INDEPENDENCE DAY CELEBRATED IN AMERICA IN 2017
அமெரிக்காவில் இந்தியச் சுதந்திர தின விழா
கடந்த2017-ஆம் ஆண்டு நான் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சிலிக்கான் வேலி பகுதியான சாஞ்சோஸ் எனும் நகரில் இருந்தேன். என் மகன் அங்குள்ளச் சர்வதேச நிறுவனமான 'பே பால்' எனும் கம்பெனியில் இயக்குநராக இருக்கிறார். அவரின் இல்லத்தில் நானும் என் இல்லத்தரசியாரும் 3 மாதங்கள் தங்கியிருந்தோம். இந்த காலகட்டத்திற்குள் தான் ஆகஸ்ட் 15-ஆம் தேதியும் வந்தது.
என் மகனின் இல்லத்தருகே இருந்த பூங்காவில் நாங்கள் நடைபயிலச் செல்வது வழக்கம். எங்களைப் போலவே நடை பயில வந்த இந்தியர்கள் சுமார் 100 பேர் இருப்பர்.
நடைப் பயிற்சிக் காலத்தில் நாங்கள் அடிக்கடிச் சந்தித்துத் தாய்நாட்டுத் தகவல்களைப் பரஸ்பரம் பரிமாறிக் கொண்டிருந்தோம்.
அந்த சமயத்தில்தான் சுதந்திர தின விழாத் தொடர்பானப் பேச்சு அடிபட்டது. அமெரிக்கப் பூங்காவில் இந்தியச் சுதந்திர தின விழாவைக் கொண்டாடுவது என எங்களுக்குள் ஒரு தீர்மானத்திற்கு வந்தோம்.
இதற்கான அனுமதியைப் பெற முறைப்படி முயன்றோம். தேசியக் கொடியை ஏற்றுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு விட்டது.
ஆனால் கூடிக் கலந்துப் பேசிக் களிக்கத் தடையில்லை.
"இந்திய உணவியல் ஒருமைப்பாடு" என்று தலைப்பிட்டோம்..
எங்களுடன் நடைபயில வந்தவர்களில் நமது நாட்டின் அனைத்து மாநிலத்தாரும் இருந்தனர். "சுதந்திர தினத்தன்று ஒவ்வொரு மாநிலத்தைச் சேர்ந்தவரும் அவரவரின் மாநிலத்தின் பண்பாட்டுப் படைப்பான உணவைச் சமைத்துக் கொண்டு வரவேண்டும்" என்று எங்களுக்குள் தீர்மானித்துக் கொண்டோம்.
அதன்படிச் சுதந்திர தினத்தன்று திட்டமிட்டபடி அனைவரும் அவரவர் மாநிலத்து மண்ணுக்கே உரித்தான கலாச்சாரப் பேருணவு வகைகளைச் சமைத்துக் கொண்டு வந்திருந்தனர். நாங்களும் எங்கள் பங்குக்குத் தமிழகத்துக்கே உரித்தான காரசாரமானச் சுவையுடன் கூடிய பிரியாணி நிரம்பியப் பாத்திரத்தோடு ஆஜரானோம்.
நிகழ்ச்சிக்குரிய நேரத்தில் அந்த இடம்..' பூவா பூங்கா' எனக் காட்சி அளித்தது.
தமிழகத்திலிருந்து காஷ்மீர் வரையிலான அனைத்து மாநிலங்களிலும் உள்ள மண்ணின் மகிமை பேசும் சுவையுணவுகளின் அணிவகுப்பு, பூங்காவினரைப் புல்லரிக்க வைத்தது.
ஒவ்வொரு மாநிலத்தவரும் அடுத்த மாநிலத்தவர்கள் கொண்டுவந்திருந்த உணவைச் சுவைத்துப் பார்த்தனர். ஒவ்வொரு மாநில உணவாகக் கொஞ்சம் கொஞ்சமாக ருசி பார்த்துக் கொண்டே வந்த நாங்கள், அந்த நிகழ்ச்சியின் நிறைவின் போது ஒவ்வொருவரும் அனைத்து மாநில உணவுகளின் சுவைகளையும் லயித்து உண்ட நா நிலைக்கு வந்தோம்.
பூங்காவில் நடை பயில வந்த அமெரிக்கர்களும் இந்த விழாவில் கலந்து கொண்டு, இந்திய உணவு வகைகளைக் கண்டு களித்தனர். உண்டு மகிழ்ந்தனர். இப்படியொரு படத்தைத் தான் இத்துடன் இணைத்துப் பதிவு செய்துள்ளேன்.
ஒவ்வொரு மாநிலத்தவருக்கும் இரண்டே நிமிடங்கள் என்றவாறு உரை நிகழ்த்தினோம். இதில் அடியேனுக்கும் வாய்ப்புக் கிடைத்தது. ஆண்களும் பெண்களுமாக நூற்றுக்கும் மேற்பட்டோர் பூங்காக் களத்தில் நின்று தேசிய கீதத்தைக் கம்பீரமாகப் பாடி, நெஞ்சை நிமிர்த்திக் கொண்டோம்.
இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்குச் சென்று பணியாற்றுவோர் அங்கேயே குடும்பம் குடும்பமாக வசித்து வருகின்றனர்.அங்கு மகளோ மருமகளோ பிரசவத்தை எதிர் நோக்கி இருக்கும்போது பெண்ணின் பெற்றோர் அமெரிக்காவிற்கு வந்து பிரசவப் பொழுதுளைப் பார்த்துக் கொள்வார்கள். அவர்களின் அதிகபட்ச விசா காலம் 6 மாதங்கள் மட்டுமே. அதற்கு மேல் தங்க முடியாது என்பதால் அவர்கள் தாயகம் திரும்பி விடுவார்கள். 'ரிலே ரேஸ்' என்பது போல மாமியார் மாமனார் அமெரிக்காவுக்கு வந்துவிடுவர். ஆறு மாதங்கள் தங்கியிருந்துக் குழந்தையைப் பார்த்துப் பார்த்துப் பராமரித்து கொள்வர்.
இத்தகைய வீட்டுப் பொறுப்புகளை அமெரிக்காவில் கவனிக்க வேலையாட்கள் கிடைப்பதில்லை. கிடைத்தாலும் அவர்களுக்குச் சம்பளம், காப்பீடு உட்பட லட்சக்கணக்கான ரூபாய் மாதச் சம்பளமாகக் கொடுக்க வேண்டியிருக்கும்.
அதற்குப் பதிலாகத்தான் தாய் வீட்டில் இருந்தும் மாமனார் வீட்டினரும் மாறி மாறி அமெரிக்காவுக்கு வந்து செல்வது என்பது வழக்கமாகிவிட்டது.
இவ்வாறு ஆண்டுதோறும் வருவோரையும் அங்கே நாங்கள் சந்தித்து உரையாடிக் கொண்டிருந்தோம்.
அவர்களுடனான தொடர்பு இன்னும் எங்களுக்கு நீடித்துக் கொண்டிருக்கிறது. எங்களுக்குள் பகிரித் தொடர்பு எனும் வாட்ஸ்அப் குரூப் கூட வைத்திருக்கிறோம்.
நாங்கள் தாயகம் திரும்பி விட்டாலும் கூட நாம் தொடங்கிவைத்தச் சுதந்திர தின விழாக் கொண்டாட்டங்கள் ஆண்டுதோறும் நீண்டகாலம் தொடர்ந்து கொண்டே இருக்கக்கூடிய வகையில் அமைப்புரீதியான நிர்வாகம் தற்போது பராமரிக்கப்பட்டு வருகிறது
ஆர்.நூருல்லா ஊடகன் 17-8-2020
No comments:
Post a Comment