Wednesday 26 August 2020

HISTORICAL QUEENS -ACTORS ANALYSED




HISTORICAL QUEENS -ACTORS ANALYSED

.சரித்திரம் படைத்த ராணியாக ,நடித்தவர்கள்

சித்தூர் ராணி, பத்மினி
குமாரி வைஜெயந்திமாலா

'அழகே உருவான இந்த ஆரணங்கை, கண்ணாடியிலாவது பார்த்தே தீருவேன்’ என்று துடித்தான் அலாவுதீன் என்கிற முகமதிய மன்னன். பார்த்தான் அப்படியே... அவளை அடைய வேண்டுமென்ற துராசைகொண்டதன் விளைவாகத் தகுந்த சிட்சையும் பெற்றான்!

அலமேலுமங்கா

பண்டரிபாய்

மைசூரை, ராஜ உடையார் ஆண்ட காலத்தில் ஸ்ரீரங்கபட்டணத்து வைசிராயாக இருந்தவரின் மனைவி அலமேலுமங்கா. ரங்கநாதருக்குத் தன் ஆபரணங்களை அடிக்கடி சாத்தி, அழகு பார்த்து மகிழ்ந்த பக்தை. தன் ஆபரணங்களும், தன் மானமும் பறிபோகும் நிலைமையில், தீரத்துடன் உயிரைத் தியாகம் செய்தவள்.

மும்தாஜ் பேகம்

குமாரி ராகினி

உலகத்தின் ஏழு அதிசயங்களில் ஒன்றாக விளங்கும் 'தாஜ் மஹால்’ என்ற அற்புத சிருஷ்டி தோன்றுவதற்குக் காரணமாக இருந்தவள் இந்த அழகி. இவள் மீது கொண்டிருந்த அத்யந்தப் பிரேமையின் சின்னமாகவே, ஷாஜஹான் சக்கரவர்த்தி அந்த வெள்ளைச் சலவைக் கல் கட்டடத்தை எழுப்பச் செய்தார்.

ராணி ருத்ரம்மா

எஸ்.வரலக்ஷ்மி

சுமார் 700 வருடங்களுக்கு முன் தெலிங்கானா நாட்டைத் திறம்பட 40 ஆண்டுகள் ஆண்ட தீரப் பெண்மணி, ராணி ருத்ரம்மா. மக்களின் நலமே தன் நலம் எனப் பாவித்தவள் இவள். வாரங்கல் மீது படையெடுத்துவந்த முஸ்லிம் படைகளை, தானே தலைமை தாங்கிச் சென்று, பஞ்சாகப் பறக்கடித்த வீராங்கனையும் இவளே.

இராணிபாய்

குசலகுமாரி

செஞ்சியின் செல்வனும், வீரத்துக்கு ஓர் உதாரண புருஷனும், 'ராஜா தேசிங்கு’ என்று அழைக்கப்பட்டவனுமான தேஜஸ் சிங்கின் உத்தம பதிவிரதா பத்தினி இராணிபாய். இவளது பதிபக்தியை மெச்சி, தேசிங்கின் விரோதியான ஆற்காட்டு நவாப் சையத் உலாக்கானே 'இராணிப்பேட்டை’ என்ற சரித்திரப் பிரசித்திபெற்ற நகரை நிர்மாணிக்கச் செய்தான்.

வீரமா தேவி

எம்.என்.ராஜம்

தஞ்சையிலே காலவெள்ளத்திலே கரைந்திடாத வகையில் கலைக்கோயில் கட்டிய ராஜராஜ சோழனின் மருமகள்; மகா வீரனான ராஜேந்திரனது ஆசைக்கிழத்தி இவள். காதலைவிடக் கடமையே பெரிது என்பதைத் தன் காதலனுக்கு உணர்த்தியவள்.

ஜான்சி ராணி லக்ஷ்மிபாய்

பானுமதி

'என் ஜான்சி நகரைக் கைவிடுவதா? ஆகாது; தைரியம் இருப்பவன் அதைப் பறிக்க முயலட்டும்!’ என்று அஞ்சா நெஞ்சுடன் ஆங்கிலேயருக்குச் செய்தி அனுப்பிய வீரவனிதைதான் ஜான்சி ராணி. 1858-ம் வருஷத்திலே, ஆங்கிலேயப் படைகளை அலற அடித்துத் துரத்திவிட்டு, ஜான்சி நகரைத் திறமையோடு ஆண்டுவந்தாள் அவள். இந்திய சுதந்திரப் போராட்டச் சரிதத்தில், அவளது சாகசச் செயல்கள் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை.

குந்தவி

அஞ்சலி தேவி

அழகிலும், ஆடல் திறமையிலும், வாக்குவன்மையிலும் சிறந்தவள் குந்தவி. தஞ்சைப் பேரரசன் ராஜராஜனது அருந்தவப் புதல்வி அவள். விரோத பாவம்கொண்ட வேங்கி நாட்டின் வீர இளவரசன் விமலாதித்தன் மீது காதல்கொண்டாள் அவள். குந்தவி - விமலாதித்தன் திருமணம், சோழ - வேங்கி நாடுகளைப் பிணைத்து, அவற்றுக்குத் தனி வலு அளித்தது.

பிருத்விராஜ், சம்யுக்தை

லலிதா, பத்மினி

அவன் ஒரு சுந்தர வீர புருஷன். அவள் அழகே உருவானவள். அவர்களிடையே ஒரு தனிப் பிரேமை வேர்விட்டு வளர்ந்துவிட்டது. அவர்கள் இருவரது குடும்பத்தில் இருந்த ஜன்மப் பகையை அது லக்ஷ்யம் செய்யவில்லை. தவிர, அவளது தந்தை இழைத்த அவமானத்தையும் அவன் பொருட்படுத்தவில்லை. அவளது சுயம்வர தினத்திலே, வெகு துணிச்சலுடனே வெள்ளைப் புரவி மீது பாய்ந்துவந்து, அவளை அள்ளி எடுத்துச் சென்றான் அவன். அவர்களது காதல் நாடகம், உத்தம இந்தியக் காதல் கதைக் கொத்துகளிலே, ஓர் உன்னத இடம் பெற்றிருக்கின்றது.

ராணி மீனாட்சி

ராஜசுலோசனா

பழமையும் பெருமையும் நிறைந்த மதுரை மாநகரிலே, கடைசியாக ஆண்ட நாயக்க வம்சத்தவள் ராணி மீனாட்சி. நிறைந்த எழிலுடன் விளங்கிய அவள், சிறந்த அரசியாகவும் விளங்க விரும்பினாள். ஆனால், அப்போது உருவான சூழ்ச்சிச் சுழலிலிருந்தும், துரோகிகளின் கும்பலிலிருந்தும் மீள அவளால் இயலவில்லை. அவளோடு, பாண்டிய நாடு தமிழ் அரசாக இருந்த நிலை மாறியது.

No comments:

Post a Comment