Saturday 14 April 2018

K.V. MAHADEVAN ,MUSIC DIRECTOR , THE LEGEND








K.V. MAHADEVAN ,MUSIC DIRECTOR ,
                                      THE LEGEND



""நான் அனைவருக்கும் சொந்தமானவன்.  எனது இசையும் அனைவருக்கும் சொந்தமானதுதான். ஏனென்றால் திரைப்படங்களும் திரை இசையும் அனைவரையும் மகிழ்விக்கின்றன."- ஏ.ஆர். ரஹ்மான்.  






நாகர்கோவிலின் வடசேரி சந்திப்பிலிருந்து திருவனந்தபுரம் செல்லும் நெடுஞ்சாலையில் வடசேரியை தாண்டியதும் ஒரு கிலோமீட்டர் தொலைவில் வலது பக்கம் பிரியும் சாலையில் உள்ளது தான் கிருஷ்ணன்கோவில் கிராமம். ஊருக்கு பொதுவாக இருந்த பகவான் கிருஷ்ணனின்  கோவிலே ஊருக்கும் பெயராக அமைந்த கிராமம்.  கிழக்கு பார்த்த கோவிலின் பின்புறம் மாடத் தெருவும் அதற்கு பின்னால் மேலத்தெருவும் அமைந்து இருந்தன. 

மேலத்தெருவில் தான் வெங்கடாசலம் அய்யர் தனது மனைவி  லக்ஷ்மி அம்மாளுடன் குடும்பம் நடத்தி வந்தார்.இவர்களுக்கு மூத்த மகனாக மார்ச் மாதம் 20ஆம் தேதி 1918இல் பிறந்தவர் தான் கிருஷ்ணன் கோவில் வெங்கடாசலம் மகாதேவன் என்ற கே. வி. மகாதேவன்.  மகாதேவனைத் தவிர அவருக்கு இன்னும் இரண்டு மகன்களும், மூன்று மகள்களும்உண்டு. இசைப் பாராம்பரியம் மிக்க குடும்பம் அது.  வெங்கடாசல பாகவதரின் தந்தை அதாவது கே. வி. மகாதேவனின் தாத்தா திருவிதாங்கூர் அரண்மனையில் சங்கீத வித்வானாக இருந்தவர்.



வெங்கடாசல அய்யர் தந்தையின் வழியில் கிருஷ்ணன் கோவிலில் பணிபுரிந்து வந்தார்.  மாத சம்பளம் மூன்று ரூபாய்.  தவிர மாதத்துக்கு இருபது பக்கா (அதாவது படி) அரிசியும் கொடுக்கப்பட்டது. மூன்று ரூபாய் மாதச் சம்பளத்தில் என்னதான் அரிசி விலையில்லாமல் கிடைத்தாலும் ஏழு பேர் கொண்ட ஒரு குடும்பம் வீட்டுவாடகையும் கொடுத்துக்கொண்டு தாரளமாக வாழ்வதற்கு சிரமம்தான் பட்டது.  இந்தச் சிரமமான காலகட்டத்தில் அவருக்கு பேருதவியாக இருந்து வந்தவர் அவரது மூத்த மகள் சீதாலக்ஷ்மியின் கணவர்தான்.  மாப்பிள்ளையாக இல்லாமல் ஒரு மூத்த மகனாக அந்தக் குடும்பத்துக்கு தேவையான உதவிகளை புரிந்து வந்தார் அவர்.          

வடசேரியில் இருந்த எஸ்.எம். ஆர்.வி. உயர்நிலைப் பள்ளிக்கூடத்தில் சிறுவன் மகாதேவன் படித்து வந்தான்.  இசைமீது மகனுக்கு இருந்த ஆர்வம் காரணமாக தந்தையே முதல் குருவாக இருந்து ஆரம்ப பாடத்தை கற்றுக்கொடுத்தார். இருந்தாலும் ஒரு குருவின் மூலமாக மகனுக்குச் சங்கீதம் கற்றுக்கொடுத்து அவனது திறமையை நன்றாக வளர்த்து விடவேண்டும் என்று கருதிய வெங்கடாசல பாகவதர் வடசேரியில் இருந்து கிட்டத்தட்ட 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பூதப்பாண்டி என்ற கிராமத்தில் வசித்து வந்த அருணாச்சலக் கவிராயர் என்பவரிடம் மகனுக்கு முறையாக சங்கீதப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்தார் வெங்கடாசல பாகவதர்.



கே.வி. மகாதேவன் அவர்களின் குருவான பூதப்பாண்டி அருணாச்சலக் கவிராயர்  அருணாச்சல அண்ணாவி என்று அனைவராலும் அழைக்கப்பட்டவர்.சங்கீதத்தில் மிகுந்த பாண்டித்தியம் பெற்றவர்.  குருவருளும், திருவருளும் ஒருசேரப் பெற்றதனால் இயல்பாகவே இசைஞானம் நிரம்பப் பெற்றவர்.  வாய்ப்பாட்டைத் தவிர நாதஸ்வரம், தவில், பம்பை, முரசு, புல்லாங்குழல், ஹார்மோனியம், மோர்சிங், ஜலதரங்கம், வீணை, வயலின், கொன்னக்கோல், கோட்டுவாத்தியம் ஆகியவற்றையும் கற்றுக்கொடுக்கும் வல்லமையும், நிபுணத்துவமும் பெற்றவர். பூதப்பாண்டியில் இருந்த சிவகாமி அம்மை உடனுறை ஸ்ரீ பூதலிங்க சுவாமி ஆலயத்து உற்சவங்களில் கச்சேரி செய்யவரும் அந்நாளைய பிரபல வித்வான்கள் கிளாரினெட் சக்ரவர்த்தி ஏ.கே.சி. நடராஜன், நாதஸ்வர வித்வான் காருகுறிச்சி அருணாசலம், இசை மணி சீர்காழி கோவிந்தராஜன், மதுரை சோமு ஆகியவர்கள் கண்டிப்பாக அருணாச்சல கவிராயரின் இல்லத்து வந்து அவரை வணங்கி அவரது ஆசிகளை தவறாமல் பெற்றுச் செல்வார்கள்.



எந்தப் பிரதிபலனும் எதிர்பார்க்காமல் மாணவர்களுக்கு கற்றுக்கொடுப்பார் அவர்.  இசை ஆர்வம் கொண்டு தன்னிடம் கற்றுக்கொள்ள வரும் மாணவர்கள் வசதி குறைந்தவர்கள் என்றால் அவர்களுக்கு இருக்க இடமும், உணவும் கொடுத்து இலவசமாகவே குருகுலவாச முறையில் அவர்களுக்கு சங்கீதம் கற்றுக்கொடுத்து வந்தவர் அவர். அவரிடம் இசை நுணுக்கங்களை கற்றுத் தேறினான் சிறுவன் மகாதேவன். மேடையேறிக் கச்சேரி செய்யும் அளவுக்கு அவனது இசை ஞானம் வளர்ந்துவிட்டது.



பாட்டு மகாதேவனை ஈர்த்த அளவுக்கு படிப்பு அவனை ஈர்க்கவில்லை.  என்றாலும் எஸ்.எம்.ஆர்.வி. பள்ளியில் படிப்பை விடாமல் தொடர்ந்தே வந்தான் அவன்.இந்த நிலையில் ஒருநாள் சென்னையில் இருந்து வந்த பால கந்தர்வ கானசபா என்ற நாடகக் குழுவினர் பூதப்பாண்டி அருணாச்சலக் கவிராயரை தொடர்பு கொண்டு நன்றாகப் பாடத்தெரிந்த யாராவது இருந்தால் நாடகக் கம்பெனியில் சேர்த்துக்கொள்வதாக தெரிவித்தனர். அவருக்கு மகாதேவனின் நினைவு வந்தது.  அவனது விலாசத்தைக் கொடுத்து அனுப்பி வைத்தார் அவர்.



"நாடகக் கம்பெனியில் சேர்ந்து சென்னைக்கு சென்றால் நன்றாக முன்னுக்கு வரலாம்.  ஒரு தியாகராஜ பாகவதர் மாதிரி.. நாமும் நன்னா பெரிய லெவல்லே வரலாம்." - பதினான்கு வயசு மகாதேவனின் மனசுக்குள் கற்பனை சிறகடித்துப் பறக்க ஆரம்பித்தது. அதே சமயம் வீட்டிலோ மூத்த மகனை அப்படி அனுப்ப மனமில்லை.  ஆனால் மகாதேவன் மனதிலோ நாடகக் கம்பெனியில் சேரவேண்டும் என்ற எண்ணம் அழுத்தமாகப் பதிந்திருந்தது.



"நேக்கோ படித்தம் வரலே.  இங்கேயே இருந்துண்டு என்னத்தை சாதிக்கப் போறோம்?  எப்படியும் எனக்கு படிச்சு முடிச்சப்பறம் வேற ஏதாவது ஊருலே ஜோலி கிடைச்சா அப்போ அனுப்பத்தானே செய்வேள்?  அதை இப்பவே பண்ணிடலாமே.  கண்டிப்பா டிராமா கம்பெனியிலே சேர்ந்தா நான் நல்லபடியா முன்னுக்கு வந்துடுவேன்." - பெற்றோருக்கு சமாதானம் சொல்லி அவர்களைச் சம்மதிக்க வைத்துவிட்டான் அவன்.



ஒரு வழியாக அவர்கள் சம்மதம் கிடைத்துவிட்டது.ஆனால்..  சென்னைக்குச் செல்வதென்றால் சும்மாவா? கையில் பணமில்லாமல் எப்படி அவ்வளவு தூரம் அனுப்புவது? அடுத்த பிரச்சினை தலை தூக்கியது. என்ன செய்வதென்று தயங்கிய வேளையில் அந்தச் சமயத்தில் உதவிக்கரம் கொடுக்க வந்தார் மகாதேவனின் அக்காள் கணவர்.   இருபத்தைந்து ரூபாய் பணத்தைக் கொடுத்து மகாதேவன் சென்னை செல்வதற்கு உதவி செய்தார் அவர்."நான் மாடத் தெருவுக்குப் போய் நாராயணி அக்காவை பாத்து நமஸ்காரம் பண்ணிட்டு வந்திடறேன்" -  மகாதேவனின் கால்கள் மாடத்தெருவை நோக்கி நகர ஆரம்பித்தன.

************

"அக்கா அக்கா." - என்று அழைத்தபடியே உள்ளே நுழைந்த மகாதேவனின் குரலைக் கேட்டு அடுக்களையில் இருந்து வெளியே வந்தார் நாராயணி அம்மாள். நாராயணி அம்மாள் மகாதேவனின் ஒன்றுவிட்ட தமக்கை. மகாதேவனின் பெரியப்பா மகள்.அந்தக் கால வழக்கப்படி சிறு வயதிலேயே திருமணமாகி ஒரு பெண்குழந்தையைப் பெற்ற பிறகு அடுத்து ஒரு மகனைப் பெற்று அந்தக் குழந்தையை பறிகொடுத்த சோகம் ஆறுவதற்கு முன்பாக கணவனையும் இழந்து ஒரே மகளுடன் பிறந்த வீட்டுக்கே வந்துவிட்டவர்.  

விதி அவரது வாழ்க்கையை அமங்கலப்படுத்தி விட்டிருந்தாலும் பிறர் வாழ்க்கைக்கு மங்கலத்தைத் தரும் ஒரு தேஜஸை நாராயணி அம்மாள் பெற்றிருந்தார்.  அதை எந்த விதியாலும் அவரிடமிருந்து தட்டிப்பறிக்க முடியவில்லை. அவரது வார்த்தைகளுக்கு குடும்பத்தில் இருக்கும் அனைவரையும் கட்டுப்படுத்தும் தன்மை இருந்தது.

"வா. மாதேவா.  டிராமா கம்பெனியிலே சேரப் போறாயாமே?  அப்பா சொன்னார்.  வாஸ்தவம்தானா?"  எடுத்த எடுப்பிலேயே அப்படி அக்கா கேட்டதும் ஒரு கணம் தயங்கி நின்றான் மகாதேவன். "ஆமாக்கா.  இங்கே இருந்து என்னத்தை பண்ணறது?  மெட்ராஸ் போனா எனக்கு தெரிஞ்ச சங்கீதத்தை வச்சுண்டு முன்னுக்கு வரலாம்னு தோணறது." - என்றான் அவன்."உனக்கு இருக்கற திறமைக்கு நீ நன்னா வருவேடா மாதேவா.  கவலையே படாதே. தைரியமா போயிட்டு வா. கொஞ்சம் இரு. இதோ வந்துடறேன்." என்று சொல்லிவிட்டு உள்ளே சென்ற நாராயணி அம்மாள் திரும்பி வந்து கையை நீட்டி, "இந்தா "மெட்ராசுக்குப் போறே.  புது இடம்.  இந்தா.  இந்தப் பதினாறு ரூபாயை வழிச் செலவுக்கு வச்சுக்கோ."  நன்னா பெரிய ஆளா நீ மின்னுக்கு வரணும்." என்றார்.



அப்படியே சிலிர்த்துப்போனான் மகாதேவன்.


"பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழவேண்டும்" என்று அந்த தெய்வமே நாராயணி அக்காவின் உருவில் வந்து ஆசீர்வதிப்பது போலத் தோன்றியது அவனுக்கு. அப்படியே சாஷ்டாங்கமாக கீழே விழுந்து அக்காவை நமஸ்கரித்து எழுந்து அந்தத் தொகையை இருகைநீட்டிப் பெற்றுக் கொண்டான் அவன். "பகவான் இருக்கார்.  உன்னை நல்லா பார்த்துப்பார்." என்று திறந்த மனதோடு தம்பியை ஆசீர்வதித்து அனுப்பி வைத்தார் நாராயணி அம்மாள்.தமக்கையின் ஆசீர்வாதமும், பெற்றவர்களின் பிரார்த்தனையும், கூடப் பிறந்தவர்களின் உற்சாகமான அன்பும், துணையாக வர,  குருநாதரின் மனம் நிறைந்த ஆசிகளோடும் எல்லாவற்றுக்கும் மேலாக சாதிக்கவேண்டும் என்ற ஆசையுடனும், மிகுந்த தன்னம்பிக்கையுடனும் நாகர்கோவிலில் இருந்து பஸ் பிடித்து திருநெல்வேலிக்கு வந்து சென்னைக்கு ரயில் ஏறினான் மகாதேவன்.



கடற்கரை நகரமான சென்னைப்பட்டினம் அவனுக்காக வெற்றி முத்துக்களை மாலையாக கோர்த்து அணிவிக்கக் காத்துக்கொண்டு இருந்ததென்னவோ நிஜம்தான்.  ஆனால் அந்த முத்துக்களை  அடைவதற்கு முன்னால் எத்தனையோ சோதனைச் சுறாக்களை அவன் எதிர் கொள்ளவேண்டி இருக்கும் என்பது அந்தப் பதினான்கு வயதுச் சிறுவனுக்கு அப்போது தெரிந்திருக்க  நியாயமில்லையே. 





(இசைப் பயணம் தொடரும்..)




இசை இந்தப் பிரபஞ்சத்திற்கு ஆன்மாவை அளிக்கிறது.  எண்ணங்களுக்கு சிறகுகளைக் கொடுக்கிறது. கற்பனைகளைச் சிறகடித்துப் பறக்கவைக்கிறது.  அனைவருக்கும் வாழ்க்கையாக இருக்கிறது. -  பிளாட்டோ 

இந்த இடத்தில் அந்த காலத்து நாடகக் கலை பற்றி சில தகவல்கள் இன்றைய இளைய தலைமுறையினர் தெரிந்து கொள்ளவேண்டியது அவசியம். அப்போது தான் கே.வி. மகாதேவன்  போன்றவர்கள் சாதித்ததன் அருமை புரியும். அந்த நாட்களில் தெருக்கூத்து என்ற பெயரில் நாடகங்கள் நடந்தன. இரவு முழுவதும் விடிய விடிய அவை நடத்தப்பட்டு வந்தன. "மைக்" வசதி இல்லாத காரணத்தால் கடைசி வரிசையில் உள்ள கடைக்கோடி மனிதனுக்கும் சென்று சேரும் அளவுக்கு சாரீர வசதி நாடகத்தில் நடிப்பவர்களுக்கு தேவையாக இருந்தது.  ஆகவே வசனங்களை விட பாடல்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இந்த நாடகங்களுக்கான கதைகள் நமது இதிகாச புராணங்களில் இருந்தும் கர்ணபரம்பரை கதைகளில் இருந்துமே எடுத்தாளப்பட்டு வந்தன.



இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இப்படிப்பட்ட கதைகளை மையக்கருத்தாகக் கொண்ட நாடகங்களைப் பல குழுக்கள் நடத்தி வர ஆரம்பித்தன.  மதுரை ஜகன்னாத அய்யர் பாய்ஸ் கம்பெனி, மதுரை பால மீனரஞ்சனி சங்கீத சபா, ஸ்ரீ பாலஷண்முகானந்த சபா, கண்ணையா கம்பெனி, நவாப் ராஜமாணிக்கம் அவர்களின் ஸ்ரீ தேவி பாலவிநோத சபா, ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி. வைரம் செட்டியாரின் ஸ்ரீ ராம பால கான வினோத சபா, போன்றவை அவற்றுள் குறிப்பிடத் தக்கவை.



ஹரிச்சந்திரா, பவளக்கொடி, வள்ளி திருமணம், சாரங்கதாரா, கோவலன்-கண்ணகி, நந்தனார், பாமா விஜயம் போன்ற கதைகள் நாடகங்களாக வந்து பெரும் வரவேற்பை பெற்றன. இவைகள் கோவில் திருவிழாக்களிலும் பண்டிகை தினங்களிலும் விடிய விடிய நடை பெற்று வந்தன. இந்த கதைகள் மக்களிடையே பக்தி, நல்லொழுக்கம், தேசபக்தி, ராஜ விசுவாசம் போன்றவற்றை வளர்த்து வந்தன. 

அரசர்கள் நாடக கலைஞர்களையும் இசை வல்லுனர்களையும் பராமரித்து வந்தனர்.இந்த நாடக கம்பெனிகளில் பெரும்பாலும் ஐந்து வயதுக்கு மேல் பத்து வயதுக்கு உட்பட்ட சிறுவர்களே சேர்த்துக் கொள்ளப்பட்டனர். அனைத்து கதாபாத்திரங்களையும் சிறுவர்களே ஏற்று நடித்த காரணத்தால் பாய்ஸ் கம்பெனி (Boys Company ) என்று பெயர்.

"வசதியற்ற வறுமைக் குடும்பத்தில் பிறந்த பிள்ளைகள், படிப்பு வராதவர்கள், அப்பா அடிப்பார் என்று அஞ்சி சொல்லாமல் கொள்ளாமல் வீட்டை விட்டு ஓடிப்போனவர்கள் - இப்படிப்பட்ட சிறுவர்களுக்கு எல்லாம் அந்தக் கால நாடகக் கம்பெனிகள் புகலிடமாகவும், குருகுலமாகவும் விளங்கின. .........உணவு, தங்குவதற்கு இடம், ஒழுக்கம், கல்வி ஆகிய அனைத்துமே அங்கு அவர்களுக்கு கொடுக்கப் பட்டதால் அந்தக் காலத்தில் பல வசதியற்ற பெற்றோர்கள் அவர்களாகவே விரும்பி வலிய வந்து தங்கள் குழந்தைகளை நாடகக் கம்பெனிகளில் சேர்த்துவிட்டனர்." - என்று அந்தக் காலத்து நாடகக் கம்பெனிகளைப் பற்றி குறிப்பிடுகிறார் பிரபல கதை வசனகர்த்தா திரு. ஆரூர்தாஸ் அவர்கள்.



நடிக்க வந்த சிறுவர்கள் கடுமையான பயிற்சிகளுக்கு உட்படுத்தப்பட்டனர். சங்கீதம், நடிப்பு, வசனம் பேசும் முறை, நிற்பதற்கும், நடப்பதற்கும் கூட பயிற்சிகள், உடற்பயிற்சி, யோகப்பயிற்சி போன்றவை கட்டாயமாக்கப்பட்டன. கூடவே குருவுக்கு மரியாதை, ஒழுக்கம் போன்றவையும் போதிக்கப்பட்டன. நடிப்பில் மட்டும் அல்லாமல் அனைத்து துறைகளிலும் அவர்கள் புடம் போட்டு எடுக்கப்பட்டனர்.



இப்படிப்பட்ட நாடக கம்பெனிகள் மூலமாக கிடைத்த பொக்கிஷங்கள் தான் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், எம். ஜி. ராமச்சந்திரன், எம். என். நம்பியார், எம். ஆர்.ராதா, எம். என். ராஜம், பி.. எஸ். ஞானம், எஸ். ஜி. கிட்டப்பா, தியாகராஜ பாகவதர், பி. யு. சின்னப்பா, கே. பி. சுந்தராம்பாள், என். எஸ். கிருஷ்ணன், காளி. என். ரத்தினம், டி.கே.எஸ். சகோதரர்கள், டி.ஆர். மகாலிங்கம், கே. பி. காமாட்சி, டி. எஸ். பாலையா, சித்தூர் நாகைய்யா, எஸ்.வி. சுப்பையா, வி.கே. ராமசாமி, ஏ.பி.நாகராஜன், எஸ். வி. சகஸ்ரநாமம், கே.ஏ. தங்கவேலு போன்றவர்கள்.



(இந்தப் பட்டியலில் சிலர் விட்டுப்போய் இருக்கலாம். ஆனால் பொதுவாக ஐம்பதுகளின் துவக்க காலம் வரை திரை உலகில் அறிமுகமான பெரும்பாலான நட்சத்திரங்கள் "பாய்ஸ்" நாடக குழுவிலிருந்து வந்தவர்கள்தான். அவ்வளவு ஏன்? நமது உலக நாயகன் கமலஹாசன் கூட டி. கே. எஸ். சகோதரர்களின் பாய்ஸ் நாடக கம்பெனியில் உருவானவர்தான்.)



இந்த நாடகங்களில் கதாநாயகன் வேடத்துக்கு "ராஜபார்ட்" என்று பெயர். பெண் வேடம் (கதாநாயகி உட்பட) "ஸ்திரீ பார்ட்" என்று குறிப்பிடப்பட்டது.



கடந்த நூற்றாண்டின் ஆரம்ப கால கட்டத்தில் பெண்கள் மேடை ஏறி நடிக்கவோ, பாடவோ தயங்கிய காரணத்தால் இந்த "ஸ்திரீ பார்ட்" வேடங்களையும் ஆண்களே ஏற்று நடித்து வந்தார்கள்.
ஜெ. சுந்தரராவ், பரமேஸ்வர அய்யர், டி. பி. ராமகிருஷ்ணன், ரங்கசுவாமி அய்யங்கார், கே.எஸ். அனந்த நாராயண அய்யர், பி. எஸ். வேலு நாயர் போன்ற நடிகர்கள் பெண்வேடமிட்டு நடிப்பதில் "ஸ்திரீ பார்ட்" நடிகர்களாக புகழ் பெற்று விளங்கினார்கள். (நமது நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் கூட "ஸ்திரீ பார்ட்" நடிகராக நடித்து புகழ் பெற்றவர்தான்.).



அந்த வகையில் நமது மகாதேவனுக்கும் ஸ்திரீ பார்ட் வேடங்கள் அவர் சேர்ந்த பால கந்தர்வ கான சபாவில் கிடைக்க ஆரம்பித்தன. இப்படிப்பட்ட நாடக கம்பனிகளில் நடிப்பவர்களுக்கு மாத சம்பளம் நிர்ணயித்து வழங்கப்பட்டு வந்தது. நாடகங்களின் வெற்றி தோல்விகளை பொருத்து இவை தீர்மானிக்க படும். சமயங்களில் நாடகங்கள் சரியாக போகவில்லை என்றால் கம்பனிக்கு ஏற்படும் கஷ்ட நஷ்டங்களில் நடிகர்களும் பங்கெடுத்துக்கொள்வது வழக்கம்.



சாதாரணமாக இந்த நாடகங்கள் மாலை ஆறு மணி அளவில் துவங்கி பத்து மணி அளவில் முடிவுறும்.ஸ்பெஷல் நாடகங்கள் என்று இரவு ஒன்பது மணி முதல் காலை நான்கு மணி வரை நடப்பதும் உண்டு. நாடகங்களுக்கு கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து சில சமயங்களில் மாலை மற்றும் இரவு என்று இரண்டு காட்சிகளாக நடத்தப் படுவதும் உண்டு.



நாடகத்துக்கு சம்பந்தம் இருக்கிறதோ இல்லையோ கதாநாயகனும், நாயகியும் அறிமுகமாகும் காட்சியில் ஏதாவது ஒரு த்யாகராஜ கீர்த்தனையை பாடிக்கொண்டு வருவார்கள். விஸ்தாரமான ராக ஆலாபனை, ஸ்வரங்கள் என்று பாடவேண்டும். அனேகமாக அனைவருக்குமே இனிமையான குரல் வளம் இருந்ததால் ரசிகர்கள் அந்த பொருத்தம் இல்லாத காட்சி அமைப்பை பொருட்படுத்தாமல் கரகோஷம் செய்து ரசிப்பார்கள். (சமயத்தில் "ஒன்ஸ் மோர்" கேட்கவும் செய்வார்கள்!) ஆகமொத்தத்தில் அது கதை அம்சங்களுக்கோ வசனங்களுக்கோ முக்கியத்துவம் இல்லாமல் பாடல்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வந்த காலகட்டமாக இருந்து வந்தது.
இசை ஞானம் நிரம்பப் பெற்ற மகாதேவனின் சாரீர வளம் அவனது திறமையை வெளிப் படுத்த உதவியது.

ஆனால்.  பாலகந்தர்வ நாடக சபா பெருத்த வரவேற்பை வெகு ஜனங்களிடம் பெறவில்லை. நாடகம் பார்க்க எதிர்பார்த்த கூட்டம் சேரவில்லை.  பலசமயங்களில் காலி நாற்காலிகளின் முன்னால் நாடகம் நடத்தவேண்டிய கொடுமை.விளைவு .. கம்பெனியில் வேலை செய்யும் சிறுவர்களை வெகுவாகப் பாதித்தது.



மற்றவர்களை எல்லாம் விட தனியான கவனிப்பையும் வசதிகளையும் பெற்றிருந்த "ராஜபார்ட்" நடிகர்கள் நிலைமையே கீழிறங்கி விட்டிருந்தது.  இந்த லட்சணத்தில் மற்றவர்களின் வசதி வாய்ப்புகளைப் பற்றிச் சொல்லவா வேண்டும்? ஏற்கெனவே அவர்களுக்கு பெரியதாக எந்த வசதி வாய்ப்பும் கொடுத்ததாகச் சொல்லமுடியாது.தினம் தினம் சாப்பிடுவதே பெரும் பாடு என்று ஆகிவிட்ட நிலையில் வசதியாவது வாய்ப்பாவது?  ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை.                                                                                    

என்னவெல்லாமோ செய்து பார்த்தும் நாடகக் கம்பெனியை தூக்கி நிறுத்த முடியவில்லை.விளைவு?  கம்பெனி மூடப்பட்டு விட்டது.மற்ற சிறுவர்கள் எப்படியோ "போன மச்சான் திரும்பி வந்த கதையாக" சொந்த ஊருக்கே போனார்கள்.ஆனால் மகாதேவன்? நம்பி வந்த நாடக் கம்பெனி நட்டாற்றில் விட்டபோது நடுத்தெருவில் நின்றாக வேண்டிய சூழ்நிலை.



"இதற்காகத்தானா கிருஷ்ணன் கோவிலிலிருந்து கிளம்பி வந்தோம்?  பெரிசாச் சாதிக்கப்போறதா முழங்கிட்டு வந்திருக்கோமே?  எந்த முகத்தோட திரும்பி அங்கே போறது?" - கேள்விகள் கொக்கி போட்டு அவனைக் குடைய ஆரம்பித்தன."என்ன ஆனாலும் சரி.  ஜெயிக்காம ஊருக்குப் போகப் போறது இல்லை." - என்ற முடிவுக்கு வந்தான் மகாதேவன்.சரி.. வயிற்றுப்பாட்டுக்கு என்ன செய்யறது?  முதல்லே ஏதாவது ஒரு வேளையிலே சேர்ந்து சாப்பாட்டுக்கு வழிபண்ணிக்கணும்.  எந்த வேலையா இருந்தாலும் பரவாயில்லே.”முடிவெடுத்த மகாதேவன் கடை கடையாக ஏறி இறங்கி வயிற்றுப்பாட்டுக்காகஒரு வேலையைத் தேடி சென்னை நகரத்தில் வீதி வீதியாக அலைய  ஆரம்பித்தான். அவனது முயற்சி வீண்போகவில்லை.

வடசென்னையில் வால்டாக்ஸ் ரோடின் கடைசியில் இருந்த யானை கவுனியில் ஒரு ஹோட்டலின் வாசலில் வேலை கேட்டு நின்றான் அவன்.



அவன் நல்ல நேரமோ என்னமோ ஹோட்டல் முதலாளி அவனுக்கு வேலை கொடுக்க முன்வந்தார்."தம்பி.  இங்கே பெரிசா வேலை ஒண்ணும் கிடையாது.  சர்வர் வேலைதான் இருக்கு.  சாப்பிட வரவங்களுக்கு சர்வ பண்ணனும்.  அவங்க சாப்பிட்டதை நியாபகம் வச்சுக்கிட்டு உரக்க சொல்லணும். இங்கேயே இருந்துக்கலாம்.  மூணு வேலை சாப்பிட்டுக்கலாம்.  சம்பளம்னு கொடுக்கறதை வாங்கிக்கணும். சம்மதமா?" என்றார் முதலாளி.சம்மதம் என்று தலை ஆட்டினான் மகாதேவன்.



"சார்  சாப்பிட்டது  ரெண்டு தோசை.. ஒரு காப்பி.. ரெண்டரை அணா"  -  என்று ஒரு ஹோட்டலில் அறிவிக்கும் அறிவிப்பாளனாக சென்னைப் பட்டினத்தில் வாழ்க்கையைத் தொடர்ந்தான் மகாதேவன்.




(பயணம் தொடரும்.) 


"எனது வாழ்க்கையை மறுபடி ஒருமுறை வாழ்வதற்கு எனக்கு சந்தர்ப்பம் வாய்க்குமானால் அப்போது வாரம் ஒருமுறையாவது ஒரு கவிதையைப் படிக்கவேண்டும் என்றும் ஏதாவது ஒரு இசையை கேட்டே ஆகவேண்டும் என்றும் ஒரு சட்டதிட்டத்தை நானே வகுத்துக்கொள்வேன்" - சார்லஸ் டார்வின் 

நாட்கள் வாரங்களாகி வாரங்கள் மாதங்களாகி, மாதங்கள் வருடங்களாகவும்  கடந்துகொண்டிருந்தன.சென்னைக்கு மகாதேவன் வந்து ஏறக்குறைய நான்கு  வருடங்களாகிவிட்டன.

மகாதேவன் நம்பிக்கை இழக்கவில்லை.ந்த நான்கு வருடங்களில் வயிற்றுப்பிழைப்புக்காக அவன் பல வேலைகளைப் பார்த்துவிட்டான்.
ஹோட்டல் சர்வர் மட்டுமல்லாமல் சின்னதும் பெரிசுமாக நிறைய ..
ஆனைகவுனியில் இருந்து வாடகை சைக்கிள் எடுத்துக்கொண்டு வால்டாக்ஸ் ரோடின் மறுமுனையில் சென்ட்ரல் ஸ்டேஷன் அருகில் இருக்கும் ஒரு அலுவலகத்துக்கு சீட்டு ஒன்றைக் கொண்டுவந்து கொடுத்து பணத்தை வாங்கிக்கொண்டு வந்து ஆனைகவுனியில் கொடுப்பான்.  அதற்கு சம்பளமாக ஒரு சிறுதொகையைப் பெற்றுக்கொள்வான்.

கிட்டத்தட்ட இப்போதைய குரியர் சர்வீஸ் போல.இதையெல்லாம் பிறகு நல்ல நிலைமைக்கு வந்த பிறகு பல நேர்காணல்களில் பகிர்ந்துகொள்ள அவர் வெட்கமோ கூச்சமோ பட்டதே இல்லை.பகலெல்லாம் ஹோட்டல் வேலை பார்த்துவிட்டு வேலை நேரம் முடிந்தபிறகோ அல்லது விடுமுறை நாட்களிலோ  வால்டாக்ஸ் ரோடில் இருந்த ஒற்றை வாடை தியேட்டருக்கு படை எடுப்பான் மகாதேவன்.  அங்கு நாள் தவறாமல் நாடகங்கள் நடக்கும்.   நாடகங்களில் ஏதாவது சிறு வேஷமோ அல்லது வாத்திய குழுவில் ஹார்மோனியம் வாசிக்கவோ - ஏதாவது ஒரு விதத்தில் நாடகக் குழுவில் இடம் பிடிக்கவேண்டும் என்ற தீவிர எண்ணத்தில் ..

அந்த இளைஞனின் முயற்சி வீண் போகவில்லை. 
அங்கொன்றும் இங்கொன்றுமாக நாடக வாய்ப்புகள் அவனுக்கு கிடைக்க ஆரம்பித்தன. அதிலும் சம்பளம் சரியாகக் கிடைக்கவில்லை. 
பெரிதான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி கடைசியில் ஏமாற்றத்தையே பரிசாகத் தந்த நாட்கள். காஞ்சீபுரத்தில் நாடகம் முடிந்தபிறகு சம்பளம் கொடுக்காமல் ஏமாற்றப்பட்ட பிறகு கையில் இருந்த காசில் சாப்பிட்டுவிட்டு அங்கிருந்து சென்னைக்கு நடந்தே வந்த நிகழ்வுகளும் அரங்கேறின. இப்படி எல்லாம் கிடைத்த வாய்ப்புகளின் பின்னால் ஒளிந்து கொண்டிருந்த ஏமாற்றங்கள். கலைத்துறையில் பெரிதாகச் சாதிக்க நினைக்கும் ஒவ்வொருவருக்கும் இத்தகைய ஏமாற்றங்கள் நிறைய முதலில் காத்திருக்கும்.  



அந்த ஏமாற்றங்களின் பின்னால் மறைந்திருந்து வெற்றி கண்ணாமூச்சி ஆடிக்கொண்டு இருக்கும்.வெற்றியின் இந்தக் கண்ணா மூச்சி ஆட்டத்துக்கு ஈடுகொடுத்து தாக்குப் பிடிக்க பொறுமையும் திடச் சித்தமும் அவசியம் தேவை. இவை இரண்டுமே மகாதேவனிடம் நிறைய இருந்தன.   அதனால் அவன்  மனம் தளரவில்லை.  அந்தச் சமயத்தில் ஏதோ ஒரு நாடகக் கம்பெனியின் மூலமாகவோ அல்லது அவனது நேரமோ என்னமோ.  ஒரு திரைப்படத்தில் நடிக்க -  இல்லை இல்லை  - ஒரு நிமிடக் காட்சியில் வந்து போக ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது.



"திருமங்கை ஆழ்வார்" என்ற படத்தில் துவாரபாலகர்களில் ஒருவராக தோன்ற ஒரு வாய்ப்பு கிடைத்தது. ஆடாமல் அசையாமல் அப்படியே நிற்கவேண்டும்.  தானும் ஒரு படத்தில் தலையைக் காட்டினோம் என்ற திருப்தி ஏற்பட்டதோடு சரி.அந்தச் சமயத்தில் அவன் வாழ்வில் திருப்பு முனை ஏற்படுத்தக்கூடிய ஒரு மகத்தான வாய்ப்பு அவனைத் தேடி வந்தது.
ஆரம்பத்தில் மகாதேவன் அதனைப் பெரிதாக நினைக்கவில்லை. எப்போதும் போலக் கிடைக்கும் சாதாரண வாய்ப்பு என்றே அதை நினைத்தான். என்றாலும் எந்த வாய்ப்பையும் அவன் கைநழுவ விட்டதே இல்லை.  தனது முழுத் திறமையும் அதில் வெளிக்காட்ட வேண்டும் என்றே அவன் கருதிச் செயல்படுவான்.



பாய்ஸ் கம்பெனிகள் போலவே "ஸ்பெஷல் நாடகக் கம்பெனி"களும் இயங்கி வந்தன. அதாவது மிகப் பிரபலமான நாடக நடிகர் - நடிகையர்கள் தங்களுக்கென்று தனிக்குழுவை அமைத்துக்கொண்டு நடத்தும் நாடகங்கள்."ஏழிசை மன்னன்" என்று பெயர் பெற்ற எம். கே. தியாகராஜ பாகவதர், எஸ்.ஜி. கிட்டப்பா ஆகியோர் இப்படி ஸ்பெஷல் நாடகக் கம்பெனிகள் மூலம் பிரபலம் ஆனவர்கள்.அதுபோல ஒரு "ஸ்பெஷல்" நாடகக்குழுவில் ஹார்மோனியம் வாசிக்கும் வாய்ப்பு மகாதேவனுக்குக் கிடைத்தது.சட்டென்று அந்த வாய்ப்பைக் கெட்டியாகப் பற்றிக்கொண்டான் மகாதேவன். ஊர் ஊராக சென்று நாடகங்கள் நடத்திய அந்த நாடகக் குழுவில் சேர்ந்து பல ஊர்களுக்குச் சென்றான் அவன்.ஒருமுறை கர்நாடகாவில் இருந்த கோலார் தங்க வயலில் நாடகம் நடத்தச் சென்றார்கள்.நாடகம் விறுவிறுப்பாக நடந்துகொண்டிருந்தது.  திரையின் ஓரத்தில் அமர்ந்து காட்சிக்கு ஏற்றபடி பின்னணி இசையை ஹார்மோனியத்தில் வாசித்து காட்சிக்கு விறுவிறுப்பை எற்றிக்கொண்டிருந்தவன் தற்செயலாக பார்வையா ளர்கள் பக்கம் பார்வையைச் செலுத்தினான்.



அந்த வரிசையில் இருந்த ஒரு நபர்..  வயது இருபத்தைந்துக்கு மேல் இருக்கும்.ன்னையே பார்த்துக்கொண்டிருப்பதுபோல உணர்ந்தான் அவன்.
இவரை எங்கேயோ பார்த்திருக்கிறோமே?
"ஞாபகம் வந்துவிட்டது.  நளதமயந்தி என்ற சினிமா வந்ததே.  அதில் இவர் தானே ஹீரோவாக நடித்திருக்கிறார்."தன்னையே கவனித்துக்கொண்டிருக்கும் அவரை தானும் ஒரு கணம் ஊன்றிக் கவனித்தான் மகாதேவன்.
ஆம்.  அவரேதான். "நளதமயந்தி" படத்தில் கதாநாயகனாக நடித்த அவரேதான். தனது வாசிப்பையே உற்று நோக்குவது போல தெரிந்தது அவனுக்கு.
பிரமையோ?
என்னைத்தான் கவனித்துக்கொண்டிருக்கிறாரா?
பார்வையை அவரிடமிருந்து திருப்பி ராஜபார்ட் பாடிக்கொண்டிருந்த பைரவி ராகத்தின் பிட்டை ஹார்மோனியத்தில் தொடர்ந்து வாசிக்க ஆரம்பித்தான் மகாதேவன். சற்று நேரம் பொறுத்து மறுபடி பார்வையாளர் பக்கம் பார்வையைத் திருப்பினால்..
முன்வரிசையில் இருந்த அதே மனிதர் தன்னையே கவனித்துக்கொண்டிருப்பதை அவனால் உணரமுடிந்தது.



ஒருவழியாக நாடகம் முடிந்தது.  ஹார்மோனியத்தை எடுத்துக்கொண்டு இருக்கையில் இருந்து எழுந்தான் மகாதேவன்.
சட்டென்று அவன் தோளை யாரோ தொட்டார்கள். திரும்பினான்.
அதே மனிதர்."அம்பி. உன்னோட வாசிப்பு ரொம்ப நன்னா இருந்துது." - எதிர்பாராமல் கிடைத்த பாராட்டு.
அதுவும் முதல் பாராட்டு.
ஒருவிதக் கூச்சத்துடன் பாராட்டுக்கு நன்றி சொன்னான் அவன்.

மேலே அவரிடம் என்னபேசுவது என்று தெரியாமல் அவன் விழித்துக்கொண்டிருந்த நேரத்தில் அடுத்த கேள்வி அவரிடமிருந்து வந்தது.
"உன்னோட பேரு என்னப்பா?"
"மகாதேவன். கே.வி. மகாதேவன்." - என்றான் அவன்.
கணநேர மௌனத்துக்குப் பிறகு தன்னை அறிமுகப் படுத்திக்கொள்ளும் விதமாக அந்த மனிதர் சொன்னதைக் கேட்டபோது மகாதேவனுக்குள் உற்சாக நீரூற்று பொங்க ஆரம்பித்தது. "நான் எஸ்.வி. வெங்கட்ராமன்.  நளதமயந்தி டாக்கியிலே  ஹீரோவா நடிச்சவன்.  இப்போ ஏ.வி. மெய்யப்பச் செட்டியாரோட "நந்தகுமார்" படத்துக்கு நான் தான் மியூசிக் டைரக்டர்.  உன் வாசிப்பு ரொம்ப நன்னா இருக்கு.  நீ விருப்பப்பட்டா என்னோட அசிஸ்டண்டா சேந்து வேலை பாக்கலாமே.  உனக்கு சம்மதமா?" 

(பயணம் தொடரும்...)    


இசை என்பது... முதிர்ந்த ஞானத்தையும், தத்துவத்தையும் உயர்ந்த முறையில் வெளிப்படுத்துவது." - லுட்விக் வான் பீத்தோவன்   

எஸ்.வி. வெங்கட்ராமன் -  தமிழ் சினிமாவின் முதல் நட்சத்திர இசை அமைப்பாளர்.               

"ஸ்பெஷல் நாடகத்தில்" கே.வி. மகாதேவனின் ஹார்மோனிய வாசிப்பை நேரில் கண்டதும் “இந்த இளைஞனிடம் ஒரு திறமை இருக்கிறது.  அதை நாம் பயன்படுத்திக்கொண்டால் என்ன?” என்று தோன்றவே அந்த நினைப்பைச் செயலாக்கிக்கொள்ள முனைந்தார் அவர்.

சினிமா உலகில் நுழைய தனக்குக் கிடைத்த அந்த வாய்ப்பை சட்டென்று விடாமல் பற்றிக்கொண்டார் கே.வி. மகாதேவன். சொல்லப்போனால் திரு. எஸ்.வி. வெங்கட்ராமன் அவர்களுக்கும் அதுதான் முதல் முதலாக இசை அமைக்கக் கிடைத்த வாய்ப்பு.ஒரு நடிகராக - அதுவும் கதாநாயகராக அறிமுகமான எவருமே தொடர்ந்து அந்த இடத்தைத் தக்க வைத்துக்கொள்ளவே முனைவார்களே  தவிர வேறு துறையில் கால்பதிக்க வேண்டும் என்று நினைக்கவே மாட்டார்கள்.  அதிலும் இசை அமைப்பு என்பதைப்பற்றி எந்த நடிகருமே கற்பனைகூட செய்து பார்த்திருக்க முடியாது. 

ஏற்கெனவே கதாநாயகனாக நடித்தபோது - தவறு - பாடியபோது (ஏனென்றால் அந்தக் காலத்துப் படங்களில் பாடல் தானே பிரதானம்!) கிடைத்த அனுபவத்தை வைத்துக்கொண்டு ஏ.வி. மெய்யப்ப செட்டியாரின் படத்துக்கு இசை அமைக்க சம்மதித்தவருக்கு தனது படத்தில் ஹார்மோனியம் வாசிக்க மகாதேவன் கிடைத்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றியது. 

ஏ.வி.எம் தயாரிப்பான "நந்தகுமார்" - படம் பலருக்கு முதல் வாய்ப்பைக் கொடுத்த படம்.பாடகர் - நடிகர் டி.ஆர். மகாலிங்கம் அவர்கள் கதாநாயகனாக அறிமுகமான படம்.அவருக்கு மட்டும் என்று அல்ல - நகைச்சுவை நடிகர் டி.ஆர். ராமச்சந்திரனுக்கும் அதுதான் முதல் படம்.

 எஸ்.வி. வெங்கட்ராமனுக்கும் இசை அமைக்கும் வாய்ப்பை முதல் முதலாக கொடுத்த படம்.எல்லாவற்றுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் முதல் முறையாக பின்னணி பாடும் முறையை அறிமுகப் படுத்திய படமும் இதுதான். இந்தப் படத்தில் பாடிய லலிதா வெங்கட்ராமன் என்பவர்தான் தமிழ் சினிமாவின் முதல் பின்னணிப் பாடகி. 

இப்படி பலருக்கு முதல் வாய்ப்புகளைக் கொடுத்த "நந்தகுமார்" படம்தான் கே.வி. மகாதேவனை எஸ்.வி. வெங்கட்ராமன் அவர்களிடம் உதவியாளராக பணிபுரியும் முதல் வாய்ப்பை கொடுத்து  திரைப் படத்துறையில் முதல் முதலாக காலெடுத்து வைக்கச் செய்தது.
அதுவரை மேடைகளில் பாடிக்கொண்டும் வாசித்துக்கொண்டும் இருந்தது வேறு.  சினிமாவில் வாசிப்பது என்பது வேறு.மேடைகளில்பாடும் போது "கல்பனா சங்கீதத்துக்கே" முதலிடம்.  பாடகர் தன்னுடைய திறமை அனைத்தையும் காட்டி பாராட்டை நேரிடையாக ரசிகர்களிடம் இருந்து வாங்கிவிடலாம்.  ஒன்ஸ் மோர் கூட பெறலாம்.

ஆனால் சினிமாவில் சங்கீதம் நேரத்துக்குள் அடங்கவேண்டும். 

காட்டாற்று வெள்ளமான கர்நாடக சங்கீதத்தை மூன்று நிமிடப் பாடலுக்குள் அடைக்க வேண்டும்.அதிலும் எக்கச்சக்கமான பாடல்கள் இடம் பெற்ற அந்த நாளைய படங்களில் "செவிக்கினிய நாற்பத்திரண்டு பாடல்கள் நிறைந்த படம்" என்றுதான் விளம்பரப்படு த்துவார்க ள்.அவற்றில் நான்கு அல்லது ஐந்து பாடல்கள் தான் முழுமையான பாடல்கள்.மற்றதெல்லாம் விருத்தங்கள்.  பாடல்களுக்கு டியூன் செய்வதுகூட சுலபம்.  ஆனால் இந்த விருத்த வகை இருக்கிறதே.  அவற்றுக்கு மெட்டமைப்பது என்பது கடினமான விஷயம். 

ஒன்றரை நிமிட நேரத்துக்கு இடம் பெறும் ஒரு விருத்தத்துக்குள்  ராகத்தின் முழு வடிவத்தையும் அந்த நான்கு வரிக்குள் அடக்கிக் காட்டவேண்டும்.இதெல்லாம் நாடக மேடையில் பழம் தின்று கொட்டை போட்டவர்களுக்கே கை வந்த கலை. அந்தக் கலையில் கைதேர்ந்தவராக இருந்தார் எஸ்.வி. வெங்கட்ராமன்.  அவருடன் இணைந்து பணியாற்றியபோது இந்த வித்தையின் ஆரம்பப் பாடத்தை நன்றாகக் கற்றுக்கொண்டார் கே.வி. மகாதேவன்.



பின்னாளில் தனித்து இசை அமைத்த போது மகாதேவன் அமைத்த விருத்தங்கள் கேட்க ரம்மியமாகவும், மீண்டும் கேட்கத் தூண்டும் வகையிலும் அமைந்தன."திருவிளையாடல், திருவருட்செல்வர், கந்தன் கருணை, துணைவன்" ஆகிய படங்களில் இடம் பெற்ற விருத்தங்கள் அவருக்கு பெரும் புகழை வாங்கிக் கொடுத்தன.ஆனால்.   நந்தகுமார் படத்தின் தோல்வியும், அடுத்து வந்த படங்களின் தோல்விகளும் தொடர்ந்த போது ஏற்பட்ட கருத்துவேறுபாடுகளினால் ஏ.வி.எம். நிறுவனத்தை விட்டு எஸ்.வி. வெங்கட்ராமன் வெளியேறினார். 

அந்த நேரத்தில் கே.வி. மகாதேவனும் வெளியேறி டி.ஓ. சுப்பாராவ் என்ற  இசை அமைப்பாளரிடம் சேர்ந்து அங்கு கொஞ்ச காலம் இருந்த பிறகு ..
டி.ஏ. கல்யாணத்திடம் வந்து சேர்ந்தார். டி.ஏ. கல்யாணம் - தமிழ் சினிமாவில் மறக்கப்பட்ட - மறைக்கப்பட்ட திறமைசாலிகளில் ஒருவர்.  சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தில் இசை அமைப்பாளராக அவர் இருந்தார்.  மிகுந்த ஞானஸ்தர். இந்த அளவிற்குத்தான் திரு. டி. ஏ. கல்யாணம் அவர்களைப் பற்றி அறிய முடிகிறது.  குடத்தில் இட்ட விளக்காக வாழ்ந்து மறைந்த திறமைசாலிகளில் ஒருவராகத்தான் அவரை அடையாளம் காண முடிகிறது.  அவரது காலகட்டத்தில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்களில் இசை அமைப்பு என்பது ஒரு தனிப் பிரிவாக இல்லை.



பாடல்களுக்கு மட்டுமே இசை அமைப்பாளர் என்பவர் தேவைப்பட்டார்.  மற்றபடி பின்னணி இசைச் சேர்க்கைக்கு ஆர்கெஸ்ட்ரா என்று ஒன்று தனியாக இயங்கி வந்தது. ஆனால் படத்தில் பாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்த அளவுக்கு இசை அமைப்பாளர்களுக்கு தகுந்த முக்கியத்துவமோ விளம்பரமோ கொடுக்கப்படவில்லை என்பது வருத்தத்திற்குரிய ஒரு விஷயம் தான்.அவ்வளவு ஏன்?   இசை அமைப்பாளரின் பெயர் கூட டைட்டிலில் இடம் பெறாத படங்கள் கூட உண்டு. மூன்று தீபாவளிகளைக் கடந்து வெற்றிகரமாக ஓடிய "ஹரிதாஸ்" படத்தின் டைட்டிலில் கூட இசை அமைப்பாளர் ஜி. ராமனாதனின் பெயர் இருட்டடிப்பு செய்யப்பட்டதே? அந்தவகையில் டி.ஏ. கல்யாணம் அவர்களும் மறைக்கப்பட்ட ஒரு இசை அமைப்பாளராகவே அடையாளம் காணப்படுகிறார். 

அதனால் என்ன? 
கே.வி. மகாதேவன் என்ற இருபத்து நான்கு வயது இளைஞன் பட்டைதீட்டப்பட்ட வைரமாக மின்ன ஆரம்பித்தது டி.ஏ. கல்யாணத்தின் பாசறையில் தான்.மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தில் மகாதேவன் வேலைக்குச் சேர்ந்தபோது அங்கே இருந்த டி.ஆர். பாப்பாவும், டி.ஜி. லிங்கப்பாவும் அவருக்கு நெருங்கிய நண்பர்களாகினர்.

வருடம் 1942.   மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் "மனோன்மணி" படத்தயாரிப்பில் ஈடுபட்டிருந்த நேரம். மிகுந்த பொருட்செலவில் கிட்டத்தட்ட இரண்டு லட்சம் ரூபாய் செலவில் - (1942 இல் இரண்டு லட்சம் என்பது தற்போதைய மதிப்பில் இருபது கோடிகளுக்கு சமம்) டி.ஆர். சுந்தரம் அவர்கள் தயாரித்த படம். பொதுவாக படத் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் தான் நடிகர் நடிகைகளைத் தேர்வு செய்வார்கள். 

ஆனால் "மனோன்மணி" படத்துக்கு கதாநாயகர், கதாநாயகியைத் தேர்வு செய்தவர்களே ரசிகர்கள் தான்.ஆம்.  பத்திரிகைகளில் டி.ஆர். சுந்தரம் அவர்கள் "சுந்தரம் பிள்ளை அவர்களின் தமிழ் இசை நாடகமான மனோன்மணீயத்தை மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் திரைப்படமாக தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.  கதாநாயகன், நாயகியாக யாரைத் தேர்வு செய்யலாம் என்பதை ரசிகர்கள் தெரிவிக்க வேண்டும்." என்று விளம்பரப் படுத்தி வெகு ஜன ரசிகர்களின் ஏகோபித்த கருத்தை ஏற்று கதாநாயகனாக பி. யு. சின்னப்பா அவர்களையும், கதாநாயகியாக அன்றைய கனவுக்கன்னி டி.ஆர். ராஜகுமாரி அவர்களையும் ஒப்பந்தம் செய்து துவக்கப்பட்ட படம்.



படத்தின் பாடல்களை பாபநாசம் சிவன் அவர்களின் சகோதரர் பாபநாசம் ராஜகோபால அய்யர் அவர்கள் எழுத திரைக்கதையை வேல்சாமிக் கவி அமைத்தார். படத்துக்கு இசை அமைத்த டி.ஏ. கல்யாணம் அவர்கள் தனது உதவியாளனாக இருந்த கே. வி. மகாதேவனுக்கு "நீயே ஒரு பாட்டுக்கு டியூன் பண்ணு." என்று ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்தார். 

தமிழ் சினிமாவில் நிகழக் கிடைக்காத சம்பவம் இது.  தனக்குக் கிடைத்த வாய்ப்பில் தனது உதவியாளனுக்கும் ஒரு பங்கை கொடுப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல.  அதற்கு பெரிய மனதும், பெருந்தன்மையும் வேண்டும்.
அந்த மனது இசை அமைப்பாளர் டி.ஏ. கல்யாணம் அவர்களுக்கு இருந்தது.  லட்டு போல கிடைத்த வாய்ப்பை கச்சிதமாகப் பயன்படுத்திக்கொண்டார் கே.வி. மகாதேவன்."மோகனாங்க வதனி" என்று துவங்கும் பாபநாசம் ராஜகோபால அய்யரின் பாடலை கே.வி. மகாதேவன் இசை அமைக்க, உணர்ச்சிப் பொங்கும் குரலில் பி. யு. சின்னப்பா பாடி நடிக்க....
ஒரு இசை அமைப்பாளராக கே.வி. மகாதேவனின் வெற்றிப் பயணத்துக்கான பிள்ளையார் சுழி போடப்பட்டது அப்போதுதான். 


(பயணம் தொடரும்)


"இசை என்பது இறைவன் மனிதகுலத்துக்கு அளித்த பரிசு.  சுவர்க்கத்திலிருந்து பூமிக்கு கொடுக்கப்பட்ட ஒரே கலை.  பூமியிலிருக்கும் நம்மை சுவர்க்கத்தை உணரவைக்கும் ஒரே கலையும் இசைதான்."  -  வால்டர் சாவேஜ் லண்டர்.





முதல் பாடலுக்கு மகாதேவன் எப்படி இசை அமைத்தார்?
அவரே இதைப் பற்றி “சினிமா எக்ஸ்பிரஸ்”  பத்திரிகைக்காக திரு. வாமனன் அவர்களுக்கு அளித்த பேட்டி (1.4.1999) ஒன்றில் குறிப்பிடுகிறார். "அந்தப்பாடலைப் போட எனக்கு நாதஸ்வர மேதை டி.என். ராஜரத்தினம் பிள்ளை வாசிச்ச நாதஸ்வரம் உதவியா அமைஞ்சது.  அவர் கானடா ராகத்துலே கொடுத்த ரெக்கார்டு அப்போதான் ரிலீஸ் ஆச்சு.  அதன் அடிப்படையிலே தான் கானடா ராகத்துலே நான் மெட்டுப் போட்டேன்." 

1942-இல் அவர் இசை அமைத்த முதல் பாடல் எப்படி இருக்கிறது என்று கேட்டுப்பார்க்க ஆவல் எழுந்தது. யு-டியூபில் "மனோன்மணி" படமே பார்க்கக் கிடைத்தது. 
கர்நாடக சங்கீதம் கோலோச்சிய காலமல்லவா? 
அதுவும் பி.யு. சின்னப்பாவின் குரலில் கே.வி. மகாதேவனின் பாடலைக் கேட்கலாமே என்று பார்த்தால்...அந்தப் பாடல் காட்சி அடியோடு நீக்கப்பட்ட பிரதியாக எனக்கு காணக்கிடைத்தது.  

ஆகவே கே.வி. மகாதேவனின் முதல் பாடலை கேட்கமுடியவில்லை.  ஆனால் அது கண்டிப்பாக அனைவரையும் கவரும் வண்ணம் அமைந்து வெகுஜன ரசனையைக் கவர்ந்திருக்கவேண்டும் என்பது நிச்சயம்.
தொடர்ந்து டி.ஏ. கல்யாணத்துடன் இணைந்து மாயஜோதி, சிவலிங்க சாட்சி ஆகிய மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த படங்களுக்கு பணியாற்றினார் கே.வி. மகாதேவன். மாடர்ன் தியேட்டர்ஸில் மகாதேவன் பணிபுரிந்து வந்த சமயத்தில் ஒரு நாள் அவரிடம் ஆபீஸ் பையன் ஒரு பதினான்கு வயது சிறுவனை அழைத்து வந்தான்.



"அய்யா.  இந்தப்பையன் சினிமாவிலே பின்னணி பாட சான்ஸ் கேட்டு முதலாளியை பாக்க வந்தான். அவர்தான் உங்க கிட்டே அனுப்பி வாய்ஸ் நல்லா இருக்கான்னு டெஸ்ட் பண்ணச் சொன்னாரு."  அழைத்து வந்தவன் அந்த சிறுவனை மகாதேவனிடம் விட்டுவிட்டு சென்றுவிட்டான். 
அந்தச் சிறுவனையே ஒருகணம் கண் கொட்டாமல் பார்த்தார் மகாதேவன். குள்ளமான உருவம்.  அலைபாயும் கண்கள்.  வாழ்வின் அடித்தட்டிலிருந்து விடுபட்டு முன்னேறி வரவேண்டும் என்ற வைராக்கியம் அவனது முகத்தில் சுடர் விட்டது.  



எப்படியாவது சினிமாவில் அதுவும் இசைத் துறையில் முன்னேறிவரவேண்டும் என்ற ஆர்வம் அவனிடம் இருந்ததை கணிக்க அவரால் முடிந்தது.
ஆனால்...
மாடர்ன் தியேட்டர்ஸ் போன்ற கெடுபிடிகள் அதிகம் உள்ள நிறுவத்தில் இந்தச் சின்னப்பையன் தாக்குபிடிக்க முடியுமா?வேண்டாம்.  பொங்கிப்பாயவேண்டிய காட்டாற்று வெள்ளம் போன்ற இந்த வயதில் அதிதீவிரக் கட்டுப்பாட்டு அணைக்குள் இவனை முடக்கி வைக்கவேண்டாம். அந்தப் பதினான்கு வயது பாலகனுக்கு புத்திமதிகள் சொல்லி  "இங்கே வேண்டாம்பா.  உன்னாலே சமாளிக்க முடியாது. நானே இங்கே இருந்து போலாம்னு நெனைச்சுண்டு இருக்கேன்."  " என்று பலவாறாக சொல்லிவிட்டு  "ஒரு நிமிஷம் இருப்பா" என்று உள்ளே சென்று வெளியே வந்தவர் கையில் ஒரு புதிய சட்டை இருந்தது.  அதையும் கூடவே வழிச்செலவுக்கு இரண்டு ரூபாயையும் கொடுத்து அந்தச் சிறுவனை திருப்பி அனுப்பி வைத்தார் கே.வி. மகாதேவன்.



அந்தப் பதினான்கு வயதுச் சிறுவன் வேறு யாருமல்ல.
பின்னாளில் மெல்லிசை மன்னர் என்று புகழ்பெற்று திரை இசை சாம்ராஜ்யத்தில் கோலோச்சிய எம்.எஸ். விஸ்வநாதன் அவர்கள் தான் அன்று மகாதேவனால் திருப்பி அனுப்பிவைக்கப்பட்ட சிறுவன்.
மனோன்மணி" வெளிவந்த அதே 1942ஆம் ஆண்டு கே.வி. மகாதேவனின் வாழ்க்கையில் மறுமலர்ச்சி உண்டு பண்ணிய ஆண்டு என்றே சொல்லவேண்டும்.அந்த ஆண்டு தான் அவருக்கு தனியாக முழுப் படத்துக்கும் இசை அமைக்கும் மகத்தான வாய்ப்பு கிடைத்தது.

ஆம்.  யோகி பிலிம்ஸ் நிறுவனம் கவிஞர் ச.து. சுப்பிரமணிய யோகியார் அவர்கள் இயக்கத்தில் வெளிவந்த "ஆனந்தன் அல்லது அக்னிபுராண மகிமை" என்ற படத்துக்கு இசை அமைக்கும் வாய்ப்பு கே.வி. மகாதேவனுக்கு கிடைத்தது.  படத்தின் கதாநாயகனாக கிருஷ்ணகாந்தன் என்பவரும், நாயகியாக பி. சரஸ்வதியும் நடித்தனர்.  (இதைத் தவிர படத்தை பற்றிய இதர விபரங்கள் கிடைக்கவில்லை).  ஆகவே சேலத்தை விட்டு சென்னைக்கு வந்தார் கே.வி. மகாதேவன்.

கே.வி. மகாதேவன் அவர்கள் இசை அமைத்த இந்தப் படத்தின் பாடல்கள் எப்படி இருந்தன?  யார் யார் பாடி இருந்தனர்?  படத்தின் இசை எப்படி இருந்தது? படம் வெற்றிப்படமா? என்ற  விபரங்கள் எதுவும் நமக்கு கிடைக்கவில்லை.  படத்தின் பிரதியே கூட புழக்கத்தில் வராமல் வழக்கொழிந்து போய்விட்டிருக்கிறது.  மகாதேவன் அவர்கள் இசைஅமைப்பில் வெளியான முதல் படத்தின் இசை அவரது தலைமுறைக் காலத்திலேயே மறக்கடிக்கப் பட்டது காலத்தின் கொடுமைதான். 

எது எப்படியோ ஒரு இசை அமைப்பாளராக கே.வி. மகாதேவனின் வாழ்வு ஆரம்பமாகிவிட்டது.ஆனால் தொடர்ந்து படங்கள் கிடைக்கவில்லை.  அதற்கு காரணம்...
இரண்டாம் உலகப்போர்.
இரண்டாம் உலகப்போரின் காரணமாக இந்தியாவை ஆண்ட ஆங்கிலேய அரசு  படத்தயாரிப்புக்கு பல கட்டுப்பாடுகளை விதித்தது. அதனால் படத்தயாரிப்புகள் வெகுவாகக் குறைந்தன. ஆகவே வருடத்துக்கு ஒரு படம்தான் கே.வி.மகாதேவனின் இசையில் வெளிவர நேர்ந்தது.

 1944-இல் சி.வி. ராமன் அவர்கள் இயக்கத்தில் "பக்த ஹனுமான்",
1945-இல் மாடர்ன் தியேட்டர்ஸின் "பர்மா ராணி"
ஆகிய படங்கள் வந்த வேகத்திலேயே மறைந்தன. 

அதன்பிறகு ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு 1947-இல் புகழ்பெற்ற எழுத்தாளரும் இலக்கியவாதியுமாக அடையாளம் காணப்பட்ட பி. எஸ். ராமையா அவர்கள் இயக்கத்தில் வெளிவந்த "தன அமராவதி" என்ற படத்துக்கு கே.வி. மகாதேவன் இசை அமைத்தார்.பாய்ஸ் கம்பெனி மூலம் வளர்ந்த நடிகர், பாடகர் வி.என். சுந்தரம் கதாநாயகனாக நடித்த இந்தப் படத்தில் தான் ஜே.பி. சந்திரபாபு ஒரு சிறுவேடத்தில் அறிமுகமானார்.



1948-இல் எம்.எல். டாண்டன் இயக்கத்தில் வெளிவந்த "தேவதாசி" அவரது பெயர் சொல்லவைத்த படமாக இருந்தது. இந்தப் படமும் தற்போது வழக்கத்தில் இல்லாமல் மறைந்துபோய்விட்டது. ஆனால் ஒன்று.  ..  நாற்பதுகளில் திரை இசையில் கர்நாடக சங்கீதம் கோலோச்சிய காலம்.  இசைச் சக்ரவர்த்தி ஜி. ராமநாதன், எஸ்.வி. வெங்கட்ராமன் போன்ற ஜாம்பவான்களின் ஆதிக்கத்தில் திரை இசை இருந்த காலம்.  பாடத் தெரிந்தவர்களே நடிகர்களாகமுடியும் என்ற நிலைமை இருந்த காலம்.ஆகவே இந்தக் காலகட்டத்தில் வெளிவந்த கே.வி.மகாதேவனின் இசை அமைப்பிலும் கர்நாடக சங்கீதமே முக்கிய இடம் பெற்று இருந்திருக்கவேண்டும் என்று யூகிக்க முடிகிறது.



தியாகராஜ பாகவதர் என்ற பாடும் நிலவின் பிரகாசத்தின் முன்பு மற்றவர்களின் பாடல்கள் எதுவும் ரசிகர்களின் மத்தியில் எடுபடவில்லை.
ஆகவே என்னதான் உயிரைக்கொடுத்து ஒருவர் பாடி நடித்தாலும் அது எடுபடாமல் போனதுதான் நிதர்சனம்.எனவே தானோ என்னவோ..  கே.வி. மகாதேவன் இசை அமைத்த ஆரம்ப காலப் படங்கள் எதுவுமே எடுபடாமல் போய்விட்டன. அதனால் ஆரம்பகால இசையில் வெளிவந்த பாடல்கள் ஒன்றைக்கூட நம்மால் கேட்க முடியவில்லை.ஒரு இசை அமைப்பாளரின் வெற்றி என்பது அவரது பாடல்கள் மக்களால் முணுமுணுக்கப் படவேண்டும்.  அவர்களது உதடுகளில் ஒட்டிக்கொண்டிருக்கவேண்டும்.  அதற்கு படம் வெற்றி பெற்றிருக்க வேண்டும். 

அந்த ரீதியில் தன் இசை அமைப்பில் வெளியான படங்கள் அப்படி ஒன்றும் பெரு வெற்றி பெற்ற படங்களாக அமைந்து விடவில்லை.
ஆகவே படவாய்ப்புகளை மட்டும் நம்பிக்கொண்டிருக்க முடியாது.  அவை வரும்போது வரட்டும்.  அதுவரை சும்மா இருக்கக் கூடாது. வேறு ஏதாவது செய்தாகவேண்டும் என்று தோன்றியது அவருக்கு. அப்போது சென்னையில் வயலின் மகாதேவன் என்பவர் எச். எம். வி.யில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார் .  அவர் மூலமாக சென்னையில் எச். எம். வி. யில் சேர்ந்து பணியாற்றும் வாய்ப்பு கே.வி. மகாதேவனுக்கு கிடைத்தது.  கணிசமான சம்பளமும் கிடைத்தது. 



எச். எம். வி. யில் மகாதேவனின் இசையில் பக்திப் பாடல்கள் வெளிவர ஆரம்பித்துக் கொண்டிருந்தன.அந்தச் சமயத்தில் முன்னுக்கு வரத் துடித்துக்கொண்டிருந்த ஒரு இளம் பாடகர் தனது திறமைக்கேற்ற வாய்ப்புகளைத் தேடி அலைந்து கொண்டிருந்தார்.  அந்த இளைஞன் எச். எம். வி.க்கு வந்து கே.வி. மகாதேவனைச் சந்த்தித்தார். மாடர்ன் தியேட்டர்ஸில் சில படங்களுக்கு அவர் பாடிக்கொண்டிருந்தார்.  ஆனால் சென்னையில் புகழ் பெற்ற ஏ.எம். ராஜா, கண்டசாலா ஆகியோரின் வருகை அரிதாக கிடைத்த பாடல் வாய்ப்புகளையும் பறித்துக் கொண்டுவிட சேலத்தை சென்னைக்கு புலம் பெயர்ந்தார் அந்த இளம் பாடகர்.  வாய்ப்புகள் தேடி கம்பெனி கம்பெனியாக ஏறி இறங்கிக்கொண்டிருந்தவரின் கையில் இருந்த பணமெல்லாம் கரைந்துவிட்ட சூழ்நிலையில் என்ன செய்வது என்று யோசித்தவர் எச்.எம். வி. நிறுவனத்துக்கு வந்து கே.வி. மகாதேவனைச் சந்தித்தார். 

அவரை இரண்டு பக்திப் பாடல்கள் பாடவைத்து என்பது ரூபாய் வாங்கிக்கொடுத்தார் கே.வி. மகாதேவன். அந்த எண்பது ரூபாய் அந்தப் பாடகருக்கு அவர் அப்போதிருந்த நிலையில் என்பதாயிரத்துக்கு சமமாகத் தோன்றியது. கையில் கொண்டுவந்த பணமெல்லாம் கரைந்த நிலையில் எந்தத் தயாரிப்பாளரும் வாய்ப்புக் கொடுக்காத நிலையில், பேசாமல் சொந்த ஊரான மதுரைக்கே திரும்பிப் போய்விடலாமா என்று கூட நினைத்துக்கொண்டிருந்த நிலையில் கே.வி. மகாதேவன் தன் திறமை மீது நம்பிக்கை வைத்து இரண்டு பாடல்களை ரெக்கார்டில் பாட வாய்ப்பையும் வாங்கிக்கொடுத்து அதற்கு சம்பளமாக எண்பது ரூபாயையும் வாங்கிக் கொடுத்திருக்கிறார் என்றால்... 

ஒரு புதிய உத்வேகமும், புத்துணர்ச்சியும், உற்சாகமும் அந்தப் பாடகரிடம் உருவாக ஆரம்பித்தன. "அய்யா. நான் சினிமாக்களில் பாடி இருந்தும் எனக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லையே." என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் அந்த இளம் பாடகர்.

"கவலைப் படாதே.  தைரியமா இரு.  எல்லாம் நல்லபடியா நடக்கும்" என்று அவருக்கு தைரியம் கொடுத்துத் தேற்றினார் மகாதேவன்.
அதோடு நிற்கவில்லை அவர். "நீங்க ஏ.வி.எம். ஸ்டுடியோவுக்கு போய்ப் பாருங்க.  அவங்க நல்ல ப்ளேபாக் சிங்கர்ஸ் வேணும்னு தேடிண்டு இருக்காங்க.  கண்டிப்பா உங்களுக்கு சான்ஸ் கிடைக்கும்." என்று அவருக்கு புது உற்சாகத்தையும் நம்பிக்கையையும் கொடுத்து அவரை அனுப்பி வைத்தார் கே.வி. மகாதேவன்.மகாதேவனின் வார்த்தைகள் கொடுத்த தெம்பில் ஏ.வி. மெய்யப்ப செட்டியாரையும்,  இசை அமைப்பாளர் சுதர்சனத்தையும் சென்று பார்த்த அந்தப் பாடகருக்கு மகாதேவன் சொன்னது போலவே இரண்டு பாடல்களைப் பாட வாய்ப்பு கிடைத்துவிட்டது.

அந்தப் பாடகர் மெல்ல வளர்ந்து விஸ்வரூபமெடுத்து அறுபதுகள் முழுக்க திரை இசையை தன்வசப் படுத்திக்கொள்ள அன்று கே.வி. மகாதேவன் காட்டிய வழி அஸ்திவாரமிட்டது. 


டி.எம். சௌந்தரராஜன் தான் அந்தப் பாடகர்.

(பயணம் தொடரும்...)  


"வாரம் இருமுறையாவது இசை மழையில் நீராடுங்கள்.  அது உங்கள் ஆன்மாவைக் குளிர்விப்பதை நீங்கள் உணருவீர்கள்"  - -ஆலிவர் வெண்டெல் ஹோம்ஸ் 

வருடம் 1952.மௌனப் பட காலத்திலேயே திரை உலகிலே நுழைந்து பெயரும் புகழும் பெற்றிருந்த இயக்குனர் ஆர். பத்மநாபன். பிரபல இயக்குனர் கே. சுப்பிரமணியம் அவர்களின் திரை உலகப் பிரவேசத்துக்கு காரணமானவர் இவர்.பின்னாளில் தியாகராஜ பாகவதரின் புகழ் பெற்ற "திருநீலகண்டர்" உட்பட பல வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குனர் ராஜாசாண்டோ அவர்களை திரை உலகுக்கு கொண்டுவந்த பெருமையும் ஆர். பத்மநாபன் அவர்களையே சேரும்.இத்தகைய பெருமைகளைப் பெற்ற இயக்குனர் பத்மநாபன் அவர்கள் தயாரித்து இயக்கி 1952இல் வெளிவந்த படம் தான் "குமாரி". 

மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் ஆரம்ப காலப் படங்களில் ஒன்று. 
கதாநாயகனாக எம்.ஜி.ஆரும், அவருக்கு ஜோடியாக ஸ்ரீரஞ்சனியும் நடித்தனர்.கவிஞரும், எழுத்தாளருமான திரு. கு.சா. கிருஷ்ணமூர்த்தி படத்தின் கதையையும் சில பாடல்களையும் எழுதினார்.  டி.கே. சுந்தர வாத்தியாரும்  சில பாடல்களை எழுதினார். இந்தப் படத்துக்கு இசை அமைக்கும் வாய்ப்பு கே. வி. மகாதேவனுக்கு கிடைத்தது. 

அந்த வகையில் கே.வி. மகாதேவன் இசை அமைத்த முதல் எம்.ஜி.ஆர். படம் "குமாரி"தான். அடையாரில் இருந்த நெப்டியூன் ஸ்டூடியோவில் (பின்னாளைய சத்யா ஸ்டூடியோ) தயாரான படம் இது.இந்தப் படத்தில் உதவி இயக்குனராக அறிமுகமான ஏ.சி.டி. சந்தர் அவர்கள்தான் பின்னாளில் பிரபலமான இயக்குனர் ஏ.சி. திருலோகசந்தர். 
இளவரசி ஒருத்தி தேரில் செல்லும்போது குதிரைகள் தறிகெட்டு ஓட விபத்தை சந்திக்க நேருகிறது.  அந்த விபத்திலிருந்து அவளை ஒரு சாதாரண வாலிபன் காப்பாற்றுகிறான்.  இருவரும் காதல் வயப்படுகின்றனர்.  ஆனால் மகாராணியோ தன் மகளை தனது உருப்படாத தம்பிக்கே மணமுடிக்க நினைக்கிறார்.  தடைகளை கடந்து காதலர்கள் கடைசியில் ஒன்று சேருகின்றனர்.



இதில் மகாராணியாக மாதுரிதேவியும் அவரது தம்பியாக டி.எஸ். துரைராஜும் நடித்தனர்.இந்தப் படத்திற்கு கே.வி. மகாதேவன் அமைத்த இசைஅவரது பெயரை படவுலகில் நிலைநிறுத்தும் வண்ணம் இருந்தது.
எச். எம்.வி. யில் இரண்டு தனிப் பாடல்களை தெலுங்கில் தானே எழுதி மெட்டமைத்துப் பாடி பிரபலமடைந்த ஒரு இருபத்து இரண்டு வயது வாலிபன் கதாநாயகன்  எம்.ஜி.ஆருக்கு பின்னணி பாட ஒப்பந்தம் செய்யப்பட்டார்.அவர் தான் ஏ.எம். ராஜா.  ஆம். ஏ.எம். ராஜா முதல்முதலில் சினிமாவில் பாட ஒப்பந்தம் செய்யப்பட்ட படம் குமாரி.



(ஆனால் இந்தப் படம் வெளிவருவதற்கு முன்னால் ஜெமினி நிறுவனம் தயாரித்த "சம்சாரம்" படம் ஏ.எம்.ராஜா பாடிய முதல் பாடலை தாங்கி வந்து அவர் அறிமுகமான முதல் படம் என்ற பெருமையை தட்டிக்கொண்டு போய்விட்டது.) ஏ.எம்.ராஜாவைப் பொருத்தவரை "குமாரி" அவர் வாழ்வில் மறக்கவே முடியாத படம் என்றும் கூறலாம். 

ஏனென்றால் முதல் முதலாக ஜிக்கியுடன் இணைந்து அவர் பாடிய "இருளிலே நிலவொளி போல் அவர் வருவார்" என்று தொடங்கும் பாடல் இந்தப் படத்தில் தான் இடம்பெற்றது.  இந்த இருவரைத் தவிர பி. லீலா, ஏ.பி. கோமளா, என்.எல். கானசரஸ்வதி ஆகியோரும் இந்தப் படத்தில் பாடி இருந்தனர்.
பாடல்கள் எப்படி இருந்தன?

படமும் பாடல்களும் வழக்கொழிந்து போன காரணத்தால்  கே.வி.மகாதேவனின் இசை எப்படி அமைந்திருந்தது என்பதை அறிந்துகொள்ள முடியவில்லை. ஜிக்கி பாடிய "லாலலீ லாலி" என்ற மாதுரி தேவி பாடுவதாக அமைந்த பாடல் அந்த நாளில் பிரபலமான பாடலாக அமைந்திருந்தது என்பதை திரு.ராண்டார் கை அவர்களின் "ஹிந்து" நாளிதழ் கட்டுரை மூலம் அறிந்துகொள்ள முடிகிறது.
உண்மையில் இந்தப் பாடல் "தஸ்தான்" என்ற ஹிந்திப் படத்தில் சுரையாவும், முகமது ரபியும் பாடிய பாடலின் தழுவல் மெட்டு.  ஒரிஜினல் பாடலுக்கு இசை அமைத்தவர் நவுஷத் என்ற கூடுதல் தகவலும் நமக்கு கிடைக்கிறது. அந்தக் காலத்தில் தயாரிப்பாளர்களுக்கு இது ஒரு வழக்கமாகவே இருந்து வந்தது.    

மக்களுக்கு அறிமுகமே இல்லாத புதிய மெட்டுக்களில் பாடல்களைக் கொடுத்துவிட்டு அவை மக்களைக் கவரவேண்டுமே என்று படபடப்புடன் காதுக்கொண்டிருப்பதை விட ஏற்கெனவே மக்களுக்கு பரிச்சயமான மெட்டுக்களில் பாடல்களை அமைப்பதையே அவர்கள் விரும்பினர்.
ஆகவேதான் ஆரம்ப காலப் படங்களில் இரவல் மெட்டுக்களைத் தவிர்க்க இயலாமல் போனது.அழியா வரம் பெற்ற இசை அரசி எம்.எஸ். அம்மா அவர்களின் "காற்றினிலே வரும் கீதம்" பாடல் கூட வங்காளத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மெட்டுத்தான்.மெல்ல மெல்ல இந்தப் போக்கு குறைந்து புதிய டியூன்களில் பாடல்களை இசை அமைப்பாளர்கள் கொடுக்க ஆரம்பித்தார்கள்.



என்றாலும் ஆரம்ப காலத்தில் தங்களுக்கு ஒரு நிலையான இடம் கிடைக்கும் வரை தயாரிப்பாளர்களின் விருப்பங்களுக்கு ஏற்ப இசை அமைப்பாளர்கள் வளைந்து கொடுத்தாக வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது.
இந்த விதிக்கு கே.வி. மகாதேவனும் விலக்கல்ல.ஆகவேதான் "குமாரி"யில் இரவல் மெட்டுக்களை அப்படியே பிரதி எடுத்து ஜிக்கியை மாதுரிதேவிக்காகப் பாடவைத்தார் அவர். ஆனால்..  "குமாரி"- வெளிவந்த வேகத்திலேயே தோல்வியைத் தழுவியது.  "நல்ல நடிகர்களை வீணடித்த படம்" என்றும் "விமரிசனத்துக்கே அருகதையற்ற படம்" என்றும் பத்திரிகைகள் கடுமையாகச் சாடின. என்றாலும் பின்னாளைய சூப்பர் ஸ்டார் எம்.ஜி.ஆர். அவர்களின் அழகான தோற்றத்திற்காகவும், கே.வி. மகாதேவனின் மனத்தைக் கொள்ளைகொள்ளும் சில பாடல்களுக்காகவும் நினைவில் கொள்ளவேண்டிய படம் என்று விமர்சிக்கிறார் திரு. ராண்டார் கை அவர்கள். ஆனால்  "குமாரி" படத்தின் இசையும் பாடல்களும் கே.வி. மகாதேவனை எம்.ஜி.ஆரின் "குட் புக்"கில் இடம் பெற வைத்தன. அந்த வகையில் பின்னாளில் எம்.ஜி.ஆரின் பல வெற்றிப்படங்களுக்கு இசை அமைப்பாளராக பணியாற்றும் வாய்ப்புக்கு ஒரு அஸ்திவாரமாக "குமாரி" படம் அமைந்தது.



அடுத்து வந்த ஐம்பத்து மூன்றாம் ஆண்டு கே.வி. மகாதேவனை படவுலகில் ஒரு இசை அமைப்பாளராக இடம் பெற வைத்த ஆண்டாக அமைந்தது.எம்.எல். பதி அவர்களின் இயக்கத்தில் "லிபர்ட்டி பிக்சர்ஸ்" என்ற நிறுவனத்தின் தயாரிப்பான "மதன மோகினி" என்ற படத்துக்கு இசை அமைத்தார் கே.வி. மகாதேவன்.நரசிம்மபாரதி, சி. ஆர். ராஜகுமாரி, பி.எஸ். வீரப்பா, பொள்ளாச்சி கமலா ஆகியோர் நடித்த இந்தப் படத்துக்கு இசை அமைக்கும் போது  நடந்த ஒரு சம்பவம் கே.வி. மகாதேவனையே பாட வைத்தது.ஒரு டூயட் பாடலைப் பாட பி. லீலா பாடல் பதிவுக்கு வந்து விட்டார்.  ஆனால் பாடவேண்டிய ஆண் பாடகர் வரவே இல்லை.  அதனால் கே.வி. மகாதேவனே பி. லீலாவுடன் இணைந்து பாடிவிட்டார்.  இந்த ஒரு பாடல் என்று இல்லை.  படத்தில் கதாநாயகனுக்கான நான்கு பாடல்களையுமே கே.வி. மகாதேவனே பாடிவிட்டார். 

இந்த தகவலை அறிந்ததும் அவர் பாடிய அந்த நான்கு பாடல்களும் கேட்கக் கிடைக்குமா என்று இந்தத் தொடருக்காக தேடியபோது பி. லீலாவுடன் அவர் பாடிய டூயட் பாடல் கேட்கக் கிடைத்தது.
ஷண்முகப்ரியா ராகத்தில் அமைக்கப் பட்ட பாடலின் எடுப்பே மனதை அள்ளுகிறது.  "கண்ணோடு கண்ணால் ரகசியம் பேசி கருத்தைக் கவர்ந்தாய் உயிரோவியமே.." என்று கே.வி. மகாதேவனின் குரல் இனிமையும் கமகமும் இழையோட நம்மைக் கவர்கிறது.  குரலில் வெளிப்படும் பிருகாக்கள் அப்படியே கேட்பவரை பிரமிக்க வைக்கின்றன.
சரணத்தில் இணையும் லீலாவின் குரலுக்கு ஈடுகொடுக்கிற விதமும், இறுதியில் இரு குரல்களும் இணையும் விதமும் பாடலை மறுபடி மறுபடி கேட்கத் தூண்டுகிறது.

(நான் கேட்டு ரசித்த கே.வி. மகாதேவனின் குரலில் அமைந்த அந்தப் பாடலை வாசக அன்பர்கள் அனைவரும் கேட்டு மகிழ்வதற்காக பாடலுக்கான இணைப்பு :   https://soundcloud.com/krishnamurthy80/kannodu-kannai )



ஆனால்.. மதனமோகினி படம் படுதோல்வி அடைந்தது.



அதே சமயம் நடிகை மாதுரிதேவி சொந்தப் படம் எடுக்கத் தயாரானார்.



புகழ்பெற்ற "வந்தே மாதரம்" பாடலை எழுதிய வங்கமொழிக் கவிஞர் பங்கிம் சந்திர சட்டர்ஜியின் புகழ் பெற்ற "கிருஷ்ணகாந்தன் உயில்" என்ற நாவல் வங்கமொழியில் திரைப்படமாக வெளிவந்தது.  அந்த திரைப்படத்தை தமிழில் "ரோஹிணி"  என்ற பெயரில் நடிகை மாதுரி தேவி தயாரித்தார். 



இந்தப் படத்துக்கு ஆரம்பத்தில் இசை அமைக்க ஒப்பந்தமானவர் இசைச் சக்ரவர்த்தி ஜி. ராமநாதன் அவர்கள் தான்.



ஆனால் அப்போது சொந்தப் படத்தயாரிப்பிலும் ஜி.ராமநாதன் ஈடுபட்டிருந்ததால் "ரோஹிணி"க்கான இசையில் அவரால் தொடர்ந்து ஈடுபடமுடியவில்லை.  ஆகவே அவர் விலகிக்கொள்ள அந்த வாய்ப்பு கே.வி. மகாதேவனுக்குக் கிடைத்தது.



ஆனால் படத் தயாரிப்பில் எழுந்த சிக்கல் காரணமாக "ரோஹிணி" படம் வெளிவருவதில் ஏற்பட்ட தாமதம் படத்தின் வெற்றியை கடுமையாகப் பாதித்தது.

வந்த வேகத்திலேயே படம் சுருண்டதால் இந்தப் படத்தில் மகாதேவனின் பங்களிப்பைப் பற்றி ஏதும் அறிந்துகொள்ள முடியவில்லை.



ஆனால் அந்த தீபாவளிக்கு வெளிவந்த "நால்வர்" என்ற  படம் மகாதேவனின் திரை உலகில் ஒரு இசை அமைப்பாளராக மகாதேவனின் இருப்பை ஸ்திரப்படுத்தியது.

இத்தனைக்கும் அந்தப் படமும் வணிகரீதியாகத் தோல்வி கண்ட படம் தான்.

இருந்தாலும் அந்தப் படத்துக்கு கதை வசனம் எழுதி கதாநாயகனாக நடித்த நடிகரின் நட்பு கே.வி. மகாதேவனுக்குக் கிடைத்தது.  



அந்த நடிகர் பின்னாளில் ஒரு பிரபல தயாரிப்பாளராக மாறி சொந்தப் படங்கள் எடுக்க ஆரம்பித்ததோடு நிற்காமல் அவற்றை அவரே இயக்கவும் செய்தபோது அவரது படங்களுக்கு தொடர்ந்து இசை அமைக்கும் வாய்ப்பு கே.வி.மகாதேவனுக்கே கிடைக்கும் அளவுக்கு அந்த நட்பு இறுகியது. 



அந்தப் படங்களில் கே.வி. மகாதேவனின் இசை அமைப்பில் இடம் பெற்ற பாடல்கள் மிகவும் பிரபலம் அடைந்து பெரிதாகப் பேசப்பட்டன.  அவருக்கு தேசிய விருது கிடைக்கும் அளவுக்கு அவரை உயர்த்தி வைத்தன.




(இசைப் பயணம் தொடரும்..)


“இசை என்பது உங்களை வெறுப்பு, பொறாமை, மற்றும் பலவிதமான எதிர்மறை உணர்வுகளே இல்லாத ஒரு உலகத்துக்கு உங்களைக் கொண்டுசெல்வது." - ஏ.ஆர். ரஹ்மான்.





சேலம் மாவட்டத்தில் உள்ள சிறு கிராமம் அக்கம்மாபேட்டை.  இங்கு பரமசிவக் கவுண்டர் -லட்சுமி அம்மாள் தம்பதியருக்கு 1928ஆம் வருடம் பிறந்த மகனின் பெயர் குப்புசாமி. நல்ல வசதியான குடும்பம்.குப்புசாமி சின்னஞ்சிறு பையனாக இருந்தபோதே பரமசிவக் கவுண்டர் காலமானார்.  தந்தையை இழந்த சிறுவன் சிலமாதங்களிலேயே தாயையும் இழந்தான். அதன் பிறகு தாய்வழிப்பாட்டி மாணிக்க அம்மாளின் ஆதரவில் சிறுவன் குப்புசாமி வளர்ந்து வந்தான்.தனக்கு வயதாகி வந்ததாலும் தனக்கு பின்னால் குடும்பத்தில் உள்ளவர்கள் பேரனை சரிவரக் கவனிக்காமல் போய்விடுவார்களோ என்ற அச்சத்தின் காரணமாகவும் மாணிக்க அம்மாள் சிறுவன் குப்புசாமியை நாடகக் கம்பெனி ஒன்றில் சேர்த்து விட்டுவிட்டார்.



சிறிது காலத்தில் சிறுவன் குப்புசாமி தான் சேர்ந்திருந்த நாடகக் கம்பெனியிலிருந்து விலகி அவ்வை டி.கே. சண்முகம் அவர்களின் நாடகக் கம்பெனியில் சேர்ந்துவிட்டான்.  அங்கு ஏற்கெனவே நிறைய குப்புசாமிக்கள் இருந்ததால் பெயர்க்குழப்பத்தினைத் தவிர்க்கும் பொருட்டு டி.கே. சண்முகம் சிறுவன் குப்புசாமிக்கு நாகராஜன் என்று பெயர் மாற்றம் செய்தார்.ஆக அக்கம்மாபேட்டை பரமசிவம் குப்புசாமி - அக்கம்மாபேட்டை பரமசிவம் நாகராஜன் என்ற ஏ.பி. நாகராஜனாக மாறிய கதை இதுதான்.டி.கே. சண்முகம் அவர்களின் நாடக் கம்பெனிதான் ஏ.பி. நாகராஜனை புடம்போட்ட தங்கமாக மாற்றியது.  சண்முகம் அவர்களின் பிரபலமான நாடகமான "குமாஸ்தாவின் பெண்" நாடகத்தில் முக்கியவேடமேற்று நடித்தார் ஏ.பி.நாகராஜன்.  சண்முகம் அண்ணாச்சியின் நாடகக் கம்பெனியில் நாகராஜன் ஏற்று நடித்த வேடங்கள் அவருக்கு பெரும் புகழை ஈட்டித் தந்தன.  

பிறகு அங்கிருந்து விலகி மதுரை ஜெயராம சங்கீத பாய்ஸ் கம்பெனியிலும், பிறகு சக்தி நாடக சபாவிலும் சேர்ந்து நடிக்க  ஆரம்பித்தார் நாகராஜன்.  சக்தி நாடகசபாவில் அவர் இருந்த போது அவருடன் கூட இருந்தவர்கள் நடிகர் "காக்கா" ராதாகிருஷ்ணனும், சிவாஜி கணேசன் அவர்களும்.   அதன் பிறகு பழனி கதிரவன் நாடக சபா என்ற நாடகக் கம்பெனியை தனியாகத் தொடங்கி தானே கதைகள் எழுதி நடித்து வந்தார் ஏ.பி. நாகராஜன்.அவற்றில் "நால்வர்" என்ற நாடகம் வெற்றிகரமாக ஓடியது.  அதனை சங்கீதா பிக்சர்ஸ் நிறுவனம் திரைப்படமாகவும் தயாரித்தது. வி. கிருஷ்ணன் அவர்கள் இயக்கிய இந்தப் படத்துக்கு கதை வசனம் எழுதியதோடு அல்லாமல் கதாநாயகனாகவும் நடித்தார் ஏ.பி. நாகராஜன். கதாநாயகனாக ஏ.பி. நாகராஜனும், கதாநாயகியாக குமாரி தங்கம் என்ற நடிகையும் (மலையாளத் திரை உலகில் அப்போது பிரபலமாக இருந்தவர்) நடித்தார்.. 



இந்தப் படத்துக்கு கே.வி. மகாதேவன் இசை அமைத்தார்.  கே.வி. மகாதேவனும், ஏ.பி. நாகராஜனும் சேர்ந்து படத்தில் ஒரு பாடலையும் பாடி இருந்தார்கள்.  "வான வீதியில் பறந்திடுவோம்" என்று துவங்கும் பாடலை எம்.எல். வசந்தகுமாரியும், திருச்சி லோகநாதனும் கே.வி. மகாதேவனின் இசையில் பாடி இருந்தார்கள்.  கே.வி. மகாதேவனின் இசையில் எம்.எல். வசந்தகுமாரி பாடிய ஒரே பாடல் இதுதான்."நால்வர்" படம் பெரிதாக இல்லாவிட்டாலும் ஓரளவுக்கு நன்றாகவே ஓடியது.  படத்தின் பிரதி எதுவும் கிடைக்காததால் பாடல்களின் தரம் பற்றி ஏதும் அறியமுடியவில்லை.எது எப்படியோ  இந்தப் படத்தின் மூலம் ஏ.பி. நாகராஜன் அவர்களுக்கும் கே.வி. மகாதேவன் அவர்களுக்கும் இடையில் நல்ல புரிதலும் நட்பும் வளர்ந்தது.அந்த நட்பானது நாகராஜன் அடுத்து நடித்த "மாங்கல்யம்" படத்துக்கும் மகாதேவனையே இசை அமைக்க வைத்தது.



கே. சோமு அவர்கள் இயக்கத்தில் வெளிவந்த "மாங்கல்யம்" படத்தில் ஏ.பி. நாகராஜன் கதாநாயகனாகவும், கதாநாயகியாக பி.எஸ். சரோஜாவும் நடித்தனர்.  கதாநாயகனின் தங்கையாக ராஜசுலோச்சனா, அவருக்கு ஜோடியாக இரண்டாவது கதாநாயகனாக எம்.என்.நம்பியார்.



இந்தப்படத்தில் கே.வி.மகாதேவனின் இசை செவிக்கு இனியதாகவும், நெஞ்சை அள்ளும் வண்ணமும் அமைந்திருந்தது. படத்தின் இடையில் வந்த நாமகிரிப்பேட்டை கிருஷ்ணனின் நாதஸ்வர இசை அனைவரின் பாராட்டையும் பெற்றது. 



தெளிவான குழப்பமில்லாத வகையில் ஏ. பி. நாகராஜனின் திரைக்கதையும், வசனங்களும் அமைந்திருந்த போதும், இனிமையான இசை அமைப்பு கூடுதல் பலமாக இருந்தும் மாங்கல்யம் படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியைப் பெறவில்லை.



"மாங்கல்யம்" படம் வெளிவந்த அதே 1954ஆம் ஆண்டு எம்.கே. ராதா, பண்டரிபாய் நடிப்பில் "நல்ல காலம்" வெளிவந்தது.  தொடர்ச்சியாக வெளிவந்த படங்களில் மகாதேவனின் இசை தனித்துவத்தோடு இருந்துவந்தது.  அவருக்கு நல்ல பெயரையும் வாங்கித்தந்தது.



அடுத்து மகாதேவனின் இசையில் வெளிவந்த படம் "கூண்டுக்கிளி".  டி.ஆர். ராமண்ணா தயாரித்து இயக்கிய படம்.  எம். ஜி. ஆர். - சிவாஜி கணேசன் என்ற பின்னாளைய இரு உச்ச நட்சத்திரங்களும் சேர்ந்து நடித்த படம்.  விந்தனின் கதை வசனத்தில் வெளிவந்த இந்தப் படத்தில் கே.வி. மகாதேவனின் இசையில் வெளிவந்த பாடல்கள் அவரது மேலும் புகழைச் சேர்த்தன.  பாடல்களை பி. ஏ. பெரியநாயகி, டி.எம். சௌந்தரராஜன், வி. என். சுந்தரம், ராதா - ஜெயலக்ஷ்மி, டி.வி. ரத்னம், ராணி ஆகியோர் பாடினார்கள். 



"கொஞ்சும் கிளியான பெண்ணை கூண்டுக்கிளியாய் நினைத்து

காலமெல்லாம் சுற்றியது சரியா தப்பா. 

நெஞ்சைப் பறிகொடுத்து விட்டு நினைவு தடுமாறி நின்று

தஞ்சம் நீ என்றதெல்லாம் சரியா தப்பா"  -



டி.எம். சௌந்தரராஜன் நடிகர்  திலகம் சிவாஜிகணேசனுக்கு பாடிய முதல் பாடல் இது.  அந்த வகையில் சிவாஜிக்கு டி.எம்.எஸ். அவர்களை முதல் முதலாகப் பாடவைத்த பெருமை கே.வி. மகாதேவனுக்கே கிடைத்தது. இந்தப் பாடலை சிந்துபைரவி ராகத்தில் இனிமையாக அமைத்திருக்கிறார் கே.வி. மகாதேவன்.  பாடல் வரிகளுக்கு கச்சிதமாகப் பொருந்தும் மெட்டு.  இறுதியில் "சரியா தப்பா" என்று டி.எம்.எஸ்.ஸின் குரல் உச்சத்தைத் தொட்டு முடியும் போது   சிந்துபைரவி ராகமும் கே.வி.எம். அவர்களின் மெட்டும் பாடலைச் சிகரத்துக்கே கொண்டு செல்கின்றன.  https://www.youtube.com/watch?v=EdeYJ-ECzTo





இந்த இடத்தில் கே.வி. மகாதேவன் இசை அமைப்பைப் பற்றி கொஞ்சம் சொல்லியே ஆகவேண்டும்.



ஒரு பாட்டுக்கு இசை அமைப்பதற்கு முன்பு கதையில் அது வரும் இடம் அதாவது சிச்சுவேஷன் - அதற்கு தகுந்தாற்போல பாடலாசிரியர் எழுதி கொடுக்கும் பாட்டை அப்படியே வார்த்தைகளை மாற்றாமல் பொருத்தமாக இசை அமைப்பார் அவர்.

அவரைப் பொருத்தவரையில் "பாட்டுக்குத்தான் மெட்டு" என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்தார்.



அதனால் தான் கவியரசு கண்ணதாசன் அவர்கள் கே.வி. மகாதேவனைப் பற்றிக் குறிப்பிடும்போது, "மாமாவின் (மகாதேவன்) இசை அமைப்புக்காக நான் எழுதிய பாடல்களில் தொண்ணூறு சதவிகிதம் பாடல்கள் எழுதிய பிறகே இசை அமைக்கப்பட்டன." என்று பெருமிதத்துடன் குறிப்பிடுகிறார்.  அது மட்டும் அல்ல.  பாடலாசிரியர் எழுதி இருப்பதில் ஏதாவது ஒரு வார்த்தை புரியவில்லை என்றால் அதனை மாற்றச் சொல்லி நிர்ப்பந்திக்க மாட்டார்.  மாறாக அதற்கு என்ன அர்த்தம் என்று கேட்டுத் தெரிந்துகொண்டு உற்சாகமாக இசை அமைத்துக் கொடுப்பார். இதனைப் பற்றி கவியரசு கண்ணதாசன் சொல்லும்போது, "சங்க காலத் தமிழ் வார்த்தைகளைப் போட்டு எழுதினால் கூட அவர் உற்சாகமாக இசை அமைத்துக்கொடுப்பார்." என்று சொல்கிறார்.



"கூண்டுக்கிளி" ஒரு நல்ல கதையம்சம் நிறைந்த ஒரு பரீட்சார்த்தமான படம்.  ஆனால் மக்கள் மத்தியில் சரியான வரவேற்பைப் பெறாமல் படுதோல்வி அடைந்தது.   படத்தின் தோல்வி டி.ஆர். ராமண்ணாவை பெரிதும் பாதித்தது.



ஆகவே அவர் தனது ஆர்.ஆர். பிக்சர்ஸ் அடுத்து தயாரிக்கும் படங்கள் எல்லாமே ஜனரஞ்சகமான பொழுதுபோக்குச் சித்திரங்களாக மக்கள் மத்தியில் பெருத்த வரவேற்பைப் பெறக்கூடியவைகளாக அமையவேண்டும்  என்ற தீர்மானத்துடன்  மிகுந்த பொருட்செலவில் எம்.ஜி.ஆர்., டி. ஆர். ராஜகுமாரி, ஜி. வரலக்ஷ்மி, ஜே.பி. சந்திரபாபு, ஈ.வி. சரோஜா ஆகியோரை பிரதான வேடங்களில் நடிக்க வைத்து தனது அடுத்த படத்தை தயாரித்தார்.



1955-இல் வெளிவந்த அந்தப்படம் மாபெரும் வெற்றிப்படமாகி வசூலை வாரிக்குவித்தது.



அந்தப் படம்தான் "குலேபகாவலி".  இதற்கு இசை அமைத்தவர்கள் மெல்லிசை மன்னர்களான விஸ்வநாதன் - ராமமூர்த்தி.



அது சரி. இந்தப் படத்துக்கும் கே.வி. மகாதேவனுக்கும் என்ன சம்பந்தம்?



"குலேபகாவலி" என்றதும் நம் நினைவில் வந்து நின்று வாய் தானாகவே முணுமுணுக்கும் பாடல்  தஞ்சை ராமையாதாஸ் அவர்கள் எழுதிய "மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ. இனிக்கும் இன்ப இரவே நீ வா வா.  இன்னலைத் தீர்க்க வா." என்று ஏ.எம். ராஜாவும் ஜிக்கியும் இணைந்து பாடும் ஒரு டூயட் பாடல்தான்.



"பாகேஸ்ரீ" ராகத்தை அதி அற்புதமாகக் கையாண்டு  இந்த ஒரு பாடலுக்கு மட்டும் அற்புதமாக இசை அமைத்துக் கொடுத்தவர் கே.வி. மகாதேவன் அவர்கள் தான். https://www.youtube.com/watch?v=g-MZUdwH9hg





உண்மையில் இந்தப் பாடல் "கூண்டுக்கிளி" படத்துக்காக கே.வி. மகாதேவன் இசை அமைத்துக் கொடுத்த பாடல்.  ஆனால் பாடலை அந்தப் படத்தில் பயன்படுத்திக் கொள்ள ராமண்ணாவால் முடியவில்லை.  இந்தப் படலை "குலேபகாவலி" படத்தில் உபயோகப் படுத்திக்கொள்ள அவர் விரும்பினார். மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதனும் ராமண்ணாவும் கே.வி. மகாதேவனை அணுகி அவரது சம்மதத்தைக் கேட்டனர்.  பெருந்தன்மையோடும், மிகுந்த மகிழ்ச்சியோடும் பாடலைப் பயன்படுத்திக் கொள்ள சம்மதித்தார் கே.வி. மகாதேவன்.படத்தின் டைட்டிலில் அவரது பெயர் இடம் பெறாவிட்டாலும், தனது மெல்லிசைக் கச்சேரி மேடைகள் தோறும் இந்தத் தகவலை ரசிகர்கள் முன்பாகப் பகிர்ந்துகொண்டு கே.வி. மகாதேவனைப் பெருமைப்படுத்த எம்.எஸ். விஸ்வநாதன் இன்றும் தவறுவதில்லை.
*******
“குலேபகாவலி” வெளிவந்த அதே 1955ஆம் வருடம் தமிழ்ப் புத்தாண்டு வெளியீடாக ஏ.பி. நாகராஜன் கதை வசனம் எழுதி கதாநாயகனாக நடித்த "பெண்ணரசி" படம் வெளிவந்தது.  ஏ.பி. நாகராஜன், சூர்யகலா, எம்.என். நம்பியார், பி.எஸ். வீரப்பா, ஈ.வி. சரோஜா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த இந்தப் படத்தை கே.சோமு இயக்கி இருந்தார்.
இந்தப் படத்திற்கு இசை அமைக்கும் போது ஒரு புதுமையான முயற்சியை மேற்கொண்டார் கே.வி. மகாதேவன்.சாதாரணமாக ஒரு திரைப்படப் பாடல் என்று எடுத்துக்கொண்டால் முகப்பிசை (pre-lude) என்றும் இணைப்பிசை (interlude) என்றும் இரண்டு பிரிவுகள் கண்டிப்பாக இருக்கும்.  பாடல் ஆரம்பமாகும் முன்பாக பல்லவிக்கு முன்னதாக வருவது முகப்பிசை.  பல்லவியையும் சரணத்தையும் இணைக்கும் விதமாக வருவது இணைப்பிசை.பொதுவாக இந்த இணைப்பிசையாக வாத்தியங்களைப் பயன்படுத்துவார்கள்.  ஆனால் இந்தப் படத்தில் இடம் பெற்ற கவிஞர் மருதகாசி எழுதிய "இன்பம் என்றும் இங்கே ஆட்சி புரியுது" என்ற திருச்சி லோகநாதன் - எம்.எஸ். ராஜேஸ்வரி பாடிய டூயட் பாடலைப் பார்த்தோமென்றால் அதில் இணைப்பிசையே இருக்காது.  பல்லவி முடிந்ததும் எம்.எஸ். ராஜேஸ்வரியின் ஹம்மிங்கோடு ஆரம்பித்து இடையில் திருச்சி லோகநாதன் இணைந்துகொள்ள சரணம் தொடங்கும்.  முதல் சரணம் முடிந்து அடுத்த சரணம் ஒரு விருத்தமாக தொடங்கும்.  இணைப்பிசையே பாடலில் இருக்காது.  கே.வி. மகாதேவனின் கற்பனை வளத்துக்கு இந்தப் பாடல் ஒரு எடுத்துக்காட்டு. பாடலை நீங்களும் கேட்டுப்பாருங்களேன்.  நான் சொல்வது புரியும்.    https://www.youtube.com/watch?v=ABuCEIuySMg 

"பெண்ணரசி" படத்துக்கு இசை அமைத்த நேரத்தில் ஒரு சம்பவம் நடந்தது.  படத்துக்கான பின்னணி இசைச் சேர்க்கை மட்டுமே பாக்கி இருந்தது.  அந்த நேரத்தில் கே.வி. மகாதேவனுக்கு வெளியூர் செல்லவேண்டிய நிர்ப்பந்தம்.  "என்னோட அசிஸ்டண்டா சேந்திருக்கானே இந்தப் புகழேந்தி இதைப் பண்ணுவான்." என்றார் மகாதேவன். எல்லாருக்கும் அதிர்ச்சி.  ஏனென்றால் அதுவரையிலும் புகழேந்தி ஒரு ஸ்வரம் கூட சுயமாகச் சொல்லியதே இல்லை.  ஆகவே தயாரிப்பாளர் வேணு தயங்கி நின்றார். 

ஆனால் மகாதேவன் விடவில்லை.  "நீங்க கவலையே படவேண்டாம்.  என்னை விட இந்த ரிக்கார்டிங்கை புகழேந்தி ரொம்ப நன்றாகச் செய்வான்.  அதுக்கு நான் பொறுப்பு." என்று உத்தரவாதம் கொடுத்ததோடு இல்லாமல் படத்தின் டைட்டிலில் அவரது பெயரையும் தனது பெயருக்குக் கீழே "உதவி:புகழேந்தி" என்று போடவும் வைத்தார்.அதுவரையில் தான் இசை அமைத்த படங்களே சரியாகப் போகாத சூழலில் தன்னை விட தனது உதவியாளர் சிறப்பாகச் செயல் படுவார் என்று ஒரு இசை அமைப்பாளர் சொல்கிறார் என்றால்..? மகாதேவனின் தன்னம்பிக்கையும், பெருந்தன்மையும் பிரமிக்கவைக்கின்றன.என்னதான் சிறப்பாக அவர் செயல்பட்டாலும் இசை அமைத்த படங்கள் எதுவுமே அதுவரை குறிப்பிடத்தக்க அளவில் வெற்றியைப் பெறவில்லை. அந்த குறையைப் போக்கி வெற்றிப் பாதையில் அவரை ஏற்றிக்கொண்டு போக வந்தது "டவுன் பஸ்."




(இசைப் பயணம் தொடரும்..)


வாழ்க்கை ஒரு சங்கீதம்.  அது செவிகளாலும், புலன்களாலும், உணர்வுகளாலும் உருவாக்கப்படவேண்டுமே அல்லாமல் சட்ட திட்டங்களால் அல்ல  - சாமுவேல் பட்லர்



கடந்த வார இடுகையில் "நால்வர்" படம் ஒன்றில் தான் திருமதி எம்.எல். வசந்தகுமாரி கே.வி.மகாதேவனின் இசையில் பாடியதாக நான் எழுதி இருந்தேன்.  ஆனால் எம்.எல்.வி. அவர்கள் இன்னும் சில படங்களில் கே.வி. மகாதேவனின் இசையில் பாடியிருப்பதாக - குறிப்பாக "தாய்க்குப் பின் தாரம்" படத்தில் அவர் மகாதேவனின் இசையில் பாடியிருக்கும் தகவலை கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் கணிதத் துறையில் பேராசிரியராகப் பணிபுரியும் எனது நண்பரும் வாசகருமான திரு. பி. ரவிகுமார் தெரிவித்திருக்கிறார்.   நண்பர் ரவிகுமாருக்கு  என் மனமார்ந்த நன்றிகள்.





ஒரு திரைப்படம் வெற்றிப்படமாக அமைய வேண்டுமானால் அதற்கு பல காரணிகள் தேவை.  தெளிவான கதை, தேர்ந்த நட்சத்திரங்கள், சிறப்பான இசை, ஒளிப்பதிவு, அருமையான இயக்கம்.... என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.  



இவற்றில் ஏதாவது ஒன்றின் காரணமாக படம் தோல்வி அடைந்துவிட்டால் சிறப்பான அம்சங்கள் கூட எடுபடாமல் போய்விடக்கூடும்.  



எல்லாமே சிறப்பாக இருக்கும் படங்கள் கூட சமயங்களில் தோல்வி அடைந்து விடுவதும் உண்டு.



உழைப்பும், அதிர்ஷ்டமும் ஒரே நேர்க்கோட்டில் பயணிக்க வேண்டும்.



தனது திரை உலகப் பிரவேசத்தின் ஆரம்ப காலம் முதல் பத்து வருடங்கள் தனது திறமை அனைத்தையும் காட்டி இசை அமைத்தும் படங்கள் எதுவுமே சொல்லிக்கொள்ளும் அளவுக்கு வெற்றியைப் பெறவில்லை. 



என்னதான் சிறப்பான இசையமைப்பாளராக இருந்தாலும் படங்கள் வெற்றி பெற்றால் தானே படவுலகில் நிலைத்து நிற்க முடியும்?



அதுவும் அப்போது இசைச் சக்ரவர்த்தி ஜி. ராமநாதன், எஸ்.வி. வெங்கட்ராமன், சி.ஆர். சுப்பராமன் என்ற மும்மூர்த்திகள் முதல் தலைமுறை இசை அமைப்பாளர்களாக இருந்தார்கள்.



இரண்டாவது தலைமுறையில் கே.வி. மகாதேவன் வந்தபோது தொடர் வெற்றிகளால் தயாரிப்பாளர்களை தங்கள் பக்கம் பல இசை அமைப்பாளர்கள் இழுத்துக் கொண்டிருந்தார்கள்.  குறிப்பாக குலேபகாவலியின் வெற்றி இரட்டையர்களான விஸ்வநாதன்-ராமமூர்த்தியின் பக்கம் அனைவரையும் திரும்பிப் பார்க்கவைத்தது. நாம் இருவர் தொடங்கி பராசக்தி வரை தொடர் வெற்றிகளின் காரணமாக ஆர். சுதர்சனம் முன்னேறி வந்துகொண்டிருந்தார்.  ஏற்கெனவே எஸ்.எம். சுப்பையா நாயுடு வேறு ஒரு பக்கம் வெற்றிகளைக் குவித்துக் கொண்டிருந்தார்.  டி.ஜி. லிங்கப்பா, டி.ஆர். பாப்பா போன்ற புதிய தலைமுறையினர் வேறு களத்தில் இறங்கி கவனத்தை ஈர்க்க ஆரம்பித்திருந்தனர். 



இப்படிப்பட்ட சூழலில் எப்படிப்பட்டவருக்கும் ஒரு பரபரப்பு தொற்றிக்கொள்வது சகஜம்.  ஆனால் கே.வி. மகாதேவனோ நிதானம் இழக்காமல் இருந்தார்.  



அப்போது அவருக்கு உதவியாளராக சேர்ந்தார் டி.கே. புகழேந்தி.  புகழேந்தி வந்த நேரமோ என்னமோ வெற்றியும் அவரை வந்து சேர ஆரம்பித்தது.



எம்.ஏ.வேணு அவர்கள் தயாரித்த "டவுன் பஸ்" படம் 1955-இல் வெளிவந்தது.   கண்ணப்பா - அஞ்சலிதேவி ஜோடியாக நடித்திருந்தனர்.  கதை வசனம் எழுதியவர் ஏ.பி. நாகராஜன். கே. சோமு அவர்கள் இயக்கத்தில் வெளிவந்த இந்தப் படம் ஒரு சூப்பர் ஹிட் படமாக அமைந்தது.



அதற்கான முக்கிய காரணமே படத்தின் இசை தான்.  



அனைவரின் கவனத்தையும் கவர்ந்த படமாக "டவுன் பஸ்" அமைந்தது என்றால் அதற்கு காரணம் ஏ.பி. என் அவர்களின் கதை வசனமும், கே.வி. மகாதேவனின் இசை அமைப்பும் தான்.



பெரியதான "ஸ்டார் வால்யூ" எதுவும் இல்லாத படம் குறிப்படத்தக்க அளவில் வெற்றி பெற்றது என்றால்.. அதற்கு காரணம் வேறு எதுவாக இருக்க முடியும்?



"இடைவேளைக்குப் பிறகு முன்கூட்டியே யூகிக்கக் கூடிய திருப்பங்களுடன் சென்ற படத்தைக் காப்பாற்றும் அம்சமாக அமைந்தது கே.வி. மகாதேவனின் இசையமைப்பில் இடம் பெற்ற இனிமையான பாடல்கள்தான்" என்று தனது விமர்சனத்தில் குறிப்பிடுகிறார் பிரபல திரை ஆய்வாளர் திரு. ராண்டார்கை அவர்கள். 



கா.மு. ஷெரீப் இயற்றிய பாடல் வரிகளுக்கு அற்புதமாக இசை அமைத்து கேட்பவர் காதுகளில் தேனை வார்த்தார் கே.வி. மகாதேவன் என்றால் அது மிகை அல்ல.



"குழந்தைப் பாடகி" என்றே பெயர் வாங்கி இருந்த எம்.எஸ். ராஜேஸ்வரியை கதாநாயகி அஞ்சலிதேவிக்காகப் பாடவைத்தார் கே.வி. மகாதேவன்.



"சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா.

என்னை விட்டுப் பிரிஞ்சு போன கணவன் வீடு திரும்பலே." -  மழலைக் குரலில் ராஜேஸ்வரி சிட்டுக்குருவிக்குச் சொல்லும் சேதி கேட்கக் கேட்கத் திகட்டவே இல்லையே. நீங்களும்  கேட்டுப்பார்க்க  இணைப்பு : https://www.youtube.com/watch?v=bxj_l5WEcCo



படத்தில் இரண்டு முறை இடம் பெறும்  பாடல் இது.   



அடுத்து திருச்சி லோகநாதனும், எம்.எஸ். ராஜேஸ்வரி, ராதா ஜெயலக்ஷ்மி ஆகியோர் பாடிய இன்னொரு ஹிட் பாடல் "பொன்னான வாழ்வு மண்ணாகிப்போமா துயரம் நிலைதானா உலகம் இதுதானா" - இன்று வரை கேட்பவர் நெஞ்சங்களை விட்டு நீங்காத பாடலாக அமைந்த பாடல் இது.   https://www.youtube.com/watch?v=wBq_ecZbO9M



எண்பதுகளின் மத்தியில் ஈழத் தமிழர் பிரச்சினை விருட்சமாக வளர ஆரம்பித்த நேரம்.



ஒரு கலை நிகழ்ச்சிக்காக இலங்கை சென்றிருந்த பாடகர் டி.எல். மகராஜன் கூடியிருந்த லட்சக்கணக்கான தமிழர்களின் இடையே தனது தந்தை திருச்சி லோகநாதன் பாடிய இந்தப் பாடலை ஆரம்பித்தார்.  பல்லவியின் முதல் வரிகள் தங்கள் வாழ்விழல் சூழலோடு பொருந்துவதாக உணர்ந்த அத்தனை தமிழர்களும் கொட்டும் பனியைக்  கூடப் பொருட்படுத்தாமல் இந்தப் பாடலை வெகுவாக ரசிக்க ஆரம்பித்தார்கள். (தகவல் ஆதாரம்: சினிமா எக்ஸ்பிரஸ் ஏப்ரல் 1999-வாமனன் கட்டுரை).

                                                            ******************

எப்படி ஏ.பி. நாகராஜனின் நட்பு மகாதேவனுக்கு கிடைத்ததோ அதே போல இன்னொரு நடிகரின் நட்பும் அவருக்குக் கிடைத்தது.



கோவையில் ஒரு சாதாரண மில் தொழிலாளியாக வாழ்க்கையை ஆரம்பித்து சினிமாக்களில் குஸ்தி போடும் ஒரு ஸ்டண்ட் நடிகராக கால் பதித்தவர் அவர்.  எம்.ஜி.ஆர். படங்களில் சண்டைக்காட்சிகளில் கண்டிப்பாக அவருடன் இவர் மோதுவது உண்டு.  ஆரம்ப கால எம்.ஜி.ஆர் படங்களில் இவருக்கும் கட்டாயமாக ஒரு சண்டைக்காட்சி இருக்கும்.



சினிமாவின் மீது இவருக்கு இருந்த ஆர்வம், எப்படியாவது அதில் சாதிக்க வேண்டும் என்ற வெறி அந்த "ஸ்டண்ட் நடிகரை" சொந்தமாகப் படம் எடுக்கத் தூண்டியது.  அதுவும் தனது ஆருயிர் நண்பர் எம்.ஜி.ஆரை கதாநாயகனாகப் போட்டு படம் தயாரிக்க வேண்டும் என்று தூண்டியது.



தனது மனைவியின் நகைகளை விற்றுப் பணமாக்கி போதாத குறைக்கு அவரது மாமியார் வேறு தன் நகைகளைக் கொடுக்க அவரது சொந்த ஊரான கோவையில் இருந்த சொந்த பந்தங்கள் ஆளாளுக்கு பணம் கொடுத்து உதவ படத் தயாரிப்பில் இறங்கினார் அந்த ஸ்டண்ட் நடிகர்.



மகாதேவனின் இசையில் வெளிவந்த பாடல்கள் அவரது மனத்தைக் கவர்ந்திருந்தன.  ஆகவே தனது முதல் தயாரிப்புக்கு கே.வி. மகாதேவனையே இசை அமைக்க வைத்தார் அவர்.   



நண்பருக்கு தோள்கொடுக்க முன்வந்தார் எம்.ஜி.ஆர். 



"நால்வர்" காலம் தொட்டு ஏ.பி. நாகராஜனுடன் நல்ல நட்பு இருந்தது.



அவரது படத்தயாரிப்பு நிறுவனத்துக்கு பெயர் வைத்துக் கொடுத்ததே ஏ.பி.நாகராஜன் தான்.



"நாகராஜா.. நீயே நம்ம படத்துக்கு கதை வசனம் எழுதிக் கொடுத்துடு." என்று அவரை கேட்டுக்கொண்டார் அவர்.



சந்தோஷமாக சம்மதிக்கத்தான் செய்தார் நாகராஜன்.  ஆனால் அவருக்கிருந்த வேலைப் பளுவில் நண்பரின் கோரிக்கையை அவரால் நிறைவேற்றி வைக்க முடியவில்லை. 



கவிஞர் கண்ணதாசனிடம் உதவியாளராக இருந்த அய்யாப்பிள்ளை கதை வசனம் எழுதினர். 



கதாநாயகியாக நடிக்க பி. பானுமதியை எம்.ஜி.ஆரே தன் நண்பனுக்காகப் பேசி ஒப்பந்தம் செய்து கொடுத்தார்.  அடுத்த முக்கிய  கதாபாத்திரங்களில் நடிப்பதற்காக  டி.எஸ். பாலையா, கண்ணாம்பா என்று அந்நாளில் மிகப் பிரபலமாக இருந்த நட்சத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்க வைத்து படத்தை தனது தம்பியையே டைரக்ட் செய்ய வைத்தார் அந்த ஸ்டண்ட் நடிகர்.  



அந்த ஸ்டண்ட் நடிகர் வேறு யாருமல்ல.    சாண்டோ எம்.எம்.ஏ. சின்னப்பா தேவர் அவர்கள் தான் அந்த ஸ்டண்ட் நடிகர்.



ஏ.பி. நாகராஜன் நாமகரணம் சூட்டிய  அவரது தயாரிப்பு நிறுவனம்  "தேவர் பிலிம்ஸ்".



தேவர் பிலிம்ஸ் நிறுவனத்தின்  முதல் தயாரிப்பான அந்தப் படத்தின் பெயர்...



"தாய்க்குப் பின் தாரம்".



கே.வி. மகாதேவன் இசை அமைக்க எம்.ஜி.ஆர்.- பானுமதி இணைந்து நடிக்க 1956-இல் வெளியான "தாய்க்குப் பின் தாரம்" மகத்தான வெற்றி பெற்று வசூலை வாரிக் குவித்தது.



கே.வி. மகாதேவனை தேவர் பிலிம்ஸ் நிறுவனத்தின் ஆஸ்தான இசையமைப்பாளராகவும் நிலை நிறுத்தியது.




(இசைப் பயணம் தொடரும்..)



"இசை என்பது ஆன்மாவின் மொழி.  அது வாழ்க்கையின் ரகசியங்களைத் திறந்து மனங்களுக்கு இடையே ஏற்படும் சச்சரவுகளை அழித்து  அமைதியை வரவழைக்கிறது."  கலீல் கிப்ரான். 

சாண்டோ எம்.எம்.ஏ. சின்னப்பா தேவர் -  படத்துக்கு பூஜை போடும்போதே ரிலீஸ் தேதியை விளம்பரம் செய்து அதே நாளில் வெளியிடவும் செய்வார்.நடிப்பவர்களுக்கு மட்டும் என்று இல்லை அனைவருக்குமே சிங்கிள் பேமென்ட்.  அதே சமயம் கண்டிப்பு, கறாருக்கு பெயர் போன ஆசாமி.ரீடேக் செய்து பிலிம் சுருளை வீணடிப்பது என்பதெல்லாம் இவரிடம் ஆகவே ஆகாது."தாய்க்குப் பின் தாரம்" அவரது முதல் தயாரிப்பு என்பதால் பணத்தை தண்ணீராக வாரி இறைத்து தயாரித்தார்.  தரத்தில் இம்மி அளவு கூட அவர் காம்ப்ரமைஸ் செய்துகொள்ளவில்லை. 


"மனிதனுக்கு மனிதன் விரோதி அல்ல.  அவரவர் கொள்கைகள் தான் விரோதி. பழிவாங்கவேண்டும் என்றால் ஒருவனது தீய குணத்தைத் தான் அழிக்கவேண்டுமே தவிர அவனையே அழிக்க நினைக்கக் கூடாது"  என்ற கருத்தை உள்ளடக்கிய படம். எம்.ஜி.ஆரின் அந்தஸ்தை எந்த அளவுக்கு உயர்த்தமுடியுமோ அதற்காக தன்னால் என்னவெல்லாம் செய்யமுடியுமோ அத்தனையையும் தேவர் இந்தப் படத்தில் செய்தார் என்றால் அது மிகையே அல்ல. மாட்டுவண்டி ரேஸ், காளையை எம்.ஜி.ஆர். அடக்கும் ஜல்லிக்கட்டு காட்சி -  ஒரு மாஸ் ஹீரோவாக தனது ஆருயிர் நண்பரின் இமேஜை தேவர் உயர்த்திக் காட்டினார். 

இப்படிப்பட்ட ஒருவரிடம் நல்ல பெயர் வாங்குவது என்பது மகத்தான சாதனை. இசை அமைப்பைப் பொருத்தவரையில் அந்த சாதனையை கே.வி. மகாதேவன் நிகழ்த்திக் காட்டினார் என்றே சொல்லவேண்டும்.
இசை அமைப்புக்கு என்று மகாதேவன் சிரமப்பட்டதே இல்லை. பாடலுக்கு இசை அமைக்க அவர் கையாண்ட முறை என்ன? 

இதோ அவரே சொல்கிறார்:
"கதையில் பாட்டு வரும் இடத்தைக் கேட்பேன்.  எந்தச் சூழ்நிலையில் வருகிறது என்று கேட்பேன்.  பின்னர் பாடலாசிரியருடன் உட்கார்ந்து அவர் தரும் பாட்டுக்கேற்ப இசை அமைப்பேன்"  
தேவரின் முதல் தயாரிப்பான "தாய்க்குப் பின் தாரம்" படத்துக்கு கே.வி. மகாதேவனின் இசையில் பாடல்கள் அத்தனையுமே ஹிட்டான பாடல்கள் தான்.எம்.ஜி. ஆரின் அறிமுகப் பாடலான "மனுஷனை மனுஷன்  சாப்பிடுறாண்டா தம்பிப் பயலே. இது மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலே."  -   என்ற  பாடலுக்கு மகாதேவன் அமைத்த மெட்டு இன்றளவும் காதுக்கு ரம்மியமாகவும் வார்த்தைகளை சிதைக்காத அளவுக்கும் ஒலிக்கின்றன.  பாடலை ஒரு முறை கேட்டுவிட்டு மறுமுறை கேட்கும்போதே வரிகள் மனப்பாடமாகி விடுகின்றன. 
அடுத்து சாய்-சுப்புலக்ஷ்மியின் நடனத்துக்கான பாடல்.
"நாடு செழித்திட நாளும் உழைத்திட நல்ல மனம் வேண்டும்"  -  என்று துவங்கும் இந்தப் பாடலை சுத்தமான கர்நாடக சங்கீதத்தில் அமைத்துக் கொடுத்திருக்கிறார் கே.வி. மகாதேவன்.ஆபோகி, விஜயநாகரி, காபி  ஆகிய மூன்று ராகங்களைப் பயன்படுத்தி ஒரு அருமையான ராகமாலிகைப் பாடலை கொடுத்திருக்கிறார் கே.வி. மகாதேவன். இசை வீராங்கனை திருமதி. எம்.எல். வசந்தகுமாரி பாடியிருக்கிறார் என்ற போதே பாடலின் தரம் பற்றி சொல்லவா வேண்டும்?    

அடுத்து பி. பானுமதி பாடும் "அசைந்தாடும் தென்றலே தூது சொல்லாயோ"  -  கேட்பவர் மனங்களை அசைக்கத் தவறாத பாடல் இது. சங்கராபரணம் ராகத்தின் அடிப்படையில் இந்தப் பாடலை அமைத்திருக்கிறார் கே.வி. மகாதேவன். டி.எம். எஸ். - பானுமதி குரல்களில் ஒரு டூயட் "ஆகா நம் ஆசை நிறைவேறுமா.  கடல் அலையைப் போல மறைந்து போக நேருமா" -  இன்று வரை காற்றலைகளில் தவழ்ந்து வந்து நம் காது மடல்களை வருடத் தவறாத பாடல். 
"அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் அவ்வையின் பொன்மொழி வீணா?"  - டி.எம்.எஸ். பாடும் இந்தத் தத்துவப் பாடலை - தந்தையின் பெருமையை மகன் உணர்ந்து போற்றுவதாக அமைந்த இந்தப் பாடலை "மத்யமாவதி" ராகத்தின் அடிப்படையில்  விருத்தமாகவும், பாடலாகவும் அமைத்திருக்கிறார் கே.வி. மகாதேவன்.

பாடலாசிரியர் கொடுக்கும் பாடலின் வரிகள் தான் அமைக்கும் மெட்டுக்குள் அடங்காவிட்டால் "வரிகளை மாற்று" என்று பாடலாசிரியருடன் மல்லுக்கு நிற்கமாட்டார்.  அந்த வரிகளை விருத்தமாக அமைத்து அடுத்த வரிக்கு தாவிவிடுவார் அவர்.



ஆனால் பாடலைக் கேட்கும்போது அவை மெட்டுக்குள் அடங்காத வரிகளாகத் தோன்றாது.  விருத்தமாக வரும்போது பாடலின் கருத்து இன்னும் அழுத்தமாக அமைந்து கேட்பவரின் செவிகளுக்கு ரம்மியமாக ஒலிப்பதோடு  அல்லாமல் மனதையும் தொட்டு நிற்கும்.



அந்தவகையில் இந்த "அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்" பாடல் உயர்ந்து நிற்கும் பாடல்.  படத்தின் முக்கிய திருப்பத்தில் இடம் பெறும் இந்தப் பாடலால் கதையின் போக்கும், காட்சியின் அமைப்பும் அழுத்தம் பெற்று நிற்கும் வண்ணம் மகாதேவனின் இசை உயர்ந்து நின்றது.



தாய்க்கு பின் தாரம் வெளிவந்து மகத்தான வெற்றியைப் பெற்ற அதே சமயத்தில்  ஏ.பி.நாகராஜன் தனது நண்பரான நடிகர் வி.கே. ராமசாமியுடன் கூட்டாக இணைந்து “ஸ்ரீ லக்ஷ்மி பிக்சர்ஸ்” என்ற பானரில் சொந்தப் படத்தை தயாரிக்க ஆரம்பித்தார்.கதை வசனம் ஏ.பி. நாகராஜனேதான்.  கே.சோமு இயக்குனர்.படத்தின் கதாநாயகனாக நடிகர் திலகம் சிவாஜி கணேசனும், அவருக்கு ஜோடியாக பி. பானுமதியும் நடித்தனர்.  இவரகளைத் தவிர இரண்டாவது கதாநாயகன் - நாயகியாக எம்.என். நம்பியாரும், எம்.என். ராஜமும் நடித்தனர்.  முக்கிய கதாபாத்திரங்களில் கண்ணாம்பா, வி.கே. ராமசாமி, சாரங்கபாணி ஆகியோர் நடிக்க தயாரான படத்துக்கு இசை அமைக்கும் வாய்ப்பு கே.வி. மகாதேவனுக்கே கிடைத்தது.கிராமத்து பின்னணியில் நடிகர் திலகம் கொங்கு வட்டாரத் தமிழில் வெளுத்து வாங்கிய படத்திற்கு நாட்டுப்புற மண் மனம் கமழும் இசையில் கே.வி. மகாதேவனும் வெளுத்து வாங்கினார். 

1957-இல் வெளிவந்த "மக்களைப் பெற்ற மகராசி"  மற்றொரு வெற்றிமாலையை கே.வி. மகாதேவனின் இசை மகுடத்தில் சூட்டினாள்.
இந்தப் படத்தில் இடம் பெற்ற காலத்தால் அழிக்க முடியாத பாடல்தான் "மணப்பாறை மாடுகட்டி மாயவரம் ஏரு பூட்டி" என்ற மண்மணம் மாறாத பாடல்.கவிஞர் மருதகாசி எழுதிய இந்த அற்புதமான பாடலை டி.எம்.எஸ்.  அவர்களை அற்புதமாகப் பாடவைத்து அருமையான முறையில் அமைத்துக் கொடுத்திருக்கிறார் கே.வி. மகாதேவன்.
சிந்துபைரவி ராகத்தை இவ்வளவு எளிமையாக அழகாக திரைப் படத்தில் உபயோகப் படுத்தமுடியுமா என்று வியக்க வைக்கிறது கே.வி. மகாதேவனின் திறமை.அதுதான் கே.வி. மகாதேவன்.  

கர்நாடக சங்கீதத்தில் எத்தனையோ ராகங்கள் இருக்கின்றன.  அவை திரைப்படங்களில் பல இசை அமைப்பாளர்களால் கையாளப்ப ட்டிருக்கின்றன. 

என்றாலும் எந்த ஒரு ராகத்தின் அடிப்படையில் அமைந்த திரைப் பாடல் என்றாலும் அந்த ராகத்தில் கே.வி. மகாதேவன் அமைத்த பாடல் ஒன்று தான் முதலிடத்தில் நிற்கும்.  அந்த வகையில் இந்த சிந்துபைரவி ராகப் பாடலும் அப்படித்தான்.  சந்தேகமிருந்தால் நீங்களே கேட்டுப்பா ருங்களேன்.  நான் சொல்வது உண்மை என்று புரியும்.  

"பொன்னு விளையுற பூமியடா"  என்று விருத்தமாக  ஆரம்பித்து "மணப்பாறை மாடு கட்டி.." என்று பாடலாக உருமாறுகிறது.  கே.வி. மகாதேவனின் சிந்துபைரவி ஒரு அருமையான மண்மணம் கமழும் பாடலாக உருமாறி ரசவாதம் புரிகிறது. இதே படத்தில் இடம் பெற்ற இன்னொரு காலத்தை வென்ற காதல் டூயட் அருமையான மெலடி.  "ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா உண்மைக் காதல் மாறிப்போகுமா"  என்ற பி. பி. ஸ்ரீனிவாஸ் - சரோஜினி பாடிய பாடல் கேட்கக் கேட்கத் திகட்டாத பாடல். 

"போறவளே போறவளே பொன்னுரங்கம் - என்னை புரிஞ்சிக்காம போறியே நீ சின்னரங்கம்" - என்ற டி.எம்.எஸ் - பி. பானுமதி பாடும் பாடல் ஒரு அருமையான நாட்டுப்புற மெட்டாக மலர்ந்த பாடல். கேட்கக் கேட்கத் திகட்டாக மண்மணம் கமழும் பாடல்களை அருமையாக வார்த்தெடுத்துக் கொடுத்திருந்தார் கே.வி. மகாதேவன். 

இப்படி சின்னப்பா தேவர், ஏ.பி. நாகராஜன் என்ற இரு நண்பர்கள் கொடுத்த வாய்ப்புகளை அருமையாகப் பயன்படுத்திக்கொண்டதால் கே.வி. மகாதேவனின் புகழ் பரவ ஆரம்பித்தது. 

வாய்ப்புகள் தொடர்ந்து வந்து குவிய ஆரம்பித்தன.  வெற்றிச் சிகரத்தை நோக்கி தனது பயணத்தை அனாயாசமாக தொடர ஆரம்பித்தார் அவர்.

*******************************

"தாய்க்குப் பின் தாரம்" படத்தின் மகத்தான வெற்றிக்குப் பிறகு..  யார் கண் பட்டதோ சின்னப்பாதேவருக்கும், எம்.ஜி. ஆருக்கும் இடையில் ஏற்பட்ட நட்பில் ஒரு விரிசல் ஏற்பட்டது.  பார்க்கப் போனால் படப்பிடிப்பின் போதே இந்த விரிசல் ஏற்பட்டதால் தேவருக்கு படத்தை நல்ல படியாக முடிக்க முடியுமா என்ற அளவுக்கு சிக்கலே ஏற்பட்டது. 

எது எப்படியோ படம் நல்லபடியாக ஓடி வெற்றிப்பட தயாரிப்பாளர் வரிசையில் இடம் பிடித்தார் சின்னப்பாதேவர்.ஆனால்.. அடுத்தபடியாக எம்.ஜி.ஆரை எப்படி அணுகுவது என்ற தயக்கம் தேவருக்கு ஏற்பட்டது.
ஆனால்..  தொடர்ந்து படங்களை எடுத்தாக வேண்டுமே? தனக்காக இல்லாவிட்டாலும் தன்னை நம்பி இருக்கும் குடும்பங்களை வாழ வைத்தாக வேண்டுமே? அதற்காகவாவது அடுத்த படத்தை துவக்கியே ஆகவேண்டும் என்ற நிர்ப்பந்தம் அவரை உந்தித் தள்ளியது. பெருவெற்றி பெற்ற எஸ்.எஸ். வாசனின் "சந்திரலேகா" படம் அவரது நினைவுக்கு வந்தது. அதில் வில்லன் சசாங்கனாக நடித்து அசத்திய ரஞ்சனை கதாநாயகனாகவும், அவருக்கு ஜோடியாக அஞ்சலிதேவியையும் ஒப்பந்தம் செய்து தனது அடுத்த படத்தை ஆரம்பித்தார் தேவர். 

வழக்கம் போல அம்மாவாக கண்ணாம்பா.  கதாநாயகனின் தங்கையாக ஈ.வி. சரோஜா. வில்லனாக பி. எஸ். வீரப்பா.இசை?  கே.வி. மகாதேவனைத் தவிர வேறு யாரையுமே நினைக்கவில்லை தேவர்.

"நீலமலைத் திருடன்"  வளர ஆரம்பித்தான்.



(இசைப் பயணம் தொடரும்..)

இசை என்பது மக்களின் வாழ்க்கைப் பயணத்தில் கையாளும் மொழிகளால் வெளிப்படுத்த இயலாத உணர்வுகளை வெளிப்படுத்த உதவும் மொழி" - ஏ.ஆர். ரஹ்மான். 

நீங்கள் ஜெயதேவரின் "அஷ்டபதி" கேட்டிருக்கிறீர்களா?
கர்நாடக இசை ரசிகர்கள் கண்டிப்பாக இதை கேட்டிருப்பீர்கள்.                                                                                                                   

"அஷ்டபதியா?  அப்படி என்றால் என்ன சார்?” என்று கேட்பவர்களுக்காக ஒரு சிறு அறிமுகம்.பன்னிரண்டாம் நூற்றாண்டில் ஒரிஸ்ஸாவில் (இன்றைய ஓடிஸா) புரியில் வாழ்ந்த ஜெயதேவர் என்பவரால் இயற்றப்பட்ட 24 பாடல்களின் தொகுப்பே அஷ்டபதி.
"கீதகோவிந்தம்" என்றும் இதனைச் சொல்வதுண்டு.பக்தி இலக்கியத்தில் நாயக நாயகி பாவத்தில் புனையப்பட்ட இந்தப் பாடல் தொகுப்பு ஆன்மீக அன்பர்கள் அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகிறது.

பல்லவி அதைத் தொடர்ந்து ஏழு சரணங்கள் என்று மொத்தம் எட்டு கண்ணிகளாக அமைக்கப் பட்டதால் "அஷ்டபதி" என்று பெயர்.பொதுவாக ஒரு சரணம் முடிந்ததும் பல்லவியின் முதலடியைத் தொட்டே பாடல்கள் பாடப்படுவது வழக்கம்.ஆனால் இந்த அஷ்டபதியில் மட்டும் ஒவ்வொரு சரணம் முடிந்ததும் பல்லவியின் முதலடிக்கு பதிலாக கடைசி அடிகளைத்தான் தொடர்ந்து பாடும் விதமாக அமைந்திருக்கிறது. 

இந்த அஷ்டபதியின் அமைப்பில் தான் "முதலாளி" படத்தில் தான் இசை அமைத்திருக்கும் "ஏரிக்கரையின் மேலே" என்ற கவி. கா. மு.  ஷெரீபின் பாடலை அமைத்திருக்கிறார் கே.வி. மகாதேவன்."ஆரபி"  ராகத்தில் இந்தப் பாடலை வெகு அற்புதமாக அமைத்திருக்கிறார் அவர். 

"ஏரிக்கரையின் மேலே போறவளே பெண்மயிலே.

என் அருமைக் காதலியே என்னைக் கொஞ்சம் பாரு நீயே."  - என்று துவங்கும் பல்லவியின் அடுத்த வரிகளான "அன்னம் போல நடை நடந்து சென்றிடும் மயிலே. ஆசை தீர  நில்லு கொஞ்சம் பேசுவோம் குயிலே"  - என்ற கடைசி இரண்டு வரிகளைத்தான் அடுத்து வரும் ஒவ்வொரு சரண முடிவிலும் தொட்டுக்கொண்டு பாடல் தொடரும்: முடிவதும் இந்த கடைசி இரண்டு வரிகளோடுதான்.புல்லாங்குழல், கிளாரினெட், தபேலா ஆகிய மூன்றே மூன்று இசைக் கருவிகளை வைத்துக்கொண்டே காலத்தால் அழிக்கமுடியாத ஒரு காவியப் பாடலைக் கொடுத்திருக்கிறார் கே.வி. மகாதேவன். 

டி.எம். சௌந்தரராஜனின் கம்பீரக் குரலில் வெளிப்படும் இந்தப் பாடலில் கே.வி. மகாதேவன் வெளிப்படுத்தும் ஆரபி ராகத்தின் சஞ்சாரங்கள் கேட்பவரை வியக்க வைக்கின்றன. அடுத்து ஜிக்கியின் வசீகரக் குரலில் "யௌவ்வன ராணிதான். இசை பாடும் வாணிதான்"  என்ற பாடலும் குறிப்பிடப்படவேண்டிய பாடல். 

அறிமுகக் கதாநாயகி தேவிகாவுக்கு எம்.எஸ். ராஜேஸ்வரியை பின்னணி பாடவைத்தார் கே.வி. மகாதேவன்."எங்கிருந்தோ வந்தார் என் இதயம் கவர்ந்தார்."  என்ற தனிப்பாடல் இனிமையாக மனதை வருடும் பாடல்.
அடுத்து ஒரு நாடோடி நடனப் பாடல்.
"சம்பளம் தான் உயர்ந்திட்டாலும் போதவில்லை.
சண்டைபோட்டு போனஸ் பெற்றும் பத்தவில்லை.
நம்மைப் போல் ஏமாளிகள் யாருமில்லை.
நமக்கு நாமே திருந்தாவிட்டால் பயனுமில்லை." என்று விருத்தமாக ஆரம்பித்து.

"சிக்கனமா வாழணும்.  சேர்த்துவைக்கப் பழகணும்." என்று ஜிக்கி-எம்.எஸ். ராஜேஸ்வரி இருவரின் குரல்களில் எளியவரிகளில் சேமிப்பின் அவசியத்தை உணர்த்தும் பாடல்.  

 கா. மு. ஷெரீபின் கருத்தாழமிக்க வரிகளை முன்வரிசை ரசிகனுக்கு கொண்டுசேர்க்கும் பணியை செம்மையாகச் செய்தார் கே.வி. மகாதேவன். என்றாலும்..  "ஏரிக்கரையின் மேலே"  பாடல் அளவுக்கு மற்ற எந்தப் பாடல்களுமே மக்களைச் சென்று அடையவில்லை.

"முதலாளி" படம் அடைந்த மாபெரும் வெற்றி சின்ன பட்ஜெட்டில் படம் எடுக்கும் தயாரிப்பாளர்களுக்கு ஒரு தூண்டுகோலாக அமைந்தது என்பதை மறுக்க முடியாது. 

அதே சமயம் இப்படி சின்ன பட்ஜெட்டில் படம் எடுப்பதில் கைதேர்ந்த மலையாள திரை உலகையும் முதலாளியின் மாபெரும் வெற்றி ஈர்த்தது.
மலையாளத்திலும் பிரேம்நசீர், ஷீலா ஆகிய இருவரும் நடிக்க தயாரான மலையாள "முதலாளி" படத்துக்கு கே.வி. மகாதேவனின் உதவியாளர் டி.கே. புகழேந்தி இசை அமைத்தார்.1957 - தீபாவளிக்கு வெளிவந்த "முதலாளி" - படத்தை அடுத்து தொடர்ந்து வந்த தைப்பொங்கலுக்கு இன்னொரு வெற்றி மகுடம் கே.வி. மகாதேவனின் சிரத்தை அலங்கரித்தது.

படம் :  தை பிறந்தால் வழி பிறக்கும்.

எஸ்.எஸ். ராஜேந்திரன், பிரேம்நசீர், ராஜசுலோச்சனா, எம்.என். ராஜம் ஆகியவர்கள் முக்கிய வேடங்களில் நடித்தனர்.அண்ணன் - தங்கை பாசத்தை மையமாகக் கொண்ட இந்தப் படத்தில் மகாதேவனின் இசையில் வெளிவந்த பாடல்கள் அனைத்துமே பெருவெற்றி பெற்றன.
படமே "தைபொறந்தா வழி பொறக்கும் தங்கமே தங்கம்.  தங்கச் சம்பா நெல்விளையும் தங்கமே தங்கம்" என்ற பாடலுடன்தான் துவங்குகிறது.
பி. லீலா - டி.எம். சௌந்தரராஜன் குழுவினருடன் பாடும் பாடல் இது. "மாண்ட் "  ராகத்தை இவ்வளவு அழகாக எளிமைப் படுத்தி ஒரு உற்சாகமிக்க பாடலை தரமுடியுமா?
தந்திருக்கிறார் கே.வி. மகாதேவன்.
பாடலின் முகப்பிசையே (Prelude) கேட்பவரை தாளம்போட வைக்கிறது. 

மண்மணம் குன்றாத கிராமியப் பாடல்களைத் தருவதில் தனது நிகரில்லாத்திறமையை இந்தப் படத்தின் பாடல்களில் வெளிப்படுத்தி இருக்கிறார் கே.வி. மகாதேவன்."ஆசையே அலைபோலே நாமெல்லாம் அதன் மேலே"  - என்ற திருச்சி லோகநாதனின் பாடல் வெளிப்படுத்தும் கருத்துக்களும் உணர்வுகளும்..  விவரிக்க வார்த்தைகள் போதாது. பீம்ப்ளாஸ் ராகத்தில் அலைபோல மிதந்து வந்து கேட்பவரைத் தாலாட்டுகிறது இந்தப் பாடல். "மண்ணுக்கு மரம் பாரமா. மரத்துக்கு இலை பாரமா.  கொடிக்கு காய் பாரமா.  பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமா"  - என்ற எம்.எஸ். ராஜேஸ்வரியின் பாடல் தாய்மையின் சிறப்பை அற்புதமாக வெளிப்படுத்தும் பாடல். என்றாலும்...தைபிறந்தால் வழிபிறக்கும்" படப் பாடல்களிலேயே முதலிடம் பெறும் முத்தான பாடல் என்றால்...

அது...உவமைக் கவிஞர் சுரதா எழுதிய "அமுதும் தேனும் எதற்கு நீ  அருகினில் இருக்கையிலே எனக்கு.." என்ற பாடல்தான்.
அழியா வரம் பெற்ற இந்தப் பாடலைப் பற்றிப் பார்ப்பதற்கு முன்....
பொதுவாக ஒரு பாடலுக்கு மெட்டமைக்க உங்களுக்கு எவ்வளவு நேரம் பிடிக்கும் என்ற கேள்விக்கு மகாதேவன் தரும் பதிலைப் பார்ப்போம்.
"பாடலாசிரியர் தரும் பாட்டில் உள்ள சந்தமும் தாளமும் ஏற்கெனவே பிரபலமான பாடலின் சாயலில் இருந்தால் அதை நினைவு படுத்தாத வகையில் மெட்டமைக்க வேண்டும்.  இந்த மாதிரி பாடல்கள் போடும்போது கொஞ்சம் நேரம் பிடிக்கும்.ஆனால்.. பொதுவாக என்னைப் பொருத்தவரையில் சிலசமயம் உடனே மெட்டு பிறந்துவிடும். " - என்று சொல்லிவிட்டு அதற்கு உதாரணமாக சில பாடல்களை பட்டியலிடுகிறார் கே.வி. மகாதேவன். 

அந்த வரிசையில் விளைந்த பாடல் தான் இந்த "அமுதும் தேனும் எதற்கு" பாடல்.பாடல் வரிகளைப் பார்த்தவுடனேயே வந்து விழுந்த மெட்டு.
அதே போல இன்ன ராகத்தில் தான் அமைக்கவேண்டும் என்று முன்கூட்டியே தீர்மானித்துக்கொண்டு மகாதேவன் பாடலை அமைப்பதில்லை.பாடல் வரிகளும், படத்தில் அது இடம்பெறும் கட்டத்துக்கான சூழ்நிலையும் கச்சிதமாக வெளிப்படும் வண்ணம் பல்லவிக்கான டியூன் முதலில் செட் ஆனபிறகு தான் அதற்கான ராகத்தை பற்றியே சிந்திப்பார் கே.வி. மகாதேவன்.அந்த வகையில் இந்த "அமுதும் தேனும் எதற்கு"  பாடலுக்கான ராகம் அவரை அறியாமலே கச்சிதமாக வந்து விழுந்திருக்கிறது. 

மோகன ராகத்தில் அமைக்க வேண்டும் என்று ஆரம்பித்து மோகன கல்யாணியாக மாறிவிட்டது என்று டி.கே. புகழேந்தி அவர்கள் ஒரு நேர்காணலில் சொல்லி இருக்கிறார்.ஆனால் -  மோகன கல்யாணியின் மத்யமம் இந்தப் பாடலில் மிஸ்ஸிங்.  ஆகவே இது மோகனத்திலும் அமையவில்லை.  மோகன கல்யாணியிலும் அமையவில்லை.  ஆனால் சுத்தமான கர்நாடக ராகத்தில் அமைந்த பாடலாக இருக்கிறது.  அது என்ன ராகம்?கண்டுபிடிக்க முடியாமல் திணறிக்கொண்டிருந்த பொழுது கோவையில் இருக்கும் "இந்தியன் பப்ளிக் பள்ளியில்"  இசைத் துறையில் பணிபுரியும் எனது குடும்ப நண்பர் திரு. நாராயணசுவாமி அவர்கள் உதவிக்கு வந்தார்.  பல இசைக்கருவிகளையும் லாவகமாகக் கையாளும் நிபுணர்.  பல மெல்லிசை கச்சேரி மேடைகளிலும் வாத்தியக்கருவிகளை அனாயாசமாக வாசித்தும் வருபவர் இவர்.  அவரது உதவியால் தான் இந்தப் பாடல் சங்கராபரண ராகத்தின் ஜன்யராகமான "நிரஞ்சனி"- என்ற அபூர்வ ராகத்தில் அமைந்திருக்கிறது என்பது தெரிந்தது.  


மிகவும் அபூர்வமான இந்த ராகம் வெகு அற்புதமாக இந்தப் பாடலில் கையாளப் பட்டிருக்கிறது.   அபூர்வ ராகங்களை கையாள்வதில் கே.வி. மகாதேவனுக்கு இருக்கும் திறமையை வியப்பதா?அல்லது  "நான் இருக்கிறேன்.  என்னை உபயோகப் படுத்திக்கொள்ளேன்." என்று தானாகவே "நிரஞ்சனி" ராக தேவதை அவர் போட்ட மெட்டில் வந்து அமர்ந்து கொண்டுவிட்டாள் என்று எடுத்துக்கொள்வதா?சீர்காழியின் சாரீரம் தான் எவ்வளவு அழகாக இந்தப் பாடல் வரிகளுக்கேற்றபடி ஜாலம் புரிகிறது.  கொஞ்சுகிறது!.  அன்பு பொங்க மனம் கவர்ந்த நாயகியை வருணிக்கிறது!

சுரதா, சீர்காழி கோவிந்தராஜன், கே.வி. மகாதேவன் ஆகிய மூவரின் கூட்டணியில் அமைந்த இந்த மாபெரும் வெற்றிப்பாடலுக்கு பயன்படுத்தப் பட்ட இசைக்கருவிகளோ மூன்றே மூன்று.  சிதார், வயலின், தபேலா -  ஆகிய மூன்றே மூன்று இசைக் கருவிகளை வைத்துக்கொண்டு நிரஞ்சனி ராகத்தில் மகாதேவன் போட்ட மெட்டு காலங்களைக் கடந்து இன்றளவும் நிரந்தரமாக காற்றலைகளில் நிலைத்து விட்டிருக்கிறதே!

 திரை இசையில் இந்த "நிரஞ்சனி" ராகத்தை கே.வி. மகாதேவனைத் தவிர வேறு யாருமே பயன்படுத்தி இருக்கமுடியாது என்றுதான் தோன்றுகிறது.அப்படியே இருந்தாலும் இந்த "அமுதும் தேனும் எதற்கு" பாடல் பிரபலமான அளவுக்கு அந்தப் பாடல் மக்களைச் சென்று அடைந்திருக்க முடியாது. அந்த அளவுக்கு வெகு பொருத்தமாக - அழகாக - கச்சிதமாக - அமைந்த பாடல் இது."தை பிறந்தால் வழி பிறக்கும்" படம் தயாரிப்பில் இருந்த அதே நேரத்தில் மகாதேவனின் நண்பரான திரு. ஏ.பி. நாகராஜன் அவர்களின் கதை வசனத்தில் கே. சோமு அவர்களின் இயக்கத்தில் இன்னொரு படம் தயாரானது.                              

எம்.ஆர். ராதா, சௌகார் ஜானகி முக்கிய வேடங்களில் நடித்த இந்தப் படத்தின் பெயர் "நல்ல இடத்து சம்பந்தம்".படங்களில் கோரஸ் பாடிக்கொண்டிருந்த நிர்மலா என்ற பாடகியின் மகள்தான் லூர்துமேரி ராஜேஸ்வரி.  அம்மாவுடன் ஒரு கோரஸ் பாடகியாக திரை இசைத் துறையில் கால்பதித்த லூர்துமேரி ராஜேஸ்வரியின் குரல்வளம் ஏ.பி. நாகராஜன் - கே.வி. மகாதேவன் ஆகியோரது கவனத்தை கவர்ந்ததன் விளைவு  "நல்ல இடத்து சம்பந்தம்" படத்தில் மூன்று பாடல்கள் பாடும் முத்தான வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.ஏற்கெனவே எம்.எஸ். ராஜேஸ்வரி அந்தக் காலகட்டத்தில் படங்களில் பாடிப் பிரபலமாகிக் கொண்டிருந்தார்.  இவரும்  ராஜேஸ்வரி என்றால் பெயர்க்குழப்பம் ஏற்படுமே?  அதைத் தவிர்ப்பதற்காக அவரது பெயரை கொஞ்சம் சுருக்கி புதிதாக நாமகரணம் செய்தார் ஏ.பி. நாகராஜன்.லூர்துமேரி ராஜேஸ்வரி -  எல்.ஆர். ஈஸ்வரி என்னும் இசைக்குயிலாக மாறி கே.வி. மகாதேவனின் இசை அமைப்பில் முதல் முதலாக திரை இசைத் துறையில் "நல்ல இடத்து சம்பந்தம்" கிடைக்க அதைப் பற்றிக்கொண்டு வலது காலெடுத்து வைத்தார்.


(இசைப்பயணம் தொடரும்...)








No comments:

Post a Comment