ஸ்டைல் சிவகாமசுந்தரி அ முத்துலிங்கம்
ஸ்டைல் சிவகாமசுந்தரி சிறு கதை அ முத்துலிங்கம் யாழ்ப்பாணம் டவுனுக்குப் போவதற்கு பஸ் டிக்கட் 10 சதம்தான். கொக்குவில் என்றால் 50 சதம். வவுனியாவுக்கு 4 ரூபா; கொழும்புக்கு 12 ரூபா. கொழும்புத்துறைக்கு ஒன்றுமே கொடுக்கத் தேவையில்லை. ஏனென்றால் அவள்வீடு அங்கேதான் இருந்தது. பெயர் சிவகாமசுந்தரி. வயது 15. படித்த பள்ளிக்கூடம் வேம்படி. வருடம் 1965. தினமும் அவளுடைய அப்பா அவருடைய காரில் அவளை கொண்டுபோய் பள்ளிக்கூடத்தில் விடுவார். மாலையில் மறுபடியும் அழைத்துவருவார். கொழும்புத்துறையில் அவர் ஒருவரிடம்தான் கார் இருந்தது. ஏ30 கார். அது தூரத்தே வரும்போதே சனங்கள் சொல்லிவிடுவார்கள் சந்திரசேகரம் புறப்பட்டுவிட்டார் என்று. அவருடைய கார் அளவுக்கு அவரும் பிரபலமானவர். அவரிடம் இரண்டு லொறிகள் இருந்தன. அவற்றில் சாமான்கள் கொழும்புக்கு போகும், பின்னர் அதே லொறிகளில் வேறு சாமான்கள் திரும்பும். காலையில் அவர் வீட்டு வாசலில் ஒருகூட்டம் சனம் சாமான்களை வாங்க நிற்கும். ‘ஒரு காலத்தில் கொழும்பில் இருந்து நாவாய்களில் சாமான்கள் வந்து இங்கேதான் இறங்கின. அதுதான் கொழும்புத்துறை என்று பெயர். என்னுடைய பாட்டனுக...