Wednesday 19 August 2020

M.N.NAMBIYAR , A HISTORY





M.N.NAMBIYAR , A HISTORY



..தமிழகத்தில் கருப்புச் சட்டை என்றால் அது பெரியார் கட்சிக்குத்தான் சொந்தம். தனிமனித ஒழுக்கத்தினும் பொது ஒழுக்கம் முக்கியம் என்பதற்காகப் போராடியவர். அறுபது எழுபதுகளுக்குப் பிறகு அதிகரித்த கருப்புச் சட்டைகளுக்கு நம்பியார் முக்கிய காரணம். குறைந்தபட்சம் ஒரு மண்டலம் தனிமனித ஒழுக்கமாக இருப்பதற்கான உத்தியைக் கொண்டுவந்தவர் என்பதற்காக மகிழ்ந்து கொள்ளலாம்.

ஒரு தீபாவளி இதழுக்காக அவரைச் சந்தித்தேன். நம்பியாரைச் சந்திக்கத் தயாரானபோது "உலகம் சுற்றும் வாலிபன்' படத்தில் புத்தர் இருக்கும் புனிதமான ஆலயத்தில் எம்.ஜி.ஆரைத் தாக்குவாரே அந்தக் காட்சிதான் ஞாபகத்தில் இருந்தது. நம்பியாரின் வில்லத்தனத்திலேயே அதைத்தான் மன்னிக்க முடியாத குற்றமாக மனதில் பதித்து வைத்திருந்தேன். இது புனிதமான இடம் இங்கு சண்டை வேண்டாம் என்று எம்.ஜி.ஆர். எவ்வளவோ பொறுமையாக எடுத்துக் கூறியும் நம்பியார் அவரை அடிப்பார். அடிக்க அடிக்க எம்.ஜி.ஆர். மெல்ல ஆலயத்துக்கு வெளியே வந்துவிழுந்துவிடுவார். அதன் பிறகு எம்.ஜி.ஆர். அடிக்கிற அடி இருக்கிறதே... அதில் நேர்மை, நாணயம், கொள்கை எல்லாம் தெரிந்தது எனக்கு. அந்த மன பிம்பத்தோடு நான் நம்பியார் வீட்டுக்குப் போனேன். முன் வாசலில்- அவர் பின் கட்டில் காத்திருப்பதாகச் சொன்னார்கள். நான் வீட்டின் பின் கட்டுக்குச் சென்றேன். அங்கு ஒரு கதவு இருந்தது. அது சாத்தியிருக்கவே மெல்ல கதவைத் தட்டி "சார்?' என்றேன்.

"வாங்க... வாங்க'' என்று குரல் கேட்டது. பல திரைப்படங்களிலும் மிமிக்ரி நிகழ்ச்சிகளிலும் கேட்டுப் பழகிய அதே குரல்.
நான் இந்தப் பத்திரிகையில் இருந்து வந்திருக்கிறேன்.. என்று கதவுக்கு மறுபக்கம் இருந்து அறிமுகப்படுத்திக் கொண்டேன்.
"அதெல்லாம் சரிதான். நாம ரெண்டுபேரும் இப்ப சந்திச்சுப் பேசறது இப்ப உங்க கையிலதான் இருக்கு. கதவை நீங்கதான் திறக்கணும்.'' என்றார்.
"வெளிப்பக்கம் திறந்துதான் இருக்கு'' என்றேன்.
"தெரியும். கதவை அழுத்தித் திறங்க''
புதிதாக வருகிறவர்களிடம் இப்படியெல்லாம் விளையாடுவாறோ என்ற குழப்பம் தொற்றிக் கொண்டது. அவர் சொன்னபடி கதவைத் தள்ளிப் பார்த்தேன். திறக்கவில்லை.
"என்னப்பா திறந்துவிடச் சொன்னா என்ன பண்றே அங்கே?'' குரலில் அலுப்பும் அழுத்தமும் வெளிப்பட்டது.
"சார் தள்ளிக் கொண்டுதான் இருக்கிறேன்.''
"காலையில சாப்பிட்டியா இல்லையா? நல்லா தள்ளுப்பான்னு சொல்றேன்''
நான் திரையில் பார்த்து பிரமித்துப் போயிருந்த ஒரு நடிகர். பேட்டி எடுக்க வந்த நேரத்தில் இப்படித் தடுப்புக்கு இருபுறமும் இருந்து கொண்டு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளாமலேயே அறிமுகமாகிக் கொண்டிருப்பது வேடிக்கையாகவும் இருந்தது.

கதவை வேகமாக ஓர் உதைவிடச் சொன்னார். அப்படியே செய்தேன். மழையால் ஊறி பிடித்துக் கொண்டிருந்த கதவு படாரென்று திறந்தது. வெள்ளை ஜிப்பா, வேட்டியில் நம்பியார்.
காமுகன், கொள்ளைக்காரன், சதிகாரன், அயோக்கியன், திருடன், நயவஞ்சகன், செய் நன்றி மறந்தவன், துரோகி என்று நம்பியாரை உருவகிக்க நிறைய கருத்துருவம் இருந்தது. ஆனால் அது அத்தனையும் அவரைக் கதவைப் பிளந்து கொண்டு பார்த்த அந்த ஒரு நொடியில் தொலைந்தது.
அவர் அமைதியாக இட்லி சாப்பிட்றீங்களா என்று உபசரிக்க ஆரம்பித்து, இந்திய மலைகளிலேயே பரங்கிமலைதான் வயதில் மூத்த மலை என்பது குறித்து நீண்ட நேரம் பேசியது நினைவு இருக்கிறது. உதகையையோ, இமயத்தையோதான் பிரமித்து இருக்கிறோம். பரங்கிமலை பல லட்சம் ஆண்டு மூத்ததாக இருந்தும் அப்படி ஒரு மலை இருப்பதையோகூட நாம் கவனிப்பதில்லை என்றார்.

அவர் வயதில் பாதி வயது நிரம்பாதவர்கள்கூட பத்மஸ்ரீ விருது வாங்கிவிட்டார்கள். அவருக்கு விருது எதுவும் கிடைத்ததே இல்லை. அவர் இறந்த அன்று எனக்கு பரங்கிமலைதான் ஞாபகத்துக்கு வந்தது.

தமிழ்மகன்
Image may contain: 1 person






No comments:

Post a Comment