Monday 2 April 2018

இழவு வீடு







இழவு வீடு
சாதாரணமானவள்




ஒவ்வொரு
இழவு வீடும்
பெருங்குரலோடுதான்
துக்கத்தை வெளிப்படுத்த
ஆரம்பிக்கின்றன.பெண்கள்
ஒப்பாரி வைக்க
ஆண்கள்
அழுகையை அடக்கிக்கொண்டு
வெளியில் போய்
நிற்கிறார்கள்

நாட்டமை போலும்
ஒரு உறவினர்
தொலைபேசி மூலம்
தொலைதூர சொந்தங்களுக்கு
செய்தி தருகிறார்

அக்கம்பக்கம்
முதலில் வந்து
துக்கம் விசாரிக்க
மெதுவாய் கூடுகிறது
கூட்டம்

இறந்தவரை
நடுவீட்டில் வைத்து
மாலையிட்டு மரியாதை செய்து
சுற்றிலும் அமர்ந்து
ஒப்பாரி வைத்து
புகழ் பாடத்
தொடங்குகிறார்கள்

சுமார் ஒரு மணி நேரம்
கழிந்தபின்
அக்கம்பக்கம்
அகலுகிறது
சொந்த பந்தம்
நெருங்குகிறது
பெருங்குரல் அழுகை
கேவலாகிறது

மகள், மருமகளின்
கண்கள் மெதுவாக
அடுத்தவர் முகம் பார்க்க ஆரம்பிக்கிறது
வாய் மெதுவாக
இறந்தவர் எப்படி இறந்தார் என
காரணம் சொல்ல ஆரம்பிக்கிறது

தன்னால் கவனித்துக்கொள்ள இயலாத
குற்ற உணர்வை மனம் ஒத்துக்கொள்ள 
ஆரம்பிக்கிறது

இன்னும் சிறிது நேரமாகிறது
அழுதுகொண்டு வருபவர்களுடன் மட்டும்
அழுதுகொண்டு…
மற்றபடி
மௌனம் காத்துக்கொண்டு….


இன்னும் கொஞ்ச நேரம் கழிகிறது
தெரிந்தவர்கள் வர ஆரம்பிக்கின்றனர்
கண்களும் உடலும்
களைப்புடன் வரவேற்க தொடங்குகிறது
மிக நுண்ணிய புன்னகை
தென்பட தொடங்குகிறது
மெதுவாக நலம் விசாரிப்புகளும்
இடம் பிடிக்கின்றன

மேலும் சில காலம் நகர்கிறது
தத்தம் குடும்பத்தார்
நலன் நாடி
வெளியேயாகினும் சென்று
உணவு உட்கொள்ள
ரகசிய கட்டளைகள் பறக்கின்றன

முதலில் பச்சைத்தண்ணீர் கூட
குடிக்க மறுத்த உதடுகள்
இப்போது காப்பி தண்ணீர்
கொண்டு வர சொல்கின்றன

குடித்தவாறு மெதுவே ஆரம்பிக்கும்
வந்தவர் வராதவர் குறிப்புகள்
இறந்தவர் குடும்ப எதிர்காலம்
இன்னும் ஏதேனும் ரகசியம்
பிணம் எடுக்கும் நேரம்
பின்னே சென்று வழியனுப்புதலும்

அத்தனையும் முடித்து
தத்தம் வீடு சென்று
சுத்தமாக குளித்து
சாவதானமாக கட்டிலில் சாய்ந்து
சொடுக்குவார் டிவி ரிமோட்டை

இன்று நாடகம் என்ன ஆச்சோ தெரியலை என்று
தான் ஆடிவந்த நாடகம் மறந்து…



சாதாரணமானவள்

No comments:

Post a Comment