CHARLIE CHAPLIN ,
WORLD FAMOUS ACTOR
BORN 1889 APRIL 16
1889-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16-ந்தேதி பிறந்தார்ச
சார்லஸ் ஸ்பென்ஸர் சாப்ளின் என்ற இயற்பெயர் கொண்ட சார்லி சாப்ளின், .
ஹாலிவுட் திரையுலகின் பெரும் புகழ்பெற்ற கலைஞராக விளங்கினார். இவருக்கு நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், திரைப்படத் தொகுப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர் என்று பல முகங்கள் உள்ளன.
சாப்ளின், லண்டனில் உள்ள வால்வோர்த்தில் சார்லஸ்- ஹன்னா ஹாரியட் ஹில் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். இவரது பெற்றோர்கள் மியூசிக் ஹால் கலைஞர்கள். சாப்ளின் பிறந்த சில நாட்கள் கழித்து இவர்களது திருமண வாழ்க்கை முறிந்தது. சாப்ளின் தனது அன்னையின் கண்காணிப்பில் வளர்ந்தார். 1896-ம் ஆண்டில் ஹாரியட்டிற்கு வேலை ஏதும் கிடைக்காத நிலையில், சார்லியும் அவரது சகோதரர் சிட்னியும் லாம்பெத் வொர்க்கவுசில் இருக்கும் நிலை ஏற்பட்டது.
பின்னர் இருவரும் Hanwell School for Orphans and Destitute Children என்னும் ஆதரவற்றோருக்கான பள்ளி ஒன்றில் வளர்ந்தனர். இதற்கிடையில், சாப்ளினின் தந்தை குடிப்பழக்கத்தால் உடல் நலம் குன்றி சாப்ளினின் பனிரெண்டாவது வயதில் இறந்தார். இதனால் இவர் தாயும் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகி கிராய்டனில் இருந்த கேன் ஹில் அசைலம் என்ற மன நலம் பாதிக்கப்பட்டோருக்கான காப்பகம் ஒன்றில் சேர்க்கப்பட்டார். பின்பு இவரும் 1928-ம் ஆண்டில் இறந்தார். சாப்ளின் ஐந்து வயதிலேயே நடிக்கத் தொடங்கி விட்டார். முதன் முதலில் 1894-ம் ஆண்டில் மியூசிக் ஹாலில் தனது தாய்க்குப் பதிலாக ஒரு வேடத்தில் நடித்தார்.
சிறுவனாக பல நாட்கள் உடல் நலக்குறைவால் படுத்த படுக்கையாக இருந்தபொழுது, இரவுகளில் அவரது தாய் சன்னல் ஓரம் அமர்ந்து வெளியில் நடக்கும் நிகழ்வுகளை நடித்துக் காட்டுவார். சாப்ளினுக்கு பத்து வயதாக இருந்த பொழுது சிட்னி லண்டன் ஹிப்போட்ரோமில் சின்ட்ரெல்லா பாண்டோமைமில் ஒரு பூனையாக, நகைச்சுவையான பாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பை வாங்கித் தந்தார்.
1903-ம் ஆண்டில் ஜிம், எ ரொமான்ஸ் ஆஃப் காக்கைய்ன் நாடகத்தில் நடித்தார். இதற்குப் பிறகு அவருக்கு நிரந்தர வேலை கிடைத்தது. செர்லாக் ஹோம்ஸ் நாடகத்தில் செய்தித்தாள் விற்கும் சிறுவன் பில்லி வேடம். இதனைத் தொடர்ந்து கேசீஸ் கோர்ட் சர்க்கஸ் நடத்திய பல்சுவை நிகழ்ச்சியிலும், Fred Karno's Fun Factory slapstick நகைச்சுவை நிறுவனத்தில் கோமாளி வேடத்திலும் நடித்தார். அமெரிக்காவின் குடிபெயர்வுப் பதிவுகளின்படி கார்னோ குழுவுடன் அக்டோபர் 2, 1912- அன்று அமெரிக்கா வந்தடைந்தார்.
கார்னோ குழுவிலே ஆர்த்தர் ஸ்டான்லே ஜெப்பர்சனும் இருந்தார்- இவரே பின்னர் ஸ்டான் லாரலாக பிரபலமானார். இருவரும் சிறிது காலம் ஒரே அறையில் தங்கினர். தயாரிப்பாளர் மாக் செனட் சாப்ளினின் திறமையைக் கவனித்து அவரது நிறுவனமான கீஸ்டோன் திரைப்பட நிறுவனத்தில் சேர்த்துக் கொண்டார். முதலில் சாப்ளினுக்கு கீஸ்டோன் நடிப்பு முறைக்கு தன்னை மாற்றிக் கொள்வது சற்று கடினமாக இருந்தது. ஆனால் மிக விரைவில் தன்னைப் பழக்கிக் கொண்டு கீஸ்டோனின் சிறந்த கலைஞராக வளர்ந்தார். இவரது கிடுகிடு வளர்ச்சிக்குக் காரணமாக அமைந்தது அவர் தனக்கென்று உருவாக்கிக் கொண்ட நாடோடி வேடமும், நிறுவனத்தில் இவருக்கு இயக்கவும் புது படைப்புகள் படைக்கவும் கொடுக்கப்பட்ட உரிமையுமாகும்.
இவரது வளர்ச்சியையும், இவரது நிர்வாகியாக பணிபுரிந்த சிட்னியின் ஆற்றலையும் சாப்லினின் சம்பளப் பட்டியல் எடுத்துக்காட்டியது. இவர் 1919-ம் ஆண்டில் மேரி பிக்போர்ட், டக்லஸ் ஃபேர்பேங்க்ஸ், கிரிபித்துடன் இணைந்து யுனைட்டடு ஆர்டிஸ்ட்ஸ் ஸ்டுடியோவைத் துவங்கினார். 1927-ம் ஆண்டில் ஓசையுடன் கூடிய திரைப்படங்கள் வெளிவரத் துவங்கி மிகவும் பரவலானாலும்
1930-ம் ஆண்டு வரை சாப்ளின் பேசும் படங்களில் இருந்து ஒதுங்கியே இருந்தார். சாப்ளின் சினிமாவின் பல துறைகளில் கை தேர்ந்தவராகத் திகழ்ந்தார். 1952-ம் ஆண்டில் வெளிவந்த லைம்லைட் திரைப்படத்தில் நடன அமைப்பையும் 1928-ம் ஆண்டுத் திரைப்படம் "தி சர்க்கஸ்" படத்தின் தலைப்பு இசை அமைப்பையும் இவரே செய்தார். இவர் இசையமைத்த பாடல்களில் பெரும் புகழ் பெற்றது ஸ்மைல்.
இவரது முதல் டாக்கீஸ் 1940-ம் ஆண்டில் வெளியான "தி கிரேட் டிக்டேடர்". இது அடால்ஃப் ஹிட்லரையும் அவரது பாசிச கொள்கையையும் எதிர்த்து குரல் கொடுத்த படம். இப்படம் அமெரிக்கா இரண்டாம் உலகப் போரில் புகுவதற்கு ஒரு வருடம் முன்பு அங்கு வெளியிடப்பட்டது.
இதில் சாப்ளின் இரு வேடங்கள் பூண்டிருந்தார். ஹிட்லர் மற்றும் நாசியர்களால் கொடுமையாக கொல்லப்படும் யூத இனத்தைச் சேர்ந்த ஒரு நாவிதன். சினிமா மீது மோகம் கொண்ட ஹிட்லர் இப்படத்தை இருமுறைப் பார்த்தார். போர் முடிந்த பிறகு, ஹோலோகாஸ்ட்டின் கொடுமை உலகிற்கு தெரியவந்த பிறகு சாப்ளின் இக்கொடுமைகள் எல்லாம் தெரிந்திருந்தால் ஹிட்லரையும், நாசியர்களையும் கிண்டல் செய்திருக்க முடியாது என்றார்
இவரது கடைசி திரைப்படங்கள் "தி கிங் இன் நியூ யார்க்" (1957), "தி சாப்லின் ரெவ்யூ" (1959) மற்றும் சோஃபியா லாரென், மார்லன் ப்ராண்டோ நடித்த "அ கௌண்டஸ் ·ஃப்ரம் ஹாங்காங்". இவரது திரையுலக வெற்றிகள் மூலமாக இவருக்கு கிடைத்த புகழ், பலமுறை தன் தனிப்பட்ட வாழ்வினால் பெரிதும் பாதிக்கப்பட்டது.
அக்டோபர் 23 1918-இல் இருபத்தியெட்டு வயது சாப்ளின் பதினாறு வயது மில்ட்ரெட் ஹாரிசை மணந்தார். இவர்களுக்கு பிறந்த குழந்தை சிறு வயதிலேயே இறந்தது. இவர்களது திருமண வாழ்க்கை 1920-ம் ஆண்டு விவாகரத்தில் முடிந்தது. முப்பத்தி ஐந்து வயதில் "தி கோல்ட் ரஷ்" திரைப்படத்திற்கு தயார் செய்து கொண்டிருந்த பொழுது, பதினாறு வயது லீடா க்ரே மீது காதல் கொண்டார். நவம்பர் 26 1924-ல் க்ரே கர்ப்பமான நிலையில் இவர்களது திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரு மகன்கள் பிறந்தனர். இவர்களது மண வாழ்க்கையும் $ 8, 25,000 ஒப்பந்ததுடன் விவாகரத்தில் முடிந்ததது. இந்த கசப்பான விவாகரத்தினாலும் வருமான வரி சிக்கல்களாலும் மன அழுத்தத்திற்கு ஆளாகி இவரது தலைமுடி நரைக்கத் துவங்கியது.
மேலும் நீதிமன்றம் வெளியிட்ட அறிக்கையில் சாப்ளினைப் பற்றிய பல அந்தரங்க செய்திகள் இடம்பெற்றது. இதனால் இவரை எதிர்த்து பிரச்சாரங்கள் நடைபெற்றன. சாப்ளினின் நாற்பத்தி ஏழாவது வயதில் பாலட் கொடார்டை ஜூன் 1936-ல் ரகசியமாக மணமுடித்தார். சில வருடங்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தபின் இத்திருமணமும் விவாகரத்தில் முறிந்தது.
இக்காலகட்டத்தில் நடிகை ஜோன் பேரியுடன் இவருக்கு உறவு ஏற்பட்டது. ஆனால், பேரி சாப்ளினை துன்புறுத்தியதால் மெதுவாக அவ்வுறவினை முடித்துக் கொண்டார். ஆனால் மே 1943-ம் ஆண்டு தனது குழந்தைக்கு சாப்ளினே தந்தை என்று வழக்கு தொடர்ந்தார். இரத்த பரிசோதனைகள் சாப்ளினை குற்றமற்றவர் என்று காட்டினாலும், அக்காலத்தில் இரத்த பரிசோதனைகள் நீதி மன்றங்களில் சாட்சிகளாக எடுத்துக் கொள்ளப் படவில்லை.
குழந்தை 21 வயது வரும் வரை வாரம் $75 வழங்குமாறு உத்தரவிடப்பட்டார்.
சில நாட்கள் கழித்து, ஐகன் ஓ'நீலின் மகள், ஓனா ஓ'நீலை சந்தித்தார். இவரை ஜூன் 16, 1943 அன்று மணந்தார். சாப்ளினின் வயது அப்பொழுது 54, ஓ'நீலின் வயது 17. இத்திருமண வாழ்க்கை மகிழ்ச்சியுடன் பல வருடங்கள் நீடித்தது. இவர்களுக்கு எட்டு குழ்ந்தைகள் பிறந்தனர்.
சாப்ளின், 1977-ம் ஆண்டு கிறிஸ்மஸ் தினத்தன்று தனது எண்பத்தி எட்டாவது வயதில் வேவேவில் இறந்தார். இவரது உடலை வாட் நகரில் உள்ள கார்சியர்-சுர்-வெவே கல்லறையில் அடக்கம் செய்தார்கள்.
மார்ச் 1, 1978-ம் ஆண்டு இவரது உறவினர்களிடமிருந்து பணம் பறிப்பதற்காக இவரது உடல் கல்லறையிலிருந்து திருடப்பட்டது. ஆனால் இத்திட்டம் தோல்வியுற்று, திருடர்கள் பிடிபட்டனர். பதினொரு வாரங்களுக்குப் பின் ஜெனீவா ஆற்றின் அருகில் சாப்ளினின் உடலைக் கைப்பற்றினார்கள். சாப்ளினின் நினைவாக வேவேவில் அவரது சிலை ஒன்றை அமைத்துள்ளனர்.
No comments:
Post a Comment