Monday 12 April 2021

வீதியோரச் சிறுவர்களுக்கான சர்வதேச நாள் (International Day for Street Children).

 

வீதியோரச் சிறுவர்களுக்கான 

சர்வதேச நாள் 

(International Day for Street Children).






இன்று வீதியோரச் சிறுவர்களுக்கான சர்வதேச நாள் (International Day for Street Children). இந்நாள் உலகெங்கும் கோடிக்கணக்கில் உள்ள வீதியோரச் சிறுவரின் நல்வாழ்வுக்கும் அவர்களின் உரிமைகளுக்காகவும் குரல்கொடுக்கும் சர்வதேச நாளாகும். இது ஆண்டு தோறும் ஏப்ரல் 12 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.

பள்ளிக்கூடம் செல்லவில்லை

பாடம் எதுவும் படிக்கவில்லை

ஒன்று மட்டும் சொல்கிறேன்

வெந்து வெந்து சாகிறேன்

பெற்றோரை குற்றம் சொல்லவா - இல்லை

படைத்த அந்த பிரம்மனை குற்றம் சொல்லவா

ஒன்று மட்டும் வேண்டாம்

இந்த கொடுமை எந்த பிஞ்சுக்கும் வேண்டாம்

வீதியில் பிஞ்சுகள் வேண்டாமென

வீதியெங்கும் உரைப்போம் அனைத்து

வீதி எங்கும் உரைப்போம்.

வீதியோரச் சிறுவனொருவனின் மன நிலையை அப்படியே பிரதிபலித்து நிற்கிறது இந்தக் கவிதை.


யாரை அப்படிச் சொல்கிறோம் என்று தெரியாமலேயே வீதியோரச் சிறார்கள் என்று மிகவும் எளிதாகச் சொல்லி விடுவோம். இன்று முழு உலகிலுமே வியாபித்து விஸ்வரூபம் எடுத்து நிற்கும் பிரச்சினைகளுள் ஒன்று வீதியோரச் சிறுவர்கள் பற்றியது. ஏனெனில், தெரிந்தோ தெரியாமலோ எதிர்காலச் சந்ததி ஒன்று தனது எதிர்காலத்தைத் தொலைத்து வீதியில் நிற்கத் தலைப்பட்டு விட்டது. இத்தகைய நிலை அதிகரித்துச் சென்றால், முழு உலகின் எதிர்காலமும் கூட தலை கீழாக மாறி விடும் வாய்ப்பும் காணப்படுகிறது.

அடுத்து,சிறுவர்களுக்கான சகல உரிமைகளும் அவர்களுக்கும் இருக்கின்றன. பல்வேறு வயதெல்லைகளைச் சேர்ந்த சிறார்கள் தமக்குத் தேவையான ஆதரவும் அரவணைப்பும் கிடைக்காததால் வீதிகளையே தமது வாழ்விடமாக்கிக் கொண்டிருக்கின்றனர். அத்தகைய சிறார்களை ஆதரவற்றவர்கள், வீதியோரச் சிறார்கள் எனப் பல்வேறுபட்ட வகைகளில் பாகுபடுத்திப் பார்க்கிறது இன்றைய உலகம்.

சமூக ரீதியாக அங்கீகரிக்கப்படாத, தவிர்க்கப்பட்ட ஒரு குழுவாகவாகவே இந்த வீதியோரச் சிறார்கள் பார்க்கப்படுகின்றனர். அவர்கள் மூன்று விதமாக வகைப்படுத்தப் படுகின்றனர். ஒன்று வீதியோரங்களில் வசிக்கும் சிறார்கள். அதாவது குடும்பமொன்றுடன் இல்லாமல் பொது இடங்களில் உறங்கி எழும்பி, அங்கேயே வாழ்பவர்கள்.


மற்றையது, வீதியோரங்களில் வேலை செய்யும் சிறார்கள், அவர்கள் காலையில் புறப்பட்டு, தெருவோரங்களில் வேலை செய்துவிட்டு, மாலையில் தமது குடும்பத்தினருடன் இணைந்து கொள்பவர்கள். அடுத்தது, வீதியோரக் குடும்பங்களைச் சேர்ந்த சிறுவர்கள். இவர்கள் தமது குடும்பத்தினருடன், வீதியோரங்களிலேயே வசிப்பவர்களாக இருப்பர். உண்மையில் வீதியோரச் சிறார்கள் என்பது, நன்கு வரையறுக்கப்பட்ட ஏகவீனமானதொரு குடித்தொகை அல்ல. வீதியோரம் என்ற சொற்பிரயோகம் உண்மையில் இச் சிறார்களின் பல முகங்களுள் ஒன்றை மட்டுமே வெளிக்கொணருவதாக இருக்கிறது. ஐ.நாவின் தரவுகளின் அடிப்படையிலே உலகளாவிய ரீதியிலே, இந்த வீதியோரச் சிறார்களின் எண்ணிக்கை என்ன என்பது கணக்கெடுக்கப்படவில்லை. சமூக ரீதியாக அங்கீகரிக்கப்படாத, தவிர்க்கப்பட்ட சிறுவர்களை ஐ.நா. வீதியோரச் சிறார்கள் என்ற வகைக்குள் உள்ளடக்க முயற்சிக்கிறது. உலகளாவிய ரீதியிலே 100 மில்லியனுக்கும் குறைவான, ஆனால் கணிசமானளவு வீதியோரச் சிறார்கள் இருக்கிறார்கள் என்பதில் யாவருமே உடன்படுகிறார்கள். வீதியோர வாழ்வு அபாயங்கள் நிறைந்தது. ஆதலால் குறிப்பாக பெண் குழந்தைகள் தம்மை வெளியுலகுக்கு அடையாளங்காட்ட முனைவதில்லை. ஆதலால் இந்தக் கணக்கெடுப்பு குறைவாக மதிப்பிடப்பட்ட ஒன்றாகவே தெரிகிறது. மனித வள, நிதி ரீதியான வளங்களின் அடிப்படையில் மிகவும் திருத்தமான கணக்கெடுப்பை மேற்கொள்வதானது செலவு மிக்கதோர் விடயமாகவே தெரிகிறது.

பெற்றோர்களின் கல்வி அறிவு மட்டம் குறைவாகக் காணப்படுதல், தரமான கல்வி யைச் சிறார்களுக்கு வழங்க முடியாமை, கல்வியை வழங்கு வதற்கான செலவை ஈடு செய்ய முடியாமை, போன்ற பல கார ணங்கள் சிறார்களின் கல்வி கற்கும் உரிமையைப் பாதிக் கின்றன. சிறுவர்களுக்கான கல்வி உரிமையை வழங்குவதன் மூலம், எவராயினும் அவரை சமூகமொன்றினுள் உள்வாங்க முடியும். ஆனால் இங்கு அந்த உரிமையே மறுக்கப்படு வதால், அவர்கள் சமூகத்தினால் உள்வாங்கப்படாதவர்களாகவே இருக்கத் தலைப்படுகின்றனர். வறுமை காரணமாகத் தொழிலுக்குச் செல்லும் சிறார்கள் மீது பல்வேறுபட்ட வன்முறைகள் பிரயோகிக்கப்படுகின்றன. அவற்றிலிருந்து தப்பிக்க முயன்று கடைசியில் அச் சிறார்கள் வீதியோரச் சிறார்களாக மாறுகின்றனர்.

இச்சிறுவர்கள் அப்படியே விடப்படலாகாது. அவர்களுக்கான உரிமைகள் மதிக்கப்பட வேண்டும். அவர்களது பெற்றோரின் வாழ்க்கை முறையில், தலையிட்டு ஆக்க பூர்வமான மாற்றங்களைக் கொண்டு வர முயற்சிக்க வேண்டும்.


No comments:

Post a Comment