Wednesday 26 August 2020

THIRUMAL PERUMAI BIOGRAPHY






THIRUMAL PERUMAI BIOGRAPHY


திருமால் பெருமைக்கு நிகரேது!


மஹாவிஷ்ணு எடுத்த பத்து அவதாரங்களில் மனிதருக்கு வாழும் நெறியைக் காட்டிய அவதாரங்களில் ராமாவதாரமும் கிருஷ்ணாவதாரமும் தனிச் சிறப்பைப் பெற்ற அவதாரங்கள்.

இந்த பத்து அவதாரங்களையும் பார்த்து மகிழ ஒரு பாட்டு பிறந்தது – திருமால் பெருமை என்னும் படத்தில்.

1968ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை இயக்கியவர் இந்த மாதிரி படங்களை எடுப்பதற்கென்றே பிறந்தவர் என்று சிறப்பாகக் கொண்டாடப்பட்ட ஏ.பி.நாகராஜன். இதில் பத்து அவதாரச் சிறப்பையும் ஒவ்வொரு வரியில் அமைத்துத் தர வேண்டும். யாரால் முடியும்? வேறு யார் – கண்ணதாசன் தான் பாடலை இயற்றியுள்ளார்.


கணீர் என்ற குரலில் டி.எம்.சௌந்தரராஜன் இனிமையாகப் பாடலைப் பாட காட்சியின் பின்னணியில் பத்து அவதாரங்களையும் கண்டு மகிழலாம். சிவாஜிகணேசனும் பத்மினியும் இந்தக் காட்சியில் தோன்றுகின்றனர். சிவாஜி பாட பத்மினி அருகில் இருந்து துதிக்கும் காட்சி இது. சிவகுமார் புன்சிரிப்புடன் தெய்வத் தோற்றத்தைக் காட்டுகிறார். ஆவியே அமுதே என்று இறைவனை விளித்து சிவாஜி பத்து அவதாரங்களையும் வர்ணிக்கும் பாடல் அற்புதம் தான்! ராம அவதாரம் என்று பாடியவாறே வில்லை சிவாஜி அபிநயித்துக் காட்டி ராமரின் ஏற்றத்தைக் காட்டுகிறார்! பல ராமன் என்று கூறிப் பின்னர் பலராமன் என அவதாரத்தைச் சொல்லும் போது இந்தச் சொல்லை சிலேடையாகப் பயன்படுத்தி இருக்கும் கண்ணதாசனின் கவித்துவத்தைப் பளீரென மின்னலடித்துக் காட்டுவதாக விளங்குகிறது!

திருமால் பெருமைக்கு நிகரேது – உன்றன் 
திருவடி நிழலுக்கு இணையேது
பெருமானே உன்றன் திருநாமம் – பத்து
பெயர்களில் விளங்கும் அவதாரம்     (திருமால் பெருமைக்கு)

கடல் நடுவே வீழ்ந்த சதுர்வேதம் தன்னைக்
காப்பதற்கே கொண்ட அவதாரம் – மச்ச அவதாரம்
அசுரர்கள் கொடுமைக்கு முடிவாகும் – எங்கள்
அச்சுதனே உந்தன் அவதாரம் – கூர்ம அவதாரம்

பூமியைக் காத்திட ஒரு காலம் – நீ
புனைந்தது மற்றொரு அவதாரம் – வராக அவதாரம்
நாராயணா என்னும் திருநாமம் – நிலை
நாட்டிட இன்னும் ஒரு அவதாரம் – நரசிம்ம அவதாரம்

மாவலி சிரம் தன்னில் கால் வைத்து – இந்த
மண்ணும் விண்ணும் அளந்த அவதாரம் – வாமன அவதாரம்

தாய் தந்தை சொல்லே உயர் வேதம் – என்று
சாற்றியதும் ஒரு அவதாரம் – பரசுராம அவதாரம்

ஒருவனுக்கு உலகில் ஒரு தாரம் எனும்
உயர்வினைக் காட்டிய அவதாரம் – ராம அவதாரம்

ரகுகுலம் கொண்டது ஒரு ராமன் – பின்பு
யதுகுலம் கண்டது பலராமன்  – பலராமன்

அரசுமுறை வழிநெறி காக்க – நீ
அடைந்தது இன்னொரு அவதாரம் – கண்ணன் அவதாரம்

விதி நடந்ததென மதி முடிந்ததென
வினையின் பயனே உருவாக
நிலை மறந்தவரும் நெறியிழந்தவரும்
உணரும் வண்ணம் தெளிவாக,
இன்னல் ஒழித்து புவி காக்க – நீ
எடுக்க வேண்டும் ஒரு அவதாரம் – கல்கி அவதாரம்  (திருமால் பெருமைக்கு)

No comments:

Post a Comment