Sunday 18 April 2021

V.O.CHIDAMBARAM AND GANDHIJI CORRESPONDENCE

 


V.O.CHIDAMBARAM AND GANDHIJI CORRESPONDENCE


வ.உ.சி. 150. நினைவலைகள் (பதிவு எண். 9/150)



சென்னையில் பெரியவர் வ.உ.சி – மகாத்மா காந்தியடிகள் கடித பரிவர்த்தனை


கடந்த 106 வருடங்களுக்கு முன்பாக (17.04.1915) இதே நாளில் திரு. காந்தியடிகள் தனது மனைவியுடன் சென்னை வருகிறார்.   சென்னை வந்த காந்தியை பெரியவர் வ.உ.சி. இரயிலில் இறங்கும் வேளையில் பார்த்திருக்கிறார். அச் சமயம் வ.உ.சிதம்பரனார் மயிலாப்பூர் முண்டக கன்னியம்மன் கோவில் அருகே உள்ள எண்: 40, இலக்கம் கொண்ட பரிபூர்ண விநாயகர் கோவில் தெருவில் வசித்திருக்கிறார். மறுநாள் அதாவது 106 வருடங்களுக்கு முன்பாக இதே நாளில் 18.04.1915 அன்று தம்பு செட்டித் தெருவில் ஜி.ஏ. நடேசன்  வீட்டில் தங்கியிருந்த காந்தியடிகள் அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார்.


டியர் பிரதர் காந்தி,



நேற்று தாங்களும்  தங்களது மனைவி கஸ்தூரிபாய் அவர்களும் ரயிலில் இருந்து இறங்கும் போது, உங்கள் இருவரையும் பார்க்கும் பேறு  எனக்குக் கிடைத்தது.

இந்த ஊரில் இருந்து கிளம்பும் முன்பாக உங்களைச் சந்தித்து உரையாட விரும்புகிறேன்.


இப்படிக்கு


வ.உ. சிதம்பரனார்

மயிலாப்பூர்.


20.04.1915 அன்று சென்னை பிராட்வேயில் உள்ள தம்பு செட்டி தெருவில் ஜி.ஏ. நடேசன் வீட்டில் தங்கியிருக்கும்  காந்தியின் கைக்கு கடிதம் கிடைத்து விடுகிறது. இதற்கு பதில் கடிதம் காந்தி எழுதுகிறார்.



“அடுத்த வெள்ளிக்கிழமை காலை ஆறு மணிக்கு தாங்கள் வந்தால் உங்களுக்கு ஒரு சில நிமிடங்களை ஒதுக்கித் தர இயலும். 


இக் கடிதம் வ.உ.சி.யின் கைக்கு கிடைத்துவிடுகிறது.  “ஒரு சில நிமிடங்கள்” என்பது பெரியவர் வ.உ.சி.யை கொஞ்சம் யோசிக்கத்தான் வைத்திருக்கும். மிகப் பெரிய பாய்ச்சலை, அதிர்வை பிரிட்டீசாரை தூங்க விடாமல் ஆக்கிய பெரியவருக்கான மதிப்பு ஒரு சில நிமிடங்கள் என்பது அவருடைய ஆளுமைக்கு உகந்ததல்ல என்பதே என் கருத்து.


ஆனால் பெரியவர் வ.உ.சி. இந்த தடவை பதில் கடிதம் எழுதுகையில்  “டியர் பிரதர் ” என்று விளிக்காமல் அலுவலக மொழி தொனியில் “ டியர் சார் காந்தி”  என்று குறிப்பிட்டு பின் வருமாறு பதிலளிக்கிறார்.


ஏறகனவே காந்தி அவர்களுடைய கடிதத்தில் குறிப்பிடப்பட்ட “ஒரு சில நிமிடங்களுக்கு மேல் நமது உரையாடல்   தாண்டிச் சென்று விடுமென அஞ்சுகிறேன். உங்களது மதிப்பு மிக்க நேரத்தில் குறுக்கீடு செய்து  தொந்தரவு செய்ய விரும்பவில்லை என்று எழுதியுள்ளார்.


இக் கடிதம் வந்தடைந்த பின்பு காந்தி,  வ.உ.சி. அவர்களே! நீங்கள் என்னை பார்க்க வர முடியாவிட்டால் நானே வந்து உங்களைச் சந்திக்கிறேன். ஆனால் வெள்ளி அல்லது சனிக் கிழமை காலை ஆறு மணிக்கு நான் தங்கியுள்ள இடத்தில் நாம் சந்திக்க சில நிமிடங்கள் ஒதுக்க முடியுமா என்று எழுதுகிறார்.


இக் கடிதத்திற்கு பதில் எழுதிய வ.உ.சி.  ‘என்னால் நீங்கள் குறிப்பிடும் நேரத்தில் வந்து உங்களைச் சந்திக்க இயலாது. ஏனென்றால் மயிலாப்பூருக்கு டிராம் வண்டி காலை 5.30 மணிக்குப் புறப்படும். அந்த வண்டியில் ஏறி நீங்கள் குறிப்பிட்ட 6.00 மணிக்கு தம்பு செட்டி தெருவுக்கு வந்து சேர இயலாது என கருதுகிறேன். மேலும் ஒரு சில நிமிடங்களில் மட்டுமல்ல … எனது தேசப் பற்றாளர்களுக்காக எனது வாழ்க்கை முழுவதையுமே நான் செலவிட தயாராக இருக்கிறேன். என்னுடைய அனைத்து நேரமும், எனது நாட்டுக்கும், நாட்டின் மீது பற்றுள்ளவர்களுக்கும் மட்டுமே ஓதுக்க விரும்புகிறேன். இவை இரண்டிற்கும் பிறகு தான் கடவுளுக்கே நேரம் ஒதுக்குகிறேன். என்று வ.உ.சி. எழுதுகிறார்.


1915 ல் பரிபூர்ண விநாயகர் கோவில் தெருவில் வ.உ.சி இத் தெருவில் வாழ்ந்த போதுதான்  சுப்பிரமணிய சிவாவின் ஞானபானு  பத்திரிக்கை அலுவலகம் இருந்தது. அச் சமயம் சிவா – வ.உ.சி சந்திப்பு நிகழ்வு அடிக்கடி இருந்திருக்கலாம். சிவா தொழிலாளர் சங்க அமைப்புக் கூட்டம் எல்லாவற்றிலும் வ.உ.சி.யும் பங்கேற்றிருக்கிறார்.


1915 வாக்கில் தமிழில் எழுத்து குறை என்ற ஞானப்பானு இதழில் வெளிவந்த கட்டுரைக்கு பாரதியை விமர்சித்து வ.உ.சி கட்டுரை எழுதினார். 


இன்று மயிலாப்பூர் பரிபூர்ண விநாயகர் கோவில்  தெருவில் வ்சிக்கும் குடிமைவாசிகளுக்கு வ.உ.சி. வாழ்ந்த தெரு என்ற தடயமே தெரியாது கடந்து போகின்றனர்.


வரவிருக்கிற வ.உ.சி. 150 ஆம் ஆண்டை ஒட்டி அவரைச் சிறப்பிக்கும் வகையில் மயிலாப்பூர் பரிபூர்ண விநாயகர் வீதியில் பெரியவர் வ.உ.சி வாழ்ந்த தடயங்களை ஞாபகப்படுத்தும் விதமாக என்றும் அழியாத நினைவுப்பலகை வைத்து அவரை கவுரப்படுத்தினால் நல்லதாக இருக்கும். அரசாங்கமே எடுத்து செய்தால் நல்லதே அல்லது மயிலாப்பூர் தொகுதிக்குட்பட்ட சட்டமன்ற உறுப்பினருக்கு இந்த விசயத்தை கொண்டு செல்லுங்கள்.  மயிலாப்பூர் சமூக அமைப்பைச் சார்ந்த ஏதாவது அமைப்பினர் கூட நினைவுப் பலகை வைத்து போற்ற முன்னெடுப்பு செய்யலாம்.


மூலம்: அனிதா கு. கிருஷ்ணமூர்த்தி. 2013. காந்தி கணக்கு. சூரியன் பதிப்பகம்.


பெ.சு. மணி.  2012. ஜி.ஏ.நடேசன்: பதிப்பாளர், இதழாளர், தேசபக்தர். பூங்கொடி பதிப்பகம்.


கடிதம்: மயிலாப்பூரில் பெரியவர் வ.உ.சி. வசித்த போது காந்தி அவர்களிடம் தென்னாப்பிரிக்கா தமிழர்கள் தனக்கு கொடுத்தனுப்பிய பணத்தை கொடுக்க வேண்டி திரு. காந்தி அவர்களுக்கு எழுதிய மடலின் ஒரு பகுதி.

No comments:

Post a Comment