Wednesday 21 March 2018

WORLD POETRY DAY MARCH 21


WORLD POETRY DAY MARCH 21

கவிதைகள் 

வண்ணங்களால் ஆனவர் சித்தப்பா


பள்ளியில் பெயிண்ட் அடித்துக் 
கொண்டிருந்த 
சித்தப்பாவை கண்டும் காணாமல் 
கடந்திருக்கிறேன்

மதிய இடைவேளையில்
வண்ணம் அப்பிய முகத்தோடு 
என்னைப் பார்த்தவரை 
தூரத்திலிருந்தே ஜாடையில் 
வகுப்புக்கு நேரமாச்சு 
என்று தவிர்த்திருக்கிறேன்

மாலைவரை அந்தப் பக்கம் 
செல்லாமலே கவனமாய் 
பள்ளி வளாகம் கடந்திருக்கிறேன்

நண்பனுக்குத் தெரிந்திருக்குமோ 
என்று சந்தேகப் பார்வை 
பார்த்திருக்கிறேன்

பெயிண்ட் அடித்து சம்பாதித்த 
காசில் அன்று இரவே 
செல்லகுமாரா திரையரங்கிற்கு 
அவரோடு இணைந்த கைகள் 
படம் பார்க்கச் சென்றிருக்கிறேன்

இடைவேளையில் வெட்கமே இல்லாமல் 
அவர் வாங்கிக் கொடுத்த 
போண்டாவையும் சமோஸாவையும் 
ருசித்து தின்றிருக்கிறேன்

வண்ணங்களால் ஆனவர் சித்தப்பா
அவர் அடித்த பெயிண்ட்களால் ஆனவை
என் வானவில்
போண்டாவும் சாமோஸாவும்
நன்றியுடையவைகள் .....!

- கவிஜி

புது வீடு

கம்பீரமாக எழுந்து 
நிற்கிறது என் புது வீடு.

ஏதோ ஒரு ஆற்றிடம்
அபகரிக்கப்பட்ட மணல்
இதன் சுவர்களுள்
புதைந்து கிடக்கிறது.

எங்கெங்கோ 
வெட்டிச் சாய்க்கப்பட்ட
பல நூற்றாண்டுகால
மரங்களெல்லாம் இதன்
நிலையாக, கதவாக, ஜன்னலாக
அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன.

எப்பொழுதோ யாரோ ஒரு 
ஏழை விவசாயியிடம்
முப்போகம் விளையும் 
பூமியாயிருந்த இடத்தில் 
இன்று கம்பீரமாகத்தான்
எழுந்து நிற்கிறது 
எனது புதிய வீடு..!

- ஆதியோகி

"இந்தியா" 
என்கிற பிம்பம் 
எங்களுக்குள் 
உடையும் வரை
உடைத்துக்கொண்டிருங்கள்..

எங்களுக்கும்
எப்பொழுதுதான் 
சூடு சொரணை 
வருவது?

அண்ணலை உடைத்தீர்கள் 
தலித்துகள் 
ஒன்றிணைகிறார்கள்…!

லெனினை உடைத்தீர்கள் 
பொதுவுடமைத் தோழர்கள் 
ஒன்றானார்கள்...!

பெரியாரை உடைத்தீர்கள்
பகுத்தறிவாளர்கள் 
பக்குவம் அடைந்தார்கள் ...
ஓர் அணியில் இணைந்தார்கள்

உடையுங்கள் ....
இந்தியன் என்கிற 
பிம்பம் எனக்குள் 
இருந்து 
உடையும் வரை 
உடையுங்கள்...!

அப்பொழுதுதான் 
நானும் 
போராளியாவேன்
பெருங்கோபம் கொள்வேன்...!

பொறுத்தது போதும் 
என்று 
இந்தியத்தை உடைக்க 
அலைபோல் எழுவேன் ...!

எனைப் போல்
தூங்கும் சராசரி மனிதர்கள்
சமுதாய விழிப்புணர்வோடு 
விழித்துக்கொள்ள ....
உடையுங்கள் 
காவி தீவிரவாதிகளே!

எங்களது தலைவர்களின்
சிலைகளை உடைத்து,
அவர்களின் 
சிந்தனைகளை 
எங்களுக்குள் 
விதையுங்கள் ......

அண்ணலும், லெனினும், பெரியாரும் 
உங்களுக்கு 
எதிரி என்றால் 
அவர்கள் மட்டுமே 
எங்களுக்கான 
தலைவர்கள் என்பதை 
ஆணித்தரமாக எங்களுக்கு 
சொல்லிக் கொண்டிருக்கும் 
உங்கள் 
உடைப்புகள் தொடரட்டும்!

உடையுங்கள்! 
என்னைப் போன்ற 
தோழர்களை 
உணர்வுள்ள மனிதர்களாக்க 
உடையுங்கள் ...!

எங்களை நாங்களே 
செதுக்கிக் கொள்ள 
அவர்களின் 
சிலைகளை 
உடையுங்கள்!

- பெ.பாண்டியன்

பிறந்தநாள் மெழுகில்...

போய்வருவதாகச் சொல்லி
துணிக்கடை பொம்மையிடம்
கையசைக்கிறாள் பாப்பா.

***

காற்றசைக்கும் மர இலைகளில்
சலசலக்கிறது
மெல்லிய நீரோட்டம்.

***

அழைப்பிற்குத் திரும்பாமல்
காதை மட்டுமே அசைக்கிறது
பூனை.

***

அசையாத புத்தர் சிலை
சலனத்துடன் நின்றபடி
நான்.

***

தாய் மறந்தாலும்
சேய் மறப்பதே இல்லை
பொம்மைக்கு சோறூட்ட.

***

சன்னலுக்கு வெளியே மரம்
கண்ணாடி மேசைமீது அசைகிறது
தலைகீழாக.

***

கூண்டினைத் திறந்துவிடுங்கள்
பறந்தே சாகட்டும் 
பறவைகள்.

***

பிறந்தநாள் மெழுகில்
உருகிப்போகிறது
வயது.

- வான்மதி செந்தில்வாணன்

உன்மத்தம் சூழ்கொண்ட 
இந்நாட்களிலெல்லாம் 
மென் புரவியென தலைசுற்றித் திரிகிறேன்!

அசைவற்ற எவ்வேளையையும்
உனதும் எனதுமாக்கி வண்ணத்துப்பூச்சியின்
இறகென
நிசப்தமாகவும் பின்பு சத்தமாகவும்
சிறகடித்துப் பறக்கிறேன்!

இரவின் விகசிப்பு 
பனிமலரின் இதமான நெருக்கம்
மென் மலரின் இன் சிரிப்பு
அத்தனையும் உன் உருவாக்கி
பிரகனப்படுத்தி தீண்டுகிறேன்!

விடுதலை பெறத் துடிக்கும் 
ஈழத்துக் காதலியென உறைந்திருக்கும்
வாடைக் காற்றிலெல்லாம்
உன் வாசனை முகர்கிறேன்!

என்னதான் காதலின் 
ரகசியங்களும் பரிசுத்தங்களும்
தீர்மானமில்லாமல் 
அடையாளப்படுத்தப் பட்டாலும்
நான் மட்டும் அஞ்சியே மரிக்கிறேன்!

- ஆனந்தி ராமகிருஷ்ணன்

No comments:

Post a Comment