Tuesday 24 April 2018

OOTY, QUEEN OF MOUNTAIN










OOTY, QUEEN OF MOUNTAIN

 





உ மா மிஸ் வீட்டுக்குப் போய் ஊட்டி சாக்லெட்டுகளை கொடுத்தபோது, மகிழ்ச்சியோடு வாங்கிக்கொண்டார். மிஸ்ஸுக்கு சாக்லெட் பிடிக்கும் என்பது தெரியாமல் போய்விட்டது. அவருக்கென்றே இன்னும் நிறைய வாங்கி வந்திருப்பேன்.
“எத்தனை நாள் ஊட்டியிலே இருந்தே?”
“அஞ்சு நாள் இருந்தோம் மிஸ். ஊரே பிரிட்ஜுக்குள்ள இருக்கிறா மாதிரி இருக்கு. அங்கே வாழறவங்க கொடுத்துவெச்சவங்க மிஸ்.”
“இந்த சாக்லெட் எங்கே வாங்கினே? என்னவெல்லாம் பார்த்தே?”
இதைக் கேட்கமாட்டார்களா என்றுதானே காத்துக்கொண்டிருந்தேன். உடனே விலாவாரியாக விளக்கத் தொடங்கினேன். முதலில் ஊட்டியிலுள்ள தேயிலை தொழிற்சாலைக்குப் போனது, சுற்றிப் பார்த்தது, ஒவ்வொரு அடியாக முன்னேறி, கடைசியில் நான்கைந்து பாக்கெட்டுகள் டீ தூள் வாங்கியது, வெளியே வந்தால், யூகலிப்டஸ் ஆயில், ஆல்மண்ட் ஆயில் என்று எண்ணெய் வகைகளைப் பார்த்தது, வாங்கியது…. 


இன்னொரு நாள் ஊட்டி மலர்க் கண்காட்சி. அப்பப்பா… எவ்வளவு மலர்கள், எவ்வளவு பெரிய தோட்டம், எவ்வளவு வாசனை, எவ்வளவு பசுமை. நடக்கநடக்க கால்வலிதான் அதிகமானது. ஆனால், குதூகலத்தில் கால்வலி தெரியவே இல்லை.
ஓட்டல்களில் வரிசையில் நின்றது இன்னொரு அனுபவம். மக்கள் கூட்டத்தில், ஊட்டியே தத்தளித்தது. கார் முன்னே போகமுடியவில்லை, பின்னே நகர முடியவில்லை, ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்குப் போவதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது.
இன்னொரு நாள் தொட்டபெட்டா உச்சிக்குப் போனோம். தமிழகம், கேரளம், கர்நாடகம் ஆகிய மூன்று மாநிலங்களும் மூன்று பக்கத்திலிருந்தும் தெரிந்தது. அங்கே போகும் வழியெல்லாம் யாரோ பனியை வாயால் ஊதினாற்போல் மேகக்கூட்டங்கள். அப்பா அங்கே ஓரிடத்தில் மசாலா பொரி வாங்கிக் கொடுத்தார். ரொம்ப வித்தியாசமாக இருந்தது…. இன்னும் இன்னும் சொல்லிக்கொண்டே போனேன்.
அப்புறம் ஊட்டி வர்க்கி, ஊட்டி சாக்கெட், ஊட்டி ரோஜா என்று விவரிக்க ஆரம்பித்தேன். எவையெல்லாம் எந்தெந்தக் கடைகளில் சிறப்பாகக் கிடைக்கும்? எப்படிப் பார்த்து வாங்கவேண்டும் என்பதையும் ரொம்ப பெரிய மனுஷன் மாதிரி சொல்லிக்கொண்டே போனேன்.
“வெரி குட். போயிட்டு வந்து எத்தனை நாளாச்சு?”


“ஞாயித்துக்கிழமை வந்தோம் மிஸ். நாலுநாள் ஆச்சு. ஏன் மிஸ்?”
“இன்னும் இதையெல்லாம் ஞாபகம் வெச்சிருக்கியே, அது எப்படி?”
“ஏன் மிஸ், இதெல்லாம் நானே பார்த்தது, செஞ்சுக்கிட்டது…”
“கரெக்ட். இனி இதெல்லாம் வாழ்க்கை முழுசும் மறக்காது இல்லையா?”
“எதெல்லாம் மிஸ்?”
“அடுத்த முறை யாராவது ஊட்டிக்குப் போனா, எங்கே போய் சாக்லெட் வாங்கணும்னு சொல்லி அனுப்புவியா?”
“கரெக்டா சொல்வேன்.”
“இதுக்குப் பேருதான் தற்செயலான கற்றல். அதாவது, கத்துக்கணும்னு நினைக்காமல், தன்னாலேயே கத்துக்கற விஷயங்கள். உன் மனசுல நீ தங்கின ஓட்டல், சாப்பிட்ட உணவு, பார்த்த இடம், வித்தியாசமான விஷயங்கள் எல்லாம் பதிவாகியிருக்கும். அதிலேர்ந்து நிறைய பாடங்களை உன்னையும் அறியாமலேயே கத்துக்கிட்டிருப்பியே?”
அப்படியா? கொஞ்சம் யோசிக்க ஆரம்பித்தேன். வழக்கமான விஷயங்களைவிட, வேறு என்னவெல்லாம் ஊட்டியில் போய் கற்றுக்கொண்டேன்? யோசிக்க யோசிக்க, ஒவ்வொன்றாகத் தென்படத் தொடங்கியது.
“ஓட்டல் வராண்டாவுல அயன் பாக்ஸ் இருந்தது மிஸ். நானே என்னுடைய டிரஸ்ஸை அதில வெச்சு பிரஸ் பண்ணினேன்.”
“வெரி குட்.”
“என்னுடைய உள்ளாடைகளை நானே தோச்சுப் போட்டேன்.”
“கரெக்ட்.”


“துணியெல்லாம் நீட்டா மடிச்சு வெக்கக் கத்துக்கிட்டேன். போகும் போதும், வரும்போதும் என் பெட்டியை நான் தான் தயார் செய்தேன். எதெல்லாம் தேவையின்னு லிஸ்ட் போட்டு எடுத்துவெச்சுக்கிட்டு, திரும்பிவரும்போது அதெல்லாம் சரியா இருக்கான்னும் செக் பண்ணினேன்.”
“சூப்பர்.”
“சாப் ஸ்டிக்ஸை எப்படிப் பிடிச்சுக்கணும், சாப்பிடணும்னு தெரிஞ்சுக்கிட்டேன் மிஸ்.”
இரண்டு குச்சிகளைப் பிடித்துக்கொண்டு உணவை எடுத்து வாயில் போட்டுக்கொண்டது பயங்கர சர்க்கஸாக இருந்தது.
“இதைத்தான் இன்சிடெண்டல் லேர்னிங், தற்செயலான கற்றல் என்று சொல்றாங்க. உன் வயசுல மட்டுமல்ல, எல்லா வயசுக்காரங்களும் இப்படித்தான் ஒவ்வொரு விஷயமா கத்துக்கிட்டிருக்காங்க. ஆனால், கத்துக்கறோம்னு தெரியாது. உள்ளுக்குள்ளேயே நடக்கற கற்றல் இது. வெளியே தெரியாது. இது கற்றல் மட்டுமல்ல, கூடவே புரிதலும் சேர்ந்திருக்கு. ஒவ்வொண்ணைப் பத்தியும் ஓர் அபிப்பிராயமும் சேர்ந்தே இருக்கும். உதாரணமா, நீ ஒரு கடையில சாக்லெட் வாங்கினேன்னு சொன்னே இல்லையா? அதுதான் பெஸ்டுன்னு உன் மனசுல ஆழமாகப் பதிஞ்சுபோச்சு. அது உண்மையாவும் இருக்கலாம். ஆனால், அதை நீ நம்பவும் ஆரம்பிச்சுடுவே. அடுத்த முறை வேற ஏதாவது கடையிலிருந்து சாக்கெட் வாங்கிக்கொடுத்தா, உனக்குப் பிடிக்காது. ஒப்பிட ஆரம்பிச்சுடுவே. கத்துக்கறதுல இருக்கற பல்வேறு படிநிலைகள் இவையெல்லாம். ஆனால், இப்படியும் கத்துக்க முடியும், இன்னும் சொல்லப் போனால், இப்படிக் கத்துக்கறதுதான் வாழ்க்கை முழுக்க மனசுல பதியுங்கறதுதான் இன்சிடெண்டல் லேர்னிங் நிபுணர்களோட கருத்து.”


“இதெல்லாம் பாடப்புத்தகத்துல இல்லாத பாடமா மிஸ்?”
“கரெக்டா சொன்னே. இதை அதிகப்படுத்திக்கணும். எங்கே போனாலும், எதைச் செஞ்சாலும், அதுல ஒரு விஷயத்தைத் தெரிஞ்சுக்கறோம்னு நினைக்கணும். திறந்த மனசோட ஒவ்வொண்ணையும் அணுகினா, புதுசுபுதுசா கத்துக்கலாம்.”
நான் வீடு திரும்பும்வரை, ஊட்டியில் இன்னும் என்னவெல்லாம் செய்தேன், கற்றுக்கொண்டேன், புரிந்துகொண்டேன் என்று யோசித்துக்கொண்டே நடந்தேன். அப்பப்பா… எவ்வளவு புது விஷயங்கள்? எவ்வளவு புது மனிதர்கள்? எவ்வளவு புதுப் பேச்சுகள்? ஆச்சரியமாக இருந்தது.



No comments:

Post a Comment