Showing posts with label BHAGYARAJ. Show all posts
Showing posts with label BHAGYARAJ. Show all posts

Thursday, 4 June 2020

BHAGYARAJ AND HIS MUSIC



BHAGYARAJ AND HIS MUSIC


"ஒரே ஒரு சின்ன வார்த்தை... என்னையும் இளையராஜாவையும் பிரிச்சிடுச்சு!" - கே.பாக்யராஜ்
சனா
கே.பாக்யராஜ்
.

"என்னோட முதல் படத்துக்கு ராஜாகிட்ட மியூசிக் கேட்க பயந்துட்டு நான் போகல. ஏன்னா, 'இப்போதான் உதவி இயக்குநரா வேலை பார்த்த... அதுக்குள்ள என்கிட்ட வந்துட்டியா'னு கேட்டுருவாரோனு எனக்குள்ள ஒரு காம்ப்ளெக்ஸ்."

''நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால் இங்கு ஏழைகள் வேதனைப்படமாட்டார்!''... இயக்குநர் கே.பாக்யராஜுக்கு போன் அடித்தால் ஓங்கி ஒலிக்கிறது டிஎம்எஸ் குரல். இசைஞானி இளையராஜாவுடன் நெருக்கமாக இருந்து பிறகு அவரைவிட்டுப் பிரிந்து மீண்டும் அவருடன் இணைந்த இயக்குநர் பாக்யராஜிடம் அந்தச் சம்பவங்கள் குறித்துக் கேட்டேன்.

''சென்னைக்கு உதவி இயக்குநரா வர்றதுக்கு முன்னாடி ஊர்ல சினிமா பார்த்தப்போ படத்தோட கதை என்ன, யார் நடிச்சியிருக்காங்கனு மட்டும்தான் முதல்ல பார்ப்பேன். இதுக்கு அடுத்த படியா பாட்டு மைண்டுக்குள்ள போகும். போட்டோகிராபி, ரீரெகார்டிங், எடிட்டிங், கிராஃபிக்ஸ் இதுபத்தியெல்லாம் எனக்கு ஒண்ணுமே தெரியாது. சில பாட்டுக்குப் பின்னாடி தாஜ்மஹால் செட் மாதிரி ஏதாவது வந்துசுனா போட்டோகிராபில ஏதோ பண்ணியிருக்காங்க போலனு நினைச்சுக்குவேன். 'கர்ணன்' மாதிரியான படங்களின் ஆக்‌ஷன் காட்சிகள்ல கேமராவை குதிரையோட காலுல கட்டிவிட்டு ஃபாஸ்ட்டா ஷூட் பண்ணுவாங்கனு நினைச்சுக்குவேன். இவ்வளவுதான் சினிமா பத்தி என் நாலெஜ் இருந்தது. அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா இயக்குநர்கள் ஶ்ரீதர், கே.பாலசந்தர் சார் படங்கள்னு மனசுல ஏற ஆரம்பிச்சது. சினிமாவுக்கு சான்ஸ் தேடிட்டு இருந்த காலத்துலகூட பாட்டு பத்தி யோசிச்சு இருக்கேனே தவிர பேக்கிரவுண்ட் மியூசிக் பத்தி என் மனசுல, மைண்ட்ல ஓடினதே கிடையாது.
.


இதெல்லாம் தெரியாமலேயே 'பதினாறு வயதினிலே' படத்துல அசிஸ்டென்ட்டா ஆர்வமா வேலைபார்க்க ஆரம்பிச்சிட்டேன். ஷூட்டிங் போயிட்டு இருந்தப்போ ரீ-ரெக்கார்ட்டிங் கொடுக்கப்போறோம், டபுள் பாசிட்டிவ் பார்க்கணும்னு கூட்டிட்டுப் போனாங்க. எனக்குப் படம் ஃபுல்லா சைலன்ட், சைலன்ட்டா வந்துட்டு இருக்கு. 'ஒரு தடவை கமல்ஹாசன் பார்க்குறாரு, ஒரு தடவை ஶ்ரீதேவி பார்த்துதுன்னு ஒரு தடவை பார்த்தா ஓகே. இது என்ன ரொம்ப நேரம் பார்த்துட்டே இருக்காங்க. நடந்துவர்றதை கொஞ்ச நேரம் காட்டினா பத்தாதா... ஏன் இவ்ளோ நேரம் காட்டுறாங்க. எதுக்குடா இவ்ளோ சைலன்ட் ஷாட்டுனு எனக்கு படமே Lag-ஆ இருக்குமாதிரி ஒரு ஃபீலிங்.

ரொம்ப ஸ்லோவா இருக்கு. படத்தைப் பொறுமையா ஜனங்க உட்கார்ந்து பார்ப்பாங்களான்னு சந்தேகம் வந்துடுச்சு. 'சார், படம் ரொம்ப சைலன்ட்டா இருக்கு. இப்படியிருந்தா ஜனங்க தியேட்டர்ல இருக்க மாட்டாங்க'னு பாரதிராஜா சார்கிட்ட போய் சொன்னேன். அவர் சிரிச்சிக்கிட்டே 'யோவ்... நீ புதுசு. சும்மா இருயா... உனக்கு ஒண்ணும் தெரியாது'னு சொல்லுவார். 'இல்லை சார்... சைலன்ட்டா இருக்கு'ன்னு தொடர்ந்து சொல்ல, 'படத்துல மியூசிக்ன்னு ஒண்ணு இருக்குயா... இளையராஜாகிட்ட கொண்டு போய் கொடுப்பேன். அவர் ஆர்.ஆர் வாசிச்சு கொடுப்பார். அதுக்கு அப்புறம்தான் உனக்கு இது லென்த்தா இருக்கா இல்லையான்னு தெரியும். ஆர்.ஆர் போட்ட பிறகு இன்னும்கூட கொஞ்சம் லென்த்தா ஷாட் வெச்சிருக்கலாமோன்னு உனக்குத் தோணும்யா'னு சொன்னார். இதுக்கு அப்புறம்தான் ஆர்.ஆர்ன்ற விஷயத்தையே புரிஞ்சிக்கிட்டேன். ஆர்.ஆர் படத்தோட உணர்ச்சியை நமக்குள்ள எப்படி கொண்டு வருதுனு தெரிஞ்சது.

Ilaiyaraja

Ilaiyaraja
இளையராஜானு ஒரு ஆள் மியூசிக் போட்டார்னா எவ்ளோ லென்த்தா வேணாலும் ஒரு ஷாட் வைக்கலாம்னு புரிஞ்சது. அப்புறம் 'கிழக்கே போகும் ரயில்', 'சிகப்பு ரோஜாக்கள்' த்ரில் மியூசிக்னு கேட்குறப்போதான் பேக்கிரவுண்ட்னா என்ன, இது எவ்வளவு வொர்த், எந்த மாதிரியான மூடுக்கு எப்படி மியூசிக் போடுறாங்கனு தெரிய வந்தது. ராஜா சார் மியூசிக் போட்டுக்கிட்டு இருக்குறப்போ உதவி இயக்குநரா அசந்து போய் பார்த்துக்கிட்டு இருப்பேன். அவர் எனக்குப் பாட்டு போடுறதுக்கூட ஆச்சர்யாம இருக்காது. ரீரெகார்டிங்தான் ரொம்ப ஆச்சர்யமா இருந்தது. ஒருநாள் வந்து படம் பார்ப்பாரு. அடுத்தநாள் ரெகார்டிங். எங்க என்ன பண்ணணும், என்ன மூட்-னு எல்லாத்தையும் கணக்குப்போட்டு பண்ண எவ்ளோ மெமரி பவர் வேணும்னு வியப்பா இருக்கும். ஆச்சர்யமா இருக்கும். இளையராஜா எவ்வளவு ஞானம் கொண்டவர்னு அப்போதான் புரிய ஆரம்பிச்சது.

என்னோட முதல் படத்துக்கு ராஜாகிட்ட மியூசிக் கேட்க பயந்துட்டு நான் போகல. ஏன்னா, 'இப்போதான் உதவி இயக்குநரா வேலை பார்த்த... அதுக்குள்ள என்கிட்ட வந்துட்டியா'னு கேட்டுருவாரோனு எனக்குள்ள ஒரு காம்ப்ளெக்ஸ். இளையராஜா சார்கிட்ட, அமர் கிட்டார் வாசிச்சிட்டு இருப்பார். அதனால, அவர்கிட்ட போய்ட்டேன். அதேமாதிரிதான் கேமரா, எடிட்டிங்னு எல்லாத்துக்குமே நான் அசிஸ்டென்ட்டா இருக்கும்போது அசிஸ்டென்ட்டா இருந்தவங்களை என் படத்துக்குக் கூப்பிட்டுக்கிட்டேன். கிட்டத்தட்ட மூணு படங்கள் டைரக்ஷன் பண்ணிட்டு நாலாவது படமான 'இன்று போய் நாளை வா' படத்துக்குதான் இளையராஜாகிட்ட போய் கேட்டேன். அவரும் மியூசிக் போட்டுக் கொடுத்தார். எனக்கும் ராஜா சாருக்கும் நல்ல பழக்கமும் இருந்தது. தொடர்ந்து சேர்ந்து வேலை பார்த்தோம். ராஜாகிட்ட வேலை பார்க்குறப்போ அவரோட ஆளுமை, ஆழ்ந்த ஞானம் வியந்து போறளவுக்கு இருக்கும். அவரை இசைஞானின்னு சொல்றது 100 சதவிகிதம் பொருந்தும்.

.
அதே மாதிரி 'சின்ன வீடு' படத்துல வர 'நாதிர்தின்னா திரநன்னா' டோனை எப்படி சொல்லி அவர்கிட்ட கேட்டு வாங்குறதுனு எனக்குத் தெரியல. கொஞ்சம் காமெடியா வேணும்னு சொல்லிக்கிட்டு இருந்தேன். அப்போதான் பாட்டுக்கு இடையில நான் நினைச்ச மாதிரி ஹம்மிங் கொண்டு வந்து இந்த 'நாதிர்தின்னா' போட்டுக்கொடுத்தார். இன்னைக்கு எல்லா இடத்துலயும் இந்த டோன் யூஸாகிட்டு இருக்கு'' என்ற பாக்யராஜிடம், ''ஏன் இடையில் பிரிந்து மீண்டும் சேர்ந்தீங்க?''' எனக் கேட்டேன்.


''அவர் 'சின்ன வீடு' வரைக்கும் பண்ணார். அடுத்த படம் பண்ணும்போது கொஞ்சம் முன்கூட்டியே சொல்லுங்கன்னு சொல்லியிருந்தார். 'கதை ரெடிங்க. அவர் எப்ப கேக்குறார்னாலும் சொல்லுங்க. கம்போஸிங் வெச்சிக்கலாம்னு' அவர் அசிஸ்டென்ட்கிட்டபோய் சொன்னேன். அவர் திடீர்னு 'சாரைப்போய் வீட்ல பாருங்க'ன்னு சொல்லிட்டார். எதுக்குயா வீட்டுக்குப் போய் பார்க்கணும். எப்பவும் இங்க ஸ்டூடியோலதானாய்யா பார்த்துட்டு இருக்கோம். அவர் வேலையா இருக்கார்னா, அவர் எப்ப ஃபிரீயா இருக்கார்னு சொல்லு, அப்ப கம்போஸிங் வெச்சிக்கலாம்னு சொன்னேன். அப்பவும் 'வீட்டுக்குப் போய் சாரைப் பாருங்க'னு சொன்னார். 'எதுக்கு யா வீட்டுக்குப் போகணும், இத்தனை நாளா இந்த இடத்துலதானே வேலை பார்த்துக்கிட்டு இருந்தோம். சரி, நான் வந்துட்டு போனேன்னு சொல்லிருங்க'ன்னேன். நானும், இளையராஜாவும் வெளிய எத்தனையோ இடங்கள்ல ஒண்ணா சேர்ந்து வேலை பார்த்திருக்கோம். கேட்குற மியூசிக் கொடுத்துருவார். பட்ஜெட் பிரச்னைகூட எங்களுக்குள்ள வந்ததில்ல. இதுதான் முதல் முறை இப்படி ஒருத்தர் 'வீட்டுக்குப் போய் பாருங்க'னு சொன்னது. அது என்னைக் கொஞ்சம் ஹர்ட் பண்ணிருச்சு.

பாக்யராஜ்
பாக்யராஜ்
'உடம்பு சரியில்லைன்னா சொல்லுங்க தாராளமா வீட்டுக்குப்போய் பார்க்கலாம். சும்மா, படம் பண்றதுக்கெல்லாம் ஏன் வீட்டுக்குப்போய் பார்க்கணும். முன்கூட்டியே சொல்லணும்னு சொன்னார். முன்கூட்டியே சொல்லிட்டேன். அவர் எப்ப ஓகேன்னு சொல்றாரோ அப்ப வந்து நான் பார்க்குறேன்'னு சொல்லிட்டு வந்துட்டேன். அப்புறம் ராஜாவாவது 'ஏன் பாக்யராஜ் வரலை'ன்னு கேட்டிருக்கணும்லயா. இவர் அவர்கிட்ட என்ன சொன்னார்னு தெரியல. அவரும் எனக்கு போன் பண்ணல. நானும் அப்படியே விட்டுட்டேன். அப்போதான் 'சே, இந்த மியூசிக்கை கத்துக்காம விட்டுட்டோமே... சும்மா கேரம் போர்ட் ஆடிட்டு சுத்தணுமே'னு வருத்தமா இருந்துச்சு. நாங்க ஊர்ல கேரம் போர்டு ஆடுறதுக்குப் பக்கத்துலயே மாடர்ன் ஆர்க்கெஸ்ட்ரான்னு இருந்துச்சு. அதனால கத்துக்காம விட்டுட்டோமேன்னு தோணுச்சு. இந்த நேரத்துலதான் எங்க ஊர்ல நாடகங்களுக்கு மியூசிக் போட்டுக்கிட்டு இருந்தவர் சென்னைக்கு வந்தார். அவர் இங்கிலீஷ் புரொஃபசர். ஒரு ஹாபியா மியூசிக் பண்ணுவார். அவர் ரிட்டயர்டு ஆகி சென்னைக்கு வந்தார். 'இனி இங்கேதான் இருக்கப் போறேன்'னு சொன்னார். அப்போ உடனே அவர்கிட்ட மியூசிக் கத்துக்கணும்னு சொன்னேன்.

பாண்டி பஜார்ல ஆர்மோனியம் வாங்கிட்டு வந்து கத்துக்க ஆரம்பிச்சேன். எனக்கு என்னையறியாமலேயே ட்யூன்ஸ் வர ஆரம்பிச்சது. அப்படியே கொஞ்சம் கொஞ்சமா கத்துக்கிட்டு 'இது நம்ம ஆளு' படத்துல மியூசிக் பண்ணேன். சில படங்கள்ல நானே மியூசிக்கும் பண்ணிட்டேன். அப்புறம் வெளியே இருக்குற சிலர்கிட்டயும் மியூசிக் பண்ணேன். அப்புறம் டைரக்‌ஷன், நடிப்பு, பத்திரிகைன்னு இவ்ளோ பண்ணிட்டு மியூசிக்கும் போட நேரமில்ல. அதனால விட்டுட்டேன். இந்த நேரத்துலதான் கங்கை அமரன் வந்து 'நீங்களும் ராஜா அண்ணணும் ஒண்ணா சேர்ந்து வேலை பார்க்கணும்'னு சொன்னார். அப்போ, ராஜாகிட்ட இருந்த மணிரத்னம், எங்க டைரக்டர் சார்ன்னு அப்படி இப்படி நிறையப் பேர் வெளியவந்துட்டாங்க. இந்த நேரத்துல முக்கியமான டைரக்டர்ஸ் இல்லையேன்னு எனக்கும் தோணுச்சு. அமர்வந்து கேக்குற நேரம் நானும் அடுத்த படம் 'ராசுக்குட்டி' பண்ண ரெடியா இருந்தேன். 'ஓகே அமர். நான் அண்ணனுக்கு என்ன பண்ணணும்னு கேட்டு, அவர் வீட்டுக்குப்போய் பார்க்குறேன்'னு போய் பார்த்தேன். அவரும் ஓகே சொல்லி 'ராசுக்குட்டி' படத்துக்கு மியூசிக் பண்ணி கொடுத்தார். அங்க இருந்து திரும்பவும் எங்க பயணம் ஸ்டார்ட் ஆச்சு.

.
நான் வாழ்க்கைல மியூசிக்னு ஒண்ணு தெரிஞ்சிக்கிட்டதே ராஜா சார் மூலமாத்தான். மியூசிக் கத்துக்கணும்னு உள்ள போகும்போதுதான் அது எவ்ளோ பெரிய கடல்னு புரிஞ்சது. ராஜா இசையில் மிகப்பெரிய ஞானி!'' என முடித்தார் பாக்யராஜ்.

.

Tuesday, 17 July 2018

AAKRI RAASTHA , HOW FILMED








AAKRI RAASTHA , HOW FILMED


திரைக்கதைத் திலகம்’என்று பெயரெடுத்தவர் கே. பாக்யராஜ். கடந்த வாரம் இந்து டாக்கீஸ் இணைப்பி தழில் வெளியான ‘ஒரு கைதியின் டைரி’ பத்தியைப் படித்திருக்கிறார். கையோடு தொலைபேசியில் என்னை அழைத்தார் ‘ கைதியின் டைரி’ படத்துக்கான கதை உருவான பின்னணியை உங்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன் என்றார். உடனே நேரில் சந்தித்தேன். விவரிக்க ஆரம்பித்தார். விறுவிறுப்பாக எழுதப்பட்ட ஒரு பர்சனல் டயரியைப் படிப்பதுபோன்ற உணர்வை எனக்குக் கொடுத்தது அவர் விவரித்த விதம். இனி எல்லாம் அவர் சொன்னதே...
மும்பையில் சந்தித்தேன்

“வாழ்க்கையில் சுகமும் துக்கமும் மாறி மாறி வரும் என்று சொல்வார்கள். எனக்கு ஒன்றாகவே வந்தது. ‘முந்தானை முடிச்சு’அபார வெற்றி பெற்று, எனக்குப் பெயரும் புகழும் கிடைத்தது. அதேநேரத்தில் என் மனைவி பிரவீணா என்னை விட்டுப் பிரிந்தாள். சென்னையில் இருந்தால் அவளது ஞாபகமே வந்து என்னைச் சோகத்தில் மூழ்கடிக்கிறது என்று கோவா சென்றேன். அங்கேயும் அதே நிலை. பிறகு மும்பை சென்றேன். அங்கே சீராக் ஹோட்டலில் தங்கினேன். ஹோட்டலில் வேலை செய்துவந்த தமிழ் ஊழியர் ஒருவர் என்னிடம் வந்து “உங்கள் டைரக்டர் இங்குதான் தங்கியிருக்கிறார்” என்று கூறினார். அவர் சன்னி தியோலை இயக்கவிருக்கும் இந்திப் பட வேலைக்காக வந்திருப்பார் என்று நினைத்துக்கொண்டேன். அவரது வேலையில் குறுக்கிடாத வண்ணம் இரவு ஒரு மணிக்கு அவர் அறைக்குச் சென்று கதவைத் தட்டினேன். அவர் மட்டும் தனியாக அமர்ந்திருந்தார். ஆழ்ந்த சிந்தனை யில் இருந்த அவர் முகத்தில் கவலை தெரிந்தது.

கைவிடப்பட்ட ‘டாப் டக்கர்’

நலம் விசாரித்தபடி பேச்சுக்கொடுத்தேன். கமலை வைத்து ‘டாப் டாக்கர்’ என்ற படத்தை சுமார் 5 ஆயிரம் அடி எடுத்த பின் நிறுத்திவிட்டதாகக் கூறினார். ஏன் என்றபோது, “அந்தக் கதை சிவப்பு ரோஜாக்கள் போலவே உருவெடுக்க ஆரம்பித்துவிட்டது. எனவே அதை நிறுத்திவிட்டு , வேறு கதை எடுப்போம் என்று நானும் கமலும் முடிவெடுத்துவிட்டோம்” என்றார். பிறகு அவரே தொடர்ந்தார். “கிழக்கே போகும் ரயிலை இந்தியில் சன்னி தியோலை வைத்து எடுக்க முடிவு செய்திருந்தேன். ஒப்பந்தம் செய்தபோது சன்னி பெரிய ஹீரோ அல்ல, இப்போது கமர்ஷியல் ஹீரோவாக மாறிவிட்டார். கழுதைமேல் அவரை உட்காரவைத்து ஊர்வலம் விடுவது போன்ற காட்சிகள் இருப்பதால் சன்னி தியோலின் அப்பா தர்மேந்திரா இந்தக் கதையை வேண்டாம் என்று கூறிவிட்டார். இரண்டு படங்களி லுமே முட்டுக்கட்டை” என்றார்.

லட்சுமி வந்துவிட்டாள்

கண் முன்னால் குருநாதர் கவலையுடன் பேசுவதை எந்த மாணவன்தான் கேட்டுக்கொண்டு சும்மா இருப்பான். நான் சென்னை திரும்பியதும் ‘டாப் டக்கர்’ கதையில் ஏதாவது பண்ண முடியுமா என்று பார்க்கி றேன் என்று அவரிடம் கூறினேன். “நீ இப்போது உதவி இயக்குநர் கிடையாது. பெரிய ஹீரோ, பிரபலமான இயக்குநர்” என்றார். “ நான் என்றும் உங்கள் மாணவன்” என்றேன்.

சென்னை திரும்பியதும் அவரது அலுவலகத்துக்குச் சென்றேன். என்னைக் கண்டதும் “ லட்சுமி வந்து விட்டாள்” என்று கூறி வரவேற்று அழைத்துப்போய் கதை சொன்னார். ‘டாப் டக்கர்’ இன்னொரு ‘சிகப்பு ரோஜாக்கள்’ போலத்தான் இருந்தது. எழுத்தாளர் பாக்யராஜுக்கு சென்னை அடையாறு பார்க் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ஒரு அறை போடப்பட்டது. இதுநாள் வரை நடிகர் பாக்கியராஜுக்கு ஏற்ற கதையை மட்டுமே சிந்தித்துக்கொண்டிருந்த நான், அந்த வட்டத்திலிருந்து வெளியே வந்து சிந்தித்தேன்.

அன்றிரவு 2 மணிக்கு ஒரு பொறி தட்டியது. மறுநாள் காலை, பாரதிராஜா சாருக்கு போன் செய்து உடனே வருமாறு கூறினேன். “அதற்குள்ளேயா?” என்று ஆச்சரியப் பட்டார். கதையின் அவுட்லைனைக் கூறினேன். அந்த நிமிடமே கமலிடம் தொடர்பு கொண்டார். அவுட்லைன் சொல்ல வேண்டும் என்றார்.

அதற்குக் கமல், “நேற்று நீங்கள் பாக்கியராஜை சந்தித்தும் கதையை விவாதித்ததும் என் காதுக்கு வந்துவிட்டது. இப்போது கதையைச் சொல்ல வேண்டியதில்லை. படப்பிடிப்புக்கு ஒரு வாரத்துக்கு முன்னால் சொன்னால் போதும்” என்று கூறிவிட்டார்.

ஒரு கைதியின் டைரி

முழுத் திரைக்கதை உருவானதும் அதை குருநாதரிடம் கொடுத்து உங்களுக்கு வேண்டிய மாற்றங்களைச் செய்துகொள்ளுங்கள் என்று கூறிவிட்டேன். அதுதான் ‘ஒரு கைதியின் டைரி’ திரைப்படம். படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவந்தது.

இதற்கிடையில் தயாரிப்பாளர் பூர்ணசந்திர ராவுக்கு ஒரு இந்திப் படம் எடுத்துக்கொடுப்பதாக நான் வாக்களித்திருந்தேன். இப்போது ‘ஒரு கைதியின் டைரி’ இந்திப் பதிப்பை நான் இயக்க விரும்புகிறேன்.அதில் அமிதாப் பச்சன் நடித்தால் நன்றாக இருக்கும் என்று கருதினேன். அவர் அமிதாப்பிடம் பேசி, கதை கேட்க ஏற்பாடு செய்தார். அமிதாப் சென்னை வந்தார். மொத்தக் கதையையும் நடித்தே காண்பித்துவிட்டேன். உடனே ஒப்புக்கொண்டார். நான் தயாரிப்பாளர், ஹீரோ இருவரிடமும் ஒரு நிபந்தனையை வைத்தேன். “என் கதையைத்தான் எடுப்பேன். எனது குருநாதர் பாரதிராஜா மாற்றங்களுடன் எடுத்துவரும் படத்தை நான் மறுஆக்கம் செய்ய மாட்டேன்” என்றேன். இருவரும் ஏற்றுக்கொண்டனர்.
க்ளைமாக்ஸ்
இரண்டு கதைகளுக்கும் முக்கியமான சில வேறுபாடுகள் இருக்கின்றன. கல்லறையில் தந்தையும் மகனும் சந்திக்கும் காட்சி என் கதையின் முக்கிய கட்டம். அது இந்தியில் இருந்தது, தமிழில் இல்லை. அதேபோல் க்ளைமாக்ஸ். தமிழில் கதாநாயகன் சிவாஜி சிலைபோல் அசையாமல் நின்று வில்லன் நெருங்கியதும் பழி வாங்குவார். அது என் குருநாதர் செய்த மாற்றம்.

நான் எனது க்ளைமாக்ஸை இந்தியில் வைத்தேன். ஆனால் தமிழ்ப் பதிப்பின் க்ளைமாக்ஸையே இந்தியிலும் எடுக்க வேண்டும் என்று அமிதாப், தயாரிப்பாளர், கேமராமேன், சண்டைப் பயிற்சி இயக்குநரான வீரூ தேவ்கன் (அஜய் தேவ்கனின் அப்பா) என அனைவரும் ஆசைப்பட்டனர். எனது க்ளைமாக்ஸை எடுத்துப் போட்டுப்பார்ப்போம், உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் தமிழ்ப் பட க்ளைமாக்ஸை எடுத்துத் தருகிறேன் என்று கூறினேன்.
அனைவரும் ஒப்புக்கொண்டு முழுமனதுடன் ஒத்துழைப்பு தந்தார்கள். படம் தயாரானதும் போட்டுப் பார்த்தோம். அனைவருக்கும் எனது க்ளைமாக்ஸ் பிடித்திருந்தது. அந்தப் படம்தான் அமிதாப்புக்கு மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்த ‘ஆக்ரி ராஸ்தா’.
ஒரு சின்ன ப்ளாஷ் பேக்

அமிதாப் தன் மனைவியின் கல்லறையில் ஆங்கிலத்தில் பேச வேண்டும். ஆங்கிலத்தில் பேசினால் என் ரசிகர்களுக்குப் புரியாது என்று மறுத்தார். நீங்கள் ஆங்கிலத்தில் புலமை அடைந்திருக்கிறீர்கள் என்பதை உங்கள் மனைவியிடம் சொல்வதுபோல காட்சியை அமைத்திருக்கிறேன். ஆங்கிலத்தில் பேசவில்லை என்றால் இந்தக் காட்சிக்கே அர்த்தமில்லாமல் போய்விடும் என்றேன். கொஞ்சம் தயங்கியவாறு அரைமனதுடன் ஒப்புக்கொண்டவர் அந்தக் காட்சிக்கான வசனத்தையும் அவரே எழுதி அற்புதமாக நடித்துக்கொடுத்தார்.

படம் வெளியான அன்று இரவு ஒரு மணிக்கு அமிதாப் போனில் பேசினார். “நீங்கள் சரி, நான் தவறு. ஆங்கிலத்தில் நான் பேசிய காட்சிக்கு தியேட்டரில் அமோக வரவேற்பு” என்றார். “என் மனைவி, இது உங்கள் படமல்ல. இயக்குநர் பாக்கியராஜின் படம் என்று கூறினாள்” என்றார்.

பிறகு இந்திப் படத்தைப் பார்த்த எனது குருநாதர் பாரதிராஜா “என்ன மாயம் செய்தாய்? நீ எடுத்த இரண்டு காட்சிகளையும் க்ளைமாக்ஸையும்தானே நான் எடுக்கவில்லை. என் படம் ஆக்‌ஷன் படமாக அமைந்தது. உன் படமோ எமோஷனல் மூவியாக இருக்கிறதே?” என்று ஆச்சரியத்துடன் கேட்டார்.

“ சார் உங்களது நாயகன் இளைஞர், உங்கள் கதையை அந்த இளைஞர் மீது எடுத்துச் சென்றீர்கள். என் நாயகனோ நடுத்தர வயதுக்காரர். எனவே நான் சிறைக் கைதி மீது கதையை எடுத்துச் சென்றேன். இதுதான் வித்தியாசம் என்றேன். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். இந்திப் படத்தைப் பார்த்து மிகவும் ரசித்தார்.

இந்தப் பாராட்டுக்களைப் போலவே மிக முக்கியமாக நான் கருதியது பாலிவுட்டின் அந்நாளைய பிரபல திரைக்கதை எழுத்தாளர்கள் ‘ஷோலே’ படப்புகழ் சலீம் - ஜாவேத் இரட்டையர்களின் பாராட்டு. “ஒரு காட்சியிலாவது அவரை ஆங்கிலத்தில் பேச வைக்க முயன்றோம். முடியவில்லை. நாங்கள் செய்ய முடியாததை நீங்கள் சாதித்திருக்கிறீர்கள். இதன் மூலம் கதாசிரியர் மக்களின் நாடித்துடிப்பை உணர்ந்தவர் என்பதை அமிதாப்புக்கு உணர்த்திவிட்டீர்கள்” என்று கூறினார்கள்.

படத்தின் மாபெரும் வெற்றி இன்றும் பேசப்படுகிறது. இந்தப் படத்தின் ரிலீஸ் தேதியான ஜூன் 6-ம் தேதியை நினைவில் வைத்து, படம் வெளியாகி 30 ஆண்டுகள் நிறைவு பெற இருப்பதை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார் அபிதாப். இதுதான் ‘ஒரு கைதியின் டைரி’, ‘ஆக்ரி ராஸ்தா’(கடைசி வழி) படங்களின் பின்னணிக் கதை” என்று நினைவுகூர்ந்தார் பாக்யராஜ்.