பாஜிராவ் மஸ்தானி
நேற்றிரவு விஜயா போரம் மாலில் புதிதாக திறக்கபட்டுள் Palazzo திரையரங்கில் பாஜிராவ் மஸ்தானி பார்த்தேன்.Palazzo திரையரங்கு 8-screen கொண்டது, சிறப்பான ஒலி ஒளி இருக்கைகளுடன் உலகத்தரத்தில் உருவாக்கபட்டுள்ளது. கூடுதல் சிறப்பு பார்வையாளர்கள் சினிமா துவங்குவதற்கு முன்பும் பின்பும் அமர்ந்து பேசுவதற்கு வசதியான இருக்கைகள். காபி ஷாப். வளாகம் முழுவதும் ஒரே இளைஞர் கூட்டம்.
பாஜிராவ் மஸ்தானி இந்திய பொழுது போக்கு சினிமாவின் பெரும்சாதனை. பிரம்மாண்டம் என்பது வெறும் கிராபிக்ஸ் காட்சிகள் மட்டுமில்லை, எடுத்துக் கொள்ளும் கதைக்களம், அதற்கான பிரம்மாண்டமான அரங்க அமைப்புகள், நடிப்பு, ஆடல் பாடல்கள், சிறந்த ஒளிப்பதிவு, இசை, எடிட்டிங், இயக்கம் என அத்தனையிலும் சாதனை செய்திருக்கிறார் சஞ்சய் லீலா பன்சாலி.
இப்படி ஒரு திரைப்படத்தை உருவாக்க வேண்டும் என்ற கனவை பதினைந்து ஆண்டுகளாக தான் கண்டுவந்ததாகவும் தற்போது நிறைவேற்றியிருப்பதாகவும் பன்சாலி சொல்லியிருக்கிறார்.
உண்மையில் இது பிரம்மாண்டமானதொரு கனவு தான். திரையில் தனது கனவை முழுமையாக சாத்தியமாக்கி வென்றிருக்கிறார் பன்சாலி.
மொகலே ஆசம் படம் கடந்த கால இந்திய சினிமாவின் பெருமை என்றால் பாஜிராவ் மஸ்தானி நிகழ்கால இந்திய சினிமாவின் பெருமை.
படம் மெதுவாகப் போகிறது. பல இடங்கள் தொய்வாக உள்ளது, அதிகபட்ச அலங்காரத்துடன் உருவாக்கபட்டிருக்கிறது என சில விமர்சனங்கள் எழுந்துள்ளன, ஆனால் அப்படி எதையும் நான் உணரவில்லை, ஒரு வரலாற்று திரைப்படத்தை இப்படி தான் உருவாக்க முடியும். இந்த வரலாற்றில் எவ்வளவு உண்மை, எவ்வளவு கற்பனை என்பது படைப்பாளியின் சுதந்திரம்
பன்சாலி மராத்தா பேஷ்வாக்களின் வரலாற்றை ஆவணப்படமாக எடுத்திருந்தால் மட்டுமே வரலாற்று துல்லியத்தை அவரிடம் எதிர்பார்க்க வேண்டும். இது ஒரு கற்பனையான கதை. ஆனால் வரலாற்றில் நடந்த சம்பவத்தை மையமாக கொண்ட கதை, நாக்னாத் எஸ் இனாம்தார் என்ற மராத்தி நாவலாசிரியரின் Raau என்ற நாவலை அடிப்படையாக கொண்டே இப்படம் உருவாக்கபட்டிருக்கிறது..
படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருப்பவர் சுதீப் சட்டர்ஜி. பூனா திரைப்படக்கல்லூரியில் ஒளிப்பதிவு பயின்றவர். சக்தே இந்தியா, தூம் 3 போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். புத்ததேவ் தாஸ்குப்தாவின் கால்புருஷ் என்ற படத்திற்கும், நாகேஷ் குக்குனூர் இயக்கிய இக்பால் படத்திற்கும் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்
இந்த படத்தின் ஒளிப்பதிவு அபாரம். பல காட்சிகள் அப்படியே ஒவியங்கள் உயிர்பெற்று திரையில் அசைவுறுவது போல உருவாக்கபட்டுள்ளன. குறிப்பாக ராஜா ரவி வர்மாவின் புகழ்பெற்ற ஒவியங்களை காட்சிகளாக மறுஉருவாக்கம் செய்திருக்கிறார் சுதீப் சட்டர்ஜி. குறிப்பாக ப்ரியங்கா அன்னத்துடன் நிற்கும் காட்சி ராஜா ரவி வர்மாவின் தமயந்தி ஒவியத்தின் மறுஉருவாக்கமே.
ஒரே வேறுபாடு தமயந்தி அன்னத்தைப் பார்ப்பது போல ஒவியத்தில் உள்ளது, ஆனால் ப்ரியங்காவின் பார்வை வேறுபக்கம் திரும்பியுள்ளது. ஆனால் அந்த ஒவியத்தை இவ்வளவு துல்லியமாக காட்சிப்படுத்துவது எளிதில்லை. கலைஇயக்குனரும் ஒளிப்பதிவாளரும் இணைந்து இந்த வெற்றியைச் சாதித்திருக்கிறார்கள்.
பாஜிராவ் மஸ்தானியும் மொகலே ஆசம் போன்ற காதல் கதை தான் . சலீம் அனார்கலி காதலுக்கு வரலாற்று சாட்சியங்கள் இல்லை, அனார்கலியின் கதை பரவலான மக்கள் நம்பிக்கை.
ஆனால் பாஜிராவ், மஸ்தானி இருவரின் காதல் வரலாற்றில் நடந்த சம்பவம். மஸ்தானி மஹால், மஸ்தானியின் இடிந்த கல்லறை போன்றவை இன்றும் பூனேயில் உள்ளன.
பன்சாலி அவர்களின் காதலைக் காட்சிபடுத்துவதிலும், பாஜிராவின் மரணத்தையும் தனது விருப்பத்தின் படி உருவாக்கியிருக்கிறார், வரலாற்றில் இல்லாத சில நிகழ்வுகளை மஸ்தானி சார்ந்து உருவாக்கியிருக்கிறார் என பேஷ்வாவின் குடும்பம் குற்றம்சாட்டியுள்ளது, நீதிமன்றத்தையும் அணுகியுள்ளது.
மற்றபடி பெருமளவு வரலாற்று நிகழ்வுகள் அப்படியே தான் சித்தரிக்கபட்டிருக்கின்றன. இதிலுள்ள பல சம்பவங்கள் இனாம்தாரின் நாவலில் இருந்தவை தான். இந்த நாவல் ஏற்கனவே மராத்தியில் தொலைக்காட்சி தொடராக வெளியாகி உள்ளது. 1955ல் மஸ்தானி என்ற பெயரில்ஒரு திரைப்படமும் வெளியாகியிருக்கிறது. அத்தனையும் தாண்டி தனது படத்தை தனித்துவமிக்க ஒன்றாக பன்சாலி உருவாக்கியிருக்கிறார்.
1720ல் சத்ரபதி சாகுவிடம் தனக்கு பேஷ்வா பதவி வேண்டும் என பாஜிராவ் முறையிடுவதில் படம் துவங்குகிறது. அந்தக் காட்சியில் மயிலிறகை துண்டிக்கும் விதமும் அதற்கு சொல்லும் விளக்கமும் அக்காட்சி படமாக்கபட்டுள்ள விதமும் நம்மை வியக்க வைக்கன்றன, அந்த வியப்பு கடைசிக்காட்சியில் பாஜிராவ் தண்ணீரில் கற்பனை எதிரிகளுடன் சண்டையிடுவது வரை தொடர்ந்து நீடிப்பது படத்தின் வெற்றி.
பேஷ்வாவாக நியமிக்கபட்ட பாஜிராவ் மராத்திய சாம்ராஜ்ஜியத்தை விரிவுபடுத்த அயராமல் போரிட்டு வெற்றிவாகைகள் சூடுகிறான்
ஒருமுறை அவனிடம் புத்தேல்ஹண்டின் இளவரசி மஸ்தானி தனது நாட்டை எதிரிகளிடமிருந்து காப்பாற்ற உதவி செய்யும்படியாக கேட்கிறாள். அவளது வீரத்தையும் மனஉறுதியையும் கண்டு உதவி செய்கிறான் பாஜிராவ்
புத்தேல்ஹண்ட் யுத்தத்தில் பாஜிராவ் வெல்கிறான். இதன் அடையாளமாக மஸ்தானியை மன்னரே திருமணம் செய்து கொடுத்து 33 லட்சம் தங்க நாணயங்களையும், ஒரு வைர சுரங்கத்தையும் தனது தேசத்தில் மூன்றில் ஒரு பகுதியையும் பரிசாக தந்தார் புத்தேல்ஹண்டின் அரசன் என்கிறது வரலாறு.
ஆனால் படத்தில் பாஜிராவின் உயிரைப் போர்களத்தில் காப்பாற்றுகிறாள் மஸ்தானி, அதனால் அவர்களுக்குள் காதல் உருவாகிறது. பாஜிராவ் தனது குறுவாள் ஒன்றை பரிசாகத் தருகிறான், அதை ஏற்றுக் கொள்கிறாள் மஸ்தானி
ராஜ்புத் வம்சத்தில் ஒரு வீரனின் வாளை ஒரு பெண் ஏற்றுக் கொண்டாலே திருமணம் ஆகிவிட்டது என அர்த்தம். அந்த விதத்தில் மஸ்தானி பாஜிராவின் மனைவி ஆகிவிடுகிறாள்
இதை அறியாமல் பாஜிராவ் அவளைப் பிரிந்து பூனே செல்கிறான். பாஜிராவின் மனைவி காஷிபாய் புதிய மாளிகை ஒன்றை கட்டியிருக்கிறாள். வெற்றிவீரனாக வரும் பாஜிராவை வரவேற்று விருந்தும் நடனமும் ஏற்பாடு செய்யப்படுகின்றன
அப்போது பரிசு பொருட்களுடன் பாஜிராவைத் தேடி பூனா வருகிறாள் மஸ்தானி.
பாஜிராவின் விழாவில் நடனமாடுகிறாள் மஸ்தானி. அவளை அந்தப்புரத்தில் ஆடும் பெண்களோடு தங்கவைத்து அவமதிக்கிறார்கள்.
காதலில் தன்னைத் தேடி வந்துள்ள மஸ்தானியை ஏற்றுக் கொள்கிறான் பாஜிராவ். ஆனால் அவனது அம்மா ராதாபாய் மஸ்தானி ஒரு முஸ்லீம் என்பதால் ஏற்க மறுக்கிறாள். அத்துடன் அவளை அவமானப்படுத்தி துரத்திவிட முயற்சிக்கிறாள்.
இதனால் ரகசியமாக மஸ்தானியை ஒரு மாளிகையில் தங்க வைக்கிறான் பாஜிராவ். தான் அவனது மனைவியாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை, காதலியாகவே இருந்துவிடுகிறேன் என்கிறாள் மஸ்தானி. அந்த நேசம் பாஜிராவை நெகிழச்செய்துவிடுகிறது,
இந்நிலையில் பாஜிராவின் மனைவி காஷிக்கு விஷயம் தெரிந்துவிடுகிறது. அவளிடம் தான் மஸ்தானியை கைவிடமுடியாது என பாஜிராவ் மறுக்கிறான். மஸ்தானிக்காக தனியாக மஸ்தானி மஹால் என்ற மாளிகை ஒன்றைக் கட்டுகிறான் பாஜிராவ். அங்கேயே அவளுடன் தங்கிக் கொண்டுவிடுகிறான்.
மஸ்தானி கர்ப்பிணியாகிறாள். இதே நேரம் பாஜிராவின் மனைவி காஷியும் இரண்டாம் முறையாக கர்ப்பிணியாகிறாள். இவருக்கும் ஆண் குழந்தை பிறக்கின்றன. இந்த குழந்தைகளுக்கு பெயர் சூட்டுவிழா நடத்த முயற்சிக்கிறான் பாஜிராவ்
மஸ்தானி அவனது கள்ளக்காதலி, அந்தக் குழந்தை முறைதவறிப்பிறந்த குழந்தை, அதற்கு கிருஷ்ணா என பெயர்சூட்ட முடியாது என பிராமணப் பண்டிதர்கள் மறுத்துவிடுகிறார்கள். ஆகவே அவனுக்கு சம்ஷேர் பகதூர் என பெயர் வைக்கிறான் பாஜிராவ்
காஷியின் மகனுக்கு ரகுனாத் என பெயர் சூட்டுகிறார்கள், பிறந்தநாள் விழா நடக்கிறது, அங்கே வரும் மஸ்தானி அவமானப்படுத்தபடுகிறாள். பெரும் யுத்தங்களை எதிர் கொண்டு வெற்றிபெற முடிந்த பாஜிராவினால் குடும்ப சண்டையில் வெற்றிபெற முடியவில்லை,
சகோதரன், மனைவி, அம்மா, உறவினர், பண்டிதர்கள் என யாவரும் எதிராக நிற்கிறார்கள்.
மஸ்தானியின் காதலியின் பொருட்டு எல்லோரையும் பகைத்துக் கொள்கிறான் பாஜிராவ். தன் மனைவிக்கு இடம் அளிக்காத ஊரில் பேஷ்வாக இருக்க விருப்பமின்றி பொறுப்புகளை தன் தம்பியிடம் கொடுத்துவிட்டு வெளியேறுகிறான் பாஜிராவ்
முடிவில் அவன் யுத்தகளத்திற்குச் சென்ற நேரம் மஸ்தானியைக் கைது செய்து சிறையில் அடைக்கிறார்கள். இதை அறிந்த பாஜிராவ் வெறிபிடித்தவன் போல சண்டையிடுகிறான். துயரமுடிவுடன் படம் நிறைவுபெறுகிறது.
பாஜிராவ் தனது நிர்வாகத்திலுள்ள ஊர்களைப் பார்வையிடச் சென்ற போது எதிர்பாராத காய்ச்சல் கண்டு இறந்துவிடுகிறான். அவன் இறந்த சேதி கேட்டு மஸ்தானி தீக்குளித்து இறந்துவிட்டாள் என வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. ஆனால் படத்திற்காக பன்சாலி தேவையான மாற்றங்களைச் செய்திருக்கிறார்.
படத்தில் பல இடங்களில் வசனங்கள் மிகுந்த கவித்துவமாக எழுதப்பட்டுள்ளன. திரையில் இப்படியான வசனங்களை கேட்பது அபூர்வம்
எது பாஜிராவைக் கொண்டாட வைக்கிறது. அவதார் போன்ற ஹாலிவுட் படங்களின் பிரம்மாண்டத்தைக் கண்டு நாம் வியந்து போய் திரையில் இப்படி எல்லாம் மாயங்களை நிகழ்த்தமுடியுமா என வியந்த போது இந்திய சினிமாவிலும் இது சாத்தியமே என பாஜிராவ் உருவாக்கபட்டுள்ளது.
சீன வரலாற்று திரைப்படங்களின் துல்லியம், மற்றும் கலை நேர்த்தியை காணும் போது ஏற்பட்ட வியப்பை பாஜிராவ் நிவர்த்தி செய்திருக்கிறது. அது போலவே பாடல்கள், சண்டைகாட்சிகள் இரண்டும் நம்மை உற்சாகம் கொள்ள வைக்கின்றன. இளைஞர்களில் பலர் அரங்கில் கைதட்டி கூடவே பாடுகிறார்கள். சஞ்சய் லீலா பன்சாலியே படத்திற்கு இசை அமைத்திருக்கிறார், Sanchit Balhara பின்ணணி இசை அமைத்திருக்கிறார்
பாடல்கள் படமாக்கபட்டுள்ள விதமும் சண்டைக்காட்சிகளும், இரவு விளக்கின் ஒளியில் கண்ணாடியில் தோன்றும் உருவங்களும் கண்ணாடி மாளிகையின் மாடங்களும், பண்டிதர்களின் பிரார்த்தனையும், மழையில் படகில் பயணிக்கும் காட்சியும், சத்ரபதி சாகுவின் அரண்மனைக்காட்சிகளும், போர்களக்காட்சிகளும், நிலாவை பார்த்தபடியே காஷி காத்திருப்பதும், இறுதிகாட்சியில் தண்ணீரில் வாளுடன் சண்டையிடும் காட்சியும், என ஒளிப்பதிவு நம்மை பிரமிக்க வைக்கிறது. அதற்கு நிகரானது கலை உருவாக்கம், சுஜித் சாவந்த், ஸ்ரீராம், சலோனி ஆகியோர் இணைந்து 21 செட்டுகளை உருவாக்கியிருக்கிறார்கள். அத்தனையும் பிரம்மாண்டமானவை
பாஜிராவாக சிறப்பாக நடித்திருக்கிறார் ரன்பீர் சிங். இவர் முன்னதாக பன்சாலியின் ராம்லீலாவில் நடித்தவர். ஆக்ரோஷமாகச் சண்டையிடுவதிலும் காதல் காட்சிகளிலும் சிறப்பாக செய்திருக்கிறார். ஆனால் சில உணர்ச்சிபூர்வமான தருணங்களில் இவரது நடிப்பு போதுமானதாகயில்லை.
தீபிகா படுகோனின் மிகச்சிறந்த படம் இதுவே, வெறும் கவர்ச்சிப்பதுமையாக மட்டுமே பல படங்களில் பயன்படுத்தப்பட்டவர் இதில் தனது நடிப்பின் முழுமையை வெளிப்படுத்தியிருக்கிறார், இதற்கு இணையாகச் சிறப்பாக நடித்திருக்கிறார் ப்ரியங்கா. இவர்கள் இருவரையும் விடவும் மிக இயல்பாக நடித்திருப்பவர் பாஜிராவின் அம்மாவாக வரும் தன்வி ஆஸ்மி. இவர் ஷபனா ஆஸ்மியின் சகோதரர் மனைவி. மராத்தி நடிகை, பாஜிராவின் அம்மா ராதா பாயாக நடித்துள்ளார்,
அவர் மஸ்தானியை வெறுப்பதில் காட்டும் முகபாவங்கள் அற்புதம். இயக்குனர் மகேஷ் மஞ்ச்ரேக்கர் சத்ரபதி சாகுவாக கம்பீரமாக நடித்திருக்கிறார்.
ஆயுதங்கள். நகைகள், உடை அலங்காரம் அத்தனையும் மராத்திய வரலாற்றுகுறிப்புகளிலிருந்தே உருவாக்கபட்டுள்ளன. கண்ணாடி மாளிகை கலை அமைப்பின் உச்சம் .ஒரே குறையாக நான் காண்பது சீனவிளக்குகள் மற்றும் சீன உடை அலங்காரங்கள் அதிகமும் பயன்படுத்தபட்டுள்ளது மட்டுமே.
பூனா திரைப்படக்கல்லூரியில் பயின்றவர் சஞ்சய் லீலா பன்சாலி. Khamoshi என்ற பன்சாலியின் முதற்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதுடன் நிறைய விருதுகளையும் பெற்றுள்ளது.
Hum Dil De Chuke Sanam படம் வணிகரீதிய பெரிய வெற்றியை பெற்றது. அதன்பிறகு புகழ்பெற்ற தேவதாஸ் கதையை ஷாரூக்கை வைத்து மறுஉருவாக்கம் செய்தார்
Saawariya Black, Guzaarish, Ram-Leela என மாறுபட்ட படங்களை இயக்கியவர் பன்சாலி. Saawariya தஸ்தாயெவ்ஸ்கியின் White Nightsயை மையமாக கொண்டது. இது போலவே ராம்லீலா ஷேக்ஸ்பியரின் ரோமியோ ஜுலியட்டை அடிப்படையாக கொண்டு உருவாக்கபட்டது. அவரது இயக்கத்தில் பாஜிராவ் மஸ்தானி ஒரு மைல்கல்.
படம் முடிந்தபிறகு அரங்கில் பார்வையாளர்கள் எழுந்து நின்று கைதட்டிப் பாராட்டுவதை நீண்ட நாட்களுக்குப் பிறகு கேட்டேன்.
Bajirao Mastani தவறவிடாமல் பார்க்க வேண்டிய படம்
.
No comments:
Post a Comment