Monday 12 April 2021

BIRTH DAY OF P.SUSHILA

 

BIRTH DAY OF P.SUSHILA



என் பார்வையில் சுசீலாம்மாவின் பிறந்த தினக் கொண்டாட்டம்.
மாலை பொழுதின் மயக்கத்தில் காதல் சிறகை விரித்துப் பசுமை நிறைந்த நினைவுகளோடு நீல வானில் பறக்கும் குயிலுக்கு பிறந்த நாளா?
விண்ணளந்த சாதனைகளைப் புரிந்தபின்னும் ஒன்றுமே சாதிக்காத பாவனையில் கள்ளமில்லா சிரிப்பை உதிர்க்கும் குழந்தைக்குப் பிறந்த நாளா?
உலகையே தன் குரலால் மாயக்கண்ணனைப் போலக் கட்டிப்போட்டு மீளா மயக்கத்தில் ஆழ்த்திய இசை பேரரசிக்குப் பிறந்தநாளா? கோடி கணக்கான ரசிகர்களைக் கேட்டால் சொல்வார்கள், இன்னும் மீள விருப்பமில்லாமல் தேன் குரலில் ஆனந்தமாகக் கட்டுண்டு ஆழ்ந்திருப்பதை !!
இவை அனைத்தின் மொத்த உருவமாய் விளங்கும் சுசீலா அம்மாவுக்குப் பிறந்த நாள்.
கோடிக் கணக்கான ரசிகர்களின் மனதில் நிரந்தரமாக சிம்மாசனம் இட்டு அமர்ந்திருக்கும் இசை தேவதைக்குப் பிறந்தநாள் !!
அம்மாவின் ரசிகர்கள் மற்ற ரசிகர்களுக்காக ஏற்பாடு செய்த நிகழ்ச்சிதான் இது. சில பிரமுகர்கள் கலந்து கொண்டாலும், அவர்கள் முதலில் அம்மாவின் ரசிகர்கள் பிறகுதான் சமூகத்தில் பிரபலங்கள். சென்ற வருடம் குறைந்த அளவில் ரசிகர்களை அவர்களின் வீட்டுக்கே வரவழைத்க் கொண்டாடினோம். பலர் முதல் முறை அம்மாவைப் பார்க்க வந்தவர்கள். அவர்கள் முகத்தில் கண்ட சந்தோஷம், பிரமிப்பு, ஆச்சர்யம் அனைத்தையும் பார்த்து இந்த வருடம் சிறிது பெரிய அளவில்




கொண்டாடலாம் என எண்ணினோம். இந்த எண்ணத்தை தினமலர் பத்திரிகை மேலாளர் திரு ஆதிமூலம் அவர்களிடம் பேசும்போது குறிப்பிட்டதற்கு, நல்ல விஷயம் தான். சிறிய அளவில் இல்லாமல், விமர்சையாக, உங்கள் விருப்பப்படி ரசிகர்களுக்கு மட்டுமே ஒரு சந்திப்பை பிறகு ஒரு தேதியில் நடத்துவோம். பிறந்த நாள் கொண்டாட்டம் என்பதால் சிறப்பாக நடத்துவோம், நாங்களும் உங்களுடன் சேர்ந்து கொள்கிறோம் என்றார்.. எங்களுக்கும் அதில் மகிழ்ச்சி. பணிகள் தொடங்கின. முதல் வேலையாக முக நூலில் அறிவித்து, whatsappil விருப்பத்தை தெரிவிக்க சொன்னோம். அதன் அடிப்படையில் ரசிகர்களை தேர்ந்தெடுத்து அழைப்பிதழ்கள் அனுப்பினோம். வெளி ஊர்களிலிருந்து பல ரசிகர்கள் விருப்பம் தெரிவித்தனர். பார்க்கவே சந்தோஷமாக இருந்தது. பெரிய விடுதியில் நடப்பதால், கலந்து கொள்வோர் எண்ணிக்கையில் கட்டுப்பாடு விதிக்க வேண்டிய சூழல். மனமில்லாவிட்டாலும் கிடைத்த விருப்பப் பட்டியலை வைத்து தயாரித்தோம்.
ரசிகர்களுக்காக நடத்துவதால் திரை உலகிலிருந்து யாரையும் சேர்க்கவேண்டாம் என எண்ணி, யாரையும் அழைக்கவில்லை. அதையும் மீறி, திருமதி சத்யப்ரியா அவர்களை அழைத்தது அவர்கள் ரசிகையாக விருப்பம் தெரிவித்திருந்ததால். திரு சாய் கிருஷ்ணா என்பவர் அம்மாவுக்கு 30 ஆண்டுகளுக்கும் மேலாக பழக்கம் உள்ளவர். அம்மாவின் பரம ரசிகர். வெங்கடகிரியின் மன்னர்.. திரு விகேடி . பாலன் அவர்களும் அம்மாவுக்கு பல வருடங்களாக பரிச்சயமானவர். திரு காந்தி கண்ணதாசன், கவியரசரின் புதல்வர். அழகிய பொம்மைகளை உருவாக்கி, சகல லக்ஷணங்களையம் ஒரு சேர வடித்துக்கொடுத்தவர் கவியரசு அவர்கள். அந்த பொம்மைகளுக்கு இசை கருவிகள் என்னும் வண்ணங்களால் அழகூட்டியவர்கள் இசை அமைப்பாளர்கள். அந்த பொம்மைகளுக்கு உயிரூட்டி, பிராணப் பிரதிஷ்டை செய்து, அதற்கு தெய்வீகக் களையை வரவழைத்தவர் நம்முடைய இசை அரசி. அந்த அழகுக்கு அழகைக் கூட்டி மெருகூட்டியவர்கள் நடிக நடிகையர். அத்தகைய ஆயிரக்கணக்கான அழகிய பொம்மைகளுக்கு சொந்தக்காரரின் மகன் காந்தி அவர்கள் மனைவி மீனா அவர்களுடன் கலந்துகொண்டதில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி.
அன்று முதலமைச்சர். அருகில் ஒரு நிழச்சியில் பங்கேற்றதால் வாகன நெருக்கடி காரணமாக நிகழ்ச்சி குறித்த நேரத்தில் தொடங்க இயல வில்லை. அதன் காரணமாக ஏற்பாடு செய்திருந்த பல நிகழ்ச்சிகளை ரத்து செய்ய வேண்டி இருந்தது .
கடவுள் வாழ்த்துப்பாடலை, குரு பிரம்மா குரு விஷ்ணுஹு மற்றும் மாணிக்க வீணை ஏந்தும் பாடலையும் அம்மாவின் மருமகள் சந்தியா அவர்கள் பாடி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்கள்.
இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் திரு லக்ஷ்மண் அவர்களின் வரவேற்புரையாற்றினார். இங்கே ஒன்று குறிப்பிடப் படவேண்டும். அம்மாவின் இணையதள வலையை துவங்கியது2003 ஆம் ஆண்டு இதே நவம்பர் மாதம் 13ஆம் தேதிதான் சுசீலாம்மா குழுவைச் சேர்ந்த திரு ராஜகோபால் அவர்கள் இணைய தளத்தைப்.பற்றி பேசினார். கூடவே அது சம்பந்தமான காணொளியும் போடப்பட்டது.
அதன் பிறகு திரு ராஜேஷ் குமார் அவர்கள் அமெரிக்காவிலிருந்து தயாரித்து அனுப்பிய அம்மாவை பற்றிய காணொளி ஒன்று ஒளிபரப்பப் பட்டது. அதில் அம்மாவின் வித விதமான பாடல்கள், வித்யாசமான பாடல்கள், அம்மாவின் தனித் தன்மை, அம்மாவின் சாதனை போன்ற பல வற்றை அழகாக விளக்கினார். அவர் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாதது எங்களுக்குப்பெரிய குறை தான். அவருடைய பெற்றோர் கலந்து கொண்டது ஆறுதலாக இருந்தது.
அடுத்து திரு கலை குமார் அவர்கள் கின்னஸ் விருது கிடைத்த கதையை விவரமாக விளக்கினார். அதில் இருந்த சிரமங்கள், உழைப்பு, பாடல்களை எப்படி சேகரித்தார், எப்படி வலை தளத்தில் ஏற்றினார்கள், எத்தனை கேள்விகளை கின்னஸ் அதிகாரிகள் கேட்டார்கள், எப்படி அதை எல்லாம் நேர்கொண்டு, 5 வருட தவத்திற்கு பிறகு கின்னிஸ் கிடைத்தது என்பதை அழகாக விளக்கினார். ஸ்ரீராம் லக்ஷ்மனண் அவர்கள், கின்னிஸ் அதிகாரிகள் எப்படி எல்லாம் கேள்விகள் கேட்டார்கள், அவற்றிக்கு என்னவெல்லாம் செய்தார்கள் என்பதை விளக்கினார். இவர்களின் விளக்கங்களைக் கேட்ட ரசிகர்கள் ஆச்சரியத்திலும், பிரமிப்பிலும் உறைந்தனர். பலத்த கரவொலியுடன் நிகழ்ச்சி தொடர்ந்தது.
அதன் பிறகு திரு காந்தி கண்ணதாசன் அவர்கள், திருமதி சத்யப்ரியா, திரு பாலன் அவர்கள், சாய் கிருஷ்ணா அவர்கள், ரசிகர்கள் திரு சங்கர் குருமூர்த்தி அவர்கள், திருமதி கோதை தனபாலன் அவர்கள், திருமதி பானுமதி கிருஷ்ணகுமார் அவர்கள், டாக்டர் புவனா அவர்கள், திருமதி ஜெயஸ்ரீ அவர்கள் அம்மாவின் பாடல்களை பற்றி அவர்கள் பார்வையில் விவரித்தார்கள்.
நேரமின்மை காரணமாக, அம்மாவின் அரிய மற்றும் கடினமான பாடல்கள் பற்றிய ஒரு காணொளி ஸ்ரீராம் அவர்கள் தயாரித்தது இடம் பெறவில்லை. அதே போல பாடல் புதிர் ஒன்றுக்கும் ஏற்பாடு செய்ய பட்டிருந்தது. அதுவும் இடம் பெறவில்லை.
அதன் பிறகு அம்மா கேக் வெட்ட மருமகள் சந்தியா பாடலை ஆரம்பிக்க அனைவரும் வாழ்த்திப்பாடுவதில் கலந்து கொண்டனர். இதில் நாம் கவனிக்க வேண்டிய ஒன்று, அங்கு அருகில் கூடி இருந்தவர்கள் மெழு வர்த்தியை ஏற்றி ஊதி அணைக்க சொன்னார்கள். அதற்கு அம்மா மறுத்து விளக்கை ஏற்றி அணைக்க கூடாது என்று சொல்லி மெழுகு வர்த்தியை வெளியில் எடுத்து விட்டு கேக் மட்டும் வெட்டினார்கள். இதைக்கண்ட அனைவரும் ஆச்சரியப்பட்டார்கள்.
அதன் பிறகு ஆதிமூலம் அவர்களையும், தினமலர் குழுமத்தை சேர்ந்தவர்களையும் கௌரவப்படுத்தி நினைவு பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டது. அது போல திரு காந்தி அவர்களையும் கெளரவித்து நினைவு பரிசு வழங்கப்பட்டது. பிறகு ரசிகர்கள் அனைவரும் அம்மாவை வாழ்த்தி, ஆசி பெற்று, பரிசு பொருள் வழங்கிச் சென்றனர். யாரும் சொல்லாமலே, அனைவரும் அமைதியாக, பொறுமையாக இருந்தது மனதுக்கு இதமாக இருந்தது.
ரசிகர்கள் சந்திப்பு நடக்கும்போதே உணவு தயாராக இருந்ததால், அம்மாவைப் பார்த்தவர்கள் நேராக சாப்பிட சென்று விட்டனர். அனைவரின் கவனத்தையும் , மனதையும் கவர்ந்தது அங்கே வைக்கப்பட்டிருந்த உணவு வகைகள். சாப்பிட்டு முடித்து விட்டு வெளிய வந்த அனைவரும் உணவின் சிறப்பைப் பற்றியும், ருசியையும் புகழ்ந்தனர். அனைவரும் வயிராற உண்டு அம்மாவை மனமார வாழ்த்தி, மன நிறைவோடு விடை பெற்றனர்.
அம்மாவிற்கும் அத்தனை ரசிகர்களை ஒரே இடத்தில சந்தித்து, அவர்களோடு பிறந்த நாள் கொண்டாடியதில் மட்டற்ற மகிழ்ச்சி. நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, அம்மாவை வணங்கி வாழ்த்தி, வாழ்த்து பெற்ற அனைவருக்கும் நன்றி. விரைவில் மற்றொரு நிகழ்ச்சியில் சந்திப்போம்.
இந்த நிகழ்வுக்காக தங்கள் நேரத்தை ஒதுக்கி உருதுணையாக இருந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.

No comments:

Post a Comment