில்லை. மண்ணெண்ணெய் கடை வைப்பதற்காக ரூபாய் பத்து கடன் வாங்கி அதற்காக பிராம்சரி நோட்டும் எழுதிக் கொடுத்துள்ளார். அந்தக் கடையும் உருப்படியாகவில்லை.


தொழிற்சங்க நண்பர்களான வி.சக்கரைச் செட்டியார், கஜபதி செட்டியார் போன்றோர் முன்வந்து அவர்களாகவே அரிசிக் கடையைப் பிடித்து தந்து  அரிசி மூட்டைகளும் வாங்கித் தந்து வியாபரம் செய்ய உதவினார்கள்.  கப்பல் வணிகத்தைச் சிறப்பாக நடத்திய பெரியவருக்கு அரிசிக் கடையை லாபகரமாக நடத்த முடியவில்லை. கடையை நண்பர்களிடமே திருப்பிக் கொடுத்து விட்டார்.


1917-18 வாக்கில் பஞ்சம் வந்த போது பிரிட்டீஷ் சர்க்கார் தினமும் 5000 நபர்களுக்கு ரூபாய்க்கு நான்கு படி அரிசி நியாய விலைக் கடை மூலம் அளித்தது. அச் சமயம் தண்டபாணி பிள்ளை தனது பங்களா வீட்டை அரிசி கடையாக மாற்றி வ.உ.சி.க்கு அரிசிக் கடையில் வேலையும் அளித்தவர். அவருக்கான வேலை அரிசியை கொண்டு வரவும், விற்பனை செய்து தருவதுமான வேலை. இதற்கு சம்பளமாக தினமும்  தன் வீட்டுக்கு ரூபாய்க்கு 4 படி அரிசியும் மாதம் ரூபாய் 100/- ம் சம்பளம் பெற்றுச் செல்வது வழக்கம். இந்த அரிசி கடையில் வேலை செய்வதை பிரீட்டீஷ் அரசாங்கத்திற்கு தெரிய வந்து வ.உ.சி.க்கு வேலை அளிக்கப்பட்ட காரணத்துக்காக தண்டபாணி பிள்ளையின் அரிசிகடையின் உரிமத்தையும் சேர்த்து ரத்து செய்து மூடிவிட்டார்கள். இதனால் அப்பகுதி தொழிலாளர்களுக்கு கிடைக்கவேண்டிய அரிசியும் கிடைக்காமல் அவர்களது வாயிலும் மண்ணைப் போட்டு விட்டது பிரிட்டீஸ் அரசாங்கம்.


அச் சமயம் தமிழ்நாடு காங்கிரசின் மிகப் பெரிய தலைவராக இருந்தவர் சீனிவாச அய்யங்கார். பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு அரசியல் ஆசான். இவர். சென்னையின் மிகப் பிரபலமான வக்கீலாக இருந்தவர். திக்கற்ற நிலையில் இருந்த பெரியவர் வ.உ.சி.க்கு தொடர்ந்து வேலை தேடிய படலத்தில் இருந்தார். இந்த நிலையில் தனக்குத் தெரிந்த வக்கீல் வேலையை சீனிவாச அய்யங்காரிடம் கேட்டால் தருவார் என்ற நம்பிக்கையில் அவரிடம் போய் வேலை கேட்கப் போகிறார்.


மிகுந்த நம்பிக்கையுடன் சென்ற பெரியவர் வ.உ.சி.யை வரவேற்றார் சீனிவாச அய்யங்கார்.


வாங்கோ… வாங்கோ என்று மகிழ்ச்சி பொங்கிட வரவேற்ற அய்யங்கார் காபி கொடுத்து உபசரித்தார். பின்னர்


வராதவர் வந்திருக்கிறீர்களே…. ஏதாவது விசேசமா என்று விசாரிக்கிறார் அய்யங்கார்.


சற்று தயக்கத்துடன் பெரியவர் “ உங்களிடம் ஒரு வேலை தேடி வந்தேன் என்கிறார்.


“வேலையா… என்னிடமா? உங்களுக்குப் போய் நான் வேலை தர முடியுமா? என்கிறார் சீனிவாச அய்யங்கார்.


“எனக்குத் தெரிந்த தொழில் வக்கீல் தொழில்தான். அந்த தொழிலை நான் செய்ய முடியாமல் அரசாங்கம் தடை விதித்து விட்டது. நீங்கள் இப்போது சிறந்த வக்கீலாக இருக்கிறீர்கள். உங்களுக்கு ஏராளமான வழக்குகள் கிடைத்திருகின்றன. உங்களிடம் வரும் வழக்குகளுக்கான கேஸ் கட்டுகளை என்னிடம் கொடுங்கள். நீங்கள் கோர்ட்டில் வாதாட வசதியாக சட்ட ரீதியான விசயங்களை தயாரித்து தருகிறேன். இப்பணிக்காக மாதம் ஒரு தொகையை கொடுத்தால் எனக்கு பேருதவியாக இருக்கும் என்றார் பெரியவர் வ.உ.சி.


சீனிவாச அய்யங்காருக்கு என்ன சொல்வதென்று தெரியாமல் தர்ம சங்கடத்தில் கொஞ்ச இருங்கோ பிள்ளைவாள், இதோ நொடியில் வந்துவிடுகிறேன் என்று சொல்லி விட்டு மாடிப்படிக்குப் போனார்.


மாடியிலிருந்து இறங்கி வந்த போது, அய்யங்கார் கையில் ஒரு கவர் இருந்தது. அதில் ரூபாய் நோட்டுக் கட்டு ஒன்றும் இருந்தது.


“பிள்ளைவாள்… நீங்க ரொம்பவும் பெரியவாள். உங்களுக்கு நான் வேலை கொடுப்பது என்பது என்னால் நினைத்து பார்க்க முடியாத காரியம். என்னாலே முடிந்த உதவி இது. இதை நீங்கள் பெற்றுக் கொண்டால் நான் ரொம்பவும் சந்தோசப்படுவேன் என்றார்.


அந்தப் பணத்தை கையால் தொடவே இல்லை பெரியவர் வ.உ.சி.


ரொம்ப நன்றிங்க. நான் உங்களிடம் வேலை தேடித்தான் வந்தேன். வேலை செய்து சம்பாதித்துதான் எனக்குப் பழக்கம். யாசகம் வாங்கிப் பழக்கமில்லை என்று உணர்ச்சிப் பொங்கிட கூறிவிட்டு , வக்கீல் சீனிவாச அய்யங்காரிடம் விடை பெற்றுக் கொண்டு புறப்பட்டு விட்டார்.


வறுமையிலும் செம்மையாக தனது வாழ்வினை அடையாளப்படுத்தியவர் பெரியவர் வ.உ,.சி.


ஒரு மனிதனுக்கு அடுக்கடுக்காய் துன்பம் நேர்கையில் மனம் பக்குவப்பட்டு ஞானியாகிறான். பெரியவருடைய வாழ்க்கை 1908 ஆம் ஆண்டில் இருந்து சிறை வாழ்வையும் முடித்து வந்த பிறகும் கூட சென்னையில் அவர் பட்ட வாழ்வின் துயரங்கள் இராமச்சந்திர கவிராயரின் தனிப்பாடலான


 ”ஆவீன மழை பொழிய இல்லம் வீழ” என்ற தனிப்பாடல் என் மனதில் எதிரொலிக்கிறது.


சென்ற வாரம் பெரியவர் சென்ற அதே சீனிவாச அய்யங்காரின் வீட்டைத் தேடி ஆழ்வார்பேட்டை  அம்புஜம்மாள் வீதியில் அமைந்துள்ள காந்தி அமைதி நிறுவன அலுவலகம் சென்று அலுவலக இயக்குனரிடம் விசாரித்தோம். 


மேற்குறித்த விசயங்களைப் பற்றி பேசினேன். அதற்கு  இந்த நிகழ்வு நீங்க சொல்லித்தான் எங்களுக்கே தெரிய வருகிறது என்று கூறி விட்டு கப்பல் விட்ட வ.உ.சி..க்கு இப்படியான துன்பங்களா! எல்லாம் நாம் மறந்து விட்டோமே என்று சொல்லி அவரும் கண்கலங்கி விட்டார்.


மூலம்: சின்ன குத்தூசி. எத்தனை மனிதர்கள். விகடன் பிரசுரம்.


என். தண்டபாணி பிள்ளை.  சில சுவையான குறிப்புகள்! வ.உ.சி.யைப் பற்றி… நாரதர் இதழ்.


படம்: எஸ். சீனிவாச அய்யங்கார்

(தேச பக்தனாக இருந்தது பாவமா?.

இந்த தேச நலனையே தன் மூச்சாகக் கொண்ட ஒரே காரணத்திற்காக ஒரு மாமனிதனின் வாழ்க்கையில் இவ்வளவு சோகமா?.நினைக்கவே மனம் பதறுகிறது.மனம் கொதிக்கிறது.அவர் அனுபவித்ததில் சிறு பகுதியே இது. ஆனாலும் கடைசி வரை தேசாபிமானத்தைப் போல தன்மானத்தையும் விட்டுக் கொடுக்காத பெரியவர்.)




சேஷாத்திரி ஸ்ரீனிவாச ஐயங்கார் (S. Srinivasa Iyengar) சி.ஐ.இ. (செப்டம்பர் 11, 1874 - மே 19, 1941) என அழைக்கப்படும் ஸ்ரீனிவாச ஐயங்கார், ஒரு இந்திய வழக்கறிஞராகவும், சுதந்திர போராட்ட வீரராகவும் இந்திய தேசிய காங்கிரஸின் அரசியல்வாதியாகவும் இருந்தார். ஐயங்கார் 1916 முதல் 1920 வரை சென்னை மாகாணத்தின் வழக்கறிஞர்-ஜெனரலாக இருந்தார். 1912 முதல் 1920 வரை சென்னை மாகாணத்தின் சட்ட உறுப்பினரும் 1923 முதல் 1930 வரை இந்திய தேசிய காங்கிரஸின் ஸ்வராஜியக் கட்சியின் தலைவராகவும் இருந்தார். ஸ்ரீனிவாச ஐயங்கார் புகழ்பெற்ற முதல் இந்திய வழக்கறிஞரான சர். வேம்பகும் பாஷ்யம் ஐயங்காரின் மருமகன் ஆவார். வழக்கறிஞர் ஜெனரல் சர் வேம்பகும் பாஷ்யம் ஐயங்காரைப் பின்பற்றுபவர்கள் அவரைத் தென்னிந்திய சிங்கம் என்று அழைத்தனர்.

சென்னை மாகாணத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஸ்ரீனிவாச ஐயங்கார் பிறந்தார். அவர் சட்டத்தில் பட்டம் பெற்றார் மற்றும் ஒரு வழக்கறிஞராகப் பயிற்சி பெற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் 1916 இல் வழக்கறிஞர்-ஜெனரல் ஆக பதவி உயர்வு பெற்றார். அவர் பார் கவுன்சில் உறுப்பினராக பணியாற்றினார் மற்றும் ஆளுநரின் நிறைவேற்றுக் குழுவின் சட்ட உறுப்பினராக நியமிக்கப்பட்டார். அவர் தனது வழக்கறிஞர் ஜெனரல் பதவியை, ஆளுநர் நிறைவேற்றுக்குழுவின் அவரது இருக்கையை ராஜினாமா செய்து சி.ஐ.இ. க்குத் திரும்பினார்.

1920 ஆம் ஆண்டு ஜலியன்வாலா பாக் படுகொலைக்கு எதிராக, இந்திய தேசிய காங்கிரஸில் சேர்ந்து ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கு பெற்றார். 1923 ஆம் ஆண்டில், மோதிலால் நேரு மற்றும் சித்தரஞ்சன் தாஸ் போன்ற தலைவர்களோடு சேர்ந்து மகாத்மா காந்தியுடன் தேர்தல்களில் பங்கேற்றார். பிரிவினை பிரிவுக்குப் பின்னர் ஸ்வராஜியக் கட்சி உருவாக்கப்பட்டது. 1926 தேர்தல்களில் பெரும்பான்மை பெற்றிருந்த போதிலும், ஐயங்கார் மாகாணத்தில் அரசாங்கத்தை அமைக்க மறுத்தபோது, அவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகவும் பின்னர் சென்னை மாகாண ஸ்வராஜ்ய கட்சியின் தலைவராகவும் இருந்தார்.

பின்னர் அவர், இந்திய லீக்கின் சுதந்திரத்தை நிறுவி, சைமன் கமிஷனுக்கு எதிரான போராட்டங்களை ஒழுங்கமைத்தார். மற்ற காங்கிரஸ் அரசியல்வாதிகளுடனான கருத்து வேறுபாடு காரணமாக, அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார். 1941 ஆம் ஆண்டு மே 19 இல், ஐயங்கார் சென்னையிலுள்ள அவரது இல்லத்தில் காலமானார்.

ஸ்ரீனிவாச ஐயங்கார் சென்னை சட்டப்பேரவையில் இருந்து வழக்கறிஞர் ஜெனரலாக நியமிக்கப்பட்ட இளைய வக்கீல் ஆவார். ஸ்ரீனிவாச ஐயங்கார் சுதந்திர போராட்ட வீரர்களான யு. முத்துராமலிங்கம் தேவர் மற்றும் சத்தியமூர்த்தி ஆகியோரின் வழிகாட்டியாகவும் இருந்தார். பின்னர் 1954 முதல் 1962 வரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஆனார். மற்றும் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பணியாற்றிய கே. காமராஜ் அவரது மிகப்பெரிய வழித்தோன்றலாகக் கருதப்படுகிறார். ஸ்ரீனிவாச ஐயங்கார் 1939 இல் எழுதிய "மேனேஸ் ஹிண்டு லாஸ்" புத்தகம் மிகவும் பாராட்டப்பட்ட மற்றும் நன்கு படிக்கப்பட்ட புத்தகம் ஆகும்.

No comments:

Post a Comment