CHITTOOR RANI PADMINI COMMITTED
JUHAR 1303 AUGUST 26
உடன் பிறவாச் சகோதரியின் அழகை காண வந்திருக்கிறேன் என்று அலாவுதீன் கில்ஜீ சித்தூர் வந்த போது கலவரமான ராஜபுதனம் சற்றே பெருமிதமும் கொண்டது.தங்கள் ராணியின் பேரழகு டெல்லி பாதுஷாவரை எட்டியிருப்பதை நினைத்து வந்த பெருமிதமது.!பெரும் விபரீதம் அது என்பதை யாரும் அப்போது அறியவில்லை.!
உபரிகையில் நின்ற ராணி பத்மினி பேரழகின் எதிரொளியை கண்ணாடியில் பார்த்த அலாவுதீன் உன்மத்தம் பிடித்தவன் ஆனான்.ராணியின் அழகு முறையற்ற,நெறியற்ற ஆசை நோக்கி அவனைத் தள்ளியது.மணமான மங்கை என்பதை மறந்தான்.மறுநாள் வேட்டையாட சிறு குழுவுடன் கிளம்பிய ரத்தன்சிங் டெல்லி பாதுஷாவால் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டான்."என்ன வேண்டும் நண்பா.?"என்ற கேள்விக்கு இடியாய் பதில் வந்தது.
"என் அந்தப்புரத்தில் உன் மனைவி வேண்டும்.!"தீ யென திக்கெட்டும் பரவியது அலாவுதீனின் அறமற்ற ஆசை.உருகிய உலோகத்தின் கொதி நிலையில் ராஜபுதனம் சீறி சிவந்தது.வந்த அந்நியருக்கெல்லாம் பொன் கொடுத்த,பொருள் கொடுத்த,பூமியும் கொடுத்த இந்திய சரித்திரம் வெட்கி தலைகுனிந்தது.மணமான மங்கையின் மானம் கேட்கும் மதி கெட்டவனை நினைத்து குமுறியது ராஜபுத்திர ரத்தம்.தான் அழகாய் பிறந்ததற்காய் முதன் முதலாய் வருந்தினாள் ராணி பத்மினி.ரூபாவதி பார்யாள் பதிக்கு சத்ரு என்ற பழமொழி மீண்டும்
நிதர்சனமானது.கொதிநிலையிலும் மனதில் சமநிலையோடு யோசித்தான் சித்தூரின் தளபதி."இன்று இரவு.!ராணியுடன் உறவு.!"என்று தகவல் அனுப்பி எழுச்சியுடன் காத்திருந்த அலாவுதீனை சந்திக்க கிளம்பியது பல்லக்குடன் ஒரு படை."முதலில் மன்னன்.!பிறகு மானம்.!"என்ற தீர்மானத்தில் பெண்ணுடை தரித்து காத்திருந்தான் தளபதி.இரவு கவிழ்ந்தது.நடந்த சிறு யுத்தத்தில் மன்னனை காப்பாற்றி விட்டு மதியுக தளபதி மரணித்தான்.மோகத்தீயுடன்,கோபத்தீயும் சேர சினத்தின் உச்சியில் நின்றான் கில்ஜி.அலைகடலென கிளம்பியது அராஜகத்தின் படை.!சித்தூர் போட்டது அதற்கு தடை.!ராஜபுதினத்தின் சிறுபடை அலைகடலில் சிறு துரும்பானது.அடுத்தது கோட்டை.!ராணியின் மீதான மோகம் அதிகரிக்க நெருப்பில் நின்றான் கில்ஜி.கோட்டையின் கதவுகள் வெடித்து திறந்தன.உடல் முழுவதும் குங்குமம் பூசி நிர்வாணமாக வந்த கோட்டையின் சிறு காவல் படை கில்ஜியின் படையை துவம்சம் செய்தது.அதே நேரம் கோட்டையின் உள்ளிருந்து கரும்புகை வான் நோக்கி எழும்பியது.எதிர்ப்புகளை முழுதாக அடக்கி கில்ஜி கோட்டையினுள் நுழைந்த போது அரண்மனையின் எரியும் பொருள்களை போட்டு குண்டம் வளர்த்து ஆயிரம் பெண்களுடனும்,குழந்தைகளுடனும் தன்னையே தீயிற்கு தின்னக் கொடுத்திருந்தாள் ராணி பத்மினி.!ஒரு கருத்த சாம்பல் மேடு கில்ஜியை வரவேற்றது.1303 august 26
கில்ஜியின் முகம் சாம்பலால் மேலும் கறுத்தது.சித்தூர் அன்று வீழ்ந்தது.!தன் மானம் காத்த வீரத்தால் சரித்திரத்தில் இன்றும் வாழ்கிறது.!
No comments:
Post a Comment