VIVEK AND HIS HUMANITY
இயற்கையின் மகனை மனிதகுலம் இழந்துள்ளது.
😭😭😭😭😭😭
2003 மே மாதம் என்று நினைக்கின்றேன்.
அப்போது இராமநாதபுரம் மாவட்டத்தில் வீட்டுவசதித் துறையில் பணிபுரியத் தொடங்கிய காலம். சில நூல்களையும் எழுதி வெளியிடத்தொடங்கிய நேரம் அது.
பொது நிகழ்ச்சி ஒன்றிற்கு அழைப்பதற்காக சீர்திருத்தச் சிந்தனைக் கலைஞர் அண்ணன் விவேக் அவர்களை படப்பிடிப்புத் தளம் ஒன்றில் காலை நேரத்தில் சந்தித்தேன்.
இயக்குநர் சங்கரின் பாய்ஸ் படப்பிடிப்பு அது.
சென்னை உயர்நீதி மன்ற வளாகத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்தது.
நிறைய படங்களில் அவர் நடித்துக்கொண்டிருந்த தருணம் அது.
அவருக்கும் எனக்கும் முன்பின் அறிமுகம் இல்லை.(பின்னாளில் அவரது தங்கையின் கணவர் வழியில் ஒரு வகையில் உறவினராக இருந்தது தெரிய வந்தது)
இருந்தும் நேரில் பார்த்து நண்பர் ஒருவரின் மூலம் அறிமுகம் செய்து கொண்டு பேசினேன்.
அவர், 'இங்கே உங்களோடு பேசுவது சிரமம்.ஈவினிங் வீட்டிற்கோ அலுவலகத்திற்கோ வாங்க பிரதர் .பேசலாம்' என்றார்.
மாலையில் மீண்டும் அலுவலகத்தில் சந்தித்தேன்.
சுறுசுறுப்பாக ஓடிக்கொண்டிருந்த பரபரப்பிற்கு நடுவே எனக்கும் நேரம் ஒதுக்கிப் பேசினார்.
நிகழ்ச்சிக்கு வர ஒப்புக்கொண்டார்.
பின்னர் சில காரணங்களால் அந்நிகழ்ச்சி நடத்தமுடியாமல் போனது.தகவலை அவரிடம் தெரிவித்தேன். 'பரவாயில்லை பிரதர். கீப் இன் டச்' என்றார் மிக இயல்பாக.
பிறகு சில விழாக்களில் சந்திக்க நேர்ந்தது.
இறுதியாக கடந்த வருடம்(2020) பிப்ரவரி மாதம் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில் அண்ணன் அவர்களைச் சந்தித்தேன்.
நினைவில் வைத்துக்கொண்டு சில வார்த்தைகள் பேசுவார்.அவ்வளவே.
ஆனாலும் திரைக்கலைஞராக உலகத் தமிழர்களின் உள்ளங்களைத் தனதாக்கிக்கொண்டவர் என்பதால் மனத்திற்கு நெருக்கமானவராக இருந்தார்.
மகனின் இழப்பிற்குப்பிறகு சமூகத்திற்கு மேலும் பயன்தருகின்ற மாறுபட்ட வாழ்க்கைமுறையை அவரிடம் காணமுடிந்தது.
சகல துறைகளிலும் ஞானம் உடையவர்.
கடந்த வருடமே நூல் ஒன்றை அவரை வைத்து வெளியிடத் திட்டமிட்டிருந்தேன்.கொரோனா இடையூறால் அவரை அழைப்பதற்கு வாய்ப்பின்றிப் போனது.
முற்றிலுமாக அந்த வாய்ப்பினை நான் இழந்து விடுவேன் என்று நினைக்கவில்லை.
யாரென்றே தெரியாமல் என் வார்த்தைகளுக்கு மதிப்பளித்த அந்த மாபெரும் பண்பாளர் எனக்குமட்டுமல்ல ...எல்லோருக்கும் அப்படிப்பட்டவர்தான்.
தமிழ்த் திரைக்கலைஞர்களின் மேதமைக்கு நிகழ்கால அடையாளமாகத் திகழ்ந்தவர் அண்ணன் விவேக் அவர்கள்.
எப்போதும் அவரது உண்மை வயதைவிட 20 வயது குறைவானவர் போன்ற தோற்றமும் சுறுசுறுப்பும் கொண்டவர்.
செவ்விய தன் திரைப் பணிகளுக்கு அப்பால்
பார் செழிக்க பசுமை பெருக விரும்பிய இயற்கையின் மகனை மனிதகுலம் இழந்துள்ளது.
அண்ணனின் ஆத்மா இயற்கையின் மடியில் அமைதிகொள்ளட்டும்.
மூட நம்பிக்கைகளுக்கு எதிரான அவரது கருத்துகள் மனித மனங்களுக்கு உரமேற்றும்.
அவர் நட்டுவைத்த மரங்களுக்கு இயற்கையே நீரூற்றும்.
ஆனால் மகனையும் கணவனையும் இழந்து நிற்கின்ற சகோதரியை யாராற்றுவார் ?
😭😭😭😭😭😭
சீர்திருத்தச் சிந்தனைக் கலைஞருக்கு எமது கண்ணீர் அஞ்சலி
😭😭😭😭😭😭😭
ஜ(ம)னங்களின் கலைஞன்..
இப்போலாம் சினிமாவிலிருந்து கோட்டைக்கு போக நடிப்பவன் நடிகன். ஆனால் கோட்டையிலிருந்து சினிமாவுக்கு வந்தவன் ஒரு கலைஞன்.
பாலச்சந்தரின் அந்தப்படத்தை பார்க்க அதில் முதல் காட்சியே ஒரு கிராமத்து வீடு. அதில் ஒரு தம்பி குளித்துக்கொடிருக்க, ஒரு தம்பி எண்ணெய் தேய்த்துக்கொண்டிருக்க ஒரு தம்பி மட்டும் ஆங்கிலப்பேப்பரை படித்துக்கொண்டிருப்பான். அவன் தான் விவேக் என்கிற பெயரில் அறிமுகமான விவேகானந்தன். முதல் காட்சியிலேயே பேப்பர் படிக்கும் அறிவு நிறைந்த தம்பி.
'மனதில் உறுதி வேண்டும்' படத்தில் ஒரு டஜன் அறிமுகங்களோடு விவேக்கும் அன்று அறிமுகமானார். ஆனால் விவேக் மட்டும் மாறாத புகழை பெற்று இன்று வரை நடித்துக்கொண்டிருந்தார். தன் முதல் படத்திலேயே ரஜினி, விஜய்காந்த், சத்யராஜ் போன்றோருடன் நடித்த வாய்ப்பு வேறு யாருக்கு கிடைக்கும்?
மலையாளி நண்பர்கள் அடிக்கடி சொல்வதுண்டு. வடிவேலு காமெடி உடனே புரிந்து விடுகிறது. இவருடையது உடனே புரிவதில்லை. ஆமாம்..முக அஷ்டகோணல் சேஷ்டைகள் செய்யாமல் வசனங்களால் அதுவும் தலையில் தட்டும் வசனங்களால் நகைச்சுவை செய்தவர்.
ரஜினியோடு அவர் சிவாஜி படத்தில் 'ரெமோ மாமா'வாக செய்யும் அலப்பறைகள், வடிவேலுவின் சகலையாக அவர் பட்ஜெட் பத்மநாபன் படத்தின் அடிக்கும் ரகளைகள் அட்டகாசம்.
ரன் படத்தில் அப்பாவையே நக்கல் விடும் மகனாக அவர் காட்டியது இன்றைய தலைமுறையின் இளைஞர்களை. அதில் ஒரு பெண் தன் முதுகை தேய்க்க சொல்லி விட்டு 'கிராஜுவேட் பாடியை கரெக்ட் பண்ண பார்க்கறியா?' என உளறிவிட்டு அந்த பெண்ணின் கையாலேயே மொத்து வாங்கும் காட்சி..
உத்தமபுத்திரன் எமோஷனல் ஏகாம்பரம் ஆடிட்டர், மாப்பிள்ளை சைல்டு சின்னா, முரட்டுக்காளை அரவாணி சரோஜா, சிங்கம் எரிமலை, வேலையில்லாப்பட்டதாரி அழகுசுந்தரம் என்ஜினியர், படிக்காதவன் அசால்ட் ஆறுமுகம், பேரழகன் குழந்தை சாமி, சாமி ரௌடி அய்யர்....
சொல்லிக்கொண்டே போகலாம். காமெடி செய்தோம் காசு பார்த்தோம் என்றில்லாமல் தன்னால் முடிந்ததை இந்த சமுதாயத்துக்கு செய்ய வேண்டுமென தீர்மானித்து இறங்கிய கலைஞன் விவேக். தான் மட்டும் சம்பாதிக்காமல் தன்னோடு போன்டா மணி, செல் முருகன், சிங்கமுத்து, வையாபுரி, கொட்டாச்சி மற்றும் பல சிறு நடிகர்களையெல்லாம் வாழ வைத்தவர்.
சமுதாயப்பணியில் அப்துல் கலாமின் ஆணைக்கிணங்க மரம் நடத்தொடங்கிய விவேக் அதை மற்றவர்களையும் செய்ய மிகச்சிறந்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இவரின் விழிப்புணர்வுக்கு பிறகே திருமண வீடுகளிலும், கோவில் திருவிழாக்களிலும் மரக்கன்றுகளை பரிசாக கொடுக்கும் பழக்கம் வந்தது. சமீபத்திய லாக்டவுன் காலத்தில் மகேஷ் பாபு, விஜய் போன்றோர் மரக்கன்று நட்டு போட்டோ போடும் அளவு வரை விவேக்கின் விழிப்புணர்வு வளர்ந்து கொண்டிருந்தது.
விவேக் என்கிற மனிதனுக்கு ஒரு சொட்டு கண்ணீர் விடும் போது அந்த கண்ணீர் ஒரு செடியை நட்டு வைத்து ஊற்றும் முதல் தண்ணீராக இருக்க வேண்டும்.
எல்லோரும் அவர்கள் வீட்டில் ஒரு செடியாவது நடுங்கள்.
அதைவிட சிறந்த அஞ்சலி அந்தக்கலைஞனுக்கு வேறென்ன இருக்க முடியும்..
விவேக் உங்களின் கனவுக்காக கண்ணீர் அஞ்சலிகளுடன்...
#செல்வன் அன்பு...
No comments:
Post a Comment