Tuesday 24 April 2018

KODAIKANAL ,PRINCESS OF MOUNTAIN





KODAIKANAL ,PRINCESS OF MOUNTAIN



கோடை சுற்றுலா என்றதும் நம் நினைவுக்கு வருவது ஊட்டி, கொடைக்கானல் தான். கொடைக்கானலில் ஏரி, பிரயன்ட் பூங்கா, கோக்கர்ஸ் வாக் தவிர வேறு என்ன இடங்கள் இருக்கின்றன?

வட்டக்கானல் மலைப்பாதை நடைப்பயணம்




கொடைக்கானலில் இருந்து 5 கி.மீ. தூரத்தில் இருக்கிறது வட்டக்கானல் அருவி. குற்றாலம் போல மிகப் பெரியது இல்லை. என்றாலும் ரம்மியமானது. அருவியின் பாதையைப் பிடித்துச் சென்றால் வழியில் சிறுசிறு அருவிகளைக் கடந்து, ஒரு சிறிய குகையைக் காணலாம். 'சிங்கக் குகை' என்று இதற்குப் பெயர்.
குகை பயணம் வேண்டாம் என்பவர்கள் அருவியை ஒட்டிச் செல்லும் சிறிய சாலையில் இயற்கையை ரசித்தவாறு நடக்கலாம். இரண்டு கி.மீ. கடந்த பிறகு, சைக்கிள்கூட செல்ல முடியாத பாதை கீழே இறங்கும். எங்கெங்கோ இருக்கும் மரங்களின் வேர்கள் பாறையையும், மண்ணையும் நரம்புகளாகப் பின்னிப் படர்ந்து, படிகளை ஏற்படுத்திச் செல்லும். மூச்சிறைக்கும் நடைப்பயணம்தான்; தாகம் எடுக்கும்; இருந்தாலும், ஆங்காங்கே இருக்கும் கூல் டிரிங்க்ஸ் கடைகளை நம்பி தைரியமாகப் பயணிக்கலாம்.
பாதைக்கு இருபுறமும் வேலியிடப்பட்ட தனியார் தோட்டங்கள்; ஆங்காங்கே வீடுகள் தென்படும். உள்ளூர் மக்கள் தலையில் சரக்குகளை சுமந்து, விறுவிறுவென்று பாதையில் இறங்குவதையும், கோவேறு கழுதைகள் பொதி சுமந்து செல்வதையும் காணலாம். இயற்கைசூழ் இடம் என்றாலும், அன்றாட வாழ்க்கை உடல் உழைப்பு நிரம்பியது என்பதை உணர முடியும்.
இரண்டு கி.மீ. தொலைவுக்குள் மேற்குத் தொடர்ச்சி மலைக் காட்சிகளைக் கண்டு ரசிக்கும் புள்ளி வரும்; அங்கிருந்து தொலைதூரத்தில் இருக்கும் வைகை அணையையும் காண முடியும். தொடர்ந்து சுமார் இரண்டு கி.மீ. தூரம் பைன் மரங்களை ரசித்தவாறு நடந்தால் 'டால்ஃபின் நோஸ்' என்ற பாறைமுனை எதிர்ப்படும். டால்ஃபின் மூக்கு போல இருக்கும் இந்தப் பாறை நுனிக்குக் கீழே மிகப் பெரிய பள்ளத்தாக்கு. முனையை அணுகாமல் பார்ப்பது பாதுகாப்பு.
அடுத்து எக்கோ பாயின்ட் முனை. மலைகள் சூழ்ந்திருக்கும் இந்த இடத்தில் நமது குரல் சரியாக எதிரொலிக்கிறதா என சோதித்துக் கொள்ளலாம். மேற்கொண்டு நடந்தால் மலைக்கிராமங்களைக் கடந்து பெரியகுளம் போய்விட நேரிடும். அதனால் எக்கோ பாயின்டுடன் திரும்பிவிடுவது சிறப்பு. போக, வர என மொத்தம் 12 கி.மீ. நடைப்பயணம் இது. வயதானவர்கள், மூட்டுவலிப் பிரச்னை உள்ளவர்கள் இதை மேற்கொள்ள முடியாது.

பூம்பாறை கிராமம்


கொடைக்கானலில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள இயற்கை எழில் சூழ்ந்த கிராமம் பூம்பாறை. 20 கி.மீ. என்றாலும் சென்றடைவதற்கு ஒரு மணி நேரம் ஆகும். சுற்றிலும் மலைகள்; மலைச் சரிவுகளில் வீடுகள்; நடுவில் ஒரு முருகன் கோயில் (குழந்தை வேலப்பர் கோவில்). பார்ப்பதற்கு மிக அழகான கிராமம் இது.

மன்னவனூர் சூழல் சுற்றுலா


பூம்பாறை கிராமத்தைக் கடந்து மேலும் 15 கி.மீ. பயணித்தால் மன்னவனூர் சூழல் பூங்காவை அடையலாம். தூரத்தில் இருந்து பார்க்கும்போதே பசுமையான புல்வெளிகளுக்கு நடுவில் அமைந்திருக்கும் ஏரியும், மரப்பாலங்களும், அடுத்திருக்கும் பைன் மரக் காடுகளும் நம்மைக் கொள்ளை கொண்டுவிடும்.
மலைப்பாதை நடைப்பயணம் போல் அல்லாமல் பெரியவர்கள்கூட நடந்து ரசிக்கக்கூடிய இடமாக மன்னவனூர் சூழல் பூங்கா இருக்கிறது. ஏரியில் பரிசல் பயணம் செய்தவாறு சூழலை ரசிக்கலாம். முழுக்க முழுக்க பிளாஸ்டிக் பாட்டில்களால் கட்டப்பட்ட சிறு கட்டடங்களை ஆங்காங்கே காணலாம்.
அழகிய மூங்கில் குடிலில் மகளிர் சுய உதவிக்குழு நடத்தும் உணவு விடுதி இருக்கிறது. சமைப்பது முதல் அன்புடன் பரிமாறுவது வரை அனைவரும் பெண்கள்தான். குளிரில் ஆவி பறக்க முழுச்சாப்பாட்டை ஒரு பிடி பிடிக்கலாம். அசைவப் பிரியர்களுக்கும் வாய்ப்பிருக்கிறது.

பேரிஜம் ஏரி


கொடைக்கானலில் இருந்து 23 கி.மீ. தொலைவில் அடர்த்தியான காட்டுக்கு நடுவில் அமைந்துள்ளது பேரிஜம் ஏரி. அதிகபட்சம் 3 கி.மீ. நீளம் இருக்கும் இந்த நன்னீர் ஏரி, ஆசியாவிலேயே இரண்டாவது மிகப்பெரிய நன்னீர் ஏரி. இங்கு செல்ல வனத்துறை அனுமதி பெற வேண்டும். ஒரு நாளைக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. யானை நடமாட்டம் இருக்கும் சமயங்களில் இங்கு செல்ல அனுமதி வழங்கப்படுவதில்லை. உள்ளே பிளாஸ்டிக் பொருட்களை எடுத்துச் செல்ல முடியாது.
பசுமைக்கு மத்தியில் பரந்து விரிந்துள்ள ஏரியைப் பறவைகளின் பின்னணி இசையோடு கண்டுகளிக்கலாம். சுற்றியுள்ள காடுகள் காட்டெருமைகள், யானைகள், சிறுத்தைகளுக்கு வீடு என்பது நினைவில் வந்தால், பயம் கலந்த மகிழ்ச்சியை அனுபவித்துவிடலாம்.

No comments:

Post a Comment