.செலுலாய்ட் சோழன் – 120 சிவாஜி தொடர் – சுதாங்கன்
பதிவு செய்த நாள்
02
ஏப்ரல் 2016
23:06
‘திருவருட்செல்வர்’ படத்தின் அடுத்த காட்சி பாடலில் துவங்கும்! முதல் பாடலிலிருந்தே படத்தில் கவியரசு கண்ணதாசனுக்கும், இயக்குநர் ஏ.பி. நாகராஜனுக்கும் ஒரு பெரிய தமிழ்ப் போட்டியே நடக்கும்! பின்னவர் கதை– வசனத்தில் தன் தமிழ்ப்புலமையை காட்டும்போதே அதற்கு இணையான பாடல்களை எழுதியிருப்பார் கண்ணதாசன்! படத்தின் முதல் பாடல் ‘ மன்னவன் வந்தானடி.’ அதை பலரும் நினைவில் வைத்திருப்பார்கள். அதே சமயம், நாகேஷ், மனோரமா வண்ணான் தம்பதிகளாக வரும் இந்த பாட்டை பலரும் தமாஷாகவே எடுத்துக்கொண்டார்கள்! ஆனால், இந்தப் பாட்டில்தான் கண்ணதாசனின் முழு தத்துவ விளையாட்டுமே இருக்கும்!
இந்தக் காட்சியில் வரும் சிறுகுறிப்புத் தொண்டர் ஒரு வண்ணான்! அவர் தினமும் ஒரு சிவனடியாரின் துணியை தோய்த்த பின்புதான் மற்ற துணிகளை தோய்ப்பார்! அதனால் அவருக்கு சிவன் கொடுத்த சோதனையும் அதை அவர் வென்றெடுத்ததும்தான் இந்தக் காட்சி! சிறுகுறிப்புத் தொண்டனாக சிவாஜி! சிவனாக ஜெமினி கணேசன்! இப்போது வண்ணான் சூழலுக்கு பாடல்! அதை இங்கே மீண்டும் பதிவு செய்தால்தான் இந்த பாட்டின் ஆழம் புரியும்!
‘ஆத்து வெள்ளம் காத்திருக்கு
அழுக்குத் துணியும் நெறைஞ்சிருக்கு
போட்டுக் கசக்கி எடுத்துவிட்டா
வெள்ளையப்பா -– நல்ல
புழிஞ்சுக் கரையில் காயவச்சா
வெள்ளையப்பா!
மனசு போல வெளுத்து வச்சு
உறவு போல அடுக்கி வச்சு
வரவைப் போல மூட்டைக் கட்டி
வெள்ளையப்பா – நாம
வரவு வைக்கும் நாணயந்தான்
வெள்ளையப்பா!’
இப்படி பாட்டு நீளமாக போகும்! நாகேஷுக்காக எஸ்.சி. கிருஷ்ணன் பாடியிருப்பார்! இதில் கவனிக்க வேண்டிய வரிகள் துணிகளைக் கூட மனசு போல வெளுத்து வைக்க வேண்டுமாம்! உறவு போல அடுக்கி வைக்க வேண்டுமாம்! வரவை போல மூட்டைக் கட்ட வேண்டுமாம்! ஆனால், வண்ணார்களுக்கு அவர்கள் வரவு வைக்கும் நாணயம், அந்த துணியில் வெளுப்பாம்! அடுத்து சிறுகுறிப்புத் தொண்டர் மேல் பாட்டு போகும்! அவரும் வண்ணார்தான்! ஆனால், அவருக்கு எல்லாமே சிவன்தான்! அதனால் பாட்டு இப்படித் துவங்கும்.
‘கந்தையிலே அழுக்கிருந்தால்
கசக்கி எடுத்துவிடு வெள்ளையப்பா – உன்
சிந்தையிலே அழுக்கிருந்தால்
சிவனடியை நாடி விடு வெள்ளையப்பா!’
சிந்தனையில் அழுக்கிருந்தால் சிவனடியை நாட வேண்டுமாம்!
அடுத்து–
‘உயிரே அழுக்குத் துணி
உவர் மண்ணே நம் பிறப்பு
பூவுலக வாழ்க்கையெனும்
பொல்லாத கல்லினிலே
மோதி அடிக்கையிலே முற்றும் கசக்கையிலே!
ஆதிசிவன் என்னும் ஆற்றில் வரும் வெள்ளத்திலே
அழுக்கெல்லாம் வெளுக்குதடா
வெள்ளையப்பா – அவன்
அருள் என்னும் நிழல்தன்னிலே
வெள்ளையப்பா – இந்த
உயிரெல்லாம் வாழுதடா வெள்ளையப்பா!’
பாட்டாக இதை அடிக்கடி கேட்க முடியாது! காரணம், பல தொலைக்காட்சிகளுக்கும் இந்த வரிகளின் ஆழமோ, அந்த பாடலின் இசையின் மேன்மையோ தெரியாது! சிறுகுறிப்புத் தொண்டர் இந்தப் பாடலின் மூலமாக துணியை மட்டுமா வெளுத்துக் கொடுத்தார் கண்ணதாசன்! மனித மனங்களின் அழுக்கையுமல்லவா கழுவித் துடைத்திருக்கிறார்! அடுத்து ஒரு விருத்தம், அதே தொண்டருக்கும் வரும்!
‘பஞ்சிலே நூலை வைத்தான்
நூலிலே ஆடை வைத்தான்
ஆடையிலே மானம் வைத்தான் – அந்த மானத்திலே உயிரை வைத்தான்!’
அடுத்த பாட்டு–
‘பக்தருக்கு அருள் குறிப்பு
பாமரர்க்கு பொருள் குறிப்பு
சத்தியத்தின் ஒரு குறிப்பு வெள்ளையப்பா –
அது முக்திதரும் திருக்குறிப்பு வெள்ளையப்பா!’
அந்த கதாபாத்திரத்தின் தன்மையை அப்படியே பாடலில் சொல்லியிருப்பார் கண்ணதாசன்! நல்ல தமிழும், இசையும் சேர்ந்த கலவைதான் சிவாஜி, கண்ணதாசன், ஏ.பி.நாகராஜன்! இந்த தொண்டருக்கு பிறகு அப்படியே காட்சி சுந்தரமூர்த்தி நாயனாருக்கும் போகும்! அந்த நாயனாரும் சிவாஜிதான்! சிவனால் தடுத்தாட்கொள்ளப்பட்ட திருத்தொண்டர்தான் சுந்தரமூர்த்தி நாயனார்!
திருநாவலூரில் பிறந்தவர் சுந்தரர்! அவரது பெற்றோர் சடையனார் – இசைஞானியார் தம்பதிகளுக்கு மகனாக பிறந்தவர்! அவர் வளரும் அழகையும், அவருடைய அறிவையும் கண்ட அந்த ஊர் மன்னன் நரசிங்க முனையரயர், அவரை சுவீகாரம் எடுத்து வளர்த்து வந்தான்! சுந்தரமூர்த்தி நாயனாருக்கு இயற்பெயர் நம்பியாரூரான்!
அவருக்கு தக்க வயது வந்தவுடன் அரசன் அவருக்கு அந்த ஊரிலிருந்து ஒரு சிவாச்சாரியாரின் மகள் சுகுணவதிக்கு திருமணம் செய்து வைக்க நினைப்பான்! அந்த இடத்திலிருந்துதான் படத்தில் சுந்தரமூர்த்தி நாயனாரின் கதை துவங்கும்! சிவனடியார்களின் வரலாற்றை முழுவதும் படித்திருக்காவிட்டால் இந்த சரிதையை சொல்லும் எண்ணமே இயக்குநருக்கு வந்திருக்காது. மேலும், சுந்தரரின் சரித்திரத்திலேதான் சிவனின் விளையாட்டும், வாதப் பிரதிவாதங்களும் படுசுவாரஸ்யமாக இருக்கும்! அதற்கு திரைக்கதை அமைப்பதுதான் படத்திற்கு விறுவிறுப்பை கூட்டும் என்பதை இயக்குநர் உணர்ந்திருந்தார்!
மன்னர் வந்து சிவாச்சாரியாரிடம் அவரது மகளை சுந்தரருக்கு மணம் பேசி முடித்தபின், தோழி அந்த சிவாச்சாரியாரின் மகளிடம் போவாள்.
அந்த ஒரு காட்சியிலேயே சுந்தரருக்கு வாய்க்கப்போகும் பெண்ணின் பெருமைகளை மிக அழகாக சொல்லிவிடுவார் இயக்குநர்! அந்த மணப்பெண் வேடத்தில் கே.ஆர். விஜயா நடித்திருப்பார்! தோழி போய் அவரிடம் விஷயத்தை சொல்லுவாள்!
உடனே அந்தப் பெண் ‘இறைவா! பிறந்த வீட்டின் பெருமையை நான் காக்க நல்லறிவை கொடு’ என்று வேண்டுவாள்!
அப்போது தோழி கேட்பாள், ‘மாப்பிள்ளை யார் என்று கூட கேட்காமல் அதற்குள் பிறந்த வீட்டின் பெருமை காக்க நினைக்கிறாயே?’ என்பாள்.
‘நம்மை ஈன்றெடுத்த பெற்றோர் தங்கள் பெண்ணுக்கு எந்த மாதிரி மாப்பிள்ளையை பார்க்க வேண்டும் என்பது தெரியாமலா போய்விடும்?’ என்று சொல்லி தன் குணத்தை பிரதிபலிப்பாள்!
அடுத்துதான் திருமண காட்சி! சுந்தரர் அந்த திருமணப் பெண் கழுத்தில் மாங்கல்யத்தை கட்டப் போவார்! அப்போது முழு நீள காவி உடையும், தாடியுமாக ஒரு வயதானவர் அங்கே வருவார்!
அவர் ஜெமினி கணேசன்!
‘சுந்தரா! அவசரப்பட்டு அந்த மாங்கல்யத்தை கட்டிவிடாதே! நீ தீர்க்க வேண்டிய ஒரு கடன் பாக்கி இருக்கிறது! அதற்கு ஒரு சரியான தீர்வை சொல்லிவிட்டு உன் திருமண வேலைகளில் ஈடுபடு’ என்பார் வந்த பெரியவர்! அவரைப் பார்த்த சுந்தரர், ‘யார் இவன் பித்தன் ? சித்தம் தடுமாறிய ஒரு வயோதிகனை திருமண மண்டபத்தில் அனுமதித்து வேடிக்கை பார்க்கிறீர்களே? அனுப்புங்கள் வெளியே!’
‘சித்தம் தடுமாறியது எனக்கல்ல சுந்தரா ! என்னை இங்கிருந்து வெளியே அனுப்பும் அதிகாரம் யாருக்கும் இல்லை! உனக்கும் அந்த உரிமையில்லை’ என்பார் வந்த பெரியவர்.
அடுத்துதான்…
(தொடரும்)
சிவாஜியின் படங்கள், பின்னால் வந்த நடிகர்களுக்கு தமிழ் உச்சரிப்புக்கான ஒரு பாடநூலாகவே இருந்தன என்பது உண்மை! நடிக்கத் துடிக்கும் எல்லோருமே அந்த நாட்களில் சிவாஜி படத்தின் வசனங்களை மனப்பாடமே செய்து வைத்திருந்தார்கள்! 60களுக்கு முன்னால் வந்த நடிகர்கள் ‘பராசக்தி,’ ‘மனோகரா’ படங்களின் வசனங்களை மனப்பாடம் செய்தார்கள் 60களுக்குப் பின்னால் ஏ.பி.நாகராஜன் படங்களை உதாரணமாகச் சொல்லலாம்!
அதில் முக்கியமான படம்தான் ‘திருவிளையாடல்’! அதிலும் முக்கியமானது தருமி – நக்கீரன் பகுதிதான் இப்போது தருமி சிவனின் கேள்விகளை கேட்டு முடித்துவிட்டு சிவனாகிய சிவாஜியின் காலில் விழுந்து, ‘ஐயா! ஆளை விடுங்க! இதுக்கு மேலே எனக்குத் தெரியாது’ என்று சொல்லிவிட்டு பாட்டை வாங்கிக் கொண்டு செண்பகப் பாண்டியனின் சபைக்கு போவான்!
இந்தக் காட்சிதான் எத்தனை முறை பார்த்தாலும் அலுப்பதில்லை! அதிலும் நக்கீரனாக நடித்த ஏ.பி.நாகராஜனின் குரல்தான் எத்தனை கம்பீரம்! அவர் ஏன் அதிகமாக நடிப்பதில்லை என்று ஏங்க வைத்த பாத்திரம் அவருடையது.அடுத்து பாண்டியன் தன் சபைக்குள் நுழைவான்!
அப்போதே தமிழ் விளையாட ஆரம்பிக்கும்!
‘தென்னவன்’ எங்களின் மன்னவன்!
திறமையுடன் முத்தமிழ்ச் சங்கத்தை காத்திடும் கோமகன்’
நீதிக்கு முதல்வன்!
மக்களின் காவலன்!
வேந்தர்க்கு வேந்தன்!
பண்பின் தலைமகன்!
செண்பகப்பாண்டியன்’ என்று அறிவிப்பார்கள்!
எல்லோரும் ‘வாழ்க வாழ்க’ வென்று கோஷம் போடுவார்கள்!
‘அமைச்சரே! என் மனதில் ஏற்பட்டுள்ள சந்தேகத்தை நிவர்த்தி செய்யும் பாடலை எவரேனும் இயற்றி தந்திருக்கிறார்களா ?
‘ இல்லை பிரபு! ஆயிரம் பொன் பரிசு என்று அறிவித்த பிறகும் கூட பரிசைப் பெற எந்த புலவரும் வந்தாகவில்லை.’
‘ம் ! வருந்துகிறேன்! புலமைக்கு தலைவனாக விளங்கும் நக்கீரர்! துணைக்கு கபிலர்! இன்னும் பரணர், மற்றும் சான்றோர் பலர் சபையின் கண் வீற்றிருந்தும் கூட எனது சந்தேகம் தீர்க்கப்படும் பாட்டு ஒன்றை இயற்றாதது ஏன் ? எழுத மனமில்லையா ? அல்லது பரிசுத் தொகை போதவில்லையா?’
நக்கீரர் எழுந்திருப்பார்!
‘மறைமுகப் பேச்சு மன்னருக்கு தேவையில்லை! என்னிடம் நேரடியாகவே கேட்டிருக்கலாம்! புலமைக்கும் திறமைக்கும் போட்டி என்று விட்டிருந்தால் பாட்டுக்கள் குவிந்திருக்கும் இந்நேரம்! ஆனால் அறிவிப்பு அப்படியில்லையே! பரிசுக்கு பாட்டெழுத வேண்டுமென்பதுதானே கட்டளை! அதை அடைய விருப்பமில்லாதவர்கள் அதில் ஈடுபடாமலும் இருக்கலாமல்லவா?
வேந்தே! பொன்னுக்கும் பொருளுக்கும் புலமையை விற்குமளவிற்கு என் எண்ணும் எழுத்தும் இன்னும் இளைக்கவில்லை!’
‘வெகுமதிக்கு முதலிடம் இல்லையென்றால் விட்டுவிடுங்கள்! வேந்தனின் சந்தேகம் தீர விளக்கம் சொல்லுங்கள்’
‘சடலத்தோடு பிறந்தது சந்தேகம். அது என்று தீரப்போகிறது?’
‘சர்ச்சைக்குரியது என்று வந்துவிட்டால் சந்தேகத்தை தீர்க்க வேண்டியது?’
‘முத்தமிழ்ச் சங்கத்தின் கடமை!’
‘அத்தனை பொறுப்புள்ளவர் அருகில் இருக்கும்போது அரசனின் சந்தேகத்தை தீர்த்திருக்கலாமல்லவா?’
‘இத்தனை தெரிந்திருந்த மன்னவரும், பரிசை அறிவிக்கும் முன்பே முத்தமிழ்ச் சங்கத்திடம் அறிவித்திருக்கலாமல்லவா?’
செண்பகப் பாண்டியன் சிரித்தபடியே,‘வென்றுவிட்டீர்! நக்கீரரே, எம்மை வென்றுவிட்டீர்.’
‘வேந்தே! உம்மை வெல்ல எவரால் முடியும்? வெற்றித் திருமகள் என்றும் உம்மையே பற்றிக்கொண்டிருக்கிறாள்.’
அப்போது காவலன் ஒருவன் வந்து மன்னர் முன் மண்டியிடுவான்!
‘மன்னர் மன்னவா ! தங்களின் மனச் சந்தேகத்தைப் போக்க பாட்டுடன் தருமி என்ற புலவர் வந்திருக்கார்’
‘மிக்க மகிழ்ச்சி! நக்கீரர் பாட விரும்பவில்லையென்றாலும், நாட்டில் வேறொரு புலவர் அரசரின் சந்தேகம் தீர்த்தார் என்று வருங்காலம் சொல்லட்டும்! அவரை வரச்சொல்.’
‘மன்னா! பரிசை நாடி வரும் ஏழைப் புலவர் பொன்னைக் கண்டறியாதவர் என்று எண்ணுகிறேன்! அதனால் புலமையை இங்கு அடகு வைக்கிறார்!’
‘எப்படியோ என்னுள் இருக்கும் ஐயப்பாடு நீங்குகிறதா இல்லையா’
‘ நீங்க வேண்டும்! அதை நீக்கவாவது இங்கு ஒரு புலவர் வரவேண்டும்.
ஊக்கத்திற்காவது உங்கள் பரிசை அவன் பெறவேண்டும்.’
தருமி அங்கிருந்த ஒவ்வொரு அமைச்சர்களையும் பார்த்து அரசே! மன்னா! வேந்தே, என்றபடி இறுதியில் நக்கீரர் காலில் விழுந்து ‘மன்னர் மன்னா’ என்பான்!
‘புலவரே! மன்னர் பிரான் அங்கேயிருக்கிறார்.
தருமி மன்னர் காலில் விழுந்தது.
‘பார் வேந்தே! என்னைப் பார் வேந்தே!’
‘வருக புலவரே!
மன்னர் அருகில் போவான் தருமி, ‘ பரிசை இன்னும் யாருக்கு கொடுத்திடலையே! உமது புலமை வாழ்வாங்கு வாழ்ந்து வையத்துள் நிலைக்கட்டும்! எமது சந்தேகத்தை தீர்க்கும் பாட்டை இயற்றி வந்திருக்கிறீரா?
‘ஆம்! ஆம்! நானேதான் எழுதி வந்திருக்கிறேன்!’
எங்கே பாட்டை கொடும்’
‘இல்லை மன்னா! நானே படித்துவிடுகிறேன்
‘‘கொங்குதேர் வாழ்க்கை யஞ்சிரைத் தும்பி
காமஞ் செப்பாது கணடது மொழிமோ!
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியிற்
செற்யெயிற் றரிவை கூந்தலி
னயறிவு முளவோ நீயறியும் பூவே’’
‘ஆஹா! அருமையான பாட்டு! என் ஐயப்பாட்டை நீக்கிய கருத்துக்கள்! ஆழ்ந்த சொற்கள்! தீர்ந்தது சந்தேகம்! அமைச்சரே! பொற்கிழியை எடுத்து வாரும்.’
தருமி சந்தோஷத்தில் துடிப்பான்!
மேலே நான் விவரித்த காட்சி, படம் பார்த்தவர்கள் அனைவருக்குமே நினைவிருக்கும்! ஆனால் ஏன் இந்தப் பதிவு? படத்தை பொழுதுபோக்கிற்காக பார்ப்பது என்பது வேறு! அந்த காட்சியிலிருக்கும், அரங்கச்சுவை! கதாபாத்திரங்கள்! பேசப்படும்வி ஷயங்கள் அனைத்தையும் கவனிக்க வேண்டும்! சோமசுந்தரேஸ்வரர் ஆலயத்திலிருந்து அடுத்த காட்சியை நேராக தருமியை சபையில் கொண்டு வந்து விட்டு காட்சியை துவக்கியிருக்கலாம்! ஆனால் அப்படி செய்யவில்லை இயக்குனர் ஏ.பி.என்.!
மேலே உள்ள விவரங்களைப் படித்தால் எத்தனை தகவல்கள்! என்னே அழகுகொஞ்சும் தமிழ்! இந்த விவரங்களெல்லாம் பரஞ்சோதி முனிவர் அல்ல எந்த திருவிளையாடல் புராணத்திலும் இல்லை! பின் ஏன் இந்த இடைச் செருகல்? அது அப்படியல்ல !
ஒரு இதிகாசத்தையோ, புராணத்தையோ படிக்கிற வாசகர்கள் என்பது வேறு! படம் பார்க்கிற ரசிகர்கள் என்பது வேறு! அவர்களை அந்த செண்பகப் பாண்டியன் காலத்திற்கு அழைத்துச் சென்று, அவனை அங்கிருப்பவன் எப்படி மதிக்கிறார்கள் என்பதைக் காட்டி, பிறகு நக்கீரர் தலைமையேற்கும் முத்தமிழ்ச்ச ங்கத்தை ரசிகர்களுக்கு சொல்ல வேண்டும். பிறகு அந்த முத்தமிழ்ச் சங்கத்தில் எப்படிப்பட்ட புலவர்களெல்லாம் செண்பகப் பாண்டியன் காலத்தில் இருந்தார்கள் என்பதை வெளிப்படுத்த வேண்டும்! அதற்குப்பிறகு கற்றறிந்த புலவர்கள் பலர் அந்த நாட்களில் வெறும் மன்னனுக்கு துதி பாடுபவர்களாக இருந்ததில்லை என்பதை மன்னனுக்கும், நக்கீரனுக்கும் நடந்த விவாதத்தினால் உருவாக்கி காட்டியிருக்கிறார் இயக்குனர் ஏ.பி. நாகராஜன்!
(தொடரும்)
சிவாஜியை எப்படி அடிப்பது என்று எனக்குத் தயக்கம். அதனால் அடிக்கிற மாதிரி ஆக்ஷன்தான் பண்ணினேன்.
அதுதான் வினையாக மாறிடுச்சு. என் கை அவரோட உதட்டுல பட்டு ரத்தம் வர ஆரம்பிச்சிடுச்சு. `மாப்ளே, என்ன இப்படி பண்ணிட்டியே? நீ உண்மையிலேயே அடிச்சிருந்தா வலியோட போயிருக்குமே’ ன்னு சொன்னார்.
ரத்தத்தைப் பார்த்ததும் எனக்கு ரொம்ப சங்கடமா போச்சு. இதற்குப் பிறகு 1958ம் வருஷம் 'கல்யாண பரிசு' படத்திலே நடிச்சுக்கிட்டிருந்தேன். அதே நேரத்தில்தான் ஜெய்ப்பூர்ல 'கட்டபொம்மன்' படத்தோட ஷூட்டிங். அதுல நடிக்கிறதா இருந்த எஸ்.எஸ். ராஜேந்திரன் ஏதோ காரணத்தினால நடிக்க முடியாம போச்சு. அந்த வெள்ளையத்தேவன் கேரக்டரை நான் பண்ணினேன். அதற்குப் பிறகு கூட நாங்க இரண்டு பேரும் சேர்ந்து பல படங்கள்ல நடிச்சோம். சிவாஜி, நான், சாவித்திரி மூணு பேரும் பீம்சிங் டைரக்ஷன்ல தொடர்ச்சியாக நடிச்சோம். 'பதிபக்தி', 'பாசமலர்', 'பாவமன்னிப்பு', 'பந்தபாசம்', 'பார்த்தால் பசி தீரும்'ன்னு எல்லாப் படங்களும் நல்ல படங்களா அமைஞ்சது. எல்லா படங்களும் மக்களிடம் அமோக வரவேற்பை பெற்று நன்றாக ஓடின. அந்த நாட்கள் எல்லாம் என்னால் மறக்கவே முடியாது’ என்று சொன்னார் ஜெமினி கணேசன்.
அதே போல் எஸ்.எஸ். ராஜேந்திரனுக்கும் சிவாஜிக்கும் மிகுந்த நெருக்கம் உண்டு. அதை அவரே சொல்கிறார்:
'1942ம் வருஷம். ஒரு நாள் டி.கே.எஸ். சகோதரர்களின் நாடகக்குழுவில 'மகாபாரதம்' நாடகம். நான் சகாதேவனா நடிக்கிறேன். நாடகம் பார்க்க நடிகவேள் எம்.ஆர். ராதா வந்திருந்தார். அவரோடு பதினைந்து வயது மதிக்கத்தக்க ஒரு பையனும் வந்திருந்தார். யதார்த்தம் பொன்னுசாமி பிள்ளையின் நாடக சபாவில பெண் வேடங்களிலே அந்தப் பையன் நடிப்பதாகச் சொன்னார்கள். பெண் வேடமிடும் அந்த பையனை இரவு மட்டும் எங்களோடு இருக்கச் சொல்லிவிட்டு எம்.ஆர். ராதா போய்விட்டார். மறுநாள் காலை வரை அவர் எங்களோடு தங்கினார். தன் பெயர் கணேசன் என்றார். அவர்தான் அழியாப் புகழ் பெற்ற நடிப்புலக இமயம் சிவாஜி கணேசன்.
நாங்கள் சந்தித்த அந்த ஜூன் இரவின் முதல் நிமிடத்திலிருந்து அவர் மறைந்ததாகத் தகவல் வந்த அந்த கடைசி நிமிடம் வரை சிவாஜி எனக்கு மிகவும் நெருக்கமான சகோதரராகவே விளங்கினார். 'பராசக்தி' படத்தில் வாய்ப்பு வந்த போதும் என்னிடம் சொல்லிவிட்டுத்தான் சென்றார்.
பிறகு கதாநாயகன் வேடத்திற்கு தனக்கு மேக்கப் டெஸ்ட் எடுத்தார்கள் என்று எனக்கு கடிதம் எழுதினார். பிறகு 'பராசக்தி'யில் சிவாஜிக்கு அண்ணன் வேடத்தில் நடிக்க எனக்கும் அழைப்பு வந்தது. நானும் சென்னைக்கு வந்தேன். 'பராசக்தி' படப்பிடிப்பு நடந்தது. சிவாஜி படத்தில் குணசேகரன் ஆனார். நான் ஞானசேகரன் ஆனேன். 'பராசக்தி' ரிலீசானது. தமிழ் திரையுலகில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. 'பராசக்தி'யை தொடர்ந்து சிவாஜியோடு மிக அதிக படங்களில் நடிக்கும் வாய்ப்புக்கள் எனக்கு கிடைத்தன.
தமிழ் திரையுலகம் அதுவரை காணாத மிகச்சிறந்த படங்களில், உணர்ச்சிகரமான வேடங்களில், சிவாஜியோடு நானும் நடித்தேன். 'பராசக்தி'க்குப் பிறகு 'பணம்', 'மனோகரா', 'ராஜா ராணி', 'ரங்கோன்ராதா', 'தெய்வப்பிறவி', 'செந்தாமரை', 'ஆலயமணி', 'குங்குமம்', 'பச்சைவிளக்கு', 'கைகொடுத்த தெய்வம்', 'சாந்தி', 'பழநி' என்று பல படங்களில் பெரும்பாலும் அதிக வசூலைக் குவித்து மிகப்பெரிய வெற்றியை சிவாஜியால் நான் அடைந்தேன். இந்த தருணத்தில் என்னை விட்டு சிவாஜியை பிரிக்கும் முயற்சியும் நடந்தது. நீ ஏன் சிவாஜியுடன் நடிக்க வேண்டும், சிவாஜியோடு நடிப்பதால் உனக்கு என்ன லாபம் என்றெல்லாம் கேள்விகள் எழுந்தன. அதற்கு நான் நல்ல பதிலை தந்தேன். `சிவாஜியும், நானும் சேர்ந்து நடிக்கும் படங்கள் மிக அதிக வரவேற்பை பெறுகின்றன. அதிக வசூல் கிடைக்கிறது. எதுவுமே தோல்வி அடைவதில்லை. தோல்வி அடைந்ததாகக் கூறப்பட்ட 'பழநி' போன்ற படங்களில் கூட போட்ட பணம் கிடைத்துவிட்டது. அதிக லாபம்தான் கிடைக்கவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக எனக்கு மிக அதிக சம்பளம், விநியோக உரிமையில் நிகர லாபம் கிடைப்பதெல்லாம் சிவாஜியோடு நடிக்கும் படங்களில் மட்டும்தான்’ என்றேன்.
சிவாஜியும் நானும் சேர்ந்து நடித்த படங்களிலேயே சிவாஜிக்கு மிகவும் பிடித்த படம் 'கைகொடுத்த தெய்வம்' தான். அதன் வெற்றி விழாவில் 'கைகொடுத்த தெய்வம்' படத்தில் என்னை விட சிறப்பாக நடித்தவர் எஸ்.எஸ்.ஆர்.தான்’ என்று பாராட்டி பேசினார். இத்தகைய மனமார்ந்த பாராட்டுக்களை வேறு யாரும் சொல்லவே மாட்டார்கள். நடிகர், அவர் மட்டும்தான் இங்கு நடிகர். ராஜ்யசபா எம்.பியாக நான் தேர்வு செய்யப்பட்டேன். சிவாஜி என் வீட்டிற்கு வந்து மாலையணிவித்து பாராட்டிவிட்டு, விருந்திலும் கலந்து கொண்டார். எல்லோரும் போன
பிறகு சிவாஜி என்னிடம், `நீ, எம்.பியானதிலே எனக்கு சம்மதமேயில்லை. எந்த வயசுல வேணும்னாலும் நீ எம்.பியாகலாம். நீ எம்.பி., ஆனதனால தமிழ்நாடு ஒரு நல்ல நடிகனை இழக்குது’ என்றார்.
'சிவாஜிக்கு என் மீது எவ்வளவு பாசமும், பற்றும் இருந்திருந்தால் இப்படி சொல்லியிருப்பார்' என்றார் எஸ்.எஸ். ஆர்.
சிவாஜியை விட மூத்த நடிகர் நாகையா. அவர் மீது திரையுலகத்தினர் அனைவருமே மிகுந்த மரியாதை வைத்திருந்தனர். நல்ல பாத்திரங்கள் என்றால் நாகையாவைத்தான் படவுலகினர் தேடுவார்கள். அவர் சிவாஜியைப் பற்றி சொல்லும்போது, `சிவாஜி கணேசன் கடவுள் நமக்களித்த ஒரு பொக்கிஷம். எந்தவிதமான பாத்திரத்தையும், அதன் ரசங்களையும் தானே அனுபவித்து, அப்பாத்திரமாகவே மக்களுக்கு அளிப்பவர்.
மேலும் அவர் ஒரு கலை அவதாரம். கடவுள் ஒவ்வொரு துறையிலும் இருக்கிறார். அதுபோல கலைத்துறையில் கணேசன் அவர்கள் கடவுள். அவர் சிறிதும் கஷ்டமின்றி நடிப்பவர். நல்ல மனப்பான்மை கொண்டவர். அவருடன் நடிப்பதே ஓர் அரிய பாக்கியம். உடன் நடிப்பவருக்கு நடிப்பை கற்றுக் கொடுப்பவர். சக நடிக நடிகையர் முன்னுக்கு வர பாடுபடுபவர். நான் இந்த வயதிலும் கணேசனுடன் நடிப்பதையே பாக்கியமாக கருதுகிறேன்’ என்று சிவாஜியின் நாற்பதாவது பிறந்த நாளின்போது சொன்னார் நாகையா.
அதே போல் சிவாஜியுடன் அதிக படங்களில் நடித்து, அவருடன் மிகுந்த தோழமையுடன் இருந்தவர் வி.கே. ராமசாமி.
`செய்யும் தொழிலை தெய்வமாக மதித்தவர் சிவாஜி. 3 ஷிப்டுகள் வேலை செய்தார். 20 மணி நேரம் வேலை பார்த்துவிட்டு 4 மணி நேரம் ஓய்வு எடுத்த கடும் உழைப்பாளி. தொழிலிலேயே ஊறிப்போய் கிடந்தார் என்றே சொல்லலாம். அந்தக் காலத்தில் தொழில் கிடைப்பதே கஷ்டம். கிடைத்தாலும் ஆசைகளுக்கு ஆட்பட்டு அழிந்தவர்கள் அதிகம். அத்தகைய காலத்தில்…..
(தொடரும்)
செலுலாய்ட் சோழன் சிவாஜி தொடர் 179– சுதாங்கன்
பதிவு செய்த நாள் : 11 ஜூன் 2017
'அகல கால் வைக்காமல் சீராக நடந்து சிறப்பு பெற்றவர் சிவாஜி. சகல பாக்கியங்களும் பெற்ற ஒரே நடிகர் அவராகத்தான் இருக்க முடியும். அவரது குடும்பமும் சீராக அமைந்தது. அதைக் கட்டுக்கோப்பாக வைத்துக் கொண்டிருக்கும் ஒரே கலைஞர் அவர்தான்.
பல ஆண்டுகளாக கதாநாயகனாக நடிக்கும் ஒரே ஆள் உலக சரித்திரத்திலேயே நம் சிவாஜி ஒருவராகத்தான் இருக்க முடியும். இவ்வளவு வயதுக்குப் பிறகும் அவரை ஹீரோவாகத்தானே பார்க்கிறார்கள். தயாரிப்பாளர்களும் சரி, ரசிகர்களும் சரி, சக நடிகர்களும் சரி, சிவாஜியை ஹீரோவாக, குருவாகத்தானே நினைக்கிறார்கள். சிவாஜி சினிமாவுக்கு மட்டுமல்ல, நாட்டுக்காகவும் பாடுபட்டிருக்கிறார். தன் சொந்தப் பணத்தை இந்த நாட்டுக்காக செலவழித்திருக்கிறார். பல்வேறு பட்டங்களைப் பெற்று பாரத நாட்டுக்குப் பெருமை தேடித் தந்தார். பிறநாடுகளால் கவுரவிக்கப்பட்டார்’ என்று சொல்லியிருக்கிறார் வி.கே. ராமசாமி.
சிவாஜியிடன் அடிப்படையில் இருந்த ஒரு குணம், தன் படங்களில் எல்லா கதாபாத்திரங்களும் நன்றாக மிளிர வேண்டுமென்று நினைப்பார். மற்றவர்கள் பெயர் வாங்கினால்தான் தன் படத்திற்குப் பெருமை என்று நினைத்தவர் சிவாஜி.
கதாநாயகனா, வில்லனா என்பது பற்றி அவருக்குக் கவலையில்லை. அந்த பாத்திரத்தில் நடித்தால் தனக்கு நடிக்க தீனி இருக்குமா என்று மட்டும் பார்ப்பார். அதனால், கெட்டவன் வேடத்தைப் போடக்கூட அவர் தயங்கியதில்லை.
சில கதாபாத்திரங்களில் தனக்கு சவால் விட்டு நடிக்கக்கூடிய நடிகர்களையே அவர் சிபாரிசு செய்வார். உதாரணமாக, தமிழ் சினிமாவில் போற்றப்படாத ஒரு கதாநாயகன் வில்லனாகவே மக்கள் மனதில் பல ஆண்டுகள் இடம் பிடித்தவர் எம்.என். நம்பியார்.
சர்ச்சையில்லாத ஒரு நடிகர். சினிமாவில் கிடைக்கும் எந்தவித ஆசாபாசங்களுக்கும் தன்னை ஆட்படுத்திக் கொள்ளாத ஒரு தூய மனிதர். பல சினிமா கலைஞர்களுக்கும் குருவாக இருந்து பலரை ஆண்டுதோறும் சபரிமலைக்கு அழைத்துச் செல்வார்.
தமிழில் ஒரே படத்தில் பல வேடங்களைத் தாங்கி 'திகம்பர சாமியார்' படத்தில் நடித்த முதல் நடிகர் எம்.என். நம்பியார் என்றே சொல்லலாம்.
இந்த இடத்தில் ஒரு விஷயத்தை சொல்லியாகவேண்டும். எம்.ஜி.ஆர்., தன் படங்களில் கதாநாயகிகளை, பிற நடிகர்களை, தன்னுடன் நடிக்கும் வில்லன்களை அடிக்கடி மாற்றிக் கொண்டேயிருப்பார். ஆனால் ஒருவர் மட்டும் எம்.ஜி.ஆருடன் அதிக படங்களில் வில்லனாக நடித்திருக்கிறார் என்றால் அது நம்பியாராகத்தான் இருக்க முடியும்.
எம்.ஜி.ஆர்., நடித்த 136 படங்களில் குறைந்தது 60 படங்களுக்கு மேலாக அவருடன் வில்லனாக நடித்தவர் எம்.என். நம்பியார். ஏன் எம்.ஜி.ஆருக்கு இவர் மீது இத்தனை பாசம். இருவருக்கும் தாய் மொழி மலையாளம் என்பதாலா?
பலருக்கு தெரியாத உண்மை ஒன்று உண்டு. அதை எம்.ஜி.ஆர்., தன் சுயசரிதையான ` நான் ஏன் பிறந்தேன்’ புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
அப்போது கோவை சென்டரல் டாக்கீஸ் எம்.ஜி.ஆரை கதாநாயகனாக வைத்து ` ராஜகுமாரி’ படத்தை எடுக்க முடிவு செய்தது. அந்த படம் ஒரு வருடத்தில் முடிக்கப்படும் அந்த படத்திற்காக ஒரு வருடத்திற்கு எம்.ஜி.ஆருக்கு சம்பளம் 2,500 ரூபாய். அதை ஒவ்வொரு மாதமும் வாங்கிக் கொள்ளலாம். படம் ஒரு வருடத்தில் முடியாவிட்டால், பேசிய தொகையை விட ஒரு ரூபாய் கூட அதிகமாக கம்பெனி தராது. ஆனால் ஒப்புக்கொண்ட நடிகர்கள் அந்தப் படத்தை முடித்து கொடுக்க வேண்டும்– இதுதான் கம்பெனி எம்.ஜி.ஆருக்கு விதித்த நிபந்தனை.
எம்.ஜி.ஆருக்கு முதல் கதாநாயகன் வாய்ப்பு. படம் ஒரு வருடத்தில் முடியவில்லை. பேசிய முழுத் தொகையையும் எம்.ஜி.ஆர்., வாங்கிவிட்டார். படம் முடிய இன்னும் நாலைந்து மாதங்கள் ஆகும்.
எம்.ஜி.ஆர்., கையிலோ காசில்லை. படத்தை முடிக்காமலேயே ஓடிவிட நினைத்தார் எம்.ஜி.ஆர்.
அப்போது அவரை விட மூத்த நடிகரும், சற்று வசதியாகவும் இருந்த எம்.என். நம்பியார், அவருக்கு தேவையான பண உதவிகளைச் செய்து அவர் அந்த படத்தில் நடித்து முடிக்கும்படி செய்தார். அந்த நன்றி விசுவாசம் எப்போதும் எம்.ஜி.ஆருக்கு நம்பியார் மீது இருந்தது.
அப்படிப்பட்ட நம்பியார் தன் படத்திலும் முக்கியமான வில்லன் வேடங்களில் நடிக்க வேண்டுமென்று சிவாஜியும் விரும்பினார். நம்பியார் சிவாஜியுடனும் பல படங்களில் வில்லனாக நடித்திருக்கிறார்.
அதில் குறிப்பிடத்தக்க படம் 'உத்தமபுத்திரன்'. அந்தப் படத்தில் நம்பியார் பாத்திரம்தான் கதையின் மையக்கரு. இப்போது அந்தப் படத்தைப் பார்த்தாலும், நம்பியாரைத் தவிர வேறு யாரையும் அந்தப் பாத்திரத்திற்குப் பொருத்திப் பார்க்க முடியாது.
நம்பியாருக்கும் சிவாஜி மீது நல்ல மதிப்பு உண்டு.
அவர் சிவாஜியை பற்றி சொல்லும்போது, `நடிப்பதற்காகவே பிறந்தவர் நடிகர் திலகம். அகில உலக நடிகர்களில் திலகம் என்று பொருத்தமான பட்டத்தை பேசும் படம் இதழின் வாசகர் ஒருவர் வழங்கினார் என்று கருதுகிறேன். அவருக்கு வழங்கிய ஏனைய பட்டங்கள், விருதுகளைவிட நடிகர் திலகம் என்ற பட்டத்தை வழங்கியவர்கள் வாழ்க! நடிகர் திலகத்தின் நடிப்பை சிலர் 'ஓவர் ஆக்டிங்' என்று சொல்வார்கள். ஆனால் அந்த நடிப்பை அவர் தெரிந்தே செய்கிறார். வசனங்களைப் பேசாமல் நடிப்பின் மூலமே தான் நினைப்பதை வெளிப்படுத்தக்கூடிய நடிகர் அவர் ஒருவர்தான்.
உதாரணமாக, நமது முன்னோராலும், அறிஞர்களாலும் நூற்றுக்கணக்கான வருடங்களாகக் கூறப்பட்ட கருத்துக்களைத்தான் மறைந்த கவிஞர் கண்ணதாசன் நமக்கு வழங்கினார். அதாவது, கவிஞர் சொன்னது எளிமையாகவும், சுலபமாக புரிந்து கொள்ளும் வகையிலும் இருந்ததால் நம்மால் அவரை
மறக்க முடியவில்லை. நமது நடிகர் திலகத்தின் அணுகுமுறையும் அதே போல்தான்.
ஓர் அசைவால், பார்வையால் எவ்வளவோ விஷயங்களை நமக்கு உணர்த்தக்கூடியவர். நடிப்புக் களஞ்சியமான அவர், `நடிப்பை இன்னும் கற்றுக் கொள்கிறேன்’ என்று கூறுகிறார் என்றால், வியப்பல்லவா? நல்லது எதுவானாலும் ஏற்றுக்கொள்ளும் நல்ல உள்ளம் படைத்தவர் அவர். நடிப்பிற்கு எல்லையில்லை என்பது அவருடைய கருத்து. அவருடன் நான் நடித்த படங்களை நினைவுகூர்ந்து பார்க்கிறேன்.
'பாகப்பிரிவி'னையில் தம்பியாக, 'பாதுகாப்'பில் அண்ணனாக, 'பாசமல'ரிலும், 'மக்களைப் பெற்ற மகராசி'யிலும் மைத்துனனாக, 'உத்தமபுத்திர'னில் மாமாவாக, சில படங்களில் தோழனாக, பல படங்களில் எப்போதும் போல் எதிரியாக அவருடன் நடித்த நாட்கள், நினைத்தாலே இனிக்கும் நல்ல நாட்கள். முப்பத்தி நான்கு ஆண்டுகளாக தொடர்ந்தாற்போல், படப்பிடிப்பிற்கு குறிப்பிட்ட நேரத்திற்கு வரும் ஒரே நடிகர் அவர்தான். இந்த பழகத்தை மற்றவர்கள் பின்பற்றினால் தயாரிப்பாளர்களுக்கு பல
லட்சம் வீணாகாது. நடிகர் திலகத்தின் நடிப்பு இளமை குன்றாதது’ என்றார் நம்பியார்.
(தொடரும்)
அகில உலகிலும் புகழ் பெற்ற அந்த பிரபலமான இந்தி வி.ஐ.பி. யார் ?
அவர்தான் இந்தியின் பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர்!
வழக்கமாக லதா மங்கேஷ்கர் மற்ற பாடகிகளின் குரலை ஊக்குவிக்க மாட்டார் என்று சொல்வார்கள்.
`குட்டி’ என்கிற இந்திப்படத்தில்தான் பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் அறிமுகமானார். அவர் பாடிய `போலுரே பப்பி’ என்ற பாடல் இந்தியில் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது.
அவருடைய குரல் வட இந்திய மக்களை வெகுவாக கவர்ந்தது.
ஆனால் `வாணி ஜெயராமை பாட வைத்தால், அந்த சினிமா நிறுவனத்திற்கு நான் பாடமாட்டேன்’ என்று லதா மங்கேஷ்கர் சொன்னதாக அப்போது வட இந்திய பத்திரிகைகளில் செய்தி வந்தது. அப்படிப்பட்ட லதா மங்கேஷ்கர்தான் பி. சுசீலாவை பாராட்ட சென்னைக்கு வந்தார். ஆனால், உண்மையிலேயே சுசீலாவின் குரல் லதா மங்கேஷ்கருக்கு மிகவும் பிடிக்கும் என்பதுதான் உண்மை.
`பாவமன்னிப்பு’ படத்தில் சுசீலா பாடிய `அத்தான் என்னத்தான்’ பாடலை லதா மங்கேஷ்கர் மிகவும் ரசித்ததாக அப்போதே செய்திகள் வந்தன. அடுத்து லதா மங்கேஷ்கர் இந்த விழாவிற்கு வந்ததற்கு இன்னொரு காரணம், ஏவி.எம்.நிறுவனம்.
அதைவிட முக்கியமானது, லதா மங்கேஷ்கர் சிவாஜி குடும்பத்தின் மிகவும் நெருக்கமான நண்பர். சிவாஜி கணேசனும், லதா மங்கேஷ்கரை தன் சகோதரி என்றுதான் எப்போதும் குறிப்பிடுவார்.
அந்த லதா மங்கேஷ்கர்தான் 'உயர்ந்த மனித'னில் சுசீலா பாடிய பாடலை பாராட்ட சென்னை வந்திருந்தார். அதே சமயம் `உயர்ந்த மனிதன்’ படம் வெளியாகி 125 நாட்கள் ஓடியபிறகுதான் ஏவி.எம். நிறுவனம் 100வது நாள் விழாவை கொண்டாடியது.
இந்த நூறாவது நாள் விழா ஏவி.எம். ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அறிஞர் அண்ணா கலந்து கொண்டு கலைஞர்களை பாராட்டிப் பேசி பரிசுகளை வழங்கினார்.
`உயர்ந்த மனிதன்’ தயாரிப்பில் இருந்தபோது இன்னொரு சுவையான சம்பவமும் நடந்தது. நடிகர்
எஸ்.வி. சுப்பையா அப்போது `காவல் தெய்வம்’ என்றொரு படத்தை எடுத்துக்கொண்டிருந்தார்.
ஏவி.எம். சரவணனோடு மிகவும் உரிமை எடுத்துக் கொண்டு பழகும் இரண்டு கலைஞர்கள் எஸ்.ஏ. அசோகனும், எஸ்.வி. சுப்பையாவும்தான். தனது
`காவல் தெய்வம்’ படத்திற்கு சுப்பையாவுக்கு சிவாஜியின் கால்ஷீட் நான்கைந்து நாட்கள் தேவைப்பட்டது.
`நான் எவ்வளவு கேட்டும் சிவாஜி தரமாடேன்ங்கிறார். நீங்க கேட்டு வாங்கித் தரணும்’ என்று ஏவி.எம். சரவணனிடம் எஸ்.வி. சுப்பையா கேட்டுக்கொண்டார்.
அவருக்கு எப்படியும் அந்த படத்தை விரைவாக முடித்து திரையிட்டாக வேண்டும். ஏனென்றால், தயாரிப்புச் செலவுகள் ஏகமாகிக் கொண்டிருந்த நிலையில் எந்த தாமதமும் அவருக்கு வட்டிச் சுமையை மேலும் அதிகமாக்கும்.
அப்போது சிவாஜிக்கும், எஸ்.வி. சுப்பையாவுக்குமிடையே கருத்து வேறுபாடு. சிவாஜி கால்ஷீட் தராமல் இருந்தது அதுவும் ஒரு காரணம்.
சரவணன் சிவாஜியிடம் போய் கேட்டார்.`சுப்பையா கம்பெனியின் புரொடக்ஷன் மானேஜர் நான் என்று நினைத்துக் கொள்ளுங்கள். கொஞ்சம் ஹெல்ப் பண்ணினால் நல்லாயிருக்கும்.’
`என்ன செய்யறது? எனக்கு, கொடுக்க டேட்ஸ் இல்லியே? எப்படி கால்ஷீட் கொடுக்கிறது?’’ என்றார் சிவாஜி.
அப்போது `உயர்ந்த மனிதன்’ படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தது.
``சரி! ஒண்ணு செய்யுங்க. `உயர்ந்த மனிதன்’ படத்துக்கு எங்களுக்கு டேட் கொடுத்திருக்கீங்க இல்லே…. அதில் நாலைஞ்சு நாட்கள் இந்த ஷெட்யூல்ல சுப்பையாவுக்கு கொடுங்க. அப்புறம் அடுத்த ஷெட்யூல்ல நீங்க எங்களுக்கு அதை சேர்த்துக் கொடுத்திட்டா ஓ.கே.’’ என்றேன்.
சற்று நேரம் யோசித்த சிவாஜி, ``அப்படிக் கொடுத்தா பரவாயில்லையா?’ என்று கேட்டார்.
"சுப்பையா என்கிற நண்பருக்காக நான் இந்த தியாகத்தைச் செய்ய தயாராக இருக்கேன்’’ என்று சரவணன் சிரித்துக்கொண்டே சொன்னார்.
ஐந்து நாட்கள் சுப்பையாவுக்கு சிவாஜி நடித்துக்கொடுத்தார். அந்த ஐந்தே நாட்களில் அந்த ரோலை அற்புதமாக செய்து கொடுத்தார். அந்த படத்தில் ஒரு மரமேறியாக சிவாஜி வருவார். படம் முழுக்க வரும் ரோல் அது. அந்த சில நாட்களில், தனது போர்ஷன் முழுவதையும் கச்சிதமாக முடித்து கொடுத்துவிட்டார் நடிகர் திலகம்.
அதன் பின்னர் ஒரு நாள் ஒரு டிபன் கேரியரை சிவாஜிக்கு கொடுத்தனுப்பினார் எஸ்.வி. சுப்பையா. அதில் சிவாஜி சாப்பிட டிபன் அனுப்பியிருப்பதாகச் சொல்லியிருந்தார்.
சிவாஜி டிபன் பாக்ஸை திறந்தார். முதல் அடுக்கில் உண்மையிலேயே டிபன் இருந்தது. கீழே இருந்த கிண்ணத்தில் பதினையாயிரம் ரூபாய் இருந்தது. சிவாஜிக்கு கோபம் வந்து ஏவி.எம். சரவணனை கூப்பிட்டனுப்பினார்.
சரவணனைப் பார்த்ததும், `உங்க ஆச்சாரி செய்த வேலையைப் பாத்தீங்களா?’ என்று வெடித்தார் சிவாஜி. சுப்பையாவை சிவாஜி எப்போதும் ஆச்சாரி என்றுதான் அழைப்பார். அந்த இடத்துக்கு சுப்பையா வரவழைக்கப்பட்டார். சரவணன் விசாரித்தார். `காவல் தெய்வம்’ படத்தில் நடித்ததற்காக சிவாஜிக்கு நான் அனுப்பிய சம்பளம்’ என்றார் சுப்பையா.
`எனக்கு நீங்க சம்பளம் தர்றதாயிருந்தா எவ்வளவு தரணும் தெரியுமா? சரவணனைக் கேளுங்க. 'உயர்ந்த மனிதன்' படத்துக்கு எனக்கு தர்ற லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் தரணும்’
சுப்பையாவுக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை.
`நான் உங்களுக்கு தந்த கால்ஷீட் உங்களுக்காக தரலே. சரவணனுக்காகத்தான் கொடுத்தேன்’ என்றார் சிவாஜி.
சற்று நேரம் இப்படியே போயிற்று. பிறகு தன்னுடைய செயலுக்கு சுப்பையா வருத்தம் தெரிவித்தார். சிவாஜியும் பிறகு சகஜமாகிவிட்டார். அந்தப் பணத்தை சிவாஜி கடைசி வரையில் வாங்கிக் கொள்ளவேயில்லை.அதை சுப்பையாவிடமே திருப்பிக் கொடுத்துவிட்டார். சுப்பையா சரவணனிடம் கொண்டிருந்த அன்புக்கு அளவே இல்லை. அதே போல் சரவணனும், அவரிடம் அன்பு கொண்டிருந்தார். சுப்பையாவை பற்றி இந்த இடத்தில் இன்னொரு தகவலையும் சொல்லியாக வேண்டும்.
சிவாஜியுடன் நடித்தவர்களில் மிக முக்கியமான நடிகர்களில் சுப்பையாவும் ஒருவர். அவர் அப்போது ரெட்ஹில்ஸ் பகுதியை அடுத்த காரனோடையில் பண்ணை வீடு ஒன்று கட்டியிருந்தார். அங்குதான் வசித்தார்.படப்பிடிப்புக்கு அங்கிருந்துதான் வருவார்.
அருமையான இயற்கைச் சூழல் வாய்ந்த இடம் இது.
காஞ்சி மகா பெரியவர் சுப்பையாவின் இடத்துக்கு வந்து தங்கியிருக்கிறார் என்றால் அந்த இடத்தை பற்றி வேறென்ன சொல்லவேண்டும்?
`என் வீட்டுக்கு வரவேண்டும் ‘ என்று சுப்பையா ஒரு நாள் சரவணனை அழைத்தார்.
அவரும் போனார். உள்ளே நுழைந்ததும் `டேய் சரவணா …. உனக்கு அறிவிருக்கா? புத்தியிருக்காடா? ஏண்டா இப்படி பண்றே? என்றார்.
சுப்பையா ஏன் அப்படி சொன்னார் ?
(தொடரும்)
..சரவணன் சிரித்தபடியே உட்கார்ந்திருந்தார். சுப்பையாவுக்கே பொறுக்க முடியாமல் 'நான் உங்களைத் திட்டிக் கொண்டிருக்கிறேன். உங்களுக்கு கோபம் வரலியே?’ என்றார்.
`வரலே! ஏன்னா எனக்குத் தெரியும். நீங்க உங்க மகனைத் திட்டிக்கொண்டிருக்கிறீர்கள். என்னை நேருக்கு நேர் பார்த்து திட்ட உங்களுக்கு துணிவு இல்லை என்பது எனக்குத் தெரியாதா?’ என்றார் சரவணன்.
`கரெக்டா பிடிச்சுட்டிங்களே' என்றபடி சுப்பையா சிரித்தார். சரவணன் மேல் இருந்த அன்பினால், தன் மகனுக்கு சரவணன் என்று பெயர் வைத்திருந்தார் சுப்பையா. அவரை வீட்டுக்கு வரவழைத்து, திட்டுவது போல் ஒரு பிராக்டிகல் ஜோக் விளையாடினார் சுப்பையா.
`உயர்ந்த மனிதன்’ வெற்றி விழாவில் அறிஞர் அண்ணா கலந்து கொண்டு சிவாஜி கணேசனை வாழ்த்திப் பேசினார். திருப்பதி சென்றதைத் தொடர்ந்து திராவிட இயக்கத் தொடர்புகளில் இருந்து சிவாஜி கணேசன் விடுபட்டு வெளியே வந்தபோதிலும், பெரியாரிடமும், அண்ணாவிடமும் தொடர்ந்து மதிப்பும், மரியாதையும், நட்புறவும் வைத்திருந்தார் சிவாஜி. இதைப் பற்றி சிவாஜியே சொல்லியிருக்கிறார்.
`நான் ஒரு லட்சியத்துக்காக அண்ணாவை விட்டு வெளியே வந்தேனே தவிர, அண்ணா எப்போதும் என் அண்ணாதான். நான் இருந்த இடத்தை விட்டு வெளியே வந்தனே தவிர, அண்ணாவை விட்டுப் பிரியவில்லை. அண்ணா கட்சியை அரசியலால் நடத்தவில்லை. அன்பால் நடத்தினார். அதை ஒரு மாபெரும் கட்சியாக வளர்த்தார்.
1967 தேர்தலில் அண்ணா வெற்றி பெற்று முதல்வர் ஆனார். நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். சில காலத்திற்குப்பின் அண்ணாவுக்கு உடல் நலம் குன்றி லண்டனுக்கு பரிசோதனைக்குப் போனார். அப்போது என் மகள் சாந்திக்கு திருமணம். என் நண்பர் வேலுச்சாமி என்ற டாக்டருக்கு விமான டிக்கெட் வாங்கிக் கொடுத்து, லண்டனுக்கு அனுப்பி, அண்ணாவுக்கு அழைப்பிதழ் கொடுக்கச் செய்தேன்.
`திருமணம் நன்றாக நடக்கட்டும். இன்னும் பத்து நாட்களில் நான் சென்னை திரும்பி வந்துவிடுவேன்’ என்று அண்ணா செய்தி அனுப்பினார்.என் மகள் சாந்தியின் திருமணம் மிகச்சிறப்பாக நடந்தது. அதற்கு அடுத்த வாரம் அண்ணா சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் வைத்தே `மகளையும், மருமகனையும் வீட்டுக்கு அழைத்து வருமாறு கணேசனிடம் சொல்லுங்கள்’ என்றார்.
நான் என்னுடைய மகளையும், மருமகனையும் அழைத்துக் கொண்டு அண்ணா வீட்டுக்குச் சென்றேன். அண்ணாவை வணங்கியவுடன் அவர் ஒரு வேட்டியையும், புடவையையும் அன்பளிப்பாக வழங்கினார். ஏவி.எம்மின் `உயர்ந்த மனிதன்’ என்னுடைய 125 படமாக வெளியாகியிருந்தது. அதையொட்டி ஏவி.மெய்யப்பனும், என்னுடைய நண்பர் கோபாலும் ஏவி.எம். ராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் ஒரு விழா நடத்தினார்கள்.
வடநாட்டில் இருந்து பெரிய தலைவர்களெல்லாம் வந்திருந்தார்கள். ஒய்.பி. சவான் வந்திருந்தார். இந்த விழாவில் அண்ணா கலந்து கொண்டு என்னை வாழ்த்தி பேச வேண்டும். என்னை விரும்பாத சிலர் அண்ணாவிடம் சென்று `விழாவுக்கு போகாதீர்கள். சிவாஜியை வாழ்த்திப் பேசாதீர்கள்’ என்று சொன்னார்கள்.
`ஆயிரம்தான் இருந்தாலும் சிவாஜி, சிவாஜிதான். அவன் எனக்கு எப்போதுமே வேண்டியவன்தான். அவனைப் போல் அன்புள்ளவன் எவனும் கிடையாது’ என்று சொல்லிவிட்டு அண்ணா விழாவுக்கு வந்தார். உடம்பு முடியாமல் இருந்த நேரத்திலும் அண்ணா அந்த கூட்டத்தில் முக்கால் மணி நேரம் பேசினார். `மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு’ என்றார்.
மேலும், `இந்த மலர் மலர்ந்த பிறகுதான் நீங்கள் பார்க்கிறீர்கள். இது மொட்டு விடும்போதே, இது நன்றாக அரும்பி வாசனை கொடுக்கும் என்று எனக்குத் தெரியும்' என்றும் கூறினார். அதன்பின் `கணேசா! என் அருமைத் தம்பி! நீ எங்கிருந்தாலும் வாழ்க’ என்று மனம் திறந்து வாழ்த்தினார்.
`பெருமாள் முதலியார் கூட்டி வந்ததனால், கணேசன் திரை உலகுக்கு சீக்கிரம் வந்துவிட்டான். இல்லையென்றாலும், இரண்டு ஆண்டுகள் கழித்து சிவாஜி கணேசன் சினிமாவுக்கு வந்திருப்பான். அவனுடைய வரவை யாராலும் தடுத்திருக்க முடியாது’ என்றும் கூறினார் அண்ணா.
இந்த நிகழ்ச்சிக்குப் பின் அண்ணா, தி.நகரில் என்.எஸ்.கே. சிலையை திறந்து வைத்தார்கள். அதன்பின் சில நாட்கள் கழித்து அண்ணா மறைந்துவிட்டார்கள். நான் `சிவாஜி’ ஆவதற்கு வழிவகுத்துத்தந்த அந்த மாமேதையின் மறைவு என்னை எப்படி பாதித்தது என்பதை வேறு வார்த்தைகளால் விவரிக்க முடியாது. நான் நாடகங்களிலும், படங்களிலும் தமிழைப் பேசும்போதெல்லாம் அந்த தமிழ்ச் செல்வரின் நினைவு வரும். அவர் என்னுடன் வாழ்ந்து கொண்டிருப்பதாகவே நான் நினைக்கிறேன்’ என்றார் சிவாஜி. சிவாஜி கணேசனின் தாயார் ராஜாமணி அம்மாள் தனது 72வது வயதில் காலமானார். சிவாஜியின் வெற்றிப்படங்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருந்த காலகட்டமது!
1969ல் 'அன்பளிப்பு', 'தங்கச் சுரங்கம்', 'காவல்தெய்வம்', 'குருதட்சணை', 'அஞ்சல் பெட்டி 520', 'நிறைகுடம்', 'தெய்வ மகன்', 'திருடன்', 'சிவந்த மண்' என்று 9 படங்கள் வெளியாகின. சிவாஜி கணேசன் மூன்று வேடங்களில் நடித்த `தெய்வ மகன்‘ படத்தை ஏ.சி. திருலோகசந்தர் இயக்கினார். அந்தப் படத்திற்கு ஆரூர்தாஸ் வசனம் எழுதினார். அந்த படத்திற்கு இசை, எம்.எஸ். விஸ்வநாதன். அப்பாவாகவும், இரண்டு மகன்களாகவும் சிவாஜி சிறப்பாக நடித்தார். ஆஸ்கார் பரிசுக்கு இந்தியாவின் சார்பாக அனுப்பப்பட்ட படம் இது.
`காதல் மலர் கூட்டம் ஒன்று வீதி வழி போகும் என்று யாரோ சொன்னார்,’
`கேட்டதும் கொடுப்பவனே கீதை நாயகனே,’ `தெய்வமே தெய்வமே நன்றி சொல்வேன் தெய்வமே’ என்று இந்த படத்தின் எல்லா பாடல்களுமே மிகப் பிரபலம். ஒரு காட்சியில் தந்தை சிவாஜி, மூத்த மகன் சிவாஜி, இளைய மகன் சிவாஜி, என்று மூன்று சிவாஜிக்கள் அந்தக் காட்சியில் இருப்பார்கள்.
இளைய மகன் சிவாஜி தந்தையிடம் பீரோவுக்கு பின்னால் ஒளிந்தபடி பணம் கேட்பார். தந்தை சிவாஜி மறுப்பார். எதிரில் இருக்கும் மூத்த மகன் சிவாஜி `பாவம் கொடுங்கள்’ என்று சைகை காட்டுவார். இன்று நினைவில் நிற்கிறது. சாந்தி தியேட்டரில் இந்த படம் வெளியானபோது இந்த காட்சிக்கு ரசிகர்களின் விசில் பறந்தது.
`தெய்வ மகன்’ சிவாஜியின் சினிமா வரலாற்றில் ஒரு மைல்கல் என்றே சொல்லலாம். எத்தனை பாவங்கள், எத்தனை உணர்ச்சிகள், தந்தைக்கு ஒரு நடிப்பு! மூத்த மகனுக்கு ஒரு மானரிஸம்! இளைய மகனுக்கு ஒரு ஸ்டைல்! சிவாஜி சிவாஜிதான்!
(தொடரும்)
நடிகர் திலகத்தின் பேட்டி
நன்றி :Mathivanan,one India
நடிகர் திலகத்தை பேட்டி எடுத்த அனுபவத்தை பகிர்ந்து கொள்ளும் மூத்த பத்திரிகையாளர் இளைய பெருமாள் அவர்கள் முகநூல் பதிவில் இருந்து
உங்கள் திரையுலக வாழ்க்கையின் ஆரம்பத்தில், நடிப்பில் உங்களுக்கு முன்மாதிரியாக யாரையாவது கருதியதுண்டா?
"ஓ... யாரையாவது பார்த்து காப்பியடித்திருக்கிறீர்களா என்று கேட்கிறீர்கள்" என்கிறார். நான் இடைமறித்து, "இல்லை, உங்கள் "ரோல் மாடல்" ஆக என்று கேட்கிறேன்.
நடிகர் திலகம் தொடர்கிறார்: "நீங்கள் கேட்டதற்கு அர்த்தம் அதுதான் சார். எனது குரு என்னை அவ்வாறு பழக்கவில்லை. மற்றவர்களைப் பார்த்துக் கற்றுக்கொள்ளும் நிலையில் நான் இல்லை. மேலும் நான் நடிக்க வந்த சமயத்தில் அதுமாதிரி ஆட்களும் யாரும் இல்லை. சில ஆங்கிலப் படங்களின் influence இருந்திருக்கலாம். காஞ்சி முனிவரைப் பார்த்து அப்பராக நடித்தேன். டி.வி.எபஸ். கிச்சாவைப் பார்த்து கௌரவம் படத்தில் நடித்தேன். இதுமாதிரி ஒவ்வொருவரின் தாக்கம் இருக்கலாம். மற்றபடி நான் யாரையும் பார்த்து நடித்ததில்லை."
இன்னொரு கேள்வி. "உங்களுக்கு ஜோடியாக நடித்த நடிகைகளில் உங்களுக்கு இணையாக நடிப்புத் திறனை வெளிப்படுத்தியவர் யார்?"
உற்சாகத்துடன் மனம் திறக்கிறார் நடிகர் திலகம்.
"நிச்சயமாக பப்பிதான் (பத்மினி). பப்பி சிறந்த நாட்டியக்காரி மட்டுல்ல. சிறந்த அழகியும்கூட. குணச்சித்திரம், காமெடி, நடனம்...what not? எல்லாப் பாத்திரங்களிலும் ஜொலித்த நடிகை. She is an all-rounder. சின்ன வயதிலிருந்தே நானும் பத்மினியும் பழகி வருகிறோம். We are all intellectual friends. எங்களிடையே தெய்வீக நட்பு உண்டு. உலகிலேயே அதிகப் படங்களில் நடித்த ஒரே ஜோடி என்றால், அது நானும் பத்மினியுமாகத்தான் இருக்க வேண்டும்."
இதுவரை நீங்கள் நடித்த பாத்திரங்களில் உங்களுக்கே சவாலாக இருந்த பாத்திரம் எது என்று கேட்கிறேன்.
'கப்பலோட்டிய தமிழன்' தான் (1961-ல் வெளியான படம்) எனக்கு சவாலாக இருந்த பாத்திரம். அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு வ.உ.சி.யின் புதல்வர் என்னைக் கட்டிப்பிடித்துக் கொண்டு "ஐயாவை நேரில் பார்த்தேன்" என்று சொன்னார். நீங்கள் கேட்டீர்களே... அங்கீகாரம் எது என்று? இதைவிட ஒரு நடிகனுக்கு பெரிய அங்கீகாரம் எதுவாக இருக்க முடியும்.
இதைச் சார்ந்தே அடுத்த கேள்வியையும் தொடர்கிறேன்.
வ.உ.சி., பாரதி, கட்டபொம்மன் போன்ற வரலாற்று நாயகர்களை திரையில் அற்புதமாகச் சித்தரித்தவர் நீங்கள். அவர்களைப் பற்றிய புத்தகங்களைப் படித்ததுண்டா? அத்தகைய வேடங்களில் தத்ரூபமாக நடிக்கும் அளவுக்கு உங்களை எப்படித் தயார் செய்து கொண்டீர்கள்?
நடிகர் திலகம் இந்தக் கேள்விக்கு அளித்த பதில், இன்றைய எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள், திரையுலகப் படைப்பாளிகள் எனப் பலரின் தனிக் கவனத்துக்குரியதாகக் கருதுகிறேன்.
நடிகர் திலகத்தின் பதில்:
"எந்த வேடங்களுக்கும் பெரிதாக புத்தகங்கள் எதையும் படித்ததில்லை. வ.உ.சி.யைப் பற்றி சின்னச்சின்ன புத்தகங்கள் படித்தேன். மற்றபடி அந்தக் காலத்தில் அவரைப் பற்றிய Literature இல்லையே...! வேறு விரிவான புத்தகம் உண்டா? வ.உ.சி.யைப் படத்தில் பார்த்திருக்கிறேன். அவ்வளவுதான். மற்றபடி சுயமாகக் கற்பனை செய்துகொண்டுதான் அந்தப் பாத்திரத்தில் நடித்தேன். இதை ஒரு தமிழனுடைய வார்த்தையாக எடுத்துக்கொள்ளலாம். தமிழன் பொய் சொல்லமாட்டான். நான் சொல்வது சத்தியம். Nothing but Truth. கோர்ட்டில் சொல்வது போல உங்களிடம் சொல்கிறேன்."
கலை அறம் நிறைந்த ஓர் உன்னதக் கலைஞன்தான் இவ்வாறாக வெளிப்பட முடியும்.
........(தொடரும்).........
Image may contain: 1 person, sitting and indoor
No comments:
Post a Comment