Monday 19 March 2018

RAGUVARAN ,SOUTH INDIAN ACTOR DIED 2008 MARCH 19




RAGUVARAN ,SOUTH INDIAN ACTOR
DIED 2008 MARCH 19



ரகுவரன் (டிசம்பர் 11, 1958 - மார்ச் 19, 2008) தமிழ், மலையாளம், இந்தி, தெலுங்கு மொழிகளில் எதிர்நாயகனாகவும் குணச்சித்திர வேடங்களிலும் ஏறத்தாழ 300 படங்களுக்கு மேல் நடித்த திரைப்பட நடிகராவார்.
வாழ்க்கைச் சுருக்கம்
நடிகர் ரகுவரன் 1958 ஆம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி கேரளாவில் பிறந்தார். இளங்கலை பட்டதாரியான இவர் 1982 ஆம் ஆண்டு ஏழாவது மனிதன் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆனார். கூட்டுப்புழுக்கள், கை நாட்டு, மைக்கேல் ராஜ் ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தார். ஆனாலும் எதிர்நாயகன் வேடங்களில் அவரின் ரசிகர்களால் வரவேற்கப்பட்டது. சம்சாரம் அது மின்சாரம், அஞ்சலி போன்ற படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்தார். இது தவிர இந்தி, மலையாளம், ‌தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார்.

இவர் போதைப் பழக்கத்திற்கு அடிமையானதால் இவரது திரை வாழ்க்கையை மட்டுமின்றி சொந்த வாழ்க்கையையும் பாதிக்கப்பட்டது. இத்தகைய போதை பழக்கத்தால் இவர் காதல் திருமணம் செய்துக் கொண்ட நடிகை ரோகினியும் அவரை விட்டு பிரிந்து செல்ல நேர்ந்தது.[2] ரகுவரன் அவரது போதை பழக்கத்தில் இருந்து விடுபட முயற்சி செய்தாலும், அவரால் போதை பழக்கத்தில் இருந்து மீண்டு வர முடியாமல் போனது.[3]


மறைவு
உடல் நலக்குறைவு காரணமாக சென்னை சேத்துப்பட்டில் நடிகர் ரகுவரன் மார்ச் 19, 2008 இல் காலமானார்[4]. நடிகை ரோகினியை ‌திருமணம் செய்து கொ‌ண்ட ரகுவரனு‌க்கு ரிஷி என்ற மக‌ன் உ‌ள்ளா‌ர்.

குறிப்பிடத்தக்க சில திரைப்படங்கள்
பாட்ஷா
முதல்வன்
ரட்சகன்
முகவரி
சம்சாரம் அது மின்சாரம்
ஏழாவது மனிதன்



சென்னையின் தரமணியை இன்று ஐடி காரிடார் என்று அழைக்கிறார்கள். ஆனால் அதன் அழுத்தமான அடையாளம் அரசுத் திரைப்படக் கல்லூரி. அது அபூர்வமாகக் காணக் கிடைக்கிற பல கலைஞர்களைத் தமிழ்த் திரையுலகத்துக்குக் கொடுத்திருக்கிறது. அவர்களில் ஒருவர்தான் ரகுவரன்.

அந்தத் திரைப்படக் கல்லூரிக்கு வருகை தரும் பேராசிரியராக இருந்தவர் கே. ஹரிஹரன் புனே திரைப்படக் கல்லூரியில் இயக்கம் பயின்றவர், ஆற்றல் மிக்க திரை விமர்சகர், எழுத்தாளர், பல இந்திய மொழிகளில் அழுத்தமான படைப்புகளைத் தந்த இயக்குநர் என அறியப்பட்ட தமிழ்த் திரைப்பட ஆளுமை. இலக்கியத்தையும் தமிழ் சினிமாவையும் இணைக்க முயன்ற இவர் தனது இரண்டாவது தமிழ்ப் படமாக ‘ஏழாவது மனித’னை இயக்கினார். கதையின் நாயகனை அவர் தேடியபோது திரைப்படக் கல்லூரியில் நடிப்பு பயிலும் மாணவர்களில் ஒருவருக்கே அந்த வாய்ப்பைக் கொடுக்க விரும்பினார்.

அதனால் தரமணிக்கு வரும்போதெல்லாம். நடிப்பு பயிற்சி வகுப்புகள் முடிந்து போய்க்கொண்டிருந்த மாணவர்களைக் கவனிக்க ஆரம்பித்தார். ஏழடி உயரத்தில், ஒல்லி உடலோடும், தீர்க்கமான கண்களோடும் போய்க்கொண்டிருந்த ரகுவரன் அவரது கண்களில் பட அவரை அழைத்தார் ஹரிஹரன். அவரை ஏற்கனவே அறிந்திருந்த ரகுவரன் அருகே சென்று வணக்கம் சொன்னார். இவன்தான் நமது நாயகன் என்று அந்த நிமிடத்தில் முடிவு செய்த ஹரிஹரன் ‘ ஏழாவது மனிதன்’ படத்தில் நடிக்க உனக்கு விருப்பமா என்று கேட்டார்.


“நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். ஆனால் எனக்கு நடனமும் தெரியாது, சண்டை போடவும் வராது. கண்டிப்பாக இவை இரண்டுமே உங்கள் படத்தில் இருக்காது என்று தெரியும்” என்றார். அந்தக் கணமே ரகுவரனின் நேர்மை ஹரிஹரனுக்குப் பிடித்துப் போய்விட்டது. ரகுவரனைப் பற்றி அதே கல்லூரியில் படித்த இயக்குநர் ராஜேஷ்வரும், அருள்மொழியும் ஏற்கனவே ஹரிஹரனிடம் சொல்லியிருந்தார்கள்.

சரியான ஆளைத்தான் பரிந்துரை செய்திருக்கிறார்கள் என்று எண்ணிக்கொண்டார் ஹரிஹரன். நடிப்பு பயிற்சியில் சேர்ந்து ஆறு மாதங்களே முடிந்திருந்த நிலையில் அறிமுகப் படத்திலேயே பல பரிமாணங்களை வெளிப்படுத்தும் கதாபாத்திரம் அமைந்தது ரகுவரனுக்கு. தனது கிராமத்தைச் சுற்றுச்சூழல் சீர்கேட்டுக்கு ஆளாக்கும் சிமெண்ட் தொழிற்சாலையை எதிர்த்துப் போராடும் கோபக்கார இளைஞன் கதாபாத்திரம்.

அந்தத் தொழிற்சாலையில் மேலதிகாரியாக இருந்துகொண்டே, அதில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்காகப் போராடும் மனசாட்சியுள்ள இளைஞன்; ஒரு கண்ணியமான காதலன். அந்தக் கிராமத்தின் ஆற்றில் தவழ்ந்து செல்லும் பரிசலில் காதலி அமர்ந்திருக்க அவரைவிட்டு சற்றுத் தள்ளி அமர்ந்தபடி, பாரதியின் ‘காக்கைச் சிறகினிலே நந்தலாலா உந்தன் கரிய நிறம் தோன்றுதடா நந்தாலா’ எனப் பாடியபடி செல்லும்போது அவரது உடல்மொழி ஈரம் காயாத களிமண் தன்மையோடு பார்வையாளர்கள் மனதில் பசுமையாக ஒட்டிக்கொண்டது.

ஆனால் உலகப்பட விழாக்களில் கவுரவிக்கப்பட்ட ‘ஏழாவது மனித’னுக்கு (1982) தேசிய, மாநில விருதுகள் கிடைத்தது மட்டுமல்ல, ரகுவரன் எனும் உயர்ந்த கலைஞனைத் தமிழ் சினிமாவுக்குத் தனித்து அடையாளம் காட்டியது. இதன் பிறகு ‘ஆர்ட் பிலிம் ஆக்டர்’ என்ற முத்திரை ரகுவரன் மீது விழுந்தாலும், கதாபாத்திரத்தைக் கண்முன் நிறுத்தும் கதாநாயகனாக அவரது கலைப் பயணம் தொடங்கியது.

திரைப்படக் கல்லூரி சினிமா பற்றி அள்ளிக் கொடுத்த அறிவும் அங்கே கிடைத்த நண்பர்களின் அன்பும் ரகுவரனை மாறுபட்ட வசன உச்சரிப்பும், தேர்ந்த உடல்மொழியும் கொண்ட ரசனையான கலைஞனாக உருவாக்கியிருந்தன. கதாநாயகனாக அறிமுகமான அடுத்த ஆண்டே ‘சில்க் சில்க் சில்க்’ என்ற படத்தில் ஒரு எதிர்மறைக் கதாபாத்திரத்தில் துணிச்சலாக நடித்தார். இது கிட்டத்தட்ட வில்லன் வேடத்துக்கு நெருக்கமானது என்று சொல்லிவிடலாம். இதனால் ரகுவரனை வில்லனாகவும் தேர்ந்துகொள்ளத் தொடங்கியது தமிழ் சினிமா.

நாயகன், வில்லன் என்று தொடக்கத்தில் மாறி மாறிப் பயணித்த ரகுவரன் நடித்து 1986-ல் வெளியான படம் மந்திரப் புன்னகை. வில்லனாக நடித்து நாயகன் அந்தஸ்து பெற்ற சத்யராஜ் நடித்த இந்தப் படத்தில் வில்லனாக நடித்தார் ரகுவரன். இப்படி ஆச்சரியகரமான பல முரண்களைக் கொண்டது ரகுவரனின் திரைப்பயணம். அதுவரை தமிழ் சினிமாவில் வில்லன் வேடங்கள் என்றாலே பெரும்பாலும் தன் புஜபலம் காட்டும். காது கிழியும் அளவுக்குக் கத்திப் பேசி, கூலிப்படை திரளாகக் கையில் மிரட்டும் ஆயுதங்களோடு திரையைக் கிழித்துக்கொண்டு மிரட்டும்.

ஆனால் அளவாகவும் தேவைப்படும் இடங்களில் மிகையாகவும், கூர்மையான பார்வையை முன்னிறுத்தி வசன உச்சரிப்பிலும் சிரிப்பிலும் எதிர்மறைப் பாத்திரத்தின் நோக்கத்தைப் புதிய வடிவத்துக்குள் வார்த்துக் கொடுத்தார் ரகுவரன். கிழிந்து தொங்கும் கிளிஷேவாகிவிட்ட வில்லன் கதாபாத்திரங்களுக்குப் புதிய அடையாளம் கிடைத்தது. இப்படி இளம் கிளாசிக் வில்லனாக நடித்துக் கொண்டே இன்னொரு பக்கம் கதையின் நாயகனாகப் பொருந்திக் காட்டிய நடிகராகவும் இருந்த ரகுவரனைக் குறைத்து மதிப்பிட முடியாது.

இயக்குநர் ஆர்.சி சக்தியின் ‘கூட்டுப் புழுக்கள்’ படத்தில் வேலையில்லா ஒரு நடுத்தர வர்க்க இளைஞனின் இயலாமை, கோபம், ஏக்கம், கையறுநிலை, காதல் ஆகிய நுண்ணுணர்வுகளை ரகுவரன் தனது உடல்மொழியின் வழியாக வெளிப்படுத்திய விதம் கதாபாத்திரத்துக்கு மிகவும் நேர்மையாகவும் நெருக்கமாகவும் இருக்கும். ஒரு கட்டத்தில் வில்லன் கதாபாத்திரங்களிலிருந்து விலகியும் விலகாமலும் முழுநீளக் குணசித்திரக் கதாபாத்திரங்களில் அதிக ஆர்வம் காட்டியபோது அவருக்குப் போதும் போதும் என்கிற அளவுக்கு வாய்ப்புகள் குவிந்தன.

வில்லன் கதாபாத்திரங்கள் வழியே எத்தகைய வெறுப்பையும் தமிழ் ரசிகர்களிடம் சம்பாதித்துக்கொள்ளாத ரகுவரன், தான் ஏற்ற குணச்சித்திரக் கதாபாத்திரங்களுக்கு அழுத்தமான பரிமாணத்தை வழங்கினார். இப்படியும் ஒரு கலைஞன் என்று பாராட்டும் விதமாக இயல்பும் எளிமையுமாக அத்தகைய கதாபாத்திரங்களைக் கண்முன் நிறுத்தினார். அவரது கதாபாத்திரங்களைப் பற்றி எழுத ஆரம்பித்தால் இங்கே இடம் போதாது.

சம்சாரம் அது மின்சாரம், லவ் டுடே, முதல்வன் என்று இடைவெளியின்றி தனது ஆளுமையை வெளிப்படுத்தி வந்த ரகுவரன், தென்னிந்திய மொழிகளைத் தாண்டி இந்திப்பட உலகிலும் கால் பதித்தார். ராஜீவ்மேனன் இயக்கத்தில் வெளியான ‘கண்டு கொண்டேன், கண்டு கொண்டேன்’ திரைப்படத்தில் ஒரு ஐடி நிறுவனத்தில் உயரதிகாரியாக வருவார்.

கறாரும் கனிவும் கலந்த ஒரு சித்திரத்தை அந்தப் பாத்திரத்துக்கு வழங்கியிருப்பார் ரகுவரன். மொத்தப் படத்திலும் பத்து நிமிடங்கள்கூட இல்லாத அந்தக் கதாபாத்திரம் முதன்மைப் பாத்திரங்களை மீறி நினைவில் நிற்க ரகுவரன் எனும் கலைஞனின் ஆகிருதியே காரணம். திரைநடிப்புக்கு வெளியே கவிதை வாசிப்பு, இசையமைப்பு இரண்டிலும் ஆர்வம் கொண்டிருந்த ரகுவரன், தலைமுறைகளைத் தாண்டியும் ஆகர்சிக்கும் அபூர்வக் கலைஞன். டிசம்பர் 11 அவரது 56 வது பிறந்த தினம்.


வில்லன், ஹீரோ, குணசித்திரம் என பல்வேறு பாத்திரங்களில் நடித்த மிகச் சிறந்த நடிகர் ரகுவரன்.

குடிப்பழக்கத்துக்கு அடிமையான ரகுவரன் பல காலமாகவே உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு நீரிழிவு நோயும் இருந்தது.
சமீபத்தில் காலில் கட்டி வந்து அதை அறுவை சிகிச்சை செய்து அகற்றப்பட்டது.

இந் நிலையில் கடந்த சில தினங்களாக உடல் நிலை மிகவும் மோசமாகியது. இதையடுத்து அவரை கவனித்துக் கொள்ள நர்ஸ் ஒருவர் நியமிக்கப்பட்டார்.

இந் நிலையில் இன்று அதிகாலை அவர் மயங்கினார். இதையடுத்து சென்னை சேத்துப்பட்டில் உள்ள மேத்தா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அதற்குள் அவர் இறந்துவிட்டார்.

தகவல் அறிந்ததும் அவரது மனைவி ரோகிணி மருத்துமனைக்கு மகனுடன் ஓடி வந்து கதறி அழுதார்.

பின்னர் அவரது உடல் தியாகராய நகர் ஜெகதாம்பாள் தெருவில் உள்ள வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. உடல் அருகே அமர்ந்து ரோகிணியும் மகன் சாய் சித்தார்த்தும் கதறி அழுது கொண்டிருந்தது அங்கிருந்தவர்களை கலங்கச் செய்தது.



என்பதுகளில் தமிழில் அறிமுகமான முக்கிய நடிகர்களில் ஒருவர் ரகுவரன். அவர் நடித்த சம்சாரம் அது மின்சாரம், மக்கள் என் பக்கம், மனிதன், ராஜா சின்ன ரோஜா, பாட்ஷா மற்றும் முதல்வன் படங்கள் மறக்க முடியாதவை. 400க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.

கே.எஸ்.ரவிகுமாரின் புரியாத புதிர் படத்தில் சைகோத்தனமான வில்லன் என்ற பாத்திரத்துக்கு புதிய பரிமாணம் கொடுத்திருப்பார் ரகுவரன்.

இடையில் கூட்டுப்புழுக்கள், மைக்கேல் ராஜ், என்வழி தனிவழி போன்ற படங்களில் கதாநாயகனாகவும் நடித்தார். இதில் கூட்டு புழுக்களில் அவரது எதார்த்தமான நடிப்பு மறக்க முடியாதது.

ரஜினிக்கு மிகப் பிடித்த நடிகர்களில் ஒருவர் ரகுவரன். அதனால்தான் அவரை தனது பெரும்பாலான படங்களில் நடிக்கச் செய்திருந்தார்.
சிவாஜியில் கூட சில காட்சிகளில் நடித்திருந்தார் ரகுவரன்.

சமீபத்தில் ரிலீசான தொடக்கம் படத்தில் அப்துல்கலாம் வேடத்தில் நடித்திருந்தார் ரகுவரன். அவர் நடித்து கடைசியாக வந்த படம் சில நேரங்களில். இதில் சைக்கோத்தனமான மருத்துவர் வேடத்தில் நடித்திருந்தார்.

யாரடி நீ மோகினி, அஜீத்தின் புதிய படம் ஆகியவற்றிலும் அவர் நடித்து வந்ததார்.

ரோகிணியுடன் திருமணம்- பிரிவு:

ரகுவரனுக்கு குடி போதைப் பழக்கம் இருந்தது. அவரை இந்த கொடிய பழக்கத்திலிருந்து மீட்க முயன்றவர்களில் ஒருவர்தான் ரோகிணி.

நாளடையில் இந்த பழக்கம் காதலாக மாறியது. நடிப்புத் தொழிலில் மிக உச்சத்தில் இருந்த நேரத்தில் ரோகினியை திருமணம் செய்து கொண்டார். பல ஆண்டுகள் இருவரும் இணைபிரியா தம்பதிகளாக வாழ்ந்தனர். அவர்களுக்கு ஆண் குழந்தையும் பிறந்தது.

ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் பிரிந்தனர். ரகுவரனை போதைப் பழக்கத்திலிருந்து திருத்த முடியவில்லை என்றும், அவருடன் தொடர்ந்து வசிப்பது கடினம் என்பதாலேயே இந்த முடிவை எடுத்ததாகவும் ரோகிணி குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் போதையிலிருந்து இப்போது முழுவதுமாக மீண்டுவிட்டதாக ரகுவரன் கூறியிருந்தார்.

இடையில் தனது மகனை மட்டும் அடிக்கடி பார்த்து வந்தார் ரகுவரன்.

நடிப்பைத் தவிர இசையில் தீவிர ஆர்வம் இருந்த்து ரகுவரனுக்கு. சில இசை ஆல்பங்களையும் தயாரித்திருந்தார். தீவிர சாய் பாபா பக்தரான ரகுவரன் தனது மகனுக்கு சாய் சித்தார்த் என்றே பெயர் சூட்டியிருந்தார்.

ரகுவரன் வாழ்க்கைக் குறிப்பு:

1948ம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி கோவையில் பிறந்தவர் ரகுவரன். இவரது குடும்பத்தின் பூர்வீகம் கேரளா.

ஏழாவது மனிதன் படம்தான் ரகுவரன் நடித்த முதல் படம். அதன் பின்னர் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடிக்க ஆரம்பித்தார். தமிழ் தவிர தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிப் படங்களில் நடித்துள்ளார்.

ஹீரோவாக நடிக்க ஆரம்பித்த ரகுவரன் பின்னர் வில்லன் கேரக்டர்களுக்கு மாறினார். இதுதான் அவரது பன்முக நடிப்புக்கு வழிவகுத்தது. வித்தியாசமான வில்லத்தனத்தைக் காட்டி நடித்த ரகுவரனுக்கு குறுகிய காலத்திலேயே பெரும் பெயர் கிடைத்தது.

சத்யராஜுடன் நடித்த மக்கள் என் பக்கம், பூவிழி வாசலிலே, என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு உள்ளிட்ட பல படங்களில் வித்தியாசமான வேடங்களில் கலக்கினார்.

ஒரு மனிதனின் கதை என்ற தொலைக்காட்சித் தொடரில் அவரது நடிப்பு வெகுவாக பேசப்பட்டது. அதில் நல்ல குடும்பத்தைச் சேர்ந்த ஒருவன் குடிகாரனாக மாறி கடைசியில் எப்படி சீரழிகிறான் என்பதுதான் அந்த தொடரின் கதை.

ரகுவரனின் நடிப்புக்குப் பெயர் போன படங்கள் அஞ்சலி, பாட்ஷா, புரியாத புதிர், முதல்வன் என பல படங்களை அடுக்கிக் கொண்டு செல்லலாம்.

கிட்டத்தட்ட தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள் அனைவருடனும் நடித்துள்ளார் ரகுவரன். அவருடன் நடிக்காத ஒரே நடிகர் கமல்ஹாசன் மட்டுமே.

இன்றைய தலைமுறை நடிகர்களான விஜய், அஜீத், விஷால், சூர்யா, சிம்பு, தனுஷ் ஆகியோருடனும் நடித்துள்ளார் ரகுவரன். இளம் நடிகர்களுக்கு நல்ல ஆலோசகராகவும் விளங்கினார்.

தனது நடிப்பாற்றலால், தென்னாட்டு அல் பசினோ என்றும் புகழப்பட்டவர் ரகுவரன். அவரது மரணம், தமிழ்த் திரையுலகுக்கு பெரும் இழப்பு என்பதில் சந்தேகம் இல்லை.

குடும்பம்:

ரகுவரனின் தந்தை வேலாயுதம், தாய் கஸ்தூரி. இவருக்கு ரமேஷ், சுரேஷ் என்ற சகோதரர்கள் உள்ளனர். ரோகிணியை பிரிந்த பிறகு பெற்றோருடன் வாழ்ந்து வந்தார்.

இரங்கல்:

ரகுவரனின் உடலுக்கு நடிகர் சங்க தலைவர் சரத்குமார், பொதுச் செயலாளர் ராதாரவி, நடிகர்கள் சத்யராஜ், விஜய், தலைவாசல் விஜய், விவேக், நடிகை ரேவதி உள்பட ஏராளமானார் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

ரகுவரன் உண்மையிலேயே ஒரு இணையில்லா நடிகர் என்றும் அவரது மறைவு தன்னை பெரும் துயரத்துக்குள்ளாக்கியிருப்பதாகவும் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

நடிகர்கள் கமல்ஹாசன், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம நாராயணன் ஆகியோரும் தங்கள் இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment