HOW TO PROTECT YOUR TEETH
`பல் போனால் சொல் போகும்’
முத்துப் போன்ற பற்கள் இருந்தால், அவை முகத்தின் அழகுக்கு அழகு சேர்க்கும். பற்கள் பாதிக்கப்பட்டால் பல்வேறு நோய்கள் நம்மை ஆட்டிப்படைக்கும். `பல் போனால் சொல் போகும்’ என்பார்கள் பெரியோர்கள். பற்களின் ஆரோக்கியத்தைக் காத்தால், நம் உடல் ஆரோக்கியத்தையே பாதுகாக்கலாம் என்கிறோம் மருத்துவர்கள் நாங்கள்.
பல் சொத்தை
பல் பாதிப்புகளில் முதன்மையானது, பல் சொத்தை (Tooth Decay). இது ஏற்படுவதற்கு முக்கியக் காரணம், இனிப்புகளை அதிகமாகச் சாப்பிடுவது. குறிப்பாக, பற்களில் ஒட்டக்கூடிய இனிப்பு மாவு, பிஸ்ெகட், மிட்டாய், சாக்லெட், ஐஸ்கிரீம், கேக், பேக்கரி பண்டங்கள் போன்றவற்றில் உள்ள சர்க்கரைப் பொருள் பல் இடுக்குகளில் ஒட்டிக்கொள்ளும்போது, வாயில் உள்ள பாக்டீரியாக்கள் இவற்றுடன் வினைபுரிந்து, லேக்டிக் அமிலத்தைச் சுரக்கின்றன. இந்த அமிலம் பல்லின் வெளிப்பூச்சான எனாமலை அரித்துச் சிதைக்கிறது. இதன் விளைவால் பற்கள் சொத்தையாகின்றன.
பற்களைச் சுத்தமாகப் பராமரிக்கத் தவறினாலும் பாக்டீரியாக்கள் வளர்ந்து பல் சொத்தையை உண்டாக்கும். புகைபிடிப்பது, வெற்றிலை பாக்குப் போடுவது போன்றவற்றால் பற்களில் காரை படியும். இதில் பாக்டீரியாக்கள் குஷியாக வாழும். இந்த நிலைமை நீடித்தால், பற்களில் சொத்தை விழும்.
சொத்தைப் பல்லை ஆரம்பத்தில் கவனிக்காவிட்டால், எனாமலை அடுத்துள்ள டென்டைன் பகுதிக்கும் சொத்தை பரவிவிடும். அப்போது பற்களில் கறுப்புப்புள்ளி தெரியும். அங்கு குழி விழும். இந்த நிலைமையிலும் சிகிச்சை பெறாவிட்டால், பல் கூழ் மற்றும் வேர்களும் பழுதாகிவிடும். நாளடைவில் இந்த வேர்கள் வலுவிழந்து போகும். அப்போது பற்கள் ஆட்டம் கண்டு தாமாகவே விழுந்துவிடும்.
அறிகுறி என்ன?
சொத்தைப் பல்லின் ஆரம்ப அறிகுறி, பற்கூச்சம். முக்கியமாக, இனிப்பு சாப்பிடும்போது, குளிர்ச்சியான அல்லது சூடான பானங்களை அருந்தும்போது பற்களில் கூச்சம் ஏற்படும். பிறகு பல்லில் வலி ஏற்படும். பல் உடையும். பல் ஆடும். நாளடைவில் அந்தப் பல் விழுந்துவிடும்.
சிகிச்சை என்ன?
முப்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை பல் சொத்தையாகி விட்டால் சொத்தையை ஒருவித சிமென்ட் கொண்டு மூடுவார்கள் அல்லது அந்தப் பல்லை எடுத்துவிடுவார்கள். இப்போது இந்த நிலைமை மாறியுள்ளது. சொத்தை எந்த அளவுக்குப் பல்லில் பரவியுள்ளது என்று எக்ஸ்-ரே மூலம் அறியலாம். எனாமல் மற்றும் டென்டைன் வரைக்கும் சொத்தை இருந்தால் ‘ஃபில்லிங்’ எனப்படும் நிரப்புதல் சிகிச்சை போதுமானது. சொத்தையானது பல் கூழ் வரை சென்றிருந்தால், ‘வேர் சிகிச்சை’ என்று அழைக்கப்படும் ‘ரூட் கேனால் சிகிச்சை’ (Root canal treatment) செய்ய வேண்டும்.
ரூட் கேனால் சிகிச்சை
இந்த சிகிச்சையின்போது ஈறுகளில் மயக்க மருந்தைச் செலுத்தி, பல் கூழ் வரை டிரில் செய்து, பல்லில் ஏற்பட்டுள்ள சொத்தையை துப்புரவாக அகற்றிவிட்டு, அங்குள்ள நரம்பையும் வெட்டிவிட்டு, நன்றாக சுத்தப்படுத்துகிறார்கள். அங்கு நோய்த்தொற்று இல்லை என்று உறுதி செய்த பிறகு, உடனேயோ அல்லது 15 நாள் கழித்தோ பல்லில் சுத்தப்படுத்திய குழியில் கட்டா பெர்ச்சா பிசின் (Gutta-percha resin) மற்றும் ஜிங்க் ஆக்சைடு, யூஜினால் (Eugenol) கலந்த வேதிப்பொருள் கொண்டு நிரப்புகிறார்கள்.
இதைத் தொடர்ந்து அந்தப் பல்லுக்கு கேப் போட்டு மூடிவிடுகிறார்கள். இதன் பலனால் சொத்தை சரியாகிவிடும். சிலருக்கு ரூட் கேனால் சிகிச்சை செய்ய முடியாத அளவுக்குப் பற்கள் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும். அத்தகைய பற்களை அகற்ற வேண்டியதுதான், வேறு வழியில்லை.
ஈறு வீக்கம் - ரத்தக்கசிவு
ஈறுகள்தான் பற்களைப் பாதுகாக்கும் அமைப்பு. ஈறுகள் வலுவாக இருந்தால்தான் பற்கள் விழாமல் இருக்கும். வாய் மற்றும் பற்களை சுத்தமாகப் பராமரிக்கத் தவறினாலும், பல் இடைவெளிகளில் உணவுத் துகள்கள் தங்கினாலும், குச்சி, குண்டூசி போன்றவற்றால் பல்லை குத்தினாலும், கிருமித் தொற்று ஏற்பட்டு ஈறுகள் வீங்கி வலிக்கும். பல் துலக்கும்போது இந்த ஈறுகளிலிருந்து ரத்தம் கசியும். வாய்நாற்றம் ஏற்படும். பல் ஆட்டம் கண்டு விரைவில் விழுந்துவிடும். அரிதாக சிலருக்கு `ஸ்கர்வி’ (Scurvy), ‘ஹீமோபீலியா’ போன்ற நோய்கள் காரணமாகவும் ஈறுகளில் ரத்தக்கசிவு ஏற்படலாம்.
பல் விழுந்துவிட்டால்?
விபத்து, அடிபடுதல் போன்ற காரணங்களால், பல் விழுந்துவிட்டால், அந்த இடத்தில் ஆறு மாதங்களுக்குள் செயற்கைப் பல்லை கட்டிக்கொள்வதுதான் நல்லது. அப்போதுதான் அருகில் இருக்கும் பற்கள் பலம் இழக்காமல், பாதுகாப்பாக இருக்கும். இல்லையென்றால், அந்தப் பற்கள் முன்னும் பின்னுமாக நகர்ந்து தெற்றுப் பற்கள் உருவாகும்.
பற்களில் காரை படிந்தால்...
பற்களை சரியாக சுத்தப்படுத்தத் தவறினால், பற்களில் ‘டார்டார்’ எனும் காரை படிந்துவிடும். இது வாய்க்குள் பெருகும் பாக்டீரியாவின் பெருக்கத்தால் ஏற்படுகிறது. இந்தக் காரை பல்லின் வெளிப் பூச்சான எனாமலை சிதைப்பதால், பல்லின் நிறம் மாறுகிறது. சிலருக்கு, குடிநீரில் ஃபுளூரைடு எனும் தாதுப்பொருள் அதிகமாக இருக்கும். இதனால் அவர்களுக்கு ‘டென்டல் ஃபுளூரோசிஸ்’ எனும் பிரச்னை காரணமாக பற்கள் முளைக்கும்போதே கறையுடன் முளைக்கும்.
அதிக அளவில் சில ஆன்டிபயாட்டிக் மருந்துகளை அடிக்கடி எடுத்துக்கொள்வதாலும் பல்லின் நிறம் மாறலாம். புகைபிடிப்பது, புகையிலை போடுவது, காபி, தேநீர் மற்றும் குளிர்பானங்களை அதிகமாக அருந்துவது போன்ற காரணங்களாலும் இந்தப் பிரச்னை தோன்றலாம். பல் மருத்துவரைச் சந்தித்து `ஸ்கேலிங்’ முறையில் பற்காரையை அகற்றிவிடலாம். அதன் பின்பு ‘பிளீச்சிங்’ முறையில் பற்களைச் சுத்தம் செய்து இதைச் சரிப்படுத்தி விடலாம்.
எந்தப் பற்பசை நல்லது?
பற்பசைகளில் ஃபுளோரைடு பற்பசை, சைலிட்டால் பற்பசை, ஜெல் பற்பசை, டிசென்சிடைசிங் பற்பசை, பற்காரையைத் தடுக்கும் பற்பசை எனப் பல்வேறு வகைகள் உள்ளன. பற்களுக்கு வலிமை சேர்க்கின்ற ஃபுளோரைடு கலந்த பற்பசைதான் இவற்றில் சிறந்தது. பெரியவர்களுக்கு, சிறுவர்களுக்கு என்று ஃபுளோரைடு கலந்த பற்பசை தனித் தனியாகக் கிடைக்கிறது. மருத்துவர் பரிந்துரைப்படி இதை பயன்படுத்தினால் நல்லது.
அடுத்து, ஜெல் உள்ள பற்பசையைப் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.
இதிலுள்ள சிலிக்கா பவுடர் பல் எனாமலை பாதிக்கும். பற்கூச்சம் இருந்தால், `டிசென்சிடைசிங்’ பற்பசை நல்லது. ‘ட்ரைக்ளோசான்’ (Triclosan) உள்ள பற்பசை ஈறுகளுக்கு வலிமை சேர்க்கும்; பற்களில் காரை படிவதையும் தடுக்கும். பற்பசையைப் பொறுத்த அளவில் எவ்வளவு பற்பசையைப் பயன்படுத்துகிறோம் என்பதைவிட எப்படிப் பல் துலக்குகிறோம் என்பதுதான் முக்கியம். பல்துலக்கி நிறைய பற்பசையை எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. ஒரு பட்டாணி அளவுக்குப் பற்பசை இருந்தாலே போதும்.
நல்ல டூத் பிரஷ் எது?
பல் துலக்கியில் மூன்று வகை உண்டு. சாஃப்ட், மீடியம், ஹார்டு. இவற்றில் ஹார்டு வகையை மருத்துவர்கள் பரிந்துரைப்பதில்லை. பற்கூச்சம் உள்ளவர்கள் சாப்ஃட் வகையையும் மற்றவர்கள் மீடியம் வகையையும் பயன்படுத்தலாம். ஒரு நல்ல பல்துலக்கியின் தலைப்பகுதி சிறிதாக இருக்க வேண்டும். அப்போதுதான் அது பல் வரிசையின் எல்லாப் பகுதிகளுக்கும் சென்று சுத்தம் செய்ய வசதியாக இருக்கும். கைப்பிடி கையில் பிடிப்பதற்கு வசதியாக இருக்க வேண்டும். கவர்ச்சிக்காக வளைந்து, நெளிந்து காணப்படும் பல்துலக்கி களைத் தவிர்ப்பது நல்லது. பல்துலக்கியில் உள்ள இழைகள் வளைய ஆரம்பித்தால் உடனே பல்துலக்கியை மாற்றிவிட வேண்டும். பொதுவாக, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பல் துலக்கியை மாற்றுவது நல்லது.
எப்படிப் பல்லைத் துலக்குவது?
காலையில் எழுந்ததும் ஒருமுறை, இரவு தூங்கச் செல்லும் முன்பு ஒருமுறை என இருமுறை பல் துலக்க வேண்டும். மூன்று நிமிடங்களுக்குப் பல் துலக்குவது நல்லது. பற்களை வேகவேகமாகவும், முன்னும் பின்னுமாகவும் அழுத்தமாகத் தேய்த்தால், பற்கள் விரைவில் தேய்ந்துவிடும். இதனைத் தவிர்க்க, பல்துலக்கியை 45 டிகிரி கோணத்தில் பிடித்துக் கொண்டு, மேல் தாடைப் பற்களை மேலிருந்து கீழும், கீழ்த் தாடைப் பற்களைக் கீழிருந்து மேலும் வட்டச் சுழற்சியில், மிதமான அழுத்தம் கொடுத்து பல் துலக்க வேண்டும். பற்களின் வெட்டும் பரப்புகளை முன்னும் பின்னுமாகத் துலக்க வேண்டும். நாக்கைச் சுத்தப்படுத்தத் தனியாக `வழிப்பான்’ தேவையில்லை. பல்துலக்கியைக் கொண்டே நாக்கைச் சுத்தப்படுத்தலாம்.
ஃபிளாஸ்ஸிங் என்றால் என்ன?
பல் துலக்கும்போது பல்லின் முன்புறம், மேல்புறம், உட்புறம் மட்டுமே சுத்தப்படுத்த முடியும். இரண்டு பற்களுக்கு இடையில் உள்ள பகுதிக்கு பல்துலக்கியின் இழைகள் நுழையாது. ஆனால், இங்குதான் உணவுத்துகள் சிக்கி, வாய்நாற்றத்துக்கு வழி அமைக்கிறது. தினமும் பற்களை ஃபிளாஸ்ஸிங் (Flossing) செய்வதன் மூலம் இதைத் தவிர்க்கலாம். ‘டென்டல் ஃபிளாஸ்ஸிங் நூல்’ என்றே இதற்கெனப் பிரத்யேகமாக உள்ளது. பல் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் இதை வாங்கிப் பயன்படுத்தலாம். இரு பற்களுக்கு இடையில் இந்த நூலைச் செலுத்தி இழுக்க வேண்டும். அதாவது, மேற்தாடைப் பற்களை மேலிருந்து கீழும் கீழ்த்தாடைப் பற்களைக் கீழிருந்து மேல்நோக்கியும் மெதுவாக இழுக்கும்போது, அங்குள்ள உணவுத்துகள்கள் மற்றும் அழுக்குகள் வெளியேறிவிடும்.
மவுத் வாஷ் பயன் தருமா?
பற்களை வலுவாக்க, ஈறுகளை பலப்படுத்த, பல் கூச்சத்தைப் போக்க, புத்துணர்வு தருவதற்கு என்று பல்வேறு மவுத் வாஷ் திரவங்கள் கிடைக்கின்றன. இவற்றை அடிக்கடி பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. தேவைப்படும்போது பல் மருத்துவரின் ஆலோசனையுடன் பயன்படுத்துவதே நல்லது. காரணம், மவுத் வாஷை பயன்படுத்தும்போது தீமை தருகின்ற பாக்டீரியாக்களுடன், வாய்க்குள் இருக்கின்ற நன்மை தரும் பாக்டீரியாக்களும் அழிந்துவிடுகின்றன. இது வாயின் ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல. எனவே, மவுத் வாஷ் விஷயத்தில் எச்சரிக்கை அவசியம்.
செயற்கைப் பல்
ஒரு பல் விழுந்துவிட்டால் அதன் அருகில் உள்ள மற்ற பற்கள் அந்த இடத்தை நோக்கி நகர ஆரம்பிக்கும். இதனால் அந்தப் பற்கள் கோணலாகிவிடும். இதைத் தவிர்க்கவே, பல் எடுத்த இடத்தில் செயற்கை பல்லைக் கட்டுகிறார்கள். அருகருகில் இருக்கும் பற்களைத் தேவைப்படும் அளவுக்குச் செதுக்கி, இடைவெளியில் செயற்கைப் பல்லைக் கட்டுவது ‘பல் பாலம்’ (Dental Bridge) எனும் சிகிச்சைமுறை. இந்த முறையில் அருகில் உள்ள பற்களின் ஆதரவுடன்தான் செயற்கைப் பல் நிற்கும். அருகில் உள்ள பற்களில் சேதம் ஏற்பட்டால், இந்தச் செயற்கைப் பல்லும் பாதிக்கப்படும். அப்போது மீண்டும் மீண்டும் பல்லை மாற்ற வேண்டியது வரும். அல்லது செயற்கைப் பல் கட்டமுடியாத நிலைமையும் ஏற்படும். இதனைத் தவிர்க்க ‘இம்ப்ளான்ட்’ (Dental implant) சிகிச்சைமுறை மேற்கொள்வதுண்டு.
இம்ப்ளான்ட் சிகிச்சை
இயற்கையாக பல்லுக்கு வேர் இருப்பது போலவே ஸ்குரு போட்டு செயற்கைப் பல் கட்டும் முறைக்கு ‘இம்ப்ளான்ட் சிகிச்சை’ என்று பெயர். டென்டல் சிடி ஸ்கேன் மூலம் எலும்பின் அடர்த்தி, ஆழம், பல் கட்ட வேண்டிய இடத்தில் நரம்புகள், ரத்தக்குழாய்கள் எந்த நிலைமையில் உள்ளன என்பது போன்ற பல செய்திகளைத் தெரிந்துகொண்டு, நரம்பு மற்றும் ரத்தக்குழாய்க்குப் பாதிப்பு இல்லாமல், அச்சு அசலாக இயற்கை பல் போலவே உள்ள செராமிக் பற்களைப் பொருத்துவது இம்ப்ளான்ட் சிகிச்சை. முதலில் பல் கட்ட வேண்டிய இடத்தில் ஸ்குரு போட்டுவிடுகிறார்கள். குறிப்பிட்ட கால இடைவெளியில் அதன் மேல் செயற்கை பல்லைக் கட்டிவிடுகிறார்கள். இதன் பலனால், செயற்கைப் பல் கழன்றுவிடுமோ என்கிற பயமில்லை. இப்படி ஒன்றுக்கு மேற்பட்ட பற்களைக் கட்டமுடியும்.
நவீன சிகிச்சைகள்
இன்று வசீகரமான பற்களை விரும்புவோரின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. அதனால் பல்லின் ஆரோக்கியம் காப்பதற்கு முக்கியத்துவம் தருவதும் மக்களிடம் அதிகரித்து வருகிறது. ஆகவே, இவர்களுக்கு உதவும் வகையில் பல் சிகிச்சையில் பல்வேறு நவீன தொழில்நுட்பங்களும் வந்துகொண்டே இருக்கின்றன.
உதாரணத்துக்கு, இப்போதெல்லாம் திருமணம் நிச்சயம் செய்த பின்னர், நிறம் மாறிய பற்களைச் சரி செய்யவும், பல் இடைவெளியை சரிசெய்யவும், உடைந்த பல்லை மாற்றவும் அவசரம் அவசரமாக சிகிச்சைக்கு வருகிறார்கள். இவர்களுக்கு மிகவும் குறுகிய காலத்தில் செய்யப்படும் ‘டூத் லேமினேஷன் சிகிச்சை’ (Tooth lamination), ‘வெநீர் சிகிச்சை’ (Veneer), ஈறு நோய்களை சரி செய்யும் லேசர் சிகிச்சை போன்றவை உதவுகின்றன. தாடைக் கோளாறுகளால் இம்ப்ளான்ட் சிகிச்சை செய்ய முடியாமல் தவிப்பவர்களுக்கு தாடை அறுவை சிகிச்சையும், எலும்பு கிராஃப்டிங் (Bone Grafting) சிகிச்சையும் வந்துள்ளன.
பற்களைப் பாதுகாக்க...
1. கரி, உப்பு, மண், செங்கல்பொடி, சாம்பல், நெல்உமி போன்றவற்றால் பல் துலக்கக் கூடாது.
2. தினமும் ஒரு கேரட் அல்லது ஒரு வெள்ளரி சாப்பிட்டால், பல் சுத்தம் அடைந்து நலமுடன் இருக்கும்.
3. சாக்லெட், மிட்டாய், பிஸ்ெகட், இனிப்பு மாவு, சூயிங்கம், ஐஸ்கிரீம் போன்றவற்றை அடிக்கடி சாப்பிடக் கூடாது. அப்படிச் சாப்பிட நேர்ந்தால், உடனே தண்ணீரில் வாயை நன்றாகக் கொப்புளித்துவிட வேண்டும்.
4. குண்டூசி, குச்சி போன்றவற்றால் பல் ஈறுகளைக் குத்தி அழுக்கு எடுக்கக்கூடாது.
5. குளிர்பானங்கள் குடிப்பதைக் குறைத்துக் கொள்வது நல்லது.
6. குழந்தைகளுக்கு விரல் சூப்பும் பழக்கம் இருந்தால் சிறு வயதிலேயே அதைத் தடுத்துவிட வேண்டும். தவறினால், தெற்றுப்பற்கள் தோன்றக்கூடும்.
7. தினமும் பால் அருந்துங்கள். அதிலுள்ள கால்சியம் பல்லுக்குப் பாதுகாப்பு தரும்.
8. போதுமான அளவுக்குத் தண்ணீர் அருந்துங்கள். வாய் வறட்சியை இது போக்கும். இதனால் வாய்நாற்றம் தவிர்க்கப்படும்.
9. நகம் கடிக்கக் கூடாது. காரணம், அதன் மூலம் கிருமிகள் வாய்க்குள் சென்று நோய்களை உண்டுபண்ணும்.
10. பாட்டில் மூடி போன்ற கடினமான பொருட்களை பல்லால் கடித்துக் கழற்ற முயற்சிக்காதீர்கள். இப்படிச் செய்வதால் பற்கள் மட்டுமல்லாமல் ஈறு, உதடு மற்றும் நாக்கு சேதமாகும்.
11. மது, புகையிலை, வெற்றிலை, பான்
மசாலா போன்றவை பற்களுக்கு எதிரிகள். புற்றுநோய்க்கு வழி அமைக்கும். இவற்றை அண்டவிடாதீர்கள்.
12. நீரிழிவு நோயாளிகளுக்குப் பல் தொடர்பான பிரச்னைகள் அடிக்கடி வரும். ரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தினால் இதைத் தவிர்க்கலாம்.
13. ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பல் மருத்துவரிடம் ஆலோசனை பெறும் பழக்கம் இருந்தால், பல்லில் ஏற்படுகிற பல பிரச்னைகளை ஆரம்பத்திலேயே தடுத்துவிட முடியும்.
நோய் அரங்கம்டாக்டர் கு. கணேசன்
No comments:
Post a Comment