Wednesday 14 April 2021

MGR AND TRICHY SOUNDARAJAN

 

MGR AND TRICHY SOUNDARAJAN



ஒருமுறை திருச்சி ஹோட்டலில் தங்கியிருந்த எம்.ஜி.ஆர் அவர்களை மதிய உணவிற்காக, எனது வீட்டிற்கு அழைத்துப் போகச் சென்றிருந்தேன்.
மணி மதியம் 1.30 க்கு மேல் ஆகிவிட்டது. அவரே கேட்டார்.
"சாப்பிடப் போகலாமா?
"எங்க போகலாம்? "
"ஸ்ரீரங்கம் போகலாம்"
"அங்கேயும் நல்ல நான்-வெஜ் ஹோட்டல் இருக்கா?"
"இருக்கே!" என்றேன்.
நானும் எம்.ஜி.ஆர் அவர்களும் எனது காரில் ஏறி பாலக்கரை வந்து கொண்டிருக்கையில், டிரைவரிடம் கத்தையாக நூறு ரூபாய் நோட்டுக்களைக் கொடுத்து ஏதோ கிசுகிசுத்தார்.
பத்து நிமிடத்தில் பழக்கூடை முதற்கொண்டு பல பார்சல்களுடன் வந்த டிரைவர், வண்டியை ஸ்ரீரங்கம் நோக்கிச் செலுத்தினார்.
நான், "என்ன அண்ணே, நிறைய பார்சல்கள் வாங்கியிருக்கீங்களே,நாம் வேற யாரையும் பார்க்கப் போகிறோமா?" என்று கேட்டேன்.
வண்டி ஸ்ரீரங்கம் ஊருக்குள் நுழைந்து ரங்கநாதன் கோயிலைத் தாண்டும் சமயம், பேசிக் கொண்டே வந்தவர், இருகையையும் கூப்பி கைகளை உயர்த்தி வணங்கினார். ஸ்ரீரங்கநாத பெருமாளிடம் அவருக்குள் ஈடுபாடு என்னைச் சற்று சிலிர்க்கத்தான் வைத்தது.

"என்னப்பா சௌந்தர்ராஜா, ஹோட்டல் எங்கப்பா ?" என்றார்.
"வாங்க, அவசரப்படாதீங்க!" என்றேன்.
"உங்க வீட்ல ஏதாவது ஹோட்டல் வைச்சிருக்கீங்களா?" என்றார் சிரித்துக் கொண்டே.
கார் ஸ்ரீரங்கம் தேவி டாக்கீஸ் எதிரில் வளைந்து என் வீட்டு வளாகத்தில் நின்றது.
இருவரும் காரை விட்டு இறங்கினோம். என் துணைவியார் புன்னகையோடு எம்.ஜி.ஆர் அவர்களை வரவேற்றார். மணி 2.15 ஆகிவிட்டிருந்தது.
"அண்ணே சாப்பிடலாமா ?" என்றேன்.
"சற்றுப் பொறுங்கள் இது வந்துவிடுகிறேன்" என்று கூறி வெளியே சென்றவர் பழக்கூடையை, பார்சல்கள் போன்றவற்றை அவரே எடுத்து வந்து உள்ளே டேபிளில் வைக்க, நான் பதறிப் போனேன்.
அவர் நினைத்திருந்தால் என்னையோ அல்லது எனது டிரைவரையோ அழைத்து அந்த வேலையைச் செய்ய சொல்லியிருக்கலாம்.
அவருக்கு ஒருவரைப் பிடித்துப் போய்விட்டால், இது போன்று அடுத்து என்ன செய்வார் என்பதைப் புரிந்துகொள்ளவே முடியாது.
சாப்பாட்டு மேஜையில் எல்லா வகைகளும் தயாராக இருந்தது. எம்.ஜி.ஆர் அவர்கள் கையை அலம்பிக்கொண்டு வந்து சாப்பிட அமர்ந்தார்.
"அப்பப்பா ! என்ன இது ஒரு முனியாண்டி விலாஸ் ஹோட்டலையே வீட்டுக்குள்ளே கொண்டு வந்துட்டீங்களா?" என்று சிரித்துக்கொண்டே கேட்டார்.
நாங்கள் முழுக்க முழுக்க சைவம் என்பது எம்.ஜி.ஆர் அவர்களுக்கு ஏற்கனவே நன்றாகத் தெரியும்.
"ஏம்பா எல்லாம் படைச்சு வைச்சு என்ன பிரயோசனம். நான் மட்டும் உங்க முன்னால் அசைவம் சாப்பிடுவதற்கு எனக்கு மனசுக்கு கொஞ்சம் கஷ்டமா இருக்கே" என்றாரே பார்க்கலாம்.
கோடான கோடி பேர்களின் பசியைப் போக்கிய அந்த மாமனிதரின் ஒரு வேளைப் பசியை போக்க எனக்குக் கிடைத்த இந்த வாய்ப்பில் அவருக்கு மனதில் இப்படி ஒரு எண்ணமா..என ஒரு கணம் கலங்கிப்போனேன்.
"அண்ணே நீங்க அப்படியெல்லாம் நினைக்கக் கூடாது. எங்க குடும்பத்திலே நீங்க மூத்தவர். இது உங்க வீடு.." என்று ஏதேதொ சொன்னேன். பிறகு ஒரு குழந்தையைப் போல சாப்பிட ஆரம்பித்தார்.
நான் பக்கத்தில் அமர்ந்து கத்தரிக்காய் புளிக்குழம்பு ஊற்றி சாப்பிட்டுக் கொண்டு இருந்ததைப் பார்த்த அவர்,
"அது என்ன குழம்பு?" என்று கேட்க,
"கத்தரிக்காய் புளிக்குழம்பு" என்றேன்.
"அத எனக்கு கத்திரிக்காயோடு சேர்த்து ஊத்து" என்று கூறி கையை நீட்டிவிட்டார். நன்றாக இருக்கிறதென்று ருசித்துச் சாப்பிட்டார்.
நான் அவரது அந்த குழந்தைத்தனத்தையே ஆவலுடன் பார்த்துக் கொண்டே இருந்தேன். நான் ஏதோ ஒரு சிந்தனையில் இருப்பதைப் புரிந்துகொண்டவர், என்னவென்று கண்களாலேயே கேட்க, நான் சொன்னேன்,
"அண்ணே எனக்கு 'அன்பே வா' படத்துல் வர்ர 'நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத் தான் நல்ல அழகி என்பேன்' என்கிற பாட்டு தான் ஞாபகம் வருது.
அதுல அந்த பாட்டு ஆரம்பிக்கும் போது, நீங்க கறுப்பு கலர் கண்ணாடியணிந்து தொப்பியோட, கையில ஒரு ஸ்டிக்கோட ஒரு மரத்துக்கடியில உட்கார்ந்திருப்பீங்க,
அந்த பாட்டின் முதல் ரெண்டு வரியக் கேட்டுட்டு, நீங்க உட்கார்ந்திருப்பது தெரியாம சரோஜாதேவி அங்க வந்து அந்த மரத்து மேல சாஞ்சி நின்னு, எங்கயோ பார்த்துக்கிட்டு தொப்பியையும் முகத்தையும் தடவ, அவரது விரலைக் கடிச்சுருவீங்க.
'மேன்னையான என் தவத்தைக் கலைத்த மேனகையே பிடி சாபம்னு' என்னென்னமோ சொல்லுவீங்க...
அவங்களும் 'நான் ஒண்ணும் உங்களத்தேடி வரல, ஒரு இனிமையான பாட்டைக் கேட்டு என்னையறியாம வந்துட்டேன்னு' ஏதோ சொல்லுவாங்க..
நீங்களும் 'அறிந்து வருவது மோதல், அறியாமல் வருவது காதல்'-னு சொல்லுவீங்க...
அதுக்கு அவங்க 'கத்தரிக்காய்'-னு சொல்ல,
நீங்க 'வாழ்க கத்தரிக்காய்!' சொல்லுவீங்க.
அதுதான் இப்ப எனக்கு ஞாபகம் வந்ததுன்னு சொன்னேன்.
அவ்வளவு தான் எம்.ஜி.ஆர் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்து விட்டார்.
அதற்கு பிறகு எம்.ஜி.ஆர் நிறைய பேர்களிடம் 'வாழ்க கத்தரிக்காய்' என்று சொல்லக் கேட்டிருக்கிறேன்.
அவர்கள் எல்லாம் பேந்தப் பேந்த முழிப்பார்கள். எனக்கு மட்டும் தானே அதன் அர்த்தம் புரியும்."
- திருச்சி சௌந்தர்ராஜன்

No comments:

Post a Comment