Wednesday 4 April 2018

MARTIN LUTHER KING JR , AFRICAN - AMERICAN ACTIVIST SHOT DEAD 1968 APRIL 4



MARTIN LUTHER KING JR ,
AFRICAN - AMERICAN ACTIVIST 
SHOT DEAD 1968 APRIL 4



மார்டின் லூதர் கிங், இளையவர் (Martin Luther King, Jr.; ஜனவரி 15, 1929 - ஏப்ரல் 4, 1968)[1] ஐக்கிய அமெரிக்காவில் சமூக உரிமைக்காக போராடிய மாபெரும் ஆபிரிக்க-அமெரிக்கத் தலைவராவார். அமெரிக்க குருமார்களில் ஒருவர்; ஆர்வலர், மற்றும் ஆபிரிக்க அமெரிக்க மனித உரிமை இயக்கத்தில் தலைவராக இருந்தார். அவர் காந்தியவழியில் சிறந்த வன்முறையற்ற அறப்போராட்டத்தைப் பயன்படுத்தியவர். மார்ட்டின் லூதர் கிங் அமெரிக்க முற்போக்கு வரலாற்றில் ஒரு தேசிய சின்னமாகக் கருதப்படுகிறார்.[2]
பாப்திசுதப் போதகராக இருந்த கிங் தனது இளமைக்காலத்திலேயே சமூக உரிமைவாதியாக இனங்காணப்பட்டார். 1955 இல் மாண்ட்கோமரி பேருந்து புறக்கணிப்புப் போராட்டத்திற்குத் தலைமை தாங்கினார். 1955 இல் தெற்குக் கிழக்காசியத் தலைவர்கள் மாநாடு நிகழவும் உதவினார். அம்மாநாட்டின் முதல் தலைவராகவும் ஆனார். இவ்வமைப்பு கிங் தலைமையில் ஜார்ஜியாவில் அல்பேனி எனுமிடத்தில் 1957 இல் நிறப்பாகுபாட்டிற்கு எதிராக நடத்திய போராட்டம் தோல்வியடைந்தது. 1962 இல் அலபாமாவில் நடந்த வன்முறையற்ற வழியில் இவர் நடத்திய அறப்போராட்டம் பலரது கவனத்தை ஈர்த்ததுடன் தேசிய அளவில் புகழ்பெற்றது. கிங் 1963 இல் 'வேலையும் சுதந்திரமும் வேண்டி வாஷிங்டனுக்கு பேரணி' என்ற மிகப் பெரிய பேரணிக்கு ஏற்பாடு செய்தார். பெருமளவில் மக்கள் திரண்டனர்.
இங்குதான் அவர் தனது புகழ்பெற்ற 'எனக்கொரு கனவு' என்ற புகழ்பெற்ற சொற்பொழிவினை ஆற்றினார். அமெரிக்க வரலாற்றில் இது ஒரு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதன் பிறகு அமெரிக்க உளவுதுறை (FBI)இவரைக் கண்காணித்து அரசுக்கு தகவல்களை அனுப்பத் தொடங்கியது. மேலும் தற்கொலை செய்து கொள்ளுமாறு ஒரு அநாமதேய மிரட்டல் கடிதமும் விடுத்தது. அடுத்த ஆண்டு அதாவது அக்டோபர் 14, 1964 ஆம் ஆண்டில் வன்முறையற்ற வகையில் நிறவெறிக்கெதிராக பாடுபட்டதற்காக மார்ட்டின் லூதர் கிங்குக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இவர் 1968 ஏப்ரல் 4 ஆம் நாள் டென்னசி மாநிலத்தில் மெம்ஃபிஸ் நகரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இளமை

King's high school alma mater was named after African-American scholar Booker T. Washington

மார்ட்டின் லூதர் கிங் 1929, ஜனவரி 15 ஆம் நாள் அமெரிக்காவில் அட்லாண்டா நகரில் பிறந்தார். இவருடைய தந்தை மார்ட்டின் லூதர் தாயார் அல்பெர்டா ஆவார்.[3] இவருடைய சட்டப்படியான பிறப்புப் பெயர் மைக்கேல் கிங் என்பதாகும்.[4] இவருடைய தந்தையின் பெயரும் மைக்கேல் கிங் என்பதே ஆகும். ஆனால் 1934 செருமனியில் பெர்லின் நகரில் ஐந்தாம் பாப்திச உலக மாநாடுக்குச் சென்றிருந்த கிங்கின் தந்தை இருவருடைய பெயரையும் ஜெர்மனியில் அப்போது புகழ்பெற்றிருந்த சீர்திருத்தவாதி மார்ட்டின் லூதர் என்பவருடைய பெயரை இருவருடையதாகவும் மாற்றிக் கொண்டார்.[5]

மார்ட்டின் லுதர் கிங் இளையவருக்கு சகோதரிகள் இருவரும் ஒரு சகோதரனும் இருந்தனர். கிறித்துவக் கோவில்களில் பாடல்களைப் பாடிக்கொண்டிருந்த கிங் ' கோன் வித் அ விண்ட் என்ற திரைப்படத்திலும் பாடியுள்ளார்.[6]


கல்வி
தொடக்கத்தில் மார்ட்டின் லூதர் கிங் கிறித்துவம் குறித்து ஐயம் கொண்டார்.[7] தனது பதின்மூன்றாம் வயதில் அவருக்குக் கிறித்துவத்தின் கொள்கைகள் பலவற்றில் ஐயம் ஏற்பட்டது. எனவே அதனை ஏற்க மறுத்தார். பின்னர் பைபிளை ஆய்ந்து அதில் கூறப்பட்டுள்ள கருத்துகளின் ஆழமான உண்மைகளிலிருந்து ஒருவரும் தப்பமுடியாது என்ற முடிவுக்கு வந்தார்.[7] அதன்பிறகு ஒரு தீவிர பாப்திச பாதிரியாரானார். அட்லாண்டாவில் புக்கர் டி. வாஷிங்டன் உயர்நிலைப்பள்ளியில் தனது தொடக்கக் கல்வியைப் பயின்றார். கல்வியில் மீத்திறன் மிக்க கிங் ஒன்பது மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலாமல் அடுத்த வகுப்புக்கு முன்னேற்றப்பட்டு மோர்ஹவுஸ் கல்லூரியில் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.[8] 1948 இல் அக்கல்லூரியில் தனது சமூகவியல் இளங்கலைப் பட்டம் பெற்று 1951 இல் பென்சில்வேனியாவில் சமயக் கல்விக்கான பட்டத்தையும் பெற்றார்.[9][10]

மார்ட்டின் லூதர் கிங் கொரெட்டா ஸ்காட் கிங் என்ற பெண்ணை ஜூன் 18, 1953 இல் மணந்துகொண்டார்.[11] இவ்விணையருக்கு யோலண்டா கிங், மார்ட்டின் லூதர்கிங் III, டெக்ஸ்டெர் ஸ்காட் கிங் மற்றும் பெர்னிஸ் கிங் என்ற நான்கு குழந்தைகள் பிறந்தனர்.[12] பின்னாளில் கொரெட்டா ஸ்காட் கிங், 2004 ஆம் ஆண்டிற்கான காந்தி அமைதி பரிசு பெற்றார்.


மார்டின் லூதர் கிங் மனைவி மற்றும் குழந்தையுடன்
கிங் தனது 25 ஆம் வயதில் அலபாமாவில் உள்ள ஓர் கிறித்துவ மடத்தில் பாதிரியாராகத் தனது பணியைத் தொடங்கினார்.[13] அதன் பிறகு 1955 ஜூன் 5 ஆம் தேதி பாஸ்டன் பல்கலைக் கழகத்தில் இணைந்து சமயக் கல்வியில் முனைவர் பட்டம் பெற்றார். முனைவர் பட்ட ஆய்வுக்காக கிங் சமர்ப்பித்த ஆய்வேட்டின் பகுதிகள் களவாடப்பட்டது என்று 1991 அக்டோபரில் விசாரணைக்குட்படுத்தி முடிவு செய்யப்பட்டது. ஆனால் கிங்கின் ஆய்வேடு ஒரு சிறந்த பங்களிப்பு எனக் கூறி அவருக்கு அளித்த பட்டத்தைத் திரும்பப் பெற பல்கலைக் கழகம் மறுத்துவிட்டது.[14]

கொள்கைகள்
மதம்


கிறித்துவ போதகராக இறைப்பணியைச் சிறப்பாக மேற்கொண்டவர் மார்ட்டின் லூதர் கிங். இதில் அவருக்கென ஒரு தனிச் செல்வாக்கு இருந்தது. கிங் எப்போதும் தேவாலயத்தில் நடைபெறும் மதக்கூட்டங்கள் மற்றும் உரைகளில் கிறிதுவர்களுக்கான நற்செய்திகளைச் சொல்வார். ஆனால் பொதுக் கூட்டங்களில் கிறித்துவத்தின் பொன்விதியான ' உன் அண்டை அயலாரையும் உன்னைப் போல் நேசி' என்ற கொள்கையின் அடிப்படையிலேயே அவர் ஆற்றும் சொற்பொழிவுகள் அமைந்தன. அனைவருக்கும் அன்பு காட்டு; பகைவனையும் நேசி; அவர்களுக்காக வேண்டுதல் செய்; அவர்களையும் ஆசிர்வதி; என்பனவற்றையும் போதிப்பதாக இருந்தது. இயேசுவின் மலைச் சொற்பொழிவில் இயேசு ஆற்றிய 'ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தையும் காட்டு' என்ற கொள்கை அடிப்படையிலும் 'உங்களுடைய வாளை அதற்குரிய உரையில் திரும்ப வையுங்கள்'என்பதன் அடிப்படையிலும் இவருடைய வன்முறையற்ற அறக்கருத்துகள் இருந்தன. (Matthew 26:52).[15]

அறப்போராட்டம்


வாஷிங்டன் டி.சியில் கிங் சிவில் உரிமை மார்ச்சில் இருந்த காட்சி
காந்தியடிகளின் அறப்போராட்ட வழியில் ஈர்க்கப்பட்ட மார்ட்டின் லூதர் கிங் அறவழியில் போராடுவதைப் பற்றி அறிந்துகொள்ள நீண்டகாலமாக நினைத்திருந்தார். 1959-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அமெரிக்க சேவை நண்பர்கள் குழு என்ற குழுவினருடன் இந்தியாவுக்கு வந்தார்.[16][17] இந்த இந்தியப் பயணம் மார்ட்டின் லூதரை மிகவும் ஆழமாகப் பாதித்தது. வன்முறையற்ற எதிர்ப்பின் மூலம் அமெரிக்கக்
குடியுரிமைகளின் நலனுக்கான தனது போராட்டத்தை அர்ப்பணிக்க வேண்டும் என்ற புரிதல் இங்கு ஏற்பட்டது. இந்தியாவில் இருந்தபோது தனது கடைசி மாலைப் பொழுதில் ஒரு வானொலி உரையின் போது இந்தியா வந்து நேரில் பார்த்த பிறகு முன்னெப்போதையும் விட வன்முறையற்ற எதிர்ப்பு என்பதை நான் நன்கு அறிந்துகொண்டேன். அறப்போராட்டம் என்பது ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் கிடைத்துள்ள ஒரு வலிமையான ஆயுதமாகும். நீதி மற்றும் கண்ணியமான போராட்டத்திற்குப் பொருள்தரக் கூடியதாகும். எனக் குறிப்பிட்டுள்ளார். காந்தியின் சில தார்மீக அடிப்படையிலான இக்கொள்கைகள் மார்ட்டின் லூதர் கிங்கின் சில கொள்கைகளில் தாக்கத்தை ஏற்படுத்தின எனலாம்.[18],

காந்தியும் கூட கிறித்துவ எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய் எழுதிய கடவுளின் அரசாங்கம் உங்களுடன் இருக்கிறது(The Kingdom of God Is Within You) என்ற நூலில் கூறப்பட்ட வன்முறையற்ற எதிர்ப்பு என்ற கருத்துக்களால் ஈர்க்கப்பட்டார். இதையொட்டியே மார்ட்டின் லூதர் கிங்கும் டால்ஸ்டாயின் நூல்களை வாசித்தார். கிங் 1959 இல் டால்ஸ்டாயின் 'போரும் அமைதியும்' என்ற நூலை மார்ட்டின் கிங் மேற்கோள் காட்டியுள்ளார்.[19] டால்ஸ்டாய், காந்தி, மார்ட்டின் லூதர் கிங் ஆகிய மூவருமே இயேசுவின் வன்முறையற்ற எதிர்ப்பு என்ற ஆயுதத்தைக் கைக்கொண்டனர்.

ஆப்பிரிக்க அமெரிக்க மனித உரிமை ஆர்வலரான பேயர்டு ரஸ்டின் என்பவர் மார்ட்டின் லூதர் கிங்குக்கு ஆலோசகராக இருந்தார். அவர் படித்த காந்தியின் போதனைகள்[20] மற்றும் இயேசுவின் போதனைகளான அறப்போராட்டம் என்ற வன்முறையற்ற கொள்கைகளில் தன்னை முழுதுமாக அர்ப்பணித்துக் கொள்ள கிங்குக்கு ஆலோசனைகள் வழங்கினார்.[21] மார்ட்டினின் செயல்பாடுகளில் அவர் கிங்குக்கு ஒரு முக்கிய ஆலோசகராகவும் அறிவுரையாளராகவும் பணியாற்றினார்.[22] 1963 இல் வாசிங்டன் பேரணியில் ரஸ்டின் முக்கிய அமைப்பாளராகவும் இருந்தார்.[23] ஆனால் ரஸ்டினுடைய வெளிப்படையான ஓரினச் சேர்க்கை விவகாரங்கள், ஜனநாயக சோசலிசத்தை ஆதரித்தல், அமெரிக்கக் கம்யூனிட் கட்சியுடனான உறவுகள் ஆகியவற்றால், சில வெள்ளையர்களும் ஆப்பிரிக்க-அமெரிக்கத் தலைவர்களும் கிங்கிடம் ரஸ்டினை தன்னை விட்டு விலக்கி வைக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர்.[24] கிங் இதனைச் செய்வதாக ஏற்றுக்கொண்டார்.[25]


மார்ட்டின் கிங்கின் அறப்போராட்டாத்தில் தான் மாணவனாக இருந்த போது படித்த தோரியாவ் என்பவரின் அநீதிகளுக்கெதிராக போராடும் 'சட்ட மறுப்பு' என்ற கொள்கைகளும் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தின.[26] மேலும் புரோட்ஸ்டண்ட் தத்துவவாதிகளான ரீன்ஹோல்ட்,பால் டில்லிக் ஆகியோரின் கருத்துகள்[27] மற்றும் வால்ட்டர் ராசென்புஷ் என்பவருடைய 'கிறித்துவமும் சமூக நெருக்கடியும்' என்ற நூலும் கிங்கின் கொள்கைகளில் தாக்கத்தை ஏற்படுத்தின எனலாம்.

மார்ட்டின் லூதர் கிங் தானாக வகுத்துக் கொண்ட அறவழிப் போராட்டக் கொள்கைகளில் காந்தியின் கொள்கைகளை விட நீல்பர் மற்றும் டில்லிக் ஆகியோரின் கருத்துகள் அதிக செல்வாக்கு செலுத்தின.[28] மேலும் இவருடைய பின்னாட்களில் பயன்படுத்திய 'கிறித்துவ சகோதரத்துவம்' என்ற கொள்கை பால் ராம்சே என்பவருடைய தாக்கத்தால் ஏற்பட்டதாகும்.[29]

படுகொலை
மார்ட்டின் லூதர் கிங்கினுடைய போராட்டத்தின் பலனாக 1965-ஆம் ஆண்டு கருப்பினத்தவர்களுக்கு ஓட்டுரிமை அளித்தது அமெரிக்க அரசாங்கம். அதனைத் தொடர்ந்து கருப்பினத்தவர்களும், வெள்ளையினத்தவர்களும் சமம் என்பதைப் பிரகடணப்படுத்தும் மனித உரிமைச் சட்டத்தை அமெரிக்கா நிறைவேற்றியது.
கருப்பினத்தவர்களுக்குச் சம உரிமை பெற்றுத்தரும் இயக்கத்தில் கருப்பினத்தவர்கள் மட்டுமே இடம்பெற்றால் பலன் இருக்காது என்று நம்பிய மார்ர்டின் லூதர் கிங் மற்ற இனத்தவரையும் தனது இயக்கத்தில் சேர்த்துக்கொண்டார். அனைவருடைய மனங்களும் மாறினால்தான் சம உரிமைக்கு வாய்ப்பு உண்டு என்று அவர் நம்பினார். இது குறித்து இன ஒதுக்கல் ஆதரவாளர்கள் ஆத்திரம் அடைந்தனர்.

டென்னசியில் 1968-ஆம் ஆண்டு ஏப்ரம் 4-ஆம் நாள் மாலை சொற்பொழிவிற்காக ஒரு விடுதியில் தங்கியிருந்தபொழுது ஒரு வெள்ளையினத் தீவிரவாதி லூதர் கிங்கை துப்பாக்கியால் சுட்டான்.[30] அந்த இடத்திலேயே அவர் உயிர் பிரிந்தது அப்போது அவருக்கு வயது 39. மார்ட்டின் லூதர் கிங்கின் மறைவிற்கு உலகமே கண்ணீர் அஞ்சலி செலுத்தியது.[31][32] அவரை கருப்பு காந்தி என்றும் அழைத்தது. மார்ட்டின் லூதர் கிங் நினைவாக அமெரிக்காவில் ஜனவரி மாதத்தின் மூன்றாவது திங்கட்கிழமை 'மார்ட்டின் லூதர் கிங் தினம்' என்று அனுசரிக்கப்பட்டு[33] அன்று அமெரிக்கா முழுவதும் விடுமுறை நாளாகக் கடைபிடிக்கப்படுகிறது.[34]







மார்ட்டின் லூதர் கிங்: ஒரு சமத்துவக் கனவு


1929-ம் ஆண்டு, ஜனவரி 15-ம் தேதி பிறந்த அந்தக் குழந்தைக்கு ஆரம்பத்தில் வைக்கப்பட்ட பெயர் மைக்கேல் லூதர் கிங். புராட்டெஸ்டாண்டு புரட்சியாளர் மார்ட்டின் லூதர் கிங்கின் மேல் கொண்ட பற்றின் காரணமாக அந்தக் குழந்தையின் தந்தை மார்ட்டின் லூதர் கிங் என்ற பெயரைப் பிற்பாடு தனது பிள்ளைக்கு வைத்தார். முன்னவருடன் வேறுபடுத்தி அடையாளம் காண்பதற்காக மார்ட்டின் லூதர் கிங் (ஜூனியர்) என்று பின்னாளில் அழைக்கப்பட்டது அந்தக் குழந்தை.

தனது தந்தை பாதிரியாராக இருந்த திருச்சபையிலேயே கிங்கும் 1947-ல் சேர்ந்தார். இந்தத் திருச்சபையில்தான் சில ஆண்டுகள் கழித்துக் கீழ்க்கண்டவாறு அவர் முழங்கினார்:

“அமெரிக்காவே, நீ இலக்கற்றுப் போய்விட்டாய். உனது சகோதரர்கள் 1.9 கோடிப் பேரை மிதித்துவிட்டுச் சென்றுகொண்டிருக்கிறாய். ஏதோ சில மனிதர்கள் மட்டும், ஏதோ சில வெள்ளையர்கள் மட்டுமல்ல, எல்லா மனிதர்களும் சமமாகவே படைக்கப்பட்டிருக்கிறார்கள். எழுந்திரு அமெரிக்கா, உனது இலக்குக்குத் திரும்பிவா.”

அனைவருக்கும் நாயகன்


கிங், கருப்பின மக்களுக்காகப் போராடியவர் என்றாலும், அவரது இறுதி இலக்கு, சகோதரத்துவம், சமத்துவம், சமாதானம் ஆகியவை நிறைந்த உலகுதான். அந்த உலகில் கருப்பினத்தவர் இருப்பார்கள், வெள்ளை யினத்தவர் இருப்பார்கள். ஆனால், பாகுபாடுகள் என்பது இருக்காது. போர் இருக்காது. அன்பின் வெளிச்சத்தில் ஒவ்வொரு நாளும் விடியும்.

அவர் போராட்டக் களத்தில் இறங்கிய காலகட்டத்தில் தான் ஆப்பிரிக்க நாடுகள் பலவும் ஏகாதிபத்தியத் தளை களிலிருந்து விடுபட்டுக்கொண்டிருந்தன. ஏகாதிபத்திய தளைகளிலிருந்து விடுபட்டாலும் இனவெறி நீடிக்கத்தான் செய்தது. அந்த நேரத்தில் கிங்கின் பிரவேசமும் ஆளுமையும் மற்ற நாட்டுக் கருப்பினத்தவரையும் வசீகரித்தன. கருப்பின மக்களின் அகிம்சைப் போராட்டத்தில் மார்ட்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலா போன்ற நாயகர்கள் கிடைத்தது மிகப் பெரிய உத்வேகமாக அந்த மக்களுக்கு அமைந்தது.

எதிரெதிர் நிலைகளுக்கு நடுவே…

அகிம்சைக்குத் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட கிங் வெள்ளையின வெறியாளர்களுக்கும் கருப்பினத் தீவிர நிலையாளர்களுக்கும் நடுவே அகப்பட்டுக்கொண்டார்.


1968-ம் ஆண்டு, ஏப்ரல் 4-ம் தேதி அவர் சுட்டுக் கொல்லப் படுவதற்குச் சில நாட்கள் முன்பு மக்கள் திரளிடையே அவர் உரையாற்றியபோது இப்படிச் சொன்னார்:

“கலவரங்களில் ஈடுபடுவதற்கும் கோழைத்தனமான அடிபணிதலுக்கும் மாற்றாக ஒரு வழிமுறை நமக்குத் தேவை. அகிம்சைதான் நமது வலுவான ஆயுதம்.”

1966 வாக்கில் மிஸ்ஸிஸிப்பி மாகாணத்தில் நடந்த உரிமைப் போராட்டங்களுக்கும் வடக்குப் பகுதி நகரங் களில் நடந்த இனக் கலவரங்களுக்கும் பிறகு, சில கருப்பினக் குழுக்கள் ‘கருப்பர்கள் அதிகாரம்’ என்ற முழக்கத்தை முன்வைத்தன. ஆனால், கிங் அதை மறுத்தார்:

“கருப்பினத்தவர் தங்கள் அச்சங்களிலிருந்து விடுபட வெள்ளையினத்தவரின் உதவி தேவை. அதேபோல் வெள்ளையினத்தவர் தமது குற்றவுணர்விலிருந்து விடுபட கருப்பினத்தவரின் உதவி தேவை. கருப்பர் ஆதிபத்தியம் என்ற கொள்கை வெள்ளை ஆதிபத்தியத்தைப் போன்றே தீங்கானது.”

எனக்கொரு கனவு…

அவரது நம்பிக்கையின் அடிநாதமாக இருந்தது மனிதர்களின் நற்குணத்தின் மீது அவர் கொண்ட ஆழமான நம்பிக்கைதான். 1963-ல் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட கருப்பின மக்கள் வாஷிங்டனில் அணிவகுத்தபோது கிங் ஆற்றிய உரையைத் தொலைக்காட்சியில் பார்த்த கோடிக் கணக்கான அமெரிக்கர்கள் – வெள்ளையர் உட்பட- மிகவும் நெகிழ்ந்துபோனார்கள்.

உலகையே கட்டிப்போட்ட அந்த உரையின் சில பகுதிகள்:

எனக்கொரு கனவு இருக்கிறது… எல்லா மனிதர்களும் சமமாகவே படைக்கப்பட்டார்கள் என்ற தனது நம்பிக்கைக்கு ஏற்ப ஒருநாள் இந்த தேசம் எழுச்சி பெறும், அந்த நம்பிக்கையின்படி இந்த தேசம் செயலாற்றும் என்று எனக்கொரு கனவு இருக்கிறது.



எனக்கொரு கனவு இருக்கிறது… எனது நான்கு குட்டிக் குழந்தைகளும் தோல் நிறத்தால் அல்லாமல் அவர்களுடைய குணத்தால் மட்டுமே மதிப்பிடப்படக்கூடிய ஒரு தேசத்தில் வாழ்வார்கள் என்று எனக்கொரு கனவு இருக்கிறது.



எனக்கொரு கனவு இருக்கிறது… அலபாமா மாகாணத் தின் கருப்பினச் சிறுவர், சிறுமிகள் வெள்ளையினச் சிறுவர் சிறுமியரோடு சகோதர சகோதரியராகக் கைகோத்துக் கொள்வார்கள் என்று எனக்கொரு கனவு இருக்கிறது.



இந்த நம்பிக்கையோடு, நமது தேசத்தில் அபஸ்வரமாக ஒலிக்கும் ஓசையையெல்லாம் சகோதரத்துவத்தின் இனிய சிம்ஃபொனியாக நம்மால் மாற்ற முடியும். இந்த நம்பிக்கை யோடு, ஒருநாள் நாமெல்லாம் சுதந்திரமானவர்களாக ஆவோம் என்ற உணர்வோடு, நாமெல்லாம் ஒன்றாகச் சேர்ந்து உழைக்கவும், ஒன்றாகப் பிரார்த்திக்கவும், ஒன்றாகப் போராடவும், ஒன்றாகச் சிறை செல்லவும், சுதந் திரத்துக்காக ஒன்றாகத் தோள்கொடுக்கவும் முடியும்.”

நிராயுதபாணியான உண்மை

1964, டிசம்பர் 10 அன்று சமாதானத்துக்கான நோபல் பரிசைப் பெற்றுக்கொள்ளும்போது கிங்கின் ஏற்புரை உலகம் என்றுமே நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய ஒன்று:

“இனவெறி, போர் ஆகியவற்றின் விண்மீன்களற்ற நள்ளிரவுதான் துரதிர்ஷ்டவசமாக மனிதனுக்கு விதிக்கப பட்டது என்றும் சமாதானத்தின், சகோதரத்துவத்தின் விடியல் என்பது ஒருபோதும் வரவே வராது என்றும் சொல்வதை யெல்லாம் என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாது.”

மேலும் சொல்கிறார்…

“நிராயுதபாணியான உண்மை, நிபந்தனையற்ற அன்பு ஆகியவற்றின்படிதான் வாழ்க்கை அமையும் என்று நான் நம்புகிறேன். தற்காலிகமாகத் தோற்கடிக்கப்படும் நியாயம், தீமையான வெற்றியைவிட உறுதியானது என்று நான் நம்புவது இதனால்தான்.”

வெவ்வேறு வகை மக்களிடம் வெவ்வேறு விதத்தில் அவர் பேசினார். அமெரிக்க வெள்ளையின மிதவாதிகளிடம் பேசிய விதம், வெள்ளையின வெறியாளர்களிடம் பேசிய விதம், உலக மக்களிடம் பேசிய விதம், தனது இனத்துப் புரட்சிகர இளைஞர்களிடம் பேசிய விதம், படிப்பறிவற்ற ஏழை எளிய கருப்பின மக்களிடம் பேசிய விதம் ஒவ்வொன்றும் தனித்துவம் மிக்கவை.

1963-ல் கருப்பின ஏழை எளியவர்களிடம் இப்படி உரையாற்றுகிறார்:

கிங்: உங்களை அவர்கள் அடிக்கிறார்கள் என்று கேள்விப்படுகிறேன்.

கூட்டத்தினர்: ஆமாம், ஆமாம்.

கிங்: உங்களை அவர்கள் இழிவாக வசைபாடுகிறார்கள் என்றும் கேள்விப்படுகிறேன்.

கூட்டத்தினர்: ஆமாம், ஆமாம்.

கிங்: உங்கள் வீடுகளில் புகுந்து மோசமான செயல்களில் ஈடுபடுவதுடன் அவர்கள் உங்களைத் தாக்குகிறார்கள் என்றும் கேள்விப்படுகிறேன்.

கூட்டத்தினர்: ஆமாம், ஆமாம்.

கிங்: உங்களில் சிலர் கத்தி வைத்திருக்கலாம். உங்களில் சிலர் ஆயுதங்கள் வைத்திருக்கலாம். அவற்றை அவற்றுக்கு உரிய இடத்திலேயே வைத்துவிடும்படி உங்களுக்கு நான் சொல்கிறேன். அகிம்சை என்ற ஆயுதத்தைக் கையில் எடுத்துக்கொள்ளுங்கள், தர்மத்தின் மார்புக் கவசத்தை அணிந்துகொள்ளுங்கள், உண்மையின் கேடயத்தை எடுத்துக் கொள்ளுங்கள், நிற்காமல் போய்க்கொண்டே இருங்கள்.”

சோதனைக் களம்

பேருந்துகளில் கருப்பினத்தவர் பாரபட்சமாக நடத்தப்படுவதைக் கண்டித்து மாண்ட்கமரி நகரத்தில் பேருந்துகளைப் புறக்கணிக்கும் போராட்டத்தில் அந்த மக்கள் ஈடுபட்டனர். அந்த 381 நாள் போராட்டத்தை இளம் பாதிரியார் கிங் தலைமையேற்று நடத்திக்கொண்டிருந்தார். தனது ஆசான்களான தோரோ, காந்தி ஆகியோரின் ஒத்துழையாமைக் கருத்துகளைப் பரீட்சித்துப் பார்ப்பதற்கான களமாக அந்தப் போராட்டத்தை கிங் மாற்றினார். கைதுசெய்யப்படும்போது அவர் கூறியது:

“அன்பெனும் ஆயுதத்தைத்தான் நாம் பயன்படுத்த வேண்டும். நம்மை வெறுப்பவர்கள் மீது கருணையும் புரிந்துணர்வும் கொள்ள வேண்டும் நாம். நம்மை வெறுக்கும்படி பலருக்கும் கற்பிக்கப்பட்டிருப்பதால் அவர்களுடைய வெறுப்புக்கு அவர்கள் முழுக் காரணம் இல்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.”

மரணம்தான் விலையென்றால்…

என்றாவது ஒருநாள், தான் கொல்லப்படுவேன் என்று அவருக்குத் தெரியும். தன் படுகொலையைப் பற்றி முன்கூட்டியே அவர் இப்படிச் சொல்கிறார்:


“என்னுடைய வெள்ளையினச் சகோதர, சகோதரிகளை ஆன்மரீதியிலான மரணத்திலிருந்து காப்பாற்று வதற்கு என்னுடைய உடல்ரீதியிலான மரணம்தான் விலையென்றால், அதைவிட வேறு எந்தவித மீட்சியும் சிறப்பாக இருக்காது.”






‘எனக்கொரு கனவு உண்டு’ (I have a dream) உரையின் பொன் விழா

1963ம் ஆண்டு ஆகஸ்ட் 28ம் தேதி, 2,50,000க்கும் அதிகமானோர் பங்கேற்ற ஓர் ஊர்வலம், அமெரிக்க ஐக்கிய நாட்டின் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.
கறுப்பின மக்களும், அவகளது விடுதலையை வரவேற்ற வேற்றின மக்களும் இணைந்து, மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியர் அவர்களின் தலைமையில் மேற்கொண்ட இந்த ஊர்வலத்தின் பொன் விழா ஆண்டு இது.
இந்த ஊர்வலத்தின் இறுதியில், அமெரிக்கக் குடியுரிமை இயக்கத்தின் தலைசிறந்த தலைவர்களில் ஒருவரான மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியர், வாஷிங்க்டன் மாநகரில், லிங்கன் நினைவுத்திடலில் (Lincoln Memorial) வழங்கிய 'எனக்கு ஒரு கனவு உண்டு' (I have a dream) என்ற உரை, உலகப் புகழ்பெற்ற உரைகளில் ஒன்றாக இன்றளவும் விளங்குகிறது. புகழ்பெற்ற இவ்வுரையின் பொன்விழா நாளன்று, இவ்வுரையின் ஒரு பகுதியை மீண்டும் நம் சிந்தனைகளில் ஒலிக்கச் செய்வோம்:
எனக்கொரு கனவு உண்டு. அமெரிக்கக் கனவில் வேரூன்றிய ஒரு கனவு இது.
"எல்லா மனிதரும் சமமாகப் படைக்கப்பட்டனர் என்பது நமக்கு மிகவும் தெளிவாகத் தெரியும் ஓர் உண்மை" என்று இந்நாடு உலகிற்குப் பறைசாற்றியுள்ள உறுதிமொழியை, ஒருநாள் முழுவதும் வாழும் என்ற கனவு எனக்கு உண்டு.
முன்னாள் அடிமைகளின் பிள்ளைகளும், முன்னாள் அடிமை முதலாளிகளின் பிள்ளைகளும் ஜார்ஜியாவின் சிவந்த குன்றுகளில் ஒருநாள் சரிசமமாய் அமர்ந்து விருந்துண்பர் என்ற கனவு எனக்கு உண்டு.
அடக்குமுறை வெப்பத்தில் இன்னும் வெந்துகொண்டிருக்கும் மிசிசிபி மாநிலம் என்ற பாலைவனம், நீதியும், அமைதியும் கொண்ட சோலையாக ஒருநாள் மாறும் என்ற கனவு எனக்கு உண்டு.
தங்கள் தோல் நிறத்தைக் கொண்டல்ல, மாறாக தங்கள் குணநலன்களைக் கொண்டு மக்களை எடைபோடும் ஒரு நாட்டில் என்னுடைய நான்கு குழந்தைகளும் ஒருநாள் வாழ்வார்கள் என்ற கனவு எனக்கு உண்டு.

ஒவ்வொரு பள்ளத்தாக்கும் உயர்த்தப்படும், ஒவ்வொரு மலையும், குன்றும் தாழ்த்தப்படும், கரடு முரடான பகுதிகள் சம நிலமாக்கப்படும், கோணலான பாதைகள் நேராக்கப்படும் இறைவனின் மகிமை தெளிவாகும், இதை அனைவரும் ஒருசேரக் காண்பர். எனக்கொரு கனவு உண்டு..



No comments:

Post a Comment