M.R.RADHA , FIRST STAGE PLAY,FILM ACTOR
BORN 1907 APRIL 14 - 1979 SEPTEMBER 17
பிறப்பு
எம்.ஆர்.ராதா 1907 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 இல்[1][2] சென்னையில் பிறந்தார். மதராஸ் ராசகோபால் அவர்களின் மகன் ராதாகிருட்டிணன் என்பதன் சுருக்கமே எம்.ஆர்.ராதா. ராணுவவீரராகப் பணிபுரிந்த ராதாவின் தந்தை உருசிய எல்லையில் பஸ்ஸோவியா என்னுமிடத்தில் போரில் மரணமடைந்தார். இவருக்கு ஜே.ஆர்.நாயுடு என்னும் ஜானகிராமன் என்ற அண்ணனும் பாப்பா என்னும் தம்பியும் இருந்தனர். [3]
சிறுவயதில் தந்தையை இழந்த ராதா பள்ளிக்குப் போகாமல் பொறுப்பற்று சுற்றித்திரிந்தார். பிறகு தாயுடன் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு ஓடிவந்து ஆலந்தூர் பாய்ஸ் நாடகக் கம்பெனியில் இணைந்தார். பின்னர் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி உள்ளிட்ட பல கம்பெனிகளில் பணியாற்றினார்.
குடும்பம்
இராதாவிற்கு சரசுவதி, தனலெட்சுமி, பி.எஸ்.இராசம் என்னும் மனைவிகள் இருந்தனர். [4]
நாடகத்தில் தன்னுடன் நடித்த பிரேமாவதி என்பவர் ராதாவுடன் ஒத்த அரசியல் மற்றும் கருத்துச் சாய்வு கொண்டிருந்தார். அவரைக் காதலித்து மணந்து கொண்டார். சில ஆண்டுகளில் அவர் அம்மை நோயால் இறந்து விட்டார்.[5] அதே நோயினால் அவரது மகன் தமிழரசனும் இறந்து விட்டான்.
பின்னர் கீதா என்னும் இலங்கைப் பெண்ணை காதல் திருமணம் செய்துகொண்டார்.
இவர் மகன்களான எம்.ஆர்.ஆர்.வாசு, ராதாரவி, மகள்களான ராதிகா மற்றும் நிரோஷா ஆகியோர் திரைப்படத்துறையில் நடித்துள்ளனர்.
எம். ஜி. ஆர். கொலை முயற்சி
முதன்மை கட்டுரை: ம.கோ.இரா. கொலை முயற்சி வழக்கு, 1967
1967, சனவரி 12 ஆம் நாள் எம். ஜி. ஆரை அவரது இராமவரம் வீட்டில் எம். ஆர். இராதா சுட்டார். அந்த எம். ஜி. ஆர். கொலை முயற்சி வழக்கில் தண்டனை பெற்ற இராதா 1967 பிப்ரவரி 12 ஆம் நாள் முதல் 1971 ஏப்ரல் 27 ஆம் நாள் முதல் சிறையில் இருந்தார்.[6] அப்பொழுது இராதாவின் மகளான ராணி என்றழைக்கப்பட்ட ரஷ்யாவுக்கு திருமணம் நடந்தது. இராதாவால் அதில் கலந்துகொள்ள முடியவில்லை. காமராஜரின் தூண்டுதலின்பேரில்தான் இராதா எம்.ஜி.ஆரைச் சுட்டார் என்ற வதந்தி நிலவியதால் அவர் திருமணத்திற்குத் தலைமை தாங்கவில்லை, ஈ.வெ.இராமசாமி தலைமையேற்றார். திரையுலக நடிகர்களில் ஜெமினி கணேசன்-சாவித்திரி தம்பதியைத் தவிர வேறு பெரிய நடிகர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை.
1968 இறுதியில் இராதாவிற்கு திருச்சியில் தங்கியிருக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டுடன் ஜாமீன் கிடைத்தது. பின்னர் உச்சநீதிமன்ற தீர்ப்பிற்குப்பின் இராதா விடுதலையானார்.[சான்று தேவை] விடுதலையானபின் தனது வெற்றி நாடகங்களான தூக்குமேடை, ரத்தக்கண்ணீர், லட்சுமிகாந்தன் கொலை வழக்கு ஆகிய நாடகங்களின் தொகுப்பாக கதம்பம் என்ற பெயரில் நாடகம் நடத்தினார். ராதாவே எம்.ஜி.ஆருடன் பேசி நாடகத்திற்குத் தலைமை தாங்குமாறு அழைத்தார்; அவரும் ஒப்புக் கொண்டார். எனினும் ஏதோ காரணங்களுக்காக அவர் கலந்துகொள்ளவில்லை. பின்னர் ஈ.வெ.இராமசாமியின் இறுதிச் சடங்கின்போது எம்.ஜி.ஆரும் இராதாவும் சந்தித்துக் கொண்டனர் என்றும் அப்போது அவர் எம்.ஜி.ஆருக்கு தனதருகில் இருப்பவர்களை நம்பக்கூடாது என்று எச்சரிக்கை செய்ததாகவும் கூறப்படுகிறது.
மு. க. முத்து நடிப்பில் வந்த சமையல்காரன் என்ற திரைப்படத்திலும் பின்னர் ஜெய்சங்கருடன் நான்கு படங்களிலும் இராதா நடித்தார். 1975-ல் இந்திரா காந்தி அரசின் நெருக்கடி நிலை அறிவிப்பின்பின் உள்நாட்டுப் பாதுகாப்புப் பேணல் சட்டம் மிசாவின்கீழ் மீண்டும் கைது செய்யப்பட்டார். அப்போது விடுதலைக்கீடாக ஈ.வெ.இராமசாமியுடன் தொடர்பில்லை என்று எழுதித்தர வேண்டும் என்ற நிபந்தனையை ஏற்க மறுத்துவிட்ட அவர் பதினோரு திங்கள் சிறைக்குப்பிறகு மைய அரசு அமைச்சர்களின் தலையீட்டின் பேரில் வெளிவந்தார்.
அதன்பின் சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் வெற்றிகரமாக நாடகம் நடத்திவிட்டு மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டதையடுத்து திருச்சி திரும்பினார். 1979-ம் ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதி இறந்தார். அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள எத்தனித்தாலும் அவரது பாதுகாப்புக் கருதி இராதா குடும்பத்தினர் அவரை வர வேண்டாம் எனக் கூறிவிட்டனர். அரசுமரியாதையையும் ஏற்க மறுத்துவிட்டனர்.
நடிப்பு
ராதா நாடகத்துறையில் கொடிகட்டிப் பறந்த காலகட்டத்தில் சாமிநாதன் என்பவர் அவரை வைத்து ராஜசேகரன் ஏமாந்த சோணகிரி என்னும் படத்தை 1937-ல் தயாரித்து வெளியிட்டார். அதன்பிறகு 1942 வரை சந்தனத்தேவன், பம்பாய் மெயில், சத்தியவாணி, சோகாமேளர் ஆகிய படங்களில் நடித்த ராதா அதன்பிறகு சினிமாவிற்கு முழுக்கு போட்டுவிட்டு நாடகத்துறைக்கே திரும்பினார்.
பிறகு பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து 1954ல் திருவாரூர் கே.தங்கராசு என்பவர் எழுதிய ரத்தக்கண்ணீர் [7] என்ற வெற்றி நாடகத்தை திரை வெளியீடாக ரத்தக்கண்ணீர் என்ற படத்தின் மூலம் திரைப்படத்துறைக்குத் திரும்பினார். கதாநாயகனாக திரைத்துறையில் நுழைந்த ராதா அதன்பிறகு பெரும்பாலும் வில்லன் மற்றும் நகைச்சுவைப் பாத்திரங்கள் ஏற்று நடிக்கத்தொடங்கினார். 125 படங்கள் வரை நடித்திருந்தாலும் ராதா நாடகங்கள் நடத்துவதையும் நடிப்பதையுமே விரும்பினார். ராதாவின் நாடகங்களில் புகழ்பெற்றது 'இழந்தகாதல்' என்னும் நாடகம். அதில் ஜெகதீஷ் என்னும் பாத்திரத்தில் ராதாவின் நடிப்புப் பலராலும் பாராட்டப்பட்டது.
எம்.ஜி.ஆரைச் சுட்ட வழக்கிற்குப் பிறகு படங்களில் நடிப்பதைக் குறைத்துக்கொண்டார்.
அரசியல் வாழ்வு
துவக்கத்தில் ஈ.வெ.இராமசாமியுடன் தொழில் அடிப்படையில் சில மோதல்கள் ஏற்பட்டாலும்,[8] பின்னாளில் அவரது கொள்கைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டு திராவிடர் கழகத்தின் முன்னணி ஆதரவாளராக இருந்தார்.[9] காமராஜரின் தனிப்பட்ட நண்பராகவும் இருந்த இவர் ஈ.வெ.இராமசாமி காங்கிரசை ஆதரித்தபோது காமராஜருக்காக தேர்தலில் வாக்குசேகரித்தார்.[8] இவரது அரசியல் சாய்வினாலும் தொழிலும் எம். ஜி. ஆருடன் கருத்து வேறுபாடு கொண்டிருந்தார்.
தனது சீர்திருத்தக் கருத்துக்களையும், பிராமணர் எதிர்ப்பு கருத்துக்களையும், திராவிட இயக்கக் கருத்துக்களையும் இவர் தனது நாடகங்களிலும் திரைப்படங்களிலும் வெகுவாகப் பரப்பினார். இருந்தும் இவரது எதிர்ப்பாளர்களும்கூட இவரது நடிப்பை ரசித்தனர்.[10]
நடித்த படங்கள்
எம். ஆர். ராதா நடித்து வெளிவந்த சில திரைப்படங்கள்:
ராசசேகரன்
சந்தனத்தேவன்
பம்பாய் மெயில்
சத்தியவாணி
சோகாமேளர்
ரத்தக்கண்ணீர்
ஆயிரம் ரூபாய்
கை கொடுத்த தெய்வம்
பாவ மன்னிப்பு
சித்தி
புதிய பறவை
பலே பாண்டியா
பெற்றால்தான் பிள்ளையா
தாய்க்குப்பின் தாரம்
குமுதம்
கற்பகம்
தாயை காத்த தனயன்
பாகப்பிரிவினை
பணம் பந்தியிலே
நல்லவன் வாழ்வான்
இராதாவின் நாடகங்கள்
ரத்தக்கண்ணீர்
கீமாயணம்
லட்சுமிகாந்தன்
தூக்குமேடை
ராதாகிருஷ்ணன் என்ற இயற்பெயர் கொண்ட எம்.ஆர். ராதா பிறந்தது சென்னையிலுள்ள சூளை, வருடம் 1907
ஏப்ரல் 14,
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
தந்தை ராஜகோபால் நாயுடு முதலாம் உலகப் போரில் ரஷ்ய எல்லை பஸ்ஸோவியாவில் மரணமடைகிறார், தாய் ராசம்மமாள். உடன் பிறந்தவர்கள் அண்ணன் ஜானகிராமன், தம்பி பாப்பா. சிறுவனாக இருந்தபோது அம்மாவிடம் கோபித்து, சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மூட்டை தூக்கியபோது தொடங்கியது ராதாவின் கலக வாழ்க்கை.
எழும்பூரிலிருந்து சிறுவன் ராதாவை ஆலந்தூர் பாய்ஸ் கம்பெனி உரிமையாளர் ஆலந்தூர் டப்பி அரங்க நாயுடு சிதம்பரம் அழைத்து செல்கிறார். அங்கிருந்து தொடங்குகிறது ராதாவின் நாடக வாழ்க்கை.
ஆலந்தூர் பாய்ஸ் கம்பெனியிலிருந்து விலகி மைசூர் நாடக கம்பெனி, பிறகு சாமண்ணா நாடக கம்பெனி, அப்புறம் ஜெகந்நாதய்யர் கம்பெனி,
1924 ஆம் ஆண்டு ராதா நடித்த 'கதரின் வெற்றி' நாடகத்தை காந்தி, கஸ்தூரி பாய், பாரதி, ராஜாஜி ஆகியோர் கண்டு ரசிக்கிறார்கள். நாடக நடிகர் என்றால் ராதா மகிழ்ச்சியடைவார். நடிப்புன்னா ரீ-டேக் இல்லாமல் மூணு மணி நேரம் நாடகத்தில் நடிக்கிறதுதான் என்பது ராதாவின் வாதம். சினிமா?
அது ரிட்டையர்ட்மெண்ட். மெக்கானிக்கும், எலெக்ட்ரீஷியனும் வாழ்க்கை ப்ளோவில் அவர் கற்றுக்கொண்டவை. கல்யாணத்திற்கும் இது உதவியது.
அந்தக் காலத்தில் நாடக நடிகர்களுக்கு யார் பெண் தருவது. மெக்கானிக் என்று தனது பார்ட் டைம் வேலையை சொல்லி முதல் மனைவி சரசுவதியை திருமணம் செய்தார் ராதா. சிறிது காலத்துக்குப் பின் சரசுவதியின் தங்கை தனலட்சுமியையும் மணந்து கொண்டார்.
ராதாவின் நாடகங்கள் அனைத்தும் சமூக சீரழிவுக்கு எதிரானவை. அதனாலேயே நாடகம் தொடங்கும் முன் நிஜ ஆகூசனுடனே கொட்டகை வாசல் திறக்கும். அதிலும் போர் வாள் நாடகத்தில் புராண ஆபாசங்களை போட்டு கிழித்திருப்பார் ராதா. விளைவு, சென்னையில் போர் வாளுக்கு தடை விதிக்கப்பட்டது.
தடை செய்யப்பட்ட ராதாவின் இன்னொரு நாடகம், ராமாயணம். விடுவாரா ராதா? அதே நாடகத்தை தேவாசுரப் பாடல் என பெயர் மாற்றி அரங்கேற்றினார். ஆனாலும் பல இடங்களில் அடிதடி. இறுதியில் நாடகம் நடக்கும்போது ராமர் வேடத்திலேயே போலீசார் ராதாவை கைது செய்தனர்.
ராதாவின் கலை உச்சம், ரத்தக் கண்ணீர். திருவாரூர் தங்கராசு எழுதிய இந்நாடகம் 1949 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் நாள் திருச்சியில் அரங்கேறியது. ரத்தக்கண்ணீரை காங்கிரஸ் கட்சி பிரமுகர் பி.ஏ. பெருமாள் முதலியார் சினிமாவாக தயாரிக்க முன்வந்தபோது, அதில் நடிக்க ஒரு லட்சத்து இருபத்தைந்தாயிரம் ரூபாய் சம்பளம் கேட்டார் ராதா.
அந்தக் காலத்தில் ஒளவையார் வேடத்தில் நடிக்க கே.பி. சுந்தரம்மாள் அதிகபட்சமாக ஒரு லட்ச ரூபாய் சம்பளமாக பெற்றிருந்தார். அதைவிட 25,000 ரூபாய் அதிகமாக தந்தால் நடிக்கிறேன் என்று ராதா கூற, மறுபேச்சின்றி அந்த சம்பளம் அவருக்கு தரப்பட்டது. ராதாவை சினிமா நடிகராக்கிய படம் ராஜசேகரன். நாடகமானாலும், சினிமாவானாலும் பொது விதிகளை உடைப்பவர் ராதா.
இழந்த காதல் நாடகத்தில் மனைவியை சவுக்கால் அடித்து கழுத்தை நெரித்து நாற்காலியில் உட்கார வைத்து பதினைந்து நிமிடம் பேசுவார். எப்படி? ஆடியன்சுக்கு முதுகு காட்டியபடி. நாடகத்தில் முகத்தை காட்ட வேண்டும், முதுகை காட்டக்கூடாது என்ற பொது விதி இழந்த காதலில் பொடிப் பொடியானது.
மயிலாடுதுறை தில்லையாடி வள்ளியம்மையை காண வந்த காந்தியடிகள் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார். எங்கும் மக்கள் வெள்ளம். அந்நிய துணிகளை விலக்க வேண்டும் என்று தனது பேச்சில் வலியுறுத்துகிறார் காந்தி. கேட்டுக் கொண்டிருக்கும் ஜனம் உணர்ச்சிவசப்படுகிறது. ஆனால், ஒரேயொருவர் மட்டும் அங்கேயே, அப்போதே தான் போட்டிருந்த அந்நிய துணிகளை கழற்றி எறிகிறார். நல்லவேளை, உள்ளாடை உள்ளூர் தயாரிப்பு. இல்லையென்றாலும் அவர் கவலைப்பட்டிருக்க மாட்டார்.
சுற்றி நின்றிருந்தவர்கள் நிலைதான் தர்ம சங்கடமாகியிருக்கும்.நியாயம் என்று தோன்றியதை எந்த சூழலிலும் செய்யத் துணிந்தவர் நடிகவேள் எம்.ஆர். ராதா. மேலே உள்ளது சின்ன உதாரணம். ராதாவை எப்படி வகைப்படுத்தலாம்? நாடக நடிகர்... சினிமா நடிகர்... மெக்கானிக்... எலெக்ட்ரீஷியன்... பெரியாரிஸ்ட்... கலகக்காரர்...
இறுதி மூச்சுவரை ராதா பின்பற்றியது பெரியார். இந்தியாவின் சிறந்த தலைவர் யார் என்று கேட்டால் பெரியார் என்றே சொல்வார் ராதா. அதே நேரம் தி.க. உட்பட எதிலும் உறுப்பினர் அல்ல ராதா. இறுதி வரை சுதந்திர பறவையாக வாழ்ந்தவர் அவர். ராதா கலகக்காரரா என்றால் இல்லை. வாழ்வதற்காக கூழை கும்பிடு, குறுக்கு வழி என்றிருப்பவர்கள் மத்தியில், தன்மானத்தை இழக்காத ராதாவின் சுயமரியாதை வாழ்க்கை மற்றவர்களுக்கு கலகமாக தோன்றியதில் வியப்பில்லை.
எம்.ஆர். ராதா நடிகவேள் ஆனது 1952-ல். திருச்சி தேவர் மன்றத்தில் ராதா போர் வாள் நாடகத்தை நடத்தினார். அப்போது பெரியார் முன்னிலையில் பட்டுக்கோட்டை அழகிரிசாமி அளித்த பட்டம்தான் நடிகவேள். பெரியாரின் 101வது பிறந்தநாளான 17-09-1979 அன்று பெரியார் இறந்த நேரமாக காலை 7.25 மணிக்கு உயிர் துறந்தார்
எம்.ஆர். ராதா. தனது 72 ஆண்டு வாழ்க்கையில் அவர் புரிந்த பகுத்தறிவு பிரச்சாரமும், சமூக சீரழிவுக்கு எதிரான துணிச்சலான போராட்டங்களும் அளப்பரிய. அன்றைய பெருமைக்குரிய இம்பாலா காரில் வைக்கோல் ஏற்றி கார் வெறும் பெயிண்ட் அடித்த தகர டப்பாதான் என்று சொன்னவர் அவர். ராதாவின் சட்டென்று மாறும் மாடுலேஷன் குரலா, குறும்பு தெறிக்கும் நடிப்பா, பகுத்தறிவு பளீரிடும் வசனமா... எது அவரை தனித்துவப்படுத்துகிறது?
இவை அனைத்துமே என்றாலும், பணத்துக்காகவும், புகழுக்காகவும் முதுகு வளைக்காத அந்த நேர்மையான துணிச்சல்... இன்று வரை எந்த நடிகனிடமும் காணக் கிடைக்காதது.
தென்னிந்திய பத்திரிக்கையாளர்கள் சங்கத்தில் ராதா ஒரு முறை உரையாற்றினார். சினிமாக்காரர்களை உயர்த்தாதீர்கள் என்பதாகியிருந்தது அவரது உரை. சினிமாவில் உழைப்பு குறைவு, கூலி அதிகம் என்றவர் முத்தாய்ப்பாக இவ்வாறு சொன்னார் :
ஒரு அலுவலகத்தில் அல்லது ஒரு தொழிலில் ஈடுபட்டபோது தவறு செய்தால் தண்டனை தருவார்கள் அல்லது எச்சரிக்கையாவது செய்வார்கள். ஆனால் சினிமாவில் ஒரு காட்சியில் சரியாக நடிக்காவிட்டால் நாற்காலியில் அமரச் செய்து பேன் போட்டு ஆப்பிள் ஜூஸ் கொடுப்பார்கள். அதனால்தான் சினிமாக்காரர்களை உயர்த்த வேண்டாம் என்கிறேன்.
எம்.ஆர். ராதா நாடக மேடைகளில் வாழ்ந்தவர். ஆனால் நிஜ வாழ்க்கையில் ஒருபோதும் நடித்திராதவர். நாடகக்காரர், பகுத்தறிவுவாதி, சினிமா நடிகர், பெரியாரின் தொண்டர், அதிரடிப் பேச்சாளார், குடும்பத் தலைவர், சிறைச்சாலைக் கைதி என்று அவருடைய வாழ்க்கையில் ஏகப்பட்ட பாத்திரங்கள். ஆனால் எதிலுமே அவர் அரிதாரம் பூசியதில்லை. ராதா, ராதாவாகவே வாழ்ந்தார்.
தமிழ் நாடகத் துறைக்கு அவர் செய்திருக்கும் பங்களிப்பு மிகப்பெரியது. தமிழகத்தில் நாடகங்களின் பொற்காலத்தில் ‘நாடக உலக சூப்பர் ஸ்டாராக’ வலம் வந்தவர் எம்.ஆர். ராதாவே. அவரது நாடக உலக வாழ்க்கையிலிருந்து சில பகுதிகள் இங்கே.
'பதிபக்தி' என்ற நாடகத்தில் எம்.ஆர். ராதாவுக்கு சி.ஐ.டி வேடம். ஒரு மோட்டார் சைக்கிளிலேயே மேடைக்கு வருவார் ராதா. மக்கள் மேல் பாய்ந்துவிடுவதுபோல மேடையின் ஓரம்வரை வேகமாக ஓட்டிக்கொண்டு வந்து, லாகவமாக பிரேக் பிடித்து அரை வட்டமடித்து நிற்பார். கைதட்டல், விசில்கள் பறக்கும். இப்படிச் சின்னச் சின்ன விஷயங்களால் ராதா பிரபலமடையத் தொடங்கினார். ராதா மேடையேறினாலே மக்களின் ஆரவாரம் அடங்க வெகு நேரம் பிடித்தது.
நாடகத்தில் போலீஸ் வருவதுபோல காட்சி இருக்கும். அப்போது ராதா உடன் நடிப்பவர் பயப்படுவதுபோல நடிப்பார். உடனே ராதா வசனம் பேசுவார். 'ஏன்டா பயப்படுறே? போலீஸ்னா என்ன பெரிய கொம்பா? (ரசிகர்களைப் பார்த்து கைநீட்டி) எல்லாம் ஓசி டிக்கெட்ல முன்னாடி உட்கார்ந்திருக்கான் பாரு. காசு கொடுத்தவன்லாம் பின்னாடி உட்கார்ந்திருக்கான்.' ராதாவின் இந்த நக்கல் தாங்காமல், ஓசி டிக்கெட்டில் வந்தவர்கள் எழுந்து செல்வதும் உண்டு.
சேலத்தில் ஓரியண்டல் தியேட்டர்ஸ் நடத்திய ‘இழந்த காதல்' நாடகப் போஸ்டர்களில் 'எம்.ஆர். ராதாவின் சவுக்கடி ஸீனைக் காணத் தவறாதீர்கள்' என்று விளம்பரப்படுத்தப்பட்டது. அந்தக் காட்சி அவ்வளவு பிரபலம். காரணம், நாடகம் என்றாலே நடிகர்கள் மேடையிலே நின்றபடி ரசிகர்களைப் பார்த்துத்தான் பேச வேண்டும். முதுகைக் காட்டியபடி ஒரு வசனம்கூட பேசக்கூடாதென்பதே நாடக இலக்கணம். ஆனால் 'இழந்த காதல்' இறுதிக் காட்சியில் ராதா, கதாநாயகியைப் பிடித்து நாற்காலியில் தள்ளுவார். தன் இரண்டு கைகளையும் நாற்காலியில் ஊன்றியபடி கதாநாயகியிடம் பேச ஆரம்பிப்பார். பதினைந்து நிமிட வசனம். பதினைந்து நிமிடங்களும் ரசிகர்கள் அவரது முதுகைத்தான் பார்க்க முடியும். முகபாவனைகளை, கைகளின் அசைவினைக் காண முடியாது. இருந்தாலும் ரசிகர்கள் அதனை ஆரவாரமாக ரசித்தார்கள். சுருண்டு கிடக்கும் அவரது தலைமுடிகூட அங்கே நடித்துக் கொண்டிருந்தது.
நாடகம் தொடங்குவதற்கு முன்பு பூஜை செய்வது என்பது பொதுவான பழக்கம். ஆனால் ராதா, தமிழ்த்தாய் வாழ்த்துபாடி தொடங்குவார். ராதா நாடகத்துறைக்குள் நுழைந்த காலத்தில் மைக் எல்லாம் கிடையாது. கடைசி வரிசையில் உட்கார்ந்திருக்கும் ரசிகனுக்கும் வசனம் கேட்கும் வகையில் தொண்டை கிழிய கத்தித்தான் பேச வேண்டியதிருந்தது. எனவே ஒவ்வொரு இரவும் நாடகம் முடிந்தபிறகும் ராதா, மேக்கப் அறைக்குள் வருவார்.
ஒரு பெரிய குண்டா அவருக்காகக் காத்திருக்கும். வாயை மட்டும் நீரால் துடைத்துவிட்டு உட்காருவார். குண்டாவில் பாதி அளவுக்குப் பழைய சோறு, மீதி அளவுக்குச் சிறு வெங்காயம் நிரம்பியிருக்கும். அவ்வளவையும் மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார். மற்றவர்கள் என்றால் நள்ளிரவில் பழையதும் சின்ன வெங்காயமும் சாப்பிட்டால் ஜன்னி வந்துவிடும். ஆனால் மேடையில் தன் சக்தியை எல்லாம் பிரயோகித்து நடித்துவிட்டு வந்த பின் அந்த உணவு ராதாவுக்குத் தேவையானதாகவே இருந்தது. அவரது குழுவிலிருந்த சிறுவர்களுக்கு, ராதாவுக்காக வெங்காயம் உரிப்பதுவும் முக்கியமான வேலையாக இருந்தது.
நாடகத்துக்கான வசனங்களை ராதா உள்வாங்கிக் கொள்ளும் விதமே அலாதியானது. ‘அறிவு, ஆரம்பிக்கலாமா?' கேட்டுவிட்டு நாற்காலியில் சாய்ந்து கண்களை மூடி உட்கார்ந்து கொள்ளுவார் ராதா. அவரது குழுவிலிருந்த அறிவானந்தம் என்ற சிறுவன் வசனங்களை வாசிக்க ஆரம்பிப்பான். ராதாவிடமிருந்து பதிலோ, அசைவோ இருக்காது. அவர் தூங்கி விட்டாரோ என்று நினைத்து அறிவு நிறுத்துவான்.
‘ம்..' என்று குரல் கொடுப்பார் ராதா. இப்படி வசனங்களை தொடர்ந்து மூன்று நாள்கள் வாசித்தால் போதும். அதற்குப் பின் ராதாவுக்குப் பாடம் தேவையில்லை. அவரது ஞாபக சக்தி அந்த அளவுக்கு அபாரமானது.
ராதா அரங்கேற்றியதில் அதிக சர்ச்சைகளை உண்டாக்கிய நாடகம் ராமாயணம். ராதாவுக்காக நாடகத் தடை மசோதாவை சட்டமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றுமளவு பிரச்னை வலுத்தது. அதை மீறியும் ராமாயணத்தை பலமுறை வெற்றிகரமாக அரங்கேற்றினார் ராதா. மதுரையில் அன்று மாலை ராமாயணம் நாடகம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. நாடகத்தை எப்படி நடத்துகிறாய் என்று பார்க்கிறேன் என்று பகிரங்க மிரட்டல் விடுத்தார் அணுகுண்டு அய்யாவு என்பவர்.
நாடகம் ஆரம்பமானது. அரங்கத்தினுள் சில ரவுடிகளுடன் புகுந்து கலகம் செய்ய ஆரம்பித்தார் அய்யாவு. ராதா, தன் குழுவிலுள்ள பெண்களையும் சிறுவர்களையும் மட்டும் பத்திரமாக வண்டியேற்றி அங்கிருந்து அனுப்பினார். பின்னர் கோதாவில் குதித்தார்.
‘டேய் அந்த ரிவால்வரை எடுடா. குண்டு ஃபுல்லா இருக்கா? ஆறு குண்டு ஆறு பேரு. சுட்டுத் தள்ளிடறேன்' - அரங்கம் அதிரக் கத்தினார். யாருக்கும் ரிவால்வர் இருக்கிறதா என்று கூடத் தெரியாது. ஆனால் அய்யாவு கும்பல் பயந்து சிதறி ஓடியது.
அன்றைய வசூல் தொகை மூவாயிரம் ரூபாய்.
தனது நாடகக் குழுவினருக்கு வாரத்தில் மூன்று நாள்களாவது அசைவம் போட வேண்டுமென்பது ராதாவின் கட்டளை. நேரம் கிடைக்கும்போதேல்லாம் குழுவினருக்கு மட்டன் சமைப்பதில் ஆர்வம் காட்டுவார் ராதா. அவர் சமையலில் எம்டன். தன் குழுவினருக்கு தானே உணவு பரிமாறுவதிலும் ஆர்வம் காட்டுவார். அவரது குழுவில் சுத்த சைவ பார்ட்டிகளும் இருந்தார்கள். அவர்களுக்குத் தனிப்பந்தி நடைபெறும். அப்போது ராதா அடிக்கும் கமெண்ட், ‘அவங்க எல்லாம் தீண்டத்தகாதவங்க. தனியா உட்கார்ந்து சாப்பிடட்டும்.'
தன்னுடைய எம்.ஆர். ராதா நாடக மன்றத்திலிருந்து யாராவது விலகிச் செல்லும்போது, அவர்கள் நினைத்துப் பார்க்க முடியாத பெருந்தொகையை கொடுத்து வாழ்த்தி வழியனுப்புவது ராதாவின் பழக்கமாக இருந்தது.
காளிமார்க் சோடா கம்பெனி நடத்தி வந்த பரமசிவம், ‘எம்.ஆர். ராதா சோடா' என்று ஒரு தனி பிராண்ட் போட்டு விற்குமளவுக்கு தமிழ்நாடெங்கும் நாடகங்கள் மூலம் ராதாவின் புகழ் பரவியது. குறிப்பாக ரத்தக் கண்ணீர். தன் வாழ்நாளில் மட்டும் ராதா, புதிய புதிய காட்சிகளுடன், புத்தம் புதிய வசனங்களுடன் கிட்டத்தட்ட ஐயாயிரம் முறைக்கும் மேல் 'ரத்தக் கண்ணீர்' நாடகத்தை மேடையேற்றியிருக்கிறார்.
அந்தக் காலத்தில் நவாப் ராஜமாணிக்கம் கம்பெனி நாடக செட்டுகளுக்காகவே மக்கள் பார்க்க வருவார்கள். பெரிய பாம்பு, பிளக்கும் கடல், சிருங்கார அரண்மனை, பிரம்மாண்ட தேவலோகம் என்று அசர வைத்தார்கள் மக்களை. ஆனால் ராதா அதற்கு நேர் எதிர். நீலநிறப் படுதா, அதில் காடு என்றிருக்கும். காட்சி மாறும். சிவப்பு நிற படுதா, அதில் வீடு என்று இருக்கும். அடுத்து பச்சை நிறப் படுதா. அதில் பொது இடம் என்றிருக்கும். மற்றபடி எந்த செட்டிங்கும் கிடையாது. மக்கள் படுதாவைப் பார்த்து எங்கு காட்சி நடக்கிறது என்று புரிந்துகொண்டு ரசிப்பார்கள்.
‘மக்கள் என் நடிப்பைத்தான் பார்க்க வர்றாங்களே தவிர செட்டிங்கை இல்லே' என்பார் ராதா.
1979, செப்டெம்பர் 17-ல் திராவிடர் கழகத்தினர் பெரியாரின் நூற்றாண்டு நிறைவு விழாவைக் கொண்டாடிக் கொண்டிருந்த சமயத்தில் திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் மஞ்சள் காமாலை முற்றி உயிரை இழந்தார் எம்.ஆர். ராதா.
திரையுலகத்தினர், அரசியல் பிரமுகர்கள், நாடகக் கலைஞர்கள், பொதுமக்கள் என லட்சக்கணக்கானோர் இறுதி மரியாதை செலுத்தினார்கள். சங்கிலியாண்டபுரம் வீட்டிலிருந்து ராதாவின் இறுதி ஊர்வலம் காவேரிக்கரை ஓயாமாரி இடுகாடு நோக்கிக் கிளம்பியது. வழிநெடுக சுவர்களில் அன்று நடைபெறவிருந்த 'ரத்தக்கண்ணீர்' நாடகத்துக்கான போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.
No comments:
Post a Comment