KOVALAN POTTAL ,MADURAI- SILAPPATHIKARAM
கோவலன் பொட்டல்
இளம்பிராயத்தில் சிலப்பதிகாரம் கதை கேட்டதிலிருந்தே எனக்கு கண்ணகியைப் பிடிக்காது. ஏனெனில் கண்ணகி மதுரையை எரித்தாள் என்ற கதையால். பின்னாளில் ஜெயமோகன் எழுதிய கொற்றவை வாசித்த போது அக்கால மதுரைச் சூழலும், கண்ணகி மதுரையை எரித்த காரணமும் அறிந்த பின் சாந்தமானேன். மதுரையில் சிலப்பதிகாரத்தோடு தொடர்புடைய இடங்கள் பல உள. அதில் செல்லத்தம்மன் கோயிலும், கோவலன் பொட்டலும் முக்கியமான இடங்கள். கண்ணகியின் சிற்பம் உள்ள செல்லத்தம்மன் கோயிலுக்கு பசுமைநடையாக முன்பொரு முறை சென்றிருக்கிறோம். வெகுநாட்களாக பார்க்க வேண்டுமென்றிருந்த கோவலன் பொட்டலுக்கு 5.3.2017 அன்று சென்றோம்.
எல்லோரும் பெரியார் பேருந்து நிலையம் அருகிலுள்ள பாண்டியன் அங்காடித்தெரு முனையில் கூடினோம். (சிலப்பதிகாரத்தில் அக்காலத்தில் மதுரையில் இருந்த அல்லங்காடி, நாளங்காடி பற்றி விரிவாக இளங்கோவடிகள் கூறுகிறார். அதைக்குறித்து தனிப்பதிவே எழுதலாம்) அங்கிருந்து அவரவர் வாகனங்களில் பழங்காநத்தம் நோக்கி சென்றோம். பழங்காநத்தத்திலிருந்து டி.வி.எஸ் நகர் செல்லும் சுரங்கபாலத்திற்கு அடியில் சென்று வலது புறம் திரும்பியதும் அதுதான் கோவலன் பொட்டல் என வண்டியை நிறுத்தியதும் சொன்னார்கள்.
பொட்டல் என்ற சொல் என் நினைவில் பெரிய திடலாக மனதில் பதிந்திருந்தது. கோவலன் பொட்டல் என்ற இடத்தின் பெயரையும் பெரிய திடலாகத்தான் நினைத்திருந்தேன். அந்தக் காலத்தில் கோவலனை வெட்டிய இடம் இன்று சீமைக்கருவேல மரங்கள் மண்டிக் கிடக்கும் என நினைத்திருந்தேன். ஆனால், அது மரங்கள் அடர்ந்த கல்லறைத் தோட்டமாகயிருக்கும் என நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. தேவேந்திர குலத்தைச் சேர்ந்தவர்கள் அந்த இடத்தை சுடுகாடாக பயன்படுத்தி வருகின்றனர். மரங்களுக்கடியில் இறந்தவர்களை புதைத்திருந்தனர். சுடுகாட்டின் நடுவே ஒரு சிறிய கட்டிடத்தின் உள்ளே மூன்று சிலைகள் உள்ளது. அதை கோவலன், கண்ணகி, மாதவி எனக் கூறுகின்றனர். சிலைகள் மிகச் சிறியதாக உள்ளதால் பகுத்துணர முடியவில்லை.
எல்லோரும் அந்த இடத்தில் கூடினோம். பசுமைநடை அமைப்பாளர் அ.முத்துக்கிருஷ்ணன் தொடக்க உரை ஆற்றினார். பழங்காநத்தத்திற்கும், டி.வி.எஸ் நகருக்கும் இடையிலான பாலம் எதற்காக கட்டினார்கள் என்றே தெரியவில்லை. பலகோடி செலவளித்துக் கட்டிய பாலம் மக்கள் நடைபயிற்சி செய்வதற்குத்தான் இப்போது காலை வேளைகளில் பயன்படுகிறது என்றார். மேலும், டி.வி.எஸ். பள்ளியில் படிக்கும் போது இப்பகுதி வழியாக நடந்து செல்லும் போது சுடுகாடு இருந்ததால் வேகமாக கடந்துவிடுவோம். அப்போது இப்பகுதியில் ஒரு ஊருணி ஒன்று இருந்தது என தன் பள்ளிப்பருவ நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.
தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் அய்யா அந்த இடத்தின் வரலாறு, தனக்கும் அந்த இடத்துக்குமான தொடர்பு குறித்து பேசினார்.
“1981-ல் உலகத்தமிழ் மாநாடு நிகழ்ந்த போது, இந்த கோவலன் பொட்டல் பகுதியை அகழாய்வு செய்ய திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டது. மூன்று அகழாய்வுக் குழிகள் மட்டும் அப்போது இடப்பட்டு அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. இங்கு கண்டுபிடிக்கப்பட்ட கருப்பு சிவப்பு பானை ஓடுகள், தாழிகள் போன்றவற்றை காலக்கணிப்பு செய்த போது 2300 ஆண்டுகளுக்கு முற்பட்ட வாழ்விடப் பகுதியாகவும்; இறந்தவர்களை புதைக்கிற இடுகாடாகவும் இருந்திருப்பதை உறுதிசெய்தோம். இதேபோல தற்சமயம் கீழடியில் செய்த அகழாய்வில் கிடைத்த தொல்பொருட்களின் வயது 2200 ஆண்டுகளுக்கு முந்தையது என்பதை கரிம பகுப்பாய்வு மூலம் ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர்.
பழங்காநத்தம் என்கிற பெயர் கூட பழங்கால நத்தம் எனும் சொல்லின் திரிபுதான். நத்தம் என்பதற்கு குடியிருப்பு என்பது பொருள். பழங்கால அல்லது பழைய குடியிருப்பு பகுதி என காலம் காலமாக வழங்கிவருகிறோம். எனவே இங்கு மக்கள் பல காலமாக இங்கு வசித்துவருகிறார்கள் என்பதை அறியமுடிகிறது. கோவலன் பொட்டல் என்பதற்கான பெயர் காரணம் சிலப்பதிகாரத்தின் தாக்கமாக இருக்குமே தவிர; இங்குதான் கோவலன் கொல்லப்பட்டான் என்பதற்கான வரலாற்றுச் சான்றுகள் நமக்கு எதுவும் கிடைக்கவில்லை.
இங்கு அகழாய்வு செய்த போது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய ஆண்மகனது முழுமையான எலும்புகள் கிடைத்தன. அந்த ஆணின் இடது கை முழங்கையில் இருந்து இல்லாமல் இருந்தது. அவன் ஊனமுற்ற மனிதனா அல்லது கை வெட்டுப்பட்ட மனிதனா என்பது தெரியவில்லை. இது போக மக்கள் வழிபாட்டுக்காக பயன்படுத்திய புதிய கற்கால கைக்கோடரி ஒன்றின் சிதைந்த பகுதியும்; மீன் சின்னம் பொறிக்கப்பட்ட சங்கப்பாண்டியர் காலச் செப்புக் காசு ஒன்றும்; சில செப்புக்காசுகளும் கிடைத்தன. வரலாற்றில் நெடுங்காலமாக மக்களின் வாழ்விடப்பகுதியாக இப்பகுதி விளங்கியுள்ளதை இங்கு கிடைத்த தொல்பொருட்கள் உறுதிசெய்கின்றன.” என்றார் தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் ஐயா. மேலும், தனக்கு இந்த இடத்தோடு 55 ஆண்டுகால உறவு. நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது எங்கப்பாவுடன் ஒரு திருமணத்திற்கு ஜெய்ஹிந்த்புரம் வந்தேன். அப்போது இப்பகுதி எப்படியிருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். மீனாட்சி நூற்பாலைக்கு முன்பாக ரயில்வே கேட் இருந்தது, அப்போது பாலம் கட்டவில்லை. திருமணத்திற்கு வந்தவர்களுக்கு காலைக்கடன்களை கழிக்க இப்பகுதிக்கு போகச் சொல்லி அப்போது அனுப்பினார்கள். அப்போதும் இதன் பெயர் கோவலன் பொட்டல்தான்” என்றார்.
பேராசிரியர் சுந்தர்காளி அவர்கள் கோவலன் பொட்டல் குறித்து, சிலப்பதிகாரம் குறித்து, அகழாய்வு குறித்தெல்லாம் விரிவாகப் பேசினார்.
“வரலாறு என்பது அங்காங்கே நாம் புழங்குகிற இடங்களில் எல்லாம் புதைந்து கிடக்கிறது. அதுவும் மதுரை போன்ற மிகப் பழைய நகரங்களில் எங்கு நோக்கினும் ஆயிரம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய விசயங்கள் இருந்து கொண்டே இருக்கின்றன. நாகரீக காலத்தில் நாம் நமது ஓட்டத்தை சற்று நிறுத்தி ஒரு புள்ளியில் நின்று பார்த்தால் அந்த வரலாற்றை உணர முடியும்.
இங்கு நிகழ்த்தப்பட்ட அகழாய்வே மூன்று அடுக்காக தொல் பொருட்கள் கிடைத்துள்ளன. அகழாய்வு குழிகளின் அடிப்பகுதியில் இரும்புக்கால மண் அடுக்கு; அதற்கு மேலே உள்ள அடுக்கு சங்க காலத்தை சேர்ந்த அடுக்கு; அதற்கும் மேலே பாண்டியர் கால செப்புகாசுகள் கிடைத்திருப்பதால் அது இடைக்கால அடுக்கு என அறியப்படுகிறது. இங்கு தாழிகள் கிடைக்கபட்டுள்ளன என்பதை எப்படி பார்க்கிறோம் என்றால், தென் தமிழகத்தில்தான் அதிகமாக தாழிகள் காணக் கிடைக்கின்றன. எனவே இந்த பகுதிகளில்தான் தாழிகளில் புதைக்கிற பழக்கம் இருந்திருக்கிறது. வட தமிழ்நாட்டிலோ மேற்கிலோ கற்பதுக்கைகளும், கற்திட்டைகளும் மட்டுமே காணப்படுகின்றன. வரலாற்று ஆய்வாளர்கள் கற்பதுக்கைகளை தான் அதிக வயதுள்ளதாக கூறிவந்தனர். ஆனால் சமீப கால ஆய்வுகளுக்கு பிறகு தாழிகளில் புதைக்கப்படுகிற பழக்கம்தான் தொன்மையானது என்பதை ஏற்றுக் கொள்கின்றனர். கற்பதுக்கைகளை நான்கு காலகட்டமாக பார்க்கலாம். பள்ளம் தோண்டி கற்களை அடுக்கி அதற்குள் புதைத்து கற்களால் மூடுவது பழைய பழக்கம். அதன் பிறகு மேல் பரப்பில் கற்களை அடுக்கி புதைத்து அதன்மேல் கற்களை கொண்டு மூடுவது கற்திட்டை முறை. நெடுங்கற்கள் என்று பெரிய அளவிளான கற்களை நடுவது மூன்றாம் கட்டமாகவும் அதில் இருந்து சிறிய கற்களை நடுகற்களாக நடுவதுமாக காலத்தில் மாற்றம் அடைந்து வந்துள்ளன. இவ்வாறு கிமு.1300 ஆண்டில் இருந்து சங்க காலத்தின் இறுதி காலமான கிமு.5-ஆம் நூற்றாண்டு வரை இந்த பெருங்கற்காலச் சின்னங்கள் மாறிவந்துள்ளன.
கோவலன் என்கிற மனிதன் இருந்தானா, சிலப்பதிகாரம் நடந்த சம்பவமா என்று விவாதங்கள் எழுகின்றன. நடந்த ஒரு கதை மெல்ல மெல்ல வளர்ச்சி பெற்றிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால், சிலப்பதிகாரத்தை இளங்கோ எழுதும் முன்னமே மக்கள் மத்தியில் இந்த கதை புழங்கி வந்திருக்கிறது. சங்க இலக்கியங்களிலேயே ‘ஒரு முலை அறுத்த திருமாவுண்ணி’ என்கிற பெண்ணை பார்க்கிறோம். பேகன் என்கிற மன்னனுடைய மனைவி கண்ணகியினுடைய கதையை பார்க்கிறோம்.. அவர்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்த கதையை பார்க்கிறோம். சிலப்பதிகாரத்தின் பதிகத்தை பார்த்தாலே, சேரன் செங்குட்டுவனோடு இளங்கோ காட்டிற்கு செல்கையில் மலைவாழ் மக்கள் அந்த கதையை சொல்வதாகதான் வருகிறது. எனவே ஒரு நிகழ்ந்த சம்பவம், மரபுக் கதையாக மக்களிடம் புழங்கிவந்து படிப்படியாக வளர்ந்து தொன்மமாக மாறி பிறகு சிலப்பதிகார காப்பியமாகியிருப்பதாக தான் அறிய முடிகிறது.
தமிழகம், கேரளா மட்டுமல்லாது, இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியிலும் சிங்களர்கள் வாழும் பகுதியிலும் கூட இந்த கதை புழங்கி வருகிறது. இலங்கையில் கண்ணகிக்கு பல இடங்களில் கோயில்கள் உள்ளன. பல கூத்துகள் பாடல்கள் இந்த கதையில் நிகழ்த்தப்படுகின்றன. பத்தினிதெய்வோ என்று இலங்கையில் மக்கள் கண்ணகியை தெய்வமாக வழிபடுகின்றனர்.
சுந்தர்காளியின் உரைக்கு பிறகு ஓவியர் பாபு அந்த இடம் குறித்து பேசினார். அகழாய்வுகள் காலக்கணிப்புகளைத் தாண்டி தான் கதைகளை மிகவும் விரும்புவதாகச் சொன்னார். ஏனென்றால், இந்த கார்பன் டேட்டிங் போன்ற விசயங்கள் இதன் காலத்தை சமீபத்தில் காட்டுகிறது. எனக்கெல்லாம் இந்த இடம் 50,000 ஆண்டுகளுக்கு முன்பு என்ற நம்பிக்கைதான் பிடித்திருக்கிறது. அந்தக் காலத்தில் இப்பகுதியில் ஒரு குழாயில் வென்னீர் ஊற்று வந்ததாகச் சொன்னார்.
பசுமைநடை ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான உதயகுமார் முதன்முதலில் தன்னுடைய பிரச்சனைக்காக பொதுச்சொத்தை சேதப்படுத்தியது கண்ணகிதான் எனக்கூற அதை சாந்தலிங்கம் அய்யா மறுத்து கண்ணகி நல்லவர்களை ஒன்றும் அப்போது எரிக்கச் சொல்லவில்லை என சிலப்பதிகார வரிகளை மேற்கோள் காட்டினார்.
பார்ப்பார் அறவோர் பசு பத்தினிப் பெண்டிர்
மூத்தோர் குழவிஎனும் இவரைக் கைவிட்டு
தீத்திறத்தார் பக்கமே சேர்கென்று காய்த்திய
பொற்றொடி ஏவப் புகை அழல் மண்டிற்றே
நற்றேரான் கூடல்நகர்.
சிலப்பதிகாரம் நூலில் கோவலன் கொலைசெய்யப்பட்டது குறித்து தேடியபோது அதில் இந்த இடத்தில்தான் வெட்டப்பட்டான் என்ற குறிப்பு எதுவும் இல்லை. மக்களின் நம்பிக்கைதான் இதை கோவலன் பொட்டல் என வெகுநாட்களாய் சொல்லிக் கொண்டு இருக்கிறது.
உரியது ஒன்று உரைமின் உறு படையீர் என
கல்லாக் களிமகன் ஒருவன் கையில்
வெள்வாள் எறிந்தனன் விலங்கூடு அறுந்தது
புண்ணுமிழ் குருதி பொழிந்துடன் பரப்ப
மண்ணக மடந்தை வான்துயர் கூரக்
காவலன் செங்கோல் வளைஇய வீழ்ந்தனன்
கோவலன் பண்டை ஊழ்வினை உருத்துஎன்
சிலப்பதிகாரம், கொலைக்களக்காதை 211 – 217
-
சித்திர வீதிக்காரன் /BLOGSPOT/ கோவலன் பொட்டல்
No comments:
Post a Comment