BUSINESS MAN ,TELUGU -TAMIL DUBBED
MOVIE REVIEW
கொல்ட்டிகள் என்று தமிழர்களால் ஏளனம் செய்யப்பட்டவர்கள் இன்று தமிழர்களை வாய் பிளக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதே நாம் உணர வேண்டிய உண்மை.
நான் இதுவரை பார்த்த தெலுங்கு திரைப்படங்களை பத்து விரல்களில் அடக்கி விடலாம். அதில் தோழி ஜெயமாலினிக்காக மற்ற காட்சிகளை சகித்துக் கொண்டு பார்த்தது எட்டாவது இருக்கும். தினகரன் வார இதழ் இணைப்புகளில் நண்பர் சிவராமன் இன்ன பிற தென்னிந்திய மொழித் திரைப்படங்களைப் பற்றி 'படம் பக்காவாக வந்திருக்கிறது. பாக்ஸ் ஆபிஸில் அடித்து நொறுக்கி கல்லாவை நிரப்பியிருக்கிறது' என்றெல்லாம் ரகளையாக எழுதி வருவதால் ஏற்பட்ட மனவெழுச்சியில் 2012-ல் வெளிவந்து மெஹா ஹிட்டான 'பிஸினெஸ் மேன்' படத்தை (தமிழ் டப்பிங்கில்) இன்று பார்த்து தீர்த்தேன்.
மகேஷ்பாபு போன்ற ஓர் அமுல்பேபி முகத்தை ஒரு டானாக கற்பனை செய்து பார்ப்பதற்கே அசாத்தியமான துணிச்சல் வேண்டும். இயக்குநர் பூரி ஜெகன்னாத் தனது முரட்டுத்தனமான அதிரடி ட்ரீட்மெண்ட்டால் அதை நம்ப வைக்க முயற்சி்த்து சற்று வெற்றியும் பெற்றிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். ரகளையான மேக்கிங்.
ஆனால் லாஜிக் என்பதற்கு துளி மருந்துக்கு கூட இல்லை. ஜேம்ஸ் பாண்ட் படங்களில் பார்த்தீர்கள் என்றால் அதில் தீர்க்கவே முடியாத பயங்கர சிக்கலில் மாட்டிக் கொண்டாலும் அவர்தான் இறுதியில் வெல்வார் என்கிற நீதியின் படி ஆட்டத்தின் விதிகள் அமைக்கப்படும் அல்லவா? அப்படியே இதிலும் அழுகுணித்தனமான விதிகள் அமைக்கப்படுகின்றன. கதாநாயகன் திட்டமிடுகிற எல்லாமே அச்சு பிசகாமல் நடக்கிறது. என்றாலும் சதுரங்க வேட்டையின் வசனம் போல பெரிய பொய்யாக இருந்தாலும் அதில் ஒரு துளி உண்மை இருந்தாலும் அது உண்மை போல தெரியும் என்கிற தர்க்கத்தின் அடிப்படையில் புகுந்து விளையாடியிருக்கிறார்கள்.
இந்திய ஜனநாயகம் என்பது தன்னிச்சையான முறையில் நாம் வாக்களிப்பதின் மூலம் சுதந்திரமாக இயங்குவது என்று நாம் அபத்தமாக நம்பிக் கொண்டிருக்கிறோம். ஆனால் ஒரு கவுன்சிலர் தேர்வு செய்யப்படுவதின் பின்னால் கூட எத்தனை பெரிய நெட்வொர்க் இயங்குகிறது, யார் யாரெல்லாம் அதை தீர்மானிக்கிறார்கள், ஊழல்களினாலும் லஞ்சத்தினாலும் பெறப்படும் பணம் எப்படி தேர்தல் சமயங்களில் இறைக்கப்படுகின்றன, அதன் பின்னேயுள்ள கார்ப்பரேட்டுகளும் மாஃபியாக்களுக்குமான பங்கு என்ன என்பதையெல்லாம் பனிக்கட்டியின் முனை போல சுட்டிக் காட்டியிருக்கிறார்கள்.
உண்மையில் ஒரு மாஃபியா கேங் எப்படி ஒரு பிஸ்னஸ் மாடலாக உருவெடுக்கிறது, எவ்வாறு அதை தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறது என்பதையெல்லாம் இதை விட நம்பகத்தன்மையுடன் 'காட்பாதர்' சீரிஸிலேயே சொல்லி விட்டார்கள். இந்தியத் திரைப்படம் என்பதால் காதல், கத்தரிக்காய் அதனுடன் தொடர்புள்ள டூயட்கள், ஐட்டம் சாங்குகள் என்று அபத்தமாக இயங்குகிறது இத்திரைப்படம்.
என்றாலும் இயக்குநர் பூரி ஜெகன்னாத்தின் மேக்கிங் மற்றும் டிரிட்மெண்ட் காரணங்களுக்காக வெற்றிப்பட மசாலாக்களை உருவாக்க விரும்பும் இளம் இயக்குநர்கள் இவற்றை பாடமாக படிப்பது நல்லது. தெலுங்குப் பட உரிமைகளுக்காக விஜய் போன்ற தமிழ் நாயகர்கள் ஏன் இப்படி அடித்துக் கொள்கிறார்கள் என்று இப்போதுதான் தெரிகிறது.
அபத்தமாக காதலிப்பது எப்படின்னு
இந்த படம் பாத்தே நாம தெரிஞ்சிக்கிடலாம்
கொல்ட்டிகள் என்று தமிழர்களால் ஏளனம் செய்யப்பட்டவர்கள் இன்று தமிழர்களை வாய் பிளக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதே நாம் உணர வேண்டிய உண்மை.
இனிய தெலுங்கு புத்தாண்டு வாழ்த்துகள். :)
No comments:
Post a Comment