THE FORGOTTEN WOMAN ARRIORS,
FREEDOM FIGHTERS OF INDIA DURING 1850`S
1857 முதல் சுதந்திரப் போரின்
மறைக்கப்பட்ட வீராங்கனைகள்
1857-ம் ஆண்டு, மே 10 அன்று மீரட் நகரின் இந்தியச் சிப்பாய்கள் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிராக கிளர்ந்தெழுந்தனர். சிப்பாய்களின் எழுச்சி இந்தியா முழுவதும் காட்டுத் தீ போல பரவியது. ஹிந்து, முஸ்லீம் சிப்பாய்கள் ஒன்றிணைந்து டில்லியை ஆண்ட பகதூர் ஷா வே தங்களது மன்னர் என அறிவித்தனர். இந்த முதல் இந்திய சுதந்திரப் போரில் கிழக்கிந்தியக் கம்பெனியால் ஒட்டச் சுரண்டப்பட்ட விவசாயிகள், பெண்கள், பொதுமக்கள் என அனைவரும் பங்கேற்றனர். முதல் இந்திய சுதந்திரப் போரில் பெண்களும் திரளாக கலந்து கொண்டனர் என்பது பலருக்கு தெரியாது. ஜான்சிராணி லட்சுமி பாயை தவிர மற்ற பெண் போராளிகளை நாம் அறிந்திருக்க மாட்டோம்.
1857 போரில், பங்கேற்ற பெண் போராளிகள் சிலரைப் பற்றிய அறிமுகம் இங்கே இடம் பெறுகிறது.
ஜான்சியின் ராணி “லட்சுமி பாய்”
ஜான்சி ராணி
ஜான்சி ராணி என அழைக்கப்படும் ராணி லட்சுமி பாய், 1828-ம் ஆண்டு வாரணாசியில் பிறந்தார். 17 வயதில் ஜான்சியின் அரசர் கங்காதர் ராவை அவர் மணந்தார். கங்காதர் ராவின் காலகட்டத்திலேயே ஜான்சி கிழக்கிந்தியக் கம்பெனியின் கீழ் உள்ள ஒரு சமஸ்தானமாக இருந்தது. கங்காதர் ராவிற்கும், லட்சுமிபாய்க்கும் பிறந்த குழந்தை, பிறந்த சில மாதங்களிலேயே மரணமடைந்ததைத் தொடர்ந்து அரசின் வாரிசிற்கு உறவினரின் குழந்தையைத் தத்தெடுத்தனர். சில ஆண்டுகளிலேயே லட்சுமிபாயின் கணவரும் உயிரிழந்தார். அதன் பின்னர், தத்தெடுத்த குழந்தையை வாரிசாக ஏற்றுக் கொள்ள முடியாது எனக் கூறி, ஜான்சியின் இராஜ்ஜியத்தை முழுவதுமாக தன்னோடு இணைந்துக் கொள்ள எத்தனித்தது கிழக்கிந்தியக் கம்பெனி. அதன் தொடக்கமாக லட்சுமி பாய்க்கு அரச ஓய்வூதியம் மட்டும் கொடுத்து அரண்மனையை விட்டு வெளியேற்றியது.
1857, சிப்பாய்கள் கிளர்ச்சி தொடங்கிய போது, ஜான்சிக்குள் புகுந்த சிப்பாய்கள் கிழக்கிந்தியக் கம்பெனியின் பிரிட்டிஷ் அதிகாரிகளையும் , படையினரையும் கொன்று குவித்தனர். அதற்கும் லட்சுமிபாய்க்கும் சம்பந்தம் இருக்குமோ என சந்தேகித்த பிரிட்டிஷ் அரசு, அவருக்குக் கொடுத்து வந்த பென்சனை உடனடியாக நிறுத்தியது. அதோடு அவரை ஜான்சியை விட்டு வெளியேறுமாறும் உத்தரவிட்டது. “ஜான்சி எனது பிரதேசம், அதனை ஒரு போதும் கைவிட மாட்டேன்” என உறுதியாக நின்ற லெட்சுமி பாய், தனக்கு விசுவாசமான அதிகாரிகள், அமைச்சர்கள், படையினர் மற்றும் மக்களுடனும், சிப்பாய்க் கலகத்தில் பங்கேற்ற சிப்பாய்களுடன் சேர்ந்து படையை திரட்டி கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராகப் போர் தொடுத்தார். முதல் போரில் கிழக்கிந்தியக் கம்பெனியின் பெரும்படையிடம் தோல்வியுற்ற லெட்சுமிபாய், தனது மகனுடன் கல்பிக்கு தப்பிச் சென்றார். கல்பியில் தாந்தியா தோப்பேவுடன் இணைந்து கிழக்கிந்திய கம்பெனியின் வசம் இருந்த குவாலியரை மீட்டார். அதன் பின்னர் பெரும்படையுடன் வந்த கிழக்கிந்திய கம்பெனியின் படையுடன் கடுமையாகப் போரிட்ட லெட்சுமி பாய், 1858 ஆண்டு ஜூன் மாதம் 17-ம் நாள் அன்று போர்க்களத்தில் உயிரிழந்தார்.
லெட்சுமி பாயின் நெருங்கிய முசுலீம் தோழியான மண்டர்பாயும் அதே போரில் அவருடன் உயிரிழந்தார். ஜான்சியின் அரசியான லெட்சுமி பாய் பிரிட்டிஷ் அரசிற்கு எதிராக இருமுறை தோல்வி அடைந்தும், மீண்டும் மீண்டும் சமரசமின்றி, பிரிட்டிஷ் படையோடு மோதினார். நாட்டில் உள்ள கிளர்ச்சியாளர்களை கிழக்கிந்தியக் கம்பெனிக்குஎதிராக ஒன்று திரட்ட பெருமுயற்சிகள் மேற்கொண்டார். லெட்சுமி பாய் தனது படைப்பிரிவில், துர்கா தளம் என்ற பெயரில் பெண்களுக்கான படைப்பிரிவு ஒன்றையும் நடத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
துர்கா தளம்
துர்கா தளம் என்பது ராணி லெட்சுமி பாயின் பெண்களுக்கான படைப்பிரிவு ஆகும். இப்படைப் பிரிவில் பெண்களுக்கு போர்ப்பயிற்சி அளிக்கபட்டது. இதில் பல பெண்கள் இணைந்து கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிராகப் போரிட்டனர் . மண்டர் பாய், சுந்தரி பாய், முண்டரி பாய், மோட்டி பாய் ஆகியோர் இதில் குறிப்பிட்டு சொல்லக் கூடியவர்கள் ஆவர். இதில் சிறு வயதில் இருந்தே போர்ப்பயிற்சி எடுத்து இப்படையில் சேர்ந்து ராணி லெட்சுமிபாய் தப்பிச் செல்ல உதவிய ஜல்கரி பாய் மிகவும் முக்கியமானவர்.
ஜல்கரி பாய்
ஜல்கரி பாய்
ஜல்கரி பாய், 1830-ம் ஆண்டு கோரி என்னும் ஒரு தலித் சமூகத்தில் பிறந்தவர். சிறுவயதிலேயே தாயை இழந்த ஜல்கரி பாயை ஒரு ஆணைப் போல அவரது தந்தை வளர்த்தார். சிறு வயதிலேயே, குதிரையேற்றம், வாள் வீசுதல் உள்ளிட்ட பயிற்சிகளை அளித்தார். ராணி லெட்சுமி பாயின் படையில் பணிபுரியும் புரான்சிங் என்பவரை மணந்த பின்னர், புரான்சிங்கின் மூலமாக லெட்சுமிபாயின் துர்கா தளம் படையில் இணைந்தார். அங்கு வில் வித்தை மற்றும் வாள் வீசுதல் போன்றவற்றில் சிறப்புப் பயிற்சி எடுத்தார்.
சாதாரண போர் வீராங்கனையாக சேர்ந்த ஜல்கரிபாய், தனது திறமையால் ராணி லெட்சுமிபாய்க்கு நெருக்கமானவராக உயர்ந்தார். 1857-ல் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிரான போரில் துர்கா தளத்தை தலைமை தாங்கி வழி நடத்தினார். இப்போரில் அவரது கணவர் புரான் சிங் கிழக்கிந்தியக் கம்பெனியின் படையால் கொல்லப்பட்டார். அதன் பின்னரும் மனம் தளராது, இன்னும் ஆக்ரோஷமாக பிரிட்டிஷ் படைகளை எதிர்த்துப் போரிட்டார். அப்போரில் ராணி லெட்சுமி பாய் தப்பிச் செல்கையில் பிரிட்டிஷ் படையை குழப்ப இவரே ராணி லெட்சுமி பாய் போல உடை தரித்து, கிழக்கிந்தியக் கம்பெனியைக் குழப்பினார். இவரை லெட்சுமிபாய் என நினைத்துக் கைது செய்த கிழக்கிந்தியக் கம்பெனி, இரண்டு நாட்களுக்குப் பின்னர், உண்மையறிந்து இவரை விடுதலை செய்ததாகக் கூறப்படுகிறது. இவர் போரில் மரணமடைந்தார் என்றும் ஒரு வரலாறு சொல்லப்படுகிறது.
ஹஸ்ரத் மஹல்
‘அவாத்’தின் ராணி என்று மக்களால் அன்போடு அழைக்கப்பட்ட ஹஸ்ரத் மஹல், 1820-ம் ஆண்டு ஃபைசாபாத் நகரில் பிறந்தார். அவாத் என்பது தற்போதைய அயோத்தி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியை உள்ளடக்கிய பிரதேசமாகும். ஹசரத் மஹல் அவாத் ராஜ்ஜியத்தின் நவாப் ’வாஜித் அலி ஷா’ வின் மனைவி. 1856-ம் ஆண்டு கிழக்கிந்தியக் கம்பெனி, அவாத் பிரதேசத்தை தனது ஆட்சி அதிகாரத்தின் கீழ் எடுத்துக் கொண்டது. அதோடு அவாத் ராஜ்ஜியத்தின் நவாப்பும், ஹசரத் மஹலின் கணவருமான வாஜித் அலி ஷா வை கல்கத்தாவிற்கு நாடு கடத்தியது. அதன் பின்னர் 1857 முதல் 1858 வரை நடைபெற்ற முதல் இந்திய சுதந்திரப் போரில், ஹசரத் மஹல், ஒரு பெரும் கிளர்ச்சிப் படையை அமைத்து போர் புரிந்தார்.
ஹஸ்ரத் மஹல்
இப்படை தான் அக்கால கட்டத்தில் திரட்டப்பட்ட மிகப்பெரிய கிளர்ச்சிப் படை. லக்னோவில், ஹசரத் மஹல் திரட்டிய கிளர்ச்சிப்படையின் வீரத்திற்கு முன்னே கிழக்கிந்தியக் கம்பெனியின் சேனை புறமுதுகிட்டு ஓடியது. அங்கு ஆட்சியைக் கைப்பற்றிய பேகம் ஹசரத் மஹல், 1857- ஜூன் 5 அன்று தனது 11 வயது மகன் பிர்ஜிஸ் காதர்க்கு முடி சூட்டினார்.
ஹசரத் மஹலின் வெற்றியைத் தொடர்ந்து, கிழக்கிந்தியக் கம்பெனி அவருடன் பேரம் பேசியது. பெரும் அளவிலான பொருளும் செல்வமும், பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியின் கீழ் ஒரு பகுதி ராஜ்ஜியம், அவரது கணவருக்கு விதிக்கப்பட்ட நாடு கடத்தல் தண்டனையை இரத்து செய்வது எனப் பல விதங்களில் ஆசை காட்டியது. ஆனால் அதனை எல்லாம் புறந்தள்ளி விட்டு, கிழக்கிந்தியக் கம்பெனியுடன் மோதத் தயாரானார். 10 மாதங்கள் தனது மகனின் மூலம் ஆட்சி அமைத்த பேகம் ஹசரத் மஹல் மீது பெரும்படை திரட்டி வந்து போர் தொடுத்தது கிழக்கிந்தியக் கம்பெனி. ஹசரத் மஹல் எவ்வித சமரசமுமின்றி களத்தில் இருந்து போராடினார். பிரிட்டிஷ் திரட்டி வந்த பெரும்படையால் கிளர்ச்சிப்படை சிதறடிக்கப்பட்ட பின்னர், ஹசரத் மஹல் தனது 11 வயது மகனுடன் நேபாளத்தின் இமயமலைக் காடுகளில் தஞ்சம் புகுந்து தனது மீதமுள்ள வாழ்க்கையைக் கழித்தார்.
ஹசரத் மஹலைப் பற்றி “இந்தியப் புரட்சி பற்றிய எனது குறிப்பேடு” என்னும் நூலில் வில்லியம் ஹோவர்ட் ரூசல் குறிப்பிடுகையில் “ பேகம் ஹசரத் மஹல், பெரும் திறனையும் சக்தியையும் காட்டினார். அவர் முடிவுறாத போரை எங்கள் மீது தொடுத்தார்” எனப் பதிவு செய்திருக்கிறார். ஹசரத் மஹல் – அயோத்தியின் வரலாற்றில் மறைக்கப்பட்ட ஒரு வீராங்கனை.
உடா தேவி
உடாதேவி லக்னோ அருகில் உள்ள உஜ்ரியான் கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் பாசி என்னும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். இவரது கணவர் மக்கா பாசி ஹசரத் மஹல் படையில் ஒரு போர் வீரராக இருந்தார். உடாதேவியும் அடிப்படையில் வீரம் மிக்கவராக விளங்கினார். ஹசரத் மஹலின் படைப்பிரிவுக்கு பெண்களைக் கொண்ட ஒரு படைப் பிரிவை உருவாக்கி அதற்குத் தலைமை தாங்கினார். 1857 நவம்பரில் நடைபெற்ற சிக்கந்தர் பாக் போரில் மிகப்பெரிய அளவில் பிரிட்டிஷ் அணியை சிதறடித்துள்ளார். முன்னேறி வந்த பிரிட்டிஷ் படையை விரட்டியடிக்க ஒரு உயரமான மரத்தில் அமர்ந்து கொண்டு துப்பாக்கியால் சுட்டு பிரிட்டிஷ் படைக்கு இழப்பை ஏற்படுத்தியிருக்கிறார். சுமார் 20 முதல் 30 வரையிலான பிரிட்டிஷ் படையினரை சுட்டுக் கொன்றிருக்கிறார். இறுதியில் அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றான் ஒரு பிரிட்டிஷ் சிப்பாய்.
மஹாபிரிதேவி
உத்திரப்பிரதேசத்தின் முசாபர்நகர் பகுதியைச் சேர்ந்த முண்ட்பர் கிராமத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மஹாபிரிதேவியின் பங்கு மிகவும் முக்கியமானது. 1857 கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிரான முதல் சுதந்திரப் போர் தொடங்கிய போது, 22 பெண்களைக் கொண்டு ஒரு படையைக் கட்டி பிரிட்டிஷ் துருப்புகளின் மீது கடுமையான தாக்குதலைத் தொடுத்தார். அதனால் பிரிட்டிஷ் துருப்புகள் இழப்பைச் சந்தித்தன. இப்பெண்கள் அனைவரையும் பிடித்துக் கொன்றது கிழக்கிந்திய கம்பெனி.
அஸிசுன் பாய்
அஸிசுன் பாய்
கான்பூரில் நானாசாகிப்பும், தாந்தியா தோப்பும் சேர்ந்து பிரிட்டிஷ் துருப்புகளை எதிர்த்து 1857-ல் கடுமையாகப் போர் புரிந்து கொண்டிருந்த நேரத்தில் நானாசாகிபின் அந்தப்புரத்தில் இருந்த ஒரு பெண் தான் அஸிசுன் பாய். இவர் சிப்பாய் புரட்சியில் ஈடுபட்ட சிப்பாய்களை ஒருங்கிணைத்து அவர்கள் சந்திப்பதற்குத் தனது வீட்டைஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறார். அதோடு பல பெண்களை ஒருங்கிணைத்துப் போரில் காயமடைந்த சிப்பாய்களுக்கு மருத்துவ உதவிகள் செய்துள்ளார். பல்வேறு பகுதிகளுக்கு சிப்பாய்களுக்கு ஆயுதங்கள் விநியோகிக்கும் பணியையும் இப்பெண்கள் முன்னெடுத்துச் செய்துள்ளனர். இவரும் தமது கைகளில் துப்பாக்கி ஏந்தி பிரிட்டிஷ் படைகளுக்கு எதிராக போரிட்டார்.
காலங்காலமாக சமூகத்தில் கடுமையாக ஒடுக்கப்பட்டு வரும் தலித் மற்றும் முசுலீம் பெண்கள் பெருமளவில் 1857-ம் ஆண்டின் சிப்பாய் கிளர்ச்சிக்கும், முதல் இந்திய சுதந்திரப் போருக்கும் பெரும் பங்காற்றியிருக்கின்றனர். ஆஷா தேவி, பக்தவரி, பகவதி தேவி தியாகி, இந்திரா கவுர், ஜமீலா கான், மான் கவுர், ரஹிமி, ராஜ் கவுர், ஷோபா தேவி, உம்டா ஆகியோர் 1857 போரில் தமது இன்னுயிரை ஈந்த நூற்றுக்கணக்கான பெண்களில் ஒரு சிலர். அஷ்கரி பேகம் என்னும் பெண் தனது 45 வயதில் இப்போரில் பங்கேற்று பிரிட்டிஷ் படையால் சிறை பிடிக்கப்பட்டு உயிரோடு கொளுத்தப்பட்டார். அவரைத் தவிர மற்ற அனைத்து பெண்களும் தங்களது 20 – 30 வயதுகளில் தான் இப்போரில் கலந்து கொண்டு , அவ்வயதிலேயே, பிரிட்டிஷ் படையை எதிர்த்துப் போரிட்டு அப்படைகளால் தூக்கிலிடப்பட்டோ, உயிரோடு எரிக்கப்பட்டோ, கொல்லப்பட்டனர்.
இவர்களைத் தவிர வேறு இரண்டு அரசிகளும் 1857 முதல் சுதந்திரப் போரில் பங்கெடுத்துக் கொண்டனர். ராஜ்கர் பகுதியை ஆண்டு வந்த ராணி அவந்திபாய் லோதி மற்றும் தார் பகுதியை ஆண்டு வந்த ராணி திரௌபதி ஆகியோர் இப்போரில் பங்கு கொண்டனர். ஆனால் கெடுவாய்ப்பாக அவர்களின் போராட்டம் வரலாற்றில் எங்கும் பதிவு செய்யப்படவில்லை. . பெண்கள், அதுவும் குறிப்பாக தலித் மற்றும் முசுலீம் பெண்கள், அரசாட்சியில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கும் சூழலிலும் தனக்கான எந்த ஒரு தனிப்பட்ட இலாபமும் இல்லாவிடினும், தமது மண்ணை அந்நியனிடமிருந்து காக்க வேண்டும் என்ற உணர்விலிருந்து எதிர்த்திருக்கின்றனர்.
பெண்கள் என்றாலே பலவீனமான பாலினம் என்ற கருத்தியலை காலனியாதிக்கக் கால கட்டங்களிலேயே பொய் என்று பெண்கள் நிரூபித்திருக்கின்றனர். காலனியாதிக்கப் பெரும் படைகளை எதிர்த்துப் போராடப் பெண்களைத் தூண்டியது இம்மண்ணின் மீதான பற்றும், ஒடுக்குமுறையின் மீதான வெறுப்புணர்வும் தான். 1948-ல் நடைபெற்ற வீரத்தெலுங்கானா ஆயுதமேந்திய போராட்டத்தில் தொடங்கி, இன்றைய டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டம் வரை இவ்வுணர்வு தான் அவர்களை களத்தில் முன் நிற்கச் செய்கிறது.
தமிழாக்கம்: நந்தன்
No comments:
Post a Comment