WHO IS PERIYAR ? WHAT IS HIS TREASURE ?





WHO IS PERIYAR ?
WHAT IS HIS TREASURE ?






யார் இந்தப் பெரியார்: அவர் விட்டுச் சென்ற செல்வம் என்ன?

பெரியாருக்கு ஏன் இத்தனை சிலைகள்? அரசியலிலும், சமூக இயக்கங்களிலும் முரண்படும் பல அமைப்புகள் கூட பெரியாரை ஏற்றுக் கொண்டாடுவது ஏன்? யார் இந்த பெரியார்?

திரிபுராவில் ஆட்சியில் இருந்த கம்யூனிஸ்டுகள் தோற்ற நிலையில், அங்கிருந்த லெனின் சிலை அகற்றப்பட்டது. அதையடுத்து தமிழ்நாட்டில் பெரியாரின் சிலைகளை அகற்றப்போவதாக பாஜகவினர் ஏன் கோபம் காட்டவேண்டும்?

கம்யூனிஸ்டுகள், திராவிடக் கட்சிகள், தலித் அமைப்புகள், தமிழ்த்தேசியவாதிகள், பெண்ணியவாதிகள் என்று பல்வேறு நிறங்களும், முழக்கங்களும் உடைய அமைப்புகளும், இயக்கங்களும், தனி நபர்களும் ஏன் பெரியாரைப் போற்றவேண்டும்?

ஈரோட்டில் செல்வக் குடும்பத்தில் பிறந்த ஈ.வெ.ராமசாமி-யை மதங்களுக்கும், மூடநம்பிக்கைகளுக்கும், ஏற்றத் தாழ்வுகளுக்கும், பெண்ணடிமைத் தனத்துக்கும் எதிராகத் திருப்பியது எது?

விதவை மறுமணம்

குடும்பத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாரபட்சங்கள் இளம் வயதிலேயே அவரது கவனத்தைக் கவர்ந்தன. குழந்தைத் திருமணம் செய்து குழந்தையாக இருக்கும்போதே கணவனை இழந்து கைம்பெண்ணாகி வாழ்நாள் முழுவதும் கைம்பெண்ணாகவே வாழ நேர்ந்த பல்லாயிரம் பெண்களின் துயரம் அவரை ஆட்கொண்டது.

அவ்விதம் குழந்தைப் பிராயத்திலேயே கணவனை இழந்த தமது சகோதரி மகளுக்கு குடும்பத்தின் எதிர்ப்பையும் மீறி அவர் மறுமணம் செய்வித்தார்.

காசி பயணம்

நாகம்மையாரை மணந்துகொண்டு தமது தந்தையின் வணிகத்தை கவனித்து வந்த நேரம், குடும்பத்தில் ஏற்பட்ட பிணக்கு காரணமாக அவர் வீட்டை விட்டு வெளியேறி துறவு பூணும் நோக்கத்தோடு காசிக்குச் சென்றார். அங்கிருந்த அன்ன சத்திரங்கள் பிராமணர் அல்லாதோரை உள்ளே அனுமதிக்க மறுத்ததால் அவர் பசியில் வாடி, சத்திரத்தில் இருந்து வீசி எறிந்த இலைகளில் இருந்து உணவை எடுத்து உண்ண வேண்டிய நிலை ஏற்பட்டது. இது அவரது மனதில் நீங்கா வடுவை ஏற்படுத்தியது.


பிறகு அவர் தமது துறவு எண்ணத்தைக் கைவிட்டு ஊருக்குத் திரும்பினார். இயல்பாகவே இருந்த ஆர்வத்தினால் அவர் பல பொதுப் பணிகளை சொந்த ஊரான ஈரோட்டில் மேற்கொண்டார்.

காங்கிரசில்...

காந்தியக் கொள்கைகளால் கவரப்பட்டு அவர் 1919-ம் ஆண்டு காங்கிரசில் இணைந்தார். கதர், மது எதிர்ப்பு, தீண்டாமை எதிர்ப்பு என்னும் காந்தியின் அடிப்படைக் கொள்கைகளுக்காக உழைத்தார்.

விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்று தாம் வகித்த நகரமன்றத் தலைவர் உள்ளிட்ட ஏராளமான பொதுப் பதவிகளைத் துறந்தார்.
தமது மனைவி நாகம்மையையும், சகோதரி பாலாம்பாளையும் அரசியலில் ஈடுபட ஊக்குவித்தார் பெரியார். அவர்கள் இருவரும் தலைமையேற்று காங்கிரஸ் கட்சியின் கள்ளுக்கடை மறியல் போராட்டத்தை நடத்தினர்.

கள்ளுக்கடை மறியல் போராட்டத்துக்கு ஆதரவாக, கள் இறக்கப் பயன்படக்கூடாது என்று, தமது தோப்பில் இருந்த தென்னை மரங்கள் அனைத்தையும் வெட்டி அழித்தார் பெரியார்.

வைக்கம் போராட்டம்

ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்று சிறை சென்றார். இந்நிலையில், கேரளாவின் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் கோயில் இருக்கும் தெருக்களில் நடமாட தலித்துகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை எதிர்த்து அங்கிருந்த சமூக ஆர்வலர்கள் போராட்டங்கள் நடத்தினர்.

போராட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து அங்கிருந்த போராட்டத் தலைவர்கள் பெரியாருக்கு கடிதம் எழுதி போராட்டத்தை தலைமையேற்று நடத்தும்படி வேண்டுகோள் விடுத்தனர்.

அப்போது சென்னை மாகாண காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த பெரியார் காந்தியின் அறிவுரையையும் மீறி தமது கட்சிப் பதவியைத் துறந்து திருவிதாங்கூர் விரைந்தார்.

திருவிதாங்கூர் மகாராஜா பெரியாரின் நண்பர் என்பதால் அவர் அரசு மரியாதையோடு வரவேற்கப்பட்டார். ஆனால், தாம் அரசை எதிர்த்துப் போராட வந்திருப்பதால் அரசு மரியாதையை ஏற்க முடியாது என்று மறுத்த பெரியார் தொடர்ந்து வைக்கத்தில் போராட்டம் நடத்திக் கைதானார். இதையடுத்து அவரது அவரது மனைவி நாகம்மை பெண்களைத் திரட்டி போராட்டத்தைத் தொடர்ந்தார்.

போராட்டத்தின் வெற்றிக்குப் பிறகே அவர் ஊருக்குத் திரும்பினார். இதனால், வைக்கம் வீரர் என்று அழைக்கப்பட்டார்.

காங்கிரசில் இருந்து வெளியேறுதல்

இதனிடையே சமூகத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான வகுப்புவாரி பிரதிநிதித்துவத்துக்கு ஆதரவாக காங்கிரஸ் மாநாடுகளில் தீர்மானம் நிறைவேற்ற முயன்று தோற்றுப் போனார் பெரியார்.

இந்நிலையில், சேரன்மாதேவி என்ற இடத்தில் காங்கிரஸ் மானியத்தில் வ.வே.சுப்ரமணிய ஐயர் என்பவரால் நடத்தப்பட்ட குருகுலப் பள்ளியில் பிராமண மாணவர்களுக்குத் தனியாகவும், பிராமணர் அல்லாத மாணவர்களுக்குத் தனியாகவும் உணவு பறிமாறப்படுவதை அவர் எதிர்த்தார்.
ஆனால், வ.வே.சு. ஐயர் தமது போக்கை மாற்றிக் கொள்ள மறுத்ததுடன், காங்கிரசும் அந்த பள்ளிக்கான மானியத்தை நிறுத்த மறுத்தது.

இதையடுத்து அவர் காங்கிரசில் இருந்து வெளியேறி, சுயமரியாதை இயக்கத்தை தொடங்கினார். வைதீக மதத்தையும், கடவுள் நம்பிக்கையையும், மூடப் பழக்கவழக்கங்களையும் பெரியார் எதிர்த்தார். பிராமணர் அல்லாதவர்கள் தம்மையே தாழ்வாக நினைக்கக் கூடாது என்பதை சுயமரியாதை இயக்கம் வலியுறுத்தியது.

இந்த நிலையில், 1916ம் ஆண்டு தொடங்கப்பட்ட நீதிக்கட்சி என்று பரவலாக அறியப்பட்ட தென்னிந்திய நலவுரிமைச் சங்கத்தின் தலைவராகப் பெரியார் தேர்ந்தெடுக்கப்பட்டார். பிராமணர்கள் ஆரிய இனத்தில் தோன்றியவர்கள் என்றும் பிராமணர் அல்லாதோர் திராவிட இனத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் வாதிட்ட பெரியார் திராவிடர்களை மானமும் அறிவும் மிக்கவர்களாக மாற்றுவதற்காகத் தாம் பாடுபடுவதாக கூறினார்.
பெண்ணுரிமை

குழந்தை திருமண எதிர்ப்பு, விதவை மறுமணம், பெண்களுக்கு கல்வி, தமது துணைவர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமை, ஒத்துவராத திருமணத்தை முறித்துக் கொள்ளும் உரிமை ஆகியவை வேண்டும் என்று வாதிட்ட பெரியார், பெண்கள் குழந்தை பெறும் இயந்திரமாக இருக்கத் தேவையில்லை என்று வாதிட்டார். அவரது பெண்ணுரிமைக் கருத்துகள் இன்றைய நிலையில் கூட புரட்சிகரமாகத் தோன்றக்கூடியவை.

சுதந்திரத்துக்கு முந்தைய இந்திய அரசு இந்தியைத் திணிக்க முயன்றபோது அதை எதிர்த்துப் போராட்டம் நடத்தியவர். இந்தியா முழுவதும் ஒரே நாடாக ஆவதை எதிர்த்த அவர் தென்னிந்தியப் பகுதிகள் இணைந்து திராவிட நாடாக ஆகவேண்டும் என்று குரல் கொடுத்தார்.

திராவிட நாடு

ஆனால், தமிழ்நாடு தவிர்த்த பிற பகுதிகளில் இதற்கு ஆதரவு இல்லாத நிலையில், தமிழ்நாடு தமிழருக்கே என்று முழக்கத்தை மாற்றினார்.

இட ஒதுக்கீட்டு கொள்கைக்காக வாதிட்ட, பெண்ணுரிமைக்காக வாதிட்ட, மூடப் பழக்கங்களை எதிர்த்த, மதத்தை எதிர்த்த பெரியார் தமது கருத்துகள் பரவ தமிழ்நாடு முழுவதும் நீண்ட சுற்றுப் பயணங்களை மேற்கொண்டு பிரசாரம் செய்தார்.

தமது பிரசாரங்களில் தாம் சொல்வதாலேயே ஒரு கருத்தை ஏற்கவேண்டியதில்ல என்றும், சிந்தித்துப் பார்த்து அவரவர் கருத்துக்கு சரியெனப் படுகிறவற்றை மட்டுமே ஏற்றால் போதுமென்றும் வாதிட்டார் அவர்.

பொதுவுடமை ஈடுபாடு

ரஷியாவுக்குப் பயணம் சென்று வந்த பிறகு பொதுவுடமைக் கொள்கைகளில் அவருக்கு ஈடுபாடு ஏற்பட்டது. உலக கம்யூனிஸ்டுகளின் முதல் ஆவணமான கம்யூனிஸ்டு கட்சி அறிக்கை என்ற புத்தகத்தை தமிழில் முதன் முதலில் மொழி பெயர்த்துப் பதிப்பித்தவர் பெரியார். தமது கருத்துகளைப் பரப்ப 'குடியரசு' முதற்கொண்டு பல பத்திரிகைகளையும் நடத்தியவர் பெரியார்.

திரிபுரா: 578 வாக்குகள் பெற்ற பாஜக ஆட்சியை பிடித்தது எப்படி?
லெனின் சிலையை இடித்து அதன் தலையை வைத்து கால்பந்தாடிய பாஜகவினர்
தம்மைவிட வயதில் மிகவும் குறைந்தவரான மணியம்மையை அவர் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தபோது சி.என்.அண்ணாதுரை உள்ளிட்ட பலர் அவருடன் கருத்து வேறுபாடு கொண்டு திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்து வந்து 1949ல் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை உருவாக்கினர். அந்தக் கட்சியும் அதிலிருந்து பிரிந்த அண்ணா திமுகவும் தமிழ்நாட்டை 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்டு வருகின்றன.

சுயமரியாதை, மத மறுப்பு, மூட நம்பிக்கை மறுப்பு, பெண்ணுரிமை, சாதி ஒழிப்பு, திராவிடக் கொள்கை, பிராமணர் எதிர்ப்பு போன்ற தாம் நம்பிய பல கொள்கைகளுக்காக வாழ்நாளெல்லாம் போராடியவர் பெரியார். இந்தப் போராட்டத்தில் அவரைப் பாராட்டியவர்களும், எதிர்த்தவர்களும் உண்டு.

பிராமண எதிர்ப்பும், கடவுள் மறுப்பும் அவரது கொள்கையாக இருந்தபோதும் அதை தனிப்பட்ட நபர்களை வெறுப்பதற்கான வழிகளாக அவர் மாற்றிக்கொண்டதில்லை. பிராமணராக இருந்தபோதிலும் சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜகோபாலாச்சாரியுடன் பெரியார் கடைசிவரை நல்ல நட்பைப் பேணினார். கடவுள் நம்பிக்கை உடைய குன்றக்குடி அடிகளார் போன்றவர்களோடும் பெரியாருக்கு நல்ல நட்பு நிலவியது.

இன்றளவும் சுயமரியாதை என்ற வார்த்தைக்கு தமிழகத்தில் ஒரு தனி மகத்துவம் இருக்கிறது என்றால், அது பெரியார் ஏற்படுத்திக் கொடுத்தது என்றே பார்க்கப்படுகிறது.

அந்த வகையில், திராவிடம், சுய மரியாதை, மூட நம்பிக்கை மறுப்பு, எழுத்து சீர்திருத்தம், பெண்ணுரிமை, சாதி ஒழிப்பு, போன்ற பல மரபுகளே, அவர் தமிழர்களுக்காக விட்டுச் சென்ற செல்வங்களாக மதிக்கப்படுகின்றன






திரிபுராவில் 25 ஆண்டுகாலம் பதவியில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியை இழந்தபின்னர், அங்கு நிறுவப்பட்டிருந்த லெனின் சிலை ஒன்று தேர்தலில் வெற்றி பெற்ற பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவாளர்கள் என்று கருதப்படுபவர்களால் இடித்துத்தள்ளப்பட்டது.
தமிழகத்தில் உள்ள பெரியார் சிலையும் அவ்வாறு உடைக்கப்படும் என்று பாஜகவின் தேசிய செயலர் எச்.ராஜா தன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். எதிர்ப்புகள் கிளம்பவே அந்தப் பதிவு நீக்கப்பட்டது. பின்னர் புதனன்று அது தனது அனுமதியின்றி அப்பக்கத்தை நிர்வகிப்பவர்களால் பதியப்பட்டது என்று கூறினார் எச்.ராஜா.

எனினும் வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் இருந்த பெரியார் சிலை செவ்வாய் இரவு சேதப்படுத்தப்பட்டு, அது தொடர்பாக பாஜக பிரமுகர் ஒருவர் உள்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.
இது போல பெரியார் வாழும்போது அவருக்கு எதிராக நடத்தப்பட்ட அவமதிப்பு நிகழ்வுகள், சிலை தொடர்பாக பெரியார் வெளியிட்ட கருத்துகள்:

சேலத்தில் 23.1.1971 அன்று மூட நம்பிக்கை ஒழிப்பு மாநாடு திராவிடர் கழகத்தால் நடத்தப்பட்டது. அந்த மாநாட்டின்போது பெரியார் நடத்திய ஊர்வலத்தில் இந்து கடவுள்களை அவமதித்ததாக அவரது எதிர்ப்பாளர்கள் பெரியார் படத்தை எரித்து, செருப்பால் அடித்தனர். அப்போது தானே பாதி விலையில் தனது படத்தையும் செருப்பையும் அனுப்பி வைப்பதாக பெரியார் அறிக்கை விடுத்தார்.
அதே ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திராவிடர் கழகம் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்தபோது, ராமரை செருப்பால் அடித்தவர்கள் ஆதரிக்கும் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று எதிர்க்கட்சிகள் பெரும் அளவில் பிரசாரம் செய்தன. ஆனால், 1967 தேர்தலில் 137 இடங்களில் வெற்றிபெற்ற திமுக, 1971 தேர்தலில் 184 இடங்களில் வென்று ஆட்சியைத் தக்க வைத்தது.
"இந்தச் சிலை வைப்பது, படம் திறப்பது, ஞாபகச்சின்னம் வைப்பது போன்ற இவை எல்லாம் பிரசார காரியமே தவிர இது பெருமையல்ல; ஒருவன் இது யார் சிலை என்றால் இது பெரியார் சிலை என்று ஒருத்தன் பதில் சொல்வான். பெரியார் என்றால் யார் என்று கேட்பான்? உடனே அவன் பெரியாரைத் தெரியாதா? அவர் தான் கடவுள் இல்லை என்று சொன்னவராவார் என்று சொல்லுவான். இப்படி நம் கருத்தானது பரவிக்கொண்டிருக்கும். அதற்கு ஒரு வாய்ப்புத்தான் இந்தச் சிலையாகும்," என்று 24. 5. 1969 அன்று தர்மபுரியில் தமது சிலை திறப்பு விழாவில் தந்தை பெரியார் ஆற்றிய உரையில் கூறியுள்ளார்.
"இந்த ஊரில் எனக்குச் சிலை வைத்தார்கள் என்றால், இந்தச் சிலை எனக்கு மணியடிக்கிற சிலை இல்லை, பூசை செய்கிற சிலை இல்லை, கடவுள் இல்லை என்று சொல்கின்றவன் சிலை. இந்தச் சிலை ராமசாமியின் சிலையில்லை, கடவுளைக் கற்பித்தவன் முட்டாள், கடவுளைத் தொழுகிறவன் காட்டுமிராண்டி என்று சொல்பவனுடைய சிலையாகும்," என்று 09.06.1969 தேதியிட்ட 'விடுதலை' இதழில் பெரியார் எழுதியுள்ளார்.
"ஏதோ பலமாய் நாங்கள் சொல்கிறோம். சொல்வதை அப்படியே கண்ணை மூடிக்கொண்டு நீங்கள் நம்புங்கள் என்று நாங்கள் கேட்பதில்லை. ஏதோ ஆராய்ந்து பாருங்கள். உங்கள் அறிவைக் கொண்டு நன்றாகச் சிந்தியுங்கள். சரி என்று பட்டால் நம்புங்கள். இல்லாவிட்டால் விட்டுவிடுங்கள் என்றுதான் சொல்கிறோமே தவிர எண்கள் பேச்சை நம்பித்தான் ஆகவேண்டும் என்று சொல்லவில்லை," என்று தஞ்சையில் நடந்த தனது 89வது பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் பெரியார் பேசினார்.



பெரியார் சிலை விவகாரம்: பா.ஜ.கவின் சேதத் தடுப்பு முயற்சிகள் பலனளிக்குமா?
வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் இருந்த பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்ட விவகாரம் அகில இந்திய அளவில் பெரிய சர்ச்சையாக உருவெடுத்த நிலையில், தமிழக பா.ஜ.க. சேதத் தடுப்பு முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
பெரியார் சிலையை உடைக்க வேண்டுமென எச். ராஜா ஃபேஸ்புக்கில் பதிவிட்ட விவகாரம் நேற்று சர்ச்சையாக உருவெடுத்தவுடனேயே, இது அவரது தனிப்பட்ட கருத்து என பா.ஜ.கவின் தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

இந்த நிலையில், திருப்பத்தூரில் பெரியார் சிலை உடைக்கப்பட்ட விவகாரத்தில் கைதுசெய்யப்பட்ட திருப்பத்தூர் நகர் ஒன்றியச் செயலாளர் ஆர். முத்துராமன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தமிழிசை சவுந்தரராஜன் அறிவித்துள்ளார். மேலும், தங்களுடைய கட்சி இம்மாதிரி நடவடிக்கைகளை ஏற்பதில்லை என்றும் எந்த தலைவரையும், எந்த சிலையையும் அவமதிப்பதை பாஜக கண்டிக்கிறது என்றும் தமிழிசை கூறியிருக்கிறார்.

பா.ஜ.கவின் பொதுச் செயலாளரும் தமிழகப் பொருப்பாளருமான பி. முரளிதர் ராவ், பெரியார் போன்ற போன்ற தலைவர்களை அவமதிக்கும், ஆத்திரத்தை ஏற்படுத்தும் கருத்துக்களை பா.ஜ.க. ஏற்கவில்லை. இம்மாதிரியான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களை நாங்கள் கடுமையாகக் கண்டிக்கிறோம் என்று தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தில்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழகத்தைச் சேர்ந்த மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், இது தொடர்பாக எச். ராஜா அளித்த விளக்கம் ஏற்கமுடியாதது என்றும் அவர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து கட்சித் தலைமை முடிவுசெய்யும் என்றும் கூறினார்.

நேற்று முதல் தொலைபேசி அழைப்புகளைத் தவிர்த்துவந்த எச். ராஜா இன்று செய்தியாளர்களிடம் பேசினார். தனக்குத் தெரியாமல் தன் ஃபேஸ்புக் அட்மின் அந்தக் கருத்தைத் தெரிவித்துவிட்டதாகவும் அதற்காக தான் மன்னிப்புக் கேட்பதாகவும் அந்த அட்மினை பணியிலிருந்து நீக்கிவிட்டதாகவும் ராஜா தெரிவித்தார்.
"பாரதீய ஜனதாக் கட்சிக்கு இது மிகப் பெரிய பின்னடைவுதான். இதிலிருந்து அவர்கள் மீள பல நாட்களும் பல நடவடிக்கைகளும் தேவைப்படும். ஆனால், அந்தக் கட்சி நினைத்தால் மாநிலத்தையே ஆத்திரமடையச் செய்ய முடியும் என்பதுதான் கவலையளிக்கும் விஷயம்" என்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் து. ரவிக்குமார்.

பா.ஜ.க. தலைவர்கள் எச். ராஜாவின் கருத்திலிருந்து விலகி நின்றாலும் அவர் மீது இதுவரை கட்சி ரீதியாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது ஏன் என்கிறார் அவர். எச். ராஜா ஒரு இந்துத்துவத் தலைவரை இதுபோல பேசியிருந்தால், பா.ஜ.க. இதுபோல்தான் நடந்துகொள்ளுமா என்றும் கேள்வியெழுப்புகிறார் ரவிக்குமார்.

இந்த விவகாரத்தையடுத்து சென்னை தியாகராய நகரில் அமைந்துள்ள பா.ஜ.கவின் தலைமையகமான கமலாலயத்திற்கு பெரும் எண்ணிக்கையிலான காவலர்கள் பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்டுள்ளனர். அந்த அலுவலகம் அமைந்துள்ள வைத்தியராமன் தெருவின் இரு முனைகளிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு, உள்ளே செல்பவர்கள் விசாரணைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகின்றனர்.

"எச். ராஜா நீண்ட காலமாகவே இப்படிப் பேசிவருகிறார். வைகோவை தெருவில் நடமாட முடியாது என்று எச்சரித்தார். அப்போதெல்லாம் பெரிய எதிர்வினைகள் வராதது ஆச்சரியமாக இருந்தது. ஆனால், ஒட்டுமொத்தமாக எல்லாவற்றுக்கும் சேர்ந்து ஒரு எதிர்வினை உருவாகியுள்ளது. இது அந்தக் கட்சிக்கு பெரிய பின்னடவுதான். இம்மாதிரியான பேச்சுக்களை தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள்" என்கிறார் மூத்த பத்திரிகையாளரான சிகாமணி.

இந்தக் கருத்துக்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லையென அக்கட்சித் தலைவர்கள் விலகிக் கொண்டாலும், அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்கிறார் அவர்.

இதற்கிடையில் கோயம்புத்தூரில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்தின் மீது இன்று (புதன்கிழமை) காலை 3.30 மணி அளவில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட நிலையில், அந்த சம்பவம் தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த அலுவலகத்திற்கு பாதுகாப்பாக நின்ற காவலர், பெட்ரோல் குண்டை வீசிய மூன்று பேரை பார்த்ததாக தெரிவித்திருக்கிறார். இந்தக் காட்சி சிசிடிவி கேமராக்களிலும் பதிவாகியுள்ளது.

இதற்கிடையில், எச். ராஜாவைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் போராட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் தி.மு.க., தி.க., தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட கட்சிகளும் அமைப்புகளும் நடத்தின. பல இடங்களில் எச். ராஜாவின் உருவ பொம்மைகளும் எரிக்கப்பட்டன.

Comments

Popular posts from this blog

DACOITS OF CHAMBAL

List of Muhammad's Wives and Concubines

MAHARANI SITADEVI OF BARODA the "Indian Wallis Simpson" INTERESTING LIFE STORY OF HER