Monday 31 August 2020

VISWESWARAIYA ,ENGINEER OF DAMS BORN 1861 SEPTEMBER 15 - 1962 APRIL 12





VISWESWARAIYA ,ENGINEER OF DAMS 
BORN 1861 SEPTEMBER 15 - 1962 APRIL 12

மோக்ஷகுண்டம் விஸ்வேஸ்வரையா

(பிறப்பு: 1861 செப். 15- மறைவு: 1962, ஏப். 12)
மோக்ஷகுண்டம்
விஸ்வேஸ்வரையாஅறிவியல் வளர்ச்சியின் பயன்பாட்டுத் துறை தான் பொறியியல். உலகின் நிலையை பகுத்து ஆராய்வது அறிவியல். அதனால் கிடைக்கும் கோட்பாடுகள், கண்டுபிடிப்புகளைப் பயன்படுத்தி, புதிய வடிவமைப்புகள், கட்டமைப்புகள், சமுதாய வளர்ச்சிக்கான கருவிகளை உருவாக்குவது பொறியியல்.இன்று உலகுக்கு அதிகமான பொறியாளர்களையும் தொழில்நுட்ப நிபுணர்களையும் அளிக்கும் நாடாக இந்தியா உள்ளது. இதற்கு அடிகோலியவர்களுள் ஒருவர், ‘முன்னுதாரணமான பொறியாளர்’ என்று போற்றப்படும் மோக்ஷகுண்டம் விஸ்வேஸ்வரையா.எடுத்துக்கொண்ட பணியில் சிரத்தை, காலநிர்வாகம், அர்ப்பணமயமான கடும் உழைப்பு ஆகியவற்றின் மொத்த உருவமாக விஸ்வேஸ்வரையா போற்றப்படுகிறார். பிரிட்டீஷ் இந்திய அரசு அவரை மிகவும் மதிக்கத்தக்க குடிமகனாகக் கொண்டாடியது.

கர்நாடக மாநிலம், சிக்கபல்லபூர் மாவட்டம், முத்தனஹல்லியில் 1861 செப். 15-இல் வசதியான ஸ்மார்த்த பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர் விஸ்வேஸ்வரையா. அவரது முன்னோர், ஆந்திர மாநிலம், மோக்ஷகுண்டம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள். பெங்களூரில் உயர்நிலைக் கல்வியை முடித்த பின், அங்குள்ள மத்தியக் கல்லூரியில் பி.ஏ. பயின்ற விஸ்வேஸ்வரையா, அடுத்து புனே பொறியியல் கல்லூரியில் கட்டுமானப் பொறியியலில் பி.இ. பட்டம் பெற்றார்.

அவரது முதல் அரசுப் பணி, மும்பை பொதுப்பணித் துறையில் உதவி செயற்பொறியாளராகத் துவங்கியது (1885). பிறகு இந்திய பாசன ஆணையப் பணியில் அவர் இணைந்தார். அப்போது தக்காணப் பீடபூமியில் தனித்துவமான பாசனத் திட்டங்களை உருவாக்கி பெயர் பெற்றார்.பிறகு நாசிக், சூரத், புனே, மும்பை ஆகிய பகுதிகளில் பல்வேறு உயர்நிலைகளில் பொறியாளராக அவர் பணியாற்றினார். அப்போது சீனா, ஜப்பான், எகிப்து, அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளுக்குச் சென்று கட்டுமானத் துறையின் வளர்ச்சிகளைக் கண்டுவந்து, அவற்றை நம் நாட்டில் நடைமுறைப்படுத்தினார்.

1903-இல் அவர் வடிவமைத்து உருவாக்கிய தானியங்கி வெள்ளமடை மதகு (Automatic weir water Floodgates) உள்நாட்டில் உருவாக்கப்பட்ட சிறந்த கண்டுபிடிப்பாகும். நீர்த்தேக்கங்களில் தண்ணீரின் அதிகபட்ச இருப்பையும் அணையின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் அந்த மதகுக்காக காப்புரிமையையும் (1903) விஸ்வேஸ்வரையா பெற்றார்.அந்த மதகு முதன்முதலாக புனே அருகிலுள்ள கடக்வஸ்லா நீர்த்தேக்கத்தில் நிறுவப்பட்டது. அதன் வெற்றிக்குப் பிறகு, டைக்ரா அணை, கிருஷ்ணராஜ சாகர் அணை உள்ளிட்ட பல நீர்த்தேக்கங்களில் அந்த மதகு பொருத்தப்பட்டது.

ஏமன் நாட்டின் ஏடன் நகருக்கு அரசால் 1906-07-இல் விஸ்வேஸ்வரையா அனுப்பப்பட்டார். அப்போது அங்கு அவர் ஆய்வு நடத்தி வடிவமைத்த, குடிநீர் விநியோகம்- சாக்கடை வடிகால் அமைப்பு, அந்நாட்டு அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டது.1909-இல் பிரிட்டீஷ் அரசுப் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்ற விஸ்வேஸ்வரையா, மைசூரு அரசின் தலைமைப் பொறியாளராகவும் செயலாளராகவும் இணைந்தார். 1913-இல் நான்காம் கிருஷ்ணராஜ உடையார் மன்னராக இருந்தபோது, மைசூரு திவானாகப் பொறுப்பேற்றார்.

1918 வரை அங்கு திவானாகப் பணியாற்றிய காலகட்டத்தில் மைசூரு நகரின் வளர்ச்சிக்கு பல திட்டங்களைச் செயல்படுத்தினார். பத்ராவதி எஃகு ஆலை, மைசூரு வேளாண்மை பல்கலைக்கழகம், கர்நாடகா சோப் நிறுவனம், மைசூரு வர்த்தகக் கழகம், சிவசமுத்திர நீர்வீழ்ச்சியில் மின்னுற்பத்தித் திட்டம், ஸ்டேட் பாங்க் ஆஃப் மைசூரு ஆகியவை விஸ்வேஸ்வரையாவின் முயற்சியால் அமைந்த நிறுவனங்கள்.அவரது திட்ட வரைவாலும், மேற்பார்வையிலும் உருவானதுதான் மாண்டியாவில் காவிரியின் குறுக்கே கட்டப்பட்ட கிருஷ்ணராஜ சாகர் நீர்த்தேக்கம். இந்த அணை மைசூரு பகுதியின் பாசனத்தில் பெரும் புரட்சியை உருவாக்கியது. இந்த அணையின் முன்புறம் நிறுவப்பட்டுள்ள பிருந்தாவன் தோட்டம் அழகிய பூங்கா ஆகும். இங்கு அமைக்கப்பட்டுள்ள, நீரின் சக்தியால் இயங்கும் பலவிதமான வண்ண நீரூற்றுகள் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக ஈர்க்கின்றன.

பெங்களூரில் அவர் துவங்கிய அரசு பொறியியல் கல்லூரி, தற்போது விஸ்வேஸ்வரையா பொறியியல் பல்கலைக்கழகமாக வளர்ந்துள்ளது. தனியார் பலர் அவரது ஊக்குவிப்பால் பல துறைகளில் புதிய நிறுவனங்களைத் துவக்கினார்கள். அவரது திட்டமிட்ட பணிகளால் மைசூரு அரசு பல முனைகளில் வளர்ச்சியுற்றது. எனவேதான் ‘நவீன மைசூரின் தந்தை’ என்று அவர் போற்றப்படுகிறார்.

விசாகப்பட்டினம் துறைமுகத்தை கடல் அரிப்பிலிருந்து காக்கும் வகையிலான கட்டுமான வடிவமைப்பை விஸ்வேஸ்வரையா அளித்தார். தவிர ஹைதராபாத் நகரை வெள்ளச் சேதத்திலிருந்து தடுக்கும் கட்டமைப்பையும் அவர் அளித்தார் (1908). திருப்பதியிலிருந்து ஏழு மலைகளைத் தாண்டி திருமலைக்குச் செல்லும் வகையில் அற்புதமான மலைப்பாதையையும் தார்ச்சாலையையும் விஸ்வேஸ்வரையா வடிவமைத்தார். இவை அவருக்கு பெரும் புகழைத் தந்தன.
விஸ்வேஸ்வரையாவின் அரும்பணிகளைக் கெüரவிக்கும் வகையில், 1911-இல் பிரிட்டீஷ் அரசு அவருக்கு சர் பட்டம் வழங்கியது. அன்றுமுதல் அவர் ‘சர். எம்.வி.’ என்று பிரபலமாக அழைக்கப்பட்டார்.

பல கெüரவ டாக்டர் பட்டங்களும், விருதுகளும் பெற்ற விஸ்வேஸ்வரையா, சர்வதேச கட்டுமானப் பொறியாளர் சங்கத்தின் கௌரவ உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். பெங்களூரு அறிவியல் கழகத்தின் ஃபெல்லோஷிப்பும் அவருக்கு வழங்கப்பட்டது. 1923-இல் கூடிய இந்திய அறிவியல் காங்கிரஸ் மாநாட்டின் தலைவராக விஸ்வேஸ்வரையா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்தியாவின் மீள் கட்டமைப்பு (1920), திட்டமிட்ட இந்தியப் பொருளாதாரம் (1934) ஆகிய நூல்களை அவர் எழுதியிருக்கிறார். அவரது பெயர் தாங்கி பல கல்வி நிறுவனங்கள் இயங்குகின்றன. அவரைப் பெருமைப்படுத்த பெங்களூரில் அனைத்திந்திய உற்பத்தியாளர் கூட்டமைப்பால் உருவாக்கப்பட்ட விஸ்வேஸ்வரையா பொறியியல், தொழில்நுட்ப அருங்காட்சியகம், ஒவ்வொரு மாணவரும் காண வேண்டிய அரிய பொக்கிஷமாகும்.

நாட்டின் பெருமைக்குரிய உயர் விருதான ‘பாரத ரத்னா ’ விஸ்வேஸ்வரையாவுக்கு 1955-இல் வழங்கப்பட்டது.
1962, ஏப். 12-இல் தனது 101 வயதில் அவர் மறைந்தார்.

இந்திய பொறியியல் வானில் துருவ நட்சத்திரமாக ஒளிரும் விஸ்வேஸ்வரையாவின் பிறந்த தினம், தேசிய பொறியாளர் தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.
.

No comments:

Post a Comment