Sunday 23 August 2020

VIRUDHUNAGAR HISTORY




VIRUDHUNAGAR HISTORY


“ஊரும் பெயரும் “

(நமது ஊரை பற்றி அறிந்ததும்,அறியாததும் )

விருதுநகர் மாவட்டம் புரதான பெருமையும் ,புகழும் வாய்ந்தது, இங்குள்ள ஒவ்வொரு ஊருக்கும் சுவாரசியமான பெயர் காரணம் உண்டு. இந்த வரலாறை இது வரை யாரும் பதிவிட்டதாக தெரியவில்லை. நம்மால் முடிந்த வரை விருதுநகர் மாவட்டத்தில் உள்ள முக்கிய ஊர்களின் பெயர் காரணத்தை “ஊரும் பெயரும்” என்ற இந்த தொடர் மூலம் தங்களின் பார்வைக்கு விருந்தாக்குகிறது,இந்த வாரம்

விருதுபட்டி அலைஸ் விருதுநகர் .

விருதுவெற்றி ,“விருதூர்” மற்றும்“விருதையூர்” ,விருதுகெட்டி, விருதுவெட்டி, பரிசுபட்டி, விருதை, விருதையம்பதி, வெயிலுவந்தாள் பட்டிணம் என்றும் கூறப்படுகிறது. ஒரு காலக்கட்டத்தில் கயிறு திரிக்கும் சலுப்பர்கள் இங்கு வாழ்ந்ததால் சலுப்பப்பட்டி என்றும் அழைக்கப்பட்டுள்ளது.1970 களில் கயிறு முறுக்கு தோப்புன்னு சுண்ணாம்புக்கர தெரு பாதையில்  இருக்கும்    பண்டைய காலத்தில் இளைய நாயக்கன் ஊரணி அருகில் கண்டெடுத்த மண்பாண்ட சில்லுகள் ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தய வரலாறை கொண்டுள்ளது.நான் என் தாயாருடன் தண்ணீர் கஷ்டகாலங்களில் ஒரு டப்பாவில் 1965 -1967
கயிறு ஒன்றை கட்டிக்கிட்டு இந்த ஊரணியில் தண்ணீர் பிடிக்க விருதுநகரில் இருந்து இந்த கிராமத்திற்கு செல்வோம் .தெருவே திரண்டு போகும்  



வடநாட்டில் புகழோடு வாழ்ந்த வீரனின் சாவாலை ஏற்று அவ்வீரனோடு போரிட்டு அவன் பெற்ற விருதுகள் யாவும் விருதுநகரை சார்ந்த வீரரால் வெற்றி பெற்றமையால்,“ விருதுபட்டி” .என்று கூறப்பட்டது...நாயக்கர்காலத்தில் மல்லர்கள் என்ற கூட்டம் ஒன்று உண்டு .இந்த மல்லர்களின் ஒரே வேலை சண்டை பயிற்சி செய்வது .ரஷ்யாவில் சவால் சண்டைப்பற்றி டால்ஸ்டாய் எழுதியிருக்கிறார் .அதே போல் இங்கயும் நாயக்க மல்லர்கள் காவல்பட்டி என்ற ஊரில் சவால் சண்டைக்கு அழைத்திருக்கிறார்கள் . இந்த காவல் பட்டியிலிருந்து விளைநிலங்களை பாதுகாக்கும் பொருட்டு ஆட்கள் வேலை செய்து வந்ததால் இவ்வூருக்கு காவல்பட்டி என்று பெயர் . பல்வேறு விருதுகளை வென்ற மல்லன் ஒருவனை வென்று விருதுகளை பெற்றதால் காவல்பட்டி விருது பட்டி ஆனது    

தெற்கில் இருந்து வணிகம் செய்ய சென்ற மக்களின் தங்கும் இடமாக, பொருட்களை கொள்ளையர்களிடம் இருந்து காக்கும் வியாபார பேட்டை யாக அறியப்ப்பட்ட விருதுபட்டி "விருதுபட்டி' என்னும் சின்ன கிராமமாக இருந்து "விருதுநகர்' எனும் சிறிய நகரமாக பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் உருவெடுத்தது.சிவகாசியில் அ. சி.பேட்டை ,விருதுநகருக்கு மஞ்சள் பேட்டை வணிகர்களை பாதுகாக்க முளைத்தவை .இன்று இவைகள் கடைகளாகவும் ,மருத்துவ மனைகளாகவும் காலத்திற்கு ஏற்றபடி மாறிவிட்டன


 1792 – இல் வெள்ளையர்களின் கட்டுப்பாட்டில் விருதுபட்டி வந்தது 1798 ஆம் ஆண்டு விருத்பட்டி இரண்டாக பிரிக்கப்பட்டு கிழக்குபகுதி கோட்டைப்பட்டி எனவும் மேற்கு பகுதி விருதுபட்டி எனவும் வழங்கப்பட்டது.



வெள்ளையர்கள் நெல்லைக்கு தங்கள் படைகளை கொண்டு செல்ல அமைத்தது தான் விருதுநகர் பஜார் சாலை. இப்பொழுது ஆக்கிரமிப்புகளால் குறுகிய தெருவாக உள்ளது.1946 ஆம் ஆண்டு இச்சாலை தேசிய நெடுஞ்சாலை எண்-7 ஆக இந்திய அரசால் அறிவிக்கப்பட்டது.பதினெட்டாம் நூற்றாண்டில் பாளையமாக இருந்த பாவாலியின் வீழ்ச்சிக்கு பிறகு விருதுபட்டி வளர்ச்சி பெற வங்கியது. பாவாலி, நெல்லை, திருசெந்தூர், வேம்பார் ,சிவகாசி, சுரண்டை, கமுதி, சந்தியூர், புளுதிபட்டி என பல ஊர்களில் இருந்து விருதுநகருக்கு மக்கள் குடியேறினர். எங்கள் மூதாதையர் சிவகாசியை ஒட்டியுள்ள கிராமத்தை சேர்ந்தவர்கள்  
13.03.1915 ஆம் ஆண்டு விருதுநகர் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. .
விருதுநகர் இந்தியா மற்றும் மேலை நாடுகளுக்கான விவாசய பொருட்களை ஏற்றுமதி செய்யும் சந்தையாக , வியாபார தலை நகரமாக விளங்க துவங்கியது இந்த காலக்கட்டத்தில் தான். பஞ்சு, பாக்கு ,புகையிலை, காபி,தேயிலை,ஏலக்காய்,சிக்கரி,மிளகாய்,மல்லி,எண்ணை வித்துக்கள்,தானிய வகைகள், பருப்பு,டின் என அனைத்துவகை வியாபார தொழில்கள் விருதுநகரில் தான் நடைபெற்றது. இதில் இவர்கள் முற்றொருமை பெற்று விளங்கினர். எனவே தான் விருதுநகர் என்றால் வணிகம் என்று பொருள் கொள்ளும் அளவிற்கு புகழ் பெற்றது. "Virudhunagar Produces Nothing But Controls Everything" என்று சிறப்புடன் கூறப்படுகிறது.
மேலும்



“பொதியை எந்தி வண்டியிடிலே, பொள்ளாச்சி சந்தையிலே
விருதுநகர் வியாபாரிக்குச் செல்லக்கண்ணு – நீயும்
வித்துப் போட்டுப் பணத்தை யெண்ணு செல்லக்கண்ணு”
என்று கவிஞர் மருதகாசி பாடியுள்ளார்.
இங்கு வாழும் மக்கள் தங்கள் பரம்பரையை வகையறா என வகை படுத்தி கொண்டனர். இந்த வகையறா என்பது மக்களின் குலதெய்வம்,முதல் தலைமுறையின் பெயர்,பூர்வீக இடத்தின் பெயர்,சம்பவங்களின் பெயராக இருக்கும், ஏறத்தாழ 250 மேற்ப்பட்ட வகைறாக்கள் உள்ளன.
விருதுநகரில் முக்கிய பகுதிகள் பெயர் காரணம்

ஹலம் பட்டி - அல்லம்பட்டி ,(ஹலம்பட்டி என்பது ஏர் உழுவதை குறிக்கும்.)

முத்துராமன் பட்டி- வெள்ளை அதிகாரிகளிடம் குதிரை பராமரிப்பு தொழில் பார்த்த முத்து, ராமன் சகோதரர்களின் சொந்தமான இடம்.

பவுண்டு தெரு. ஆடுகள் அடைக்கப்படும் பவுண்டுகள் உள்ள தெரு.

சிவந்தி புரம் – சிவந்தி வகையறாவினரின் வாழ்விடம்.

மணி நகரம்.- செக்கு தொழில் புரிந்த மணி என்பவரின் பேரில் அமைந்த இடம்.

கத்தாளம்பட்டி – கத்தாழைகள் வளர்ந்து செழித்த பகுதி.

ஐ.சி.ஏ காலனி – Indian Christian ASSOCIATION COLONY.

LIG COLONY - LOW INCOME GROUP COLONY.

காந்தி புரம் – தேச தந்தை காந்தி நினைவாக,

நீராவி தெரு – நீர் நிறைந்து இருந்த ஊரணி இருந்த இடம்
.
கந்தபுரம் – ஹார்வி தொழிற்சாலையின் TRANSLATER கந்தப்பிள்ளை அவர்களின் நினைவாக .

அன்னை சிவகாமி புரம் – திரு.காமராஜரின் தாயார் பெயர்.
வடக்கு,தெற்கு,மேற்கு ரத வீதிகள் – தேரோடும் வீதிகள் என்பதை சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

ஆங்கிலேயர் காலத்தில் ஆங்கிலேயரின் முற்போக்கும்,சிந்தனையும், அப்போது அவர்களுடன் விருதுநகர் வியாபார மக்களுக்கு ஏற்பட்ட வணிக வளர்ச்சியும் படித்த விருதுநகர் மக்களிடையே ஆங்கிலேயர் பால் ஈர்ப்பு இருந்தது. ஆங்கிலேயர்களின் ஆட்சியால் நாம் வளர்ச்சி அடையலாம் என்ற எண்ணம் மேலோங்கி இருந்தது. அப்போது ஆங்கிலேயர் ஆட்சி செய்த பிற நாடுகளில் வணிகம் செய்ய ஆரம்பித்தனர் விருதுநகர் மக்கள். இதனால் விருதுநகரில் ஆங்கிலேயரை ஆதரிக்கும், முற்போக்கு சிந்தனைகளையும் கொண்ட நீதிக்கட்சி சக்தி வாய்ந்ததாக இருந்தது. நீதிக்கட்சி யின் பங்கு விருதுநகர் அரசியலில் முக்கியமானது. “நீதிக்கட்சி யினைச் சேர்ந்தோர் விருதுநகர் மக்களின் வளர்ச்சிக்காகவும் நகர் வளர்ச்சிக்காகவும் பெரிதும் பாடுபட்டனர்.“நீதிக்கட்சி” யின் தூண் போன்று இருந்த V.V.ராமசாமி அவர்கள் , M.S.P.செந்தில்குமார் மற்றும் M.S.பெரியசாமி, M.S.P.ராஜா போன்றோரின் சேவை மகத்தானது.

விருதுநகர் மக்களின் எதிர்ப்பை மீறி காங்கிரஸ் மீது நம்பிக்கை வைத்தவர் காமராசர் வீட்டில் உள்ளவர்களின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல் காந்திஜியின் விடுதலைப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.காமராசரின் முயற்சியால் விருதுநகரில் விடுதலைப்போராட்டங்கள் நடந்தது. “நீதிக்கட்சி” யின் கோட்டையாக இருந்த விருதுநகர் காமராசரின், காங்கிரஸ் கீழ் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடுத்திக்கொண்டது. விருதுநகரில் சில தீவிரவாத விடுதலைப் போராட்டமும் நடந்துள்ளது.பிரசுரங்களை வெளியிடுதல், சட்டமறுப்பு இயக்கம், கொடி போராட்டம்,சத்தியாகிரகப் போராட்டம், வெள்ளையனே வெளியேறு போராட்டம் என்று பல விடுதலைப் போராட்டங்களில் கலந்து சிறை சென்றனர் .

கர்ம வீரர் காமராசரை தந்தது விருதுநகர். இன்று விருதுநகர் என்றால் காமராசர் பிறந்த மண் என்று உலகெங்கும் விருதுநகரின் புகழ் பரவியுள்ளது. கல்வி, தொழில், நீர் நிலைகள், மின்சாரம் என்று தமிழகத்தின் அனைத்து துறையிலும் புரட்சி செய்த காமராசர் தன் குடும்பம், தன் மக்கள், தன் ஊர் என்று பாராத தன்னலமற்ற எளிமையான நாடு போற்றும் "KingMaker“ ஆவார்.

விருதுநகர் மாரியம்மன் கோவில் வரலாறு!

விருதுநகர் மாரியம்மன் கோயில் நானுறு ஆண்டுகள் பழமை  பெற்றது. அதில் வருடாந்திர திருவிழா 'பங்குனி பொங்கல்' மிகவும் பிரபலமானது. விருதுநகர், விருதுபட்டியாக இருந்தபோது 1780ல் கோயில் உள்ள இடத்தில், சிறிய பீடம் அமைத்து வழிபட்டு வந்தனர். 1859ல் பீடம் மீது, அம்மன் சிலை வைத்து வழிபடத் துவங்கினர். அன்று முதல், இக்கோயிலின் முக்கிய பண்டிகையாக, பங்குனி பொங்கல் திருவிழாவை கொண்டாடி வருகின்றனர். 1918ல் கோயிலில், முதல்முறையாக கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. மண் சுவரால் ஆன கோயில் மூலஸ்தானத்திற்கு, 1923ல் புதிய கட்டடம் கட்டப்பட்டது. 1933 முதல் பங்குனி பொங்கல் திருவிழாவை, வெகு விமரிசையாக கொண்டாட துவங்கினர்.

சொக்கநாதர் சுவாமி திருக்கோயில் .

பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் கெளசிக முனிவரின் தவபலத்தால் உருவான லிங்கம் உள்ள கோயில் தான் விருதுநகர் சொக்க நாதர் திருக்கோயில், மதுரை மன்னர் சொக்கநாத நாயக்கர் ஆட்சி காலத்தில் மதுரை மீனாக்ஷி கோவிலின் மறுபதிப்பாக கௌசிகா நதிக்கரை ஓரம் தெப்பமும் விசாலமான மண்டபமும் ஏற்ப்படுத்தபட்டு அம்பாளுடன் மூலவருக்கு கோபுரம் எழுப்பபட்டது. தற்பொழுது மிக சிறப்பாக நாலுகால பூஜைகளும் நடைபெறும் இக்கோயில் தரிசித்தால் மதுரை மீனாக்ஷி – சொக்கநாதரை தரிசித்த பலாபலன்கள் கிடைக்கும்.

சிறப்புஅம்சங்கள் & வழிபாடுமுறைகள்:-

தென்மாவட்டங்களில் நடைபெறும் திருவிழாக்களில் விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா மிகவும் பிரசித்தி பெற்றது.விருதுநகர் அம்மனின் சிறப்பு அம்சம், தாய் இடது கால் மடித்து, வலது கால் தொங்கும் கோலத்தில் அமர்ந்து காட்சி அளிக்கும். இதில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உடம்பில் கரும் புள்ளி செம்புள்ளி வரைந்து , வேம்பால் அலங்கரிக்க பட்ட ஆடை உடுத்தி, அக்னிச்சட்டி எடுத்து, வாயில் சூலம் குத்தி, கரகம், ரதம் இழுத்து நகரம் முழுவதும் ஊர்வலம் வந்து அம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்துவர்.
1945 ஆம் ஆண்டு முதல் பொருட் காட்சி இப்பங்குனி பொங்கலை முன்னிட்டு விருதுநகர் கே.வி.எஸ் பள்ளி நிர்வாகத்தால் நடத்தப்படுகிறது.
கல்வி நிறுவனங்கள்.
இந்திய துணை கண்டத்தின் பாதி மக்கள் தொகையை பலி கொண்ட தாது வருட பஞ்சம் ஏற்ப்பட்ட பத்து ஆண்டுகளில் 18நகர மக்கள் தான் உண்ணும் உணவின் ஒருபிடி அரிசியை தானமாக கொடுத்து கல்வி சாலைகளை அமைத்தனர் அப்பொழுது உருவான கே.வி. எஸ் கல்வி நிறுவனகள் இன்று தன கிளைகளை பரப்பி ஆயிரக்கணக்கான மாணாக்கர்களுக்கு கல்வி செல்வத்தை குறைவில்லாமல் அள்ளி வழங்கி வருகிறது.. தென் கோடியில்பெண்கள் பள்ளிக்கூடம்,வட  கோடியில் ஆண்கள் பள்ளி, வடக்கு பெண்கள் கல்லூரி, தெற்கு கோடியில் ஆண்கள் கல்லூரியும் அமைந்திருக்கும். .
இருப்பு பாதை .

1903 ஆம் ஆண்டு இங்கு இரயில் நிலையம் ஏற்ப்படுததப்பட்டது. (1853 –ஆம் ஆண்டு தான் முதன் முதலில் பம்பாய்க்கும் தானே நகருக்கும் இருப்பு பாதை போக்குவரத்து போடப்பட்டது.)

தெப்பகுளம்.
1965  முதல்   1978  வரை தண்ணீர் கோடையில் வற்றிவிடும் .தெப்பத்துக்குள் கபடி விளையாட்டும் சில சமயம் நடைபெறும் பின்புதான் நிலைமை மாறியது 
வருடத்தில் 365 நாளும் தண்ணீர் தேங்கி நிற்கும் விருதுநகர் தெப்பகுளம் மேலும் ஒரு பெருமைக்குரிய விசயமாகும் , ஊரணியாகயிருந்த இடத்தை வற்றாத தெப்பமாக மாற்றிய பெருமை, துணை பதிவாளராக பணியாற்றிய திரு.சரவணமுத்து பிள்ளை எனபவரின் விடா முயற்ச்சியும்,ஓவர்சீயர் சங்கரலிங்கம் என்பவரின் உதவியால் 3.8.1866 ஆம் ஆண்டு ஊரணியை குளமாக வெட்டும் பணி துவங்கியது. வீட்டிற்க்கு ஒருவர் வீதம் சுற்று பகுதயில் வசித்த மக்கள் உழைப்பினாலும், நெல்லை,திருமங்கலம்,தேவாரமம்,சின்னமனூர், திண்டுக்கல்,மேலும் தமிழகத்தில் பல பகுதிகளில் இருந்து வந்த மக்களின் நிதி உதவியாலும் இதெப்பம் முழுமை பெற்றது. 

.1970  களில் தனுசுகோடி விலாஸ் எதிரில் அமைந்திருக்கும் பொக்கமுட்டியான் கடை புரோட்டா பேமஸ் .இட்லிக்கு அரைத்தவளை கடை  பேமஸ் .சின்னவயசில் சினிமாவுக்காக வீட்டுக்கு தெரியாமல் 1968 -69  இங்கல்லாம் சர்வர் வேலைகூட பாத்திருக்கேன் .அல்லா பிச்சை புரோட்டா கடை. புரோட்டாவைத் தகர டேபிளில் வைத்து ஒரு தந்திரக்காரன் போன்று சுற்றுகிற நுணுக்கம் என்றும் அழகு. புரோட்டாவுடன் சாப்பிடுகிற சுக்காவும், முட்டை வழியலும் நம் நாக்கை எப்போதும் அடமானம் வைக்கச் சொல்லுகிறது. சுவை குறையாத புரோட்டா ஊரின் வாசனையாகவே மாறி விட்டது. ராஜா ஸ்வீட்ஸ் சீவலும், அல்வாவையும், தின்றபடி ஊர் வம்பு பேச தெப்பகுள அருகில் மகாமக கூட்டம் என்றும் இருக்கும்.

தமிழ்நாடு என பெயர் சூடவேண்டு வேண்டும் என கோரி உண்ணாவிரதம் இருந்து உயிர் விட்ட தியாகி சங்கரலிங்கனாரும் விருதுநகர் சார்ந்தவரே.
பழம் பெரும் நடிகர் திரு. V.K ராமசாமி விருதுநகர் சேர்ந்தவர்.வெயில் பட இயக்குனர் வசந்தபாலனும் நம்மவரே நண்பர்களே!!
ரயில்வே ஸ்டேசன் கோடு VPT தானே அதன் அர்த்தம் பல பேருக்கு தெரியாது அது விருதுபட்டி தானுங்கோவ்.

நன்றி!!
.

No comments:

Post a Comment