Monday 9 April 2018

JEYAKANTHAN , MAXIM GORKEY OF INDIA





WRITER JEYAKANTHAN , 
MAXIM GORKEY OF INDIA
APRIL 24,1934 - APRIL 8,2015




எழுத்தாளர் ஜெயகாந்தன்.

விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கையினை யதார்த்தமாக எழுத்துக்கள் மூலம் உலகுக்கு தெரியப்படுத்திய எழுத்தாளர் ஜெயகாந்தன்.
சமூக அநீதி, பொருளாதார ஏற்றத்தாழ்வு குறித்து ஆழமான சிந்தனைகளை எழுத்துக்களாக பதித்த மாபெரும் இலக்கியவாதி இயற்கை எய்தியுள்ளார்.
கம்யூனிச சித்தாந்தம் கொண்ட எழுத்தாளர் கடலூர் மஞ்சக்குப்பம் என்ற ஊரில் 1933ம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி ஜெயகாந்தன் பிறந்தார்.
பத்து வயதுச் சிறுவனாக இருக்கும்போதே மூவர்ணக் கொடி பிடித்து பாரதியாரின் தேசிய எழுச்சி மிக்க பாடல்களைப் பாடிக்கொண்டு தெருவில் சென்றவர். பள்ளி சென்று பயிலாத ஜெயகாந்தன், 14வது வயதிலேயே சொந்த ஊரை விட்டு சென்னைக்கு வந்தார்.

சௌபாக்கியம் என்ற இதழில் ஆசிரியராக இருந்த பி.சி.லிங்கம் என்ற புலவரிடம் தமிழ் இலக்கிய கற்றுக்கொண்ட இவர், தமிழ்ப் புலவர் சொக்கலிங்கத்திடம் முறையாக மொழியறிவை வளர்த்துக்கொண்டார். ஜெயகாந்தன் எழுதிய முதல் சிறுகதை சௌபாக்கியம் என்ற இதழில் 1950ல் வெளிவந்தது.
வசந்தம், மனிதன் உள்ளிட்ட இதழ்களில் சிறுகதை எழுதினாலும், சரஸ்வதி என்ற இதழில் எழுதும்போதுதான் இவரது எழுத்தாற்றல் வெளியுலகிற்கு தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து வெகுஜன இதழ்களான ஆனந்த விகடன், குமுதம், கல்கி உள்ளிட்டவற்றில் இவர் எழுதத்தொடங்கினார்.
தொடக்கத்தில் ஜெயகாந்தனின் எழுத்துக்கள் தத்துவ நோக்கமுடையதாகவும், பரிசோதனை முயற்சிகளாகவும் இருந்தன.

பாலுணர்ச்சி பற்றிய கண்ணம்மா, போர்வை, சாளரம் உள்ளிட்ட கதைகள் தரமானவையாக இருந்தாலும் ஜனரஞ்சகமாக அமையவில்லை. அதன் பின்னர் இவர் ஜனரஞ்சகமாக எழுதத்தொடங்கினார். வறுமையில் வாடும் ஒரு குடும்பத்தின் கதையான "ஒரு பிடி சோறு" என்ற முதல் சிறுகதை தொகுதி இவருக்கு பெரும் புகழைப் பெற்றுத்தந்தது.
இதேபோல் 13 சிறுகதை தொகுதிகளை எழுதியுள்ளார்.
சிறுகதையைத் தொடர்ந்து நாவல்களிலும் ஆர்வம் காட்டத் தொடங்கிய ஜெயகாந்தனுக்கு, "வாழ்க்கை அழைக்கிறது" முதல் நாவலாகும். 25க்கும் மேற்பட்ட குறுநாவல்களும், 17 நாவல்களையும் எழுதிய ஜெயகாந்தனின், "சில நேரங்களில் சில மனிதர்கள்", "ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்", "சுந்தரகாண்டம்", "சினிமாவுக்குப் போன சித்தாளு" உள்ளிட்டவை புகழைப் பெற்றுத்தந்தன.

பெண்ணின் கற்பைப் பற்றி பேசிய "சில நேரங்களில் சில மனிதர்கள்" அவரது முற்போக்கு எழுத்திற்கு சிறந்த உதாரணாகும்.
இதுமட்டுமல்லாமல், சுவை ததும்பும், ஆழமான அறிவுப் பூர்வமான 25 கட்டுரைகளையும் ஜெயகாந்தன் படைத்துள்ளார். அரசியல், சமூகம், கலை, இலக்கியம் மற்றும் பத்திரிக்கை அனுபவங்கள் அவரது கட்டுரையில் காணலாம். இதைத் தவிர சில ஓரங்க நாடகங்களை எழுதியுள்ள ஜெயகாந்தன், திரைப்பட கதாசிரியர், பாடலாசிரியர், வசனகர்த்தா, இயக்குநர், தயாரிப்பாளர் என பல துறைகளிலும் சிறந்து விளங்கியவர்.
ஜெயகாந்தனின் சமுதாயப் பார்வையில் மார்க்சியமும், ஆன்மீகமும் உண்டு. இரு வேறுபட்ட தளங்களில் கிடைத்த அனுபவங்களை அவர் தம்முடை கதைகளில் வெளிப்படுத்தியுள்ளார்.

இவருடைய கதைகள் அனைத்து இந்திய மொழிகளிலும், ஆங்கிலம் உள்ளிட்ட உலக மொழிகளிலும் மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. புதுமைப் பித்தனுக்கு அடுத்ததாக ஏற்புக்கும், மறுப்புக்கும் அதிக இலக்கானவர் ஜெயகாந்தன்தான்

No comments:

Post a Comment