Saturday 17 April 2021

BYZANDIUM DYNASTY - JUSTIN II BIOGRAPHY

 


BYZANDIUM DYNASTY  - JUSTIN II BIOGRAPHY


‘‘எனக்கு அ... அடுத்து... அரியணை ஏ... ஏற வேண்டியது... ஜஸ்டின்!’’



கி.பி. 565 நவம்பர் 14 நள்ளிரவில் பைசாந்தியப் பேரரசர் முதலாம் ஜஸ்டினியன், தமது மரணப்படுக்கையில் கூறிய இறுதி வார்த்தைகள் இவை என்று நம்பப்படுகிறது. அதை உடனிருந்து கேட்ட ஒரே நபர், அரண்மனையின் தலைமை அதிகாரி பொறுப்பிலிருந்த கல்லினிகஸ். இந்த விஷயத்தை அவர்தான், பேரரசி தியோடோராவிடம் கொண்டு போய்ச் சேர்த்தார்.

83 வயதுவரை வாழ்வாங்கு வாழ்ந்துவிட்டுத்தான் இறந்து போயிருக்கிறார் என்றாலும், ஜஸ்டினியனின் மரணம் பைசாந்தியப் பேரரசுக்கு பேரிழப்பே. காரணம், இவரின் 38 வருட ஆட்சிக்காலம், பைசாந்தியப் பேரரசின் பொற்காலம். இத்தாலியின் பெரும் பகுதி, பால்கன் பகுதிகள், ஸ்பெயினின் தெற்கில் ஒரு பகுதி, வட ஆப்ரிக்காவில் சில பகுதிகள் என்று பைசாந்தியப் பேரரசின் எல்லைகளை ஏராளமாக விரிவாக்கியவர் இவரே. ரோமானியச் சட்டங்களை நெறிப்படுத்தி, தன் ராஜ்ஜியத்தில் அமலுக்குக் கொண்டு வந்தவர். மத்தியத் தரைக்கடலைச் சுற்றி மீண்டும் வலுவான ரோமப் பேரரசை நிறுவ வேண்டும் என்பது இவரது பெருங்கனவு. அது அரைகுறையாக நிறைவேறுவதற்கு முன்பாக, கிழவர் மண்டையைப் போட்டுவிட்டார்.

அடுத்தது?

ஜஸ்டினியனுக்கு நேரடி வாரிசு கிடையாது. ‘உங்களில் யார் அடுத்த பேரரசர்?’ போட்டியில் ஜஸ்டினியன் பரம்பரையில் வந்த ஏழு பேர் எதிரும் புதிருமாக முறைத்துக்கொண்டிருந்தார்கள். அதனால் என்ன? அவரே ‘ஜஸ்டின்’ என்று ஒரு நாமகரணத்தைச் சொல்லிவிட்டாரே என நினைக்கலாம். என்றாலும் குழப்பமிருந்தது. காரணம், ஏழு பேரில் இரண்டு ‘ஜஸ்டின்’கள் இருந்தார்கள்.



ஒருவர் ஜஸ்டினியனின் உறவினரும், படையின் முதன்மைத் தளபதியுமான ஜெர்மானஸின் மகன் ஜஸ்டின். இந்த ஜஸ்டின் கல்வி அறிவும், போர் அனுபவங்களும், தலைமைப் பண்பும் மிக்கவர். ஜஸ்டினியனின் மனம் கவர்ந்த வலிமையான தளபதி. பேரரசர் ஆவதற்குரிய பத்துப் பொருத்தங்களும் நிரம்பியவர்.

இன்னொருவர், ஜஸ்டினியனின் சகோதரி விஜிலாண்டியாவின் மகனான ஜஸ்டின். கல்வி அறிவு கொண்டவர் என்றாலும், வலிமையோ, போர் அனுபவங்களோ இல்லாதவர். சொகுசு சுந்தரர்.

‘இருவரில் எந்த ஜஸ்டினாக இருக்கும்’ என்று கல்லினிகஸ் குழம்ப, பேரரசி தியோடோரா யோசிக்கவே இல்லை. ஜெர்மானஸை அவருக்குப் பிடிக்காது. ஆகவே ஜெர்மானஸின் மகனைப் புறந்தள்ளினார். இன்னொரு ஜஸ்டின், அவரது செல்ல மருமகளான சோஃபியாவைத் திருமணம் செய்து கொண்டிருந்தார். ஆகவே இரண்டாவது ஜஸ்டினையே ‘பைசாந்தியப் பேரரசர் இரண்டாம் ஜஸ்டின்’ என்று அறிவிக்க முடிவெடுத்தார் தியோடோரா. அந்த ஜஸ்டினுக்கு ரகசிய அழைப்பு அனுப்பப்பட்டது. 

தலைநகர் கான்ஸ்டான்டிநோபிள் அரண்மனையைச் சுற்றி பலத்த காவல். ஏற்கெனவே அங்கே செனட் உறுப்பினர்கள் வரவழைக்கப்பட்டிருந்தார்கள். தியோடோராவின் உத்தரவுப்படி இரண்டாம் ஜஸ்டினை அடுத்த பேரரசராக ஒருமனதாக அவர்கள் தேர்ந்தெடுத்தார்கள். ‘‘பேரரசர் ஆவதற்கு உங்களுக்குச் சம்மதமா?’’ என்று மதகுரு ஒப்புக்குக் கேட்பது மரபு. ‘‘அய்யகோ! என்னால் இயலாது’’ என்று போலியாக நடித்து மறுப்பதும் மரபே. பின்பு, ‘‘உங்களுக்காக இந்தச் சுமையை ஏற்றுக்கொள்கிறேன்’’ என்று சீன் போடுவதும் நடக்கும். அதையெல்லாம் இரண்டாம் ஜஸ்டினும் செவ்வனே செய்தார். தனது 45-வது வயதில், பைசாந்தியப் பேரரசராகச் சத்தமின்றி முடிசூட்டிக் கொண்டார். அதன்பிறகே, ஜஸ்டினியனின் இறப்புச் செய்தி வெளியிடப்பட்டது. தேசம் கண் கலங்கியது.

இரண்டாம் ஜஸ்டினின் ஓப்பனிங் இன்னிங்ஸ் நன்றாகத்தான் இருந்தது. முதல் காரியமாக, தன் மனைவி சோஃபியாவைப் பேரரசியாக அறிவித்தார். பழைய கடன்களை அடைத்தார். மக்களுக்குச் சுமையாக இருந்த சில வரிகளை நீக்கினார். காலியாகக் கிடந்த கஜானாவை நிரப்ப பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகளையும் மேற்கொண்டார். 

எல்லையில் சில முரட்டு இனக்குழுக்களுடனான மோதல் வாடிக்கையாக இருந்தது. அவர்களுக்கெல்லாம் மானியங்களும் லஞ்சமும் கொடுத்துக் கட்டுப்படுத்தி வைத்திருந்தார் முன்னாள் பேரரசர். ஜஸ்டின் அந்த மானியங்களை நிறுத்தினார். உடனே எல்லைகளில் பதற்றம். அவார், லொம்பார்ட்ஸ் போன்ற இனக்குழுக்கள் அட்டூழியங்களை ஆரம்பித்தனர். அவர்களை அடக்க, துருக்கியர்களுடன் கைகோத்துக் கொண்டு படைகளை அனுப்பினார் ஜஸ்டின். செலவுதான் இழுத்துக்கொண்டே போனதே தவிர, எதிரிகளை அடக்க முடியவில்லை. இந்தப் பிரச்னை ஒருபுறம் இழுத்துக் கொண்டிருக்கும்போதே, தேவையே இன்றி கிழக்கு எல்லையில் பெர்சியாவின் மீது படையெடுத்தார். பெர்சியர்களின் வசமிருந்த அர்மேனியாவின் சில பகுதிகளை பைசாந்தியர்கள் கைப்பற்றினர். பதிலுக்கு பெர்சியர்கள் படை திரட்டி வந்தபோது, பைசாந்தியர்களால் கட்டுப்படுத்தவே இயலவில்லை.

போர் அனுபவமின்மை. திட்டமிடுதலில் திறமையின்மை. தளபதிகள் மீது நம்பிக்கையின்மை... இந்த இன்மைகளால் கடும் இன்னல்களுக்கு ஆளானார் இரண்டாம் ஜஸ்டின். கோபத்தின் விளைநிலமானார். அதனால் முட்டாள்தனங்கள் தொடர்ந்தன. முன்னேறிவந்த பெர்சியப் படைகள், பைசாந்தியப் பேரரசின் முக்கிய நகரங்களுள் ஒன்றான தாராவைக் கைப்பற்றின.

ஜஸ்டினியன் விரிவுபடுத்திய பைசாந்தியப் பேரரசின் பல பகுதிகளை இழந்து, தோத்தாங்குளியாகத் துவண்டு போனார் ஜஸ்டின். மனஅழுத்தம் எகிறியது. மூளை பிசகியது. பேச்சு உளறலானது. நடவடிக்கைகள் நகைப்புக்குள்ளாயின. ‘பேரரசர் எப்போது என்ன செய்வார்...’ என்ற பீதி அரண்மனை வளாகத்தில் எப்போதும் நிலவியது. ‘‘போச்சு... பேரரசர் ஓட ஆரம்பித்துவிட்டார்’’ என்று யாராவது பதறுவார்கள். பிரேக் பிடிக்காத தண்ணீர் லாரி போல அரண்மனையின் பரந்த முற்றங்களில் ஜஸ்டின் தறிகெட்டு ஓடிக் கொண்டிருப்பார். சேவகர்கள் அங்குமிங்கும் பாய்ந்து அவரைப் பிடிக்க முயற்சி செய்வார்கள். ஆயிரம் அழிச்சாட்டியங்கள் செய்தாலும் ‘ஹானரபிள் அரசர்’ அல்லவா. அவருக்கு வலிக்காமல், காயப்படுத்தாமல் பிடித்துத் தொலைக்க வேண்டும்! ஆனால், ஜஸ்டினோ தன்னைப் பிடிப்பவரை நன்றாகக் கடித்து வைத்துவிடுவார். அவர் வலியை வெளிக்காட்டக்கூடாது. என்ன இருந்தாலும், கடித்ததுப் பேரரசர் அல்லவா? வாயில் ரத்தம் வழிய புன்னகை செய்வார், அப்பாவி முகத்துடன்.

ஒருநாள்... ‘‘பேரரசியாரே! பேரரசர் சாளரத்தின் மீதேறி நின்று, குதிக்கப் போவதாக மிரட்டுகிறார்’’ – ஓடோடி வந்து பதறினான் ஒருவன். அவரைக் கீழே இறக்குவதற்குள் பெரும்பாடாகிவிட்டது. சோஃபியா, பேரரசர் புழங்கும் அறைகளிலுள்ள சாளரங்களுக்கெல்லாம் கம்பி பொருத்த ஏற்பாடு செய்தார்.

சில நேரங்களில் பேரரசர் கட்டிலுக்கடியிலோ, மெத்தைக்கு அடியிலோ அமைதியாகக் கிடப்பார். ஆள் இருப்பதே தெரியாது. ஆனால், எப்போது எப்படி மாறுவார் என்பது புரியாது. ஆக, பேரரசர் விழித்திருக்கும் நேரமெல்லாம் அவரது வெறியைக் கட்டுப்படுத்துவதற்காக இசைக்கருவிகள் இசைக்கப்பட்டுக்கொண்டே இருந்தன. சில சமயங்களில் அதற்கும் அடங்காமல் திமிறி எழுவார் ஜஸ்டின். நாற்காலியின் நான்கு கால்களிலும் சக்கரத்தைப் பொருத்தினார்கள். பேரரசரை உட்கார வைத்து உருட்டிக்கொண்டே அரண்மனையெங்கும் ஓடினார்கள். பேரரசர் குழந்தையாக மாறி, குதூகலமாகச் சிரிப்பார். 

இவற்றையெல்லாம் மீறியும் அசம்பாவிதங்கள் நிகழ்ந்தன. கழுத்திலிருந்தோ, தலையிலிருந்தோ ரத்தம் வழிய வழிய... பேரரசரின் அறைக்குள்ளிருந்து சேவகர்கள் ஓடி வருவதுண்டு. ஆம். சில பொழுதுகளில் யார் அருகில் வந்தாலும் கடித்துக் குதறினார் ஜஸ்டின். ‘‘ராஜாவுக்கு முத்திப் போச்சு. ரெண்டு பேரைக் கடிச்சே தின்னுட்டாராம்’’ என ராஜ்ஜியத்தில் மக்கள் பீதியுடன் பேசிக் கொண்டார்கள். சாதாரணன் என்றால் சிறையில் அடைக்கலாம். தண்டனை கொடுக்கலாம். பேரரசருக்கு யார் தண்டனை கொடுப்பது? அந்த அதிகாரம் யாருக்கும் இல்லையே!

ஒரு கட்டத்தில் பேரரசி சோஃபியா தீர்க்கமான முடிவொன்றை எடுத்தார். தனது விசுவாசத்துக்குரிய தளபதி டைபெரியஸுக்கு  ஆளும் அதிகாரத்தை (அந்தப் பதவியை ‘Ceaser’ என்று அழைப்பர்) வழங்கினார். அந்த நிகழ்வில் பேரரசர் இரண்டாம் ஜஸ்டின் தனது இறுதியான, தெளிவான உரையை நிகழ்த்தினார். ‘‘இந்தப் பதவி நான் உனக்கு வழங்குவதல்ல. இறைவன் வழங்குவது. பேரரசி உன் தாய். அவளுக்கு மரியாதை கொடு. அனுபவமிக்கவர்கள் ஆலோசனைகளைக் கேள். பழிவாங்கும் வெறியில் என்னைப்போல் முட்டாள்தனமாக நடந்து கொள்ளாதே. உன்னை நேசிப்பது போல் மக்களையும் நேசி. ஏழைகளின் தேவைகளை நிறைவேற்று!’’

உணர்வுபூர்வமான உரையில் அவை நெகிழ்ந்தது. பேரரசர் தம் கீரிடத்தை இறக்கி வைத்துவிட்டு ஓய்வெடுக்கக் கிளம்பினார். அடுத்த நான்காண்டுகளுக்கு சக்கரம் பொருத்தப்பட்ட நாற்காலி உருண்டுகொண்டே இருந்தது. கி.பி. 578, நவம்பர் 15 அன்று அதற்கு வேலையின்றிப் போனது. ஐம்பத்தெட்டு வயதில் இரண்டாம் ஜஸ்டின் இயற்கை எய்தினார். ‘பைத்தியக்கார பைசாந்தியர்’ என்ற பட்டம் மட்டும் வரலாற்றில் அவருக்கு நிலைத்தது.

சரி, இன்னொரு ஜஸ்டின் இருந்தாரே... என்ன ஆனார் அவர்? ஜஸ்டினியன் இறந்த சமயத்தில், அவர் எல்லைப் பகுதி பாதுகாப்பில் இருந்தார். அவர் அறியாமலேயே இரண்டாம் ஜஸ்டினை ரகசியமாக அரியணையில் ஏற்றினார்கள். ‘என்றைக்காவது தளபதி ஜஸ்டின் தனக்கு எதிரியாக விஸ்வரூபம் எடுக்கலாம்’ எனப் பேரரசர் ஜஸ்டின் பயந்தார். சதி ஒன்றில் தளபதி ஜஸ்டின் கொல்லப்பட்டார். ஒருவேளை அவர் பைசாந்தியப் பேரரசராக அரியணை ஏறியிருந்தால், உலகின் வரலாறு மாறியிருக்கக் கூடும். இரண்டாம் ஜஸ்டினுக்கும் பைத்தியம் பிடித்திருக்காது.

No comments:

Post a Comment