Wednesday 26 August 2020

VIRUDHUNAGAR KVS MIDDLE SCHOOL




விருதுநகர் KVS நடுநிலைப் பள்ளி 




விருதுநகர் KVS நடுநிலைப் பள்ளி பொருட்காட்சியின் கலை அரங்கமே !
1946ல் கீற்றுக் கொட்டகை ஆகப் பிறந்து 2003 ஆம் ஆண்டு வரை தீவிர கலைப் பணி ஆற்றினாய். 1960 முதல் மு. அ. பழனிச்சாமி நாடார் கலை அரங்கம் எனப் பெயர் சூட்டப்பட்டு புது வடிவம் பெற்றாய். விருதுநகரில் கலை நிகழ்ச்சிகளுக்குத் தனிக்கட்டணம் இல்லாததால் உனது mass reach அதிகம். எனவே தமிழ்த் திரைஉலகினர் உன்னைக் கொண்டாடினர்.

பங்குனி & சித்திரை கோடையிலே M K தியாகராஜ பாகவதர், K B சுந்தராம்பாள், M S விஸ்வநாதன், K V மஹாதேவன், T M S, P சுசிலா, ஜேசுதாஸ், SPB போன்றோரின் இன்னிசை மழை... NSK, தங்கவேலு, கிரேசி மோகன் முதலானோரின் கிச்சு கிச்சு மழை... MGR ன் அட்வகேட் அமரன், இன்பக்கனவு நாடகங்களில் முதன் முறையாக அவரைக் கண்டு மக்கள் " அங்கமா இல்லை தங்கமா " என்று திளைத்திட்ட ஆனந்த
மழை... மேடையில் MGR குண்டுமணியை குண்டுக்கட்டாக தூக்கிச் சுழற்றியதில் எப்படிப்பட்ட ஆர்ப்பாட்ட மழை... 1959 ல் உன் புதிய வடிவிற்கு அடிப்படைக் கல் நாட்டிய சிவாஜி கணேசன், தேன்கூடு நாடகத்தில் காட்டிய நேர்த்தியான நெஞ்சு வலியால் கலங்க வைத்த மழை, கட்டபொம்மனாக வீர வசன மழை .... துக்ளக் ஆக சோவின் பரபரப்பு மழை... ஹேமமாலினியின் பரதநாட்டியப் பூ மழை... R S மனோகர் சரித்திர நாடகங்களின் பிரம்மாண்டமான அரங்க அமைப்புகளை நீ அழகுற ஜொலிக்கச் செய்தது... ஒவ்வோர் ஆண்டும் இறுதி நாடகங்களாக லட்சுமி காந்தன், ரத்தக்கண்ணீர் நாடகங்களை தன் இறுதி நாட்கள் வரை அதிரடியாக M R ராதா நடத்தியது ...... இப்படி எத்தனை, எத்தனை....

ஊர் மக்கள் அனைவரும் ஒரு குடும்பம் போல ஏற்றத் தாழ்வின்றி அன்னியோன்யமாக தரையில் அமர்ந்து நிகழ்வுகளை நீ ரசிக்க வைத்தது உன் மிகப்பெரும் வெற்றி... கலைஞர்களை அருகில் காண உன் அருகே அமைக்கப்பட்ட பள்ளமான குறுகிய ஒரு வழிப் பாதையில் பாதம் படாதவர் எவரேனும் இருந்திருப்பார்களா? ... வீட்டுக்கு ஒரு பிள்ளை bed sheet உடன் வந்து, தன் குடும்பத்தினருக்காக இடம் பிடித்துப் பொறுமை காட்டிக் காத்திருந்த குடும்பப் பாங்கு நீ கற்றுத் தந்தது... காதும் காதும் வைத்த மாதிரியாக எவர் மனமும் புண்படாது decent ஆக மைதானத்தில் உன் முன்னிலையில் நடந்த பெண் பார்க்கும் படலங்கள் தானே உன்னை விருதுநகரின் கல்யாண மாலை ஆக்கியது....

1951 ஆம் ஆண்டு நீ ஈட்டிய லாபத்தினால் மதுரை சாலையில் உள்ள KVS நிலத்துக்கு அருகாமையில் உள்ள நிலங்கள் சேர்த்து வாங்கப்பட்டு இன்றைய கட்டிடங்களும், விளையாட்டு மைதானங்களும், வியத்தகு ஸ்டேடியமும் நிறுவ உதவியது. இப்படி உன் சாதனை பலப்பல...

விருதுநகரின் கலை உணர்விற்கு அரை நூற்றாண்டுக்கும் மேல் உயிர் ஊட்டியவன் நீ... கலை அரங்கமாக, விருதுநகரின் 20 ஆம் நூற்றாண்டு புவி சார் குறியீடு நீ ...
ஆம், விருதுநகரின் மற்றும் ஓர் பெருமை நீ ....


விருதுநகர் K. V. S. பள்ளியின் பிரதான இரட்டைக்கோபுர கட்டிடமாகிய நான் பேசுகிறேன்... நான் தமிழகத்திலே முதன் முறையாக உயர்நிலைப் பள்ளி அளவில் இலவசக் கல்வி தந்தவன்...

1895 ல் நான் பிறந்த பொழுது தான் இந்து மிடில் ஸ்கூல் ஆக இருந்த நம் பள்ளி க்ஷத்திரிய வித்தியாசாலை என்று பெயரிடப்பட்டது. திரு ல.பெ. சு. சண்முக நாடார் ரூ 5000/- பொருளுதவி செய்து மொத்தம் ரூ 10, 000/- செலவில் பாரிஸில் உள்ள கட்டிட மாதிரியில் உருவாக்கப்பட்டவன். மாணவர்கள் என் வளாகத்தில் இலவச ஆங்கிலக் கல்வி கற்று சிறந்த வணிகர்களாகத் திகழ வேண்டும் என்று விரும்பிய அவருக்கு நான் இன்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.

1902 ல் நான் உயர்நிலைப் பள்ளி ஆன பொழுதில் கட்டிடத்தின் பின்புறக் கட்டுமானம் பலசரக்குக் கடை மகமையின் தயாளமான
ரூ 50, 000/- நிதி உதவியுடன் கட்டப்பட்டது. தூண்கள் நிரம்பிய அழகிய மண்டபமும், உள்ளூர் கட்டிடத் தொழிலாளர்கள் கை வண்ணத்தில் கண்கவர் வேலைப்பாடுகளுடன் அரண்மனையாக உருக் கொண்டேன். என் எழில் தோற்றத்திற்கு மேற்பார்வை இட்டவர்கள் திரு தொ. மு. ம. முத்து நாடார் மற்றும் திரு பூ. நா. வடிவேல் முருக நாடார்.

அக்காலம் திண்ணைப் பள்ளியிலும், மரத்தடியிலும் கற்று வந்த மாணவர் அனைவர்க்கும் பேதம் எதுவுமின்றி ரம்மியமான சூழலில் தரமான கல்வி தந்தேன். மாணவர்களின் உற்சாகமான ஈடுபாடு, தேர்ந்த ஆசிரியர்களின் முனைப்பான கல்விப் பணி மற்றும் நிர்வாகத்தினரின் சீரிய செயல்பாடுகள் கண்டு பேருவகை அடைந்தேன். திரு ராஜாஜி, திரு சத்தியமூர்த்தி, திரு சுப்பிரமணியம், திரு கக்கன் போன்றவர்கள் என்னைக் கண்டு வியந்தவர்கள்...

1902-1956 வரை உயர்நிலைப் பள்ளியாகவும், பின் 1962 வரை நடுநிலைப் பள்ளியாகவும், அதன் பின் 1966 வரை VVV மகளிர் கல்லூரியாகவும், பின் அதன் தங்கும் விடுதியாகவும், 1984-1988 வரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எனவும் பல வடிவங்கள் பெற்றேன்.. தற்பொழுது, 30 ஆண்டுகளாக காமராஜர் இலவச மருத்துவ மையம் ஆகச் செயல்பட்டு வருகின்றேன். மற்றும் நம் பள்ளி நிர்வாகத்தின் கீழ், ஊஞ்சா தனசாமி அறக்கட்டளை சார்பாக நடத்தப்படும் நவீன ரத்த வங்கி என்னிடம் உள்ளது. இதன் மூலம், இந்தியாவிலேயே குறைந்த விலையில் ( யூனிட் ஒன்றுக்கு ரூ 400/-) வழங்கப்பட்டு வரும் உயரிய சேவை கண்டு பெருமை அடைகின்றேன்.

எனக்கு ' அக்கம் பக்கத்து ' மலரும் நினைவுகளும் உண்டு. நான் சிறுவனாக இருந்த பொழுது, அருள் மிகு மாரியம்மன் கோவில் கட்டப் பெற்றது, நம் பள்ளி மாணவர் காமாட்சி என்ற காமராஜ், 1921 ல் எனக்கு முன்னால் அமைந்திருக்கும் தேசபந்து மைதானத்தில் காங்கிரஸ் தலைவர்களை அழைத்து வந்து பொதுக் கூட்டங்கள் நடத்தி சுதந்திரப் போராட்டத்தில் எழுச்சி நாயகனாக இணைந்தது, 1933 ல் சத்தியாக்கிரகப் போராட்டம் நடத்திய காமராஜை என் எதிரே உள்ள தபால் அலுவலகத்தில் வெடிகுண்டு வீசினார் என்று பிரிட்டிஷார் பொய் வழக்குப் போட்ட பொழுது என் தாய் உள்ளம் பதை பதைத்தது, பின் அந்த வழக்கில் அவர் நிரபராதி என்று வந்த தீர்ப்பில் மகிழ்ந்தது, 1949ல் என் வைர விழா ஞாபகார்த்த ஸ்தூபியை நமது வளாகத்தில் திறந்து வைக்க தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரான காமராஜ் வந்த பொழுது அவர் உயர்வு கண்டு பெருமிதம் அடைந்தது முதலானவை என் மனதில் என்றும் மணம் வீசும் நினைவு மலர்கள்..

சென்னை மாகாணத்தின் முதன் மந்திரியான காமராஜரின் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட '10 ஆம் வகுப்பு வரை இலவசக் கல்வி' திட்டத்திற்கு வித்திட்டது நம் பள்ளி தான் என்பதில் நமக்கு எத்துணை பெருமை..

கிழக்கே மாரியம்மனும், தெற்கே முருகனும், மேற்கே வெயிலுகந்தம்மனும் விருதுநகர் காக்கும் தெய்வங்களாய் அருள் பாலிப்பது போல் வடக்கே இரட்டைக் கோபுரமாய் அமைந்து அன்று கல்வி, இன்று உயிர் காத்தல் ஆகிய பணிகளைச் சிறப்புற செய்து வருகின்றேன். விருதுநகரின் மற்றும் ஓர் அடையாளமாகத் திகழ்வதில் மகிழ்ச்சி....

.

No comments:

Post a Comment