PORAIYAR NADAR ESTATE HISTORY
..பொறையார் நாடார் எஸ்டேட் – கி.பி 1790 இல் தொடங்கிய வரலாறு
1790 ஆம் ஆண்டில், சீனந்தோப்பு (தூத்துக்குடி மாவட்டம் ) எனும் கிராமத்தை சேர்ந்த பெருமாள்சாமி நாடார் என்பவர் அவரது மனைவி எசக்கியம்மாலுடன், தனது சகோதரர்களுடனான தகராறு காரணமாக தனது வீடு மற்றும் சொத்துக்களை விட்டு வெளியேறினார்.
முதலில் அவர் போர்டோ நோவாவுக்கு சென்றார் (அந்த காலத்தில் போர்டோ நோவா ஒரு பிரபலமான துறைமுக நகரம், இப்போது பரங்கிபேட்டை என்று அழைக்கப்படுகிறது).
சில மாதங்கள் அங்கேயே தங்கியிருந்தார்கள், பிறகு அவர்கள், வேறு நல்ல வேலை வாய்ப்புகளைத் தேடி தரங்கம்பாடிக்கு வந்தார்கள் (தரங்கம்பாடி – டேனிஷ் கிழக்கு இந்தியக் கம்பெனியின் கட்டுப்பாட்டில் இருந்த துறைமுகநகரம், காவேரி ஆறு, வங்காள விரிகுடாவில் கலக்கும் கழிமுகத்தில், காரைக்காலுக்கு வடக்கே 15 கிமீ தொலைவில் உள்ளது).
தரங்கம்பாடியின் புறநகர்ப் பகுதியான பொறையார் எனும் கிராமத்தில் குடியேறினர். 1791 ஆம் ஆண்டில், தம்பதியினருக்கு வெள்ளையன் எனும் ஒரு மகன் பிறந்தான். வெள்ளையனுக்கு 11 வயதாக இருந்தபோது, பொறையாரில் கள்ளு இறக்கும் பனை தோப்பில் காவலராக பணியாற்றினார்.
16 வயதுக்குள் , வெள்ளையன் கள்ளு வியாபாரம் குறித்து நன்கு அனுபவம் பெற்றுயிருந்தார். அவர் தனது வேலையிலிருந்து சேமித்த சிறிய பணத்தை வைத்துக்கொண்டு, ஒரு கள்ளு கடையைத் திறக்க முடிவு செய்தார்.
கள் இறக்குவதற்கு, பனை தோப்பை குத்தகைக்கு எடுக்க போதுமான பணம் அவரிடம் இல்லை, எனவே அவர் டேனிஷ் அதிகாரிகளின் பங்களாக்களை அணுகி, தங்கள் தோட்டத்தில் உள்ள பனை மரங்களை கள் இறக்குவது பயன்படுத்த அனுமதி கேட்டார். அவர்களில் பலர் தங்கள் மரங்களை வெள்ளையனுக்காக வாடகைக்கு கொடுத்தனர் .
கள்ளு கடை நல்ல லாபம் ஈட்டியது, சில ஆண்டுகளிலேயே, அவர் தரங்கம்பாடி பகுதி முழுவதும் பல கள்ளு கடைகளைத் தொடங்கினார்.
இதற்கிடையில், தரங்கம்பாடி பிராந்தியத்திற்கு 5 ஆண்டுகளுக்கு அராக் (சாராயம்) தயாரித்து வழங்குவதற்காக டேனிஷ் கிழக்கிந்திய கம்பெனியிடமிருந்து உரிமத்தை (ஐந்து காலா குத்தகை என அழைக்கப்படும்) வைத்திருந்த ஒரு டேனிஷ் பெண்மணி, தன் கடன்களை அடைக்க, தனது அராக் குத்தகை ஒப்பந்தத்தை ஏலம் விடுத்தார்.
வெள்ளையன் நாடார் அவரிடமிருந்து உரிமத்தைப் வாங்கி, பொறையாரில் இருந்து சாராயம் தயாரிக்கத் தொடங்கி, தரங்கம்பாடி பகுதி முழுவதுக்கும் வினியோகம் செய்தார்.
பிரிட்டிஷ் இந்தியாவில், ஒரு மாவட்டத்திற்கு, மூன்று
வருட காலத்திற்கு சாராயத்தை தயாரித்து விநியோகம் செய்ய ஏகபோக உரிமை (monopoly) வழங்கப்பட்டது.
இந்த உரிமை, ஏலத்தின் மூலம் நிர்ணயிக்கப்பட்டது.
1830 ஆம் ஆண்டில், வெள்ளைய நாடார், இந்த ஏலத்தை வென்று தஞ்சை மாவட்டத்திற்கு அப்காரி (சாராயம்) விநியோகஸ்தராக ஆனார். [1] இதன் முலம், சிறுது காலத்திலே பெரும் செல்வம் ஈட்டினார்.
இதற்கிடையில், வெள்ளைய நாடாருக்கு ஒரு மகன் பிறந்தார், அவருக்கு தவசுமுத்து என்று பெயரிடப்பட்டது. 14 வயதிலிருந்தே, தவசுமுத்து நாடார் தனது தந்தையுடன் இணைந்து தொழிலை கவனித்துக்கொண்டார்.
தவசுமுத்து நாடார், தொலைநோக்கு பார்வைகொண்டவர், அவர் தனது அப்காரி (சாராயம்) வியாபாரத்தை தென்னிந்தியா முழுவதும் விரிவாக்க விரும்பினார்.
அவர் நிறைய பயணம் செய்தார், பல்வேறு ராஜாக்கள் மற்றும் உயர் பிரிட்டிஷ் அதிகாரிகளுடன் தனது தொடர்புகளை விரிவுபடுத்தினார்.
மிகக் குறுகிய காலத்தில் தவசுமுத்து நாடார், மதுரை மாவட்டத்திற்கும், பின்னர் திருநெல்வேலி மாவட்டத்திற்கும், ராமநாடுக்கும் சாராயம் தயாரித்து விநியோகிக்கும் உரிமைகளைப் பெற்றார். மூன்று மாவட்டங்களுக்கும் சாராயம் தயாரிக்கும் திறனுடன் தச்சநல்லூரில் ஒரு பெரிய டிஸ்டில்லரியைக் கட்டினார்.
வர்த்தகத்தின் விரிவாக்கம் நாடாருக்கு மேலும் உதவியது, சில ஆண்டுகளில், தென்னிந்தியாவின் பெரும்பகுதிக்கு சாராயம் தயாரித்து விநியோகிக்கும் உரிமைகளை பெற்றார். [2]
இந்த காலகட்டத்தில், தவசுமுத்து நாடார், தஞ்சை மாவட்டதில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களை வாங்கினார். தஞ்சை மாவட்டதில் இருந்த அருந்தவபுரம், கிடங்கல், மேலமருத்தூர், கீழ்க்குடி, காரப்பிடாகை, உலகமாதேவி கிராமங்களை வாங்கினார். [3]
தவசுமுத்து நாடாரின் எஸ்டேட்டில் 7000 ஏக்கர்க்கு மேல் விவசாய நிலங்கள் இருந்தது, இதை தொடர்ந்து, தவசுமுத்து நாடாரின் குடும்பம் மக்களால் “நாடார் எஸ்டேட்” என்று அழைக்கப்பட்டது.
தவசுமுத்து நாடார் திருவிதாங்கூர் மகாராஜாவை அணுகி, அங்கு சாராய தொழிற்சாலைகளை தொடங்க அனுமதி கோரினார், தவசுமுத்து நாடார் அப்காரி வர்த்தகத்தில் நல்ல பெயரைப் பெற்றுயிருந்ததால் , திருவிதாங்கூர் சமஸ்தானம் முழுவதுக்கும் சாராயம் தயாரித்து விநியோகம் செய்ய ஒப்பந்தம் தவசுமுத்து நாடாருக்கு வழங்கப்பட்டது. திருவிதாங்கூரில் பல்வேறு பகுதிகளுக்கு கள்ளு வியாபாரம் செய்ய ஒப்பந்தங்களையும் நாடார் பெற்றார். [4] பின்னர் கொச்சின் இராச்சியத்திற்கும் அவர் சாராயம் தயாரித்து விநியோகம் செய்ய ஒப்பந்தங்களைப் பெற்றார்.
தவசுமுத்து நாடார் வைக்கம், கண்ணன் மலை , நாகர்கோவில் மற்றும் தேவிகுளம் ஆகிய ஊர்களில் சாராய தொழிற்ச்சாலைகளை கட்டி, திருவிதாங்கூர் மற்றும் கொச்சி சமஸ்தானங்களுக்கு மதுபானங்களை தயாரிக்க தொடங்கினார். [5]
நாடார் எஸ்டேட் – 18 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய டிஸ்டில்லர்கள்
1830 ஆம் ஆண்டிலிருந்து, நாடார் எஸ்டேட், நூறு ஆண்டுகளுக்கு தென்னிந்தியாவின் மிகப்பெரிய டிஸ்டில்லர்களலக திகழ்ந்தது.
மெட்ராஸ் பிரசிடென்சி (அன்று தென்னிந்தியாவின் பெரும்பகுதியை உள்ளடக்கியது, இதில் தமிழ்நாடு, ஆந்திரா உட்பட, ஒடிசா, கேரளா மற்றும் கர்நாடகாவின் பகுதிகளை உள்ளடக்கியது), திருவிதாங்கூர் சமஸ்தானம் மற்றும் கொச்சின் சமஸ்தானம் ஆகிய பகுதிகளுக்கு சாராயம் தயாரித்து வழங்கியது நாடார் எஸ்டேட் . [6]
1830-1920 களுக்கு இடையில் பலமுறை, பொறையார் நாடார் எஸ்டேட் பின்வரும் மாவட்டங்களுக்கு சாராயம் தயாரிக்கவும் விநியோககிக்கவும் ஒப்பந்தங்களை பெற்றது [7]:
மெட்ராஸ் நகர பகுதி
மதுரை மாவட்டம் (இன்றைய மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்டத்தின் சில பகுதிகளை உள்ளடக்கியது)
திருச்சி மாவட்டம் (இன்றைய திருச்சிராப்பள்ளி, கருர், அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களை உள்ளடக்கியது)
திருநெல்வேலி மாவட்டம் (இன்றைய திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் விருதுநகரின் சில பகுதிகளை உள்ளடக்கியது)
செங்கல்பட்டு மாவட்டம் (காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மற்றும் சென்னை நகரத்தின் சில பகுதிகளை உள்ளடக்கியது)
கிழக்கு கோதாவரி மாவட்டம்
ராம்நாடு
வட ஆற்காடு (இன்றைய சித்தூர், திருவண்ணாமலை, வேலூர், திருப்பட்டூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களை உள்ளடக்கியது)
ராயகடா மாவட்டம் (ஒடிசா)
தெற்கு கனரா மாவட்டம் (கர்நாடகாவின் தட்சிணா கன்னடம் மற்றும் உடுப்பி மற்றும் கேரளாவின் காசராகோடு மாவட்டங்களை உள்ளடக்கியது)
கோயம்புத்தூர் மாவட்டம் (இன்றைய கோயம்புத்தூர், ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களை உள்ளடக்கியது)
நாடார் எஸ்டேட், 27 டிஸ்டில்லரி (சாராய) தொழிற்சாலைகளை கொண்டுயிருந்தது [8]:
மெட்ராஸ் (தமிழ்நாடு)
தச்சநல்லூர் (திருநெல்வேலி, தமிழ்நாடு)
நாகர்கோயில் (தமிழ்நாடு)
ரெனிகுண்டா (ஆந்திரா)
பத்ராச்சலம் (தெலுங்கானா)
வைக்கம் (கேரளா)
கண்ணன் தேவி மலைகள் (கேரளா)
திருச்சூர் (கேரளா)
தேவிகுளம் (கேரளா)
ஜெய்பூர் (ஒடிசா)
மெட்ராஸ், திருவனந்தபுரம், நெல்லூர், காஞ்சிபுரம், வேலூர், மாயாவரம், திருச்சி, மதுரை, காலிகட், மங்களூர் போன்ற இடங்களில் கிடங்குகள் இருந்தன.
இதற்கிடையில், தரங்கம்பாடியில் இருந்த டேனிஷ் கிழக்கிந்திய நிறுவனம், 1800 ஆம் ஆண்டிற்குப் பிறகு அதிக லாபத்தை ஈட்டவில்லை, இந்தியாவில் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் கடுமையான போட்டியின் காரணமாக, டேனிஷ் கம்பெனி படிப்படியாக முக்கியத்துவத்தை இழந்தது. 1845 ஆம் ஆண்டில், தரங்கம்பாடி பகுதி ஆங்கிலேயருக்கு விற்கப்பட்டது.
ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி, டேனிஷ் கப்பல்களை ஏலம் விடுத்தது, வெள்ளையா நாடார் அந்த ஏலத்தில் 2 கப்பல்களை 40,000 ரூபாய்க்கு வாங்கினார். நாடார் சமூகத்தைச் சேர்ந்த, கப்பல் வைத்திருந்த முதல் நபர் பொறையார் நாடார் எஸ்டேடின் வெள்ளையா நாடார் ஆவார்.
அவர் கப்பல்களுக்கு மஹாலக்ஷ்மி என்றும் பாக்யலக்ஷ்மி என்றும் என்று பெயர் மாற்றினார் [9]. பின்னர், பூம்புகாரிலிருந்த ஒரு முஸ்லீம் வர்த்தகரிடமிருந்து மற்றொரு கப்பலை (புஹார் மொய்தீன்) வாங்கினார். நாடார் எஸ்டேடின் வணிகக் கப்பல்கள், தென்கிழக்கு ஆசியா, மலேசியா மற்றும் இலங்கை முழுவதும் பயணம் செய்தன.
தொடர்ந்து, பொறையார் நாடார்கள் உப்பு வர்த்தகத்தில் இறங்கினர், அவர்கள் நாகப்பட்டினத்தில் பல ஏக்கர் உப்பளங்கள் கொண்டுயிருந்தனர் . [10]
இதற்கிடையில், வெள்ளையன் நாடாருக்கு இரண்டாவது மகன் பிறந்தார், அவருக்கு பொன்னுசாமி என்று பெயரிட்டார் (பொன்னுசாமி நாடார், நாடார் மகாஜன சங்கத்தின் முதல் தலைவர்).
டேனிஷ் முதன்முதலில் தரங்கம்பாடிக்கு வந்தபோது, டேனிஷ் ஆளுநர் பொறையார் ஊரின் மையத்தில், 7 ஏக்கர் பரப்பளவில், அழகிய தோட்டத்தின் நடுவில் ஒரு மாளிகையை கட்டினார்.
“ஆளுநரின் தோட்டம்” என்று அழைக்கப்பட்ட அந்த தோட்டம், டேனிஷ் ஆளுநர் மற்றும் உயர் அதிகாரிகள் ஓய்வு எடுப்பதற்கும், களியாட்டங்களிலும் கொண்டாட்டங்களிலும் ஈடுபடுவதற்கு என்று கட்டப்பட்டது.
1865 ஆம் ஆண்டில், ஆங்கிலேயர்கள் இந்த இடத்தை விற்க முடிவு செய்தனர், வெள்ளையா நாடார் அதை 1,000 பவுண்டுக்கு விலைக்கு வாங்கினார். [11]
இந்த மாளிகை, முன்பு டேனிஷ் கிழக்கிந்திய கம்பெனி மற்றும் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனிக்கு சொந்தமானதால், இந்த மாளிகையை “கம்பெனிஸ் கார்டன்” (குமினி தோட்டம்) என்று பெயரிட்டு தனது மகன் தவசுமுத்து நாடருக்கு பரிசளித்தார்.
கம்பெனிஸ் கார்டன், நாடார் எஸ்டேடின் அதிகாரப்பூர்வ இல்லமாக மாறியது.
1873-ல் தவசுமுத்து நாடார் அரியலூர் ஜமீன்தாரியைக் நீதிமன்ற ஏலத்தில் வாங்கி [12], அரியலூரின் ஜமீன்தார் ஆனார். அவர் நாடார் சமூகத்திலிருந்து முதல் ஜமீன்தார் ஆவார்.
பிரிட்டிஷ் மன்னர் ஏழாம் எட்வர்ட் – தவசுமுத்து நாடார் சந்திப்பு
அக்டோபர் 1875 இல், விக்டோரியா மகாராணியின் மூத்த மகன், வேல்ஸ் இளவரசரான ஆல்பர்ட் எட்வர்ட், (ஆல்பர்ட் எட்வர்ட் (ஏழாம் எட்வர்ட்) 1901 இல் பிரிட்டிஷ் பேரரசின் மன்னரானார்), எச்.எம்.எஸ். செராபிஸில் கப்பலில் ஏறி இந்தியாவுக்குச் வந்தார்
தனது நான்கு மாத பயணத்தின் போது, இளவரசர் படகு, ரயில், வண்டி மற்றும் யானை மூலம் இந்திய துணைக் கண்டத்தின் அனைத்து மூலைகளிலும் பயணம் செய்தார். நவீன இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் மற்றும் இலங்கையின் 21 க்கும் மேற்பட்ட நகரங்கள் மற்றும் டவுன்களுக்குச் சென்ற அவர் 90 க்கும் மேற்பட்ட அரச சபைகளில் விருந்தினராக கலந்து கொண்டார்.
டிசம்பர் 11, 1875 இல், இளவரசர் எட்வர்ட் திருச்சிராப்பள்ளியை அடைந்தார், இளவரசரின் தஞ்சை பயணம் ரத்து செய்யப்பட்டதால், தஞ்சை மாவட்டத்தின் முக்கியஸ்தர்களை திருச்சி வரவழைத்து இளவரசரை சந்திக்க வைக்க ஏட்பாடு செய்யப்பட்டது.
நாடார் எஸ்டேடின் நெருங்கிய நண்பரான தஞ்சை கலெக்டர் திரு. ஹென்றி சல்லிவன் தாமஸ், ஜமீன்தார் தவசுமுத்து நாடாரை, இளவரசர் எட்வர்டுகு அறிமுகம் செய்துவைத்தார். இந்த நிகழ்ச்சியில் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த பல பிரபுக்களும் கலந்துக்கொண்டனர். [13]
(திருச்சிராப்பள்ளியில் இரண்டு நாட்கள் தங்கியிருந்த இளவரசர், அருகில் இருந்த ஊர்களுக்கு விஜயம் செய்தார். அப்பொழுது வல்லம் எனும் ஊரில் இருந்த நாடார் எஸ்டேடின் அரண்மனையில் (கலெக்டரின் இல்லம்), பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் இளவரசர் எட்வர்ட் சிறிது நேரம் தங்கியிருந்தார் என்று கூறப்படுகிறது).
வெள்ளைய நாடார் தனது 85 வயதில், 1876 நவம்பரில் காலமானார்,
சாதாரண பின்னணியில்பிறந்தாலும், வெள்ளையா நாடார் தனது உழைப்பால் மெட்ராஸ் மாகாணதின் பெரும் செல்வந்தராக உயர்ந்தார். [14]
தவசுமுத்து நாடார், நாடார் எஸ்டேடின் நிர்வாக பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
தவசுமுத்து நாடார் 1880 ஆம் ஆண்டில் காரைக்காலில் ஒரு பத்திரிகையை துவங்கினர், அதற்கு “சத்தியாபிமணி” என்று பெயரிடப்பட்டது, புகழ்பெற்ற இலங்கை தமிழ் எழுத்தாளர், ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை (1858-1917) இந்த இதழின் ஆசிரியராக இருந்தார் . [15]
தவசுமுத்து நாடார் தனது மாவட்டத்தில் உள்ள மக்களின் கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான ஒரு பள்ளியை துவங்கினர் . 1882-ல் “தவசுமுத்து நாடார் பள்ளி” என்ற பேருடன் பள்ளி திறக்கப்பட்டது. [16]
இலை சோறு கலாச்சாரம்
இலை சோறு என்பது ஒரு பண்டைய கலாச்சாரமாகும், அந்த நாட்களில், தென்னிந்தியாவின் பல மன்னர்கள் மற்றும் புகழ்பெற்ற பிரபுகள், தங்கள் வீடுகளில் “இலை சோறு” பழக்கத்தை பின்பற்றினர்.
இதில் அக் குடும்பத்தலைவன் சாப்பிட்ட பின், அவர் இலையில் மிதமிருந்த உணவை விரும்பியவர்கள் தாங்களே முன்வந்து சாப்பிட்டார்கள்.
தகுதியின்மேல் நடைபெறுவது இம்மாதிரி செயல்கள்.
தவசுமுத்து நாடாரின் காலத்தில், நாடார் எஸ்டேட்யில் தொடங்கியது“இலை சோறு” கலாச்சாரம். நாடார் எஸ்டேட்டில் இலை சோறு சாப்பிடுவது புண்ணியம் என்று கருதி வசதி உள்ளவர்களும் “கம்பனிஸ் கார்டன் ” வந்து இலை சோறு சாப்பிட்டார்கள்.
இந்த பழக்கம் 1939 வரை பொறையார் நாடார் குடும்பத்தில் தொடர்ந்தது. [17]
குறிப்பு: இது அடிமைப்படுத்தும் செயலோ அல்லது அவமரியாதை செயலோ அல்ல. பழங்காலத்தில் நடைமுறையில் இருந்துவந்த இதுபோன்ற பழக்கவழக்கங்களை தற்போதைய சூழ்நிலையுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டாம்.
அரசாங்கத்துக்கு பொறையார் நாடார் எஸ்டேட் செய்த உதவிகள்
அந்த காலகட்டத்தில், பல பிரபுக்களைப் போலவே, நாடார் எஸ்டேடும், இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்துக்கும், சீரான சட்ட மற்றும் நிர்வாக அமைப்புக்கு பிரிட்டிஷின் ஆட்சி தேவை என்று நம்பியது.
நாடார் ஹவுஸ்
பிரிட்டிஷ்சார், தஞ்சையின் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தை தரங்கம்பாடிக்கு மாற்ற விரும்பியபோது, தவசுமுத்து நாடார் தனது தரங்கம்பாடி பங்களாவை அவர்களுக்கு உபயோகித்துக்கொள்ள குடுத்தார். 1878 ஆம் ஆண்டில், நீதிமன்றம் தஞ்சைக்கு மாற்றப்பட்டபோது, நாடார் அவர்கள் இந்த வீட்டை கலைரீதியாக அலங்கரித்து, பிரிட்டிஷ் ஆளுநர்கள் மற்றும் கலெக்டர்களுக்குகான விருந்தினர் மாளிகையாக பயன்படுத்தினர்.
1902 ஆம் ஆண்டில், லார்ட் ஆம்ப்தில் மற்றும் லேடி ஆம்ப்தில் ஆகியோர் தரங்கம்பாடிக்கு விஜயம் செய்தபோது, அவர்கள் இந்த வீட்டில் பொறையார் நாடார் எஸ்டேட் குடும்பத்தின் விருந்தினராக தங்கினர். [18]
வல்லம் அரண்மனை
தவசுமுத்து நாடார் 1872 ஆம் ஆண்டில், தஞ்சை மாவட்டத்தில் உள்ள வல்லம் எனும் ஊரில் ஒரு அரண்மனையை கட்டினார், அந்த அரண்மனையை தஞ்சை பிரிட்டிஷ் கலெக்டர் தாங்குவதற்கு குடுத்தார் , இது ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தஞ்சை மாவட்ட ஆட்சியர்களின் உத்தியோகபூர்வ இல்லமாக இருந்தது. [19]
மெட்ராஸ் ஆளுநர் தஞ்சை மாவட்டத்திற்குச் செல்லும் போதெல்லாம், அவர் நாடார் எஸ்டேடின் வல்லம் அரண்மனையில் தங்கியிருக்கிறார் [20] .
அரசாங்கத்தின் பயன்பாட்டிற்கான கட்டிடங்கள்
முன்னதாக, பிரிட்டிஷ் அரசாங்கம் தஞ்சையில் ஒரு ரயில் நிலையம் கட்ட முடிவுசெய்தபோது, வெள்ளைய நாடார், தனது தஞ்சை மாளிகையை அரசாங்கத்திற்கு கொடுத்தார், ரயில் நிலையத்தின் தெற்கு நுழைவாயிலில் இருந்த இந்த பங்களா, ஆங்கிலேயர்களால் ரயில்வே மருத்துவமனையாக பயன்படுத்தப்பட்டது.
தஞ்சை நகரத்தில் இருந்த இங்கிலிஷ் கிளப் மற்றும் செங்கல்பட் சப்-கலெக்டர் அலுவலகம் ஆகியவை நாடார் எஸ்டேடின் கட்டிடங்களில் இயக்கப்பட்டன. [21]
காங்கிரஸ் கட்சிக்கு நிதி உதவி
இந்தியாவின் மிகப் பழமையான தேசியக் கட்சியான இந்திய தேசிய காங்கிரஸ் 1885 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் சார்பு இந்திய அமைப்பாக நிறுவப்பட்டது.
1885 ஆம் ஆண்டில் காங்கிரஸ் தொடங்கப்பட்டதிலிருந்து 1890 களின் முற்பகுதி வரை, பொரையார் நாடார் எஸ்டேட் குடும்பம் காங்கிரஸின் முக்கிய பைனான்சியர்களில் ஒருவராக இருந்தது. [22]
தேசம் முழுவதும் தனது வர்த்தக சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்த வேண்டும் என்ற தனது லட்சிய இலக்கை அடையும் முன்னரே தவசுமுத்து நாடார், தனது 55 வயதில் (1885 இல் தஞ்சையில்)காலமானார்!
தவசுமுத்து நாடார் தனது வாரிசுகளுக்கு தான் கற்ற வர்த்தக அனுபவம் மற்றும் நுணுக்கககளை கற்றுத்தருவதற்குள் காலமானதால், 19 வயதேயானா, அவரது முத்த மகன், இந்த தொழில் குறித்த அனுபவம் எதுவும் பெறவில்லை.
தவசுமுத்து நாடாருக்கு மூன்று மகன்கள் :
ரத்தினஸ்வாமி நாடார் 1865 – 1912
வெள்ளைத்தம்பி நாடார்
குருசாமி நாடார்
நாடார் எஸ்டேடின் நிர்வாகம், அனுபவமற்ற டி.ரத்னசாமி நாடாரின் தோள்களில் விழுந்தது.
அவரது தந்தையைப் போலல்லாமல், ரத்னசாமி நாடார், தொழிலில் குறையாகவே ஈடுபாடு கொண்டிருந்தார், மேலும் அரசியல் மற்றும் நாடார் சமூகத்தின் முன்னேற்றத்தில் அதிக அக்கறை காட்டினார்.
நாடர் மகாஜன சங்கத்தை நிறுவியதின் மூலம் நாடார் சமுதாயத்தின் முன்னேற்றத்தில் ரத்னசாமி நாடார் முக்கிய பங்கு வகித்தார் (சங்கம் குறித்து மேலும் விவரங்களுக்கு, இங்கே கிளிக் செய்யவும்) மற்றும் அவரது காலத்தில் கோவில்களில் நாடார்களின் உரிமையை நிலைநாட்டியது பொறையார் நாடார் எஸ்டேட் (கோவில் அரசியல் குறித்து மேலும் விவரங்களுக்கு, இங்கே கிளிக் செய்யவும்) .
சங்கம், கோவில் அரசியல் மற்றும் அவரது காலத்தில் அவர் மேற்கொண்ட பல்வேறு பொது நல சேவைகள் ஆகியவையால் நாடார் எஸ்டேட் பெருமளவு செல்வத்தை இழந்தது. ரத்தினசாமி நாடாரின் நிர்வாகத்தின் கீழ், அத்தகைய செலவினங்களுக்காக அவர் அதிக கடன்களையும் வாங்கினார்.
1911 ஆம் ஆண்டில், சமுதாயத்துக்கு அவர் செய்த சேவைகளை அங்கீகரித்து, ரத்தினசாமி நாடருக்கு “ராவ் பகதூர்” பட்டம் வழங்கப்பட்டது. [23]
டி. ரத்தினசாமி நாடார் 1912 இல் காலமானார். முன்னதாக, 1907 இல், தவசுமுத்து நாடாரின் இரண்டாவது மகன் வெள்ளைத்தம்பி நாடார் காலமானார். எனவே தவசுமுத்து நாடரின் மூன்றாவது மகன் டி. குருசாமி நாடார் 1912 முதல் நாடார் எஸ்டேட்டின் நிர்வாகத்தை ஏற்றுக்கொண்டார்.
அவர் நாடார் எஸ்டேட் குடும்பத்தின் ஒரே மூத்தவர் என்பதால், அவர் எஸ்டேட் மற்றும் வணிகங்களை நிர்வகிக்க கடுமையாக பாடுபட வேண்டியிருந்தது. அரியலூரின் ஜமீன்தாராகவும் பொறுப்பேற்ற குருசாமி நாடார் தனது முன்னோர்களைப் போலவே மிகுந்த கவனத்துடன் வணிகத்தை நிர்வகித்து, தென்னிந்தியாவின் பெரும்பகுதிக்கு அப்காரி (சாராயம) ஒப்பந்தங்களைப் பெற்றார்.
முதலாம் உலகப் போர் மற்றும் நாடார் எஸ்டேட் மீதான அதன் தாக்கம்
முதலாம் உலகப் போர் இந்தியாவின் அரசியல் மற்றும் பொருளாதார சூழ்நிலைகளில் குழப்பத்தை உருவாக்கியது. பிரிட்டிஷ் போர் நடவடிக்கைகளுக்காக இந்தியாவில் இருந்து ஏராளமான அடிப்படை பொருட்கள் அனுப்பப்பட்டன. இது உணவுப் பொருட்களுக்கான தேவை, பரவலான உணவு பஞ்சம் மற்றும் பணவீக்கத்திற்கு வழிவகுத்தது.
இதற்கிடையில், நாடார் எஸ்டேட் தென்னிந்தியாவின் மிகப்பெரிய டிஸ்டில்லராக இருந்தது [24], மெட்ராஸ், மதுரை, ராம்நாட், திருநெல்வேலி மற்றும் திருவிதாங்கூர் மற்றும் கொச்சின் சமஸ்தானம் உள்ளிட்ட தென்னிந்தியாவின் கிட்டத்தட்ட 70% பகுதிக்கு சாராயம் தயாரித்துத்தர உரிமையைக் கொண்டிருந்தது.
1917 ஆம் ஆண்டில், ஜமீன்தார் டி. குருசாமி நாடார், இந்த மாவட்டங்களுக்கு மூன்று ஆண்டு காலத்திற்கு ஒரு நிலையான விலையில் சாராயம் விநியோகம் செய்ய ஒப்பந்தங்களை பெற்றுயிருந்தார், ஆனால் போருக்குப் பிந்தைய பொருளாதார குழப்பத்தால் மூலப்பொருட்களின் விலை உயர்ந்தது. 1920 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், ஒப்பந்தங்கள் நிர்ணயிக்கப்பட்டபோது இருந்த விலையை விட இரண்டு மடங்கு அதிகமாக இருந்தது, நாடார் எஸ்டேட் அவர்கள் தயாரித்த ஒவ்வொரு கேலன் மதுபானத்திலும் ஒரு ரூபாய் நான்கு அனா இழந்தது! [25]
இதை அரசு அங்கீகரித்து ரூ. 2,15,000 (அந்த காலகட்டங்களில் இது பெரிய தொகை). ஆனால் இழப்பு ஒப்பீட்டளவில் மிக அதிகமாக இருந்தது. நாடார் எஸ்டேட் கிட்டத்தட்ட திவாலானது. [26]
குருசாமி நாடார் 1920 நவம்பரில் இந்த இழப்பீட்டைப் பெற்றார். அவருக்கு இழப்பீடு தந்தத்துக்கு நன்றி தெரிவிப்பதற்கும் அடுத்த கால ஒப்பந்தங்களைப் பற்றி விவாதிப்பதற்கும் அடுத்த நாள் மெட்ராஸ் ஆளுநருடன் ஒரு சந்திப்பு இருந்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இரவில் அவருக்கு கடுமையான மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.
முழு நாடார் எஸ்டேடின் நிர்வாகமும் இளைஞரான டி.வி.பாலகுருசாமி நாடாரின் தோள்களில் விழுந்தது. இவர் டி.வெள்ளைத்தம்பி நாடாரின் மகன்.
பிரிட்டிஷ் பேரரசின் மன்னருடன் டி.வி.பாலகுருசாமி நாடார்
வேல்ஸ் இளவரசர், எட்வர்ட் (பின்னர் பிரிட்டிஷ் பேரரசின் மன்னரான எட்டாம் எட்வர்ட்) அக்டோபர் 1921 முதல் மார்ச் 1922 வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்தார்.
ஜனவரி 13, 1922 இல், இளவரசர் மெட்ராஸ் வந்தடைந்தார், இங்கு அவர் 4 நாட்கள் தங்கியிருந்தார். இளவரசருக்காக அரசாங்க இல்லத்தில் ஒரு விருந்து நடைபெற்றது, இதில் இளவரசருடன், பிரிட்டிஷ் உயர் அதிகாரிகள், இந்திய இளவரசர்கள் மற்றும் ஜமீன்தார்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் ஜமீன்தார் டி.வி.பாலகுருசாமி நாடாரும் கலந்து கொண்டார். இவ் விருந்தின் பொது, இளவரசருக்கு, பாலகுருசாமி நாடார், பொறையார் நாடார் எஸ்டேடின் சார்பாக, மரகத கற்கள் பதித்த ஒரு கைத்தடியை காணிக்கையாக தந்தார்.
1921 ஆம் ஆண்டில், பாலகுருசாமி நாடார் தலைமையில், நாடார் எஸ்டேட் தென்னிந்தியாவில் வெகு சில மாவட்டங்களுக்கு மட்டுமே அப்காரி உரிமையையே தக்க வைத்துக் கொள்ள முடிந்தது. பல மாவட்டங்களை அதன் போட்டியாளர்களிடம் இழந்தது. எஸ்டேட்டின் பிரச்சினைகளைத் தீர்க்க தன்னால் முடிந்தவரை பாலகுருசாமி நாடார் முயன்றார், ஆனால் அந்த நேரத்தில், நாடார் எஸ்டேட்டின் நிலைமை மிகவும் சிக்கலான நிலைமையில் இருந்தது.
இந்த இழப்பு பொறையார் நாடார் எஸ்டேட்டின் குடும்பத்தில் குழப்பத்தை உருவாக்கியது, டி.ரத்தினஸ்வாமி நாடார் மற்றும் டி. குருசாமி நாடார் ஆகியோரின் மகன்கள், டி.வெள்ளைத்தம்பி நாடார் மகன்களுக்கு (டி.வி.பாலகுருசாமி நாடார் மற்றும் அவரது சகோதரர்கள்) எதிராக பாகபிரிவினை கோரி வழக்கு தொடர்ந்தனர்.
அந்த காலத்தில் மிகவும் பிரபலமான இந்த வழக்கு கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக நீடித்தது. நீதிமன்றம், பொறையார் நாடார் எஸ்டேட்-ஐ நிர்வகிக்க ரெஸிவேர்ஸ்-களை நியமித்தது.
ரிஸிவெர்ஸின் நிர்வாகத்தின் கீழ், நாடார் எஸ்டேட், 100 வருடங்களா தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த அப்காரி ஒப்பந்தங்கள் அனைத்தையும் இழந்தது.
இந்த வழக்கு மிகவும் கசப்பான அனுபவங்களை தந்தது. பல வருடங்களாகவே, நாடார் எஸ்டேட் கடன்களால் பெரிதும் பாதிக்கப்பட்டுஇருந்தது, இருப்பினும், நாடார் எஸ்டேட்டின் வீழ்ச்சிக்கு அவர் ஒருவரே கரணம் என்று பரவலாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் டி.வி.பாலகுருசாமி நாடார், மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டு 1929 ஜூலை 5 ஆம் தேதி தனது இல்லமான “கும்பினி தோட்டத்தில்” தற்கொலை செய்து கொண்டார்!
1937 ஜூலை 30 ஆம் தேதி, நாடார் எஸ்டேட்டின் சொத்துக்களை ஏலத்தில் விற்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது, அதில் தவசமுத்து நாடரின் குடும்பத்தின் உறுப்பினர்களுக்கு மட்டுமே ஏலம் எடுக்க உரிமை தரப்பட்டது (அதாவது இது ஒரு பொது ஏலம் அல்ல, தனியார் ஏலம்) செப்டம்பர், 1937 இல் ஏலம் நடந்தது.
அதைத் தொடர்ந்து, பொறையார் நாடார் எஸ்டேட்டின் குடும்பங்கள் மீண்டும் ஒன்றிணைந்தன, ஒருவருக்கொருவர் நல்ல உறவைப் பேணி வந்தனர்.
ஜமீன்தார் குருசாமி நாடாரின் சந்ததியினர் இப்பொழுது நாடார் எஸ்டேட்டின் பூர்வீக இல்லமான “கும்பினி தோட்டத்தில்” வாழ்ந்து வருகிறார்கள்.
.
No comments:
Post a Comment