CHARLIE CHAPLIN
MOVIE " CITY LIGHTS "
சார்லி சாப்ளினின் கலை உச்சங்களில் ஒன்று சிட்டி லைட்ஸ். படத்தின் ஒரு ப்ரேம்கூட தேவையற்றது என ஒதுக்க முடியாத அளவுக்கு கச்சிதமான படைப்பு. அர்த்தமின்றி நகரும் வாழ்வின் பேரதிசயம் எதிர்பார்ப்பில்லாத அன்பில் மறைந்திருக்கிறது என்பதை கலாபூர்வமாக சொல்கிறது சிட்டி லைட்ஸ்.
சார்லி சாப்ளின் வீடில்லாத நகரத்தின் நாடோடி. ரொட்டிக்கான தினசரி தேடுதல் வேட்டையில் ஒருநாள் தெரு ஓரம் பூ விற்கும் கண் தெரியாத இளம்பெண்ணை சந்திக்கிறார். சாப்ளின் ஒரு பணக்கார கனவான் என அந்தப் பெண் நினைக்கும்படி அந்த சந்திப்பு அமைந்து விடுகிறது.
அன்றிரவு தற்கொலைக்கு முயலும் செல்வந்தர் ஒருவரை சாப்ளின் காப்பாற்றுகிறார். தனது வீட்டிற்கு சாப்ளினை அழைத்துச் செல்லும் செல்வந்தர், இனி தற்கொலைக்கு முயல்வதில்லை என உறுதி அளிக்கிறார். இருவரும் சொகுசு ஹோட்டல் ஒன்றில் ஆட்டம் பாட்டத்துடன் அன்றிரவை கழிக்கிறார்கள்.
மறுநாள் செலவந்தரின் வீட்டருகில் அந்த கண் தெரியாத இளம் பெண்ணை மீண்டும் சந்திக்கிறார் சாப்ளின். செல்வந்தரின் காரில் அவளை அவளது வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார். தனிமையும், வறுமையும் நிறைந்த அவளின் வாழ்க்கை சாப்ளினுக்கு தெரிய வருகிறது.
இதனிடையில் செல்வந்தருடனான சாப்ளினின் சந்திப்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது. போதையில் சாப்ளினுடன் நண்பராக அன்னியோன்யத்துடன் பழகுகிறவரால், போதை தெளிந்த பின் அதனை நினைவு வைத்துக் கொள்ள முடிவதில்லை. சாப்ளினை வீட்டை விட்டு துரத்துகிறார். நமது நாடோடிக்கோ அது ஒரு பொருட்டாக இருப்பதில்லை.
பார்வையற்ற பெண் பல மாதங்களுக்கான வாடகை பாக்கி தர வேண்டியிருக்கிறது. இரண்டு நாளில் அதனை தர இயலாதபட்சத்தில் வீட்டை காலி செய்தாக வேண்டும். தனது ஏழ்மையை நினைத்து அழும் அவளை சாப்ளின் தேற்றுகிறார். கண் தெரியாதவர்களுக்கு பார்வை தரும் மருத்துவரை பற்றி பத்திரிகையில் வந்திருக்கும் செய்தியை படித்துக் காட்டும் அவர், வாடகை பணத்தை தானே தந்துவிடுவதாக உறுதி அளிக்கிறார்.
நமது நாடோடிக்கு இப்போது பணம் தேவை. அதிகமாக அதுவும் குறுகிய காலத்தில். குத்துச் சண்டை போட்டியில் தன்னுடன் மோதினால் பரிசுத் தொகையில் சரிபாதியை தந்து விடுவதாக கூறுகிறான் ஒருவன். நம்பிப் போனால் நிஜ குத்துச் சண்டை வீரனுடன் மோத வேண்டியதாகி விடுகிறது. அப்படியும் நம்பிக்கை இழக்காமல் இரவு நகரத்தை ரோந்து வரும் வேளையில் போதை செல்வந்தர் சாப்ளினை அடையாளம் கண்டு கொள்கிறார். வழக்கம்போல் வீட்டிற்கு அழைத்து செல்பவர் கண் தெரியாத பெண்ணின் சிகிச்சைக்கு ஆயிரம் டாலர் தருகிறார்.
அதேநேரம் செல்வந்தரின் வீட்டிற்குள் பதுங்கியிருக்கும் திருடர்கள் தப்பித்து ஓடுகிறார்கள். போலீசை அழைக்கும் சாப்ளின் பணத்துடன் மாட்டிக் கொள்கிறார். செல்வந்தருக்கு சாப்ளினையோ, அவருக்கு பணம் கொடுத்ததோ நினைவில் இல்லை. சாப்ளினை திருடன் என முடிவு செய்கிறது போலீஸ். அவர்களிடமிருந்து பணத்துடன் தப்பிக்கிறார் சாப்ளின். கண் தெரியாத பெண்ணிடம் பணத்தை ஒப்படைத்து திரும்பும் வழியில் சாப்ளினை போலீஸ் கைது செய்து சிறையில் அடைக்கிறது.
கிழிந்த உடையும், கலங்கிய மனதுமாக இப்போது சாப்ளின் ஒரு பிச்சைக்காரனுக்குரிய தோற்றத்தில் இருக்கிறார். தெருவில் நடந்துவரும் அவரை சிறுவர்கள் கேலி செய்கிறார்கள். சுற்றிலும் உள்ளவர்கள் பரிகாசத்துடன் சிரிக்கிறார்கள். வேதனையுடன் திரும்பும் சாப்ளின் அப்படியே நின்றுவிடுகிறார். அவர் முன்னால் அந்த பூ விற்கும் பெண். அவளது தோற்றம் இப்போது சீமாட்டியைப் போல் மாறியிருக்கிறது. இப்போது அவள் தெருவில் பூ விற்கவில்லை. அவளுக்கென்று சொந்தமாக கடை இருக்கிறது.
சாப்ளின் அந்த பெண்ணையே உற்று நோக்குகிறார் . ஆனால் நான் தான் உனக்கு உதவி செய்தேன் என்று சொல்ல மனம் வரவில்லை .ஆனால் அந்த பெண்ணோ ஒரு பூவை கொடுத்து காசு தர வேண்டாம் என்கிறாள் .ஆனாலும் அந்த பெண்ணுக்கு ஒரு உள்ளுணர்வு உறுத்து கிறது .கண்ணை மூடி தனக்கு உதவி செய்தவனாக இருக்குமோ என்று தொட்டு பார்த்து அறிந்து கொள்கிறார்
இதை ஆதாரமாக வைத்து கமலஹாசன் மூன்றாம் பிறையில் கடைசி காட்சி படமாக்க பட்டிருக்கலாம் என்பது என் எண்ணம்
No comments:
Post a Comment