Saturday 15 August 2020

SADASIVA PANDARATHAAR ,. WRITERBORN 1892 AUGUST 15 -1960 JANUARY 2



SADASIVA PANDARATHAAR ,.
WRITERBORN 1892 AUGUST 15 -1960  JANUARY 2
.தி. வை. சதாசிவ பண்டாரத்தார் (ஆகத்து 15, 1892 - சனவரி 2, 1960) தமிழக வரலாற்றாளர். சோழர்களின் முழுமையான வரலாற்றை முதன் முதலில் எழுதியவர்.[1]

வாழ்க்கைக் குறிப்பு
சதாசிவப் பண்டாரத்தார் கும்பகோணம் அருகே திருப்புறம்பியத்தில் வைத்தியலிங்கப் பண்டாரத்தாருக்கும், மீனாட்சியம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். 1910 ஆம் ஆண்டு பள்ளிப்படிப்பை முடித்தார். உயர் கல்வியை கும்பகோணத்தில் பயின்றார்

தலைசிறந்த தமிழ் வரலாற்று ஆய்வாளரும் தமிழறிஞருமான தி.வை.சதாசிவ பண்டாரத்தார் (T.V.Sadasiva Padarattar) பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 15). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து

கும்பகோணம் அருகில் திருப்புறம்பியத்தில் பிறந்தார் (1892). பள்ளிப் படிப்பை சொந்த ஊரில் முடித்தார். உயர் கல்வியை கும்பகோணத்தில் பயின்றார். பின்னத்தூர் நாராயணசாமி ஐயர், வலம்புரி பாலசுப்பிரமணியப் பிள்ளை ஆகியோரிடம் தமிழ் இலக்கணமும் இலக்கியமும் கற்றுத் தேர்ந்தார். பின்னத்தூர் நாராயணசாமியின் தாக்கத்தால், இவருக்கு கல்வெட்டியல் குறித்த ஆர்வம் பிறந்தது.

ஊரைச் சுற்றிலும் இருந்த பண்டைய கோயில்களில் காணப்பட்ட கல்வெட்டுகள் இவரது ஆர்வத்தை மேலும் தூண்டின. வாணதுறை உயர்நிலைப் பள்ளியில் 25 ஆண்டுகள் தமிழாசிரியராகப் பணியாற்றினார்.

ஆசிரியராகப் பணியாற்றிக்கொண்டே எழுத்துப் பணிகளையும் மேற்கொண்டார். ‘செந்தமிழ்’ என்ற மாத இதழில் இவரது கட்டுரைகள் தொடர்ந்து வெளிவந்தன. இவரது முதல் கட்டுரை ‘சோழன் கரிகாலன்’, இவரது ஆழ்ந்த அறிவையும் வரலாறு குறித்த தெளிவான புரிதலையும் எடுத்துக்கூறியது.

1930-ல் ‘முதலாம் குலோத்துங்க சோழன்’ என்ற இவரது முதல் நூல் வெளிவந்தது. ஏராளமான கல்வெட்டுகளை ஆராய்ந்தும் சங்க இலக்கியங்களை ஆராய்ந்தும் விரிவாக எழுதப்பட்ட இந்த நூல் அனைவரது கவனத்தையும் கவர்ந்தது. தொல்காப்பியம் குறித்த ஆய்வுக் கட்டுரையையும் எழுதினார்.

1942-ல் அண்ணாமலை செட்டியாரின் அழைப்பை ஏற்று, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தமிழாராய்ச்சித் துறை யில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். தனது முதல் நூலுக்கு கிடைத்த வரவேற்பால் ஊக்கம் பெற்ற இவர், தென்னிந்திய வரலாறு குறித்து ஆழ்ந்த ஆய்வுகளை மேற்கொண்டார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களுக்கும் சென்று ஆய்வுகளை மேற்கொண்டார். இவரது எழுத்துகளும் ஆராய்ச்சிகளும் இதே களத்தில் பணியாற்றிவந்த என்.எம்.வெங்கடசாமி நாட்டார், கரந்தை தமிழ்வேள் உள்ளிட்ட தமிழ் அறிஞர்களைக் கவர்ந்ததோடு அவர்களது பாராட்டுகளையும் பெற்றன.

‘பிற்கால சோழர் சரித்திரம்’ என்ற பெரிய நூலை எழுதினார். இது 1949, 1951 மற்றும் 1961-ம் ஆண்டுகளில் 3 தொகுதிகளாக வெளியானது. தென்னிந்தியாவை ஏறக்குறைய 250 ஆண்டுகள் ஆண்டுவந்த சோழர் மன்னர்களைக் குறித்த ஆய்வு நூல் இது.

இந்த மன்னர்கள் ஒவ்வொருவரின் பிறப்பு முதல் அரசியல் நிலவரங்கள், ஆட்சி முறை, முக்கிய நிகழ்வுகள், போர்கள் என அனைத்தையும் விரிவாக எழுதியுள்ளார். மேலும், 2 தமிழ் இலக்கிய வரலாற்று நூல்களையும் படைத்தார். திருப்புறம்பியம் மற்றும் சேரமாதேவி உள்ளிட்ட பல தல வரலாற்று நூல்களையும் எழுதியுள்ளார்.

இவற்றை வெறும் கற்பனையாகவோ அல்லது வழிவழியாக வழங்கப்பட்டு வரும் கதைகளின் அடிப்படையிலோ அல்லாமல், வரலாறு மற்றும் கல்வெட்டு சாசனங்களின் அடிப்படையில் படைத்து, தல வரலாற்றுக்கான புதிய பாணியை வகுத்தார். தமிழக அரசு இவரது படைப்புகளை நாட்டுடைமையாக்கியுள்ளது.

இவரது படைப்புகள் தமிழில் வெளிவந்துள்ள வரலாற்று ஆய்வு நூல்களில் மிகவும் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. தமிழ் இலக்கிய வரலாறு மற்றும் தமிழ் இலக்கிய வளர்ச்சி குறித்த ஆய்வுகளுக்கு மகத்தான பங்களிப்பை வழங்கியவரும் வாழ்நாள் முழுவதும் வரலாற்று ஆய்வுகளை மேற்கொண்டு வந்தவருமான தி.வை.சதாசிவ பண்டாரத்தார், 1960-ம் ஆண்டு தமது 68-வது வயதில் மறைந்தார்.

- ராஜலட்சுமி சிவலிங்கம்
Image may contain: 1 person, hat and closeup

No comments:

Post a Comment