Wednesday 14 April 2021

RANJAN -UNFORGETABLE ACTOR

 


RANJAN -UNFORGETABLE ACTOR

நடிகர் #ரஞ்சன் அவர்கள் ( பகுதி 1)


மறைந்து போன மறக்க முடியாத திரைப்பட நடிகரில் ஒருவர். இவர்

ஒரு சகலகலா வல்லவர். பாடகர், டான்ஸ் மாஸ்டர், வாள் வீச்சு வீரர், நாடக நடிகர், வில் வித்தையில் திறமை சாலி, ஓவியக்கலைஞர், கிரிக்கெட் வீரர், குதிரை சவாரியில் வல்லவர், நீச்சல் வீரர், எம்.லிட்., பட்டதாரி, பத்திரிகையாளர், மேஜிக் நிபுணர், எழுத்தாளர். இவை எல்லாவற்றிற்கும் மேலாக விமானம் ஓட்ட கற்றவர்.

ரஞ்சனின் இயற்பெயர் வெங்கடரமண சர்மா. ‘ரமணி’ என்று செல்லமாக அழைக்கப்பட்டார். இவரது பூர்வீகம் ஸ்ரீரங்கம். ரஞ்சன் 2–3–1918–ந் தேதி சென்னை மயிலாப்பூரில் பிறந்தார். ரஞ்சனின் தந்தை ராமநாராயண சர்மா; தாய் அலமேலு.

இத்தம்பதிகளுக்கு பத்து பிள்ளைகள். அதில் ஒருவர் ரஞ்சன். ரஞ்சனின் பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வி சென்னையில் தான்.


தந்தை சர்மாவுக்கு இசை அறிஞர்கள் தொடர்பு அதிகம். தன் பிள்ளைகள் உயர்ந்து தரமான நிலையில் இருந்ததில் அவருக்கு ஆத்ம திருப்தி. ரஞ்சனின் இளம் வயதிலேயே தனது திறமையின் பன்முகங்களை குறிப்பாக இசைத்துறையிலிருந்த ஈடுபாட்டினை வெளிப்படுத்தினார். இதனால் உந்தப்பட்ட சர்மா, ரஞ்சனை இசைத்துறையில் வல்லவராக்க முடிவு செய்தார். தந்தையின் ஊக்கம் தனையனுக்கு உற்சாகமூட்டியது. ‘ரித்தமெடிக்ஸ் இன் மியூசிக் அண்ட் டான்சிங்’ என்ற தலைப்பில் நீண்ட ஆய்வு கட்டுரையை எழுதி எம்.லிட்., பட்டம் பெற்றார். இதனால் இசையும், நடனமும் ரஞ்சனுக்கு கைவந்த கலையாயிற்று.

தனது அனுபவமும் கல்வியறிவையும் கொண்டு 1940–ம் ஆண்டில் ஒரு இசை மற்றும் நாட்டிய பள்ளியைத் தொடங்கினார். இதுதவிர ‘நாட்டியம்’ என்ற இதழையும் நடத்தினார்.


கல்லூரியில் படித்த காலத்திலேயே இசை, நாட்டியம் மட்டுமின்றி நாடகத்திலும் ரஞ்சனுக்கு நாட்டமிருந்தது. நாடகத்தில் பாடி நடித்ததுடன், அற்புதமாக நடனமாடவும் செய்தார். அனைவரது வரவேற்பினையும் பெற்றார். இதுவே ரஞ்சன் சினிமாவில் நடிக்க வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தது.

இவரது நாட்டியத்தை ரசித்தவர்களில் ஜெமினி ஸ்டூடியோவின் கதை இலாகாவைச் சேர்ந்த வேம்பத்தூர் கிருஷ்ணனும் ஒருவர். ரஞ்சனின் நடன ஆற்றலைக் கண்டு வியப்புற்ற அவருக்கு அதனை திரைப்படங்களிலும் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்ற எண்ணம் உதித்தது.

இந்த நிலையில் முருகன் டாக்கீஸ் பிலிம் கம்பெனி ‘‘அசோக் குமார்’’ என்ற படத்தை ராஜா சந்திரசேகரின் இயக்கத்தில் தயாரித்து 1941–ம் ஆண்டு வெளியிட்டனர்.

எம்.கே.தியாகராஜ பாகவதர் புகழின் சிகரத்தில் இருந்த காலகட்டம் அது. படத்தின் கதாநாயகனாக அவர் நடித்தார். அத்துடன் தெலுங்குப் பட உலகில் புகழுடன் திகழ்ந்த நாகையாவும், கண்ணாம்பாவும் இப்படத்தில் மூலம் அறிமுகம் ஆனார்கள்.

படத்தின் இறுதிகாட்சி, கண் இழந்த பாகவதருக்கு கண் கொடுக்கும் புத்தராகத் தோன்றினார் ரஞ்சன். அமைதியே உருவாக, மவுனமே மொழியாக, வசனம் எதுவும் இல்லாமல் நடித்த போதிலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

#தொடரும்.... — with Sakthi Priya.



No comments:

Post a Comment