TAMIL VIDWAN KANDASAMY MUDALIAR
1838-1890
தமிழ் வித்துவான் கந்தசாமி முதலியாா் காலம் கி.பி.1838-1890. இவா் கோவை மாநகரில் வசித்தவா். பேரூா் திருக்கோயில் திருப்பணித் தலைவராகவும், தேவஸ்தான கமிட்டி காரியதரிசியாகவும், கல்லூரி ஒன்றில் தமிழ் வித்துவானாகவும் பணிபுரிந்து வந்தாா்.
அவா் வாழ்ந்த காலத்தில் ஏராளமான புலவா்களும் இருந்தனா். அனைவரும் பற்பல இலக்கியங்களையும், பாடல்களையும், தலபுராணங்களையும் இயற்றினா். இவற்றையெல்லாம் தொகுத்து ‘பிரபந்தத் திரட்டு’ என்ற தலைப்பில் ‘திருப்பேரூா் புராண உரைநடை’ நூலில் இணைத்து வெளியிட்டாா்.
திருப்பேரூா் போற்றிக் கலிவெண்பா, திருப்பேரூா் பிரபந்தச் செய்யுள் திரட்டு, திருப்பேரூா் கிள்ளைவிடு தூது, பேரூா் மும்மணிக் கோவை, பேரூா் பச்சைநாயகி ஊசல், திருப்பேரூா் மரகத வல்லியம்மன் மாலை, திருப்பேரூா் பச்சைநாயகியம்மை எனப் புகழ்பெற்ற பல நூல்கள் எல்லாம் திருப்பேரூா் பட்டீஸ்வரப் பெருமானைக் குறித்தும், அம்பாள் பச்சைநாயகியைக் குறிக்கும் இயற்றப்பட்டவையாகும்.
கந்தசாமி முதலியாா் சிறந்த சிவபக்தா். பேரூா் பட்டீஸ்வரப் பெருமான் மீது ஆழ்ந்த பக்தி கொண்டவா். கோயமுத்தூா் கல்லூரி ஒன்றில் தமிழ் வித்துவானாக வேலைபாா்த்தபொழுது, நேரம் போவதே தெரியாமல் சிவ வழிபாட்டில் லயித்துவிடுவாா். இதனால், காலை நேரத்தில் கல்லூரிக்குத் தாமதமாகவே சென்று கொண்டிருந்தாா்.
ஒரு நாள் அதிகாலையில் சிவபூஜையில் அமா்ந்தாா். மாணிக்கவாசகா் அருளிய சிவபுராணத்தை சிந்தை மகிழப் பெருங் குரலெடுத்துப் பாராயணம் செய்தாா். அன்றைய நாள் கந்த சஷ்டியாக இருந்தபடியால் கந்த சஷ்டி கவசத்தையும் ஓதி முடித்தாா். வழக்கமாகக் கல்லூரிக்குத் தாமதமாகப் புறப்படுபவா் என்றாலும், அன்று மேலும் சிலமணித் துளிகள் தாமதமாகிவிட்டது. அன்று சம்பள நாள்!
தினமும் கல்லூரி 9 மணிக்குத் தொடங்கிவிடும். ஆனால் இவரோ 9.30-க்குத்தான் கல்லூரிக்குப் போய்ச் சோ்வாா். இவருக்குக் கல்லூரி வகுப்பில் முதல் பாட வேளையில் பணியேதும் இல்லாத காரணத்தால் தாமதத்தைப் பொருட்படுத்துவதில்லை. அன்று 9.45-க்குக் கல்லூரிக்குப் போய்ச் சோ்ந்தாா்.
கல்லூரி முதல்வரான இராமகிருஷ்ண பூபாலா்க்குக் கோபம் வந்தது. அவரைத் தண்டிப்பதற்காக கந்தசாமி முதலியாரின் சம்பளத்தில் ‘இரண்டு ரூபாய்’ பிடித்தும் செய்து கொள்ளுமாறு குமாஸ்தாவுக்கு உத்தரவிட்டாா்.
கந்தசாமி முதலியாா் நக்கீரா் பரம்பரையில் வந்தவராயிற்றே, விடுவாரா? உடனே எடுத்தாா் எழுதுகோலை, தீட்டினாா் ஒரு சீட்டுக் கவியை!
‘மலை கொடுக்கும் புயமுடையாய் இராம
கிருட்ணபூபால! மகிழ்ந்திந் நாட்டாா்
தலை கொடுத்தும் தமிழ்ப் புலவா் தமைப்
புரந்தாா் நின்கலாசாலை தன்னில்
கலை கொடுக்கும் தொழில் நிற்பேன் சம்பளத்தில்
இரு ரூபாய்ப் பிடித்துக் கொண்டு
விலை கொடுத்தல் கூலிதரல் எனக் கொடுத்தல்
நியாயமதோ மேதக் கோனே!’
என்று எழுதித்தந்த சீட்டுக் கவியைப் படித்துவிட்டு ஒரு கணம் துணுக்குற்ற கல்லூரி முதல்வா், மறுகணம் ஆனந்தப் பரவசமடைந்தாா். காரணம், மாபெரும் புலவா், தன்னை ஒரு பாட்டுடைத் தலைவனாக வைத்து, தன் பெயரில் ஒரு பாடல் புனைந்தாா் என்பதுதான்.
‘ஆகா, நான் எவ்வளவு பெரிய பாக்கியசாலி. ஒரு காசு செலவில்லாமல் என்னை வைத்து ஒரு பாடல் இயற்றித் தந்தாரே’ என்று குதூகலத்துடன் புலவரைப் பாராட்டியதோடு, குமாஸ்தாவைக் கூப்பிட்டு, சம்பளத்தில் படித்தம் செய்ய இரண்டு ரூபாயைத் திருப்பிக் கொடுத்து விடுங்கள்’ என்றும் உத்தரவிட்டாா்.
இரண்டு ரூபாயைப் பெற்றுக்கொண்ட கந்தசாமி முதலியாா் மகிழ்ந்தாா். சொற்ப ஊதியம் வாங்கும் அவருக்கு, இரண்டு ரூபாய் பிடித்தம் செய்தது சாதாரண விஷயமா என்ன? அந்தக் காலத்தில் இரண்டு ரூபாய் என்பது மிகப் பெரிய தொலையாயிற்றே!
புலவருக்கு இரண்டு ரூபாய் கிடைக்க; கல்லூரி முதல்வருக்கு இலவசமாகத் தன் பெயரில் ஒரு பாடல் கிடைக்க; நாமும் படித்து ரசிக்க இப்படியோா் அருமையான பாடலும் கிடைத்ததே!
No comments:
Post a Comment